Thursday, February 25, 2010

ஊருக்கு போறேன்........



புத்தாண்டுக்கு போகலாம், பொங்கலுக்கு போகலாம், சிவராத்திரிக்கு போகலாம்ன்னு பளிப்பளுவால் தள்ளி தள்ளி போடப்பட்ட விடுமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டது. பயணச்சீட்டு கைக்கு வந்து பயணம் உறுதியாகிவிட்டது.

இன்று இரவு எகிப்தில் இருந்து கிளம்பி துபாய் வழியாக திருவனந்தபுரம். பின் அங்கிருந்து திருநெல்வேலி.


மிகவும் குறுகிய இரண்டு வாரகால விடுமுறை என்பதால் ஊருக்குப் போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதிய பதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....

Wednesday, February 24, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – இறுதி பாகம்





படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து எவ்வளவோ முயற்சித்தும் என்னால் கண்களைத் திறக்கமுடியவில்லை. இமைகள் மீது பெரும்பாறை இருப்பது போல் மிகவும் பாரமாக இருக்கவே கைகளால் தடவிப்பார்த்தேன். வீக்கமாக இருப்பது போல இருந்தது. படுக்கையை விட்டு நான் எழாமல் இருப்பதை பார்த்து “என்னங்க, முடியலைன்னா லீவு போட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவாறு அடுப்படியில் இருந்து படுக்கை அருகே வந்தார் என் மனைவி.

“இல்லைம்மா. கண்ணு திறக்கமுடியலை. ரெண்டு இமைக்கு மேலயும் பாரமா வீங்கினாப்புல இருக்கு. என்னன்னு பாரு..” என்று நான் கேட்கவும் “ஆமாங்க, முகமே வீங்கினாப்புல இருக்கு. ரெண்டு இமைக்கு மேலயும் கோலிக்குண்டு மாதிரி வீங்கி இருக்கு... “ என்று மிகவும் பதட்டமாக கூறினார் என் மனைவி. முந்திய நாள் இரவு தையல் போட்ட பின் “இன்னைக்கு ராத்திரியோ, நாளைக்கோ தலை சுத்துற மாதிரி இருந்தாலோ வாந்தி அடிக்கடி வந்தாலோ உடனே தலையை ஸ்கேன் பண்ணி பார்த்திடுங்க” என்று டாக்டர் சொல்லி விட்டது வேறு நினைவிற்கு வந்து கிலியை கிளப்பியது.

சரி இதற்கு மேலும் மனைவியிடம் மறைக்ககூடாது என முடிவு செய்து என் அருகே அழைத்து அமரச்செய்து “நான் சொல்றதை கேட்டு பதறக்கூடாது” எனக்கூறி முந்தியநாள் ஊத்துமலையில் கிளம்பியது முதல் பைக்கில் வந்தது, பள்ளத்தில் விழுந்தது, ஆலங்குளம் வந்து ஆஸ்பத்திரியில் தையல் போட்டது, டாக்டர் ஸ்கேன் எடுக்கச் சொன்னது வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். என் நிலைமை புரிந்த அவரும் “அதுல்லாம் ஒண்ணும் இருக்காதுங்க.. நம்க்கு கடவுள்தான் துணை. நீங்க மனசை போட்டு குழப்பிகிடாதீங்க..” என்று ஆறுதல் கூறினார்.

“சரி நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் டிபனை ரெடி பண்றேன். சாப்பிட்டுட்டு டாக்டரை பார்த்துட்டு வருவோம்.” என்று கூறிவிட்டு அவர் வேலையில் இறங்க மேலும் தூங்கப்பிடிக்காமல் சும்மா படுத்துகொண்டு வீங்கியிருந்த இமைகளின் மீது விரல்களால் மெதுவாக தேய்த்து தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். பத்து நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்த பின்.இமைகளின் மீது சிறிது பாரம் குறைந்தாற்போல் தோணவே கண்களைத் திறக்க முயற்சி செய்தேன். இலேசாக திறக்க முடிந்தது.

அன்று அலுவலகம் செல்ல முடியாதது என உறுதியாக தெரிந்ததால் மேலதிகாரிக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லாததால் இன்று வேலைக்கு வரமுடியாது என தெரிவித்தேன். எனது டீமின் சப்லீடர் குமாருக்கும் போன் செய்து, “எப்பா, உடம்பு சரியில்லை. இன்னிக்கு வரமாட்டேன். பார்த்து பத்திரமா வேலை பாருங்க.” என்று கூறினேன்.


“என்ன சார், என்ன ஆச்சு. நேத்து ராத்திரி மேடம் வேற ரெண்டு மூணு தடவை போன் பண்ணி எப்போ கிளம்புனீங்க... போன் ஏதாவது பண்ணீங்களான்னு கேட்டாங்களே...” என்று குமார் கேட்க விழுந்த விபரம் கூறினால் அவன் கம்பெனியில் அனைவரிடமும் சொல்லி வரிசையாக போன் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்பதால“ஆமாம்பா.. சொன்னாங்க. நைட்டு பஸ் பிரேக்டவுண். அதான் லேட்டாயிடுத்து. செல்லுல பேட்டரி சார்ஜ இல்லை. அதான் வீட்டுக்கு தெரியப்படுத்த முடியலை” என்று கூறி சமாளித்தேன்.

டிபன் ரெடியான பின் சாப்பிட்டுவிட்டு தலைக்கட்டும், கண்வீக்கமும் தெரிந்தால் எல்லோரும் “என்ன, என்ன” என்று கேட்பார்கள் என்பதால் தொப்பியும், கருப்பு கண்ணாடியும் அணிந்து கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். அடிபட்ட விபரம், தையல் போட்டது, ஆலங்குளம் மருத்துவமனையில் கொடுத்த மருந்து சீட்டு எல்லாம் கேட்டறிந்த டாக்டர் தலைக்கட்டை பிரித்து காயத்தை சுத்தம் செய்து புதிதாக மருந்து வைத்து கட்ட சொன்னார்.

கண்வீக்கம் பற்றி கேட்டபோது “கார்களில் விபத்து ஏற்பட்டால் அடிபடாமல் தடுக்கும் பொருட்டு காற்றுப்பைகள் இருப்பது போல் நமது முகத்தில் அடிபட்டால் கண்மணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இதுபோன்ற பாதுகாப்பு படலம் ஏற்படும். நான் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள். ரெண்டு நாளில் சரியாகி விடும். மண்டை ஓட்டில் அடிபட்டிருந்தால் ரத்தம் உறைந்து பெரிய பாதிப்பாகி விடும் என்பதால் தலைசுற்றல், வாந்தி இருந்தால் ஸ்கேன் எடுத்து பார்ப்போம். பயப்படவேண்டாம். உங்களுக்கு நெற்றியில் மட்டும்தான் லேசான காயம். ஸ்கேன் எடுக்க தேவையில்லை. தினமும் மருத்துவமனை வந்து காயம் சுத்தப்படுத்தி மருந்து வைத்து செல்லுங்கள். காயம் ஆறிவிட்டால் ஒரு வாரத்திற்குள் தையல் இழை பிரித்து விடலாம்” என்று டாக்டர் தெளிவான விளக்கம் தந்தபின் தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம்.

சம்பவம் நடந்தது வெள்ளி இரவு என்பதால் சனி, ஞாயிறு இரண்டு நாள் ஓய்வு எடுத்துவிட்டு திங்களன்று அலுவலகம் செல்ல முடிவு செய்தேன். மறுநாள் ஞாயிறு மாலை மருத்துவமனை சென்றபோது தலைக்கட்டையும் பிரித்து சிறிய பேDண்ட் எய்டு மட்டும் போட்டு விட்டார்கள். மருந்து, மாத்திரைகளினால் கண் வீக்கமும் வடிந்து சரியாகி விட்டது.

திங்களன்று அலுவலகம் சென்றபோது நெற்றியில் பேண்ட் எய்டு பார்த்து என்ன என்ன என்று கேட்டவர்களிடம் பஸ்சில் சடன் பிரேக் போட்டதால் இடித்த காயம் என்றே சொல்லிவிட்டேன். கணேஷ் கண்ணிலே தட்டுபடாததால் விசாரித்ததற்கு “சார், கணேசும் சனிக்கிழமை வரலை. போன் ஏதும் பண்ணலை. நானும் வேலை பிசியில மறந்துட்டேன். உங்களுக்கு ஏதும் போன் பண்ணினானா...” என்று குமார் கேட்கவும் கணேஷிற்கு போன் செய்து “என்னப்பா, என்ன ஆச்சு “என்று கேட்டேன்.

“சார், எங்கப்பா வேலையை விடச்சொல்லிட்டார். “என்று அவன் கூறவும் அதிர்ச்சியடைந்த நான் “ஏன்ப்பா , என்ன ஆச்சு” என கேட்க, சார், எங்கப்பா சொன்ன மாதிரி சனிக்கிழமை சாயங்காலம் எம்.எல்.ஏ.வோட போய் அந்த பாலத்தை பார்த்திருக்காங்க. எம்.எல்.ஏ.வும் புதிய பாலம் போட்டு, ரோடு,லைட்டை எல்லாம் சரி பண்ணிடலாம் ன்னு சொல்லி இருக்கார். அப்போதான் உள்ளூர்காரங்க ஒரு குட்டிச்சாத்தான் கதையை சொல்லி குழப்பிட்டாங்களாம்” என கணேஷ் கூறவும் நான் மேலும் அதிர்ச்சியடைந்து “அது என்னப்பா குட்டிச்சாத்தான்...” என்று இடைமறித்தேன்.

'' சார், அந்த ஊர் ஆளு ஒருத்தர் கேரளா போய் மாந்திரீகம் படிச்சுட்டு வந்து குட்டிச்சாத்தானை வச்சு பில்லி, சூனியம் வைக்கிற கெட்ட தொழில் பன்ணிகிட்டு இருந்திருக்கார். அம்மாவாசை, பவுர்ணமி அன்னைக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்க அந்த பாலத்துல வச்சு தான் பூஜை பண்ணுவாராம். அவரால் பாதிக்கப்பட்டவங்க சிலபேரு சேர்ந்து ஒரு அமாவாசை அன்னைக்கு அந்த பாலத்துல கண்ணை மூடி பூஜை பண்ணிகிட்டு இருந்தவரை அடிச்சு கொன்னுட்டாங்களாம். அதுல இருந்து மந்திரவாதி கட்டுபாடு இல்லாத அந்த குட்டிச்சாத்தான் அந்த பாலம் வழியா ராத்திரி நேரம் போறவங்ககிட்டே சேட்டை பண்ணுமாம்.” கணேஷ் சொல்ல சொல்ல அன்று இரவு நான் மட்டுமே பார்த்த அந்த கருப்பு உருவமும், “ஏ... இன்னைக்கு மூணுல்லா கெடக்கு... நிக்காதே...நிக்காதே... வெரசாப் போ... வெரசாப் போ...” என்றவாறு நிற்காமல் சென்ற லோடு ஆட்டோவும் நினைவிற்கு வந்தது.

மேலும் தொடர்ந்த கணேஷ் “ஆனா எம்.எல்.ஏ. அதையெல்லாம் நம்பலையாம் சார். அப்படியே ஏதாவது இருந்தாலும் பாலம் கட்டி பூஜை போடும்போது எல்லாம் சரியாயிடும்ன்னு சொல்லி டெண்டர் விட ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டாராம். அந்தப்பாதை மோசமா இருந்ததால நின்னு போன மினிபஸ்சையும் ரோடு, பாலத்தை சரிபண்ணவுடனே விடவும் ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காராம்.. எனக்கும் இப்போதைக்கு டெம்ப்ரவரியா P.W.D. ல வேலை வாங்கி தந்திருக்கார். போஸ்ட்டிங் போடும்போது பெர்மணண்ட் ஆக்கிடுறேன்னும் சொல்லியிருக்கார். அதான் வேலையை விட்டுட்டேன் சார். நாளைக்கு ஆபிசுக்கு வந்து ரிசைன் லெட்டர் கொடுக்கணும்” என்று கூறி முடிக்கவும் எனக்கும் சீக்கிரம் இந்த வேலையை விடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

( முற்றும் )

Tuesday, February 23, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 5


எல்லோரையும் அனுப்பிவிட்டு கணேஷும் அவனது அப்பாவும் நான் எவ்வளவோ “வேண்டாம், வேண்டாம்” என்று மறுத்துக்கூறியும் கேட்காமல் என்னோடு பஸ்ஸ்டாண்டு வரக்கிளம்பினர். ஏற்கனவே பஸ்ஸ்டாண்டிற்கு செல்ல வேண்டும் என நிறுத்தி வைத்திருந்த அவரது மூன்று நண்பர்களின் பைக்குகளில் ஆளுக்கொருவராக ஏறி அமர்ந்து பஸ் ஸ்டாண்டை அடையும் போது மணி இரவு 11.15 மணி ஆகிவிட்டது. நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதால் பஸ்ஸ்டாண்டில் கூட்டமேயில்லை. சில ஊர்களுக்கு செல்லும் ஒரு சில கடைசி பஸ்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தன.

அம்பை பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றதும் எங்களை கண்ட கட்சிக்கார நண்பர்கள் “அண்ணாச்சி, நல்லவேளை கரெக்ட்டா நாங்க வரும்போதுதான் பஸ்ஸ்டாண்டுக்கு உள்ளே பஸ் வந்தது. உடனே ஏறி தம்பிக்கு சீட் போட்டுட்டோம். 11.30க்கு தான் எடுப்பாங்களாம். “ என்று தகவல் கூறினர்.

“சரி, இன்னும் கால்மணி நேரம் இருக்கு. வாங்க எல்லோரும் டீ சாப்பிடலாம்” என்று அழைக்க “அண்ணாச்சி, நீங்க எல்லோரும் சாப்பிட்டு வாங்க. எனக்கு டீ, காபி சாப்பிடும் பழக்கமில்லை” என மறுத்தேன். “அட,நீங்க பைசா கொடுக்க வேண்டாம். நான் கொடுக்கேன். சூடா ஏதாவது குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும் பாலாவது சாப்பிடுங்க” என்று கூறி அழைத்து சென்று எல்லோருக்கும் டீயும், எனக்கு பாலும் வாங்கி தந்தார் கணேஷ் அப்பா.

“தம்பி, எந்த ஊரு” என்று கேட்டவரிடம் என் ஊர்ப்பெயரை கூறியவுடன் எங்கள் ஊரைச்சேர்ந்த் சில கட்சிகாரர்கள் பெயர்களை கூறி விசாரித்தார். அவர்கள் அனைவரும் சொந்தக்காரர்கள் என நான் கூறவும், “சரியாப்ப் போச்சு. ரொம்ப நெருங்கிட்டியளே.. நாங்கெல்லாம் “கானா’ குரூப்புல்லா... “ என்று மாவட்ட அளவிலான உட்கட்சி பூசலை போட்டுடைத்தார்.

சட்டை ரொம்ப கிழிந்திருந்ததால் அந்த நேரத்திலும் பஸ்ஸ்டாண்டு அருகில் அன்றைய வியாபாரக் கணக்கு முடிப்பதற்காக திறந்திருந்த துணிக்கடையில் சென்று ஒரு டீ-சர்ட் வாங்கி அணிந்து கொண்டு சட்டையை ஒரு கவரில் போட்டு கையில் வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரம் மற்ற விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு பஸ் கிளம்பும் நேரம் ஆகிவிட்டபடியால் “சரி, நீங்க பஸ்ல்ல ஏறி உட்காருங்க. நாளைக்கு ஒரு வேலையாய் நம்ம தொகுதி எம்.எல்.ஏ கூட சங்கரன்கோவில் போகவேண்டியிருக்கு. ஊத்துமலை வழியாத்தான் கார்ல போவோம். வேலை முடிந்து திரும்பி வரும்போது நீங்க விழுந்த வழியா வந்து அந்த ரோட்டையும், பாலத்தையும் எம்.எல்.ஏ.ட்ட காமிச்சு ரிப்பேர் பண்ண ஏற்பாடு செய்யச் சொல்றேன். லைட்டுக்கும் ஏற்பாடு பண்ணிடுவோம். இனிமேலாவது இந்த மாதிரி யாரும் விழாம இருப்பாங்கல்லா..” என்று கூறியபோது “பணம் சம்பாதிப்பது மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சிக்காரர்களுக்குள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று உழைப்பவர்களும் இருக்கிறார்களே“ என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.

கடைசி பஸ் என்பதாலும், ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் போட, வாங்க வந்த விவசாயிகள், வியாபாரிகளால் பஸ் நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இடம் போட்டு வைத்திருந்ததால் நிற்க வேண்டிய கஷ்டமில்லாமல் இருக்கையில் சென்று அமர்ந்தேன். ''கசமுசா'' ''கசமுசா" என்று ஆள்கள் பேசிக்கொண்டு வந்தாலும் நேரம் ஆகிவிட்டது மற்றும் எனக்கு இருந்த உடல் அலுப்பினாலும் டிக்கெட் எடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவாறே அசந்து தூங்கி விட்டேன். அம்பை வந்ததும் ஏற்பட்ட பரபரப்பில் கண்விழித்து பஸ்சை விட்டு இறங்கி வீட்டை அடையும் போது சரியாக இரவு 12 மணி.

தூங்காமல் கண்விழித்திருந்த என் மனைவி தலையில் பெரிய கட்டுடன் வந்த என்னைப்பார்த்து “என்ன ஆச்சு, என்ன ஆச்சு” என்று பதறினார். அந்த நேரத்தில் பைக்கில் வந்து விழுந்த கதையை கூறி மேலும் அவரை கலவரபடுத்த விரும்பாமல் “ ஊத்துமலைல இருந்து ஆலங்குளத்துக்கு வரும்போது பஸ்ல சடார்ன்னு பிரேக் போட்டதால முன்சீட்டு கம்பில முட்டி நெத்தில லேசா வெட்டிட்டு. ஆலங்குளம் வந்து காமிக்கப் போன ஆஸ்பத்திரில்ல ஒரே கூட்டம். அப்புறம் பஸ்ஸ்டாண்ட் வந்தா பஸ்சும் இல்லை.அதான் லேட்டு” என்று கூறி சமாளித்தேன்.

“நான் எவ்வளவு நேரம் உங்க மொபைலுக்கு டிரை பண்ணினேன் தெரியுமா.. உங்க டீம் ஆள்களுக்கு போன் பண்ணி கேட்டா நீங்க ஊருக்கு கெளம்பி வந்துட்டதா சொன்னாங்க.. நீங்களும் போன் பண்ணலை..எனக்கு எப்படி இருந்திருக்கும்...” என அங்கலாய்க்க ஆரம்பித்தவரை “செல் பேட்டரில சார்ஜ் இல்லை. அதான் போன் பண்ண முடியலை. சரி,சரி, ஏற்கனவே நேரம் ஆயிட்டு. சாப்பாடு எடுத்துவை. காலைல சீக்கிரம் வேலைக்கு போகணும்” என்று கூறி தலைக்கட்டில் தண்ணீர் பட்டுவிடாமல் கழுத்திற்கு கீழ் குளித்துவந்தேன்.

அதற்குள் இடியாப்பம்- சொதியை சூடு பன்ணி வைக்க சாப்பிடும்போது “ம்ம்ம்..இன்னைக்கு சொதி நல்லா இருக்கே..” என்று பாராட்டி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தேன். உணவிற்கு பின் டாக்டர் கொடுத்து இருந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு “காலைல நேரா ஊத்துமலை போகணும். த்ரூ பஸ் 7 மணிக்கு.. தூங்கிட்டா எழுப்பிடு” என்று கூறி உறங்கச்சென்றேன்.

மறுநாள் காலை “என்னங்க ஆறரை மணி ஆகுது. வேலைக்கு போகப்போறீங்களா... இல்லையா... “ என்றவாறு என் மனைவி எழுப்ப திடுக்கிட்டு விழித்த என்னால் எவ்வளவோ முயற்சித்தும் கண்களைத் திறக்கமுடியவில்லை.

( தொடரும் )

Monday, February 22, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 4

கணேஷ் அலறியதால் அதிர்ச்சியடைந்த நான் ‘என்னப்பா, என்ன ஆச்சு..” என வினவ, “சார், உங்க சட்டை பேண்ட்ல்லாம் பாருங்க. முகமெல்லாம் ரத்தமா இருக்கு. என்னாச்சு சார்...” என்று அதிர்ச்சியுடன் கேட்ட பின் தான் என்னை கவனித்து பார்த்தேன் நான்.

பைக்கிலிருந்து கீழே விழுந்து தரையில் உருண்டதால் நான் அணிந்திருந்த முழுக்கை சட்டை இரண்டு முழங்கை அருகிலும் கிழிந்து கையெல்லாம் ஒரே சிராய்ப்புகள். சேஃப்டி ஷூ மற்றும் அன்று ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்ததால் கால்களில் சிராய்ப்புகளோ, அடியோ படவில்லை. ஆனால் பேண்ட் முழுதும் காய்ந்த சேற்றின் புழுதி அப்பி விட்டது.

முகத்தை தடவிப்பார்த்தேன். கையில் பிசுபிசுப்பாக சூடான இரத்தம். எங்கே அடிபட்டு இரத்தம் வருகிறது என்றே தெரியவில்லை. இருட்டாக இருந்ததால் மொபைல் போன் வெளிச்சம் மூலம் பார்க்கலாம் என்று மேல் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டால் பையில் மொபைல் இல்லை. வைத்திருந்த பணம், சில்லறை காசுகள், பேனா எதுவுமே இல்லை.

கணேஷ் அவனது பேண்ட் பாக்கெட்டில் மொபைலையும், பர்சையும் வைத்திருந்த்தால் அவை கீழே விழாமல் பத்திரமாக இருந்தன. அவனது மொபைல் வெளிச்சத்தில் தேடி அங்கங்கு கிடந்த எனது பணம், சில்லறைகளை எடுத்தான். மேலும் மொபைல் போனின் கவர் கழண்டு தனித்தனியாக சிதறி கிடந்த பேட்டரி, சிம் கார்டு, நம்பர் பட்டன் பகுதி எல்லாவற்றையும் தேடி எடுத்தோம்.

“சார் உங்க முகத்தை காமிங்க” என்று பரிசோதித்தவன் “சார், உங்க ரைட் கண்ணுக்கு மேல நடுநெத்தியில்தான் அடிப்பட்டிருக்குன்னு நினைக்கேன். அந்த இடத்துல இருந்துதான் ரத்தம் பொங்குது.” என்று கூறவும் எனது விரல்களால் தடவிப்பார்த்ததில் அந்த இடத்தில் வலித்தது. கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு மேலும் இரத்தம் வராமல் தடுக்க நெற்றியில் வைத்து அழுத்தினேன்.

அதற்குள் கணேஷ் பைக்கை தூக்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு சுற்றி வந்து பரிசோதித்தான். பைக்கின் ஹேண்ட்பாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டிருந்த ரியர் வியூ கண்ணாடிகள் உடைந்திருந்தன. மற்றபடி பெரிய பாதிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. ஸ்டார்ட் செய்து பார்த்தான். மக்கர் பண்ணாமல் உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது.

ஊத்துமலைக்கு திரும்பி சென்றால் டாக்டர் இருப்பார் எனபது உறுதி இல்லை என்பதாலும், கம்பெனி ஆள்கள் யார் கண்ணிலாவது பட்டால் தேவையில்லாத பரபரப்பு ஏற்படும் என்பதாலும் நேராக ஆலங்குளமே சென்று விடலாம் என முடிவெடுத்தோம். கணேஷ் தொடர்ந்து வழி கூற பல சிறிய கிராமங்களை கடந்து வந்தோம். சில நேரம் தவறிப்போய் சில கிராமங்களின் உள்ளே சென்று விட கண்ணில் பட்டவர்களிடம் வழி விசாரித்து விசாரித்து ஒரு வழியாக ஆலங்குளத்தை அடைந்தோம்.

ஏற்கனவே கணேஷ் அவனது அப்பாவிற்கு விபத்து நடந்த விஷயத்தை செல்போன் மூலம் தெரியப்படுத்தியபோது அவர்கள் குடும்ப டாக்டரின் மருத்துவமனைக்கு நேராக வந்துவிடுமாறு கூறியிருந்ததால் நேராக மருத்துவமனை சென்றோம். எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக இருந்தது. அவனது அப்பா ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் மருத்துவமனை வாசலில் அவருடன் ஒரு பெருங்கூட்டமே நின்றது. எங்கள் கோலத்தை கண்ட சிலர் ஓடி வந்து பைக்கை வாங்கி கொண்டு எங்களை மருத்துவமனை உள்ளே அழைத்து சென்றனர்.

என்னைப் பரிசோதித்த மருத்துவர் நெற்றியில் ஆழமாக வெட்டி இருப்பதால் கண்டிப்பாக தையல் போட வேண்டும் என்று கூறி விட்டார். நினைவு தெரிந்த நாள் முதல் தையல் போட்டதில்லை என்பதனாலும், முகத்தில் காயம் என்பதாலும் தயங்கிய என்னை கண்டித்த மருத்துவர் “இரண்டு இழை தையல்தான். காயமும் சீக்கிரம் ஆறிடும். தழும்பும் தெரியாது” என்று கூறி தையல் போட்டுவிட்டு நெற்றியை சுற்றி பெரிய கட்டும் கட்டிவிட்டார். தினமும் கட்டை பிரித்து புது கட்டு போட்டு கொள்ள அறிவுறுத்தினார்.

கணேஷையும் பரிசோதித்து சிறு சிறு சிராய்ப்புகள் மட்டும்தான். பயப்படும்படி ஒன்றும் இல்லை என்று கூற மருந்து, மாத்திரைகள் வாங்கி கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தோம்.

“கட்சி மீட்டிங்ல பேசிகிட்டிருக்கும் போது கீழே விழுந்துட்ட விபரம் சொல்லி கணேஷ் போன் செய்தான். என்னவோ ஏதோன்னு பதறிட்டேன். அதான் சொல்ல சொல்ல கேட்காம நிறைய பேரு வந்துட்டாங்க. தப்பா நினைச்சுகிடாதீங்க” என்ற கணேஷின் அப்பா “மணி 11 ஆகப்போகுது. பேசாம எங்க வீட்டுல தங்குங்க. காலையிலே மறுபடியும் வந்து டாக்டரை பார்த்துட்டு அப்புறம் ஊருக்கு போங்க” என்றார்.

“இல்லைங்க பரவாயில்லை. எப்படியும் கடைசி பஸ் போயிருக்காது. அதை பிடிச்சிட்டா போதும். வீட்டுக்கே போயிடுறேன்” என்றேன்.நேரமாகி விட்டதால் அவரும், கணேஷும் அவர்கள் வீட்டில் தங்கச்சொல்லி எவ்வளவோ வலியுறுத்தியும் நான் ஒத்துக்கொள்ளாததால், அவரது கட்சிகாரர்களிடம் “ரெண்டு பேரு பைக்கை கொண்டு போய் மெக்கானிக்ட்ட விட்டுடுங்க. இன்னும் ரெண்டு பேரு பஸ்ஸ்டாண்ட்டுக்கு வெரசாப் போய் பஸ் போயிடுச்சா இல்லைன்னு பாருங்க. போகலைன்னா நிறுத்திவைங்க. தம்பியை பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விடதுக்கு என்கூட ரெண்டு,மூணு பேர் இருங்க போதும். மத்தவங்கெல்லாம் கெளம்புங்க. நாளைக்கு காலைல மத்த விபரம் பேசிக்கிடுவோம்.” என்று வரிசையாக உத்தரவிட்டார்.

( தொடரும் )


Sunday, February 21, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 3



வந்த வேகத்தில் சடாரென பாலத்தில் இறங்கியதால் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் அந்த கருப்பு உருவத்தின் மீது ஏறி சிறு பள்ளத்தில் இறங்கிய பைக்கை எப்படியோ பேலன்ஸ் செய்து இரண்டடி தூரம் தள்ளி வந்தவன் அந்த கருப்பு உருவம் மீண்டும் பைக் முன் கொஞ்சம் பெரிதாக தெரிந்ததால் அதிர்ந்து போனேன். எப்படி மறுபடியும் அந்த உருவம் முன்னால் வந்திருக்கும் என்ற எண்ணமே எனது அதிர்ச்சிக்கு காரணம்.

நொடிப்பொழுதிற்குள் இவையனைத்தும் நிகழ்ந்ததால் வேறு எதையும் யோசிக்க முடியாமலும் பைக்கை நிறுத்த முடியாமலும் அந்த கருப்பு உருவத்தின் மேல் நேராக விட்டு விட்டேன். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ‘’டமால்” “ டிமீல்” “கடமுடா” “அய்யோ, அம்மா,அப்பா” என ஏதேதா சத்தம். அத்தோடு நான் நினைவிழந்து விட்டேன்.

சில நிமிடங்கள் கழித்த பின், “ஏ... இன்னைக்கு மூணுல்லா கெடக்கு... நிக்காதே...நிக்காதே... வெரசாப் போ... வெரசாப் போ...” என பலரது பேச்சுக்குரல் கேட்கவும் மயங்கி கிடந்த நான் கண்விழித்தேன். தரையிலே நான் கிடக்க என்னைக் கடந்து ஒரு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

தொட்டி வண்டி என்று சொல்லப்படும் அந்த லோடு ஆட்டோவில் ஏதோ தோட்டத்தில் வேலைபார்த்து விட்டு செல்லும் ஆண்களும், பெண்களுமாக ஏழெட்டு பேர் நின்று கொண்டு பரபரப்பாக பேசிக்கொண்டு “த்தூ... த்தூ... த்தூ... “ என காறித் துப்பிக்கொண்டு சென்றனர்.

கை,கால்,உடலெல்லாம் ஒரே வலி. எப்படியோ தட்டுத் தடுமாறி எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். பாலத்தின் மையத்தில் இருந்த ஒரு பெரிய குழிக்குள் பைக் கிடந்தது. அதற்கு இடப்பக்கமாக கணேஷ் “அய்யோ, அம்மா” என முணங்கி கொண்டு தரையில் கிடந்தான். அந்த கருப்பு உருவம் இப்போது கண்ணில் படவில்லை.

என்ன நடந்திருக்கும் என யோசித்து யோசித்து பார்த்தேன். இரண்டாவது முறை அந்த கருப்பு உருவத்தில் ஏறி இறங்கிய பின் எதிர்பாராமல் சடாரென பெரிய குழிக்குள் இறங்கிய அதிர்ச்சியில் நான் பைக் ஹேண்டில்பாரை விட்டுவிட்டதால் வண்டி கட்டுபாடிழந்து நான் ஒருபுறமும், கணேஷ் ஒருபுறமும் தூக்கி வீசப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவானது.

“கணேஷ், கணேஷ்... ஏய்.. எந்திரிப்பா...” என எதிர்பாராமல் விழுந்த அதிர்ச்சியில் முணங்கி கொண்டிருந்த கணேஷை எழுப்பினேன். அவன் எழமுடியாமல் “சார் முட்டில நல்லா அடிபட்டிருக்கு. பயங்கரமா வலிக்குது. எந்திரிக்க முடியலை” என்றான். நான் மண்டியிட்டு அமர்ந்து அவன் கால் முட்டிகளை என் கால்மேல் எடுத்து வைத்து லேசாக வலிக்காமல் தேய்த்து விட்டேன்.

வலியினால் கண்மூடியிருந்தவன் சிறிது நேரத்திற்கு பின் “சார், போதும். இப்போ பரவாயில்லை” என்றவாறு எழுந்தான். கை, கால்களை உதறியவாறு சிறிது தூரம் நடந்து விட்டு பின் திரும்பி என்னருகே வந்தவன் என்னைப் பார்த்து “சார்......” என அலறினான்.

( தொடரும் )


Wednesday, February 10, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 2


”இல்லை சார், ஊத்துமலையிலிருந்து ஆலங்குளம் அரைமணி நேரம் கூட ஆகாது. அதனால இன்னைக்கு வீட்டுக்கு போயிடலாம்ன்னு பார்க்குறேன். என் பிரெண்டுகிட்ட பைக் கேட்டிருக்கேன். என் கூட பைக்ல ஆலங்குளம் வந்திடுங்க. அங்கிருந்து அம்பை அரைமணி நேரம்தான். இவங்க தேவர்குளம் போறதுக்குள்ளே நாம வீட்டுக்கு போயிடலாம்” என்றான் கணேஷ்.

இரவு நேரம் தெரியாத வழியில் பைக்கில் செல்லவா என யோசித்துக் கொண்டிருந்தபோது, “ஆமா சார், இன்னும் செக்சனுக்கு போய் ரிப்போர்ட் பண்ணிட்டு, ஸ்டோர்ல மெட்டீரியல் ரிட்டர்ன் போட்டுட்டு கெஸ்ட் ஹவுஸ் போறதுக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிடும். அதனால நீங்க கணேஷ் கூட கிளம்பறதுதான் நல்லது. நாங்க எல்லாம் பார்த்துகிடுறோம். காலையிலே கூட நீங்க நேரா இங்க வந்திடுங்க.” என்றான் எனது டீமின் சப்லீடர் குமார்.

“இல்லைப்பா. பைக்ல ராத்திரி போகவான்னுதான் யோசிக்கிறேன்.” என்று கூறிய என்னை இடைமறித்த கணேஷ் “சார், ஆலங்குளம் வரை என்கூட வந்திட்டு அதுக்கப்புறம் பஸ்ல அம்பை போயிடுங்க. காலையிலும் ஆலங்குளம் வந்திட்டிங்கன்னா நாம ரெண்டு பேரும் பைக்ல சேர்ந்தே ஊத்துமலை வந்திடலாம்” என்றான்.

மாலை ஆறு மணி அளவில் வேலை இருப்பதால் வரமுடியாது என்பதை தெரியப்படுத்த வீட்டிற்கு போன் செய்த போது அன்று இரவு வீட்டில் டிபன் “இடியாப்பம்-சொதி” என்று சொன்னது வேறு அநியாயத்திற்கு மனதில் வந்து ஆசையை தூண்டியது. சரி வீட்டுக்கே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

“சார், நாங்க எல்லாத்தையும் ஓரம் கட்டுறதுக்குள்ள நீங்களும், கணேசும் முதல்ல கீழே போயிடுங்க. உடனே சுமோவில ஊத்துமலைல போய் இறங்கிட்டு வண்டியை திருப்பி அனுப்பிச்சுடுங்க“ என்ற குமாரிடம், “சரிப்பா. பார்த்து பத்திரம்”. என்று கூறிவிட்டு நானும், கணேசும் மெஷினை விட்டு கீழே இறங்கி சுமோவில் பஸ்ஸ்டாண்டு அருகேயிருந்த அவன் நண்பன் வீட்டருகே வந்து விட்டு வண்டியை திருப்பி அனுப்பி விட்டோம்.

கணேஷ் ஏற்கனவே அவன் நண்பனை அலைபேசியில் அழைத்து வந்து கொண்டிருக்கும் தகவலை சொல்லி விட்டதால் அவனும் மெயின்ரோட்டிலே பைக்கோடு நின்று கொண்டிருந்தான். “சார், ஒரு நிமிஷம்” என்றவாறு அவனருகே சென்ற கணேஷ் ஏதோ கிசுசிசுப்பாக பேசிக்கொண்டிருக்க, “சரி வயசுப்பசங்க.. ஏதோ பேசுகிறார்கள்” என நானும் அலைபேசியை எடுத்து அன்று இரவு வீட்டிற்கு வருவதை தெரியப்படுத்தியவாறு சிறிது தள்ளி வந்து நின்றேன்.

“சரிடே.சரிடே” என்றவாறு வந்த கணேஷ் “சார், வண்டியை நீங்களே எடுங்க. போகலாம்” என்றான். “ஏன்ப்பா நீ ஓட்டணும்ன்னா ஓட்டு. நான் உடகார்ந்திட்டு வரேன்” என்றதும் “இல்லை சார் என் சைசுக்கு பின்னாடி இருந்தாதான் வண்டிக்கு பேலன்ஸ் கிடைக்கும்” என்றான். ஆமாம் கணேஷ் கட்டையாய்,குண்டு குண்டுன்னு ஒரு ஷேப்பில்லாமல் இருப்பான்.

புதிய சிகப்பு நிற ஸ்பெலண்டர் பைக். ஸ்டார்ட் செய்து ஊத்துமலை ஊரை தாண்டும் முன் இருந்த பெட்ரோல் பங்கில் “பெட்ரோல் போட்டுட்டு போலாம்பா” என்றவாறு நிறுத்தினேன். “ வேண்டாம் சார். என் பிரெண்டுட்ட பைக்கு வாங்கும்போதே கேட்டுட்டேன். சாயந்திரம்தான் அவன் பெட்ரோல் போட்டனாம்” “சரிப்பா, இருந்தாலும் ராத்திரி நேரம் ஏன் ரிஸ்க் எடுக்கணும். ஒரு லிட்டர் மட்டுமாவது போட்டுகிடலாம். நாளைக்கு காலையில திரும்பி வரதுக்கும் சரியா இருக்கும்.” என கணேஷ் மறுக்க மறுக்க ஒரு லிட்டர் பெட்ரோலும் போட்டு கொண்டு கிளம்பியாயிற்று. வண்டி நல்ல கண்டிஷனோடு ஓட்ட அருமையாக இருந்தது. ஹெட்லைட் மட்டும் ஆக்ஸிலேட்டரை குறைக்கும் போது வெளிச்சம் மங்கியது.

“பரவாயில்லையேப்பா, உன் பிரெண்டு புது பைக்கை கொடுத்திருக்கானே.. ரொம்ப நல்லவனா இருப்பான் போலிருக்கே..உனக்கு எப்படி பழக்கம்... “ என்று கணேசிடம் கேட்டேன். “சார், என்கூட பாலிடெக்னிக் படிச்சான். நல்ல வசதி. ஒரே பிள்ளை. படிக்கும் போதே எல்லோருக்கும் தாராளமா செலவு செய்வான். தோட்டம்லாம் நிறைய இருக்கு. ரைஸ்மில் ஒண்ணும் இருக்கு. அதுவுளை பார்த்திட்டு ஊரிலே இருக்கான்.” என்றான்.

சோலைச்சேரி ஊருக்குள் நுழைந்தவுடன் பாதை இரண்டாக பிரியவும், “சார்,சார், லெஃப்ட்ல போங்க.அதான் ஷார்ட்டுன்னு என் பிரெண்டு சொன்னான்”. எனவும் அவன் சொன்ன பாதையில் வண்டியை திருப்பினேன். வெளிச்சமே இல்லாமல் குண்டும் குழியுமாக ரோடு மிகவும் மோசமாக இருந்தது கண்டு அதிர்ச்சியுற்ற நான் “என்ன கணேஷ், ரோடு இவ்வளவு மோசமா இருக்கு.. வெளிச்சமும் இல்லை. இன்னும் எவ்வளவு தூரம் இப்படி இருக்கும்” என்று கேட்டேன்.

“தெரியலயே சார்” என்று அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் “என்னது இந்த பாதையைப் பத்தி தெரியாதா” என்றேன்.

“சார், தப்பா நினைச்சிக்காதீங்க. நானும் உங்களை மாதிரி திருநெல்வேலி வழியா வந்துதான் பழக்கம். இதுக்கு முன்னாடி இந்த பக்கம் வந்ததேயில்லை. இன்னைக்குதான் முதல் முதலா வர்றேன். அதான் பிரெண்டுகிட்டே வழி கேட்டுட்டு வந்தேன்”. என்று அவன் கூறிய பதில் எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

“ஏம்பா, இதை முன்னாடியே சொல்லியிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். உனக்கு துணைக்கு ஆள் வேணும்கிறதுக்காக என்னையும் இழுத்துட்டு வந்துட்டியே” வாய் வரை வந்த வார்த்தையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு வண்டி ஆக்சிலேட்டரில் கோபத்தை காட்டினேன். என் கோபத்தை உணர்ந்த கணேஷும் எதுவுமே பேசவில்லை.

அம்மாவாசைக்கு இரண்டொரு நாட்களே இருந்ததால் கீற்றாய் கூட தேய்பிறை நிலவின் வெளிச்சம் தென்படவில்லை. நட்சத்திரங்கள் கூட தெரியாமல் மேகங்கள் அடர்ந்து கரிய போர்வை கொண்டு வானத்தை போர்த்தியது போல இருந்தது. வீடுகளே இல்லாத வெட்டவெளியில் கருப்பு வர்ணம் பூசியது போல இருட்டு அடர்த்தியாக அப்பியிருந்தது. ஏதேதோ பூச்சிகள் பைக் லைட் வெளிச்சத்தால் கவரப்பட்டு கண்ணை மறைத்து பறந்தன. எங்கள் பைக்கின் சன்னமான உறுமல் சத்தத்திற்கு எங்கெங்கோ ஓடும் பம்ப்செட்டு மோட்டார்கள் எதிர் இரைச்சல் ராகம் பாடின. ரோட்டோரம் வளர்ந்திருந்த வேலிக்கருவை மரநிழல்களின் அசைவில் ஏதேதோ உருவங்கள் தோன்றி அச்சமூட்டின.அந்த மரங்களில் வசிக்கும் பறவைகளில் சிலவும் கலைந்து சடசடவென பறந்தன.

பொட்டல் வெளியில் சில்லென்ற தென் பொதிகை மலைச்சாரல் காற்று அவ்வப்போது வேகமாக வீசி குளிரினால் உடலை சிலிர்த்து, நடுங்கச் செய்தது. தோட்டங்களில் காவலுக்கு கொண்டு வந்து விடப்பட்டிருந்த சில நாய்களும் அவ்வப்போது காலருகே ஓடிவந்து குரைத்துக் கொண்டே துரத்தவே இன்னும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை கூட்டினேன்.

சிறிது தூரம் கரடுமுரடான பாதையில் சென்ற போது ஒரு தாம்போதி வந்தது. கிராமப்புறங்களில் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் ஓடைகள் சாலையை கடக்கும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினரால் கான்கிரீட் சிமெண்டினால் தரைமட்டத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை தாம்போதி என்று கூறுவார்கள். அந்த தாம்போதி எந்த காலத்தில் போடப்பட்டதோ தெரியவில்லை சிமெண்டெல்லாம் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

சென்ற வேகத்தில் சடாரென தரைப்பாலத்தில் இறங்கியதால் பின்னாலிருந்த கணேஷின் மொத்த எடையும் என் முதுகில் இறங்கி என்னை நிலைகுலையச் செய்தது. பைக்கின் சக்கரங்கள் வேறு பாலத்தில் இருந்த குழிகளில் கன்னாபின்னாவென்று விழுந்து குதித்தன. பிரேக்கை அழுத்தி வேகத்தை குறைக்க முயற்சி செய்ததால் ஹெட்லைட்டின் வெளிச்சமும் குறைய என் கண்முன்னே பாலத்தின் நடுவே தரையோடு தரையாக கருப்பாக ஒரு உருவமில்லாத உருவம் தெரிந்தது.

( தொடரும் )


Tuesday, February 09, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்...

மாதம் ஒரு திகில் கதையாவது எழுதலைன்னா அரேபிய அர்த்த ராத்திரிகளில் நல்லா தூக்கம் வரமாட்டேன்கிறது. படிச்சா உங்களுக்கு தூக்கம் வராதுன்னு சொல்றது என் காதுல விழலீங்கோ...

இதுக்கு முன்னாடி எழுதின பேய்க் கதையெல்லாம் படிக்காதவங்க வரிசையா எல்லாத்தையும் படிச்சிடுங்க .

3. “சந்திரமுகியை சந்தித்தேன்”


போல இதுவும் காற்றாலையில் வேலை பார்த்த போது நடநத சம்பவம்தான்.

காற்றாலைகள் மரபுசாரா மின் உற்பத்தியில் முக்கிய இடம் வகிப்பவை. இயற்கை மூலப்பொருள், குறைவான முதலீட்டில் நிறைவான உற்பத்தி, சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமை என எல்லா விஷயத்திலும் தனிப்பெருமை வாய்ந்தவை. எனது பதினாறு வருட வேலை அனுபவங்களில் இயற்கை சார்ந்த காற்றாலைப்பணியே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்ததாக இருக்கிறது.

நமது நாட்டில் 1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.).

காற்றாலையில் பராமரிப்பு துறையில் பணி என்பது ஒரு நாட்டின் இராணுவத்தின் பணி போல. இரவு பகல் பாராமல் எந்த நேரம் மெஷினில் பழுது ஏற்பட்டாலும் உடனே சென்று அதனை முழுமையாக தீர்க்கும் வரை மெஷினை விட்டு இறங்காமல் இருப்பது என்பது மிகவும் கடினமானது.

சரி நியூஸ் ரீல் போதும் கதைக்கு வருவோம்.

தேவர்குளம் செக்சனில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது தினமும் அம்பையிலிருந்து நெல்லை.பின் நெல்லையில் இருந்து தேவர்குளம் என பேருந்து பயணம். எனது டீம் உறுப்பினர்கள் தேவர்குளம் கம்பெனி விடுதியிலே தங்கியிருந்தார்கள். வாரம் ஒரு முறை அவரவர் ஊர்களுக்கு சென்று வருவார்கள்.

ஒரு நாள் அதிகாலையிலே ஊத்துமலை செக்சனிலிருந்து அழைப்பு. அவர்கள் செக்சன் மெஷின் ஒன்றில் பிரச்சினை. அவர்களது மெயிண்டெனன்ஸ் டீம் வேறு ஒரு வேலையில் பிசியாக இருந்ததால் எங்கள் டீமோடு வந்து உதவும்படி கேட்டுகொண்டார்கள். சரி என்று ஒத்துகொண்டு தேவர்குளம் வந்து ஆட்கள், தேவையான கருவிகள் எல்லாம் திரட்டி குறிப்பிட்ட மெஷினுக்கு சென்றோம். முதல் டீம் மேலே ஏறி என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்லிவிட்டார்கள். சற்று பெரிய பிரச்சினைதான்.

உடனடியாக அடுத்த டீமையும் மேலே அனுப்பி அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு மாற்ற வேண்டிய பாகத்தை மெயின் ஸ்டோரில் இருந்து எடுத்து வர மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது.

நான்கு மணி அளவில் நானும் மேலே ஏறி வேலையில் ஈடுபட்டேன். பழுதடைந்த பாகத்தை கழற்றி கீழே இறக்க மாலை ஏழரை மணி ஆகிவிட்டது. புதிய பாகத்தை மேலே ஏற்றவே எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அதன்பின் வேலை முடித்து மெஷினை ஓட்ட எப்படியும் ஆறுமணி நேரத்திற்கும் மேலாகிவிடும். முந்திய தினம் அரசு விடுமுறை என்பதால் எல்லோருமே ஊருக்கு சென்று வந்திருந்தார்கள். அவரவர் வீட்டிலிருந்து அதிகாலையிலே கிளம்பி வந்தபடியால் அனைவருமே மிக அலுப்பாக இருந்தனர். இருந்தாலும் வேலையை முடித்துவிட்டுதான் இறங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அப்போது காற்று சீசன் இல்லை என்பதால் உற்பத்தி குறைவுதான். எனவே உற்பத்தி மேலாளரிடம் பேசி மறுநாள் காலை வந்து வேலை தொடங்க அனுமதி வாங்கிவிட்டேன். மேலேயே கருவிகளை பத்திரமாக வைத்து விட்டு எல்லோரையும் கீழே இறங்க சொன்னேன்.

அப்போது எனது டீமிலிருந்த கணேஷ், ”சார்,நீங்க எப்படி ஊருக்கு போவீங்க” என்று கேட்டான்.”இல்லைப்பா, இன்னைக்கு ரொம்ப நேரமாயிட்டுது. அதனாலே பேசாம இவங்களோட போய் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட வேண்டியதுதான்.” என்றேன்.

“சார், என்னோட வீடு ஆலங்குளம். எனக்கு ஊத்துமலையில் ஒரு பிரெண்ட் இருக்கான்” என்றவனை புரியாமல் பார்த்தேன்.

( தொடரும் )

Wednesday, February 03, 2010

சுறா - அடப்பாவி மக்கா, அதுக்குள்ளேவா......

இணைய மடல் மூலம் வந்த செய்தி
FLASH NEWS
பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் கரையில் செத்து மிதந்தன.

நடந்தது என்ன?



இது குறித்து காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்
அப்படி இருந்தும் இதன் பின்னனி என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
இறுதியில் அதன் காரணத்தை கண்டுபிடித்து விட்ட காவல்துறையினர் இதற்குமுன்பு இப்படி ஒருகாலமும் நடந்தது இல்லையென்று திகைத்து போயினர் .

;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
இதுதான் காரணம்;

விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பு சுறா.

இது ஒட்டுமொத்த மீன்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது, என்று தங்கள் உணர்வை வெளிபடுத்தியும் மேலும் தங்களது வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்தியும் ஒட்டுமொத்த மீன்கள் சமுதாயமும் இந்த முடிவை எடுத்துள்ளன.
-----------------------------------------
அடப்பாவி மக்கா, இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. அதுக்குள்ளேவா......

Tuesday, February 02, 2010

இனி எல்லாம் சுகமே....


கனவுகள் பல நான் கண்டேன். அது தினம் தினம் கலைந்திட கண்டேன்.

இருட்டினில் எழுதினேன் என் சோகம். அதை யாரும் கண்டிடக்கூடாது என்றொரு தாகம்.

மணிக்கொரு ஆசையை நான் வளர்த்தேன். அவை நொடிக்கொன்றாய் உடைந்ததை அறிந்தே வாழ்ந்தேன்.

விட்டில்பூச்சிக்கு ஒளியின் மேல் ஆசை. கேட்கும் வழி இழந்த செவிக்கு ஒலியின் மேல் ஆசை.

கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டன என் காதுகள். இனி கேட்கவே கேட்காதோ என நெஞ்சுக்குள் கதறல்கள்.

அறிவியல் ஆயிரம் கண்டுபிடித்தது என கூறியது பல குரல்கள். என் வலி தீர வழி கண்டிருக்குமோ என மனதில் பல நாள் குமுறல்கள்.

நண்பர்கள் செய்யும் கேலியையெல்லாம் கேட்டு அதை எதிர்கிண்டல் செய்யும் நாள்தான் எனக்கில்லையோ என ஏங்கிடும் ஏங்கிடும் என் மனது. தினம் தூங்கிடும் தூங்கிடும் கண்கள் கனத்து.

நெஞ்சோடு அமைதி கொண்டேன் நான் இன்று. இறுதிமுடிவிற்கு வருகின்றது என் சோகம் என்று.

விடிகின்ற விடியல் எனக்காகத்தான். இனி எப்போதும் இந்த காதுகளில் இசைமழைதான்.

------------------------------------------

உடன் பணிபுரியும் அன்பு நண்பர் பாஸ்கர் எழுதிய கவிதை இது. நண்பர் கலைரசனை மிக்கவர். புகைப்படங்கள் எடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். எதிர்பாராத விபத்தில் செவித்திறன் குறைந்தமையால் பெரும் அவதிப்பட்டவர் சென்ற வாரம் இங்கு எகிப்திலே நவீன லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நான்கு நாட்கள் ஓய்வில் வீட்டில் தனியாக இருக்கும்போது எழுதிய கவிதை. என்னை மிகவும் பாதித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் சீக்கிரம் நலம் பெற எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.