Thursday, December 27, 2018

ஊத்துக்குழி - பாகம் 11
மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 11 – வெல்வது மலையாள மந்திரமா… எதிரிகளின் தந்திரமா

ராமசாமிப் போத்தி வீட்டின் கூரை தினம், தினம் கொளுத்தப்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து உதவி செய்த ஆரோக்கியம் ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரிலும் வந்து ஆறுதல் கூறினார். போத்தி அனுமதியுடன் தினம் மாலை நேரங்களில் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரியும் சபையைச் சேர்ந்த இளம் பாதிரியார்கள் மற்றும் விடுதி மாணவர்களோடு போத்தி வீட்டிற்கு வந்து கிறித்துவ மத பாடல்கள் பாடி, சிறப்பு ஜெப வழிபாடுகளும், மனஆறுதல் தரும்படியான சொற்பொழிவுகளோடு கூடிய பிரசங்கங்களும் நடத்தினார். அவ்வாறான கிறித்துவமத ஜபக்கூட்டங்களை வேடிக்கை பார்க்க வரும் ஊர்க் குழந்தைகளுக்கு சபைத்தோட்டத்தில் இருந்து வண்டிகளில் கொய்யா, சப்போட்டோ, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் பலவிதமான பழங்களை எடுத்து வந்து வழங்கியதால், புலிப்பட்டி ஊரின் அனைத்து தெருக்களிலும் இருந்து தினம் தினம் அதிகப்படியான குழந்தைகள் சீதையம்மாள், இளையமகன்கள் மற்றும் ராமசாமிப் போத்தி வீட்டு ஆச்சியரோடு சேர்ந்து மனமகிழ்ச்சியோடு ஜபக்கூட்டங்களில் கலந்து கொண்டு, வழிபாட்டுப் பாடல்களை உற்சாகமாக கற்று மனப்பாடமாக பாடும் அளவிற்கு தேர்ந்தனர்.

சூரியன் உதிக்கும் முன்னே அதிகாலை நேரத்தில் மாட்டு வண்டியில் கரி ஏற்றிக் கொண்டு கிளம்பிய மற்ற வண்டிகளோடு சேர்ந்து வந்த லெட்சுமணப் போத்தி, முன்பகல் நேரத்தில் மணிமுத்தாறு மலை அடிவாரத்தை அடைந்ததும் மற்றொரு வண்டியோட்டியுடன் துணையாக வந்தவரிடம் தனது வண்டியை கொடுத்து அம்பை கிட்டங்கியில் கரியை இறக்கி விட்டு, திருப்பி வந்து ஒப்படைக்கச் சொல்லி விட்டு, காலநேரம் கடத்தாமல் புலிப்பட்டி ஊர் நோக்கி புறப்பட்டு சென்றார். முந்தைய நாள் இரவும் வீட்டுக் கூரை கொளுத்தப் பட்டிருந்ததால், வழக்கம் போல சபைத் தோட்ட்த்திற்கு சென்று ஓலைகளும், மரக்கம்புகளும் எடுத்து வந்து ராமரும், அவரது மகன்களும் கூரை வேய்ந்து கொண்டிருக்க, அருகில் அண்ணன் ராமசாமிப் போத்தியும், மதினிமாரும், மகள் சீதையும் தளர்ந்து போய், தவித்து நிற்பதைப்  பார்த்த லெட்சுமண போத்தி ஆற்றாமையில் கத்திக் கதறி கூப்பாடு போட்டு அழ அனைவரும் சேர்ந்து அவரை ஆறுதல் படுத்தினர்.

லெட்சுமணப் போத்தியோடு வந்து ராமசாமிப் போத்தி வீடு, தொழுவம் முழுதும் சுற்றிப் பார்த்து எல்லா திசைகளையும் உற்றுக் கவனித்த லெப்பை மரைக்காயர் வீட்டின் அமைப்பு, வாசல்கள். ஜன்னல்கள் இருக்கும் திசைகள், வெளிச்சம் மற்றும் காற்று வந்து போகும் வழி அனைத்தையும் மனதிற்குள் அளந்து கணித்தார். அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு மதிய தொழுகை நடத்தி, மந்திர உச்சாடனங்கள் செய்து தாம் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான செப்பு பட்டயங்களில் எழுத்தாணி கொண்டு அழுத்தமாக எழுதி உடனே எடுத்துப் போய் ராமசாமி போத்தி மற்றும் லெட்சுமணப் போத்தி வீடுகளுக்குள்ளும், தொழுவம் மற்றும் அவர்களுக்கு பாத்தியமான இடங்களின் எல்லைப்பகுதிகளிலும் ஆழமாக குழி தோண்டி புதைத்தார்.

வயலிலும் பிரச்சினை என்பதால் வயல் வரப்புகளில் புதைப்பதற்காக சில செப்புத்தகடுகளை எடுத்துக் கொண்டு ராமருடன் புறப்பட்டுச் சென்று, வயலை அடைந்து அனைத்து வரப்புகள் வழியாகவும், ஏறி இறங்கி, சுற்றி, சுற்றி வந்து தோதான இடம் பார்த்து அமர்ந்து நீண்டநேரம் பிரார்த்தனை செய்த பின் மேற்கொண்டு எதுவும் செய்யாமல், குழப்பமான முகத்தோடு ராமரை அழைத்துக் கொண்டு திரும்பிய மரைக்காயர் போத்திகள் இருவரோடும் மாலையில் வந்து தன்னை பள்ளிவாசலில் வந்து. பார்க்குமாறு சொல்லிச் சென்றார்.

ராமரோடு மாலை நேரம் தன்னைப் பார்க்க வந்த போத்திகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பள்ளிவாசல் தோட்டத்தில் அமர்ந்த மரைக்காயர், “லெட்சுமணப் போத்தி, நாம மலையில வண்டி மாடுவளை கடுவா வந்து கடிக்காம இருக்க ராத்திரில மந்தையை சுத்தி நெருப்பு போட்டிருக்கும் போது வெக்கை தாங்க முடியாம, வெளியில வேட்டைக்கு வந்த புலிவோ வெறியோட சுத்தி, சுத்தி உறுமிட்டு வரும்லா…. அதுமாதிரி உங்க அண்ணன் வயலுக்குப் போன உடனே எனக்கு வெக்கை அடிச்சுது. உங்க இட்த்துல உக்காந்து நான் துவா செய்யும்போது உங்களுக்கு உதவி செய்ய ஒரு புலி சுத்தி, சுத்தி வர்றது என் கண்ணுக்கு தெளிவா தெரியுது. அதனால்தான் வயல்ல தகடு ஏதும் நான் வைக்கலை.” என்று சொல்ல மூவரும் புரியாமல் பார்த்தனர்.

“ஆமா போத்திவளா... உங்க குடும்பத்திற்கு வேண்டப்பட்ட ஒரு நல்ல ஆத்மா உங்களுக்கு உதவ சித்தமா இருக்கு. உங்க குடும்பத்திற்காக உயிரை விட்ட அந்த நல்ல ஆத்மாவானது யாருக்கும் அஞ்சாத  கொடும்புலி, வேட்டைக்காரங்க துப்பாக்கிக்கு பயப்படாத கடும்புலி, வெள்ளைக்காரங்களையே விரட்டி அடிச்சு பயப்பட வச்ச வீரப்புலி… தெக்கு சீமை முழுக்கும் சிறப்பா பார்த்து, கை எடுத்து கும்பிட்ட தென்னாட்டுப் புலி…. “ மரைக்காயர் சொல்லச் சொல்லதான் அந்தப் புலி “தென்னாட்டுப்புலிநல்ல குத்தி ரிபெல் ஶ்ரீபெரியசாமித் தேவர் என்னும் தூக்குத்துரை“ என்பது போத்திகளுக்கு புரிய ஆரம்பித்தது.

நமது கதை நடக்கும் காலத்தில் இருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் ராமசாமிப் போத்தியின் தாத்தாவான ராமசாமித் தேவரை காப்பாற்ற சென்று, பிரச்சினையில் சிக்கியதால்தான் சிங்கம்பட்டி ஜமீன் பெரியசாமித் தேவர் வெள்ளையர்களால் தூக்கில் இடப்பட்டு தூக்குத் துரை ஆனார். நண்பரைக் காப்பாற்றப் போராடிய தூக்குத் துரையின் விருப்பத்தின் படி தூக்கில் இடப்படாமல் நாடு கடத்தப்பட்ட ராமசாமித் தேவரின் பெயரே மகன் வழி மூத்த பேரனான ராமசாமிப் போத்திக்கும் சூட்டப்பட்டது.

போத்திகள் தூக்குத் துரை வரலாற்றை எடுத்துக் கூறி, தமது குடும்பத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பையும் மற்றும் அகத்தியர் கோவிலில் அவரது சிலை வைக்கப்பட்டிருக்கும் விவரத்தையும் சொல்ல முகம் மலர்ந்து பிரகாசமான மரைக்காயர், “போத்தி, உங்க வயல்ல துவா பண்ணும்போது நீங்க சொன்ன விஷயமெல்லாம் என் கண் முன்னே காட்சியா வந்து போச்சு. உங்களுக்கு இந்த விவரம்லாம் தெரியுமா, இல்லையான்னு தெரிஞ்சுக்கதான் குறிப்பு மட்டும் காட்டினேன். உங்க குடும்பத்தைக் காக்க தன் உயிரைக் கொடுத்த சாமியான தூக்குத்துரை ஐயாவைக் கும்பிட்டு, பட்டு, பரிவட்டம் கட்டி, மாலை போட்டு மரியாதை செஞ்சிங்கன்னா இந்த பிரச்சினையில இருந்து வெளியே வர நல்ல வழி காட்டுவார். இன்னைக்கு வெள்ளிக்கிழமை முடிஞ்சி. இருட்டப் போகுது. நாளை சனிக்கிழமை சரிவராது விட்டுடுங்க. சூரியரையும், அசகாய சூரரையும் வழிபாடு செய்ய உகந்த நாளான. ஞாயித்துக்கிழமை ஐயா தூக்குத் துரைக்கு செய்ய வேண்டிய மரியாதையை சிறப்பா செஞ்சிடுங்க. அதுக்கப்புறம் எல்லா விஷயத்தையும் அவர் பார்த்துக்கிடுவார்” என்று கூறி முடித்தார்.

மரைக்காயருடன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு மூவரும் கிளம்பி ஊருக்குள் வரும்போது இருட்டி ராந்தக்கல்லில் (லாந்தர் கல் – விளக்குத் தூண்) ஊர் பொது விளக்கும் ஏற்றியாயிற்று. இரவு உணவை முடித்து விட்டு, ராமர் இரு மகன்களைக் கூட்டிக் கொண்டு வயல் காவலுக்குச் செல்ல, இரவில் மட்டும் வரும் எதிரிகளுக்காக போத்திகள், மூன்று பேரன்களோடு காத்து இருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஊர் அடங்கி, கோட்டான்களும், நரிகளும் கூட ஊளையிட்டுக் கத்தி ஓய்ந்து விட்டன. அலுப்பில் லெட்சுமணப் போத்தியும், பேரன்களும் உறங்கி விட்டாலும் ராமசாமிப் போத்தி மட்டும் வீட்டைச் சுற்றி, சுற்றி வந்தார். இரண்டாம் சாமம் தாண்டும் நேரம், எங்கிருந்தோ வந்து கூரை மேல் விழுந்த தீப்பந்தங்கள் ஓலைகள் மீது பட்டதும் எகிறிப் பறந்தன. ஆனால் அதிசயமாய் கூரை ஓலைகள் தீப்பிடிக்க வில்லை.  மறுபடியும், மறுபடியும் தீப்பந்தங்கள் எரியப்பட்டாலும் கூரையில் பட்டதும் சுவற்றில் அடித்த பந்தாய் எகிறிப் பறந்து தரையில் சென்று விழுந்தன. ஆச்சரியப்பட்ட போத்தி, லெட்சுமணப் போத்தியையும் எழுப்பி அதிசயமான இந்த சம்பவத்தை காண்பிக்க, சிறிது நேரத்தில் தீப்பந்தங்கள் வந்து விழுவது நின்று போனது.

மரைக்காயரின் மலையாள மந்திர மகிமையால் கூரை தீப்பற்றி எரியாமல் போனது குறித்தும், எதிரிகளின் தந்திரங்கள் எடுபடாமல் எறிந்த தீப்பந்தங்கள் தெறித்து விழுந்ததைப் பற்றியும் தம்பியுடன் வியந்து பேசிக்கொண்டிருந்த ராமசாமிப் போத்தி, மரைக்காயர் சொன்ன படியே தூக்குத் துரை ஐயாவிற்கு சிறப்பாக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மனமகிழ்வுடன் உறங்கச் சென்றார். ஆனால் நெடுநாள்களுக்குப் பின் கிடைத்த நிம்மதியான உறக்கம் நான்காம் ஜாமத்தில் கற்களால் கலைக்கப்பட்டது. ஆம். கூரையை சிதைக்க முயன்று, தீப்பந்த முயற்சியில் தோல்வியுற்ற எதிரிகள் இந்த முறை கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பேரன்களை எழுப்பிய போத்திகள், கண்மூடித்தனமான கல் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உடலில் கனத்த போர்வைகளை போர்த்திக் கொண்டு, அனைவர் தலையிலும் பிரம்புத் தட்டுக்களையும் கட்டிக் கொண்டனர்.

”தீப்பந்தங்களை திருப்பி எறிந்தால் யார் வீட்டுக் கூரையிலாவது பட்டு தீப்பற்றிக் கொள்ளும் என்பதால் பொறுமை காத்தோம். கல்லை எறிபவர்கள் பல்லை உடைக்க வேண்டும்” என்று முடிவு செய்து வந்து விழுந்த கற்களை எடுத்து வந்த திசை நோக்கி திருப்பி வீசினர். இந்த எதிர்தாக்குதலை எதிர்பார்க்காத எதிர்தரப்பில் வேகம் குறையவே போத்திகளும், பேரன்களும் உற்சாகம் அடைந்து தொடர்ந்து, எதிர்திசை நோக்கி கற்களை வீசினர். லெட்சுமணப் போத்தி மட்டும் ஒரு பேரனை அழைத்துக் கொண்டு சுற்றிப் போய் பார்த்த போது தூரத்தில் ஒரு வண்டி நிற்பதையும், அருகில் இருந்த இரண்டு உருவங்கள் கற்களை எடுத்து தங்கள் வீடு இருந்த திசை நோக்கி வீசி எறிவதையும் கண்டு வேகம் கொண்டார்.

“எலேய், எவம்லே அது… “ என்று சத்தம் போட்டுக் கொண்டு லெட்சுமணப் போத்தி, பேரனோடு வண்டியை நோக்கி வருவதைப் பார்த்த வண்டியில் இருந்தவர்கள் வீட்டின் பக்கம் கல் எறிவதை நிறுத்தி விட்டு இவர்களை நோக்கி கற்களை வீசி முன்னேற விடாமல் தடுத்தனர். அதே நேரம் ராமசாமிப் போத்தியும், மற்ற இரு பேரன்களோடு வண்டியை நோக்கி சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வர தப்பித்தால் போதும் என்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு, துரத்தி வந்தவர்கள் கையில் சிக்காமல் சிட்டெனப் பறந்தனர் சதிகாரர்கள். பேரன்கள் எடுத்து வந்த தீப்பந்தங்களோடு வண்டி நின்ற இடத்திற்கு வந்து பார்த்த போத்திகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கூழாங்கற்களைக் கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

மறுநாள் காலை வயல்காவலில் இருந்து திரும்பிய ராமரோடு கலந்தாலோசித்த பின் அம்பை சனிக்கிழமை சந்தைக்கு மூத்த பேரனோடு கிளம்பிச் சென்ற போத்திகள், மறுநாள் ஐயா தூக்குத்துரைக்கு செய்ய வேண்டிய வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களையும், வேட்டி, துண்டு, மாலைகளையும் வாங்கிக் கொண்டு மாலை நேரம் வீடு திரும்புவதற்குள் ராமரும், மற்ற பேரன்களும் ஆற்றுக்கு வண்டி கட்டிக் கொண்டு சென்று கைப் பிடிக்குத் தகுந்த அளவிலான கனத்த, கூழாங்கற்களை தேடிப் பொறுக்கி எடுத்து, மூன்று நடைகளாக வீட்டைச் சுற்றி அடித்து அன்றைய இரவுத் தாக்குதலுக்கு பதில் கொடுக்க தயார் ஆகிக் கொண்டனர். 

(தொடரும்)

பாகம் 12

No comments: