Friday, December 21, 2018

ஊத்துக்குழி - பாகம் 9






மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 9 தீதும் நன்றும்…..

அறுபது வயது வரை தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுத்து வந்த போத்தி, வயோதிகம் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக சிஷ்யர்கள் யாரையும் சேர்ப்பதில்லைவீட்டருகே இருந்த பயிற்சிக் களத்தை கூட நீளவாக்கில் கூரை வேய்ந்து ஆடு, மாடுகள் கட்டும் தொழுவமாகவும், கால்நடைகளின் தீவனத்திற்கான வைக்கோல் அடையும் படப்புகளாகவும், வயதான மனைவியர் தொலை தூரம் அலையாமல் தொழுவத்தில் இருந்து தினமும் சாணம் அள்ளிப் போடத் தோதாக உரக்குழியாகவும் மாற்றி விட்டார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவரது அங்காளி, பங்காளி வீடுகளும் வரிசையாக இருந்தன.

ராமசாமிப் போத்தி வழக்கமாக காலை வயலுக்கு சென்றால் மாலை நேரமே வீட்டிற்கு திரும்பி வருவார். ஆனால் என்றுமில்லாத வழக்கமாய் அன்று அதிசயமாக ஈணா – சோணா, பூசாரியோடு வயலில் வாக்குவாதம் முடித்தவுடன் காலை மணி பத்துக்குள் வீடு திரும்பியதால் ஆச்சரியமடைந்த மனைவியரிடம் விவரம் கூறினால் கவலை கொள்வர் என்பதால் நண்பர் ஒருவர் வருவதாக தகவல் கிடைத்ததால் வந்ததாக கூறி சமாளித்தவர், நீராகரம் மட்டும் அருந்தி விட்டு ஓய்வாக படுத்து விட்டார். ஆற்றுச்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத மதியம் இரண்டு மணி வாக்கில் அவர் வயல் தீப்பிடித்து எரிவதாக ஆடு மாடு மேய்க்கும் ஒருவர் வந்து தகவல் சொல்ல அடித்துப் பிடித்து நேரில் சென்று பார்த்தால், ஊத்துக்குழி செல்லும் நேர்கோடான பாதை வரப்பின் இருபக்கம் இருந்த வயல்களில் மட்டும் பயிர்கள் தீ வைத்து எரிக்கப் பட்டிருந்தன. நெற்பயிர் மட்டும் அல்லாமல் வயல் வரப்பில் இருந்த வாழை, அகத்தி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டும் மற்றும் காய்கறிப் பயிர்கள் பிடுங்கி எறியப்பட்டும் தீ வைக்கப்பட்டிருந்ததை கண்ட போத்தியும், அவரது இரு மனைவியரும் மனம் வெதும்பினர்.

தகவல் அறிந்து ஓடி வந்த உற்றார், உறவினர்கள் என்ன ஆறுதல் சொல்லியும் போத்தியை தேற்ற முடியவில்லை. அந்திக்கருக்கல் வரை வயலிலே வருத்தப்பட்டு அமர்ந்திருந்த போத்தியை ஒரு வழியாக உறவினர்கள் ஊருக்குள் அழைத்துச் சென்றனர். தொழுவத்தில் இருந்த ஆடு, மாடு, கோழிகள் போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு மட்டும் இரை வைத்து தண்ணீரும் காட்டினாலும் தங்களது இரவு உணவு பற்றி கூட எந்த ஒரு நினைப்பும் இல்லாமல் இறுக்கமாக அமர்ந்திருந்த போத்தியையும், அவர் மனைவியரையும் சமாதானப்படுத்திய அங்காளி, பங்காளிகள் தங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து வந்து கொடுத்து வற்புறுத்தி உண்ணச் செய்தது மட்டுமல்லாமல் நடுநிசி வரை நெடுநேரம் கூடவே இருந்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு பின்னரே அவரவர் வீடு நோக்கி சென்றனர். ஏதேதோ எண்ணங்களோடு இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்த போத்தியும், துணைவியரும் அதிகாலை மூன்று மணி அளவிலே சிறிது கண்ணயர்ந்தனர்.

நான்கு மணி அளவில் கரிச்சான் குருவி கூவிய சிறிது நேரத்தில், திடீரென ஆடு, மாடு, கோழிகள் அலறுவதைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து, என்ன, ஏது என்று பார்க்க தொழுவத்தின் பக்கம் சென்ற போத்தி தொழுவத்தின் கூரை எல்லா பக்கமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. கண்டு அதிர்ந்தார். எப்போதுமே தொழுவத்தில் கால்நடைகளை கட்டிப்போடுவது இல்லை என்பதால் அவையே கொடுந்தீயின் வெம்மை தாங்காமல், இரண்டு பக்கங்களிலும் இருந்த தட்டிக் கதவுகளை முட்டி மோதி திறந்து அவசர கதியில் வெளியே வந்து உயிர் தப்பின. போத்தி தொழுவத்தை சுற்றி வந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வீட்டின் பக்கம் இருந்து ஆச்சியர் இருவரும் பெருங்கூப்பாடு போட்டனர். நிமிர்ந்து பார்த்த போத்தி வீட்டுக் கூரைகளும் தீப்பிடித்து எரிவது கண்டு பிரமித்துப் போய் நின்றார்.

சில நிமிட நேரத்திற்குள்ளே வீடும், தொழுவமும் தன் கண்முன்னே எரிந்து சாம்பலான அதிர்ச்சியில் ஆச்சியர் மூர்ச்சடைய, ஓடி வந்த அக்கம்பக்க உறவினர்களே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். கோழி கூவும் அதிகாலை நேரத்தில் வயல்பக்கம் இருந்து வந்த செய்தி கேட்டு கூடியிருந்த உறவினர் அனைவருமே குழப்பமும், கோபமும் கொண்டனர். போத்தியின் வயலில் ஆற்றுச்சாலையில் இருந்து ஆடுமாடுகள் நுழையாத வகையில் மண்ணால் இடுப்பளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அதன் மேல் ஒரு ஆள் உயரத்திற்கு நெருக்கமாக நொச்சிக் குச்சிகள் ஊன்றி வைக்கப்பட்டு இருக்கும். ஊத்துக்குழி நோக்கி செல்லும் பாதை வரப்பின் இருபக்கமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்த வயல்வெளியை ஆற்றுச்சாலையோடு இணைக்கும் படியாக இருபதடி நீளத்திற்கு அந்த சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு வயலுக்குள்ளும் இருபது மாட்டுவண்டி அளவிற்கு குவியல் குவியலாக மண் அடித்து குவிக்கப்பட்டு இருந்தது. வீடும், தொழுவமும், வயலும் யாரால் தீ வைக்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்த போத்தி, நேராக நின்று எதிர்க்காமல் மறைந்து நின்று தாக்கும் எதிரிகளை எண்ணி கோபமுற்றவராய், இதற்கு மேலும் உண்மையை மறைக்ககூடாது என்று முடிவெடுத்து மனைவியரிடமும், உறவினர்களிடம் நடந்த விவரங்களை முழுவதுமாக தெரிவித்தார்.

பெரிய இடத்து விவகாரம் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் கலந்து பேசிக் கொண்டு இருக்கும்போது ஆற்றுச்சாலையில் வந்து நின்ற வில் வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் இருந்து இறங்கிய சகோதரர்கள் சபையின் பொறுப்பாளர் ஆரோக்கியம் ஐயா போத்தியைக் காண வந்தார். சகோதரர்கள் சபையின் திண்டுக்கல் கிளையின் பள்ளியில் பயின்று, பின் சென்னை தலைமையகத்தில் தங்கி முதுநிலைப்படிப்பு படித்து பட்டம் பெற்றவுடன் பாதிரியார் பயிற்சியும் முடித்து சபையின் பல கிளைகளில் பணி செய்து பின் புலிப்பட்டிக் கிளை பள்ளி மற்றும் விடுதிப் பொறுப்பாளராக கடந்த முப்பதாண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆரோக்கிய ஐயா எழுபது வயதை தாண்டி விட்டாலும் அக்கம்பக்க கிராமங்கள் முழுதும் சபை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காகவும் சுறுசுறுப்பாகவே சுற்றி வருவார்.

ஈணா – சோணா பிரச்சினையில் போத்தி தலையிட்டு, விடுதி மாணாக்கர்களை காப்பாற்றிய காலம் முதலே ஆரோக்கியம் ஐயா போத்தி மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார் என்றாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததை மற்றும் ஏற்றுக்கொள்ள வில்லை. பாவிகளை மன்னித்து நல்வழிக்கு கொண்டு வருவதைப் பற்றி அவர் கூறும் போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து போத்தி பேசுவார் என்றாலும் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்த்து. தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஆரோக்கிய ஐயாவின் மீது போத்தியும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். மாதமொரு முறையாவது இருவரும் சந்தித்து உலக நடப்புகள் மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அளவளாவுவார்கள். ஆரோக்கியம் ஐயாவின் நட்பிற்கு பின் போத்தி கோபம், வேகம், வெறுப்பு போன்ற குணங்களை எவ்வளவோ குறைத்துக் கொண்டார் என்று சொன்னால் மிகையில்லை.


இருபதாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வரும் நண்பரின் வீடும், தொழுவமும், வயலும் தீ வைத்தி கொளுத்தப்பட்டதை அறிந்தவுடன் தன்னாலான உதவிகளை அவருக்குச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே நேராக கிளம்பி வந்த ஆரோக்கியம் ஐயா ஒரு பகல், இரவிற்குள் பலவித துன்பங்களை சந்தித்து, மனதளவில் பெருமளவு பாதிக்கப்பட்டு, ஆன்ம பலத்தையும் இழந்து அகதிகளாக நின்ற போத்தியையும், ஆச்சியரையும் சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தைகள் கூறி வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களின் பாதிப்புகளுக்காக தேறுதல் ஜபமும் செய்தார். போத்தியின் உறவினர்களை அழைத்துப் பேசிய ஆரோக்கியம் ஐயா, சபையின் தோட்டத்தில் வெட்டிக் கழித்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கம்புகளையும், பனை ஓலைகளையும், பின்னி வைக்கப்பட்டுள்ள தென்னை ஓலைக் கிடுக்குகளையும் எடுத்து வந்து வீட்டிற்கும், தொழுவத்திற்கும் முதலில் கூரை வேயச் செய்தார்.



(தொடரும்)

பாகம் 10

No comments: