Tuesday, August 25, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 8


முதல் ஏழு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….









பாகம் 8 – ஹாஜியாரும், அனுமந்தையாவும்…




கவாண்டே, மணி, பாண்டே, தேசிங்கு அனைவரும் தீபாவளிக்கு ஊருக்கு சென்று இருந்தார்கள். பெரிய காந்தி, சாஜன் இரவு வேலை. விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்பதால் வேலைக்கு வந்திருந்த இரண்டு உள்ளூர்காரர்களை பணியில் இருக்க சொல்லி விட்டு நான், சின்ன காந்தி, செந்தில், ஜான், பாரா வந்த செக்யூரிட்டி என ஐந்து பேரும் எங்கள் துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி உள்நுழைவு வாயிலை தாண்டும் போது மேலும் இரண்டு செக்யூரிட்டிகளும் எங்களுடன் சேர்ந்து கொள்ள மொத்தம் ஏழு பேராக காட்டுக்குள் நுழைந்தோம்.

ஆள் நடமாட்டமும், முறையான பராமரிப்பும் இல்லாததால் பிரண்டைச் செடி, கோவைக் கொடி, கள்ளி, கத்தாழை, கண்டங்கத்திரி, காட்டு வெள்ளரி, தும்பை, ஊமத்தை, நாயுருவி போன்றவற்றோடு பெயர் தெரியாத செடி, கொடிகளோடு, பல விதமான காட்டு மரங்களும் அடர்ந்து வளர்ந்து இருந்த காட்டில் உள்ளே செல்ல, செல்ல மரங்கள் நெருக்கமாக இருந்தன. அங்கங்கே பெரிய, பெரிய புற்றுகளும், கிழிந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு சட்டைகளும், திடீரென்று குறுக்கும், நெறுக்குமாய் ஓடிய முயல்களும், கீரிகளும், மயில்களும், காட்டுக் கோழிகளும் அச்சம் தருவனாக இருந்தன.  முறையான பாதை இல்லாததால் நடக்க தோதாக கண்ணில் பட்ட வழியாகவே செல்ல வேண்டி இருந்தது. கூட்டமாக கலகலப்பாக பேசிக் கொண்டே சென்றதால் பயம் வெளிப்படாவிட்டாலும், பொழுதுபோகாத காரணத்திற்காக இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம் மனதில் எழவே செய்தது.

நடந்து, நடந்து காட்டின் மையப்பகுதிக்கே வந்து விட்டோம். பலாப்பழ வாசனையும் இதோ, இதோ என்று எங்களை இழுத்துக் கொண்டே சென்றது. அப்போது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து கிளம்பிய சூறாவளி சுழல் காற்று குப்பை, கூளங்களை அள்ளிக் கொண்டு ஆக்ரோஷமாக சுழன்றபடி எங்களை நோக்கி வர மதில்சுவர் பக்கமாக சென்று ஒதுங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மதில் சுவரை நோக்கி ஓடினோம். அப்போது எங்களை நோக்கி கருப்பாக இரண்டு உருவங்கள் ஓடி வர நாங்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி அபயக்குரல் எழுப்பினோம்.

‘கரடி, கரடி’ என ஓரிருவர் கத்த, ‘ஆகா கரடி பிடித்தால் விடாதே. அடித்தாலும், கடித்தாலும் பெரும் பிரச்சினையாயிற்றே. ஒன்றென்றால் கூட கல், கம்பு கொண்டு சமாளித்து விடலாம். ஆனால் இரண்டும் ஆறடி உயரத்தில்,ஆஜானுபாகுவாக பிரமாண்டமாக இருக்கின்றனவே, என்ன செய்யலாம்.ஏது செய்யலாம்’ என மனம் குழம்பி தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த இரண்டு உருவங்களும் எங்கள் அருகில் வந்து இடுப்பில் கை வைத்து இடி இடியென சிரித்தன. ’ என்னடா இது அதிசயம். கரடி மனிதக் குரலில் சிரிக்கிறதே’ என ஆச்சரியமாகப் பார்க்க முகத்தை மூடியிருந்த கம்பளி துணியை இரு உருவங்களும் விலக்க ‘அட, நம்ம அனுமந்தையாவும், ஹாஜி அப்துல்லாவும்…’ என செக்யூரிட்டிகள் மூவரும் ஒரே குரலில் கூவினர்.

ஆம். அனுமந்தையாவும், ஹாஜி அப்துல்லாவும் அங்கு நெடுங்காலமாக பணி புரியும் கிட்டத்தட்ட பணி ஓய்வுக்காலத்தை நெருங்கி விட்ட சீனியர் ஹவில்தார்கள். மதவேறுபாடு பார்க்காமல் உறவினர் போல் பழகும் நெருங்கிய நண்பர்கள். அனுமந்தையா தீவிர அனுமார் பக்தர். அதனாலே திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. ஹாஜி அப்துல்லா மகன், மகள்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்து விட்டு புனிதக்கடமையான ஹஜ் பயணத்தையும் முடித்து விட்டவர். அனுமந்தையா நெற்றியில் எப்போதும் செந்தூரம் இருக்கும். ஹாஜியாரின் நெற்றியில் தினமும் ஐந்து வேளையும் தவறாமல் பன்னெடுங்காலம் தொழுத கருந்தடம் இருக்கும். ஆனால் இருவர் மனமும் வெள்ளை. அவர்களால் யாருக்கும் இல்லை தொல்லை.

அனுமந்தையா சித்த வைத்திய பரம்பரையில் வந்தவர் என்பதால் ஓய்வு நேரங்களில் அக்கம்பக்க கிராம மக்களுக்கு இலவசமாக முறையான கை வைத்தியம் செய்து வந்தார். அப்துல்லா பள்ளிவாசலில் தினமும் மாலை வேளைகளில் குழந்தை குட்டிகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் பாத்தியா ஓதி பிணி தீர்த்து வந்தார். ‘நோய்க்கும் பார். பேய்க்கும் பார். என்னும் பழமொழிக்கேற்ப அவரவரால் சரி செய்ய முடியாது அல்லல்படும் நோயாளிகளை அவ்வப்போது அவர் இவரிடமும், இவர் அவரிடமும் அனுப்பி வைப்பர். அவர்களைப் பொறுத்த வரை அவர்களை தேடி வரும் நோயாளிகள் மருத்துவத்தாலோ அல்லது மறையின் அருளாலோ வேண்டும். அவ்வளவுதான்.

ஆச்சர்யப்படும் வகையில் ஆவேசமாக எங்களை துரத்தி வந்த சுழல் காற்று அனுமந்தையாவையும், ஹாஜியாரையும் பார்த்தவுடன் பம்மி, பதுங்கி வந்த வழியிலே திரும்பி கண்காணாமல் சென்று விட்டது. ‘என்ன இந்த நேரத்தில், இந்த கோலத்தில்…’ என்று அவர்களை விசாரிக்க நாட்டு வைத்தியத்துக்கான தேன் எடுக்க முழு உடலையும், முகத்தையும் மறைக்கும் கனத்த கம்பளியிலான பிரத்யேக அங்கி அணிந்து வந்ததாகவும் பல இடங்களிலும் எடுத்து விட்டு, மதில் சுவர் ஓரமாயிருந்த மரத்தில் தேன் எடுக்க முயலும் போது அளவில் பெரியதும், ஆக்ரோசத்தில் கூடியதுமான மலைத்தேனீக்கள் கலைந்து கொட்டத் துரத்தியதால் ஓடி வந்ததாகவும் கூறினார்கள். 

நாங்கள் வந்த காரணம் கேட்டு அறிந்த அவர்கள் எங்களை பலா மரங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டினர். நாங்களும் தூக்கிச் செல்ல முடிந்த அளவு பறித்து நாங்கள் கொண்டு சென்ற கோணிகளில் மூட்டை கட்டினோம். பின் ஹாஜியாரும், அனுமந்தையாவும் வழிகாட்ட நல்ல பாதையில் நடந்து முன்வாயிலை அடைந்தோம். விடைபெறும் போது தேனடைகளை அடுக்கி மூடி வைத்து இருந்த உறுதியான நான்கு பிளாஸ்டிக்  வாளிகளில் ஒன்றை எங்களிடம் கொடுத்து ‘நல்ல அருமையான மருத்துவக் குணம் நிறைந்த காட்டுத் தேன்.எல்லோரும் பகிர்ந்து பிரித்து உண்ணுங்கள்’ என்று கூறி வழி அனுப்பி வைத்தனர். ‘ மேன்மக்கள். மேன்மக்களே ’ என்று அவர்களை வியந்து பாராட்டிக் கொண்டே நாங்களும் டிபார்ட்மெண்ட் திரும்பினோம்.

வெளிகேட்டில் இருந்தே டிபார்ட்மெண்ட்டில் இருந்தவர்களிடம் போன் செய்து பழுத்திருக்கும் அனைத்து பழங்களையும் பேட்டரி ரூமில் இருந்து வெளியே எடுத்து நன்றாக கழுவி, வெட்டுவதற்கு தேவையான கத்தி, கட்டைகள், மற்றும் அவ்வப்போது சமையல் செய்ய வாங்கி வைத்திருந்த பெரிய பாத்திரங்கள் மட்டும் தட்டுக்களை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைக்கச் சொன்னோம். பின் எங்கள் துறையை அடைந்ததும், நான்கைந்து பேர் பழங்களை வெட்டி பாத்திரத்தில் போட இருவர் தேனடைகளை வெள்ளைத்துணியினால் பிழிந்து ஒரு பாத்திரத்தில் சேகரிக்க என வேலைகள் ஜரூராக நடந்தன. பின் வெட்டிய பழங்களையும், சுத்தமாக பிழிந்து எடுக்கப்பட்ட தேனையும் பெரிய பாத்திரத்தில் போட்டு கை படாமல் கரண்டி போட்டு கிளர முடிவு செய்தோம். 

எல்லா வேளையும் முடியும் நேரம் மாலை மங்கி இருட்டும் நேரம் நெருங்கி விட்டது.அன்று தீபாவளிப் பண்டிகையின் கடைசி நாளாகவும், நிறைந்த அமாவாசை தினமாகவும் இருந்ததால் இரவு வேலைக்கு வந்த நண்பர்கள் எங்கள் டிபார்ட்மெண்டின் பூஜையறையில் இருந்த துர்க்கா மாதா மற்றும் பிற தெய்வங்களின் படங்களுக்கு  பூ மாலைகள், மற்றும் அனைத்து விதமான பூஜைப் பொருள்களும் வாங்கி வந்திருந்தனர். வழக்கமாக செவ்வாய், வெள்ளி தவறாமல் பூஜை செய்வோம். அன்று விசேஷ தினம் என்பதால் சிறப்பு பூஜையாக நாங்கள் தயாரித்து வைத்திருந்த பஞ்சாமிர்தத்தையும் கடவுள்களுக்குப் படைத்து பின் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினோம்.



Saturday, August 22, 2015

மாண்புமிகு பிரதமர் திரு.மோடியின் திட்டங்கள் பலன் தருமா....


எனது முந்தைய பதிவான பிரதமர் திரு.மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் - அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள்  என்ற கருத்துக் கட்டுரைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் பதிவாயின. உரிய பதில் கருத்துக்களை ஏற்கனவே அங்கு எழுதி விட்டாலும் மேலும் சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.  பல நாடுகளில்,  பல துறைகளில்  பணிபுரிந்த அனுபவத்தின் துணை கொண்டு கூடுமான வரை தகுந்த விளக்கங்களும் தர முயன்றிருக்கிறேன்


கிணற்றுத் தவளையாய் நாம் இருந்தால் நமக்கு தலைக்கு மேலே உள்ள ஒரு வானமும், காலுக்கு அடியில் உள்ள ஒரு பூமியும் மட்டும்தான் தெரியும். வெளிஉலகம் பற்றி எதுவும் தெரியாமல் ஒரு சிறிய இடத்திலே உழன்று கொண்டு இருப்போம்.  ஆறு, ஏரி, குளம், ஊற்று, ஓடை, வாய்க்கால், வடிகால், கடல் பற்றிய எந்த அறிவும், அனுபவமும் ஏற்படாது. நாம் இருக்கும் குட்டையிலே குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். காலத்தால் கட்டுண்டிருந்தோம். அவிழ்க்க ஆள் வரும்போது ஆதரவு கொடுத்தால்தான் நம் முன்னேற்றத்திற்கு முயற்சி எடுப்பவர் முன்னேறி வருவர். விடுபடும் நாமும் குறுகிய கிணறு தாண்டி பரந்து, விரிந்த உலகில் பறக்க சிறகை விரிக்க முடியும்.


நம்நாடு விடுதலை அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின் சுதந்திரம் அடைந்து நம் கண்முன்னே வியத்தகு வளர்ச்சி அடைந்த எந்த ஒரு இயற்கை வளமும், வரலாறும், அனுபவமும் இல்லாத சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் முன்னேறியது எப்படி என்ற தகவல்கள் இணையம் முழுதும் இறைந்து கிடக்கின்றன.  வீண்வாக்குவாதம் செய்பவர்கள் அந்த நாடுகள் வளர்ச்சி அடைந்த விதத்தையும், ஆதாரபூர்வ விஷயங்களையும் படித்துப் பார்த்து பின் விவாதங்களை தொடர வேண்டுகிறேன். எல்லா இடத்திலும் மற்றும் அனைத்து மனிதருக்குள்ளும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கின்றன. தீயவற்றில் இருந்து பாடம் படித்து கொண்டு நமக்கு தேவையான நல்லவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.



 எதற்கும் உதவாத உப்பு நீர் சூழ்ந்த சதுப்பு நிலத்தைக் கொண்ட இன, மத வேறுபாடு நிறைந்த சிறிய தீவான சிங்கப்பூரினால் எந்த உபயோகமும் இல்லை என 1965ஆம் ஆண்டு மலேசியா கூட்டாட்சியில் இருந்து கழட்டி விட்டது. திடீரென உலகின் சின்னஞ்சிறிய தனிநாடாக அறிவிக்கப்பட்டு ஆதரவின்றி தவித்து நின்ற மக்களுக்கு அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது உலக அரசியல்வாதிகளில் ஒப்பற்றவரான மறைந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூ 'என்ன செய்யப் போகிறோம், எப்படி முன்னேறப் போகிறோம் என்று தெரியவில்லையே. நம் எதிர்காலம் இருட்டாகிப் போய் விடுமோ' என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அழுது அரற்றினார். ஆனால் சில நொடிகள் தான். தலைவன் கலங்கினால் தம் நாட்டு மக்களும் மனம் குழம்புவர் என்பதை உணர்ந்து, உடன் மனம் தெளிந்து, வழியும் கண்ணீரைத் துடைத்து 'ஒத்துழைப்பு கொடுங்கள். நாட்டையும், நம் வாழ்வையும் உயர்த்திக் காட்டுகிறேன்' என்று சவால் விட்டு சாதித்தும் காட்டினார். உலக நாடுகள் எங்கும் சுற்றுப் பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்து பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்பேட்டையாக சிங்கப்பூரை மாற்றி, வேலை வாய்ப்பை பெருக்கி தொழிலிலும், பொருளாதாரத்திலும் மேம்படுத்தினார்.



திரு.லீ குவான் யூ மக்களிடையே ஆற்றிய ஏராளமான, எழுச்சி உரைகளை இணையம் மூலம் பாருங்கள். அவரது முழக்கங்களில் குறிப்பிட்டு கூறவேண்டியது, 'வளர்ச்சி அடையும் போது சிங்கப்பூர் மலாய் மக்களானதாகவோ, இந்தியருக்கானதாகவோ, சீனருடையதாகவோ இருக்காது. எல்லா இன மக்களும் சிங்கப்பூரியர்கள் என்றே கருதப்படுவர். எல்லா இனமும், மதமும், மொழியும் தனித்தன்மை கொண்டு போற்றி பாதுகாக்கப்படும். ஒன்றுபடுவோம். உழைப்போம். உயர்வோம். என்று உறுதி கொள்வோம். உலக அரங்கில் உன்னத நிலை அடைவோம்'. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே என்ன ஒரு தீர்க்கதரிசனம். திட்டமிடல்.



கறுப்பு, வெள்ளை காலத்தில் குடிசைக் குடியிருப்புகளில் வசித்து வந்த சிங்கப்பூர் மக்கள் அனைவரும் தற்போது அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் அனைத்து வசதிகளோடும் உலகின் முன்னணி மாதிரி நகரின் குடிமக்கள் என்ற பெருமையோடு வாழ்கின்றனர். எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்களை தயார்படுத்தியதில் திரு.லீ குவான் யூ மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பங்கு அளப்பதற்ரியது. உலகத்திலேயே வாழத்தகுந்த முன்னணி நகரமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும், பொழுதுபோக்கு நகரமாகவும் சிங்கப்பூர் மாறியதில் மக்களின் பங்கும் மகத்தரியது. நல்ல தலைமையை அடையாளம் கண்டு,  அணி வகுத்து ஆதரவு கொடுத்தார்கள். ஐம்பது ஆண்டுகளில் மக்கள் சக்தியால் சிங்கப்பூர் சாதித்த சாதனைகள் ஏராளம்.ஏராளம்.



துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் வரலாற்றைப் பார்த்தால் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை சாதாரண நாடுகள்தான். எண்ணெய் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கூட அவர்களுக்கு தெரியாது. எண்ணெய் இருப்பதை கண்டறிந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே அதற்கான ஆலைகள் அமைக்கவும், சுத்திகரித்து ஏற்றுமதி செய்யவும் அந்தந்த அரபு நாட்டு அரசர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. அவர்களது நாட்டு பாதுகாப்பிற்கு இராணுவ உதவியும், கல்வி, பொருளாதார, மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்களையும் வசதிகளையும், வாய்ப்புகளையும் வாரி வழங்கின. அவ்வாறு ஆதரவு தந்த நாடுகளின் கைபற்றி கனவு வளர்ச்சி கண்டன. கல்வி, செல்வத்தில் சிறந்தன.



என்னடா, 'இந்தியப் பிரதமரின் திட்டங்கள் பலன் தருமா' என்று தலைப்பு இட்டு விட்டு மற்ற நாடுகள் வளர்ச்சி அடைந்த வரலாற்றினை கூறிக் கொண்டிருக்கிறானே என்று எவரும் குழப்பம் கொள்ள வேண்டாம். நமது நாட்டிலும் இது போன்று ஏதாவது அதிசயமும், அற்புதமும் நடந்திடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாட்டையே ஏற்புடைய எடுத்துக்காட்டுகளோடு  பொதுவில் பகிர்ந்தேன். எப்படியும்  மொத்த ஐந்தாண்டுகளின் மீதமிருக்கும் காலத்தையும் இந்தியாவை ஆளப் போவது பெரும்பான்மையான மாநில மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற இந்த அரசாங்கம்தான். ஆக்கப் பொறுத்த நாம் ஆறவும் பொறுப்போம்.



கடைசியாக ஜனரஞ்சகமாக ஒரு கருத்து கூறி கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். முகவரி படத்தில் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு 'முதலில் வாங்கோணும். பின்னே தோண்டோணும். அப்புறம் கட்டோணும்.' என்று ஒரு அருமையான வசனம் உண்டு. ஆட்சியை மக்கள் நம் ஆதரவோடு வாங்கிவிட்டார்கள். இப்போது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான ஆழமான, அகலமான அஸ்திவாரம் என்னும் அன்னிய முதலீடுகளை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி என்னும் வலுவான கட்டுமானத்தை ஐந்தாண்டுகளுக்குள் எழுப்பத் தவறினால் அடுத்த தேர்தலில் அழுத்தமான கேள்விகளோடு தக்க பதில் கொடுப்போம். அதுவரை என்ன செய்கிறார்கள்.எதற்கு செய்கிறார்கள். எப்படி செய்கிறார்கள் என்று உற்றுப் பார்ப்போம். உண்மையான ஜனநாயக வலிமையை ஒன்றுபட்டு உணர்த்துவோம்.


நன்றி. 

வணக்கம்.

Thursday, August 20, 2015

பிரதமர் திரு.மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் - அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள்.


பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றி கேலி, கிண்டல் செய்யும்  நண்பர்கள் அறிவிலும், எண்ணத்திலும் தெளிவு கொண்டு சிறிது சிந்தித்தால் உண்மையை உணர்வார்கள்.  உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்தியர் அனைவரும் அறிய சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


பணம் இருப்பவன் தொழில் தொடங்குவான். பணம் இல்லாத படித்தவனும், படிக்காதவனும் அங்கு வேலை செய்வான் என்பது உலக நியதி. ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடுகளில் தொழிற்சாலைக்கு தேவையான இடம், மூலப்பொருட்கள், பணியாட்கள் அனைத்திற்குமே அதிக முதலீடு தேவைப்படும். எனவேதான் எந்த நாட்டில் இவையெல்லாம் மலிவாக இருக்கிறதோ அங்கு தொழில் தொடங்குகின்றன் பன்னாட்டு நிறுவனங்கள். எந்தவொரு இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூர், துபாய் மற்றும் பல வளைகுடா நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை கொடுத்து முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி கண்டன.


நம் பாரத நாடு விடுதலை அடைந்து 69 ஆண்டுகளாகியும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுப்பார் யாருமில்லை. அப்படியே சில நிறுவனங்கள் வந்தாலும் அதிலும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயிரம் ஊழல் செய்து நல்ல பல திட்டங்களை நாசமாக்கி விட்டனர். எனவேதான் எவரையும் நம்பாமல் தனி ஆளாக களம் இறங்கி, பல நாடுகளுக்கும் பயணம் செய்து பன்னாட்டு நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வருகிறார் மாண்புமிகு பிரதமர் திரு. மோடி.


இதுவரை 25 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. நமது நாட்டில் கூடிய விரைவில் பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்கட்டமைப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளன. கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டால் வேலை வாய்ப்பு பெருகும். உற்பத்தி தொடங்கிய பின்னும் உள்நாட்டில் வேலைவாய்ப்பும்,  பொருளாதார நிலையும் உயர்வு பெரும்.



இந்தியா இதுவரை இப்படிப் பட்ட செயல்திறன் மிக்க பிரதமரைப் பார்க்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த ஒரு கூட்டத்திலும் அவர் எழுதி வைத்து படிப்பதில்லை. சுதந்திர தின உரை மற்றும் சமீபத்தில் அமீரகத்தில் ஆற்றிய உரை போன்றவற்றில் அவரது எண்ணமும், ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன. அவரது எழுச்சியைக் கண்ட எதிர்கட்சிகள் தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்க முயல்கின்றன.


நாட்டின் முன்னேற்றம் என்ற குறிக்கோளில் தெளிவாக உள்ள பிரதமர் பல தடை தாண்டி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பது உறுதி. முதல் இரண்டு ஆண்டுகள் முதலீடு ஈர்ப்பு பயணம், அடுத்த  இரண்டு ஆண்டுகள் கட்டுமான கட்டமைப்பு பணிகள், வேலை வாய்ப்பு பெருக்கம், பொருளாதார மேம்பாடு என்று தீர்க்கமான திட்டங்களோடு செயல்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே பூகம்பத்தால் சிதையுண்டிருந்த குஜராத் மாநிலத்தை சீர்படுத்தி, முன்னேற்றம் அடையச் செய்த முறையைத் தான் இப்போது நாடு முழுதும் விரிவு படுத்தி உள்ளார்.


குஜராத் மாநிலத்தைப் போலவே அனைத்து மாநில மக்களும்      'நாட்டின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்' உண்மையை உணர்ந்து அடுத்து வரும் தேர்தல்களிலும் மோடி தலைமையிலான அரசினையே தேர்ந்தெடுப்பர். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகிய பின் வேலை தேடி வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறையும். இந்தியாவிற்கு வேலை தேடி வெளிநாட்டு மக்கள் வருவர். இது நடந்து விடக்கூடாது, நம் நாடு வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என்று தான் பல அயல்நாட்டு தீயசக்திகள் உள்நாட்டு உளவாளிகள் மூலம் தேவையற்ற செய்திகளை பரப்பி மக்களை குழப்பி வருகின்றன. இணையத்தில் உலவும் மோடி குறித்த எண்ணற்ற கேலிகளும், கிண்டல்களுமே இதற்கு சாட்சி.


அன்பர்களே, நண்பர்களே 'நாட்டின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்' என்பதில் தெளிவு கொள்ளுங்கள். நீங்கள் உணர்ந்த உண்மையை உற்றார், உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி. வணக்கம்.