Monday, December 24, 2018

ஊத்துக்குழி - பாகம் 10மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 9 லெட்சுமணப் போத்தியும், லெப்பை மரைக்காயரும்..

நமது கதை நடக்கும் காலகட்டமான நூறாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் நமது நாடு அடிமைப்பட்டிருந்த பொழுது தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் புகைவண்டி, பேருந்துகள், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவை அனைத்தும் நீராவி இயந்திரங்களால் இயங்கி வந்தன. கரியை எரித்து, மூடப்பட்ட பெரிய வெண்கல தொட்டிகளில் உள்ள நீரை கொதிக்க வைத்து வெளிவரும் சூடான நீராவி மூலம் இயந்திரங்கள் செயல்பட்டதால் எரிபொருளான கரியின் தேவை அதிகமாக இருந்தது. கல்கரி எனப்படும் நிலக்கரியானது சில சுரங்கங்களில் எடுக்கப்பட்டு வந்தாலும் நாடு முழுதுமான தேவைக்கு பற்றவில்லை. எனவே ஆங்கிலேய அரசாங்கமே தனியாருக்கு அனுமதி தந்து அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள தேக்கு, கருங்காலி, ஈட்டி, போன்ற விலைமதிப்புள்ள மரங்களைத் தவிர்த்த மற்ற சாதாரண மரங்களை வெட்டி, காயவைத்து மூட்டம் போட்டு எரிக்க வைத்து கரி உற்பத்தி செய்து வந்தது.

இவ்வாறு காடுகளில் மரங்கள் கொண்டு கரி உற்பத்தி செய்யும் இடங்களை கூப்பு என்பர். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கூப்பு பகுதிகளுக்கு எடுத்து வரவும், மூட்டம் போட்டு எரித்து கரியாக மாற்றவும், உற்பத்தி செய்யப்பட்ட மரக்கரியை மலைப்பகுதிகளில் இருந்து கீழே கொண்டு வந்து ஊர்ப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் என மனித ஆற்றல் அதிகமாக தேவைப்பட்டது. உயிருக்கு ஆபத்தான கொடிய வனவிலங்குகள் மிகுந்த அடர்ந்த காடு, மலைப்பகுதிகளில் கடுமையான சூழ்நிலையிலான வேலை என்றாலும் கூலி அதிகமாக கொடுக்கப்பட்டதால் தென்பாண்டி நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் சேர நாட்டு மலையாளிகள் என பல ஊர் மக்களும் பொதிகைமலை கூப்புகளில் பணி செய்து வந்தனர்.

ராமசாமிப் போத்தியின் சகோதரர் லெட்சுமணப் போத்தி கடும் உழைப்பாளி. தங்கள் தந்தை வழி பூர்வீக இடத்திலே ராமசாமிப் போத்தியும், லெட்சுமணப் போத்தியும் அருகருகே வீடு கட்டி வசித்து வந்தனர். மனைவியை இழந்த லெட்சுமணப் போத்தி, ஒரே மகள் சீதையம்மாளின் கணவர் ராக்கிசமுத்து என்னும் ராமர் ஆவார். ராமர்-சீதை என்ற பெயர் பொருத்தம் கொண்ட தம்பதியினருக்கு ஐந்து மகன்கள். மனைவியின் மருத்துவத்திற்காக நிலபுலன்களை விற்று விட்ட லெட்சுமணப் போத்தி, மிச்சமிருந்த வண்டி மற்றும் மாடுகளோடு அதன்பின் கூப்பு வேலைக்குச் சென்று விட்டார். காடுகளினுள் மரவெட்டிகளால்  வெட்டப்படும் மரங்களை கூப்பிற்கு கொண்டு வந்து சேர்ப்பது மற்றும் கூப்பில் தயார் செய்யப்படும் கரியினை அம்பை இரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுப்பயன்பாடு விநியோக சேமிப்பு கிட்டங்கியில் கொண்டு வந்து சேர்ப்பது லெட்சுமணப் போத்தி போன்ற வண்டியோட்டிகளின் வேலை. ஆள் பற்றாக்குறையால் கூப்பு வேலைகள் சுணங்காமல், தொடர்ந்து நடைபெறுவதற்காக சுற்றுமுறைப்படி வாரம்தோறும் ஐம்பது வண்டிகள் மலையிலிருந்து இறங்கினால், கீழே இருந்து ஐம்பது வண்டிகள் மேலே தேவைப்படும் பொருட்களோடு எதிர்திசையில் ஏறிச்செல்லும்.

மலையில் இருந்து மாட்டு வண்டிகளில் கரியை கீழே ஏற்றிவரும் வண்டியோட்டிகள் ஒரு வார அளவிற்கு அவரவர் வீடுகளில் தங்கி இருந்துவிட்டு, பின் மேலே உணவு சமைக்க மற்றும் இதர தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களோடு மலையேறிச் செல்லும் போதும் மட்டும் புலிப்பட்டி ஊருக்குள் வரும் லெட்சுமணப் போத்தி, அண்ணன் ராமசாமிப் போத்தி வீட்டருகே இருந்த தனது வீட்டையும் மகள் சீதையம்மாளுக்கே கொடுத்து விட்டார். கடும் உழைப்பாளியான ராமருக்கு நிறைய பால்மாடுகள் இருந்தாலும் சிறிதளவே நிலமிருந்ததால் சொந்த வயல்வேலை போக மகன்களோடு அழைப்போர் வயல்வேலைகளுக்கும் சென்று வந்தார்.

தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு ஆற்றங்கரை, ஓடைக்கரை மற்றும் வயல்வரப்பு  பகுதிகளில் இருக்கும் புல் மற்றும் பசுந்தீவனப்பயிர்கள் அறுத்து வந்து போடுவது, பால், கறந்து மாடுகளைப் பராமரிப்பது, கறந்த பாலை காய்ச்சி, உறை ஊற்றி, தயிராக்கும் சீதையம்மாளுக்கு உதவியாக தயிரைக் கடைந்து வெண்ணை, மோர் என தனித்தனியாக எடுப்பது போன்ற வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல் பிரித்து எடுக்கப்படும் மோரையும், வெண்ணையிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் நெய்யையும் அம்பை, கல்லிடை அக்ரஹாரப் பகுதிகளுக்கு தலைச்சுமையாக எடுத்துச் சென்று விற்பது என அனைத்துவிதமான வேலைகளையும் ராமரும், மகன்களும் பகிர்ந்து செய்து வந்தனர்.

தனது வீட்டருகில் வசித்து வந்த தம்பி மகள் சீதையம்மாளை வாரிசு இல்லாத ராமசாமிப் போத்தியும், அவரது மனைவியரும் மகளாக வரித்துக் கொண்டது போலவே தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து வாழும் சீதையம்மாளும் அவர்களைப் பெற்றோராக கருதி வாழ்ந்து வந்தார். பெரியன்னை இருவருக்கும் சீதையம்மாள் வீட்டு வேலைகளுக்கு உதவுவது போலவே ராமரும், மகன்களும் ராமசாமிப் போத்தியின் வயல் மற்றும் தொழுவ வேலைகளுக்கு ஒத்தாசையாக இருந்து வந்தனர். வீடு, தொழுவம் எரிக்கப்பட்டதற்கான காரணம் அறிந்த மற்ற உறவினர்கள், “பெரிய இடத்து விவகாரம் நமக்கெதற்கு…” என்று ஒதுங்கிக் கொள்ளவே, போத்தி குடும்பத்தை தங்கள் வீட்டிலே தங்கவைத்து, உணவு பரிமாறி கவனித்து கொண்டனர் ராமர்-சீதை தம்பதியினர்.

ஆரோக்கியம் ஐயாவின் அறிவுரையின்படி சபை தோட்ட்த்தில் இருந்து தேவையான கம்புகளும், பனை ஓலைகளும், தென்னைக் கிடுக்குகளும் எடுத்து வந்த ராமரும், அவரது மகன்களும் சேர்ந்து போத்தி வீட்டிற்கு கூரை வேய்ந்து முடிக்க சூரியன் விழும் நேரமாகி விட்டது. அதன்பின் குளித்து மருமகன் ராமர் மற்றும் பேரன்களோடு சேர்ந்து உணவை அருந்திய போத்திக்கு இரவுக்காவலுக்கு சென்றால் வயலில் மண் தட்டப்படுவதை தடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. கம்பு, கவண்களை எடுத்துக் கொண்டு உடன்துணையாக வந்த ராமர் மற்றும் மூத்த மூன்று பேரன்களோடு வயல்காவலுக்கு சிளம்பிச் சென்றார் போத்தி. கூரை போட்டாலும் வீடு முழுதும் கரிப்புகை படிந்து வாடை வந்ததாலும், சுவர்களின் உறுதித்தன்மை குறித்து சந்தேகமாக இருந்ததாலும் தனது மனைவியரை தம்பி வீட்டில் சீதையம்மாள் மற்றும் இளைய இரு பேரன்களோடு படுத்துச் கொள்ள சொல்லி சென்றார் போத்தி.

அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்ததால் ஆகாயத்தில் நிலவு தேய்ந்து இரவு வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், வயலுக்குச் சென்று ஆளுக்கொரு பக்கமாய் மறைந்து அமர்ந்து ஆள்நடமாட்டம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது நடுநிசிப் பொழுதில் ஊருக்குள் அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தீப்பற்றி எரியும் வெளிச்சம் வந்தது. என்னவோ, ஏதோ என்று ஊருக்குள் ஓடிவந்து பார்த்தால் சந்தேகப்பட்டது போலவே மறுபடியும் போத்தி வீட்டின் கூரை முழுதும் எரிந்திருந்தது. மறுநாள் காலை மீண்டும் பார்க்க வந்த ஆரோக்கியம் ஐயா உதவியால், ராமர், மகன்கள் உழைப்பால் கூரை அன்றும் புதிதாக போடப்பட்டது. ஆனால் அத்தனை பேர் கண்காணிப்பையும் மீறி அன்று இரவும் போத்தி வீட்டுக் கூரை கொளுத்தப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக ஆறேழு நாட்கள் சபைத்தோட்ட்த்தில் இருந்து தேவையான பொருட்களை எடுத்து வந்து போத்தி குடும்பத்தார் பகல் பொழுதில் கஷ்டப்பட்டு கூரை மாற்ற, மாற்ற இரவு நேரத்தில் எவர் கண்ணிலும் தட்டுப்படாமலும், எந்தவொரு தடயம் இல்லாமலும் கூரை தொடர்ந்து கொளுத்தப்பட்டது.

ஊருக்குள் நடக்கும் இந்த விஷயத்தை மலைக்குச் சென்ற புலிப்பட்டியைச் சேர்ந்த வண்டியோட்டிகள் மூலம் அறிந்த லெட்சுமணப்போத்தி, அன்று கிளம்பிய வண்டிகளோடு சேர்ந்து அவர் வண்டியிலும் கரி ஏற்றிக்கொண்டு கிளம்ப முற்பட, அவர் நண்பரான லெப்பை மரைக்காயரும் உடன் சேர்ந்து கொண்டார். சேரநாட்டு கொல்லம் ஜில்லா கல்லடா பகுதியைச் சேர்ந்த தூய பிரம்மச்சாரி துலுக்கரான அறுபது வயது மரைக்காயர் மந்திர,தந்திரங்கள் கற்றுத் தேர்ந்தவர். ஆனால் எவருக்கும், எந்த விதத்திலும் கேடு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தாமல், நல்ல விஷயங்களுக்கு மட்டுமே தாம் அறிந்த வித்தைகளை உபயோகித்து வந்தார். ஆனால் ஒருமுறை களவு போன பொருளைக் கண்டுபிடித்து கொடுத்த பொழுது திருட்டு கொடுத்தவர் உறவினர்கள் திருடியவரை குடும்பத்தோடு கொலை செய்து விட்டதால், “ஒரு குடும்ப அழிவிற்கு காரணமாகி விட்டோமே…” என்று மனம் வெறுத்து சொந்த ஊரை விட்டு நீங்கி மணிமுத்தாறு மலையில் கூப்பு வேலைக்கு வந்து விட்டார். 

காடுகளில் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விஷ ஜந்துக்களால் கடிக்கப்படும் போதும், நோய்வாய்ப் படும்போதும் விஷமுறிவிற்கான மந்திரங்களைப் பயன்படுத்தி மருந்து தந்து உதவும் மரைக்காயர், காட்டு வேலையில் கவனமாக இருக்கும்படி அனைவரையும் அடிக்கடி எச்சரிப்பார் என்றாலும் வனவிலங்குகளின் வாயைக் கட்டும் மந்திர உச்சாடனங்களை மட்டும் எப்போதுமே பயன்படுத்த மாட்டார். எல்லோரிடமும் பிரியமுடன் பழகும் மரைக்காயரும், லெட்சுமணப் போத்தியும் உற்ற நண்பர்கள் என்பதால் லெட்சுமணப் போத்தி ஊருக்கு வரும்போதெல்லாம் அவ்வப்போது புலிப்பட்டி ஊருக்கு உடன்வரும் மரைக்காயரை, ராமசாமிப் போத்தி குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அனைத்து உறவினர்களும் நன்கு அறிவர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பெருமை வாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தில் இருந்த யானை, குதிரைகளைக் கவனிப்பதற்காக குடும்பத்தோடு பல ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட இஸ்லாமிய மாவுத்தர்களும், பாகன்களும் தொழுகை, வழிபாடுகள் நடத்துவதற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று வரை புலிப்பட்டி ஊரில் இருக்கிறது. புலிப்பட்டி ஊருக்கு வந்தால் அந்த பள்ளிவாசலிலே தங்கிக் கொள்ளும் மரைக்காயருக்கு உணவு மட்டும் வேளாவேளைக்கு நண்பர் லெட்சுமணப் போத்தி வீட்டில் இருந்தே வரும். தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் பண்டங்கள் என ராமசாமிப் போத்தி, லெட்சுமணப் போத்தி, ராமர் அல்லது லெட்சுமணப் போத்தியின் பேரன்கள் என யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் கொண்டு வந்து பள்ளிவாசலில் கொடுத்து விட்டு மரைக்காயருடன் நேரம், பொழுது தெரியாமல் அன்புடன் அளவளாவிச் செல்வார்கள் என்பதால் மரைக்காயரும் அவர்கள் அனைவர் மீதும் அளவு கடந்த அன்பு பாராட்டினார். எனவேதான் தனது பிரியத்திற்குரிய போத்தியின் குடும்பத்திற்கு ஆபத்து என்றதும் மனம் கேட்காத மரைக்காயரும் உடனே லெட்சுமணப் போத்தியுடன் புலிப்பட்டி ஊருக்கு கிளம்பி வந்தார்.  

(தொடரும்)

பாகம் 11

No comments: