Thursday, December 13, 2018

ஊத்துக்குழி - பாகம் 6

மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 6 – தூக்குத் துரை

தூக்குதுரை ரிபெல் ஸ்ரீபெரியசாமித்தேவர் 

ரிபெல் எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு தமிழில் புரட்சிக்காரர்கிளர்ச்சிக்காரர்கலகக்காரர்கொண்ட கருத்தில் உறுதியானவர்அடக்குமுறை ஆட்சிக்கு அடங்காத எதிர்ப்பாளர் என்றெல்லாம் பொருள்.


தூக்குத்துரை என்று அழைக்கப்படும் ரிபெல் ஸ்ரீபெரியசாமித்தேவர் என்பவர் யார் ?
                                                                              
தென்தமிழ்நாட்டில் பாண்டியர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்து நாயக்கர்கள் எழுச்சி கொண்ட போது தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை எழுபத்திரெண்டு பாளையங்களாக பிரித்து, பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதிகளில் கொத்தளங்கள் எனப்படும் எழுபத்திரெண்டு கண்காணிப்பு அரண்களான கோட்டைகளை அமைத்தனர். மதுரையில் பெரிய விழா நடத்தி, வீரவிளையாட்டுக்கள் மூலம் தமது அரசுடன் இணைந்திருந்த பாளையக்கார சமஸ்தான மன்னர்களின் திறமை, வலு அறிந்து எல்லை பாதுகாப்பு கோட்டைக் கொத்தளங்களின் நிர்வாகப் பொறுப்பை பிரித்து வழங்கினர்.

மதுரையின் திறந்தவெளி மைதானத்தில் பல மன்னர்களின் முன்னே கொடும்புலியை வெறும் கையால் அடித்துக் கொன்ற சிங்கம்பட்டி பாளையக்காரரின் வீரத்தைப் பாராட்டிதென்னாட்டுப் புலிஎன்னும் பட்டத்தை வழங்கி, பரிசாக சேர நாடு மற்றும் நாஞ்சில் நாட்டு எல்லைகளில் இருந்த இருபத்தியொரு பாதுகாப்புக் கொத்தளங்களையும், கோட்டைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பும் அளித்தனர். இப்படியாக கோட்டைக் கொத்தளங்களின் பாதுகாப்பிற்காக காவல் பணிக்குச் சென்ற சிங்கம்பட்டி சமஸ்தானத்தைச் சேர்ந்த மறவர் இன மக்கள் மதுரைக்குத் தெற்கே சேர நாட்டு எல்லையாம் செங்கோட்டை முதல் நாஞ்சில் நாடு வரையாக பாண்டிய நாட்டின்  பல ஊர்களில் பரவிப் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.

வட இந்தியாவை முகலாயர்கள் ஆண்ட போது அலாவுதின் கில்ஜி தன் படைத்தளபதியான மாலிக்காபூரின் தலைமையில் பெரும்படையை தென்னகம் நோக்கி அனுப்பினான். மூர்க்கத்தனமான அந்த படை பல அரசுகளையும் தோற்கடித்து மதுரை வரை முன்னேறி வந்து நாயக்கர் ஆட்சிக்கும் முடிவு கட்டி விட்டு ஆற்காடு நவாப் வசம் பாளையக்காரர்களிடம் இருந்து வரி வசூலிக்கும்  பொறுப்பை கொடுத்துச் சென்றது.  நவாப் குடும்ப வாரிசுகளுக்குள் நிர்வாகப் போட்டி ஏற்பட்டு, குடும்ப சண்டை நடந்த போது, குழப்பத்தைப் பயன்படுத்தி  வரி கொடுப்பதை பாளையக்காரர்கள் நிறுத்தி விட்டனர். பின் நவாப் நவீன ஆயுதங்களுடன் கூலிப்படையாகச் செயல்பட்டு வந்த கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து அனைத்து பாளையக்காரர்களிடமும் இருந்து வரி வசூல் செய்யும் பொறுப்பை வழங்கினான்.

திருநெல்வேலி பாளையக்காரர்களிடம் கப்பம் வசூலிக்க வந்த கர்னல் கீரான் தலைமையிலான ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிப் படை,  ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையிலான நவாபு படை, மற்றும் கான்சாகிப் தலைமையிலான உள்நாட்டுச் சிப்பாய் படைகளை பூலித்தேவர் தலைமையில் சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, ஊத்துமலை மற்றும் பல பாளையக்காரர்கள் ஒருங்கிணைந்து நெல்கட்டான்செவல், களக்காடு, திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், திருச்சி, திருநெல்வேலி, கங்கைகொண்டான், ஆழ்வார்குறிச்சி, சேத்தூர், கொல்லங்கொண்டான், ஊத்துமலை, சொக்கம்பட்டி, தலைவன்கோட்டை ஆகிய பல கோட்டைகளிலும்,  ஊர்களிலும் எதிர்கொண்டு நடத்திய வரலாற்றில் " திருநெல்வேலிப் போர்" என்று அழைக்கப்படும் முதல் முதலில் இந்தியத் திருநாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த  முதலாம் பாளையப் போரில் வெள்ளையர்களும், ஆற்காடு நவாபு படையினரும் படு தோல்வி அடைந்தனர்.

1750-ஆம் ஆண்டு முதல் 1767-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேல்  தம்மை வீழ்ச்சி அடையச் செய்த பூலித்தேவர் முதலான அனைத்து பாளையக்காரர்களையும் சூழ்ச்சி செய்து பிரித்து வென்ற ஆங்கிலேயர்கள் பிற்காலத்தில் தங்களுக்கு பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக அனைத்து பாளையங்களையும் ஆட்சி அதிகாரமில்லாத சிறு சிறு ஜமீன்களாக மாற்றி . படைபலம் வைத்துக் கொள்ள கூடாமல் ஆயுதப்பயிற்சி பெற்ற அனைத்துப் படைகளையும் கலைக்கச் செய்து ஜமீன்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

பல ஆயிரம் ஆண்டுகளாக தாங்கள் ஆட்சி செய்து வந்த மண்ணையும், மரியாதையையும் இழந்து தங்கள் மனதுக்குள் பொங்கிப் புழுங்கி வந்த பல மன்னர்களைப் போலவே சிங்கம்பட்டி சமஸ்தானமும் வெள்ளையர்களை வீழ்த்த தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் திருநெல்வேலி ஜில்லா சிங்கம்பட்டி ஜமீன் 23-வது பட்டம் ஸ்ரீ நல்லகுட்டி சிவசுப்பிரமணிய தேவர் - ஸ்ரீ வாலி சுடலைமுத்தம்மாள் நாச்சியார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் ஸ்ரீ பெரியசாமித்தேவர். சிறுவயது முதலே அரண்மனை மன்னர்களின் வழியில் கல்வி, நுண்கலை  மற்றும் பல மொழிகளில் பேசும் திறன் போன்றவற்றில் சிறந்து விளங்கிய  ஸ்ரீ பெரியசாமித்தேவர் பாபநாசம் மலைக்கோட்டை தளபதி நாச்சிமுத்துபாண்டியன் அவர்களிடம் போர்பயிற்சிகளை கற்று கொண்டார்
முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் எப்போதும் காட்சியளிக்கும் ஸ்ரீ பெரியசாமித்தேவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24-வது பட்டம் ஆவார். அவர் காலத்தைச் சேர்ந்த ஜமீன்தார்களிலே மிகவும் வித்தியாசமானவர். ஆஜானுபாகுவான உருவம்; வளமான ஜமீன், இள ரத்தம். நீதி, நேர்மை, சொன்ன சொல் தவறாதவர் என்றாலும் பிடிவாதத்துக்கும் திமிருக்கும் பெயர் போனவர். புலிப்பால் வேண்டும் என்று அவர் விரும்பினால், அது வந்தே ஆக வேண்டும். அப்படி ஒரு குணம் ஜமீன்தாருக்கு. வயது 27 ஆகியும் திருமணமும் செய்து கொள்ளவில்லை.


இந்திய வரலாற்றின் மறக்கப்பட்ட முதல் விடுதலைப்போரான திருநெல்வேலி பாளையக்காரர்கள் கிளர்ச்சிப் போரில் பூலித்தேவரோடு இணைந்து போராடிய தமது சிங்கம்பட்டி சமஸ்தான முன்னோர்களையும், அவர்கள் வீரத்தையும் எப்போதும் மனதில் கொண்டு, வெளியில் வெள்ளையர்களோடு சிரித்துப் பேசி உறவு பேணி வந்தாலும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் எல்லாம் அவர்களுக்கு எதிரான உளவு, ஒற்று வேலைகளில் தமது சிங்கம்பட்டி சமஸ்தானத்தைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஆட்களை ரகசியமாக ஈடுபடுத்தி தகவல்கள் திரட்டி வந்தார்


ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற மனஉறுதியோடு வாழ்ந்து வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரியசாமி தேவருக்கு அன்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை; இருப்பும் கொள்ளவில்லை.

அன்று மதுரையில் இருந்து வந்த கடிதம்தான் அவரை அப்படி நிலைகுலையச் செய்துவிட்டது. அதை மீண்டும் படித்துப் பார்த்தார். 'பெருமதிப்பிற்குரிய மகாராஜா சமூகத்திற்கு, உங்கள் அடிமை ராமசாமி எழுதியது. தங்கள் ஆணைப்படி ஒற்று, உளவு வேலை பார்த்து வந்த அடியேன் இப்போது மதுரை சிறையில் அடைபட்டுக் கிடக்கிறேன். கொலை செய்ததாகவும் கொள்ளையடித்ததாகவும் என் மேல் குற்றம்சாட்டித் தூக்குத் தண்டனை கொடுத்துவிட்டார்கள். அடுத்த மாதவாக்கில் என்னைத் தூக்கில் போடுவார்கள் போலத் தெரிகிறது. இந்த ஏழையின் எஜமானரான மாண்புமிகு மகாராஜாவிற்கு இதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்...படிக்கப் படிக்கப் பெரியசாமித் தேவருக்கு ஆத்திரம் பொங்குகிறது. கண்கள் சிவந்து, கைகளை முறுக்கியவர், ”'கொண்டு வா குதிரையை..”  என்று கர்ஜித்து, குதிரையில் ஏறி மதுரையை நோக்கிப் புறப்பட்டார்.

ஆங்கிலேயர் மட்டுமல்லாமல். வட நாட்டு சேட்டுகளோடும் நமது சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குப் பழக்கம் அதிகம். அவர்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவை அவருக்கு அத்துப்படி. சேட்டுகள் பேசுவதுபோலவே இந்தி கலந்த கொச்சைத் தமிழ் பேசுவார். எனவே, ஒரு பெரிய சேட்ஜிபோல் உடை உடுத்தி 'அசல்சேட்டுபோல மதுரை வந்து சேர்ந்தார். அங்கே தனியாக ஒரு மாளிகை அமர்த்திச் சில நாட்கள் தங்கியிருந்தார்.

மதுரை ஜெயிலர் நானாசாகிப். இவர் ஒரு பட்டாணி. இவரைத் தன் நண்பராக ஆக்கிக்கொண்டார் ஜமீன்தார் பெரியசாமித் தேவர். அடிக்கடி ஜெயிலரின் வீட்டிற்குப் போவது, பரிசுகள் கொடுப்பது, ஜெயிலருடன் சேர்ந்து சிறைச்சாலைக்குப் போவது, அங்குள்ள உதவியாளர்களிடம் பேசுவது, கைதிகளைப் பார்ப்பது, அவர்களுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பது, ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்திலும், இந்தி தெரிந்தவர்களிடம் இந்தியிலும் பேசுவது என்பதாக மதுரை ஜெயிலில் நமது 'ஜமீன்தார் சேட்ஒரு முக்கியப் புள்ளி ஆகிவிட்டார்.

இதற்கிடையில் கைதிகளுக்கு இனிப்புக் கொடுக்கும் சாக்கில் நண்பர் ராமசாமியைப் பார்த்துத் தான் வந்திருப்பதையும் காட்டிக்கொண்டார். அப்படி இப்படி என்று மாதம் ஒன்றாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் - அதாவது, ராமசாமியை ஜெயிலில் இருந்து கடத்திக்கொண்டு போய்விட வேண்டும்.

ஒரு நாள் மாலை வழக்கம்போல் ஜெயிலரும் சேட்டும் வைகைக் கரைக்குக் குதிரையில் போய் அங்கு மணலில் அமர்ந்து அரட்டையில் இருக்கின்றனர். மெதுவாக இருட்டிக்கொண்டு வருகிறது. அப்போது, மெள்ள தான் யார் என்பதையும், மதுரை வந்த நோக்கத்தையும் பக்குவமாக வெளியிடுகிறார் ஜமீன்தார். இதைக் கேட்டு ஜெயிலர் திகைத்து நிற்க, ஜமீன்தாரோ தன் பணபலத்தையும் செல்வாக்கையும் அவருக்கு உணர்த்த - இதில் எல்லாம் மயங்காத ஜெயிலர், ஜமீன்தாரின் உறவை முறித்துக்கொண்டு கிளம்ப நினைக்கும்போதுதான் அந்த விபரீதம் நடக்கின்றது.

வார்த்தைகள் தடித்துக் கைகலப்புத் தொடங்குகின்றது. இதை முன்னமே எதிர்பார்த்து வந்திருந்த ஜமீன்தார், ஜெயிலரைக் கொன்றுவிடுகிறார். தான் யார் என்பதை அடையாளம் காட்டிய பிறகு இரண்டில் ஒன்றை முடித்துத்தானே ஆக வேண்டும். தான் வந்த குதிரையின் சேணத்துடன் ஜெயிலரின் உடலைக் கட்டி வைகை மணலில் புதைத்துவிட்டு அவசரமாக ஜெயிலுக்கு வருகிறார்.

அங்குள்ளவர்கள் அனைவரும் அவருடைய சிநேகிதர்கள் ஆயிற்றே. அதிலும் அன்று தனக்குப் பிறந்த நாள் என்று ஏற்கனவே சொல்லி வைத்து இருந்தார். ஒவ்வொருவருக்கும் சந்தோஷமாக ரூபாய்களை அள்ளி வீசுகிறார். ராமசாமியைப் பார்க்க வேண்டும் என்று ஜமீன்தார் சொல்ல, அவர்களும் வழக்கம்போல் அவரைத் திறந்துவிட, அவரோடு சில விஷயங்கள் பேச வேண்டும் என்று சொல்லி வெளியே அழைத்து வந்த அவரை சிங்கம்பட்டிக்கே கடத்திக் கொண்டு வந்துவிட்டார் ஜமீன்தார்.

மறுநாள் மதுரை எங்கும் ஒரே பரபரப்பு. 'ஜெயிலர் நானாசாகிப்பைக் காணவில்லை. தூக்குத் தண்டனைக் கைதி ராமசாமி தேவரை, வட நாட்டு சேட்டு கடத்திக்கொண்டு போய்விட்டார்!இதுவே எங்கும் பேச்சு. குதிரைச் சேணத்துடன் அவசர அவசரமாக வைகை மணலில் புதைக்கப்பட்ட ஜெயிலரின் உடலை நாய்கள் வெளியே இழுத்துப் போட, சேணத்தின் உட்பக்கம் எழுதப்பட்டு இருந்த சிங்கம்பட்டி சமஸ்தான முத்திரையைக் கொண்டு 'இவ்வளவு நாட்களும் நாடகமாடியவர் வட நாட்டு சேட்டு இல்லை. சிங்கம்பட்டி ஜமீன்தாரே…’ என்ற உண்மை தெரியவருகிறது. ஜமீன்தார் பெரியசாமித் தேவர் கைது செய்யப்படுகிறார்; வழக்கு நடக்கின்றது. தூக்குத் தண்டனை கிடைக்கின்றது.

கொலைசெய்யப்பட்ட ஜெயிலர் நானாசாகிப்பின் மனைவி அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் துரைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். 'ஜமீன்தார் பெரியசாமியை அவருடைய குடிபடைகள் அனைவரும் கூடியிருக்கும்போது, அவர்கள் அனைவரின் முன்னிலையில் சிங்கம்பட்டியிலேயே பட்டப்பகலில் தூக்கிலிட வேண்டும்என்ற அவரது கோரிக்கையை. அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஏ.சி. ராக்டன் ஏற்றுக்கொள்கிறார். 

7.10.1834. சிங்கம்பட்டியே அல்லோலகல்லோலப்பட்டது. பக்கத்துப் பட்டிகளில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள். ஜமீன்தார் பெரியசாமியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும். எனக்கென்ன... பெண்டாட்டியா, பிள்ளையா. ஒரு சிநேகிதனைக் காப்பாற்ற நான் செய்தது சரிதானே…’ என்று நினைத்தபடி, கம்பீரமாக நடந்து ஊத்துக்குழி கரையில் இருந்த தூக்கு மரத்துக்கு வருகிறார். ஜமீன்தாரால் தூக்குமேடைக்குப் போக முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அப்போது ஜமீன்தார் ''எனக்குச் சிலம்பம் தெரியும். ஒரு கம்பு (கழி) கொடுத்தீர்கள் என்றால், சிலம்பம் ஆடிக்கொண்டே இந்தக் கூட்டத்தை விலக்கித் தூக்கு மேடைக்குப் போய்விடுகிறேன்'' என்று சொல்ல, அவருடைய துணிச்சலைக் கண்டு அதிசயப்பட்டு, அதிகாரிகள் திகைத்தனர். 

அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் குவிய ஆரம்பிக்கிறார்கள். பெரியசாமித்தேவர் எதற்கும் கவலைப்படவில்லை. ” உயிர் நண்பர் ராமசாமித் தேவரை காப்பாற்ற ஜெயில் வார்டனை கொலை செய்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று காவலர்களிடம் சொல்லி மகிழ்வுடன் தூக்கில் தொங்க ஆயத்தமானார். ஆங்கிலேய அதிகாரிகள் பலர் சூழ்ந்து ஏற்பாடுகள் பல செய்தாலும் ஜமீன்தாரால் தூக்குமரத்தை நெருங்க முடியவில்லை அந்த அளவுக்கு கூட்டம் அவரை மொய்த்தது மக்கள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர். ஜமீன் அவர்களை தேற்றினார். தாய்மண் காக்க எடுத்த முயற்சிகளின்  அனைத்து சங்கடங்களையும் தானே ஏற்றுக் கொண்டு ஜமீன் பெரியசாமித்தேவர் கலெக்டர் முன்னிலையில் தூக்கில் ஏற ஆயத்தமாகிறார்..

வாரிசு இல்லாமல் ஜமீன் அழிந்துபோகக் கூடாது என்று நினைத்த பிரிட்டிஷ் அரசாங்கம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, அந்தமானுக்கு அவரை அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு கலெக்டர் கைக்கு கடைசி நேரத்தில் வந்து சேர்கிறது. கலெக்டர், இவர் மன்னிப்பு கேட்பார் என்று எண்ணி, “'சரி! உங்கள் கடைசி விருப்பம் என்ன ? " என்னிடம் மன்னிப்பு கேட்டால் தூக்கில் இடாமல் விட்டு விடுகிறேன்"  என்று சொல்ல, இனமான ஏந்தலான ஜமீன்தார் பெரியசாமித் தேவரோ, " அன்னிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய என் முன்னோர்கள் வழியில் தாய்நாட்டின் விடுதலைக்காக என்னாலான  முயற்சிகள்  எடுத்தது தவறா… நண்பன் உயிர் காப்பாற்ற முயன்றது குற்றமா… எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அறியாத, எங்கேயோ இருந்து பிழைக்க வந்த நீ யாருடா என்னை மன்னிக்க" என்று சொல்லி, அவரது முகத்தில் காரித் துப்பி விட்டார். 

அவமானப்பட்டுப்போன கலெக்டர் ராக்டன் தூக்குத் தண்டனை இரத்து ஆன அரசாங்க உத்தரவை மறைத்து, உடனே ஊத்துக்குழி கரையில் இருந்த மரத்தில் ஜமீன்தாரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கிறார். ''அந்தத் தூக்கு மரத்தில் இருந்து ஜமீன்தாரின் உடலைக் கீழே இறக்கக் கூடாது; கழுகுகள் கொத்தித் தின்னட்டும்'' என்று ஆணையும் பிறப்பித்துவிடுகிறார். ஆணை நிறை வேற்றப்படுகின்றது. ஜமீன் பெரியசாமித் தேவர் தன்னுடைய சொத்துக்களையும், வாழ்வியல் சுகங்களையும் பெரியதாக நினைத்திருந்தால் கடைசிவரை அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் சொத்து, சுகத்தை விட பெரியதாக நினைத்தது தாய்நாட்டின் விடுதலை மற்றும் நண்பனின் நட்பு என்பதால் எல்லோரோலும் "ஐயா தூக்குத்துரை" என்று மரியாதையோடு அழைக்கப்பட்டு இன்று வரை மக்களால் மதித்துப் போற்றப்பட்டு வருகிறார். அவருடைய சிலை சிங்கம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருக்கிறது. தூக்கிலிடப்பட்ட இடம் 'தூக்கு மரத்து வயல்என்ற பெயரோடு இன்றும் இருக்கிறது. தூக்குத் துரையின் ஆவியை அடிக்கடி பார்ப்பதாக அங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

     

ஸ்ரீபெரியசாமித்தேவருக்கு வழங்கப்பட்ட ரிபெல் எனப்படும் பட்டமான ஆங்கில வார்த்தைக்கு தமிழில் புரட்சிக்காரர், கிளர்ச்சிக்காரர், கலகக்காரர், கொண்ட கருத்தில் உறுதியானவர், அடக்குமுறை ஆட்சிக்கு அடங்காத எதிர்ப்பாளர் என்றெல்லாம் பொருள். தாய்நாட்டிற்காகவும், தன் நண்பனுக்காகவும் தூக்கிலிடப்பட்டு இன்னுயிர்விட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீபெரியசாமித் தேவரை 'தூக்குத் துரை’ ஐயா என்றுதான் இன்றும் சொல்லுகிறார்கள்.  ஜமீன்சிங்கம்பட்டி ஆற்றின் கரையில் அகத்தியர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. அதில் சிறப்பு மிக்க கல்தூண்கள் பல உள்ளன.  ஒரு தூணில் தூக்குதுரை ரிபெல் ஸ்ரீபெரியசாமித்தேவர் வடக்கு நோக்கி வணங்கியபடி உள்ளார். சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை. இன்று வரை கந்த சஷ்டி விழாவின்போது சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் கோயிலுக்கு வந்து விரதம் இருப்பர். சுப்பிரமணியப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின்னரே அங்கிருந்து சிங்கம்பட்டி அரண்மனைக்கு கிளம்புவர்.  தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களைக் கூட மறைந்த மானமிகு ஜமீன்தார் ஐயா தூக்குத்துரை ரிபெல் ஸ்ரீபெரியசாமித்தேவர் வழிவந்த சிங்கம்பட்டி மக்கள் மன்னித்து விடுவர்; ஆனால், மனசாட்சிப்படி நடக்கும் நல்லவர்களுக்கும், தெய்வத்திற்கும் எதிராக சதி  செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

(தொடரும்) 


No comments: