Thursday, December 31, 2009

அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, December 26, 2009

’வலையுலக சுஜாதா’ - திரு.ஜவர்லால் அவர்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு மத்தியில் தமிழ்மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு வலைப்பூவின் வாசம் என்னை மிகவும் கவர்ந்தது. படித்ததும் அதிர்ந்தேன். அந்த வலைப்பதிவரது புகைப்படத்தை பார்த்தவுடன் மீண்டும் ஆனந்த அதிர்ச்சி. அவரா, அவர்தானா, ஒரு வேளை அவரது குடும்ப உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் யாராவது அவரது பழைய படைப்புகளை வலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்களோ என்றொரு குழப்பம்.அந்த வலைப்பதிவின் பல பதிவுகளையும் படித்தபின் தான் தெளிந்தேன்.

திரு.ஜவர்லால் அவர்களது ‘இதயம் பேத்துகிறது’ வலைப்பூ தான் அது.ஆம் அப்படியே அந்த காலத்தில் பிரபல எழுத்தாளர் திரு.சுஜாதா எழுதிய படைப்புகளை படிப்பது போலவே குறும்பும், சுவாரசிய நடையும் கொண்ட வசீகரீக்கும் எழுத்துக்களால் வசியப்படுத்தினார். புகைப்படத்திலும் அச்சு அசலாக திரு.சுஜாதா போன்றே முகத்தோற்றம் என்பதால் தான் ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும்,குழப்பமும். தற்செயலாக படிக்க நேர்ந்த அவரது வலைப்பூவை அன்றுமுதல் தவறாமல் தொடர்ந்து படித்தும், பின்னூட்டம் இட்டும் வருகிறேன்.

பணிப்பளுவால் உடல் அலுப்பாகி, மனம் களைப்படையும் போதெல்லாம் நண்பர்கள் பதிவுகள் படித்து மனம் உற்சாகமாகி சுறுசுறுப்படைவது எனது பழக்கம். நான் ஈடுபட்டிருக்கும் திட்டப்பணிகள் கடந்த மூன்று மாதகாலமாக இரவு பகல் பாராமல் தீவிரமாக நடப்பதால் வலைப்பக்கம் ஒதுங்கவும், பதிவுகளை படிக்கவும் முடியவில்லை. படித்தாலும் பின்னூட்டம் இட நேரமில்லை.

பல நாள் இடைவெளிக்குப் பின் திரு.ஜவர்லால் அவர்களின் வலைப்பூவிற்கு சென்று அவரது ஜப்பான் பயண தொடர்பதிவைப் படித்தேன். முந்தைய பாகங்கள் மற்றும் படிக்காத பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் எழுத ஆரம்பித்த உல்லாச பயணப்பதிவு நான்கு பதிவிற்கு மேல நகரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. அன்னாரோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒரு அலுவல் சார்ந்த பயணத்தை அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் மிகவும் சிறப்பாக அழகான புகைப்படங்கள் மற்றும் தகவல்கKளுடன் சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்.நான் பணிபுரிவதும் ஜப்பான் நிறுவனம் என்பதால் ஜப்பானிய மொழி சிறிது தெரியும் என்பதால் அவரை கலாய்த்து பின்னூட்டம் இட்டேன். அவரும் அதனை பெருந்தன்மையாக ஏற்று பதில் சொல்லி இருந்தார்.

வலையுலகம் மூலம் பழகிய பல நண்பர்களுடன் சாட்டிங் தொடர்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோரிடமும் பேசியும் இருக்கிறேன். சரி சாரிடமும் பேசி விடலாம் என்று முடிவு செய்து அவர் அலைபேசி எண் வேண்டி கடந்த வியாழன் தனிமடல் இட்டேன். தொடர்பு எண்ணை தெரியப்படுத்தி உடன் பதில் அனுப்பி இருந்தார். ஞாயிறு காலை இந்திய நேரம் காலை பத்து மணிக்கு பேசுவதாக பதில் அனுப்பிவிட்டு இரண்டு நாள்களாக மிகுந்த குறுகுறுப்போடு இருந்தேன். அவசர பயணம் கிளம்பியதால் அவரோ என் பதில் மடல் பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

ஞாயிறு காலை நான் அழைக்கும்போது பயணம் முடித்து திரும்பி கொண்டு இருந்தார். “யார்“ என்றவரிடம், “உங்கள் ரசிகன் ராஜா” என்றேன். தனியாக சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையில் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தவர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கால் மணி நேரம் பேசினார். பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவரது பல பதிவுகள் குறித்த தகவல்களை புள்ளி விவரமாக கூறியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து பல சுவாரசிய பகிர்வுகளை பதிவுகளாக இட வேண்டும் என வேண்டி விடைபெறும் பொழுது அவருக்கு ஒரு விருது வழங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தேன். “அப்படியா, என்ன சொல்லுங்கள்” என்றார். ‘வலையுலக சுஜாதா’ என்று என் மனமகிழ்வை விருதாக வழங்கி சிறப்பித்தேன்.

திரு.சுஜாதா அவர்களுக்கும்,திரு.ஜவர்லால் அவர்களுக்கும் நான் கண்ட ஒற்றுமைகள். இருவருமே பொறியியல் துறை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூரு சென்றவர்கள் என்பதால் பொருத்தமான விருது வழங்கியதாகவே நினைக்கிறேன்.

எங்களது அலைபேசி உரையாடல் குறித்த திரு.ஜவர்லால் அவர்கள் பதிவின் சுட்டி.

கடந்த ஜூலை 10ம் தேதி முதல் பதிவிட ஆரம்பித்த அவரது வலைப்பூ மிககுறுகிய காலத்தில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை படைத்து உள்ளது. ஆம், 165 நாள்களுக்குள் 1,00,000 பார்வை என்பது மிகப்பெரும் சாதனை. சராசரியாக நாளொன்றுக்கு 600 வாசகர்கள் அவரது படைப்புகளை படித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

பதிவிட வந்த முதல் மாதத்திலே சர்வதேச சிறந்த புதுமுக பதிவர் விருது பெற்றதும் , 10,000 பார்வைகளும் அவரது பல்சுவை பதிவுகளுக்கு நல்ல சான்றுகள்.

எழுத்து மட்டுமல்லாமல் அஷ்டாவதானி என்று கூறினாலும் பொருந்தும் என்பதற்கு அவரது இசையறிவும், ஆர்வமும், குரல் வளமும், புகைப்பட மிக்ஸிங்குகளும் நல்ல சாட்சிகள். அவரே சொந்தமாக இசையமைத்து , இனிமையாக சொந்தக்குரலில் பாடியுள்ள பாரதியாரின் பாயும் ஒலி நீ எனக்கு பாடல் மயக்கம் தரும் அமுதசுவை. ஒளி,ஒலியும் மிக துல்லியம்.
தாய்மொழி பேச,படிக்க,எழுத வழியில்லாத அயல்நாடுகளில் வாழு(டு)ம் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அன்னாரைப் போன்றோருக்கு எங்களால் முடிந்த கைம்மாறு இது போன்ற பாராட்டுக்கள் தான்.
எனதிந்த பாராட்டு பதிவினைப் படிக்கும் ஒத்த ரசனையுள்ளவர்கள் அன்பு நண்பர்களாகிய நீங்களும் அன்னாரது பல்சுவை பதிவுகளையும் படித்து பெருமகிழ்ச்சி அடையவேண்டும் என்பதே என் ஆசை.

அன்னாரைப் போன்று என்னை பெரிதும் கவர்ந்த பதிவர்களை பற்றி தொடர்ந்து எழுதலாம் எனவும் உள்ளேன்.

Tuesday, December 22, 2009

குழந்தை கை பொம்மை

குழந்தை கை பொம்மை
போல் குலுக்குகிறாய்
என் மனதை...
அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய்
உயிரெ(ல்)லாம்
என் உணர்வெ(ல்)லாம்...
------------------------------------
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு

கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
-------------------------------------
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை

கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
--------------------------------

ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...

ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....
-------------------------------------------
பணிப்பளுவால் எழுத முடியாமல் நீண்ட நாள்களாக தவித்த என் கவிமனதை கவிதை எழுத தூண்டிய தோழி ஹேமாவிற்கு நன்றி.

Wednesday, December 16, 2009

ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும்...

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும் ஒரே நாளில் வந்துள்ளன. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். பள்ளி பருவத்தில் எல்லா வீடுகளிலும் காலையில் வண்ணப்பொடிகளால் கோலமிட்டு, கோலத்தின் நடுவில் தினம் ஒரு பூ வைப்பதை பார்த்து வியந்தது, அரையாண்டு தேர்வு விடுமுறையில் காலையிலே எழுந்து பனி,குளிர் பாராமல் குளித்து, கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து சுடச்சுட கையில் வாங்கிய வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை காலை உணவாகவே சாப்பிட்டது என பல நிகழ்ச்சிகள் பசுமையாக உள்ளத்தில் வந்து போகின்றன.

சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதால் ஆஞ்சநேயர் மீது சிறுவயது முதலே மிகப்பிரியம். இராமாயணம்,மகாபாரதம் இரண்டு இதிகாசங்களிலுமே இவரது பங்களிப்பு இருப்பது எப்போதும் மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம்.

கடந்த இரண்டு மாதமாக பணிப்பளு அதிகம். இருக்கையில் அமர நேரமில்லை. வலைப்பக்கம் வரமுடியாமல் வேலை அதிகமாக இருந்ததால் நள்ளிரவில்தான் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடிந்தது என்றாலும் பின்னூட்டம் இட முடியாத படி அலுப்பு. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மார்கழி மாதம் போல் மனதில் எப்போதும் குளிர்ச்சி நிலவவும், தொய்வில்லாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதிடவும் ஆஞ்சநேயர் அருள்வாராக.


Tuesday, December 01, 2009

இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.



எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.