Monday, April 03, 2017

வண்டித் தடம் - பாகம் 3




பாகம் 3 - சுக்காண்டி

 எம்ஜியாரின் ஆட்டுக்குட்டி அன்று ஒரு வக்கணைக்கு இரையானதை நினைத்து வருத்தப்பட்டவாறு சிறிது நேரம்  களத்துமேடு மரநிழல் மற்றும் தெரிந்தவர் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் என அங்கே, இங்கே நின்று, அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள் மதியப்பொழுது தாண்டும் நேரமானவுடன் உணவு மற்றும் பண்ணைகளில் மாடுகளை கொண்டு சென்று பால் கறக்க வேண்டும் என்பதற்காக அவரவர் கால்நடைகளை திரட்டி, அழைத்துக் கொண்டு வீடு திரும்பலானார்கள். ஆடு, மாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் வயல்களில் பயிர்க்காவலுக்கு இருந்தவர்களும் நாய்களை அவிழ்த்து விட்டு விட்டு வேலிப் படல்களையும் சாத்தி விட்டு கிளம்பலானார்கள்.

ஒரு வழியாக கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதி  வயல் பிரதேசங்கள் அனைத்தும் ஆளரவமற்று அமைதியாக தென்பக்கம், பொத்தையின் கீழ் அடையாமடையின் வழியில் அமைந்துள்ள தள்ளுநீர் ஓடையில் ஒரு உருவம் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. ஓடைக்கரைமண்ணை நீர் அரித்துச் செல்லாமல் இருப்பதற்காகவும், ஓடையின் அகலம் தெரியும் வகையில் வயல் எல்லை அளவிற்காகவும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கற்களை கடப்பாரையால் நெட்டித் தள்ளி, அதன் மேல் வரப்பு மண்ணை வெட்டிச் சரித்து ஓடை அளவைக் குறைக்கும் திருட்டு வேலை செய்து கொண்டிருப்பவன்தான்தான் சுக்காண்டி.

தள்ளுநீர் ஓடை பாசனக்கால் அல்ல, கிழக்கில் இருந்து மேற்காக செல்லும் அடையாமடையில் வெள்ளம் வரும்போது கரை உடைந்து வயலில் மண் சாடி பாதிக்கக்கூடாது என்பதற்காக பக்கத்து வயல்காரர் புலிமணி அவரது வயலுக்குள்ளே தென்வடலாக அமைத்துள்ள வெள்ளவடிகால் ஓடையே தள்ளுநீர் ஓடையாகும். அதைத் தான் கல், மண் சரித்து, அகலத்தைக் குறைத்து அவனது வயல் அளவை கூட்டும் குள்ளநரி வேலையை செய்து கொண்டிருந்தான் சுக்காண்டி. இதற்கும் அது சுக்காண்டியின் சொந்த வயல் கிடையாது. புலிமணியின் தாய்வழி  மாமன் மகனான முத்துசாமியின் வயலைத்தான் சுக்காண்டி குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறான்.

இந்த இடத்தில் சுக்காண்டியையும், முத்துசாமியையும் பற்றி கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வோம்சுக்காண்டியின் தாத்தா புலிப்பட்டி ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்து அப்படியே தங்கிவிட்டவர் ஆவார். சுக்காண்டியின் தந்தை வண்டி, மாடுகள் வைத்து வயல்வேலைகளுக்கு மற்றும், சந்தைகளுக்கு சாமான் ஏற்றிச் செல்வது என வாடகைக்கு வண்டி ஓட்டி வந்தார். சிறுவயது முதலே சுக்காண்டியும் அவரோடு சேர்ந்து  விவசாயம் சம்பந்தப்பட்ட கூலி வேலைகளே செய்து வந்தான்.

சிறு வயதில் ஊர் மாடுகளை மேய்த்து வந்தவன், பதின்ம வயது முதல் ஓடை வெட்டுவது, உழுவது, வரப்பு வெட்டுவது, மரம் அடித்தல், நாற்று பாவுதல், பிடுங்கி நடுதல், களை எடுப்பது, உரம் இடுதல், பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல்,       மற்றும்  விளைந்த நெற்பயிரை அறுத்து, களம் சேர்த்து, கதிர் அடித்து, தூசி, தும்பு போக சொழவடித்து, மூட்டை பிடித்து, வண்டி ஏற்றி உரியோர் வீடு கொண்டு சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் திறம்பட கற்று தேர்ந்தான். மிளகாய், வாழை, கடலை, காய்கறிகள் என அனைத்து பயிர்வகை வேலைகளையும் ஈடுபாட்டோடு செய்து தெரிந்து கொண்டான்.

அறுவடை முடிந்து வயல்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில்   வீடுகளின் பின்னால் உள்ள தொழுவங்களின்  எருக்குழிகளில் குவிக்கப்பட்டு கரும்பாறையாக இருகி இருக்கும் மாட்டுச்சாணத்தை மண்வெட்டி கொண்டு வெட்டி, கூடைகளில் அள்ளி, தலைச்சுமையாக சுமந்து சென்று, தெருவில் நிற்கும் வண்டியில் தட்டி, வண்டி நிரம்பியதும் மாடுகளைப் பூட்டி வயல்களில் கொண்டு   உரமாகத் தட்டுவது, கோடை காலங்களில் மணிமுத்தாறு மீன்பண்ணைத் துறையின் நீர் வற்றிய  மீன் வளர்ப்பு குட்டைகளில் படிந்துள்ள சிறந்த மீன்கழிவு உரமான கரம்பை மண்ணை குத்தகை எடுத்து வண்டியில் அள்ளிக் கொண்டு  போய் வயல்களில் உரமாகத் தட்டுவது போன்ற கடின வேலைகளையும் செய்து   வந்தான்.

 எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறானோ அந்த அளவிற்கு சாப்பிடவும் செய்வான். சாப்பாடு என்றால் அறுசுவை உணவெல்லாம் கிடையாது. கூலிவேலை செய்யப்போகும் வீடுகளில் கொடுக்கும் நீர் விட்ட சாதமும், சுண்ட வைத்த பழைய கறியும்தான். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் அவன் வயிறு புடைக்கவே செய்யாது. சுக்குபோல காய்ந்துதான் இருக்கும். அதனால்தான் சுகுமாறன் என்ற அவன் இயற்பெயர் மறைந்து சுக்காண்டி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

பருவவயது வந்ததும் அவன் தாத்தா வழி பூர்வீக ஊரில் இருந்து  சொந்தத்தில் பெண் எடுத்து திருமணம் செய்து வைத்தார்கள். மங்கம்மா என்ற பெயர் கொண்ட அவளும் சாதாரணப் பட்டவள் அல்ல. தண்ணீர் செழிப்பு இல்லாத ஊர்ப்பக்கம் இருந்தவள் ஆதலால் வயல்வேலைகள் தெரியாது என்றாலும் சிறு வயது முதலே பீடி சுற்றுவதில் கை தேர்ந்தவள். மற்றவர் ஒரு நாளைக்கு நூறு கட்டு சுற்றினால் இவள் நூற்றம்பது கட்டு சுற்றுவாள். வேகமானவள். விவரமானவளும் கூட. 

திருமணம் ஆகி, மூன்று பிள்ளைகள் பெற்று எடுத்தவள், புலிப்பட்டி ஊர் குமரிப்பெண்களுக்கு பீடி சுற்ற கற்றுக்கொடுத்து முக்கூடல் ஊரில் உள்ள பீடிக்கம்பெனியில் ஏஜெண்ட் வேலை எடுத்து,  பீடி இலை, தூள், நூல் போன்ற மூலப்பொருள்களை வாங்கி, ஊர்ப்பெண்களுக்கு விநியோகம் செய்து, அவர்கள் சுற்றித்தரும் பீடிக்கட்டுகளை  கணக்கு வைத்து சேகரித்து வாராவாரம் வரும் பீடிக்கம்பெனி வண்டியில்   ஏற்றிய கையோடு உண்டான பணத்தையும், ஏஜெண்ட் கமிஷனோடு சேர்த்து உடனே வாங்கி விடுவாள்.

ஆனால் பீடி சுற்றித்தரும் பெண்களுக்கு வாரக்கூலி தராமல் மாதம் ஒரு முறையே பணம் தருவாள். அதையும் மொத்தமாக கொடுக்காமல் இழுத்தடித்துதான் கொடுப்பாள். எப்படியும்   அனைத்துப் பெண்களின் இரண்டு, மூன்று மாத பாக்கிப்பணம் அவள் கைவசமே இருக்கும். அந்தப்பணத்தையும் வட்டிக்கு கொடுப்பது, பாத்திர, பண்டங்கள், நகை, நட்டுகள் அடகு பிடிப்பது என்று பலமடங்காக்கி விடுவாள். அதிகவட்டி என்றாலும் ஆத்திர, அவசரத்திற்கு பணம் கொடுப்பவள் என்பதால் பீடி சுற்றும் பெண்கள் முதல் அனைத்து ஊர் மக்களும் அவளிடம் கொஞ்சம் அடக்கமாகத்தான் நடந்து கொள்வார்கள்.


பணத்தின் மீது மோகம் ஏற, ஏற கணவன் மீது அவளின் காதல் குறைந்து விட்டது. சேர்க்கும் பணத்தையும் சுக்காண்டியிடம் கொடுக்காமல் அவளே தனியாக வங்கிக்கணக்குகள் தொடங்கி வரவு, செலவு பார்த்துக் கொண்டாள். வங்கிக்கணக்குப் புத்தகங்களைக் கூட வீட்டில் வைத்தால் சுக்காண்டி பார்த்து விடுவான் என்பதால்  நியாய, தர்மப்படி நடக்கும் நேர்மையான ஊர்ப்பெரிய மனிதரான புலிமணியிடமே கொடுத்து வைத்து இருந்தாள். அதுகூட புலிமணியின் மீதான சுக்காண்டியின் கோபத்திற்கு ஒரு காரணமாய் இருந்தது.

                                ( தொடரும் )