Monday, December 10, 2018

ஊத்துக்குழி - பாகம் 5


பாகம் 5 - வன்மமும், வஞ்சமும்

சின்னப் பண்ணையார் சிறுவயது முதலே வெளியூரில் தங்கிப் படித்தவர். நினைவு தெரிந்த பால்ய காலம் முதல் தன் விளையாட்டுத் தோழர்களாகவும், பள்ளி விடுமுறைக் காலங்களில் புலிப்பட்டி ஊருக்கு வரும்போதும், போகும்போதும் வண்டி ஓட்டிகளாகவும், மெய்க்காவலாளிகளாகவும்  இருந்து வந்த  ஈணா, சோணா இருவரும் கைவிரல்கள் வெட்டுப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு மனம் ஒடிந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட தினம் இரவு சின்ன பண்ணையாரும் கலங்கி விட்டார். அவரைப் பொறுத்த வரை இருவரும் இதுவரை எந்த ஒரு தவறும் செய்யாதவர்கள் என்பதால் ஈணா, சோணா மேல் இரக்கமே கொண்டார்.

அந்த சம்பவத்திற்குப் பின் ஊரார் அனைவரும் எட்டுவிரல், எட்டு விரல் என்று இழிவாக அழைத்து, கேலி, கிண்டல் செய்ததால் ஊரை விட்டே போகப் போவதாக கூறிய இருவரையும் சமாதானப்படுத்தி, தன்னுடன் அழைத்துச் சென்று படிப்பதற்காக பாளையங்கோட்டை கல்லூரி அருகே வாங்கி தங்கியிருந்த வீட்டோடு முதுகலைப் படிப்பு முடியும் வரை வைத்துக் கொண்டார். சின்னப்பண்ணையாருடன் இருந்த ஐந்தாறு வருட காலங்களில் அவர் செல்லும்போது அழைத்தும் புலிப்பட்டி ஊர்ப்பக்கமே வராத ஈணா, சோணா இருவரும் இல்லாத பெருவிரல்கள் தவிர்த்த எட்டு விரல்களைப் பயன்படுத்தியே சிலம்பம், களரி போன்ற கலைகளை பயிற்சி செய்து தேர்ந்தனர்.

சின்ன பண்ணையார் படிப்பு முடித்த நேரத்தில் பெரிய பண்ணையார் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கை ஆனதால் பண்ணை வரவு செலவுகள் பார்க்கும் பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பெரிய பண்ணையார் மறைந்து பண்ணை நிர்வாகம் முழுதும் சின்னப்பண்ணையார் கைக்கு வந்த பின் ஈணா, சோணா இருவரையும் ஊரோடு அழைத்து வந்து ஒத்தாசையாக தன்னுடன் வைத்துக் கொண்டார். என்ன காரணத்தினாலோ திருமணம் செய்ய மறுத்து பண்ணையார் வீட்டில் இருந்த பெரிய தொழுவத்தின் அருகே ஓலைக் கொட்டில் அமைத்து, ஒன்றாகவே தங்கி இருந்த ஈணா, சோணாவைப் பற்றி ஊருக்குள் ஏதேதோ கதைகள் உண்டு  என்றாலும், எப்போதும் கையில் கம்புடன் யாருக்கும் பயப்படாத சண்டியர்களாகவே இருவரும் சுற்றி வந்தனர்.

ஊருக்கு மறுபடியும் திரும்பி வந்த புதிதில் ராமசாமிப் போத்தியையோ, அவரது பங்காளிகள், சிஷ்யர்களைப் பார்த்தால் மட்டும் வம்பிழுக்கும் விதமாக ஏதாவது பேசி, எட்டு விரலால் கம்பு சுற்றிக் காண்பித்து திரிந்த ஈணா, சோணாவை அப்படிச் செய்யக்கூடாது என சின்னப் பண்ணையார் ஒரு முறை கண்டித்து சொன்ன பின் அந்த பழக்கத்தை விட்டு விட்டாலும், ராமசாமிப் போத்தி மேல் கொண்ட வன்மமும், வஞ்சமும் மட்டும் அவர்கள் மனதில் நாளுக்கு, நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.


தென்னை வைத்தவன் தின்றுவிட்டு சாவான். பனை வைத்தவன் பார்த்துக் கொண்டே சாவான். என்பது பழமொழி. பெற்ற பிள்ளை குடிக்க நீர் தராவிட்டாலும் வளர்த்தவர் மனம் குளிர தென்னம்பிள்ளை இளநீர் தரும் என்றும் சொல்வர். பனையைப் போலவே தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் அன்றாட வாழ்க்கைக்கு அத்தனை உபயோகமானவை. பனை மட்டை மற்றும் ஓலையில் செய்யப்படும் பெட்டிகள் அனைத்து விதமான விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளுக்கான பொருட்களை வைத்து எடுத்துக் கொண்டு செல்ல பயன்படுத்தப் பட்டது போல், எடை குறைவான பூக்கள் மற்றும் சித்த மருத்துவத்திற்கான மூலிகைச் செடி இலைகளைப் பறித்து கொண்டு செல்ல தென்னை ஓலை குடலைகள் பயன்படுத்தப்பட்டன.

பொதுவாக பனை ஓலை மற்றும் பிரம்புகளால் செய்யப்படும் கூடைகளுக்கு வாய் அகலமாக இருக்கும். குறுகிய வாய் வைத்து, தோதான மூடிகளும் கொண்டு தென்னை ஓலையால் பின்னப்படுபவை குடலைகள். கோயில் பூஜைகளுக்கு தேவையான கட்டிய பலவிதமான பூமாலைகள், அருகம்புல் மாலை மற்றும் அர்ச்சனைப் பூக்களை குடலைகளுக்குள் சுற்றி, அடுக்கி தண்ணீர் தெளித்து, மூடி வைத்து விட்டால் குளுமையால் வாடாமல் இருக்கும், வெளி வெப்பம் தாக்காமல் மூடிகள் தடுப்பதாலும், குடலையில் உள்ள பின்னப்பட்ட ஓலைகளுக்கு இடையேயான இடைவெளி வழியாக தண்ணீரும் தேங்காமல் வடிந்து விடும் என்பதாலும். குடலைக்குள்ளும் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

பொன்னுசாமிப் பூசாரி தினமும் மாலையில் அகத்தியர் கோயில் பூஜை முடித்து விட்டு இரண்டு பூக்குடலைகளில் ஊத்துக்குழி கோயிலுக்கும், அம்மன் கோயில்களுக்கும் பூக்கள், மாலைகள் வைத்து மூடி எடுத்துச் செல்வார். ஊத்துக்குழி கோயில் பூஜை முடிந்ததும் ஒரு குடலை வெற்றிடமாகி விடும் என்பதால் போத்தி வயலில் பறிக்கும் காய்கறிகளை அதனுள் வைத்து இலைதழைகளை மேலாற்போல் வைத்து மூடி வைத்து விடுவதால் யாருக்கும் சந்தேகம் வராது. இதனால்தான் இவராகத் தான் இருக்கும் என்ற எண்ணம் கொண்ட போத்தியே இரண்டு, மூன்று நாள் எதிரில் வந்தபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏன்வே இந்த திருட்டுத்தனம். கேட்டிருந்தா தெனம் தெனம் நானே பறிச்சு உம்ம வீட்ல கொண்டு வந்து கொடுத்திரும்பலா.” என்றவாறு அதட்டிக் கேட்ட போத்தியிடம் பதில் ஏதுமே பேசாத பூசாரி குடலையில் இருந்த காய்கறிகளை அப்படியே கீழே கொட்டிவிட்டு குனிந்த தலை நிமிராமல் சென்றார். அவமானத்தால் அவர் முகம் சிவந்து கறுத்து விட்டது.

ஊத்துக்குழி கோயில் அருகே இருந்த அரச மரத்தின் உயரமான கிளையில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. பெரிய பண்ணையாரம்மாவின் மருத்துவத்திற்காக தேன் தேவைப்பட்டதால் அந்த தேன்கூட்டை எடுக்க தேனீக்கள் கூட்டில் வந்து அடையும் அந்தி நேரத்தில் மரத்தில் ஏறி காத்திருந்த எட்டுவிரல் ஈணா, சோணா இருவரும் போத்தி, பூசாரியை மடக்கிப் பிடித்த காட்சியைப் பார்த்ததும் மனதில் பல கணக்குப் போட்டவாறு, ஒருவரையொருவர் பார்த்து கண்சிமிட்டி மகிழ்ந்தனர். ஊத்துக்குழி கரையோரத்தில் அடர்ந்து  வளர்ந்திருந்த தாழம்புதர்களில் மாலை நேரம் மலர்ந்திருந்த தாழம்பூக்களின் வாசனையில் மயக்கம் கொண்ட மலர் நாகங்கள் இரண்டு, ஒன்றோடொன்று பின்னிப் பிரண்டு, சிவந்த வாய் பிளந்து சீறியதையும், ஈணா, சோணா சிரித்து மகிழ்வதையும் ஆண்டாண்டு காலமாக  அந்த மரத்தில் அருவமாக வாழ்ந்து வரும் ஐயா தூக்குத்துரையும் ஆவேசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.               
                         ( தொடரும்)


No comments: