Wednesday, November 07, 2018

ஊத்துக்குழி


பெருமா கிழவி மேல் கோபம் கொண்டுசெழிப்பான சிங்கம்பட்டி ஊருக்கு சாபம் கொடுத்துச் சென்ற அகத்தியருக்கு தாகம் மேலும் அதிகரித்ததால் ஆற்றுக்கு செல்லும் வழியில் காய்ந்து இருந்த கட்டாந்தரையில் கையில் இருந்த தண்டத்தால் ஓங்கி அடித்து ஒரு குழியை உருவாக்கி அதிலிருந்து ஊற்றாய் பொங்கி வந்த நீரை அருந்தி தாகம் நீங்கினார். பல ஆயிரம் ஆண்டுகளாக பருவகால வேறுபாடுகளால் பாதிக்கப்படாத அகத்திய சித்தர் அருளினால் உருவாக்கப்பட்ட அந்த ஊற்றுக் குழியிலிருந்து அன்று முதல் இன்று வரை நீர் வற்றாமல் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.

பல அரிய நோய்கள் தீர்க்கும் அருமருந்தான அந்த ஊத்துக் குழி நீரின் வரலாறு தெரிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், சித்த மருத்துவர்கள், ஜோதிடர்கள்,  போன்றோர் அறிவுரையின் படி சிங்கம்பட்டி ஊர் மக்கள் மட்டும் அல்லாமல் சாதி, மதம் பாராமல் பல ஊர் மக்களும் பயன்படுத்தி பலன் பெற்றுள்ளனர். அந்த காலத்திலே பலவிதமான மக்களும் பயன்பெறும் வகையில் படித்துறைகளும் கட்டி அருகிலே ஒரு சிவாலயமும் அமைத்து வைத்துள்ளனர்.

காலப்போக்கில் தாழம்புதர்கள் அடர்ந்து இருந்த சித்த மருத்துவ குணங்கள் கொண்ட ஊத்துக் குழியை சமீப காலத்தில் ஊர் பொதுமக்கள் உதவியோடு, சிங்கம்பட்டி இளையோர் பெருமுயற்சி எடுத்து சுத்தம் செய்து புதுப்பித்து மறுபடியும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சீரும், சிறப்பு மிக்க ஊத்துக்குழியை மையமாகக் கொண்டு, ஐந்து தலைமுறைகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் புனைவே இக்கதையின் களமாகும்.


ஊத்துக்குழி


மாலை மயங்கி, அந்திக்கருக்கல் அன்றைய தினத்தை அணைக்கும் நேரம். எட்டத்தில் இருந்த இருட்டு மங்கை கிட்டத்தில் வந்து கொண்டிருந்த சாயங்காலப் பொழுது. ஆறு தாண்டி அக்கரைக்குச் சென்று இருந்த ஆடு, மாடுகள் எல்லாம் மேய்ச்சல் முடிந்து திரும்பி விட்டன என்றாலும் மந்தையை விட்டுப் பிரிந்து வெகுதூரம் சென்றிருந்த சில மாடுகள் மட்டும் வீடுகள் நோக்கி வேகநடை போட்டுக் கொண்டு இருந்தன. அலைகடலில் ஆதவன் உதிக்கும் முன்பே இரைதேடி பலதிசைகள் சென்றிருந்த பலவிதமான பறவைகளும் அந்தி மயங்கும் அந்த நேரத்தில் குஞ்சுகள், கூடுகள் நாடி குரல் எழுப்பியவாறு குதூகலத்துடன் பறந்து கொண்டு இருந்தன. அதிகாலையிலே கஞ்சி எடுத்துக் கொண்டு களத்து வேலைகளுக்குச் சென்று களைத்துப் போன அனைவருமே அவரவர் வீடு திரும்பி விட்டனர். இரவுக்காவலுக்கு செல்வோர் உணவு முடித்து ஊரடங்கிய பின்பே செல்வது வழக்கம் என்பதால் இருட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஆள்நடமாட்டமே இல்லை.


புலிப்பட்டி ஊரானது வயல்களால் சூழப்பட்டு நடுவில் அமைந்து இருந்தது. மணிமுத்து ஆறு ஊருக்கு கிழக்கே, தென்வடலாய், ஒதுக்குப் புறமாய் ஓடிக்கொண்டு இருந்தது. ஆற்றின் கரையில் பாறையின் மேல் அமைந்து இருந்த அகத்தியர் கோவில் என்று அழைக்கப்படும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலும், ஊருக்கு நடுவே அமைந்திருந்த அம்மன் கோவிலும், மந்தை வாசலில் இருந்த வடக்கு எல்லை அம்மன் கோவிலும் மற்றும் ஆற்றுக்கு செல்லும் வழியில் வலதுபுறத்தில் வயல்களுக்கு நடுவில் அமைந்து இருந்த ஊத்துக்குழி சிவன்கோயிலும் காலம்காலமாக புலிப்பட்டி பண்ணையார் குடும்பத்தின் பொறுப்பிலே இருந்து வந்தன.



பண்ணையார் குடும்பம் பாரம்பரியமானது. ஒரு காலத்தில் புலிப்பட்டி ஊரும், ஊரைச் சுற்றி இருந்த வயல்கள், தோப்புகள் முழுதும் அவர்களுக்கே சொந்தமாய் இருந்தது. பல ஊர்களிலும் இருந்து பிழைப்பு தேடி வந்த மக்கள்  தலைமுறை தலைமுறையாக பண்ணையார் குடும்ப வயல்களில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்படி பரம்பரையாக பாடுபட்டு வந்தவர்களது உண்மை உழைப்பை பாராட்டி , பரிசாக அவரவர் வேலை பார்த்த வயல்களையும், தோப்புகளையும் அன்பளிப்பாக பட்டா, பத்திரத்தோடு வழங்கிச் சிறப்பித்த சீர்மிகு குடும்பத்தினர் என்பதால் உள்ளூர் மக்கள் பண்ணையார் குடும்பத்திற்கு பெருமரியாதை கொடுத்து வந்தனர். ஊர்ப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்ப்பு வழங்கும் ஒப்பற்ற பொறுப்பும் கொடுத்திருந்தனர். செல்வத்தில் மட்டும் அல்லாமல் பக்தியிலும், ஒழுக்கத்திலும், கல்வி, கலைகளிலும் சிறந்து இருந்த புலிப்பட்டி பண்ணையார் குடும்ப புகழ் திருநெல்வேலி ஜில்லா மட்டும் அல்லாமல் தென்பாண்டி நாடெங்கும் பரவிப் படர்ந்து இருந்தது.

புலிப்பட்டி ஊரில் அகத்தியர் கோவிலுக்கும், அம்மன் கோவில்களுக்கும் செல்லும் பாதைகள் சிறப்பாக இருந்த போதும் ஊத்துக்குழி சிவன் கோவிலுக்கு மட்டும் வயல்வரப்புகள் வழியேதான் செல்ல முடியும். அறுவடை முடிந்து, கதிரடித்து, களங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கும் காலங்களில் பிரச்சினை இல்லை என்றாலும் வயல்கள் எல்லாம் விளைந்து இருக்கும் போது கால் தவறி விழுந்து விடாமல் கவனமாக செல்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். 

ஏதுமறியா விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்களும், பணத்தாசை பிடித்த வியாபாரிகளும் அதிக மகசூல் ஆசை காட்டி, ஏதேதோ இரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வைத்து, விவசாயமே விஷமாய் போன இந்த காலத்தைப் போல் அல்லாமல், அந்த காலத்தில் பயிர்களில் விழுந்து விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை கட்டுபடுத்துவதற்காக இயற்கைப் பூச்சி விரட்டிகளான ஆமணக்கு, அகத்தி, வெண்டை, கத்தி, அவரை, துவரை, புடல், பாகல், பூசணி, தடியங்காய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி போன்ற செடி, கொடி மற்றும் கீரை வகைகளைப் பெரும்பாலும் எல்லா வயலைச் சுற்றியும், வரப்புகளில் வளர்த்து இருப்பர்.

கார குணத்தோடு, கசப்புத்தன்மையோடு, வழுவழுப்பான அகலமான இலைகளும், பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் மஞ்சள் நிற இனக்கவர்ச்சிப் பூக்கள் கொண்ட மேலே சொன்ன செடி, கொடி மற்றும் கீரை வகைகளால் பயிர்களுக்கு ஆபத்தான பலவிதமான பூச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு, அன்றாடம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைத்து வந்த இயற்கை விவசாயம் செய்து வந்த அந்த காலத்தில் பூச்சி விரட்டி என்றனர். உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல், குறைந்த உடல் உழைப்பில். அதிக லாபம் பார்க்க ஆசைப்படும் இந்த காலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களையும், மருந்துகளையும் பூச்சிக் கொல்லி என்கிறோம். “விரட்டி”, “கொல்லி” என்ற வார்த்தைகளின் மூலமே நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிந்து விடும்.

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலாவது எல்லா விவசாயிகளும் மரபணு மாற்றப்பட்ட நாசக்கார நச்சு விவசாயத்தை விட்டு விட்டு, பெருமை மிக்க நமது பாரம்பரிய விவசாயத்திற்கு மொத்தமாக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு நமது கதைக்குள் வருவோம். ஊத்துக்குழி சிவன்கோயிலுக்கு செல்லும் வழியில் வயல் பயிர்களோடு, வரப்புத் தாவரங்களும் விருத்தியாய் விளைந்து இருக்க, தென்பொதிகை தென்றலோடு சிரித்துப் பேசி, கொத்தும், குழையுமாக, கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த செடி, கொடிகளில் இருந்து கீரை, காய்கறிகளை அங்குமிங்கும் ஆள்நடமாட்டம் பார்த்தபடி  பூவும், பிஞ்சும், காயுமாக ஒரு ஜோடிக்கரங்கள்  அவசரம், அவசரமாக பறித்துக் கொண்டு இருந்தன.

( தொடரும் )


No comments: