Thursday, November 15, 2018

ஊத்துக்குழி - பாகம் 4


மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 4 - எட்டுவிரல் ஈணா, சோணா

ராமசாமிப் போத்தி சிலம்பு, வர்மம், குஸ்தி மற்றும் பல கலைகளும் கற்றவர். அவரை ஆசானாக கொண்டு கலைகளை கற்ற சிஷ்யர்கள் பலர். எவர் ஒருவர் போத்தியிடம் சண்டைக் கலைகள் கற்க வந்தாலும் ஏன் கலைகள் கற்க வந்தார்கள், குடும்ப பிண்ணனி என்ன என பல விவரங்களையும் தீர விசாரித்து கேட்டு அறிந்த பின்னரே சேர்த்துக் கொள்வார். சிறு சந்தேகம் வந்தாலும் கண்டித்து திருப்பி அனுப்பி விடுவார். அவரது சிஷ்யர்கள் யாராவது கற்றுக் கொண்ட தற்காப்புக் கலைகளை நியாய, தர்ம்ம் மீறி பயன்படுத்தினாலோ, அடுத்தவரை துன்புறுத்தினாலோ மீண்டும் அந்த விதமாக நடக்காதபடி மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்குவார் என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் அக்கம்பக்க கிராமங்களில் எல்லாம் ராமசாமிப் போத்திக்கும், அவரது சிஷ்யர்களுக்கும், மதிப்பும் மரியாதையும் இருந்தது.

கிறித்துவமத சமய ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவனமான சகோதரர்கள் சபைக்கு கல்லிடையில் இருந்து புலிப்பட்டி போகும் பாதையில் பள்ளியும், மாணவர்கள் தங்கும் விடுதியும், அதன் பின்னே குளமும், வயல்களும், தோட்டங்களும் இருந்தன. அந்த தோட்டங்களில் இல்லாத பழ மரங்களே கிடையாது. ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பம்பிளிமாஸ், பன்னீர் கொய்யா, ரம்தான், மங்குஸ்தான், பிளம்ஸ் மற்றும் பல மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய அபூர்வ வகை மரங்கள் எல்லாம் அங்கு இருந்தன. மா, பலா, வாழை,  தென்னை, பனை, கொய்யா, நாவல், கொடுக்காபுளி, சிறுநெல்லி, பெருநெல்லி என வகைவகையாக வருடம் முழுதும் காய்த்தாலும் எதுவும் விற்பனைக்கு கிடையாது. மொத்தமாகப் பறித்து பள்ளியில் படிக்கும் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தது போக மீதி உள்ள பழங்களை  அக்கம்பக்க கிராமங்களிலும் உள்ள குழதைகளுக்கு ஊட்டச்சத்தாக கொடுத்து ஊக்கப்படுத்தி கல்வி கற்க பள்ளிக்கு வரச்செய்வதற்கும் சகோதரர்கள் சபையினர் பயன்படுத்தினர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் இரவு நேரம் ராமசாமிப் போத்தி கல்லிடை சென்று விட்டு சில சிஷ்யர்களோடு புலிப்பட்டி ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த போது சகோதரர்கள் சபைக்குச் சொந்தமான பள்ளி விடுதியில் இருந்து சத்தமாக கேட்க என்னவோ, ஏதோ என்று உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி. தோட்டக் காவலாளி ஒருவரும், மற்றும் சில மாணவர்களும் தலை, கை, கால் ,முதுகு என உடம்பெல்லாம் தாக்கப்பட்டு வீக்கமான காயங்களோடு, இரத்தம் வடிந்தவாறு வலி தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தனர். என்ன, ஏது என்று விசாரித்தால் தோட்டத்தில் சில திருடர்கள் நடமாடுவதைப் பார்த்த இரவுக் காவலாளி விடுதியில் தங்கி இருந்த சில பெரிய மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்று தடுக்க முயன்ற போது திருடர்களால் தாக்கப்பட்டதாக கூறினர். மேலும் முகத்தை துண்டால் மறைத்து கட்டி இருந்த அந்த திருடர்கள் சில மாணவர்களை அடித்து மிரட்டி திருடிய பழங்களை பெட்டிகளிலும், மூட்டைகளுமாக கட்டி அவர்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு இருப்பதாகவும் கூறினர்.

மாணவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களையே திருட்டு வேலைக்கும் உடந்தையாகப் பயன்படுத்துவதை கேட்டு மிகவும் ஆத்திரமடைந்த ராமசாமிப் போத்தி, தன் சிஷ்யர்களோடு தோட்டத்திற்குள் புகுந்து திருடர்கள் இருக்கும் அடைந்தார்.  ராமசாமிப் போத்தியைக் கண்ட அந்த இரண்டு முகமூடித் திருடர்களும், “ ஒழுங்கு மரியாதையா எல்லாரும் போய் விடுங்கள். எங்களைத் தடுக்க நினைத்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என மிரட்ட, வெகுண்ட போத்தி ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார். இரண்டு திருடர்களுக்கும் இருபது வயதுதான் இருக்கும் என்றாலும் அவர்களும் மிக திறமையாகவே கம்பு சுற்றினர். சண்டை ஆரம்பித்த சில நிமிடங்களிலே திருடர்கள் கம்பு சுற்றும் முறையை வைத்து அவர்கள் தன்னிடம் சிலம்பம் கற்றவர்கள்தான் என்பதை போத்தி உணர்ந்து கொண்டார். இரண்டு கைகளிலும் கம்புகளை வைத்து விளையாடிய போத்தியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடிபட்டு விரைவில் ஒருவன் சரிய, அடுத்த சில நொடிகளிலே அடுத்தவனையும் அடித்து வீழ்த்தினார் போத்தி.

சிஷ்யர்கள் உதவியோடு திருடர்கள் அசையமுடியாமல் கை, கால்களை கட்டிய பின் இருவரின் முகத்தையும் மறைத்துக் கட்டி இருந்த துண்டுகளை அவிழ்த்துப் பார்த்தால், அவர் சந்தேகப்பட்டது போல இருவரும் அவரது பழைய சிஷ்யர்களான ஈணமுத்துவும், சோணமுத்துவும் ஆவர். பண்ணையார் வீட்டையும், வயல்கள், தோட்டங்களைப் பாதுகாக்கும் காவல்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலே ஈணா எனப்படும் ஈணமுத்துவையும், சோணா எனப்படும் சோணமுத்துவையும் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்தார் போத்தி. வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களே களவில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் தாக்கிக் காயப்படுத்தியதை தற்போது கண்டிக்காவிட்டால் பிற்காலத்தில் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாக இந்த திருடர்கள் இருவரும் மாறி விடுவர் என்பதை உணர்ந்த போத்தி, அந்த சம்பவத்திற்கு பின் ஈணாவும், சோணாவும் கம்பு எடுத்து சுற்ற முடியாத அளவிற்கு கடும்தண்டனை கொடுக்க முடிவு செய்தார்.


என்ன மாதிரியான தண்டனை என்பதை பிரதான சிஷ்யர்களை தனியாக அழைத்து கூறிய போது அவர்கள் நடுங்கிப் போய் விட்டார்கள் என்றாலும், குருவின் சொல் மீறாமல் திருடர்களை மண்டி, இட்டு அமரச் செய்து, இரண்டு கைகளிலும் பெருவிரல் மட்டும் நீட்டி இருக்குமாறு வைத்து விட்டு மற்ற நான்கு விரல்களையும் மடக்கி துண்டால் இறுக்கிக் கட்டி விட்டனர். என்ன நடக்கிறது என்பதை திருடர்கள் பார்க்க முடியாதவாறு ஈணா, சோணா இருவரது கண்களும் இறுக்கமாக கட்டப்பட்டன. உட்கார வைக்கப்பட்ட திருடர்களின் இரண்டு பக்கமும் அமர்ந்த வாக்கில் கையை நீட்டி வைக்கும் உயர அளவிற்கு அடிமரத்துண்டங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

அந்த இருட்டு நேரத்திலும் ரண சிகிச்சைக்கு பயன்படுத்தும் மரத்துப் போகச் செய்யும் மூலிகைச் செடியையும், வெட்டுக்காயம் விரைவில் ஆற உதவும் மூலிகைச் செடியையும்  தேடிக் கண்டுபிடித்து பறித்து வந்த போத்தி, இடுப்பில் எப்போதும் வைத்து இருக்கும் அரிவாளையும் நன்றாக தீட்டி வைத்துக் கொண்டார். மரத்துப் போகச் செய்யும் மூலிகையின் சாறு எடுத்து அடிமரத்துண்டங்களின் மேலிருந்த இருவரது கைகளின் மணிக்கட்டு முதல் பெருவிரல் முழுதும் மூலிகைச் சாறை தடவி இருவரும் சிறிதும் அசைய முடியாதவாறு சிஷ்யர்களை பிடித்துக்கொள்ளச் சொல்லி, என்ன நடக்கிறது என்று இருவரும் உணரும் முன்பே கூரான அரிவாளை ஓங்கி வீசி இரு கைகளிலும் உள்ள பெருவிரல்களை அடியோடு மொத்தமாக வெட்டி எடுத்து விட்டார் போத்தி. இரத்தம் பொங்கி வரவிடாமல் உடனே அரைத்து வைத்திருந்த வெட்டுக்காயம் விரைவில் ஆற உதவும் மூலிகைச் செடிப் பசையை அப்பி துணியால் இருவரது கைகளிலும் இறுகக் கட்டிவிட்டார்.

ஈணா, சோணாவால் தாக்கப்பட்டு காயம் அடைந்திருந்திருந்த அனைவருக்கும் வைத்தியம் செய்து முடித்த போத்தி, வெளியூர் சென்றிருந்த சகோதரர்கள் சபையின் பொறுப்பாளர் வரும் வரை இருவரது கட்டுக்களையும் யாரும் அவிழ்க்க கூடாது என்று கூறி தன் சிஷ்யர்கள் இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள் காலை விஷயம் அறிந்த பெரிய பண்ணையார், தனக்கு தெரிவிக்காமல் தன் வீட்டுக் காவலாளிகளை தண்டித்த ராமசாமிப் போத்தியின் மீது கோபம் கொண்டு குதித்தார். போத்தியை அழைத்து வரச்சொல்லி ஆளனுப்பியும் உடனே பார்க்க வராமல் வயலுக்கு போய் இருப்பதாக தகவல் வந்ததாலும், பண்ணையாட்கள் சென்று சொல்லியும் ஈணா, சோணாவை அவிழ்த்துவிட போத்தியின் சிஷ்யர்கள் மறுத்ததாலும், சின்னப்பண்ணையாரையே நேரே அனுப்பி ஈணா, சோணாவை அவிழ்த்து வரச்செய்தார் பெரிய பண்ணையார். அன்று முதல் ராமசாமிப் போத்தி மேல் கடும்வெறுப்பு கொண்டு பழிவாங்க தக்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஈணா, சோணாவிற்கு இருபது ஆண்டுகளுக்கு பின் பூசாரியை போத்தி மடக்கிப் பிடித்த அன்றுதான் நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது.

(தொடரும்)

பாகம் 5