Thursday, February 07, 2019

துள்ளு மறி - இறுதி பாகம்

பாகம் 1





சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.


இறுதி பாகம் 

பாசமான பேரன் தன்னை வெறுத்ததாலும், மனைவியும், மகனும் பேரனை பார்க்க விடாமல் மறுத்ததாலும், மருத்துவமனையில் இருக்க கூட விடாமல் தடுத்து விரட்டியதாலும் மனம் வெதும்பி சோர்ந்து போய் ஊர் திரும்பிய போத்திக்கு எந்நேரமும் பேரன் நினைவாகவே இருந்தது. கிடைக்குப் போனால் குட்டியைப் பிரிந்த தாய் ஆடு மேய்ச்சலுக்கு கூட போகாமல் பட்டியையும், குட்டிகள் அடைக்கும் கூண்டையுமே சுற்றி, சுற்றி வந்தது வேறு போத்தியின் மனதை உறுத்தியது. எந்த வருடமும் .இது போன்று சம்பவம் நடந்ததாக அவர் நினைவில் இல்லை.

காலையிலும், மாலையிலும் ஆட்டுக்கிடைக்கு சென்று பட்டி வேலைகளைப் பார்த்தாலும் பகல் நேரங்களில் இதையே நினைத்து, நினைத்து மனம் குழம்பியவாறும், இரவெல்லாம் தூங்க முடியாமலும் இரண்டு நாட்களாக தவித்துப் போனார் போத்தி. அக்கம்பக்கத்து வீட்டார், அங்காளி, பங்காளி உறவினர்கள் என அம்பை மருத்துவமனைக்கு   போய் ஐயப்பாவை பார்த்து வந்தவர்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து போத்தியைப் பார்த்து, “ எப்படி இருந்தவன் இப்படி வாடி வதங்கிப் போயிட்டானே…. ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க மாட்டானே…. உட்காராம எப்பவும் ஓட்ட சாட்ட்த்துலே இருக்க பையன் இப்படி படுத்த படுக்கையா கிடக்கானே….” என்று அங்கலாய்த்து சென்றது வேறு போத்திக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை தந்த்து.

மூன்றாவது நாள் வெள்ளியன்று காலை வீட்டிற்கு வந்த போத்தியின் மகன் அன்று மாலை சென்னை கிளம்பிப் போவதாகவும், இனிமேல் ஊருக்கு ஐயப்பாவை அழைத்து வரவே போவதுமில்லை என்றும் கூறியதைக் கேட்ட போத்திக்கு துக்கம் தொண்டை அடைத்து கண்ணீர் பொங்கியது.

வழியனுப்பாவது வருகிறேனே…” என்று கெஞ்சியவரிடம், “ நேத்தும், இன்னைக்கும் தான் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கான். அதனால்தான் டாக்டர்ட்ட கேட்டுகிட்டு இன்னைக்கு சாயந்திரம் அம்பைல  இருந்து சென்னைக்கு போற டிராவல்ஸ் பஸ்ல டிக்கெட் போட்டிருக்கேன். ஊருக்கு புறப்பட ஏற்பாடு செஞ்ச இந்த நேரத்துல, உங்களைப் பார்த்து மறுபடியும் வலிப்பு வந்ததுன்னா அதைத் தாங்குற சக்தி அவன் உடம்புக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை. அதனால நீங்க வராம இருக்கிறதுதான் நல்லது. வளர்ந்து பெரியவனாகி அவனா உங்களை எப்போ பார்க்க வர்றானோ அப்ப நீங்க பார்த்துகிடுங்க….” என்று திட்டவட்டமாக கூறிவிட்டு ஊருக்கு கொண்டு போக வேண்டிய பை, பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் போத்தியின் மகன்.

மகனது வார்த்தைகளால் இடிந்து போய் அன்று முழுதும் உணவு எடுக்காமலும், பட்டிக்கு போகாமலும் வீட்டிலே முடங்கிக் கிடந்தார் போத்தி. மகன், மருமகள், பேரனை வழியனுப்பி விட்டு அந்திக்கருக்கல் நேரம் வந்த ஆச்சி, “என்ன வீட்டுல விளக்கு கூட போடாம உட்கார்ந்திருக்காரு மனுசன்…” என்று அங்கலாய்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய பேரனைப் பற்றிய விபரங்கள் கேட்கலாம் என்று ஆர்வத்துடன் எழுந்து வந்தார் போத்தி. 

அதற்குள் ஆச்சி வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தார் வந்து, “என்ன, ஏது.. “ என்று ஐயப்பா குறித்த விபரம் விசாரிக்க ஆரம்பிக்க, “என்னத்தைச் சொல்ல… பெரியவங்க செஞ்ச பாவம் சின்னவங்களைப் பிடிக்கும்ங்குற மாதிரி எங்க வீட்டுல தாத்தா பண்ணது பேரனைப் பிடிச்சுட்டு…. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ங்கிறதுன்னா என்னான்னு இப்போ தான் புரியுது. துள்ளு மறி மாதிரி துள்ளிக்கிட்டு திரிஞ்ச பய துடிச்சு துவண்டு போயிட்டானே…." என்று உரத்த குரலில் ஒப்பாரி வைத்து பாட ஆரம்பித்தார். அடுத்தடுத்து உறவினர்களும், அங்காளி, பங்காளிகளும் தொடர்ந்து வர அனைவரிடமும் போத்தியைக் குறை சொல்லியே ஆச்சி அழுது புலம்பியதால் ஏற்கனவே நொந்து போயிருந்த போத்தி மனது மேலும் வெந்து போனது. ஆச்சியின் குத்தல் பேச்சுகளால் கூனிக் குறுகிப் போன போத்தி வீட்டிற்குள் சென்று படுத்தாலும் வெளியில் பேசும் பேச்சுக்கள் அவர் காதுகளில் தொடர்ந்து விழுந்து வேதனையை அதிகப்படுத்தின.

ஒரு வழியாக உறவினரெல்லாம் போன பின் ஆச்சி அலுத்துப் போய் படுத்தாலும், இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்த போத்தி ஒரு முடிவெடுத்தவராய் அதிகாலை நாலு மணி முதல் பேருந்தில் ஏறி ஆலங்குளம் சென்று சனிக்கிழமை ஆட்டுச் சந்தையில் தெரிந்த தரகரைப் பார்த்து மொத்தமாக ஆடுகளை விற்பனை செய்யப் போவதாகவும், ஆனால் கறிக்கடைக்கு அல்லாமல் சொந்த வளர்ப்பிற்கு வாங்க நல்ல ஆட்கள் இருந்தால் விலை முன்னே, பின்னே இருந்தாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். வீரவநல்லூரில் ஒரு பண்ணையாரின் வயல், தோட்ட உரத்தேவைகளுக்காக ஆட்டுக்கிடை வாங்க பண்ணை நிர்வாகம் பார்ப்பவர் இரண்டு வாரமாக வந்ததாகவும் தோதாக அமையாததால் அலைபேசி எண் கொடுத்து சென்று இருப்பதாகவும் கூறிய தரகர், அந்த எண்ணில் அழைத்து விபரம் கூற, அருகே வந்து விட்டதாக கூறிய நிர்வாகி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.

பண்ணை ஆள்கள் இருவரோடு அவர் வந்திருந்த வண்டியிலே போத்தியையும், தரகரையும் ஏற்றிக் கொண்டு நேராக புலிப்பட்டிக்குச் சென்று ஆற்றுக்குச் செல்லும் சாலை ஓர வயலில் அமைந்து இருந்த ஆட்டுக் கிடையை காலை எட்டு மணி அளவில் அடைந்தார்கள். பட்டி வேலைகள் முடித்து, குட்டிகளைப் பிரித்து கூண்டுக்குள் அடைத்துக் கொண்டிருந்த கொண்டிருந்த கீதாரியிடம் போத்தி விபரம் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் பட்டியை சுற்றி வந்து ஆடுகள், கிடாக்கள், குட்டிகளைப் பரிசோதித்துப் பார்த்த பண்ணை நிர்வாகி பரம திருப்தியாகி, “ இதை மாதிரி நல்ல கிடையா வாங்க ஆசைப்பட்டுத்தான் எங்க முதலாளி மூணு வாரமா தொடர்ந்து எங்களை அனுப்பிச்சிகிட்டு இருக்காரு. சீக்கு ஏதும் இல்லாம ஆடுகளை நல்லா பராமரிக்கிறீங்க.  ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. முதலாளிக்கும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்புல அனுப்பிச்சேன்.அவரும் பார்த்துட்டு ;பேசி, முடிச்சுற சொல்லிட்டாரு. உங்க கீதாரிக்கு விருப்பம்ன்னா ஆடுகளைப் பார்த்துகிட்டு எங்க பண்ணையிலே குடும்பத்தோட வந்து தங்கச் சொல்லிட்டாரு…” என்று நிர்வாகி சொன்னதைக் கேட்டு போத்தியும், தரகரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மொத்தமாக ஆடுகளை எண்ணி விலை பேசி பேரம் படிந்தவுடன் கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை போத்திக்கும், தரகுப் பணத்தை தரகருக்கும் கொடுத்து விட்டு, புலிப்பட்டியிலே ஒரு டிராக்டரை வாடகைக்கு ஏற்பாடு செய்து கிடை அமைப்பதற்கான மூங்கில் தட்டிகள், கம்பிகள், குட்டிகள், அடைக்கும் கூண்டுகள் எல்லாவற்றையும் ஏற்றி கூட வந்திருந்த பண்ணை ஆட்களில் ஒருவரையும் துணைக்கு அனுப்பிய பண்ணை நிர்வாகி, குட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் டிராக்டரை மெதுவாக ஓட்டிக் கொண்டு போகவும் அறிவுறுத்தினார். மற்றொரு பண்ணை ஆளை கீதாரியோடு சேர்ந்து ஆடுகளை பத்திரமாக மணிமுத்தாறு புதிய கால்வாய் கரை வழியாக நேராக பண்ணைக்கு கால்நடையாக அழைத்து வருமாறு சொல்லி விட்டு போத்தியை புலிப்பட்டியிலும், தரகரை கல்லிடையிலும் விட்டுச் செல்வதாக சொல்ல காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டனர் அனைவரும்.

காரில் போகும் போது “இவ்வளவு தொகையை கையில் வைத்துக் கொண்டு இருப்பது நல்லது இல்லை என்பதாலும் சனிக்கிழமையான அன்று வங்கி அரைநாள் மட்டும் வேலை செய்யும் என்பதாலும் தன்னையும் தரகரையும் கல்லிடை வங்கி வாசலில் விட்டுச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார் போத்தி. தரகருக்கு வங்கி மேலாளர் பழக்கம் என்பதால் போத்தியை அழைத்துக் கொண்டு நேராக அவர் அறைக்குச் சென்றார். பேரனின் பெயரில் ஒரு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, காப்பாளர்களாக மகன், மருமகள் பெயரைப் போட்டு அனைத்துப் பணத்தையும் முதலீடு செய்து விட்டு, கையோடு சேமிப்புக் கணக்கு புத்தகத்தை வாங்கிக் கொண்டு தரகருக்கு நன்றி கூறி வங்கி வாசலில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று மதிய உணவு வாங்கிக் கொடுத்து தானும் அவருடன் சேர்ந்து உண்டு விட்டு மன நிம்மதியோடு வீடு திரும்பினார் போத்தி.

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் பல ஊர் சிவாலயங்களுக்கு உழவாரப் பணிகளுக்கு செல்லும் புலிப்பட்டி ஊரில் உள்ள போத்தி வயதையொத்த சிலர் அம்மன் கோவில் கொடை முடிந்தவுடன், மற்ற ஊர் உழவாரக் குழுவினரோடு சேர்ந்து காசிக்கு செல்வதாக இருந்தனர். ஆச்சி சென்னைக்குப் போயிருக்கும் போது தானும் அவர்களுடன் வருவதாக கூறிப் போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் செலவுகளுக்கு முன்பணம் கொடுத்து உறுதி செய்திருந்தார் போத்தி. போய் வர ஒரு மாத காலம் ஆகும் என்பதால் ஆட்டுக் கிடையைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கீதாரியிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார். ஆனால் எதிர்பாராமல் ஆடுகளை விற்பனை செய்யும் படி ஆகி விட்டாலும் அதுவும் நல்லதாகவே தோன்றியது போத்திக்கு.

மறுநாள் ஞாயிறு அதிகாலை நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் இரயிலில் புறப்படுவதாக இருந்ததால், சனிக்கிழமையான அன்று மாலை புலிப்பட்டியில் இருந்து கிளம்புவதாக ஏற்பாடு. வங்கி வேலைகள் முடித்து வீட்டிற்கு மதியம் மூன்று மணி அளவில் வீட்டிற்கு சென்ற போத்தி, ஆச்சியை அழைத்து ஆட்டுக் கிடையை விற்று விட்டதையும், பணத்தை பேரன் பெயரில் வங்கியில் முதலீடு செய்திருப்பதையும் கூறி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை கையில் கொடுத்தார். அன்று மாலை தான் காசிக்குப் புறப்படுவதாலும், திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் என்பதாலும் வேண்டுமானால் கொடைக்கு வந்து விட்டு சென்னை திரும்பும் உறவினர்களோடு சேர்ந்து மகன் வீட்டிற்கு சென்று தங்குமாறும் சொல்லி விட்டு பயணத்திற்கு தேவையான உடைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு காசிக்கு புறப்பட்டுச் சென்ற போத்தி அதன் பின் புலிப்பட்டி ஊருக்கு திரும்பவேயில்லை.

நன்றி. வணக்கம்.

Monday, February 04, 2019

துள்ளு மறி - பாகம் 4

பாகம் 1




சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.
பாகம் 4

வழக்கமாக புலிப்பட்டி ஊரில் கிடா வெட்டு முடிந்ததும் தங்கள் நேர்ச்சைக்காக தனிப்பட்ட முறையில் ஆடு, கோழி வெட்டியவர்கள் அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று  சமைத்து உறவினர்களையும், ஊராரையும் அழைத்து கறி விருந்து வைத்து விடுவார்கள். கோவில் சார்பாக வெட்டப்படும் ஆடுகள், கோழிகள் அந்த இடத்திலே ஏலம் விடப்பட்டு யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்கப்படும். ஏலம் மூலம் கிடைத்த பணமும், கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அந்த வருடச் செலவு போக மீதம் இருக்கும் தொகையோடு சேர்த்து அடுத்த வருட கொடைக்கான நிர்வாகச் செலவுகளுக்கு பயன் படுத்தப்படும். 

எட்டு மணி வாக்கில் தூங்கி எழுந்தவுடன் நேராக செம்மறி குட்டியை இரவில் வைத்த இடத்திற்கு சென்ற ஐயப்பா கூடை மேலே பரணில் இருப்பதையும், குட்டி வீட்டில் இல்லாத்தையும் பார்த்து ஒரு வேளை தாத்தா காலையில் கிடைக்கு எடுத்துச் சென்று தாய் ஆட்டுடன் சேர்த்திருப்பார் என்ற நம்பிக்கையில் ஆறுதல் கொண்டவனாய் பல் தேய்த்து, பால் குடித்து, காலை உணவையும் சாப்பிட்டு விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மறுபடியும் கோவிலுக்கு விளையாடப் போனான். கோயிலுக்கு வெளியே நின்ற சப்பரத்திலிருந்த அலங்காரத் தட்டிகள் மற்றும் கோயில் உள்ளேயும், சுற்றியும் போட்டிருந்த பந்தலைப் பந்தல்காரர்கள் பிரித்துக் கொண்டிருந்தனர். ஒலி பெருக்கிகள், குழல் விளக்குகள் மற்றும் அலங்கார வண்ண தொடர் விளக்குகளை ஒளி-ஒலி அமைப்பாளர்கள் அவிழ்த்துக் கொண்டிருந்தனர். விழாக் குழுவினர் வில்லுப் பாட்டுக் குழுவினர், மேளக்காரர்கள், வெடிகாரர், பந்தல்காரர், ஒளி-ஒலி அமைப்பாளர் என ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய மீதத் தொகையை கணக்கு பார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கோவில் உள்ளே விளையாட இடம் இல்லாததால் வெளியே குச்சி ஊன்றி, அணி பிரித்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள் ஐயப்பாவும், நண்பர்களும். எதிர் அணியான் ஒருவன் தூக்கி அடித்த பந்து கோயிலுக்கு அருகே இருந்த வீட்டின் உரக்குழியில் விழ, அங்கு கூட்டமாய் இருந்த காகங்கள் பதறி, எழுந்து பறந்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தன. பந்தை துரத்தி ஓடிய ஐயப்பா எங்கே விழுந்தது என்று தெரியாமல் தேடியும் கிடைக்காமல் போகவே, உடன் தேடி வந்த நண்பர்களில் ஒருவன் கூட்டமாய் அமர்ந்திருந்த காகங்களை விரட்டி விட்டு அவை கூடி இருந்த இடத்திற்கு மிக நெருக்கமாய் பந்தை தேடிப் போனவன் ,” எலெய், வெட்டுன துள்ளு மறி இங்க கிடக்குலேய். அதான் காக்காலாம் வந்து கொத்திட்டு இருக்கு…” என்று கத்தினான். ஆம். வெட்டிய எல்லாக் கிடாக்களும், சேவல்களும் ஏலத்தில் போய் விட்டாலும் எலும்பு, கறி, தோல் எதுக்குமே ஆகாத துள்ளுமறியை வாங்குவார் யாருமில்லை. ஏலம் போகாத அந்த குட்டியை பந்தல் வேலை செய்யும் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது எடுத்துச் செல்ல்லாம் என கோயில் வெளிச் சுவற்றின் அருகே வைத்திருக்க, அதைத் தான் காகங்கள் சூழ்ந்து கொத்திக் கொண்டிருந்தன.  
  
மற்ற நண்பர்களோடு அருகில் ஓடி வந்து பார்த்த ஐயப்பா அதிர்ச்சி அடைந்து அருவெறுப்பில் ஓங்கரித்து, ஓங்கரித்து தொடர்ந்து வாந்தி எடுத்து வலிப்பு வந்து மயங்கி விழுந்தான். பதறிப் போன சிறுவர்கள் கத்தியதைக் கேட்டு ஓடி வந்த விழாக்குழுவினர் கோயிலுக்குள் தூக்கிப் போய் கையில் இரும்புச் சாவி கொடுத்து ஆசுவாசப் படுத்தினர். அதற்குள் ஒரு சிறுவன் ஓடிப் போய் போத்தி வீட்டில் தகவல் சொல்ல ஆச்சியும், ஐயப்பாவின் தாய், தந்தையரும் அலறி அடித்து ஓடி வந்து அழுது புலம்ப சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தாரும் கூட கோயிலில் கூட்டம் குவிந்து விட்டது. “ என் ஆட்டுக் குட்டிஎன் ஆட்டுக் குட்டி…” என்று மயக்கம் தெளிந்து அழுத ஐயப்பாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதான் ஐயப்பா.

ஒரு வழியாக ஐயப்பாவை தூக்கி, தோளில் போட்டுக் கொண்டு வீடு வந்தவர்கள் உடனே கிளம்பி ஒரு ஆட்டோ அமர்த்தி அம்பை அருணாச்சலம் டாக்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஐயப்பாவை பரிசோதித்த மருத்துவர், “ எதிர்பாராத அதிர்ச்சியே வலிப்பிற்கு காரணம். பையன் பலவீனமாக இருப்பதால் குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறி ஒரு அறையில் தங்க வைத்து ஊசி, மருந்து கொடுத்து குளுக்கோஸ் பாட்டிலும் போட்டு விட அலுப்பில் ஐயப்பா உறங்கிப் போனான். இந்த விபரம் ஏதும் தெரியாமல் கிடை வேலைகளை முடித்து விட்டு வந்த போத்தி வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து, எல்லோரும் எங்கே சென்றிருப்பார்கள் என்று ஏதும் புரியாமல் நிற்க பக்கத்து வீட்டம்மாள் வந்து சாவி கொடுத்து விபரம் கூறினார்.  பேரன் வலிப்பு வந்து மயங்கி விழுந்த்தைக் கேட்ட போத்திக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்ய என்று தெரியாமல் திகைத்து நின்றவரை சமாதானப்படுத்திய எதிர்வீட்டுக்காரர் தன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அம்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனைக்கு வந்த போத்தியைப் பார்த்த்தும் ஆச்சியும், மகனும், மருமகளும் அழ ஆரம்பிக்க போத்தியும் கண்ணீரை அடக்க முடியாமல் கத்திக் கதறி விட்டார். இவர்கள் போட்ட சத்த்த்தில் பதறி எழுந்த ஐயப்பாவும், “ என் ஆட்டுக் குட்டிஎன் ஆட்டுக் குட்டி…” என்று மறுபடியும் ஆரம்பித்து,” நீ தானே என் ஆட்டுக்குட்டியை வெட்ட கொண்டு போய் கொடுத்தே… “ என்று தாத்தா மேல் புகார் சொல்லி அழ ஆரம்பிக்க இரைச்சல் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து வந்த டாக்டர் பெரியவர்களை அதட்டி, ” பையனையும், அம்மாவையும் தவிர மற்றவர்கள் வெளியே வாருங்கள்…” என்று அழைத்து வந்தார்.

இதற்கு முன் இப்படி வலிப்பு வந்ததில்லையே எனக் கேட்டவர்களிடம், “ வலிப்பு வர உடல் பல்வீனம், மனச் சோர்வு, எண்ணக் குழப்பங்கள், தட்ப வெப்பம், உணவுப் பழக்கம் என்று பல காரணங்கள் உள்ளன. இவற்றில் எல்லாமே உங்கள் குழந்தைக்கு ஒத்து வரும் என்பதால் இரண்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து மறுபடியும் வலிப்பு வரவில்லை என்றால் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று கூறிச் சென்றார் மருத்துவர். மறுபடியும் புலிப்பட்டிக்குச் சென்றாலோ, போத்தியைப் பார்த்தாலோ மீண்டும் வலிப்பு வரக்கூடிய அபாயம் இருந்ததால் போத்தியை மட்டும் ஊருக்குப் போகச் சொல்லி விட்டு ஆச்சி, மகன், மருமகள், பேரனோடு மருத்துவமனையிலே தங்கி விட்டார்.

( தொடரும் )
                  

Sunday, February 03, 2019

துள்ளு மறி - பாகம் 3

துள்ளுமறி - பாகம் 

துள்ளுமறி - பாகம் 2 -  சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.

பாகம் 3

கொடை தினமன்று காலை முதலே ஊரெங்கும் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளில் பால்குடம் அழைப்பு, வார்ப்பு பாயாசம் விநியோகம், வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம் என ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆச்சி, அம்மா, அப்பா என ஆள் மாற்றி ஆளாக ஒவ்வொருவருடனும் கோயிலுக்கு சென்று வேடிக்கை பார்த்த ஐயப்பாவிற்கு முதல் முறையாக ஊருக்கு வந்து கொடை விழா பார்ப்பதால் அனைத்தும் புதுமையாகவும், விநோதமாகவும் இருந்தன. அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டு தன் வயதையொத்த ஒரே தெருவைச் சேர்ந்த விளையாட்டுத் தோழர்களான நான்கைந்து சிறுவர்களுடன் சேர்ந்து கோயிலையும், சுற்றி அமைந்திருந்த திருவிழாக் கடை வீதிகள் முழுதும் சுற்றி, சுற்றி வந்தான் ஐயப்பா.

வார்ப்பு பாயாசம் விநியோகம் நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டத்திற்குள் நுழைந்து, அடுப்பில் இருக்கும் பாயாச தேக்சாக்களை அடைந்து தனியாக வாளிகளில் கோரி வந்து தங்கள் குழுவிற்கு பகிர்ந்து கொடுத்தனர் ஐயப்பாவின் நண்பர்கள். விழாக் குழுவினர் ஊர் மக்களுக்கு விநியோகிக்க சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்கள் இருக்கும் குத்துபோனி எனப்படும் பாத்திரங்களை  தலைக்கு மேல் வைத்து எடுத்து வரும்போதே சில குறும்புக்காரச் சிறுவர்கள் மேற்கூரைப் பந்தலுக்காக ஊன்றப் பட்டிருந்த பந்தக்கால் வழியாக ஏறி குறுக்குவாக்கில் அமைக்கப்பட்டிருந்த கம்புகளில் தலைகீழாக தொங்கியவாறு, கூட்ட நெரிசலினால் திணறிய படி மெதுவாக தட்டுத்தடுமாறி தூக்கி வரும் விழாக்குழு உறுப்பினருக்கு தெரியாமல் மேலிருந்து கை விட்டு  அள்ளி கீழே நிற்கும் நண்பர்கள் தூக்கி பிடிக்கும் பாத்திரங்களில் போட்டனர்.

பகல் உணவிற்கு அம்மா, அப்பா, ஆச்சி என ஆள் மாற்றி ஆள் அழைத்தபோதும் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் சாப்பிட்டே வயிறு நிறைந்து விட்டதாக கூறி மறுத்த ஐயப்பா நாள் முழுதும் நண்பர்களோடு கோயிலையும், கடை வீதிகளையும் சுற்றி விளையாடிப் பொழுதைப் போக்கினான். மாலை நேரத்தில் பேரனைத் தேடி வந்த போத்தி, வீட்டில் இருந்து காய்ச்சி எடுத்து வந்த பாலைக் குடிக்க வைத்து, மேலும் சில தின்பண்டங்களும் ஐயப்பாவிற்கும், அவனது நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு பின் ஆட்டுப் பட்டி அமைக்கப் பட்டிருந்த வயல் நோக்கிச் சென்றார். நண்பர்களுடான விளையாட்டு ஆர்வத்தில் ஐயப்பா அன்று அவருடன் செல்ல வில்லை.

ஆட்டுப்பட்டிக்குச் சென்று அன்றாட வேலைகளை முடித்து விட்டு மறுநாள் அம்மன் கோயிலில் வெட்ட வேண்டிய கிடாக்களை தேடிப் பிடித்து, கயிற்றில் பிணைத்து ஒரு கையில் பிடித்துக் கொண்டும், தாயுடன் பட்டிக்குள் இருந்த செவலைக் குட்டியை துள்ளு மறிக்காக ஒரு கையில் தூக்கிக் கொண்டும் கோயிலுக்கு வந்த போத்தி. விழாக்குழுவினரை அழைத்து கிடாக்களையும், துள்ளு மறியையும் காண்பித்து மடப்பள்ளியருகே இருந்த பந்தக்கால்களில் வரிசையாக கட்டி வைத்து விட்டு வீடு நோக்கி சென்றார். வீட்டில் தயாராக இருந்த வெந்நீரில் குளித்து விட்டு, சப்பர வேலைகளுக்கு உதவி செய்வதற்காக கோவிலுக்கு கிளம்பியவர் பேரன் கண்ணில் படாததால் எங்கே என்று விசாரிக்க இன்னும் வீடு திரும்பவில்லை என்று ஆச்சி சொன்னதால் கோயிலுக்குச் சென்று தேடிய போது அங்கு ஐயப்பா நண்பர்களுடன் பச்சைக் குதிரை தாண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் பேரனையும், உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் அன்பாக அதட்டி வீட்டில் போய் தூங்கச் சொன்னார் போத்தி. வீட்டிற்குப் போகும் வழியில் ஊர் சுற்ற கிளம்பும் உற்சவ அம்மனுக்கு தீபாரதனை காண்பித்து சுண்டல், பூம்பருப்பு கொடுப்பதாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யவும், உடன் இருந்த நண்பர்கள் கோயிலை நோக்கி ஓடவே ஐயப்பாவும் பின் தொடர்ந்து ஓடினான்

மடப்பள்ளி அருகே விநியோகம் செய்து கொண்டிருந்த பிரசாதங்களை கூட்ட்த்தில் நுழைந்து வாங்கித் தின்று கொண்டிருக்கும் போது அங்கே பந்தக்காலில் கட்டப்பட்டிருந்த செவலைக் குட்டியைப் பார்த்து, “இது எப்படி இங்கே வந்தது…” என ஆச்சரியமாக நண்பர்களிடம் கேட்க மறுநாள் காலை பலி கொடுக்கப் போகும் விவரத்தைக் கூறி விட்டு அவரவர் வீடு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சில நேரம் நின்ற ஐயப்பா பின் ஒரு முடிவு எடுத்தவனாக, பிரசாத விநியோகம் முடிந்து எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்ற பின் அக்கம் பக்கம் பார்த்து யாரும் அருகில் இல்லை என்பது உறுதியானவுடன் செவலைக் குட்டியை அவிழ்த்து கையில் தூக்கிக் கொண்டு மடப்பள்ளி அருகே இருந்த சிறிய கதவு வழியாக கோயிலை விட்டு வெளியேறி, இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டை அடைந்தான். வீட்டில் உபயோகப்படுத்தாமல் ஓரத்தில் வைத்திருந்த கோழிக்கூடையை எடுத்து கவிழ்த்து அதனுள் செவலையை மறைத்து வைத்து விட்டு நிம்மதியாக உறங்கச் சென்றான் ஐயப்பா.

உற்சவ அம்மனை சப்பரத்தில் ஏற்றி அம்மன் கோவில் இருக்கும் நடுத்தெரு கடந்து ராந்தக்கல் வரை உடன் வந்த போத்தி இரவு பன்னிரெண்டு மணியை தாண்டி விட்டதால் அலுப்பின் காரணமாக வீடு நோக்கி உறங்கச் சென்றார்.  மனைவி, மகன், மருமகள், பேரன் மற்றும் கொடை பார்க்க வந்திருந்த  உறவினர்கள் என வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆட்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் தான் படுக்க இடம் தேடிய போத்தியின் கண்களில் கோழிக்கூடை பட்டதால் எடுத்து வேறெங்காவது வைத்துவிட்டு அந்த இட்த்தில் படுக்க முடிவு செய்தார்.

கவிழ்த்து வைத்திருந்த கோழிக்கூடையை எடுத்து மேலே பரணில் வைத்துவிட்டு, கூடை இருந்த இட்த்தை சுத்தப்படுத்தும் விதமாக தோளில் இருந்த துண்டால் வேகமாக விசிறியவர், “ம்ம்மேஎன்று அலறிய ஆட்டுக்குட்டியின் சத்தம் கேட்டு அதிர்ந்து, விளக்கைப் போட்டுப் பார்த்தவர் செம்மறிக் குட்டியைப் பார்த்ததும், தூக்க கலக்கம்  முற்றிலும் கலைந்தவராய், “ இது எப்படி இங்கே வந்தது...என செய்வதறியாது திகைத்தார். கோயிலில் விட்டு வந்த குட்டியை யார் தூக்கி வந்திருப்பார் என யோசித்தவர், பேரனின் சேட்டையாகத் தான் இருக்கும் என முடிவு செய்து கோயிலில் மறுபடியும் கொண்டு விடுவதற்காக குட்டியை தூக்கிக் கொண்டு போனார்.

நள்ளிரவு என்பதால் போத்தி போன நேரம் கோயிலில் யாரும் இல்லை. மேளக்காரர்கள் சப்பரத்துடன் ஊர் சுற்றி வரப் போயிருந்தார்கள். வில்லுக்காரர்கள் தூங்கப் போயிருந்தார்கள். விழாக் குழுவினரும், சில வயதானவர்களுமாக அங்கங்கே சிலர் மட்டும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மடப்பள்ளியின் அருகே இருந்த பந்தக்கால்களில் வரிசையாக கட்டப்பட்டு படுத்திருந்த கிடாக்கள் போத்தியைப் பார்த்ததும் எழுந்து வாஞ்சையுடன் தலையை ஆட்டி அன்பைத் தெரிவித்தன. ஏற்கனவே கட்டியிருந்த பந்தக்காலில் மறுபடியும் செம்மறிக் குட்டியை கட்டி விட்டு, கிடாக்களையும் தடவிக் கொடுத்து விட்டு, வீடு திரும்பி உறங்கிப் போன போத்தி அதிகாலையில் சப்பரம் ஊர் சுற்றி வந்து அம்மன் கோயிலில் மேளம் அடித்து சாமியாடும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வழக்கம் போல ஆட்டுக் கிடை போட்டிருக்கும் வயல் நோக்கிப் போய் பட்டி வேலைகளை பார்க்கலானார்.

( தொடரும் )