Friday, March 24, 2017

வண்டித் தடம் - பாகம் 2பாகம் 2 – வக்கணை

“எலேய்…. ‘வக்கணை’ இன்னைக்கு என்னத்தை புடிச்சுதோ… யாரூட்டு ஆடோ, மாடோ தெரியலயே.. என்று அங்கலாய்த்தவாறு ஓடியவர்கள் ஐஞ்சாறு பேரு வாய்க்கா தென்பக்கமா போங்க.. நாலைஞ்சு பேரு வடபக்கமா போங்க… மீதி ஆளுங்க நேரா போவோம்… அக்கம்பக்கம் இருக்க ஆளுங்களுக்கும் சத்தம் கொடுத்து திரட்டுங்க… இன்னைக்கு எப்படியும் அந்த ‘வக்கணையை’ அடிச்சுடனும்… நாளுக்கு நாள் இதுவோ ஆட்டமும், அட்டகாசமும் அதிகமாயிட்டே போவுது….” என்று திட்டம் வகுத்தவாறே போனார்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருந்த வயல்களில் காவல் இருந்தோரும், கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தோருமாக பலரும்  இப்படி இரைச்சல் இட்டவாறே ஓடி வருவதைப் பார்த்த  சத்தம் வந்த இடத்திலிருந்து பயந்து எதிர்திசை நோக்கி ஓடி  வந்த ஆடுகளும், மாடுகளும் மேலும் பதறி பல திசைகளில் சிதறி ஓட அமைதியான அந்த வயல்காட்டுப் பிரதேசமே அல்லோகலப்பட்டது.

‘வக்கணை’ என்பது சதுப்பு நிலக்காடுகள், ஆறுகள், குளங்கள் மற்றும் அணைக்கரைகளில், ஈரமான உலர்ந்தும், உலராததுமான சேற்று மணல் பகுதிகளில் வாழும் பெரிய வகை பாம்புகளில் ஒன்று. அகலமான, பல மடிப்புகளுடன் கூடிய வித்தியாசமான வாய் அமைப்பு கொண்டது. கிராமப்புறங்களில் சிறுகுழந்தைகள் சண்டைகளின் போது வாயினால் வழிச்சம் காட்டுவதை ‘வக்கணை கழித்தல்’ என்று கூறுவது வக்கணைப் பாம்பின் வாய் அமைப்பினால் வந்த காரணப் பெயராகும்.

 உடல் அமைப்பில் மலைப்பாம்பை விட பெரியதாக இருந்தாலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கக் கூடியது. மலைப்பாம்பு இரையைப் பிடித்தால் சுற்றி, வளைத்து, எலும்புகளை நொறுக்கி பின்பே விழுங்கும். ‘வக்கணையோ’ எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் பதுங்கி, பதுங்கி வந்து இரை மீது பாய்ந்த வேகத்தில் விழுங்கி விடும். பின் வந்த வேகத்திலேயே பாய்ந்து சென்று யார் கண்ணிலும் படாமல் பதுங்கியும் விடும்.

 மலைப்பாம்பு  பெரிய வகை மான்கள், மாடுகள் என்றாலும் யோசிக்காமல் பிடித்து, விழுங்கி  பின் அவற்றின் கொம்புகள் வாய், வயிற்றில் கிழித்து  உயிரை விடும் அல்லது விழுங்கிய விலங்கை ஜீரணிக்க முடியாமல் வெளியில் கக்கி  அவதிப்படும். அறிவுக்கூர்மையுள்ள ‘வக்கணையோ’ அளவில் சிறியனவான ஆடுகள், மாட்டுக்கன்றுகள், நாய்கள், வாத்து, கோழி, வான்கோழி போன்ற சிறிய வகை இரைகளை விரும்பி உண்ணும். ஒரே நேரத்தில்  ஐம்பது, அறுபது கோழிகள் அல்லது வாத்துக்களை விழுங்கக் கூடியது.

புலிப்பட்டி ஊரானது வயல்களின் நடுவே அமைந்த அழகான ஊர். ஆடுகள், மாடுகளை ஆற்றங்கரை தாண்டியோ அல்லது மணிமுத்தாறு ஊரிலோ கொண்டு மேய விட்டு விடலாம். வாத்துகள், கோழிகள் வீட்டைச் சுற்றிதான் மேயமுடியும். கோழிகளும் கூட்டை விட்டு திறந்து விட்டால் வீடுகளின் பின்னால் உள்ள வயல்கள் அல்லது ஓடைகளில்தான் பூச்சி, புழுக்களை தின்ன ஓடும். எனவே வக்கணை வகைப் பாம்புகளுக்கு இரைக்கு எப்போதும் பஞ்சமில்லை. இனப்பெருக்கம் செய்து ஏராளமாகவும் பெருகி விட்டன.
இரவு நேரங்களில் பிரம்புக் கூடைகள், கோழிக்கூடுகளில் உள்ள கோழிகள், கட்டிப் போடப்பட்டுள்ள ஆடுகள், நாய்களை கூட விழுங்கிச் சென்று விடும். எப்போதும் சேற்றிலே பிரண்டு வயல்காட்டு வாசனையோடு இருப்பதால் வளர்ப்புப் பிராணிகளுக்கு வக்கணை வருவதை வாடை கொண்டு கூட கண்டறிய முடியாது. பசி கொண்ட பகல் நேரங்களில் மனிதர்களை விழுங்கிய வரலாறு கூட உண்டு. புலிப்பட்டி ஊரில்  தனியாக வயல்களில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் காணாமல் போனால் வக்கணையால் வாழ்வு முடிந்தவர்கள் என்பதே பொருள்.

புலிப்பட்டி ஊர் ஆறு, அணை, ஓடை, வாய்க்கால், குளம் என தண்ணீர் செழிப்பான ஊரென்பதால் வக்கணைப் பாம்புகள் வாழ்வதற்கு உகந்த ஊராகி விட்ட்து. அவ்வப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக அடித்து கொல்லப்பட்டாலும் காலம் காலமாக அதன் எண்ணிக்கையை மட்டும் குறைக்கமுடியவில்லை. ஊரில் உள்ள பல குடும்பங்களும் வக்கணைப் பாம்புகளினால் ஆடுகள், கன்றுகள், நாய்கள், கோழிகள், குழந்தைகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களையே இழந்திருக்கிறார்கள் என்பதால் பெரும்பாலும் அனைவருமே அவற்றின் மீது மிகுந்த கோபத்துடனும், கொலை வெறியுடனுமே இருந்தார்கள்.

அதனாலேயே அன்றும் ஆடு, மாடுகள் கலைந்த சத்தம் கேட்டவுடன் அனைவரும் பாய்ந்து வக்கணையை அடிக்கச் சென்றார்கள். அனைவரும் ஓடிச் சென்று பார்த்த இடத்தில் வழக்கம் போல வக்கணை இல்லை. மாறாக மடி கனத்த ஒரு தாய் ஆடானது அதன் நடுத்தர வயது குட்டியுடன் பரிதவிப்பான குரலில் கத்திக் கொண்டு நின்றது.

‘எலே, இது யார் வூட்டு ஆடுலே… இதுவ மட்டும் ஏன் இங்கேயே நிக்குது’. என ஒருவர் கேட்க,

‘ஆஹா. இது எம்ஜியார் வூட்டு ஆடுல்லா. இரண்டு குட்டிலா உண்டு. சரியாப் போச்சு. இன்னொரு குட்டியை வக்கணை தூக்கிட்டுப் போல இருக்கு. அதான் தாயும், குட்டியுமா தவிச்சுப் போய் நிக்குது’. என்று பதில் வந்தது.

 வாய்க்காலின் வடபக்கம், தென்பக்கம் ஓடிச் சென்றவர்கள் நெடுந்தூரம் வரை சென்று தேடியும் வக்கணை கண்ணில் படாததால் ‘ புள்ளிகாரன் இன்னைக்கும் தப்பிட்டானே…’ என்று புலம்பியவாறு சம்பவ இட்த்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

இதற்குள் எம்ஜியாருக்கும் எப்படியோ விஷயம் சென்று விட அந்த எழுபது வயதுக்கிழவியும் அழுது அரற்றியவாறே ஆட்கள் கூடி நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆம் எம்ஜியார் என்பது ஆணல்ல. பெண். கிழவியின் அந்த பேருக்குப் பின்னால் கிண்டலும், சோகமும் கலந்த ஒரு கதை உண்டு. கிழவியின் இயற்பெயர் சொர்ணமாகும்.  ‘தங்கம்’ என்ற அர்த்தம் கொண்ட அந்த பேருக்கேற்றவாறே இளவயதில் நல்ல நிறமாக, கட்டழகியா இருந்தாள்.

அந்தகால கதாநாயகர்களில் எம்ஜியார் ஒருவரே பொன்நிறம் கொண்டவர் என்பதால்,  ‘இவ அழகுக்கு அந்த எம்ஜியார்தான் வந்துதான் இவளைக் கட்டணும்’ என்று பார்த்தவர் எல்லாம் கூறுவதைக் கேட்ட அந்த கூறு கெட்ட குமரியும் எம்ஜியாரையே தனது காதலனாக, கணவனாக மனதில் வரித்தாள். இயற்பெயர் மறைந்து ‘எம்ஜியார்’ என்பதே அவள் பெயராகி விட்டது  அம்பை கிருஷ்ணா, கல்யாணி, கல்லிடை சக்தி, வைராவி அண்ணா என்று  எம்ஜியார் படம் போட்டால்  அம்பை, கல்லிடை வட்டாரத்தில் இருந்த எந்த திரையரங்கு என்றாலும் தோழியரோடு சென்று விடுவாள்.

அவளது அழகிற்காக எவ்வளவோ பேர் ஆசைப்பட்டு வந்து திருமணம் செய்ய விரும்பி கேட்டும், தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் எம்ஜியார் வந்தால் ஏமாந்து விடுவாரே என்ற எண்ணத்திலே திருமணம் செய்யாமலே தனிக்கட்டையாக வாழ்ந்து வாழ்க்கையை தொலைத்தவள், எம்ஜியார் இறந்துவிட்டார் என்று அறிந்தது முதல் முரட்டுக் காடா துணியினாலான வெள்ளைப் புடவைகளையே அணிந்து வரும் இவள் ஒரு புலிப்பட்டி புதுமைப்பெண்ணாவாள். அவளது கதை அம்பை வட்டார அதிமுக.வில் மிகப் பிரபலம் என்பதாலும், ஆதரற்றவள் என்பதாலும் கடந்த ஆட்சிக்காலத்தில்  அவளுக்கு அரசினால் இலவசமாக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. அந்த ஆடுகளில் ஒன்றின் குட்டியே இப்போது வக்கணையின் வாயில் போய்விட்டது.

‘கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு, குதிச்சு ஆடுதே…’ என்று அழுது அரற்றியவள், ‘சரி.. என்ன செய்ய…” ‘என்னதான் எண்ணைய தடவிட்டு உருண்டாலும் ஒட்டுறது தானே ஒட்டும். உதிர்றதை என்ன செய்யமுடியும்’ என்று புலம்பி மனதைத் தேற்றியவளாய் அந்த தாய் ஆட்டையும், மீதி இருந்த குட்டியையும் அங்கிருந்தவர் உதவியோடு கயிற்றில் பிணைத்து கையோடு பிடித்துக் கொண்டு வீடு நோக்கி திரும்பலானாள்.

“மத்தளத்துக்கு ரெண்டு பக்கம்தான் அடி… மனுசனுக்கு எல்லாப் பக்கமும் அடி…” என்றவாறே மற்றவரும் அவரவர் ஆடு, மாடுகளைப் பற்றி கொண்டு கலைந்து செல்லலானார்கள்.


( தொடரும் )

பாகம் 3


Tuesday, March 21, 2017

வண்டித் தடம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்...

என்னும் வள்ளுவர் மொழியை பொய்யாக்கும் விதமாக பருவகால மாற்றங்கள், தட்ப வெப்ப வேறுபாடு, மழை இன்மை, வரலாறு காணாத வறட்சி.  தொழிலாளர் தட்டுப்பாடு, கூலி உயர்வு, விதை, உரங்கள் பிரச்சினை, வங்கிக்கடன் நெருக்கடி, வேளாண்மை பொருட்கள் விலை இன்மை என்று பல பிரச்சினைகளால் விவசாயமும், விவசாயம் செய்வோரும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் வீண்வம்பு, வறட்டுக் கவுரவம், பொய், பொறாமை, பித்தலாட்டம், எரிச்சல், பெருமைக்குப் பிடிவாதம், அடுத்துக் கெடுப்பது போன்ற குணங்கள் கொண்ட சிலரால் லாபம் பார்க்க முடியாமல் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என விரும்பி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வரும் பலரும் பாதிக்கப்படுவதே இக்கதையின் மூலக்கருவாகும்.
வண்டித் தடம்

அந்த வருடம் ஐப்பசி மாதம் தொடங்கிய மழையானது கார்த்திகை, மார்கழியில் கனஜோராகவும், பொங்கல் முடிந்த பின்னும்  தை மாதத்தில்    நெய்மழையாகவும், மாசி மாதம் முதல் வாரம் வரை பூ மழையாகவும் தொடர்ந்து  நல்ல மழை பெய்திருந்ததால், மணிமுத்தாறு அணை பெருகி, நிரம்பி வழிந்து எட்டுகண்மதகுகள் வழியாக மறுகாலும் பாய்ந்து ஆற்றிலும் வெள்ளம் சென்று இருந்தது.


வழக்கமாக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு வழியாக  வெளிவரும் நீரானது, பெருங்கால் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மடைகள் மூலமாக வாய்க்கால், மற்றும் ஓடைகள் வழி வந்து வயல்கள் வரை கொண்டு செல்லப்பட்டு விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, பின் வயல்களில் உள்ள  வடிகால்கள் வழியாக மீண்டும் ஓடைகள், வாய்க்கால் வழியாக ஆற்றை அடைந்து விடும். அந்த ஆண்டு மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் அணையிலிருக்கும் நீரை பயன்படுத்தாத வகையில் பெருங்கால் மதகைத் திறக்காமல் பெருங்கால், வாய்க்கால், ஓடைகளில் வெள்ளமாக வந்த மழைநீரைக் கொண்டே அந்த வருடம் விவசாயம் செய்யப்பட்டு இருந்தது.


தொடர்மழை காரணமாக  ஐப்பசி மாதம் முதல் சோம்பலாக இருந்த சூரியனும்  மழை நின்றவுடன் சுறுசுறுப்பானதால், மாசிமாதம் இரண்டாம் வாரம் முதலே வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கி விட்டது. பொதுவாகவே எல்லா ஊரிலும் தொடர் விவசாயம் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு பயிர் இட்டிருந்தாலும் அறுவடைக்குப்பின் வயலில் எந்த வேலையும் செய்யாமல்   இரண்டு, மூன்று மாதம் நிலத்தை ஆறப்போட்டு விடுவார்கள். அப்போதுதான் அடுத்த போகம் சிறப்பாக இருக்கும். மண்ணையும் நம் கண் போல காத்திடச் சொல்லிக் கொடுத்த நம் முன்னோரின் சிறப்பே சிறப்பு.


வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காப்பதற்காக, விவசாயம் நடைபெறும் காலங்களில் பொதுவாக புலிப்பட்டி ஊரில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றைக் கடந்து வயல்கள் அற்ற அக்கரையில் கொண்டு விடுவார்கள். அல்லது ஊரின் ஒரு நுழைவாயிலாக விளங்கும் பெருங்கால் பாலத்தின் மறுபக்கம் அமைந்துள்ள மணிமுத்தாறு ஊரின் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை காவலர் குடியிருப்பு, மீன்பண்ணைத் துறை மற்றும் அணை பராமரிப்பிற்காக  குடி அமர்த்தப்பட்டு இருக்கும் பொதுப்பணி துறை ஊழியர்களின் குடியிருப்புகளைத் தாண்டி  எண்பதடி தலைவாய்க்கால் பகுதி மற்றும் அணைப்பூங்கா பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு விட்டுவிட்டு அவரவர் வயல்களுக்கோ அல்லது அடுத்தவர் வயலில் வேலைகளுக்கோ சென்று விடுவார்கள். மாலை நேரங்களில் மேய்ச்சல் முடித்த ஆடு, மாடுகள் தாங்களாகவே வீடு திரும்பி விடும்.


அறுவடை முடிந்து நிலங்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில் ஆடு, மாடுகளை வயல்காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள். அவையும் வயல்களிலும், வாய்க்கால், ஓடைக் கரைப்பகுதிகளில் உள்ள பயிர், பச்சைகளை மேய்ந்து கொண்டிருக்கும். விவசாய வேலைகள் ஏதும் இல்லாத காரணத்தாலும், வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்பதாலும் ஆடு, மாடுகள் அடுத்தவர் பயிரை மேய்ந்து பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதாலும் ஆடுமாடு வளர்ப்போர் சிலர் அங்கங்கே வயல்களின் நடுவே அமைந்துள்ள களத்துமேடுகளின் மரநிழலில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு அவரவர் கால்நடைகள் மேய்வதை கண்காணித்துக் கொண்டு இருப்பர்.
புலிப்பட்டி ஊரில் தை மாதமே பெரும்பாலும் எல்லா வயல்களிலும் அறுவடை முடிந்து விட்டிருந்தாலும் அங்கங்கே பூமிளகாய்வாழை மற்றும்  காய்கறி போட்டிருந்த சில வயல்களில் மட்டும் ஆடுமாடுகள் நுழைந்து பயிர்களை அழித்து விடாதவாறு சுற்றியும் நைலான் வலை கொண்டு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.  திருட்டுச்சுவை கண்ட சில ஆடுமாடுகள் நைலான் வலை வேலியையும் மீறி வயல்களில் நுழைந்து விடும் என்பதற்காக  அங்கொன்றும்இங்கொன்றுமாய் ஆள்கள், நாய்களோடு காவல் இருப்பார்கள்.
அப்படித்தான் அன்றும் ஆடுமாடுகள் அங்கங்கு மேய்ந்து கொண்டிருந்தன. புல், பூண்டு, செடி, கொடிகளை அவை கடித்து இழுத்து. மேயும்போதும் மற்றும் காலடி குளம்பு பட்டு ஈரநிலத்திலிருந்து கிளம்பும் புழு, பூச்சிகளை உண்பதற்காக கொக்கு, நாரை, மைனா, குருவிகள் என பலவிதமான பறவைகளும் நடந்தும், ஓடியும், பறந்துமாக விறுவிறுப்பாக போட்டி போட்டிக்கொண்டு புல்லினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அப்போது மேலவாய்க்கால் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடுமாடுகள் கத்திக்கொண்டு, ஓடுவதும், பறவையினங்கள் கலைந்து சடசடவென சத்தம் எழுப்பியவாறு கூட்டமாக குரல் கொடுத்தவாறு பறப்பதும், அங்கங்கு  காவலுக்கு நிற்கும் நாய்கள் அலறிக் குலைப்பதும் கண்டு  களத்துமேட்டு மரநிழல்களில் ஆடுபுலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்த கால்நடை மேய்ப்போரும், பயிர்க்காவலுக்காக வயல்களில் குடில்கள் அமைத்து காவலுக்கு இருந்தவர்களும்  கைக்காவலுக்கு வைத்திருந்த கம்பு, கட்டை, தடிகளை தூக்கிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி பாய்ந்து ஓடினர்.


( தொடரும் )
பாகம் 2