Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

Wednesday, December 07, 2011

சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருக்கிறோம்.  பரந்து விரிந்திருந்தாலும் அதன் சுத்தமும்,  பராமரிப்பும், பாதுகாப்பும் உலக அளவில் பாராட்டப்படுபவை. விழாக்காலங்களில் செய்யப்படும் விதவிதமான அலங்காரங்கள் கண்ணையும், கருத்தையும் கவரக்கூடியவை.

நமது நாட்டு விமானநிலையங்களில் வழியனுப்பச் செல்பவர்கள் விமானநிலைய வாசல் வரைதான் செல்லமுடியும். உள்ளே செல்ல தனியாக கட்டணம் செலுத்தினாலும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடியும். பயணம் செய்பவர்கள் கொண்டு சென்ற பொருட்கள் எடை சரியாக இருந்ததா, பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் விசாவில் பிரச்சினையில்லாமல்  குடியுரிமை சோதனை முடிந்ததா என பலவிதமான குழப்பங்களோடு வழியனுப்பச் சென்ற குடும்பத்தார் காத்திருப்பது மிகவும் கொடுமையானது. பயணம் செல்பவர்களும் எல்லா சோதனைகளும் முடிந்து  உள்ளே சென்று அதிகபடசமாக இரண்டு மணி நேரம் வரையாவது வெட்டியாக, வேண்டாத யோசனைகளோடு காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் சிங்கப்பூரிலோ பயணம் செய்பவர்களோடு வழியனுப்பச்  செல்பவர்கள்  விமானம் புறப்படும் பகுதியைத் தவிர விமானநிலையம் முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். புகைப்படங்கள் எடுக்கலாம். பயணம் செய்பவர்களும் நண்பர்கள், உறவினர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டே பாஸ்போர்ட், டிக்கெட், விசா  குடியுரிமை சோதனைப் பகுதிகளை கடக்கலாம். எல்லா சோதனைகளும் முடிந்தபின் விமானம் புறப்படும் அறிவிப்பு வரும்வரை உணவகம் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம். அடுத்தவரை தொந்திரவு செய்யாதவரை எந்த விதமான இடர்பாடும் இருக்காது.

இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியா சென்ற பழைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் சாங்கி விமானநிலையத்தின் டெர்மினல் 2 சென்றபோது  ஆங்கிலப்புத்தாண்டிற்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களும், வண்ண ஒளி விளக்குகளும் மிகவும் கவர்ந்தன. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. புகைப்படங்களில் நானும், நண்பர் கணேஷும்...

மாய மான்கள்..... மயக்கும் மான்கள்


நுணுக்கமான மின் அலங்காரத்தில் உயிர் பெற்று
உயரம் துள்ளும் ஒளி மான்கள்



பகட்டான பசுமைக்குடில்... பக்கத்தில் ஒய்யார அலங்காரங்கள்....


பகட்டான பசுமைக்குடில்...



சுற்றி வந்து சுண்டி இழுக்கும் சுறா மீன் அலங்காரம்...

பளபளப்பான பலூன் அலங்காரம்...