Monday, November 30, 2015

கிடா வெட்டு – இறுதி பாகம்





பாகம் 10 - கிடா வெட்டு – இறுதி பாகம்


போலிஸ் ஸ்டேஷனிலிருந்து வெளிவந்து கல்லிடையில் சில ஆட்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்ற புலியாண்டி இரவு வீடு திரும்ப வில்லை. அலைபேசியில் அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை. தெரிந்தவர்களிடம் போன் செய்து விசாரித்தும், இரண்டு நாட்களாக பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் இல்லாததால் மறுநாள் மாலை ஸ்டேஷனில் கம்ளைண்ட் கொடுக்கப்பட்டது. புலியாட்சியும், புலிபதியும் அம்பையில் புலியாட்சியின் மனைவியின் தங்கை வீட்டில் தங்கி இருந்ததை கண்டுபிடித்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, லாக்கப்பில் போட்டு விட்டனர். 

தொடர்ந்து இரண்டு நாள் தேடியும், புலிபதியிடம் தொடர்ந்து விசாரித்தும் ஏதும் தகவல் கிடைக்கவில்லை. புதனன்று மாலை புலியான் போன் செய்து, ‘சித்தப்பா, அப்பா வீட்டுக்கு வந்துட்டு…’ என்று கூற, ’சரிப்பா. நாளைக்காலைல நா வந்து பாக்கேன்னு சொல்லு’ என்றான் புலிமுத்து.

மறுநாள் வியாழன் காலை பதினொரு மணி அளவில் புலிப்பட்டி சென்றபோது மீண்டும் பரபரப்பு. புலியாண்டி வந்து விட்டதால் இரவு ஸ்டேஷனில் இருந்து பிணையத்தில் விடப்பட்டு வெளிவந்த புலிபதி, அதிகாலையில் வயலுக்குச் சென்ற புலியாண்டியை, பின்னால் இருந்து கம்பால் தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டானாம். மறுபடியும் ஸ்டேஷன். கம்ப்ளைண்ட். அதன்பின் புலியாண்டியும் தலைமறைவு. வியாழன்,வெள்ளி இரண்டு நாளும் புலியாண்டியை அலைபேசியில் அழைத்தாலும் எடுத்துப் பேசவில்லை. அவன் குடும்பத்தினருக்கும் எப்போதும் போல் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.

சனி மாலை ஆறு மணி அளவில் புலியாண்டியில் அலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேசிய புலிமுத்து,’ எண்ணே, என்ன ஆச்சு.எங்க இருக்கீங்க..’ என்று விசாரிக்க, ‘தம்பி, படையல் போட்ட ஆளு மறுவாரம் போய் தேங்காய், பழம் உடைக்கணும்… நாளைக்கு காலைல ஏழு மணிக்கு மணிமுத்தாறு செக்போஸ்ட் வந்துரு… நான் அங்க நிக்கேன்… வெயிலுக்கு முன்னே ரெண்டு பேரும் போய் சாமிய கும்பிட்டு வந்துடுவோம். மத்த விவரமெல்லாம் நேர்ல பேசிக்கிடுவோம்’ என்றான் புலியாண்டி.

மறுநாள் காலை ஏழு மணி அளவில் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு சென்ற புலிமுத்துவின் பைக்கில் ஏறிக்கொண்ட புலியாண்டி கோயில் போகும்வரை ஏதும் பேசவில்லை. கோயிலுக்குச் சென்று, ஆற்றில் குளித்து, எல்லா சாமிகளுக்கும் தேங்காய், பழம் உடைத்து தீபாராதனையும் காட்டி, கடைசியாக புலியாண்டி சுவாமி முன் வந்து வணங்கி நின்றபோது, ‘நான் அப்படி என்ன பாபம் செஞ்சேன்… இந்த பயல்வுளால எனக்கு ஏன் இந்த பாடு.., என்னை ஏன் பாடாபடுத்துறானுங்க.. என் குடும்பத்துக்கு நிம்மதியே கிடையாதா..’ என்று அழுது அரற்றிய புலியாண்டியை அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தான் புலிமுத்து.

‘எப்பா..அவனுவோ  சாப்பிட உட்கார்ந்த இடத்துல ஆள் சரியா பரிமாறலன்னா, நானாப்பா காரணம்… சரியா சாப்பிடலை… வீட்டுல கொண்டுபோய் சாப்பிட கறி தான்னு கேக்கானுவளே… கோயில்ல இருந்து கறி கொண்டு போகக் கூடாதுன்னு இவனுவளுக்குத் தெரியாதாப்பா…. கோயில் நடைமுறையை சொன்னது குத்தமாம். அவனுவளை அவமானப் படுத்திட்டேனாம். இதுக்குத் தான்பா அப்பனும், மகனும் என்னை இழுத்துப் போட்டு வெட்டணும்ன்னு சொல்லிட்டு திரியுதானுவோ…. ‘ என்று பிரச்சினைக்கான காரணத்தைப் பொட்டென போட்டு உடைத்தான் புலியாண்டி.

‘வியாழக்கிழமை காலைல தலைல அடிச்சு, கீழே தள்ளிட்டு சொல்லுதான், குடும்பத்துல பெரியவன் எங்கப்பா இருக்கும்போது நீ எப்படி கோயில்ல கிடா வெட்டலான்னு கேக்கான்.. இது என்ன என் வீட்டு விசேஷமாப்பா.. அப்படி அவன் அப்பன்தான் வெட்டணும்ன்னா உன்ட்ட சொல்லியிருக்கலாம்… இல்லை வேற யார்ட்டயும் சொல்லி என்கிட்ட சொல்லியிருந்தா காலைலே அவனையும் என்னோடவே கூப்பிட்டுட்டு போய் கிடா வெட்ட வச்சுருப்பேன். வயக்காட்டுல மருந்தடிச்சுட்டு ரெண்டு மணிக்கு கோயிலுக்கு வந்துகிட்டு இவனுவோ பேசுறது நியாயமா.. என்னைக் கொல்லாம விடமாட்டானாம். என்னைக் குத்தணும்ன்னு எப்பவும் கையிலே கத்தியோடதான் திரியுதானாம். அன்னைக்குக் கூட என் தலைல கல்ல தூக்கி போடப்பாத்தான். எப்படியோ எந்திச்சு ஓடினதாலே பொழைச்சேன்.’

‘சொத்துதான் பிரச்சினைன்னா என் சொத்தை வேணா அவனுவோளே எடுத்துகிட்டும். அவனுவோ  கொடுக்கிறதை நான் வாங்கிக்கிறேன். என் வழிக்கு வராம இருந்தா அதுவே கோடி புண்ணியம். எத்தனை நாளு இவனுவளுக்குப் பயந்து, உயிரைக் காப்பாத்த, நான் கண்டவன் தோட்டத்திலேயும் ஒளிஞ்சு கிடக்கமுடியும்…‘அண்ணன், தம்பிங்க இன்னைக்கு ஆட்டுக்கறிக்கு அடிச்சுக்கிடுவானுங்க… நாளைக்கு கோழிக்கறிக்கு கூடிக்கிடுவானுங்க…’ ன்னு சொல்ற ஊர்க்காரப் பயல்வோ எவனும் பிரச்சினையை பேசி முடிக்க வர மாட்டக்கானுவளே… என மனம் உடைந்து பொறுமியவனை, ‘எண்ணே, நமக்கு சாமிதான் துணை.. இந்த புலியாண்டி சாமியும் எல்லாத்தையும் பாத்துகிட்டுதானே இருக்கார். நல்ல தீர்ப்பு கொடுப்பார். நீங்க கவலைப்படாதீங்க… நான் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஏதும் பேசித் தீர்க்க முடியுமான்னு பாக்குறேன். என்று கூறி அழைத்து வந்து புலிப்பட்டியில் அவன் வீட்டில் விட்டுச் சென்றான் புலிமுத்து.

இதற்குமேல் காலம் தாழ்த்தினால் பிரச்சினை மேலும் பெரிதாகி,வெட்டு,குத்தாகி விடும் என்பதனால் பின் அங்கிருந்து நேராக புலியாட்சியின் வீட்டுக்குச் சென்று புலிபதியிடம் பேசி என்ன பிரச்சினை, ஏது பிரச்சினை என்று விசாரித்து, ‘கோயில்ல நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பேத்து மன்னிப்பு கேட்டுக்கிறேன், இனிமே இது விஷயமா புலியாண்டி அண்ணன்ட்ட ஏதும் பிரச்சினை பண்ணாதீங்க. உங்களுக்கு நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க.. அதையும் செஞ்சிடுறேன்.’

‘ஓடு மாத்தி, உடைஞ்ச சாமானையும் வாங்கி கொடுத்துடுறோம். போலிஸ் ஸ்டேஷன்ல எங்க மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்கச் சொல்லுங்க. அது போதும். தெனம் போலிஸ்காரனுக்கு கொடுத்து முடியல… என்று ஒருவழியாக சமாதானத்திற்கு வந்தார்கள்  புலியாட்சியும், புலிபதியும்.

அடுத்து வந்த நாட்களில் புலிபதியால், புலியாண்டி வீட்டின் சரிந்த கூரையும், ஓடுகளும் மாற்றப்பட்டு, உடைந்த சாமான்களும் வாங்கப்பட்டு போட்டோக்கள் எடுக்கப்பட்டு போலிஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரிடம்  பிரச்சினை சமாதானமாக பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று கூறி கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது.

குடும்பத்தை தற்போது தன்னுடன் அழைத்துச் செல்லலாமா, அல்லது கடந்த ஒரு வருடமாக அம்பையிலே படிக்கும் மூத்த குழந்தையின் இந்த கல்வி ஆண்டு முடிந்து அழைத்து செல்லலாமா என்ற குழப்பத்திலே இருந்த புலிமுத்து  கடைசியில் அவனுக்கு மட்டும் டிக்கெட் போட்டுக் கொண்டு அந்த வார இறுதியில் விடுமுறை முடிந்து தனியாகவே மலேஷியா திரும்பிவிட்டான்.  

தொலைந்த அலைபேசி குறித்து தகவல் ஏது இல்லாததால் மலேஷியா வந்தவுடன் புதிய எண்ணுடன் புது அலைபேசியும் வாங்கி வீட்டுக்கும் புதிய எண்ணை தெரிவித்துவிட்டான். அடுத்த வாரம் வெள்ளியன்று காலை பத்து மணி அளவில் புலிமுத்துவை அலைபேசியில் அழைத்த அவனது மனைவி,’ஏங்க.. உங்க புலியாண்டி அண்ணன் போன் பண்ணாங்க… தம்பி இருக்கானா, ஊருக்குப் போயிட்டானானு கேட்டவங்ககிட்டே நீங்க அவசரமா கிளம்பி போன விபரம் சொன்னேன். சரி நான் பேசிக்கிறேன்னு சொன்னவங்க உங்க பழைய நம்பருக்குப் போட்டிருப்பாங்க போல.. நம்பர் கிடைக்கலைன்னு திருப்பி போன் பண்ணி சொன்னாங்க.’

‘நீங்க அவங்களுக்கு போன் பண்ணி என்ன , ஏதுன்னு கேட்டுக்குங்க’ என்ற போது ‘ஆஹா..இப்போது என்ன பிரச்சினையோ… யார், யாரை அடிச்சானோ..’ தெரியவில்லையே என்று மனம் குழம்பி யோசிக்க ஆரம்பித்தான் புலிமுத்து. 

( முற்றும் )

Saturday, November 28, 2015

கிடா வெட்டு - பாகம் 9




பாகம் 9 – என்னாச்சு…ஏதாச்சு…ஏதேதோ ஆயாச்சு…

ஒரு வழியாக சாப்பாட்டுப் பந்திகள் முடிந்து வந்தவர்கள் எல்லோரும் அணி, அணியாய் அவரவர் வந்த வேன்களில் ஏறிக்கிளம்பிவிட தான் மட்டும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி தனது குடும்பத்தவர்களையும் நான்கரை மணி அளவில் வீட்டிற்கு அனுப்பிவிட்டான் புலிமுத்து. மீதமிருக்கும் சாப்பாடு, பாத்திரங்கள் மற்றும் கோயிலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்துவது போன்ற காரியங்களுக்காக இருந்த புலியாண்டி, அவனது இளையமகன் புலியான் மற்றும் சமையல் குழு உறுப்பினர்கள் வந்த வேனைத் தவிர அனைத்து வாகனங்களும் சென்று விட்டன.

கோயிலில் படையல் போட்டு மீதமிருக்கும் உணவுப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகக் கூடாது என்பதால் கொஞ்சம் சோற்றை மீன்கள் சாப்பிடும் வகையில் ஆற்றில் கொட்டிவிட்டு, மற்றவற்றை காட்டில் வாழும் குரங்குகளும், மான்களும், காட்டுப்பன்றிகளும், ஆற்றில் நீர் அருந்த வரும் மற்ற விலங்குகளும் சாப்பிடும் வகையில் ஆற்றங்கரையோரம் தட்டிவிட்டு எல்லாப் பாத்திரங்களையும் ஆற்றில் போட்டு நன்றாக தேய்த்து கழுவினர் சமையல் குழுவினர். 

சமையல் செய்த இடத்திலிருந்து காற்றில் கங்குகள் பறந்து, காட்டில் தீ பரவிவிடக் கூடாது என்பதால் சமையல் செய்த  அடுப்புக்கற்கள் அனைத்திலும் ஆற்றிலிருந்து குடம், குடமாக நீர் எடுத்து வந்து விட்டு கரி, கங்குகள் அனைத்தையும் நெருப்போ, புகையோ இல்லாமல் அணைத்து, பின் சூடு ஆறியவுடன் அள்ளி ஆற்றில் போட்டுவிட்டு இலை, தழை, குப்பைகள், சமையல் மற்றும் சாப்பாட்டுக்கழிவுகள் இல்லாமல் கோயிலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பெருக்கி, சிமெண்ட் தளங்களை தண்ணீர் விட்டு கழுவியும், மற்ற இடங்களில் நீர் தெளித்தும் விட்டனர் பரிமாற வந்தவர்கள்.

பாத்திர, பண்டங்களை வேனில் ஏற்றிவிட்டு, எல்லோரும் ஏறி அமர்ந்தபின் புலியாண்டியும், புலிமுத்துவும், புலியானும் இன்னொரு முறை சென்று அனைத்துக் கோயில்களிலும் சாமி கும்பிட்டு விட்டு, ஆற்றங்கரை, அடுப்பங்கரைகளில் கங்குகள் சுத்தமாக அணைந்துவிட்டதா என்பதை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்து உறுதி செய்துவிட்டு, புலியாண்டி சுவாமியின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ஆசி பெற்று, திருநீறு அள்ளி பூசி வேனில் ஏற வண்டி கோயிலை விட்டு கிளம்பும் போது இருட்டத் தொடங்கிவிட்டது.

வனச்சோதனைச் சாவடியில் வண்டி நின்றபோது புலியாண்டியும், புலிமுத்துவும் மட்டும் இறங்கி சென்று, அவர்களுக்கு கொடுப்பதற்கு உணவுப் பொருட்கள் ஏதும் இல்லாத காரணத்தால், ஐநூறு ரூபாய் பணம் அன்பளிப்பாய் கொடுத்து நன்றி சொல்லி விடைபெற்று வந்தார்கள்.  மணிமுத்தாறு அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் புலியானின் பைக் கிடப்பதாகவும், அதிலே அவனுடன் தானும் சென்று விடுவதாக புலியாண்டி கூறியதால், அவர்கள் இறங்கியதும் புலிப்பட்டி ஊருக்குள் செல்லாமல் கல்லிடை செல்லும் புறவழிச்சாலை வழியாக அம்பை நோக்கி வண்டி விரைந்தது.

கல்லிடையில் சமையல்காரர்கள் மற்றும் பரிமாற வந்தவர்கள் இறங்கும்போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிப்பணத்தை கொடுத்துவிட்டு வாடகைப் பாத்திரக்கடையில் பாத்திரங்களை ஒப்படைத்துவிட்டு வீடுவந்து சேரும்போது நேரம் இரவு மணி எட்டை நெருங்கிவிட்டது. வீட்டில் வந்து மேல், கால் கழுவிவிட்டு, இரவு உணவையும் முடித்தபின் ஓய்வாக அமர்ந்து குடும்ப உறுப்பினர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தால் புலியாண்டி மகன் புலியான்.

போன் எடுத்தவுடன் பதட்டத்துடன், ‘சித்தப்பா ,வீட்டுக்குப் போயிட்டீங்களா’ என்று கேட்க, ‘ஏண்டா, என்னடா..’ என்று புலிமுத்து கேட்டான்.

‘இங்கே ஒரே பிரச்சினை…’

‘என்னடா பிரச்சினை…யார், யாருக்கு பிரச்சினை…விபரமா சொல்லு….’

‘கோயில்லயிருந்து வந்த, நாங்க வீட்டுக்கு வந்து பார்த்தா, வீட்டுல சாமான் எல்லாம் இறைஞ்சு கிடக்கு. வீட்டுக்கூரை, ஓடெல்லாம் உடைஞ்சு கிடக்கு. என்ன விஷயம்ன்னு கேட்டா சாயந்திரம் அஞ்சரை மணி வாக்குல புலிபதி தண்ணி போட்டுகிட்டு வீட்டுக்கு வந்து, எங்கம்மாட்டயும், அண்ணன்ட்டயும் தகராறு பண்ணியிருக்கான்., சாமானெல்லாம் அள்ளி வீசி, ஓட்டையெல்லாம் இழுத்து சரிச்சு விட்டு எங்கம்மாவையும், அண்ணனையும் வேற அடிச்சிருக்கான். எங்க அண்ணன் தடுக்கும்போது குடிபோதையிலே புலிபதியே கீழே விழுந்துட்டு, எங்கண்ணும், அம்மாவும்  சேர்ந்து அவனை அடிச்சு கீழே தள்ளிட்டதா போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டானாம். ‘

‘எங்கண்ணனையும், அம்மாவையும் விசாரிக்க வந்த போலிஸ் நடந்த கதையே வேறங்கிறதாலே, ஒடைஞ்ச ஓடு, சரிஞ்ச கூரை, வீட்டுச்சாமான் எல்லாத்தையும் போட்டோலாம் எடுத்துக்கிட்டு இருக்கும்போதுதான் நானும் ,அப்பாவும் வீட்டுக்கு வந்தோம்.  வேற இடத்துக்கு ரவுண்ட்சுக்கு போயிருந்த இன்ஸ்பெக்டர் விசாரிக்கதுக்காக எல்லாரையும் ஸ்டேஷனுக்கு வரச்சொன்னதனாலே குடும்பதோட  ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க...'

‘சரிப்பா. நான் ஏதும் ஸ்டேஷனுக்கு வரணுமா..’

‘வேண்டாம் சித்தப்பா. இன்ஸ்பெக்டர் எங்களை விசாரிச்சுட்டு, கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொன்னவரு, ‘புலிபதியை விட்டு உடைஞ்ச ஓடு, சாமானெல்லாம் மாத்தி கொடுக்கச் சொல்லி பேசுதேன். ஒத்து வந்தான்னா கேசில்லாம பேசி முடிச்சுடலாம். எடக்கு, மடக்கா ஏதும் பேசினா ரெண்டு இழுப்பு இழுத்து கேஸ் பதிஞ்சி உள்ளே தூக்கி போட்டுடறேன். உங்களுக்கு எப்படி வசதி’ன்னு கேட்டார். 'எங்கப்பாவும் நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்ன்னு சொல்லிட்டதனாலே நாளைக்குப் பகல்ல வாங்க பேசி முடிச்சுடுவோம்ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாரு..

சரி இப்போ எங்கே இருக்கீங்க….உங்கப்பாவை எங்கே… கூட இருந்தா போனைக் குடு. நான் பேசுதேன்.

இல்லை சித்தப்பா. நான், அண்ணன், அம்மா ஸ்டேஷன்லயிருந்து வீட்டுக்கு வந்துட்டோம். எங்கப்பா கல்லிடையிலே ஒரு ஆளைப் பாத்துட்டு வர்றேன்னு சொல்லுச்சு.

சரிப்பா…நா உங்க அப்பா நம்பர்லே பேசிக்கிடுதேன்…

பலமுறை அழைத்தும் புலியாண்டி அழைப்பை எடுக்காததால் சரி.காலையில் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து படுத்தவன் அலுப்பில்  நன்கு அசந்து உறங்கி விட்டான். மறுநாள் காலையில் தொடர்ந்து முயற்சி செய்தும் புலியாண்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், புலியானை அழைத்து 'என்னப்பா, உங்கப்பா போன் பண்ணா எடுக்கவே மாட்டக்கு... ராத்திரி எப்ப வீட்டுக்கு வந்துச்சு..' என்று கேட்டதற்கு புலியான் கூறிய பதில் அதிர்ச்சியை தந்தது.

ஆம். ராத்திரியில் இருந்து புலியாண்டியை காணவில்லையாம். புலியாட்சி, புலிபதியும் இரவில் இருந்தே யார் கண்ணில் படாததாலும், அவர்கள் வீடும் பூட்டப்பட்டு இருந்ததாலும், 'என்னாச்சோ..., ஏதாச்சோ...' என்று எல்லோருக்கும் போல் புலிமுத்துவிற்கும் பதட்டம் ஏற்பட்டது.

( தொடரும் )

இறுதி பாகம்


Friday, November 27, 2015

கிடா வெட்டு - பாகம் 8


பாகம் 8 - காது குத்தும், படையல்களும்…

காதுகுத்து தினமான ஞாயிறன்று காலை எட்டு மணிக்கு அம்பை ஆசிரியர் குடியிருப்பிற்கு இரண்டு வேன்களும் வந்துவிட குடும்ப உறுப்பினர்கள், முந்திய தினமே வீட்டிற்கு வந்திருந்த சொந்தக்காரர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் செல்லும் வழியில் சில உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு மணிமுத்தாறு வனச்சோதனை தாண்டி கோயிலை அடையும்போது காலை மணி ஒன்பது தாண்டிவிட்டது. புலிப்பட்டியிலிருந்து வரும் வேன்களும் ஒன்றன்பின் ஒன்றாய் வர அம்பையிலிருந்து வந்தவர்கள், புலிப்பட்டி உறவினர்கள் அனைவரையும் காலை உணவு உண்ண ஏற்பாடு செய்தான் புலிமுத்து.

காலை உணவாக பொங்கல், சாம்பார், கேசரி செய்திருந்தார்கள். தனித்தனி இடங்களில் சைவ சமையல் குழு காய்கறிகளை அரிந்து கொண்டும், அசைவ சமையல்குழு ஏற்கனவே வெட்டப்பட்டு, தோல் உரிக்கப்பட்டிருந்த கிடாக்களை துண்டு போடும் பணியிலும் பரபரப்பாக இருந்தனர். காலை உணவு பந்தி, சாமிகள் அலங்காரம், சமையல் மேற்பார்வை என அனைத்து இடத்திலும் வளைய வந்து கொண்டிருந்த புலியாண்டி, காலை ஆறரை மணிக்கெல்லாம் கோயிலுக்கு வந்துவிட்டதாகவும், வந்தவுடன் சமையல் சாமான்களையெல்லாம் பிரித்து கொடுத்துவிட்டு, ஆற்றில் கிடாக்களை குளிப்பாட்டி, புலியாண்டிக்கு பூஜை போட்டு மூன்று கிடாக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொங்கல் விழாமல் ஒரே வெட்டாக  வெட்டி விட்டதாகவும் தெரிவித்தான்.

சொந்தமாக பைக், ஆட்டோ, கார் என வந்திருந்த அனைத்து உறவினர்களும்,நண்பர்களும் காலை உணவு சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாவிதரும், தட்டரும் வந்துவிட குழந்தைக்கு மொட்டை அடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பத்தரை மணி அளவில் மொட்டை அடித்து சுடுநீரில் குழந்தையை குளிப்பாட்டியபின் பதினொரு மணிக்கு புலியாண்டி கோயில் வளாகத்தில் வைத்து காதும் குத்தியாயிற்று. மொட்டை அடிக்கும்போது சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காது குத்தும்போது அலறித் துடித்துவிட்டான்.

காது குத்தி கம்மல் போட்டபின் காயம் ஆகாமல் இருக்க, இரு காதுகளிலும் சுண்ணாம்பு தடவி, மொட்டைத் தலையிலும் சந்தனம் தடவி, அழுத குழந்தையை சமாதானப்படுத்தியபின் வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும்  தனித்தனியாகவும், குழுக்களாகவும் போட்டோவும், வீடியோவும் எடுக்கப்பட்டது. அதற்குள் சைவச்சாப்பாட்டு வகைகள் தயாராகி விட்டதால் சிவலிங்கத்திற்கும், விநாயகருக்கும், முருகருக்கும் அகத்தியருக்கும் வடை, சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் சைவச்சாப்பாட்டு வகையறாக்களோடு தனித்தனியாக சைவப்படையல் போடப்பட்டு தீபாரதனையோடு, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு முடிக்கும்போது நேரம் மதியம் ஒன்று தாண்டிவிட்டது.

அடுத்து புலியாண்டி சுவாமிக்கு அசைவப்படையல் இடுவதற்காக புதிய  வேட்டியை விரித்து, அதன்மேல் பெரிய, பெரிய இலைகள் இட்டு சாதத்தை கொட்டி, மூன்றடி நீளம், இரண்டடி அகலம், ஒரு அடி உயரத்திற்கு செவ்வக வடிவில் பரப்பி, அதன் மேல் வெள்ளைச்சோறு வெளியே தெரியாத அளவு கிடாக்கறி, குழம்பு, அவியல், பூசணிக்காய் கூட்டு, அகத்திக்கீரைப் பிரட்டல், இரத்தப்பொரியல் வகையறாக்களை இட்டு அவித்த முட்டைகள் அடுக்கி, தயிர்,நெய் விட்டு நெய்ப்பந்தங்கள் ஏற்றி படையலைச் சுற்றி பூமாலைகள் அணிவிக்கப்பட்டன. 

தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து ஊதுபத்தி ஏற்றி பஞ்சவாத்திய முழக்கங்களோடு, புலியாண்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்காரங்கள் முடித்து தீபாரதனையோடு சிறப்பு பூஜை செய்து முடித்தபோது பலரும் அருள் வந்து ஆடினர். கோயிலுக்கு வந்திருந்தவர்கள், சாமியாடியவர்களிடம் திருநீறு பூசி, ஆசி வாங்கி அருள்வாக்கு கேட்டுக்கொண்டும், ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர்.

சைவ, அசைவ சாப்பாட்டு வகைகளை தனித்தனி இடங்களில் பரிமாற ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும்போதுதான் புலிபதி தந்தை புலியாட்சியுடன் பைக்கில் வந்து இறங்கினான். வயலில் மருந்து இடும் வேலை நடந்து கொண்டு இருந்ததால் முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டதாக கூறியவர்கள் புலியாண்டியும், அவனது மகன்களும் அங்கும், இங்கும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதை வெறுப்புடன் பார்ப்பதை புலிமுத்து கவனித்தான். 

பந்திக்கு இலை போட்டு அனைவரையும் சாப்பிட அழைத்து அணி, அணியாக சாப்பிட்டு முடிக்க, முடிக்க சைவ, அசைவ பந்திகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்து கிளம்புவர்களை வழி அனுப்ப கோயிலுக்கு வெளியே புலிமுத்து நின்று கொண்டிருந்தபோது அசைவப்பந்தி நடைபெறும் இடத்தில் கூச்சல், குழப்பமாக இருந்தது. சில நிமிடங்களில் புலியாட்சியோடு, புலிபதி விருட்டென பைக்கில் ஏறிக் கிளம்பிச் சென்றதை தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த புலிமுத்து கவனிக்கத் தவறவில்லை.

கிளம்பியவர்களை வழி அனுப்பிவிட்டு நேராக பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்று என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது புலியாட்சியும், புலிபதியும் புலியாண்டியிடம் தகராறு செய்ததாக அருகிலிருந்தவர்கள் கூற பந்திக்கு சாப்பாட்டுச் சாமான்களை வழங்குவதில் பரபரப்பாக இருந்த புலியாண்டியிடம் விசாரித்தபோது அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.

( தொடரும் )

பாகம் 9

Thursday, November 26, 2015

கிடா வெட்டு - பாகம் 7




பாகம் 7 – பரபரப்பான ஏற்பாடுகள்

மறுநாள் ஞாயிறன்று காலையும், மாலையும் அம்பையில் இருந்த உறவினர்கள் வீடுகளில் மனைவியோடு சென்று சொல்லி வந்தான். நெல்லை, தென்காசி போன்ற ஊர்களிலும், மற்ற வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் அலைபேசியில் விபரம் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். திங்களன்றும், விடுபட்டவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் நேரிலும், அலைபேசியிலும் அழைப்பு விடுப்பதிலுமே பொழுது போய் விட்டது. நடுவில் புலியாண்டிக்கு போன் செய்து திருநெல்வேலி போவதற்காக செவ்வாய் காலை ஒன்பது மணிக்கு கல்லிடைக்குறிச்சி வந்துவிடச் சொல்லிவிட்டான்.

செவ்வாயன்று காலை அம்பை வீட்டிலிருந்து மகேஷின் காரில் மனைவியோடு கிளம்பி, கல்லிடைக்குறிச்சியில் புலியாண்டியையும் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியை அடையும்போது மணி காலை மணி பத்தரை. முதலில் புலியாண்டியை வண்ணாரப்பேட்டை ஆரெம்கேவி ஜவுளிக்கடையில் இறக்கி தேவையான ஜவுளி எடுத்து பில் வாங்கி வைக்குமாறும், ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவதாகவும் கூறி விட்டு டவுணுக்கு வழக்கமாக செல்லும் நகைக்கடைக்குச் சென்று காதுகுத்துக்கு தேவையான கம்மலை வாங்கிக் கொண்டு திரும்பினர்.

அதற்குள் ஜவுளிக்கடையில் அனைத்து சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் வேண்டிய வேட்டி, பரிவட்டம், பட்டுச் சேலை மற்றும் படையல் போடும் போது கீழே விரிப்பதற்கும், பந்தம் கொளுத்துவதற்கும் தேவையான காடா வேட்டிகள் வகையறாக்களையும் வாங்கி புலியாண்டி பில் போட்டு வைத்திருக்க, அனைத்து பில்களுக்கும் பணம் செலுத்தி ஜவுளிகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது மதிய உணவு நேரம் ஆகிவிட்டதால், அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நெல்லையிலிருந்து அம்பை நோக்கி கிளம்பினர்.

வண்டியில் பேசிக்கொண்டே வந்த போது, ‘எண்ணே, நம்ம ஊரைத்தவிர எல்லாருக்கும் சொல்லியாச்சு. நம்ம ஊர்ல எப்ப சொல்லலாம். அதே மாதிரி அம்பைக்கு ரெண்டு வேன் சொல்லியிருக்கேன். நம்ம ஊருக்கு எத்தனை வேன் சொல்லணும்ன்னும் சொல்லியிருங்க.’. என்று கேட்ட புலிமுத்துவிடம்,

‘நாளைக்கு மதியத்துக்கு மேல ஊருக்கு வா. எல்லாரும் வயலுக்குப் போயிட்டு வந்து வீட்டுல இருப்பாங்க. சொல்லிருவோம். நம்ம ஊருக்கு ஒரு தெருவுக்கு ஒரு வண்டின்னாலும் நாலு தெருவுக்கும் சேத்து நாலு வண்டி விட்டுற வேண்டியதுதான். ' என்றான் புலியாண்டி.

உடனே ‘சரி மகேஷ். அம்பைக்கு மாதிரியே ஊருக்கும் பெரிய வேன்களா நாலு ஏற்பாடு பண்ணிடுங்க. கூட ரெண்டு வேனும் தயாரா வச்சுக்கங்க. தேவைப்பட்டா கூப்பிட்டுக்கலாம். அப்படியே நல்ல ஸ்டூடியாக்காரனுக்கு சொல்லி போட்டோ, வீடியோ எடுக்கவும் ஏற்பாடு பண்ணிடுங்க’ என்று வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மகேஷிடம் தெரிவித்தான் புலிமுத்து.

தேவையான சில ஜவுளிகளை எடுத்துக்கொண்டு, கல்லிடையில் புலியாண்டி இறங்கிவிட அம்பை வந்து மற்றவற்றை இறக்கி வைக்கும்போது மணி மூன்று ஆகிவிட்டது. மறுநாள் மதியஉணவிற்கு மேல் புலிப்பட்டிக்கு சென்று தெற்குத் தெருவில் ஆரம்பித்து, கிழக்குத்தெரு, மேற்குத்தெரு வழியாக வடக்குத்தெரு வரை சொல்லி முடிக்கும்போது நேரம் இருட்டி ஏழுமணி ஆகிவிட்டது. அனைவரது வீட்டிலும் வேன் ஏற்பாடு செய்திருக்கும் விபரமும் கூறி எல்லோரும் கண்டிப்பாக வந்து குழந்தையை ஆசிர்வதித்து புலியாண்டி சாமியின் அருளையும் பெறவேண்டும் என்று கூறி வந்தார்கள். புலியாட்சியின் வீட்டில் சொல்லப்போகும் போது மட்டும் புலியாண்டி வீட்டிற்குள் வராமல் தெருவில் நின்று கொண்டான்.

மறுநாள் வெள்ளிகிழமை வீட்டிற்கு ஸ்டூடியோவிலிருந்து வந்து குழந்தையையும், குடும்பத்தாரையும் போட்டோ, வீடியோ எடுத்ததில் அன்றைய பொழுது கழிந்தது.

சனிக்கிழமை காலை அம்பை வாரச்சந்தைக்குச் சென்று காய்கறிகள், தேங்காய், பழக்குலைகள்,  வாழை இலை வாங்கி ஒரு வண்டியில் ஏற்றி, அப்படியே கல்லிடை மளிகைக் கடையில் மளிகைசாமான்களையும், வாடகை பாத்திரக்கடையில் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களையும் ஏற்றிக் கொண்டு நேராக புலிப்பட்டி போய் புலியாண்டி வீட்டில் இறக்கிவைத்தனர். ஏற்கனவே மூன்று கிடாய்களையும் வாங்கி அங்கே கட்டி இருந்தார்கள்.

மறுநாள் காலை காதுகுத்தன்று அதிகாலை முதல்பஸ்சில் சமையல் குழுவும், பரிமாறுபவர்களும் வந்தவுடன் அனைத்து சாமான்களோடும், சமையல்கார குழுவோடும், தனி வண்டியில் புலியாண்டி கிளம்பி முதலில் கோயிலுக்கு செல்வதாக ஏற்பாடு. மற்றவர்களுக்கு காலை எட்டரை மணி அளவில் வேன் ஏற்பாடு செய்திருந்தது. கோயிலுக்குச் சென்றதும் சைவசமையல் குழு முதலில் காலை உணவாக பொங்கல், சாம்பார் செய்துவிட்டு பின் சைவப்படையலுக்கு தயார் செய்யும் வேலையில் இறங்கி விடுவதாகவும், அந்த நேரத்தில் கிடாக்களை வெட்டி , கறித்துண்டுகளாக்கி அசைவ சமையல் குழுவும் வேலையில் இறங்கிவிடுவதாகவும் ஏற்பாடு.


மதியம் பனிரெண்டு மணிக்கு சைவப்படையல் முடித்து, ஒரு மணிக்குள் அசைவப்படையல்களும் முடித்து உடனே சாப்பாடு பரிமாறி மூன்று மணிக்குள் பந்திகளை முடித்துவிட்டு அனைவரும் நாலுமணிக்குள் கோயிலில் இருந்து கிளம்பி விடவேண்டும் என்று ஏற்கனவே புலியாண்டியும், புலிமுத்துவும் பேசியிருந்தனர். காலையில் கோயில் சென்றவுடன் தான் உள்பட யார் வருவதற்கும் காத்திராமல் புலியாண்டியையே கிடாக்களை வெட்டிவிடச் சொல்லி விட்டு சாமான்கள் ஏற்றி வந்த வண்டி மீண்டும் அம்பை செல்வதாக கூறியதால் தன்னையும் ஆசிரியர் குடியிருப்பில் விட்டு விடுமாறு கூறி புலியாண்டியிடம் விடைபெற்று வீடு சென்றான் புலிமுத்து.

( தொடரும் )

பாகம் 8

Wednesday, November 25, 2015

கிடா வெட்டு - பாகம் 6





                                        
பாகம் 6 – பிரச்சினைக்கு என்ன காரணம்…

புலிபதியை பார்த்ததும் புலியாண்டி ஏதும் பேசாமல் வண்டியை விட்டு இறங்கி சிறிது தூரம் தள்ளி முன் சென்று ஒரு மரத்தடியில் நின்று பீடியை பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். ‘என்ன சித்தப்பா… எப்ப வந்தீங்க. தாத்தா, பாட்டி, சித்தி, தம்பி, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க..’ என்று குசலம் விசாரித்த புலிபதியிடம், எல்லாரும் நல்லா இருக்காங்க…நீ எப்படி இருக்கே.. வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா..’ என்று புலிமுத்துவும் விசாரித்தான்.

சிறிது நேரம் விவசாயம், பயிர், நோய், மழை எல்லாம் பேசிய பின், ‘எங்கே மேலே கோயிலுக்குப் போயிட்டு வர்றீங்களா…’ என்று வினவிய புலிபதியிடம், ‘ஆமாப்பா, அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை தம்பிக்கு முடி எடுத்து காது குத்தலாம்ன்னு இருக்கோம். வீட்டுல வந்து சொல்லுவேன். எல்லாரும் கண்டிப்பா வரணும்.’ என்றான் புலிமுத்து.

‘போன வாரம் அம்பை யூனியன் ஆபிஸ் போயிருந்த போது தாத்தாவை போய் பார்த்துட்டு வந்தேன். அப்ப சொன்னாங்க. நீங்க வந்ததும் கோயிலுக்கு செய்யனும்ன்னு… நம்ம வீட்டு விசேஷம். வராம இருப்பேனா… ஏதும் உதவி வேணும்ன்னா எப்போ வேணும்ன்னாலும் கூப்பிடுங்க…’ என்ற புலிபதியிடம் விடைபெற்று வண்டியை ஸ்டார்ட் செய்தவன் புலியாண்டி அருகே நின்று ஏற்றிக்கொண்டு கல்லிடைக்குறிச்சி நோக்கி விரைந்தான்.

ஏற்கனவே மரத்தடியில் ஒதுங்கி நின்ற போது புலியாண்டி சமையல்காரரிடம் போன் செய்து பேசியிருந்ததால் கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் நகராட்சி திருமணமண்டபத்திற்கு வரச்சொல்லி இருந்தார். மரநிழலில் வண்டியை விட்டுவிட்டு ஆக்குப்பறைக்கு (ஆக்கும் அறை - சமையல் செய்யும் இடம் ) சென்று சமையல்காரன் குமாரை சந்தித்த போது, ‘இன்னைக்கு சனிக்கிழமை… யாரு விசேஷம் வைக்கா… ஆள்கள் யாரையும் காணோம்..’ என்று புலியாண்டி வினவ, நம்ம அம்பை ஒன்றியத்துக்கு  மாவட்டத்தலைவர் பதவி கிடைச்ச விருந்து சிக்கன் பிரியாணியும், மட்டன் கிரேவியும்… ஒவ்வொரு ஊரா மீட்டிங் முடிச்சு மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்குத்தான்  மண்டபத்துக்கு வருவாங்களாம். கல்லிடைக்குறிச்சில மீட்டிங் முடிச்சுட்டு வர எப்படியும் ரெண்டு மணி ஆகிடும் போல..’ என்றான் குமார்.

‘ஆளும்கட்சியா..எதிர்கட்சியா…’என்று புலிமுத்து ஆர்வத்தில் கேட்க ,’ரெண்டுமே இல்லை. ஏதோ ஜாதிக்கட்சியாம். வர்ற தேர்தல்ல ஏதாவது ஒரு கட்சி கூட கூட்டணி சேர்றதுக்குத்தான் இவ்வளவு தடபுடலும்…’ என்று பதில் வந்தது.

‘சரிப்பா..நம்ம கதையை பார்ப்போம்..’ என்று கூறி குமாரிடம் விபரம் சொல்லி ஆயிரத்தொரு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து சாமான் லிஸ்ட் எழுதி மறுநாள் கொடுக்கச் சொன்னார் புலியாண்டி.

‘மூணு கிடா… டேஸ்ட் ஏதும் மாறிடாதுல்லா…’ என்று புலிமுத்து கேட்க, ரெண்டு பேரையும் ஆக்குப்பறையிலே டேபிள், சேர் போட்டு சாப்பிட வைத்து, சாப்பிட்டு முடித்த பின் சுவை எப்படி வினவிய குமார், ‘அறுபது ஆடு… டேஸ்ட் ஏதும் வித்தியாசம் தெரிஞ்சுதா… அம்பை தாலுகாவிலே அசைவம் சமைக்குதலே நான்தான் இப்ப டாப்…. தினம் வீட்டுலேயே முன்னூறு பிரியாணி போட்டு கடைகளுக்கு சப்ளை ஆகுது.’ என்று தன் திறமைக்கு சுயசான்றிதழ் கொடுத்தான்.

சாப்பாடும் குறை சொல்ல முடியாதபடி நன்றாகவே இருந்தது.’ கறி எல்லாம் நல்லா பஞ்சு, பஞ்சாக வெந்துருக்கே… வீட்டுல செஞ்சா இந்த டேஸ்ட் வர மாட்டக்கே.. ஏன்…’ என்று கேட்ட புலிமுத்துவிடம், ‘அதெல்லாம் தொழில் ரகசியம்..’ என்று கண்சிமிட்டி சிரித்த குமாரிடம் விடைபெற்றுக் கொண்டு தேரடி வந்து பூக்கடையிலும் அட்வான்ஸ் கொடுத்தனர்.

‘சரி.நான் பஸ்ல ஊருக்குப் போயிடுதேன். நீ நேரா அம்பை போயிடு… நாளைக்கு நான் வந்து சாமான் லிஸ்ட் வாங்கி மளிகைக் கடையிலே கொடுத்துடுறேன். ‘ என்ற புலியாண்டியிடம், ‘சாமிகளுக்கு ஜவுளி அம்பை, கல்லிடையிலே எடுத்திரலாமா.. இல்லை திருனவேலி (திருநெல்வேலி) போகணுமா..’ என்று கேட்டான் புலிமுத்து.

 இங்கே முன்ன மாதிரி கடைவோ இல்லை. உனக்கு திருனவேலி போற சோலி இருந்தா அங்கே போய் எடுத்துருவோம்.’ என்று கூறிய புலியாண்டியிடம், ‘சரி, எப்ப போகலாம்ன்னு நான் வீட்டுக்குப் போய் போன் பண்றேன். வேற யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்கணுமா… பணம் ஏதும் உங்க கையிலே தரவா..’ என்று புலிமுத்து கேட்க ‘ காய்கறி, இலைக்கட்டு, பழமூடுல்லாம் அம்பை சனிக்கிழமை சந்தைலதான் எடுக்கணும். ஏதும் இருந்தா அம்பை, கல்லிடை வந்துட்டு உனக்கு போன் போடுதேன். நீ உடனே வந்துடு..; என்றான் புலியாண்டி.

‘சரி..’ என்று கூறி கிளம்பியவன், ‘எண்ணே, நாவிதருக்கும், தட்டருக்கும் தேதிய உறுதி பண்ணி சொல்லிடுங்க.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம்.’ என்றவாறு வண்டி ஏறி அம்பை வீட்டிற்கு வந்து உண்ட அலுப்பும், பயணக் களைப்பும் போக நன்கு உறங்கினான் புலிமுத்து.

மாலை எழுந்து குழந்தைகளோடு விளையாடியும், தாய், தந்தை, மனைவியோடு அளவளாவியும் பொழுது போக்கியவன்  என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறது, யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது போன்ற விபரங்களையும் கூறினான். ‘திருநவேலில ஏதும் வேலை இருக்கா…’ எனக் கேட்க ‘காதுகுத்துக்கு கம்மலும், ஜவுளியும் எடுக்கப்போகணும்லா...’ என்று கூறிய மனைவியிடம், ‘நாளைக்கு ஞாயித்துக்கிழமை. எல்லாரும் வீட்டுல இருப்பாங்க.. சொல்ல வேண்டியவங்க கிட்டே எல்லாம் முடிஞ்சவரை சொல்லிடுவோம். வசதியைப் பொறுத்து திங்கள், செவ்வாய்ல திருநவேலி போவோம்’ என்று கூறினான் புலிமுத்து.

புலிபதியைப்  பார்த்ததையும், புலியாண்டி ஒதுங்கிப் போனதையும் தந்தையிடம் சொல்லி என்ன பிரச்சினை... ஏது என்று விசாரிக்க, ‘எங்கண்ணனும், மதினியும் இல்லாதனதால, சொத்து பிரிக்கும்போதே புலியாட்சி புலியாண்டியை ஏமாத்தி நிறைய சேர்த்துகிட்டான். வீடும், தொழுவும் அவனுக்குத்தான் பெருசு. வயக்காடும் முதகால் அவனுக்கு. கடைசிக்கால்தான் புலியாண்டிக்கு… '

'இதுபத்தாம புலியாண்டிட்ட இருக்க வயலையும், வீட்டையும் புடுங்கதுக்கு புலியாட்சியும், அவன் பொண்டாட்டியும் அவ்வோ மவன் புலிபதியை தூண்டி விட்டு ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்காங்க… சாமி பாத்துகிடும்ன்னு புலியாண்டி ஒதுங்கிப் போனாலும், அவன் மவனுவோ புலியானும், புலிங்கனும் பொங்கிட்டுத்தான் இருக்காங்க.'

'ஏற்கனவே ரெண்டு,மூணு தடவை புலிபதி புலியாண்டியை அடிக்கப் பாய்ஞ்சிருக்கான். அதான் துஷ்டனைக் கண்டா தூரவிலகுன்னு அவனையும், புலியாட்சியையும் கண்டாலே புலியாண்டி ஒதுங்கிப் போயிடுதான். ஓடுத நாயைக் கண்டா துரத்துற நாய்க்கு கொண்டாட்டம்ன்னு எப்ப பாத்தாலும் இவனுங்க அவன்கிட்டேயே வம்புக்கு நிக்காங்க. இது எங்கே போய் முடியப் போகுதுன்னு தெரியலை.’ என்று விபரம் சொல்லி முடித்தார் புலி மணி.                                                                

( தொடரும் )

Tuesday, November 24, 2015

கிடா வெட்டு - பாகம் 5





பாகம் 5 –  வம்பு வழியில் நிற்கிறது…
                                                                                                                                                 
புலியாண்டி சாமியின் கதையையும், தனது சொந்த ஊர் வரலாற்றையும் கேட்டு சிறிது நேரம் எல்லாக் காட்சியையும் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தவாறு அமர்ந்திருந்த புலிமுத்து இரு கண்களையும் நாலாபுறமும் சுழலவிட்டு கோயிலின் சூழ்நிலையையும், சுற்றுப்புறத்தையும் மீண்டும் ஒரு முறை அளந்தான். 

கையில் கத்தி, கம்போடு ஆறடி உயரத்திற்கும் மேல் ஆஜானுபாகுவான கல்சிலையோடு அந்தக்கால கல்கட்டாய் கட்டப்பட்டிருந்த புலியாண்டி கோயிலின் முன்னே பூஜை செய்யும் போது ஆட்கள் நேர் வரிசையாய் நின்று சாமி கும்பிடவும், அமர்ந்து இளைப்பாறவும் வசதியாக  உயரமான சிமெண்ட் தளத்தோடு, நீண்ட, அகலமான தகர செட் போடப்பட்டிருந்தது. பக்கத்திலே வயிற்றுப் பிள்ளையோடு இறந்த புலியாண்டி சாமியின் மனைவிக்காக சுமைதாங்கி கல்லும் அமைக்கப்பட்டிருந்தது. பிள்ளையார், முருகர், சிவலிங்கம், மற்றும் பொதிகை மலை சித்தரான அகத்தியருக்கும் தனியாக ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.

கோயிலுக்கு சற்றுத்தள்ளி ஆற்றங்கரையருகே சமையல் செய்வதற்காக அடுப்புக்கற்களோடும், தண்ணீர் தொட்டி வசதிகளோடும் ஒரு தகர செட்டும், பந்தி போட்டு பரிமாற வசதியாகவும், சமையல் சாமான்கள், சாப்பாட்டு வகையறா பொருட்களை குரங்குகள் தூக்கிச் செல்லாமல் பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக கதவுகளோடு கூடிய மூன்று அறைகளோடு ஒரு பெரிய தகர செட்டும் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கும், ஆற்றுக்கும் நடுவில் மற்ற சிறு தெய்வங்களின் பீடங்களும், உருவச்சிலைகளும் இருந்த இடத்திலும் மழை பெய்தாலும் பக்தர்கள்  நனையாமல் ஒதுங்கிக் கொள்ள வசதியாக ஆங்காங்கே அகலமான தகர  செட்டுக்கள் அமைக்கப்படிருந்தன.

அடிக்கடி மழை பெய்யும் மலைப்பகுதி என்பதாலும், ஆற்றில் வெள்ளம் வந்தால் பாதிக்காதவாறும், அனைத்து தகர செட்டுகளுமே நல்ல உயரமாகவும், எந்த திசையிலிருந்தும் மழை நீர் சாரல் அடிக்காதவாறும், உள்ளே இருப்பவர்கள் சிறிதும் நனைய வாய்ப்பே இல்லாத விசேஷமான கூரை அமைப்போடும், தரமான, உயர்ந்த சிமெண்ட் தளங்களோடும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததைக் கண்ட புலிமுத்து, ‘இந்த செட்டுவோ, ரூமெல்லாம் எப்போ கட்டுனதுண்ணே..’ என்று புலியாண்டியிடம் வினவினான்.

‘மணிமுத்தாறு செக்போஸ்ட்லயிருந்து மாஞ்சோலை வரை இருக்கிற ரோட்டை யார் போடறதுன்னு ரொம்ப காலமா ஃபாரஸ்ட்காரங்களுக்கும், ஈ.பி.காரங்களுக்கும், பி.டபுள்யூ,டிகாரங்களுக்கும், எஸ்டேட் காரங்களுக்கும் இருந்த பஞ்சாயத்து ரெண்டு வருஷம் முன்னாடிதான் தீர்ந்தது. அப்போ ரோடு போடவந்த காண்டிராக்டர் நம்ம புலியாண்டி கோயில்ல பூஜை போட்டு வேலை ஆரம்பிக்கிற அன்னைக்கு அவங்க ஆள்லே ஒருத்தர் சாமி வந்து ஆடி, ‘உன் ஆள்களுக்கோ, வேலைகோ எந்த பங்கமும் வராம நல்ல படியா முடிச்சுக் கொடுக்குறேன். என் பக்தர்கள் மழையில நனையாம நின்னு என்னைக் கும்பிட வசதி செஞ்சு தருவியா’ன்னு கேட்டு உறுதி வாங்கியிருக்கார்.

முதல்ல அவங்க ஆள்கள் தங்குறதக்கு ஆத்தங்கரையோரமா மூணு ரூமோடு இருக்க செட்டும், சமையல் பண்ற செட்டும் போட்டவர், யானை, புலி தொந்திரவு இல்லாமலயும், எந்த விபத்து ஏற்படாமலும் வேலை நல்ல படியா முடிஞ்சதாலே உசரமான சிமெண்ட் தளத்தோட மத்த செட்டுவளையும் தரமா போட்டுக் கொடுத்து பதினொரு  கிடாவும் வெட்டி புலியாண்டிக்கு படையல் போட்டு அன்னதானம் பண்ணிட்டுதான் போனாரு. இப்பவும் வேற எங்கே பெரிய வேலை கிடைச்சாலும் இங்கே வந்து கிடா வெட்டி பூஜை போட்டுட்டுத்தான் வேலைகளையே ஆரம்பிக்கிறாரு. சீக்கிரமே எல்லா கோயிலுக்கும், சமையல் செய்யற இடத்துக்கும், ஆத்துதண்ணி வர்ற மாதிரி மோட்டார், தண்ணித்தொட்டியோட பைப் லைன் போட்டுத்தர்றேன்னு சொல்லியிருக்காராம்.'

தன் குடும்பத்தை அழித்த கொடும்புலியால் ஊரில் வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தன் உயிரைக் கொடுத்து ஊரையும், உற்றார், உறவினர்களையும் காத்த புலியாண்டி சாமி உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் அந்த வழியாக பயணிக்கும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கும், ஈ.பி, ஃபாரஸ்ட், பி.டபுள்யூ.டி, அணைக்கட்டு தொழிலாளர்களுக்கும், எங்கெங்கோ இருந்து வந்து வேலை எடுத்துச் செய்யும் காண்டிராக்டர்களுக்கும், மணிமுத்தாறு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் காவல் தெய்வமாக இருந்து அந்த காட்டையும், ஆற்றையும், வனவிலங்குகளையும் பாதுகாத்து வரும் அதிசயத்தை எண்ணி வியந்தவாறு இருந்த புலிமுத்துவை புலியாண்டி அண்ணன் ஓரிரு முறை உரக்க அழைத்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தார்.

‘சரி தம்பி. இப்ப சொல்லு. காது குத்து என்னைக்கு செய்யனும். எப்படி செய்யனும். எத்தனை பேர் வருவாங்க. நம்ம ஊர்ல யாருக்கெல்லாம் சொல்லனும்’ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க, ‘யண்ணே, நம்ம ஊர்ல சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிடுவோம். அம்மா கூடப்பிறந்தங்க, அவங்க பிள்ளைங்க, என் வீட்டுக்காரி வழில, அப்புறம் அம்பாசமுத்திரத்துல அக்கம்பக்கம் இருக்கவங்க எல்லாருக்கும் சொல்லனும்’ என்றவனிடம்,’அப்போ, மொத்தமா ஒரு முன்னூறு பேரு வருவாங்கன்னு வச்சுகிடுவோம். சரி என்னைக்குச் செய்வோம் எத்தனை கிடா பிடிக்கனும். சொல்லு.’ என்றவாறே அடுத்த பீடியை பற்ற வைத்தான் புலியாண்டி.

‘எண்ணே, பிள்ளையார், முருகர், சிவலிங்கம், அகத்தியருக்கு சைவப்படைப்பு போடணும். புலியாண்டிக்கும் கூட இருக்க மத்த எல்லா சாமிக்கும் அசைவப்படைப்புதான். எப்படியும் வர்ற ஆளுவோள்ல எழுபது, எம்பது பேரு சைவமாத்தான் இருப்பாங்க. அவங்க சைவப்படைப்பு சாப்பிட்டா, மீதி இருக்க ஆளுவளுக்கு இரண்டு கிடா போதுமா…இல்லை ஒத்தைப்படையா மூணு கிடா வெட்டிடுவோம்.’

‘ஆமா தம்பி, கறி யாருக்கும் நம்ம அளந்து வைக்க முடியாது. மூணு கிடா வெட்டினாத்தான் சரியா வரும்ன்னு எனக்கும் தோணுது.’

‘அப்புறம் என்ன செய்யுறதை சிறப்பா செஞ்சிடுவோம். இன்னைக்கு சனி. நாளைக்கு ஞாயிறு. வேலைக்குப் போறவுங்க, ஸ்கூல் புள்ளைங்க எல்லாரும் வர வசதியா அடுத்த ஞாயித்துக் கிழமை சாமிக்கு செஞ்சிடுவோம்.’

‘சரி.அப்படின்னா இப்பவே நேரா கல்லிடைக்குறிச்சிக்குப் போயி சமையல்காரனை பார்த்து சாமான் லிஸ்ட் வாங்கி மளிகைக் க்டையிலே கொடுத்திருவோம். அப்போதான் அவன் இல்லாத சாமானை வாங்கி ஏற்பாடு பண்ண சரியா இருக்கும். பூக்காரனுக்கும் அட்வான்ஸ் கொடுத்துடணும். இது ரெண்டும்தான் இருக்கறதுலயே முக்கியமான வேலை. இந்த ரெண்டு பயலும் வேறே எங்கேயும் அட்வான்ஸ் வாங்கிட்டான்னா நமக்குச் சங்கடமாப் போயிடும்’ என்றவாறே புலியாண்டி எழுந்து கிளம்பத் தயாராக இன்னொரு முறை எல்லா சாமியையும் வழிபட்டு விட்டு இருவரும் பைக்கில் ஏறி கிளம்பினார்கள்.

ஒரு பக்கத்தில் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் தேங்கி கரையெங்கும் அலையடித்துக் கொண்டும், மறுபக்கத்தில் வானுயர்ந்த மரங்களோடு, ஏதேதோ பெயர் தெரியாத காட்டுச் செடிகளும், புதர்களுமாய் பச்சைப் பசேலென அடர்ந்த வனமாகவும் இயற்கைப்பேரழகு ஏதேதோ வர்ணஜாலம் காட்ட அந்த மலைச்சாலைப் பயணம் புலிமுத்துவின் மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தந்தது. வனச்சோதனை சாவடி தாண்டி எண்பதடி வாய்க்கால் சரிவான சாலையில் இறங்கும்போது பிள்ளையார் கோயில் அருகே இருந்த சுற்றுலா வாகனங்களிடம் கேளிக்கை கட்டண வசூல் செய்யும் செக்போஸ்ட்டில் இருந்து வெளிவந்த ஒரு உருவம் கைகாட்டி வண்டியை நிறுத்த யாரென்று பார்த்தால் புலியாண்டியின் அண்ணன் புலியாட்சியின் மகன் புலிபதி.

( தொடரும் )

பாகம் 6