Sunday, December 16, 2018

ஊத்துக்குழி - பாகம் 7




மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 7 – கெடுவான் கேடு நினைப்பான்

தென்கைலாயமாம் பொதிகைமலை காரையாற்றின் கரையில், சொரிமுத்து ஐயனார் ஆலய வளாகத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு பட்டவராயன் கதை நடந்த காலத்தில் சிங்கம்பட்டியும் அதன் அழகான அரண்மனையும் மணிமுத்தாறு ஆற்றங்கரையான ஏர்மாள்புரத்திலும்பின் அயன்சிங்கம்பட்டியிலும் மூன்றாவதாக தற்போது அமைந்துள்ள ஜமீன் சிங்கம்பட்டியிலுமாக இடம் பெயர்ந்தது. காலமாற்றத்தின் காரணமாக ஊத்துக்குழிக் கோவிலும், அகத்தியர் கோயிலும் மற்றும் அம்மன் கோவில்களும் நமது கதைக்களமான புலிப்பட்டி ஊருக்கு வந்ததாக கொண்டு கதையைத் தொடர்வோம்.
  
எப்போதுமே தேவையில்லாமல் யாரிடமும், எதுவும் அனாவசியமாகப் பேசாத பொன்னுசாமிப் பூசாரி, ராமசாமிப்போத்தியிடம் பிடிபட்டு அவமானப்பட்ட அந்த சம்பவத்திற்குப்பின் மனதளவில் பாதிக்கப்பட்டு மேலும் அமைதியானார் என்றாலும் காலையும், மாலையும் அகத்தியர் கோயில், ஊத்துக்குழி கோயில் செல்வது, நித்ய கைங்கர்ய பூஜைகள் செய்வது என வழக்கம் போல அவர் பணிகளைத் தொடர்ந்து வந்தார். பண்ணையார் வீட்டிற்குப் பிரசாதம் கொண்டு வந்த அவரிடம் ஈணா, சோணா இருவரும் என்ன சாமி, முன்னை விட ரொம்ப அமைதியாயிட்டிங்கஎன்ன பிரச்சினை.. எங்க உதவி ஏதும் வேணுமா…” என்று இரண்டொரு நாள் மறைமுகமாக கேட்டும் எதுவும் பூசாரி பதில் சொல்லாததால், மறுவாரத்தில் மறுபடியும் அவரை மறித்தவர்கள் நேரடியாகவே, “ சாமி, நடந்த விஷயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். நீங்க கொஞ்சம் ஒத்துழைஞ்சிங்கன்னாஅந்த ராமசாமிப் போத்தியைப் போட்டுப் பார்த்திடலாம். என்று வெளிப்படையாக்க் கூறியும் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் வெறித்துப் பார்த்தவாறு சென்றுவிட்டார்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல காலை, மாலை இருவேளையும் பூசாரி பண்ணையார் வீட்டிற்கு வரும்போதும், மற்றும் கண்ணில் படும்போதெல்லாம் இதையே ஈணாவும், சோணாவும் மாற்றி, மாற்றி சொல்லியதால், “சரி. அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று கேட்போமே… “ என்ற முடிவிற்கு வந்து விட்டார். மனம் மாறிய பூசாரியிடம், ஈணா - சோணா இருவரும் தங்கள் திட்டத்தை முழுவதுமாக விவரித்ததும் அவர்கள் எந்த அளவிற்கு ராமசாமிப் போத்தியை வெறுக்கிறார்கள் எனவும், எவ்வளவு துல்லியமாக திட்டங்கள் வகுத்துள்ளனர் என்பதும் பூசாரிக்குப் புரிந்தது.

கடந்த சில காலமாக பெரியப் பண்ணையாரம்மாவிற்கு கை, கால் மூட்டு வலி சம்பந்தமான உடல் பிரச்சினைகள் எழுந்த போது நாடி பார்த்த பூசாரி பித்தம், கபம், வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இல்லை. வயதான காலத்தில் எல்லோருக்கும் வரக்கூடிய எலும்பு தேய்மான பிரச்சினையே என்று எடுத்துக் கூறியும், மனது கேட்காத சின்னப்பண்ணையார் அன்னையின் மீது கொண்ட அடங்காத அன்பின் காரணமாக வாரமிருமுறை திருநெல்வேலியில் இருந்து ஆங்கில மருத்துவரை தமது வீட்டிற்கே அழைத்து வந்து வைத்தியம் பார்க்க வைத்தார். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள் உட்கொண்டும், மருத்துவர் தந்த வெளிநாட்டு களிம்புகள் கை, கால்களில் பூசியும் பலன் ஏதும் கிடைக்காததால் தேகம் மெலிந்து, உடல் கறுத்துப் போனார் பெரிய பண்ணையாரம்மா.

பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் எல்லோருமே, “ ஆங்கில மருந்து, மாத்திரைகள் நமது தட்பவெப்ப நிலைக்கு ஒத்து வராது என்றும், மாறாக உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வயிற்றுக் கோளாறு, தேக நலிவு மற்றும் பல புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் நமது சீதோஷ்ணத்திற்கு ஏற்றதும், உடலுக்கு ஒத்து வரக்கூடியதும் நாட்டு மருத்துவமே என்றும் பூசாரி பொன்னுசாமிக்குத் தெரியாத சித்தமருத்துவ மூலிகை வைத்தியமா… “ என்றும் பலவாறாக கூறியதால் மனம் மாறிய பெரிய பண்ணையாரம்மா, சின்னப் பண்ணையாரை அழைத்து ஆங்கில மருத்துவத்தை நிறுத்தி விட்டு பொன்னுசாமிப்  பூசாரியிடமே வைத்தியம் செய்து கொள்வதாக கூறினார். ஆங்கில மருந்துகளினால் பெரிய பண்னையாரம்மாவின் உடலில் ஏற்பட்ட பக்கவிளைவுகளை கண்கூடாகப் பார்த்த சின்னப் பண்ணையாரும் அன்னையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் ஒத்துக் கொண்டார்.

வலி நிவாரணிகளான ஆங்கில மருந்துகள் அப்போதைக்கப்பாக நோய்களின் வேகத்தை தணித்தாலும், நிரந்தரத் தீர்வுகள் தராது. அப்படியாக ஆங்கில மருந்துகளினால் மனித உடலில் அவசரம், அவசரமாக அமுக்கப்படும் அனைத்து நோய்களும் உடலில் புதிய பிரச்சினைகளை உருவாக்கி,  தீராத பக்கவிளைவுகளையே தரும்.  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்என்ற வள்ளுவர் வாக்கின் படி நோயை அடியோடு தீர்க்க வல்லது நமது முன்னோர்கள் அனுபவ பூர்வமாக ஆராய்ந்து கண்டுணர்ந்த நாட்டு வைத்தியம் எனப்படும் சிறப்பான சித்தவைத்தியமே. பண்ணையார் உத்தரவு கிடைத்தவுடனே பூசாரி பலவிதமான மூலிகைகளைக் கொண்டு குளிகைகளும், கஷாயங்களும் செய்து கொடுக்க ஆரம்பித்ததோடல்லாமல், பவளக்காய் எண்ணெய், பலமரத்துக் குச்சி எண்ணெய் போன்ற பாரம்பரியமான தைலங்களை காய்ச்சும் வேலையில் பரபரப்பாக இயங்கலானார். அவரது வைத்தியத்திற்கு தேவையான தேன் எடுக்கப்போயிருந்த போதுதான் ஈணா சோணா இருவரும் பூசாரியை ராமசாமிப் போத்தி மடக்கிப் பிடித்த காட்சியை மரத்திலிருந்து பார்த்தனர்.

ஆங்கில மருத்துவத்தை நிறுத்தி விட்டு பாரம்பரியமான சித்த மருத்துவ மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவுடன், மேலோட்டமாக வேகம் தணிக்கப்பட்டு தேகத்தினுள் அமுக்கப்பட்ட நோய்கள் வெளியே வரும்போது உடல்வெப்பத்தின் காரணமாக தோல் உலர்ந்து செல்கள் கொட்ட ஆரம்பிக்கும். மேல்தோல் காய்வதால் உடல் முழுதும் அரிப்பு ஏற்பட்டு சொரியத் தோன்றும். இதனை தோல் ஊறல் அல்லது மேல் ஊத்தம் என்பர். பெரிய பண்ணையாரம்மாவிற்கும் இந்த பிரச்சினை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். நாள்பட, நாள்பட எடுத்துக்கொள்ளும் சித்த மருந்துகள் மூலம் தோல் ஊறல் பிரச்சினை சரியாகும் என்றாலும் வயது காரணமாக அதிக நாட்களாகியும் அவருக்கு ஊறல் பிரச்சினை கட்டுக்குள் வரவில்லை.

பெரிய பண்ணையாரம்மாவின் உடல் தோல் ஊறல் பிரச்சினையை வைத்தே ராமசாமிப் போத்தியிடம் வம்பு இழுத்து விடலாம் என்பதை திட்டமாக கொண்ட ஈணா சோணா இருவரும் பூசாரியிடம், “.  ஊத்தத்திற்கு மருந்து ஊத்துக்குழில இருக்குன்னு நம்ம ஊர்ல ஒரு சொல்வடையே இருக்கே… “ இதை சின்னப்பண்ணையார்ட்ட சொல்லி தினம் பெரிய பண்ணையாரம்மா காலை, மாலை இரண்டு வேளையும் ஊத்துக்குழில போய் குளித்து விட்டு கரையில் உள்ள சிவாலயத்திலும் தரிசனம் செய்து விட்டு வரணும்ன்னு நீங்க சொல்லுங்க.. ஆற்றுச்சாலையில் இருந்து ஊத்துக்குழி போறதுக்கு ராமசாமிப் போத்தி வயல் வழியாகத்தான் போகணும். வேற எதுவும் வழி கிடையாது. வயதான பண்ணையாரம்மா வரப்புல நடந்து போகமுடியாது. மாட்டு வண்டியிலோ அல்லது பல்லக்குல இருக்க வைத்துதான் பத்திரமா கூட்டிட்டு போகணும். மாட்டு வண்டி போகுணும்ன்னாலும் சரி. இல்லை நாலு ஆளு பல்லக்குல வைத்து தூக்கிட்டுப் போனாலும் குறைந்தது பத்தடிப் பாதை வேணும். எப்படியும் தன்னோட வயல்ல முன்னூறு அடி நீளத்திற்கும், பத்து, பதினைந்தடி அகலத்திற்கும் வண்டிப்பாதை போட போத்தி ஒத்துக்கிட மாட்டார். அம்மாவின் நோய் சரியாகணும்ன்னா சின்ன பண்ணையார் பாதை போடாமல் விடமாட்டார். நிச்சயம் பெரிய பிரச்சினை வரும். நாம செய்ய நினைத்தது தன்னாலே நடக்கும். பிரச்சினையை ஆரம்பிச்சு விட மட்டும் பூசாரி நீங்க உதவி பண்ணுங்க. ஊதி ஊதி பெரிசாக்க வேண்டிய வேலையை நாங்க இரண்டு பேரும் பார்த்துக்கிடுவோம் என்று தமது திட்டத்தை விளக்கி கூறி பூசாரியை மொத்தமாக வழிக்கு கொண்டு வந்தனர் ஈணா சோணா இருவரும்..


(தொடரும்)

No comments: