Saturday, December 29, 2018

ஊத்துக்குழி - பாகம் 12மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 12 – இதுவும் கடந்து போகும்...

ஏழெட்டு நாட்களாக தொடர்ந்து எரிக்கப்பட்ட ராமசாமிப் போத்தி வீட்டுக் கூரை  மரைக்காயரின் மலையாள மந்திர, தந்திரத்தினால் முந்தைய நாள் இரவு தீப்பிடிக்காதது விடிகாலைப் பொழுதிற்குள் ஊரெல்லாம் பரவிட அனைவரும் வந்து ஆச்சரியமாக பார்த்துப் போயினர். சிலர் நேராக பள்ளிவாசலுக்கே சென்று மரைக்காயரிடம் தங்கள் குடும்பம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளைக் கூறி மந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமா என்று விசாரிக்க, நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டும் உதவுவதாக கூறி அனுப்பினார் மரைக்காயர். மேலும் சிலரோ ஆரோக்கியம் ஐயாவின் தொடர் பிரார்த்தனைகளே கூரையை தீப்பிடிக்காமல் செய்தது என்று கூறி தங்கள் வீடுகளிலும் சபை பாதிரிகளை வந்து ஜபவழிபாடு செய்யச் சொல்லுமாறு  போத்திகளிடம் கூறிச் சென்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் கிறித்துவ மதபிரசங்கப் பாடல்கள் பாடுவதை பலரும் வியந்து கொண்டாடினர். இவ்வாறு ஊரே பரபரப்பாக பேசித் கொண்டிருக்கும் போது பெரிய பண்ணையாரம்மாவின் நோய்க்கும் மரைக்காயர் அல்லது ஆரோக்கியம் ஐயாவின் உதவி நாடிப் பார்த்தால் நல்லது என்று பலரும் கூற ஆரம்பித்தது பூசாரி மற்றும் ஈணா, சோணாவின் காதுகளுக்கும் சென்றது.

எடுத்த காரியத்தில் வென்று விட்டதாக எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட இந்த பின்னடைவு ஈணா, சோணாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது என்றாலும் சின்னப் பண்ணையாரையும், பெரிய பண்ணையாரம்மாவையும் அணுகி யாரும் இதுபற்றி சொல்லி விடாமல் இருக்க தங்களால் ஆன தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். யார் கண்ணிலும் படாமல் வயலையும், வீட்டையும் எரித்து போத்தி நிம்மதியை தொடர்ந்து குலைத்து வந்தவர்கள் முந்தைய நாள் பிடிபட இருந்த்து போல் இனியும் அசட்டையாக இருக்கக் கூடாது என்று பேசி முடிவெடுத்தனர். பூசாரியோ தெருவில் ஊர்க்குழந்தைகள் கிறித்துவ மதப்பாடல்களை பாடி, விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டும், மரைக்காயரின் மலையாள மந்திரத்தை அனைவரும் பெருமையாக பேசுவது கேட்டும், இந்த நிலை நீடித்தால் கோயில்களுக்கு யாரும் வரமாட்டார்களே… தனது சித்த மருத்துவ மகிமையும் கெட்டுப் போகுமே என்று பலவாறு எண்ணி குழம்பிப் போனார்.

போத்திகள் இருவரும் சனிக்கிழமை சந்தைக்குப் போகும் வழியில் சபைத் தோட்ட்திற்குச் சென்று ஆரோக்கியம் ஐயாவை சந்தித்து மரைக்காயரின் மலையாள மாந்திரீகத்தால் கூரை எரியாமல் காப்பாற்றப்பட்டது குறித்தும், தூக்குத்துரை ஐயாவிற்கு சிறப்பு வழிபாடு நடத்த மரைக்காயர் சொல்லியிருப்பதால் சாமான்கள் வாங்க சந்தைக்கு போவதாகவும் கூறி, தினமும் மாலை நேரம் பள்ளிப் பாதிரிகளையும், விடுதி மாணவர்களையும் தொடர்ந்து அனுப்பி ஜபங்கள் செய்து, துதி பாடல்கள் பாடி தங்களுக்கும், மற்ற ஊர் மக்களுக்கும் மன ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற ஆரோக்கியம் ஐயா இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக சின்னப் பண்ணையாரையும், பெரிய பண்ணையாரம்மாவையும் சந்தித்து பேசப் போவதாகவும், மேலும் நம்பிக்கை தரும் பல நல்ல வார்த்தைகளும் கூறி அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.

சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு நடக்கும் சிறப்பு வகுப்புகளை பார்வையிட்டு முடிக்கவே மதிய நேரம் ஆகிவிட்டதாலும், சின்னப்பண்ணையார் பொதுவாக பகல் நேரங்களில் பல விஷயங்களாக அம்பை, கல்லிடை, தென்காசி போன்ற ஊர்களுக்கு சென்று விட்டு அந்திப் பொழுதிலே திரும்புவார் என்பதாலும், மாலை நேரத்தில் ஜப வழிபாட்டிற்காக மற்ற பாதிரிகளும், விடுதி மாணவர்களும் செல்லும் பொழுது தாமும் செல்லலாம் என முடிவெடுத்த ஆரோக்கியம் ஐயா வழக்கமான சபை நிர்வாக வேலைகளில் கவனம் செலுத்தலானார்.  

காலை உணவு முடித்துவிட்டு வெளியே கிளம்பும் சின்னப்பண்ணையாரோடு ஈணா, சோணா இருவரில் யாரவது ஒருவர், மதிய உணவுப் பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டியோட்டிச் செல்வர். இன்னொருவர் வீட்டுக் காவலுக்கு இருப்பர் என்பதால் சின்னப் பண்ணையாரை பார்க்கவோ, பேசவோ அவர்கள் அனுமதி இல்லாமல் யாரும் அணுக முடியாது. அவர்கள் கண்காணிப்பை மீறி பண்ணை வீட்டுக்குள்ளும் யாரும் நுழைய முடியாது. ஊரில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஈணா, சோணா மற்றும் பூசாரி மூலமே சின்னப்பண்ணையாருக்குச் செல்லும். போத்தியின் வயலையும், வீட்டையும் கொளுத்திய விபரம் கூட முழுமையாகச் சொல்லாமல் அவரை விரைவில் வழிக்கு கொண்டு வந்து விடுவோம் என்று மட்டும் பேம்போக்காக சொல்லி வைத்திருந்தனர்.

மாலை நேரம் போத்திகள் வீட்டில் இளம் பாதிரிகளும், விடுதி மாணவர்களும் நடத்தும் ஜபக்கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொண்ட ஆரோக்கியம் ஐயா பண்ணையார் வீடு சென்ற நேரம் இருட்டி விட்டது. ஈணா, சோணா இருவரும் ஆற்றிற்கு குளிக்க சென்றிருந்ததால், மற்றொரு வேலையாள் மூலம் தான் சின்னப் பண்ணையாரைப் பார்க்க வந்த செய்தியை சொல்லி அனுப்பினார். சகோதரர்கள் சபை பள்ளியும், விடுதியும் தொடங்கிய காலம் முதல் பள்ளி விழாக்களில் பரிசுகள் வழங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பண்ணையார் குடும்பத்தினர் அழைக்கப்படுவதால் சின்னப் பண்ணையாருக்கும் ஆரோக்கியம் ஐயாவின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. உடனே வரவேற்பறைக்கு வந்து வழக்கமான ஷேம லாபங்கள், பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் குறித்து  பேசிக் கொண்டிருந்த பண்ணையாரிடம் ஆரோக்கியம் ஐயா மென்மையாக தான் வந்த விஷயத்தை தெரியப்படுத்தினார்.

பெரிய பண்ணையார் தது பண்ணையில் தலைமை காவல்கார பொறுப்பு ஏற்க பலமுறை அழைத்தும்  பிடிகொடுக்காதது, சிறுவயதில் தனக்கு சிலம்பு கற்க சொல்லிக் கேட்டபோது மறுத்தது, ஈணாசோணா விவகாரத்தில் தங்களுக்கு தெரிவிக்காமல் தம் வீட்டுக் காவலாளிகளை தண்டித்தது.. “ போன்ற பழைய விஷயங்களில் போத்தியின் செயல்பாடு குறித்து ஆதங்கப்பட்ட சின்னப் பண்ணையார், தனது அன்னையின் நோய் குணமாவதற்காக இறங்கிச் சென்றுப் பேசியும் போத்தி ஊத்துக்குழிக்கு வழிப்பாதை அமைக்க இடம் கொடுக்க மறுத்தது குறித்துச் சொல்லும்போது மட்டும் “ அப்படி என்ன வெறுப்பு அந்த போத்திக்கு எங்க குடும்பத்து மேல…  என்று கோபப்பட்டு கேட்டார்.

அமைதியாக அனைத்து விவரங்களையும் காது கொடுத்து கேட்ட ஆரோக்கியம் ஐயா, “அதுக்காக குடியிருக்கிற வீட்டையும், கும்பிடுற வயலையும் கொளுத்தறது நியாயமா… தர்மமா…. நீதியா… “ என்று கேட்க கேட்க சின்னப்பண்ணையார் அதிர்ந்தார். “போத்தியிடம் பேசிப் பார்த்துதான் வழிக்கு கொண்டு வரச் சொன்னேனே தவிர, வீட்டிற்கும், வயலுக்கும் தீ வைக்கச் சொல்லவில்லையே…” என்று வருத்தப்பட்டவர்  இந்த விஷயத்தை நோய்வாய்ப்பட்டு தளர்ச்சிசியோடு இருக்கும் தன் அன்னையிடம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் தானே விரைவில் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் உறுதி கூறினார். மரைக்காயர் மந்திரம் மூலம் தீப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததையும், மறுநாள் தூக்குத்துரை ஐயாவிற்கு போத்தி குடும்பத்தார் சிறப்பு வழிபாடு செய்ய இருப்பது குறித்தும் ஆரோக்கியம் ஐயா கூற தானும் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று சின்னப்பண்ணையார் மனதில் எண்ணிக் கொண்டார்.

ஜபவழிபாடு முடித்த பாதிரிகளின் வண்டி  பண்ணையார் வீட்டிற்கு வந்திருப்பதாக வேலயாள் வந்து சொல்லவும், பிரச்சினைக்கு தீர்வு கிடைத்த மனநிறைவோடு ஆரோக்கியம் ஐயா அவர்களோடு சேர்ந்து கிளம்பி சபைத் தோட்ட விடுதி நோக்கிச் சென்றார். ஆரோக்கியம் ஐயா சின்னப் பண்ணையாரைச் சந்தித்து சென்ற விபரம் அறியாத ஈணா, சோணா இருவரும் ஆற்றுக்குச் சென்று முந்தைய நாள் போலவே கூழாங்கற்களை சேகரித்து வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஊரடங்கும் வரை காத்திருந்து தீப்பந்தங்களோடு போத்தி வீடு நோக்கி வந்தனர். போத்திகளும் பேரன்களோடு எதிரிகளின் கல்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உடலில் சுற்றத் தேவையான கனத்த போர்வைகளோடும், தலைக்கவசமான பிரம்புத் தட்டுக்களோடும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அன்றும் தீப்பந்தங்களை எறிந்தும் கூரை தீப்பிடிக்காததால் கோபமுற்று கூழாங்கற்களை வீசி எறிய ஆரம்பித்த ஈணா, சோணாவை ஏற்கனவே தங்கள் வீட்டைச் சுற்றி குவித்து வைத்திருந்த கற்களால் பல திசைகளில் இருந்தும் சராமரியாக தாக்கி தோற்று ஓடச் செய்தனர் போத்தி குடும்பத்தார்.

(தொடரும்)

Thursday, December 27, 2018

ஊத்துக்குழி - பாகம் 11
மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 11 – வெல்வது மலையாள மந்திரமா… எதிரிகளின் தந்திரமா

ராமசாமிப் போத்தி வீட்டின் கூரை தினம், தினம் கொளுத்தப்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து உதவி செய்த ஆரோக்கியம் ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரிலும் வந்து ஆறுதல் கூறினார். போத்தி அனுமதியுடன் தினம் மாலை நேரங்களில் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரியும் சபையைச் சேர்ந்த இளம் பாதிரியார்கள் மற்றும் விடுதி மாணவர்களோடு போத்தி வீட்டிற்கு வந்து கிறித்துவ மத பாடல்கள் பாடி, சிறப்பு ஜெப வழிபாடுகளும், மனஆறுதல் தரும்படியான சொற்பொழிவுகளோடு கூடிய பிரசங்கங்களும் நடத்தினார். அவ்வாறான கிறித்துவமத ஜபக்கூட்டங்களை வேடிக்கை பார்க்க வரும் ஊர்க் குழந்தைகளுக்கு சபைத்தோட்டத்தில் இருந்து வண்டிகளில் கொய்யா, சப்போட்டோ, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் பலவிதமான பழங்களை எடுத்து வந்து வழங்கியதால், புலிப்பட்டி ஊரின் அனைத்து தெருக்களிலும் இருந்து தினம் தினம் அதிகப்படியான குழந்தைகள் சீதையம்மாள், இளையமகன்கள் மற்றும் ராமசாமிப் போத்தி வீட்டு ஆச்சியரோடு சேர்ந்து மனமகிழ்ச்சியோடு ஜபக்கூட்டங்களில் கலந்து கொண்டு, வழிபாட்டுப் பாடல்களை உற்சாகமாக கற்று மனப்பாடமாக பாடும் அளவிற்கு தேர்ந்தனர்.

சூரியன் உதிக்கும் முன்னே அதிகாலை நேரத்தில் மாட்டு வண்டியில் கரி ஏற்றிக் கொண்டு கிளம்பிய மற்ற வண்டிகளோடு சேர்ந்து வந்த லெட்சுமணப் போத்தி, முன்பகல் நேரத்தில் மணிமுத்தாறு மலை அடிவாரத்தை அடைந்ததும் மற்றொரு வண்டியோட்டியுடன் துணையாக வந்தவரிடம் தனது வண்டியை கொடுத்து அம்பை கிட்டங்கியில் கரியை இறக்கி விட்டு, திருப்பி வந்து ஒப்படைக்கச் சொல்லி விட்டு, காலநேரம் கடத்தாமல் புலிப்பட்டி ஊர் நோக்கி புறப்பட்டு சென்றார். முந்தைய நாள் இரவும் வீட்டுக் கூரை கொளுத்தப் பட்டிருந்ததால், வழக்கம் போல சபைத் தோட்ட்த்திற்கு சென்று ஓலைகளும், மரக்கம்புகளும் எடுத்து வந்து ராமரும், அவரது மகன்களும் கூரை வேய்ந்து கொண்டிருக்க, அருகில் அண்ணன் ராமசாமிப் போத்தியும், மதினிமாரும், மகள் சீதையும் தளர்ந்து போய், தவித்து நிற்பதைப்  பார்த்த லெட்சுமண போத்தி ஆற்றாமையில் கத்திக் கதறி கூப்பாடு போட்டு அழ அனைவரும் சேர்ந்து அவரை ஆறுதல் படுத்தினர்.

லெட்சுமணப் போத்தியோடு வந்து ராமசாமிப் போத்தி வீடு, தொழுவம் முழுதும் சுற்றிப் பார்த்து எல்லா திசைகளையும் உற்றுக் கவனித்த லெப்பை மரைக்காயர் வீட்டின் அமைப்பு, வாசல்கள். ஜன்னல்கள் இருக்கும் திசைகள், வெளிச்சம் மற்றும் காற்று வந்து போகும் வழி அனைத்தையும் மனதிற்குள் அளந்து கணித்தார். அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு மதிய தொழுகை நடத்தி, மந்திர உச்சாடனங்கள் செய்து தாம் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான செப்பு பட்டயங்களில் எழுத்தாணி கொண்டு அழுத்தமாக எழுதி உடனே எடுத்துப் போய் ராமசாமி போத்தி மற்றும் லெட்சுமணப் போத்தி வீடுகளுக்குள்ளும், தொழுவம் மற்றும் அவர்களுக்கு பாத்தியமான இடங்களின் எல்லைப்பகுதிகளிலும் ஆழமாக குழி தோண்டி புதைத்தார்.

வயலிலும் பிரச்சினை என்பதால் வயல் வரப்புகளில் புதைப்பதற்காக சில செப்புத்தகடுகளை எடுத்துக் கொண்டு ராமருடன் புறப்பட்டுச் சென்று, வயலை அடைந்து அனைத்து வரப்புகள் வழியாகவும், ஏறி இறங்கி, சுற்றி, சுற்றி வந்து தோதான இடம் பார்த்து அமர்ந்து நீண்டநேரம் பிரார்த்தனை செய்த பின் மேற்கொண்டு எதுவும் செய்யாமல், குழப்பமான முகத்தோடு ராமரை அழைத்துக் கொண்டு திரும்பிய மரைக்காயர் போத்திகள் இருவரோடும் மாலையில் வந்து தன்னை பள்ளிவாசலில் வந்து. பார்க்குமாறு சொல்லிச் சென்றார்.

ராமரோடு மாலை நேரம் தன்னைப் பார்க்க வந்த போத்திகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பள்ளிவாசல் தோட்டத்தில் அமர்ந்த மரைக்காயர், “லெட்சுமணப் போத்தி, நாம மலையில வண்டி மாடுவளை கடுவா வந்து கடிக்காம இருக்க ராத்திரில மந்தையை சுத்தி நெருப்பு போட்டிருக்கும் போது வெக்கை தாங்க முடியாம, வெளியில வேட்டைக்கு வந்த புலிவோ வெறியோட சுத்தி, சுத்தி உறுமிட்டு வரும்லா…. அதுமாதிரி உங்க அண்ணன் வயலுக்குப் போன உடனே எனக்கு வெக்கை அடிச்சுது. உங்க இட்த்துல உக்காந்து நான் துவா செய்யும்போது உங்களுக்கு உதவி செய்ய ஒரு புலி சுத்தி, சுத்தி வர்றது என் கண்ணுக்கு தெளிவா தெரியுது. அதனால்தான் வயல்ல தகடு ஏதும் நான் வைக்கலை.” என்று சொல்ல மூவரும் புரியாமல் பார்த்தனர்.

“ஆமா போத்திவளா... உங்க குடும்பத்திற்கு வேண்டப்பட்ட ஒரு நல்ல ஆத்மா உங்களுக்கு உதவ சித்தமா இருக்கு. உங்க குடும்பத்திற்காக உயிரை விட்ட அந்த நல்ல ஆத்மாவானது யாருக்கும் அஞ்சாத  கொடும்புலி, வேட்டைக்காரங்க துப்பாக்கிக்கு பயப்படாத கடும்புலி, வெள்ளைக்காரங்களையே விரட்டி அடிச்சு பயப்பட வச்ச வீரப்புலி… தெக்கு சீமை முழுக்கும் சிறப்பா பார்த்து, கை எடுத்து கும்பிட்ட தென்னாட்டுப் புலி…. “ மரைக்காயர் சொல்லச் சொல்லதான் அந்தப் புலி “தென்னாட்டுப்புலிநல்ல குத்தி ரிபெல் ஶ்ரீபெரியசாமித் தேவர் என்னும் தூக்குத்துரை“ என்பது போத்திகளுக்கு புரிய ஆரம்பித்தது.

நமது கதை நடக்கும் காலத்தில் இருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் ராமசாமிப் போத்தியின் தாத்தாவான ராமசாமித் தேவரை காப்பாற்ற சென்று, பிரச்சினையில் சிக்கியதால்தான் சிங்கம்பட்டி ஜமீன் பெரியசாமித் தேவர் வெள்ளையர்களால் தூக்கில் இடப்பட்டு தூக்குத் துரை ஆனார். நண்பரைக் காப்பாற்றப் போராடிய தூக்குத் துரையின் விருப்பத்தின் படி தூக்கில் இடப்படாமல் நாடு கடத்தப்பட்ட ராமசாமித் தேவரின் பெயரே மகன் வழி மூத்த பேரனான ராமசாமிப் போத்திக்கும் சூட்டப்பட்டது.

போத்திகள் தூக்குத் துரை வரலாற்றை எடுத்துக் கூறி, தமது குடும்பத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பையும் மற்றும் அகத்தியர் கோவிலில் அவரது சிலை வைக்கப்பட்டிருக்கும் விவரத்தையும் சொல்ல முகம் மலர்ந்து பிரகாசமான மரைக்காயர், “போத்தி, உங்க வயல்ல துவா பண்ணும்போது நீங்க சொன்ன விஷயமெல்லாம் என் கண் முன்னே காட்சியா வந்து போச்சு. உங்களுக்கு இந்த விவரம்லாம் தெரியுமா, இல்லையான்னு தெரிஞ்சுக்கதான் குறிப்பு மட்டும் காட்டினேன். உங்க குடும்பத்தைக் காக்க தன் உயிரைக் கொடுத்த சாமியான தூக்குத்துரை ஐயாவைக் கும்பிட்டு, பட்டு, பரிவட்டம் கட்டி, மாலை போட்டு மரியாதை செஞ்சிங்கன்னா இந்த பிரச்சினையில இருந்து வெளியே வர நல்ல வழி காட்டுவார். இன்னைக்கு வெள்ளிக்கிழமை முடிஞ்சி. இருட்டப் போகுது. நாளை சனிக்கிழமை சரிவராது விட்டுடுங்க. சூரியரையும், அசகாய சூரரையும் வழிபாடு செய்ய உகந்த நாளான. ஞாயித்துக்கிழமை ஐயா தூக்குத் துரைக்கு செய்ய வேண்டிய மரியாதையை சிறப்பா செஞ்சிடுங்க. அதுக்கப்புறம் எல்லா விஷயத்தையும் அவர் பார்த்துக்கிடுவார்” என்று கூறி முடித்தார்.

மரைக்காயருடன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு மூவரும் கிளம்பி ஊருக்குள் வரும்போது இருட்டி ராந்தக்கல்லில் (லாந்தர் கல் – விளக்குத் தூண்) ஊர் பொது விளக்கும் ஏற்றியாயிற்று. இரவு உணவை முடித்து விட்டு, ராமர் இரு மகன்களைக் கூட்டிக் கொண்டு வயல் காவலுக்குச் செல்ல, இரவில் மட்டும் வரும் எதிரிகளுக்காக போத்திகள், மூன்று பேரன்களோடு காத்து இருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஊர் அடங்கி, கோட்டான்களும், நரிகளும் கூட ஊளையிட்டுக் கத்தி ஓய்ந்து விட்டன. அலுப்பில் லெட்சுமணப் போத்தியும், பேரன்களும் உறங்கி விட்டாலும் ராமசாமிப் போத்தி மட்டும் வீட்டைச் சுற்றி, சுற்றி வந்தார். இரண்டாம் சாமம் தாண்டும் நேரம், எங்கிருந்தோ வந்து கூரை மேல் விழுந்த தீப்பந்தங்கள் ஓலைகள் மீது பட்டதும் எகிறிப் பறந்தன. ஆனால் அதிசயமாய் கூரை ஓலைகள் தீப்பிடிக்க வில்லை.  மறுபடியும், மறுபடியும் தீப்பந்தங்கள் எரியப்பட்டாலும் கூரையில் பட்டதும் சுவற்றில் அடித்த பந்தாய் எகிறிப் பறந்து தரையில் சென்று விழுந்தன. ஆச்சரியப்பட்ட போத்தி, லெட்சுமணப் போத்தியையும் எழுப்பி அதிசயமான இந்த சம்பவத்தை காண்பிக்க, சிறிது நேரத்தில் தீப்பந்தங்கள் வந்து விழுவது நின்று போனது.

மரைக்காயரின் மலையாள மந்திர மகிமையால் கூரை தீப்பற்றி எரியாமல் போனது குறித்தும், எதிரிகளின் தந்திரங்கள் எடுபடாமல் எறிந்த தீப்பந்தங்கள் தெறித்து விழுந்ததைப் பற்றியும் தம்பியுடன் வியந்து பேசிக்கொண்டிருந்த ராமசாமிப் போத்தி, மரைக்காயர் சொன்ன படியே தூக்குத் துரை ஐயாவிற்கு சிறப்பாக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மனமகிழ்வுடன் உறங்கச் சென்றார். ஆனால் நெடுநாள்களுக்குப் பின் கிடைத்த நிம்மதியான உறக்கம் நான்காம் ஜாமத்தில் கற்களால் கலைக்கப்பட்டது. ஆம். கூரையை சிதைக்க முயன்று, தீப்பந்த முயற்சியில் தோல்வியுற்ற எதிரிகள் இந்த முறை கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பேரன்களை எழுப்பிய போத்திகள், கண்மூடித்தனமான கல் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உடலில் கனத்த போர்வைகளை போர்த்திக் கொண்டு, அனைவர் தலையிலும் பிரம்புத் தட்டுக்களையும் கட்டிக் கொண்டனர்.

”தீப்பந்தங்களை திருப்பி எறிந்தால் யார் வீட்டுக் கூரையிலாவது பட்டு தீப்பற்றிக் கொள்ளும் என்பதால் பொறுமை காத்தோம். கல்லை எறிபவர்கள் பல்லை உடைக்க வேண்டும்” என்று முடிவு செய்து வந்து விழுந்த கற்களை எடுத்து வந்த திசை நோக்கி திருப்பி வீசினர். இந்த எதிர்தாக்குதலை எதிர்பார்க்காத எதிர்தரப்பில் வேகம் குறையவே போத்திகளும், பேரன்களும் உற்சாகம் அடைந்து தொடர்ந்து, எதிர்திசை நோக்கி கற்களை வீசினர். லெட்சுமணப் போத்தி மட்டும் ஒரு பேரனை அழைத்துக் கொண்டு சுற்றிப் போய் பார்த்த போது தூரத்தில் ஒரு வண்டி நிற்பதையும், அருகில் இருந்த இரண்டு உருவங்கள் கற்களை எடுத்து தங்கள் வீடு இருந்த திசை நோக்கி வீசி எறிவதையும் கண்டு வேகம் கொண்டார்.

“எலேய், எவம்லே அது… “ என்று சத்தம் போட்டுக் கொண்டு லெட்சுமணப் போத்தி, பேரனோடு வண்டியை நோக்கி வருவதைப் பார்த்த வண்டியில் இருந்தவர்கள் வீட்டின் பக்கம் கல் எறிவதை நிறுத்தி விட்டு இவர்களை நோக்கி கற்களை வீசி முன்னேற விடாமல் தடுத்தனர். அதே நேரம் ராமசாமிப் போத்தியும், மற்ற இரு பேரன்களோடு வண்டியை நோக்கி சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வர தப்பித்தால் போதும் என்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு, துரத்தி வந்தவர்கள் கையில் சிக்காமல் சிட்டெனப் பறந்தனர் சதிகாரர்கள். பேரன்கள் எடுத்து வந்த தீப்பந்தங்களோடு வண்டி நின்ற இடத்திற்கு வந்து பார்த்த போத்திகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கூழாங்கற்களைக் கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

மறுநாள் காலை வயல்காவலில் இருந்து திரும்பிய ராமரோடு கலந்தாலோசித்த பின் அம்பை சனிக்கிழமை சந்தைக்கு மூத்த பேரனோடு கிளம்பிச் சென்ற போத்திகள், மறுநாள் ஐயா தூக்குத்துரைக்கு செய்ய வேண்டிய வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களையும், வேட்டி, துண்டு, மாலைகளையும் வாங்கிக் கொண்டு மாலை நேரம் வீடு திரும்புவதற்குள் ராமரும், மற்ற பேரன்களும் ஆற்றுக்கு வண்டி கட்டிக் கொண்டு சென்று கைப் பிடிக்குத் தகுந்த அளவிலான கனத்த, கூழாங்கற்களை தேடிப் பொறுக்கி எடுத்து, மூன்று நடைகளாக வீட்டைச் சுற்றி அடித்து அன்றைய இரவுத் தாக்குதலுக்கு பதில் கொடுக்க தயார் ஆகிக் கொண்டனர். 

(தொடரும்)

பாகம் 12

Monday, December 24, 2018

ஊத்துக்குழி - பாகம் 10மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 9 லெட்சுமணப் போத்தியும், லெப்பை மரைக்காயரும்..

நமது கதை நடக்கும் காலகட்டமான நூறாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் நமது நாடு அடிமைப்பட்டிருந்த பொழுது தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் புகைவண்டி, பேருந்துகள், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவை அனைத்தும் நீராவி இயந்திரங்களால் இயங்கி வந்தன. கரியை எரித்து, மூடப்பட்ட பெரிய வெண்கல தொட்டிகளில் உள்ள நீரை கொதிக்க வைத்து வெளிவரும் சூடான நீராவி மூலம் இயந்திரங்கள் செயல்பட்டதால் எரிபொருளான கரியின் தேவை அதிகமாக இருந்தது. கல்கரி எனப்படும் நிலக்கரியானது சில சுரங்கங்களில் எடுக்கப்பட்டு வந்தாலும் நாடு முழுதுமான தேவைக்கு பற்றவில்லை. எனவே ஆங்கிலேய அரசாங்கமே தனியாருக்கு அனுமதி தந்து அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள தேக்கு, கருங்காலி, ஈட்டி, போன்ற விலைமதிப்புள்ள மரங்களைத் தவிர்த்த மற்ற சாதாரண மரங்களை வெட்டி, காயவைத்து மூட்டம் போட்டு எரிக்க வைத்து கரி உற்பத்தி செய்து வந்தது.

இவ்வாறு காடுகளில் மரங்கள் கொண்டு கரி உற்பத்தி செய்யும் இடங்களை கூப்பு என்பர். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கூப்பு பகுதிகளுக்கு எடுத்து வரவும், மூட்டம் போட்டு எரித்து கரியாக மாற்றவும், உற்பத்தி செய்யப்பட்ட மரக்கரியை மலைப்பகுதிகளில் இருந்து கீழே கொண்டு வந்து ஊர்ப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் என மனித ஆற்றல் அதிகமாக தேவைப்பட்டது. உயிருக்கு ஆபத்தான கொடிய வனவிலங்குகள் மிகுந்த அடர்ந்த காடு, மலைப்பகுதிகளில் கடுமையான சூழ்நிலையிலான வேலை என்றாலும் கூலி அதிகமாக கொடுக்கப்பட்டதால் தென்பாண்டி நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் சேர நாட்டு மலையாளிகள் என பல ஊர் மக்களும் பொதிகைமலை கூப்புகளில் பணி செய்து வந்தனர்.

ராமசாமிப் போத்தியின் சகோதரர் லெட்சுமணப் போத்தி கடும் உழைப்பாளி. தங்கள் தந்தை வழி பூர்வீக இடத்திலே ராமசாமிப் போத்தியும், லெட்சுமணப் போத்தியும் அருகருகே வீடு கட்டி வசித்து வந்தனர். மனைவியை இழந்த லெட்சுமணப் போத்தி, ஒரே மகள் சீதையம்மாளின் கணவர் ராக்கிசமுத்து என்னும் ராமர் ஆவார். ராமர்-சீதை என்ற பெயர் பொருத்தம் கொண்ட தம்பதியினருக்கு ஐந்து மகன்கள். மனைவியின் மருத்துவத்திற்காக நிலபுலன்களை விற்று விட்ட லெட்சுமணப் போத்தி, மிச்சமிருந்த வண்டி மற்றும் மாடுகளோடு அதன்பின் கூப்பு வேலைக்குச் சென்று விட்டார். காடுகளினுள் மரவெட்டிகளால்  வெட்டப்படும் மரங்களை கூப்பிற்கு கொண்டு வந்து சேர்ப்பது மற்றும் கூப்பில் தயார் செய்யப்படும் கரியினை அம்பை இரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுப்பயன்பாடு விநியோக சேமிப்பு கிட்டங்கியில் கொண்டு வந்து சேர்ப்பது லெட்சுமணப் போத்தி போன்ற வண்டியோட்டிகளின் வேலை. ஆள் பற்றாக்குறையால் கூப்பு வேலைகள் சுணங்காமல், தொடர்ந்து நடைபெறுவதற்காக சுற்றுமுறைப்படி வாரம்தோறும் ஐம்பது வண்டிகள் மலையிலிருந்து இறங்கினால், கீழே இருந்து ஐம்பது வண்டிகள் மேலே தேவைப்படும் பொருட்களோடு எதிர்திசையில் ஏறிச்செல்லும்.

மலையில் இருந்து மாட்டு வண்டிகளில் கரியை கீழே ஏற்றிவரும் வண்டியோட்டிகள் ஒரு வார அளவிற்கு அவரவர் வீடுகளில் தங்கி இருந்துவிட்டு, பின் மேலே உணவு சமைக்க மற்றும் இதர தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களோடு மலையேறிச் செல்லும் போதும் மட்டும் புலிப்பட்டி ஊருக்குள் வரும் லெட்சுமணப் போத்தி, அண்ணன் ராமசாமிப் போத்தி வீட்டருகே இருந்த தனது வீட்டையும் மகள் சீதையம்மாளுக்கே கொடுத்து விட்டார். கடும் உழைப்பாளியான ராமருக்கு நிறைய பால்மாடுகள் இருந்தாலும் சிறிதளவே நிலமிருந்ததால் சொந்த வயல்வேலை போக மகன்களோடு அழைப்போர் வயல்வேலைகளுக்கும் சென்று வந்தார்.

தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு ஆற்றங்கரை, ஓடைக்கரை மற்றும் வயல்வரப்பு  பகுதிகளில் இருக்கும் புல் மற்றும் பசுந்தீவனப்பயிர்கள் அறுத்து வந்து போடுவது, பால், கறந்து மாடுகளைப் பராமரிப்பது, கறந்த பாலை காய்ச்சி, உறை ஊற்றி, தயிராக்கும் சீதையம்மாளுக்கு உதவியாக தயிரைக் கடைந்து வெண்ணை, மோர் என தனித்தனியாக எடுப்பது போன்ற வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல் பிரித்து எடுக்கப்படும் மோரையும், வெண்ணையிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் நெய்யையும் அம்பை, கல்லிடை அக்ரஹாரப் பகுதிகளுக்கு தலைச்சுமையாக எடுத்துச் சென்று விற்பது என அனைத்துவிதமான வேலைகளையும் ராமரும், மகன்களும் பகிர்ந்து செய்து வந்தனர்.

தனது வீட்டருகில் வசித்து வந்த தம்பி மகள் சீதையம்மாளை வாரிசு இல்லாத ராமசாமிப் போத்தியும், அவரது மனைவியரும் மகளாக வரித்துக் கொண்டது போலவே தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து வாழும் சீதையம்மாளும் அவர்களைப் பெற்றோராக கருதி வாழ்ந்து வந்தார். பெரியன்னை இருவருக்கும் சீதையம்மாள் வீட்டு வேலைகளுக்கு உதவுவது போலவே ராமரும், மகன்களும் ராமசாமிப் போத்தியின் வயல் மற்றும் தொழுவ வேலைகளுக்கு ஒத்தாசையாக இருந்து வந்தனர். வீடு, தொழுவம் எரிக்கப்பட்டதற்கான காரணம் அறிந்த மற்ற உறவினர்கள், “பெரிய இடத்து விவகாரம் நமக்கெதற்கு…” என்று ஒதுங்கிக் கொள்ளவே, போத்தி குடும்பத்தை தங்கள் வீட்டிலே தங்கவைத்து, உணவு பரிமாறி கவனித்து கொண்டனர் ராமர்-சீதை தம்பதியினர்.

ஆரோக்கியம் ஐயாவின் அறிவுரையின்படி சபை தோட்ட்த்தில் இருந்து தேவையான கம்புகளும், பனை ஓலைகளும், தென்னைக் கிடுக்குகளும் எடுத்து வந்த ராமரும், அவரது மகன்களும் சேர்ந்து போத்தி வீட்டிற்கு கூரை வேய்ந்து முடிக்க சூரியன் விழும் நேரமாகி விட்டது. அதன்பின் குளித்து மருமகன் ராமர் மற்றும் பேரன்களோடு சேர்ந்து உணவை அருந்திய போத்திக்கு இரவுக்காவலுக்கு சென்றால் வயலில் மண் தட்டப்படுவதை தடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. கம்பு, கவண்களை எடுத்துக் கொண்டு உடன்துணையாக வந்த ராமர் மற்றும் மூத்த மூன்று பேரன்களோடு வயல்காவலுக்கு சிளம்பிச் சென்றார் போத்தி. கூரை போட்டாலும் வீடு முழுதும் கரிப்புகை படிந்து வாடை வந்ததாலும், சுவர்களின் உறுதித்தன்மை குறித்து சந்தேகமாக இருந்ததாலும் தனது மனைவியரை தம்பி வீட்டில் சீதையம்மாள் மற்றும் இளைய இரு பேரன்களோடு படுத்துச் கொள்ள சொல்லி சென்றார் போத்தி.

அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்ததால் ஆகாயத்தில் நிலவு தேய்ந்து இரவு வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், வயலுக்குச் சென்று ஆளுக்கொரு பக்கமாய் மறைந்து அமர்ந்து ஆள்நடமாட்டம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது நடுநிசிப் பொழுதில் ஊருக்குள் அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தீப்பற்றி எரியும் வெளிச்சம் வந்தது. என்னவோ, ஏதோ என்று ஊருக்குள் ஓடிவந்து பார்த்தால் சந்தேகப்பட்டது போலவே மறுபடியும் போத்தி வீட்டின் கூரை முழுதும் எரிந்திருந்தது. மறுநாள் காலை மீண்டும் பார்க்க வந்த ஆரோக்கியம் ஐயா உதவியால், ராமர், மகன்கள் உழைப்பால் கூரை அன்றும் புதிதாக போடப்பட்டது. ஆனால் அத்தனை பேர் கண்காணிப்பையும் மீறி அன்று இரவும் போத்தி வீட்டுக் கூரை கொளுத்தப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக ஆறேழு நாட்கள் சபைத்தோட்ட்த்தில் இருந்து தேவையான பொருட்களை எடுத்து வந்து போத்தி குடும்பத்தார் பகல் பொழுதில் கஷ்டப்பட்டு கூரை மாற்ற, மாற்ற இரவு நேரத்தில் எவர் கண்ணிலும் தட்டுப்படாமலும், எந்தவொரு தடயம் இல்லாமலும் கூரை தொடர்ந்து கொளுத்தப்பட்டது.

ஊருக்குள் நடக்கும் இந்த விஷயத்தை மலைக்குச் சென்ற புலிப்பட்டியைச் சேர்ந்த வண்டியோட்டிகள் மூலம் அறிந்த லெட்சுமணப்போத்தி, அன்று கிளம்பிய வண்டிகளோடு சேர்ந்து அவர் வண்டியிலும் கரி ஏற்றிக்கொண்டு கிளம்ப முற்பட, அவர் நண்பரான லெப்பை மரைக்காயரும் உடன் சேர்ந்து கொண்டார். சேரநாட்டு கொல்லம் ஜில்லா கல்லடா பகுதியைச் சேர்ந்த தூய பிரம்மச்சாரி துலுக்கரான அறுபது வயது மரைக்காயர் மந்திர,தந்திரங்கள் கற்றுத் தேர்ந்தவர். ஆனால் எவருக்கும், எந்த விதத்திலும் கேடு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தாமல், நல்ல விஷயங்களுக்கு மட்டுமே தாம் அறிந்த வித்தைகளை உபயோகித்து வந்தார். ஆனால் ஒருமுறை களவு போன பொருளைக் கண்டுபிடித்து கொடுத்த பொழுது திருட்டு கொடுத்தவர் உறவினர்கள் திருடியவரை குடும்பத்தோடு கொலை செய்து விட்டதால், “ஒரு குடும்ப அழிவிற்கு காரணமாகி விட்டோமே…” என்று மனம் வெறுத்து சொந்த ஊரை விட்டு நீங்கி மணிமுத்தாறு மலையில் கூப்பு வேலைக்கு வந்து விட்டார். 

காடுகளில் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விஷ ஜந்துக்களால் கடிக்கப்படும் போதும், நோய்வாய்ப் படும்போதும் விஷமுறிவிற்கான மந்திரங்களைப் பயன்படுத்தி மருந்து தந்து உதவும் மரைக்காயர், காட்டு வேலையில் கவனமாக இருக்கும்படி அனைவரையும் அடிக்கடி எச்சரிப்பார் என்றாலும் வனவிலங்குகளின் வாயைக் கட்டும் மந்திர உச்சாடனங்களை மட்டும் எப்போதுமே பயன்படுத்த மாட்டார். எல்லோரிடமும் பிரியமுடன் பழகும் மரைக்காயரும், லெட்சுமணப் போத்தியும் உற்ற நண்பர்கள் என்பதால் லெட்சுமணப் போத்தி ஊருக்கு வரும்போதெல்லாம் அவ்வப்போது புலிப்பட்டி ஊருக்கு உடன்வரும் மரைக்காயரை, ராமசாமிப் போத்தி குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அனைத்து உறவினர்களும் நன்கு அறிவர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பெருமை வாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தில் இருந்த யானை, குதிரைகளைக் கவனிப்பதற்காக குடும்பத்தோடு பல ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட இஸ்லாமிய மாவுத்தர்களும், பாகன்களும் தொழுகை, வழிபாடுகள் நடத்துவதற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று வரை புலிப்பட்டி ஊரில் இருக்கிறது. புலிப்பட்டி ஊருக்கு வந்தால் அந்த பள்ளிவாசலிலே தங்கிக் கொள்ளும் மரைக்காயருக்கு உணவு மட்டும் வேளாவேளைக்கு நண்பர் லெட்சுமணப் போத்தி வீட்டில் இருந்தே வரும். தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் பண்டங்கள் என ராமசாமிப் போத்தி, லெட்சுமணப் போத்தி, ராமர் அல்லது லெட்சுமணப் போத்தியின் பேரன்கள் என யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் கொண்டு வந்து பள்ளிவாசலில் கொடுத்து விட்டு மரைக்காயருடன் நேரம், பொழுது தெரியாமல் அன்புடன் அளவளாவிச் செல்வார்கள் என்பதால் மரைக்காயரும் அவர்கள் அனைவர் மீதும் அளவு கடந்த அன்பு பாராட்டினார். எனவேதான் தனது பிரியத்திற்குரிய போத்தியின் குடும்பத்திற்கு ஆபத்து என்றதும் மனம் கேட்காத மரைக்காயரும் உடனே லெட்சுமணப் போத்தியுடன் புலிப்பட்டி ஊருக்கு கிளம்பி வந்தார்.  

(தொடரும்)

பாகம் 11

Friday, December 21, 2018

ஊத்துக்குழி - பாகம் 9


மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 9 தீதும் நன்றும்…..

அறுபது வயது வரை தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுத்து வந்த போத்தி, வயோதிகம் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக சிஷ்யர்கள் யாரையும் சேர்ப்பதில்லைவீட்டருகே இருந்த பயிற்சிக் களத்தை கூட நீளவாக்கில் கூரை வேய்ந்து ஆடு, மாடுகள் கட்டும் தொழுவமாகவும், கால்நடைகளின் தீவனத்திற்கான வைக்கோல் அடையும் படப்புகளாகவும், வயதான மனைவியர் தொலை தூரம் அலையாமல் தொழுவத்தில் இருந்து தினமும் சாணம் அள்ளிப் போடத் தோதாக உரக்குழியாகவும் மாற்றி விட்டார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவரது அங்காளி, பங்காளி வீடுகளும் வரிசையாக இருந்தன.

ராமசாமிப் போத்தி வழக்கமாக காலை வயலுக்கு சென்றால் மாலை நேரமே வீட்டிற்கு திரும்பி வருவார். ஆனால் என்றுமில்லாத வழக்கமாய் அன்று அதிசயமாக ஈணா – சோணா, பூசாரியோடு வயலில் வாக்குவாதம் முடித்தவுடன் காலை மணி பத்துக்குள் வீடு திரும்பியதால் ஆச்சரியமடைந்த மனைவியரிடம் விவரம் கூறினால் கவலை கொள்வர் என்பதால் நண்பர் ஒருவர் வருவதாக தகவல் கிடைத்ததால் வந்ததாக கூறி சமாளித்தவர், நீராகரம் மட்டும் அருந்தி விட்டு ஓய்வாக படுத்து விட்டார். ஆற்றுச்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத மதியம் இரண்டு மணி வாக்கில் அவர் வயல் தீப்பிடித்து எரிவதாக ஆடு மாடு மேய்க்கும் ஒருவர் வந்து தகவல் சொல்ல அடித்துப் பிடித்து நேரில் சென்று பார்த்தால், ஊத்துக்குழி செல்லும் நேர்கோடான பாதை வரப்பின் இருபக்கம் இருந்த வயல்களில் மட்டும் பயிர்கள் தீ வைத்து எரிக்கப் பட்டிருந்தன. நெற்பயிர் மட்டும் அல்லாமல் வயல் வரப்பில் இருந்த வாழை, அகத்தி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டும் மற்றும் காய்கறிப் பயிர்கள் பிடுங்கி எறியப்பட்டும் தீ வைக்கப்பட்டிருந்ததை கண்ட போத்தியும், அவரது இரு மனைவியரும் மனம் வெதும்பினர்.

தகவல் அறிந்து ஓடி வந்த உற்றார், உறவினர்கள் என்ன ஆறுதல் சொல்லியும் போத்தியை தேற்ற முடியவில்லை. அந்திக்கருக்கல் வரை வயலிலே வருத்தப்பட்டு அமர்ந்திருந்த போத்தியை ஒரு வழியாக உறவினர்கள் ஊருக்குள் அழைத்துச் சென்றனர். தொழுவத்தில் இருந்த ஆடு, மாடு, கோழிகள் போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு மட்டும் இரை வைத்து தண்ணீரும் காட்டினாலும் தங்களது இரவு உணவு பற்றி கூட எந்த ஒரு நினைப்பும் இல்லாமல் இறுக்கமாக அமர்ந்திருந்த போத்தியையும், அவர் மனைவியரையும் சமாதானப்படுத்திய அங்காளி, பங்காளிகள் தங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து வந்து கொடுத்து வற்புறுத்தி உண்ணச் செய்தது மட்டுமல்லாமல் நடுநிசி வரை நெடுநேரம் கூடவே இருந்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு பின்னரே அவரவர் வீடு நோக்கி சென்றனர். ஏதேதோ எண்ணங்களோடு இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்த போத்தியும், துணைவியரும் அதிகாலை மூன்று மணி அளவிலே சிறிது கண்ணயர்ந்தனர்.

நான்கு மணி அளவில் கரிச்சான் குருவி கூவிய சிறிது நேரத்தில், திடீரென ஆடு, மாடு, கோழிகள் அலறுவதைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து, என்ன, ஏது என்று பார்க்க தொழுவத்தின் பக்கம் சென்ற போத்தி தொழுவத்தின் கூரை எல்லா பக்கமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. கண்டு அதிர்ந்தார். எப்போதுமே தொழுவத்தில் கால்நடைகளை கட்டிப்போடுவது இல்லை என்பதால் அவையே கொடுந்தீயின் வெம்மை தாங்காமல், இரண்டு பக்கங்களிலும் இருந்த தட்டிக் கதவுகளை முட்டி மோதி திறந்து அவசர கதியில் வெளியே வந்து உயிர் தப்பின. போத்தி தொழுவத்தை சுற்றி வந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வீட்டின் பக்கம் இருந்து ஆச்சியர் இருவரும் பெருங்கூப்பாடு போட்டனர். நிமிர்ந்து பார்த்த போத்தி வீட்டுக் கூரைகளும் தீப்பிடித்து எரிவது கண்டு பிரமித்துப் போய் நின்றார்.

சில நிமிட நேரத்திற்குள்ளே வீடும், தொழுவமும் தன் கண்முன்னே எரிந்து சாம்பலான அதிர்ச்சியில் ஆச்சியர் மூர்ச்சடைய, ஓடி வந்த அக்கம்பக்க உறவினர்களே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். கோழி கூவும் அதிகாலை நேரத்தில் வயல்பக்கம் இருந்து வந்த செய்தி கேட்டு கூடியிருந்த உறவினர் அனைவருமே குழப்பமும், கோபமும் கொண்டனர். போத்தியின் வயலில் ஆற்றுச்சாலையில் இருந்து ஆடுமாடுகள் நுழையாத வகையில் மண்ணால் இடுப்பளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அதன் மேல் ஒரு ஆள் உயரத்திற்கு நெருக்கமாக நொச்சிக் குச்சிகள் ஊன்றி வைக்கப்பட்டு இருக்கும். ஊத்துக்குழி நோக்கி செல்லும் பாதை வரப்பின் இருபக்கமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்த வயல்வெளியை ஆற்றுச்சாலையோடு இணைக்கும் படியாக இருபதடி நீளத்திற்கு அந்த சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு வயலுக்குள்ளும் இருபது மாட்டுவண்டி அளவிற்கு குவியல் குவியலாக மண் அடித்து குவிக்கப்பட்டு இருந்தது. வீடும், தொழுவமும், வயலும் யாரால் தீ வைக்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்த போத்தி, நேராக நின்று எதிர்க்காமல் மறைந்து நின்று தாக்கும் எதிரிகளை எண்ணி கோபமுற்றவராய், இதற்கு மேலும் உண்மையை மறைக்ககூடாது என்று முடிவெடுத்து மனைவியரிடமும், உறவினர்களிடம் நடந்த விவரங்களை முழுவதுமாக தெரிவித்தார்.

பெரிய இடத்து விவகாரம் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் கலந்து பேசிக் கொண்டு இருக்கும்போது ஆற்றுச்சாலையில் வந்து நின்ற வில் வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் இருந்து இறங்கிய சகோதரர்கள் சபையின் பொறுப்பாளர் ஆரோக்கியம் ஐயா போத்தியைக் காண வந்தார். சகோதரர்கள் சபையின் திண்டுக்கல் கிளையின் பள்ளியில் பயின்று, பின் சென்னை தலைமையகத்தில் தங்கி முதுநிலைப்படிப்பு படித்து பட்டம் பெற்றவுடன் பாதிரியார் பயிற்சியும் முடித்து சபையின் பல கிளைகளில் பணி செய்து பின் புலிப்பட்டிக் கிளை பள்ளி மற்றும் விடுதிப் பொறுப்பாளராக கடந்த முப்பதாண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆரோக்கிய ஐயா எழுபது வயதை தாண்டி விட்டாலும் அக்கம்பக்க கிராமங்கள் முழுதும் சபை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காகவும் சுறுசுறுப்பாகவே சுற்றி வருவார்.

ஈணா – சோணா பிரச்சினையில் போத்தி தலையிட்டு, விடுதி மாணாக்கர்களை காப்பாற்றிய காலம் முதலே ஆரோக்கியம் ஐயா போத்தி மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார் என்றாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததை மற்றும் ஏற்றுக்கொள்ள வில்லை. பாவிகளை மன்னித்து நல்வழிக்கு கொண்டு வருவதைப் பற்றி அவர் கூறும் போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து போத்தி பேசுவார் என்றாலும் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்த்து. தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஆரோக்கிய ஐயாவின் மீது போத்தியும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். மாதமொரு முறையாவது இருவரும் சந்தித்து உலக நடப்புகள் மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அளவளாவுவார்கள். ஆரோக்கியம் ஐயாவின் நட்பிற்கு பின் போத்தி கோபம், வேகம், வெறுப்பு போன்ற குணங்களை எவ்வளவோ குறைத்துக் கொண்டார் என்று சொன்னால் மிகையில்லை.


இருபதாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வரும் நண்பரின் வீடும், தொழுவமும், வயலும் தீ வைத்தி கொளுத்தப்பட்டதை அறிந்தவுடன் தன்னாலான உதவிகளை அவருக்குச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே நேராக கிளம்பி வந்த ஆரோக்கியம் ஐயா ஒரு பகல், இரவிற்குள் பலவித துன்பங்களை சந்தித்து, மனதளவில் பெருமளவு பாதிக்கப்பட்டு, ஆன்ம பலத்தையும் இழந்து அகதிகளாக நின்ற போத்தியையும், ஆச்சியரையும் சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தைகள் கூறி வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களின் பாதிப்புகளுக்காக தேறுதல் ஜபமும் செய்தார். போத்தியின் உறவினர்களை அழைத்துப் பேசிய ஆரோக்கியம் ஐயா, சபையின் தோட்டத்தில் வெட்டிக் கழித்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கம்புகளையும், பனை ஓலைகளையும், பின்னி வைக்கப்பட்டுள்ள தென்னை ஓலைக் கிடுக்குகளையும் எடுத்து வந்து வீட்டிற்கும், தொழுவத்திற்கும் முதலில் கூரை வேயச் செய்தார்.(தொடரும்)

பாகம் 10