Sunday, March 03, 2019

சிங்கம்பட்டி சிவராத்திரி திருவிழா


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா அயன் சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி ஶ்ரீ சங்கிலி பூதத்தார் கோவில் மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா சிறப்பு நடைமுறைகள்.


சிவமைந்தர் ராஜ மன்னர் ஐயன் அருள்மிகு சுவாமி ஶ்ரீ சங்கிலி உத்தரவுப்படி மாசி மாத சிவராத்திரி திருவிழா நேரம் தவிர மற்ற மாத காலங்கள் முழுதும் திறந்த வெளியாக இருக்கும் அயன் சிங்கம்பட்டி ஆலயத்தில் காலம் காலமாக ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தான ஆஸ்தான ஜோதிடரான புளியமரத்தடி ஜோதிடர் குறித்து தரும் நல்ல நாளில் சுப முகூர்த்தத்தில் கால்நாட்டு விழா எனப்படும் பந்தல் கால் ஊன்றப்படும் தினத்திலிருந்து திருவிழா தொடங்கி விடும். அன்று முதல் விரதம் தொடங்க ஆரம்பிக்கும் சிங்கம்பட்டி வாழ் மக்கள் வெளியூர்களில் தங்க மாட்டார்கள். எங்கு சென்றாலும் இரவுக்குள் வீடு திரும்பி விடுவார்கள்.

கால்நாட்டு விழா தொடங்கி சிவராத்திரி மூன்று நாள் திருவிழா சிறப்பாக முடிந்து ஒரு வாரம் கழித்து எட்டாம் திருநாள் பூஜை முடியும் வரை வீடுகளில் அசைவம் சமைக்க மாட்டார்கள். பழைய சோறு, கறி உண்ண மாட்டார்கள். காலை, இரவு இரண்டு வேளையும் இட்லி, தோசை தான் விரதம் இருப்போர்க்கு உணவு.


ஆண்டு முழுதும் வெயில், மழையில் காய்ந்து, கரைந்து இருக்கும் அனைத்து சுவாமிகளின் பீடங்களும் சுத்தப்படுத்தப் பட்டு, புதுச்செம்மண் கொண்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பாக புனரமைக்கப் பட்டு, சுண்ணாம்பு பூசப்பட்டு கம்பீரமாக புத்துருவாக்கம் பெறும் சுவாமிகளின் பிரமாண்ட பீடங்கள் அனைத்தும் காண்போரை கரம் தூக்கி தொழ வைக்கும்.

சுத்த சைவரான சுவாமி சங்கிலி பூதத்தாரின் ஆலயத்தில் அம்மன்கள் முதலான அனைத்து பரிவார சுவாமிகளுக்குமே ஆடு, கோழி பலி கிடையாது என்பதால் சிங்கம்பட்டி மக்களும், சுவாமி தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்களும் 21 அடி உயர விஸ்வரூப ஐயனுக்கு பல வண்ண பட்டுக்களையும், எடை மிகுந்த பிரமாண்ட வண்ணப்பூக்களால் ஆன மாலைகளையும், பல ஆயிரம் எண்ணிக்கை கொண்ட எலுமிச்சைகள், வடைகள் கோர்த்த மாலைகள் அணிவித்து வேண்டுவார்கள் என்பதாலும், அவரவர் வயல்களில் விளைந்த மற்றும் விலைக்கு வாங்கி வரும் வாழைப்பழக்குலைகளை கோயில் முழுதும் பந்தல் கம்புகளில் கட்டுவர் என்பதாலும் பாரம் தாங்குமாறு மிக உறுதியாக பந்தல் அமைக்கப்படும்.


சிவராத்திரி தினம் காலை நேரத்தில் சங்கிலி எடுக்க அயன் சிங்கம்பட்டி ஆலயத்தில் இருந்து கிளம்பும் சாமி கொண்டாடியானவர் நடைப்பயணமாக பழைய ஜமீன் காட்டுப்பாதை வழியாக காரையார் சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு செல்வார். அவர் சொரிமுத்து ஐயனார் கோவில் சென்று, ஆற்றில் குளித்து அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, சங்கிலி எடுத்து கிளம்பும் நேரம் வரை மற்ற பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப் பட மாட்டார்கள். காரையாற்றில் அமைக்கப்பட்டு இருக்கும பாலத்தின் அக்கரையிலை கயிறு கட்டி தடுக்கப் படும் பக்தர்கள் சாமி கொண்டாடி கோயிலை விட்டு கிளம்பிய பின்னரே சொரிமுத்து ஐயனார் ஆலய வளாகம் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

சங்கிலி எடுத்து வரும் சாமி காரையாரில் இருந்து காட்டுப்பாதையாக கிளம்பிய அதே மதியம் மூன்று மணி அளவில் மேலச் சங்கிலி எனப்படும் ஜமீன் சிங்கம்பட்டி மக்களும், கீழச் சங்கிலி என்று அழைக்கப்படும் அயன் சிங்கம்பட்டி மக்களும் அவரவர் ஊர்களுக்கு பாத்தியப்பட்ட வல்லயங்கள், குண்டாந்தடிகள், மூன்று விரல் தடிமனான ஆளுயர கருந்தேக்கு கம்புகள், கழிகள், பல தரப்பட்ட வடிவிலான பித்தளை, வெண்கல விளக்குகள், தாம்பாளங்கள், தீபாரதனைத் தட்டுக்கள், அலங்காரப் பொருட்கள், பல வண்ணப் பட்டுக்கள் அடங்கிய ஆபரணப் பெட்டிகளை மேள, தாளங்களோடு இரண்டு ஊர் ஆற்றங்கரைகளூக்கு எடுத்துச் செல்வர்.

அனைவரும் ஆற்றில் குளித்து, பூஜை செய்து விட்டு ஆபரணப் பெட்டிகளில் மடித்து வைக்கப் பட்டிருக்கும் பல வண்ணப் பட்டுகளையும் வெளியே எடுத்து ஆராய்ந்து, நல்ல பட்டுக்களை ஆற்றில் அலசி, பாறைகளில் விரித்து வெயிலில் காயப் போடுவர். பழைய பட்டுக்களை ஆற்றோடு விட்டு விடுவர்.


வல்லயங்கள், குண்டாந்தடிகள், ஆளுயர கருந்தேக்கு கம்புகள், கழிகள், பல தரப்பட்ட வடிவிலான பித்தளை, வெண்கல விளக்குகள், தாம்பாளங்கள், தீபாரதனைத் தட்டுக்கள், அலங்காரப் பொருடஆபரணப் பெட்டிகள் அனைத்தையும் பழைய பிசுக்குகள் போக ஆற்றில் நன்றாக தேய்த்து' கழுவி, காய வைத்து, சந்தனம், திருநீறு, குங்குமம் பூசி, பூ மாலைகள் அணிவித்து தயாராக வைத்துக் கொள்வர். ஆபரணப் பெட்டிகளுக்குள் விளக்குகள் மற்றும் பித்தளை, வெண்கல சாமான்களையும், மடித்து எடுத்து வைத்துள்ள காய்ந்த பட்டுக்களையும் மீண்டும் அடுக்கி வைத்து விடுவர்.

மாலை ஐந்தரை மணி அளவில் இவ்வளவு வேலைகளும் முடித்துவிட்டு இரண்டு ஊர் மக்களும் அவரவர் கரைகளில் சாமி வரவிற்காக காத்திருப்பர். உயரமான பாறைகளில் ஏறி சாமி தொலைவில் வரும்போதே பார்த்து விடும் இளவட்டங்கள் வெடி, வேட்டுக்கள் போட்டு அனைவரையும் உஷார் படுத்துவர்.

இரண்டு ஊர் கரைகளிலும் மேள, தாளங்கள் முழங்க, சாமி கொண்டாடி ஆற்றில் இறங்கி, கீழச் சங்கிலி கரை அடைந்து மக்களோடு கோவில் நோக்கிச் செல்வார். மேலச் சங்கிலி மக்கள் ஜமீன் சிங்கம்பட்டி வழியாக பெண்கள் குலவையிட மேள தாளங்கள் முழங்க, வேட்டுச் சத்தத்தோடு ஆபரணப் பெட்டிகள், வல்லயங்கள், குண்டாந்தடிகள், கமபுகள சுமந்து ஆலயம் அடையும் நேரம் கீழச் சங்கிலி மக்களும் அவர்கள் ஊர் வழியாக சாமியை அழைத்துக் கொண்டு அயன் சிங்கம்பட்டி ஆலயம் வந்து அடைவர்.


இரண்டு பெருங்கடல்கள் கலப்பது போல ஆரவாரத்துடன் இரண்டு ஊர் மக்களும் கோவிலுக்குள் ஒன்றாக சென்றதும் சாமி கொண்டாடி சுவாமி திருவடியில் சங்கிலிய வைக்க ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தான ஆஸ்தான அர்ச்சகர் தமது குழுவினரோடு பூஜை, புனஸ்காரங்கள் செய்து, தீபாராதனை காட்டி, அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனம், குங்குமம் தெளித்து தீர்த்தக் குடங்கள் மேலேற்றுவார்.

சுவாமி தரிசனம் முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன், வல்லரக்கன் கதை பாடி தொடங்கும் வில்லுப்பாட்டு மூன்று நாட்கள் அனைத்து சுவாமிகளுக்கும் தொடர்ந்து பாடப்படும். முதல் தினமான சிவராத்திரி இரவன்று பெரும்பாலானோர கோவிலிலே இரவு முழுதும் தங்கி விடுவர்.

இரண்டாம் நாள் துளசி மூடுகளை அனைத்து சுவாமி பீடங்களையும் சுற்றிக் கட்டி, பட்டுகள் சார்த்தி அலங்காரம் செய்யத் தொடங்குவர்.

மூன்றாம் நாள் காலை முதலே பல ஊர் பக்தர்களும் வேண்டுதல் காணிக்கைகளான புதுப் பட்டுக்கள், பல வண்ண மாலைகள், பழக்குலைகள், எலுமிச்சை, வடை மாலைகளோடு வரிசையாக வர அனைத்தும் ஐயனுக்கு அணிவித்து அழகு செய்யப் படும்.பத்து மணி அளவில் சிங்கம்பட்டி ஜமீன்தார் மேதகு மகாராஜா டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் படை, பரிவாரங்களுடன் வந்து தரிசனம் செய்யும் நேரத்தில் இரண்டாவது முறை தீபராதானை காண்பிக்கப்படும.

பகல் பொழுது முழுதும் சாரை, சாரையாக பல ஊர் பக்தர்களும் வேண்டுதல் காணிக்கைகளோடு கோயில் வந்து குவிந்து கொண்டே இருப்பார்கள். மாலை ஆறு மணி அளவில் சுவாமி சங்கிலி பூதத்தார் கதை பாடும் போதே பலரும் அருள் வந்து ஆடி சங்கிலி எடுத்து அடிக்க, வில்லுப்பாட்டு முடிந்ததும், மேள தாளங்கள் முழங்க ஐயனுக்கு மூன்றாவது முறையாக தீப ஆராதனை காட்ட திருவிழா இனிதே முடிவுறும்.

அனைவரும் வருக. அய்யன் அருள் பெறுக.

சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் கோயிலில் பல நூற்றாண்டுகளாய் மூன்று நாள் திருவிழாவாக சிறப்பாக நடந்து வரும் மாசி மாத மகா சிவராத்திரி திருவிழாவிற்கு காட்டுப் பாதை வழியாக நடை பயணமாகவே, சாமி கொண்டாடியால் தனியாகவே சங்கிலி எடுத்து வரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச் சென்ற வயதான முதிய சாமி கொண்டாடி இரவு நேரமாகியும் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோயில் நிவாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் சென்றுவிட்ட அந்த பெரியவரை ஆடு ஒன்று வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தது. பின் திருவிழா முடியும் வரை கோயிலில் சங்கிலி பூதத்தாரின் பிரமாண்ட பீடத்தின் அருகிலே இருந்த அந்த ஆடு பின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது. சங்கிலி பூதத்தாரே ஆடு வடிவில் வந்து சென்றதாக அனைத்து நெல்லை மாவட்ட பத்திரிக்கை பதிப்புகளிலும் பரபரப்புச் செய்தியாக வந்தது. வேட்டையாடும் கொடும் மிருகங்கள் வாழும் கடும்காட்டில் ஆடு அலைவது என்பது ஆச்சரியமான அதிசயமாகும்.

எல்லாம் அய்யன் அருள்.
சிவ மயம். விஷ்ணு சகாயம்.