கைலாய மலைப்பயணத்திற்கு ஈடான பொதிகை மலை அகத்தியர் கூடம் சென்று அகத்திய முனிவரை வழிபட்டு வரவேண்டும் என்று பல ஆன்மீக அன்பர்களும் விரும்புவர். கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் மலைக்கு பாபநாசம் காரையார் வனப்பகுதி வழியாக செல்வதை தமிழக வனத்துறையினர் தடை செய்து விட்டதால் கேரள வனப்பகுதி வழியாக மட்டும்தான் தற்போது செல்ல முடியும்.
ஆனால் பயண தொலைவு, கடினமான பாதை, நான்கைந்து நாட்கள் நெடும்பயணம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் , நடைமுறைகள் ஆகியவற்றால் தமிழக ஆன்மீக பக்தர்கள் செல்ல முடியாத பகுதியாகவே பொதிகை மலை இருக்கிறது.
சிவபெருமான் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ஆன்மீக பக்தர்கள் மனம் குளுரும் படியான ஒரு செய்தி. தென்பொதிகையான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவி மலைமேல் கல்யாண தீர்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அகத்தியர் பெருமான் லோபமுத்திரை தேவியுடன் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
சாதாரண நாட்களில் கல்யாண தீர்த்தம் ஆலயத்திற்கு செல்ல வனத்துறை அனுமதிப்பது இல்லையென்றாலும் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று இரவு பூஜைக்கு மட்டும் சிறப்பு அனுமதி உண்டு. பவுர்ணமியன்று மாலை நேரம் ஆறு மணி அளவில் அகத்தியர் அருவி முருகன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பூஜை முடிந்து இரவு ஏழு மணிக்கு வந்துள்ள அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும்.
அதன்பின் பக்தர்கள் துணையோடு பவுர்ணமி பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அகத்தியர் அருவிக்கு மேல் அமைந்துள்ள கல்யாண தீர்த்தம் ஆலயத்திற்கு செல்ல அமைந்துள்ள படிக்கட்டுப் பாதை வழியாக கொண்டு செல்லப்படும். கல்யாண தீர்த்தம் அருவித் தடாகத்தில் இருந்து பக்தர்கள் நீர் சேந்தி எடுத்து வர கோடிலிங்கேஸ்வரர், லோகநாயகி அம்பாள், லோபமுத்திரை தேவி சமேத அகத்தியருக்கு அன்னாபிஷேகம் உள்பட அனைத்து அபிஷேகங்களும் சிறப்புற நடைபெறும்.
தீபாராதனை மற்றும் நைவேத்திய விநியோகம் முடிந்து கொண்டு சென்ற அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பக்தர்கள் அனைவரும் கீழே இறங்க அதிகாலை இரண்டு மணி ஆகிவிடும். வனவிலங்குகள் நடமாடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் பெரும்பாலான பக்தர்கள் அகத்தியர் அருவி முருகன் கோவிலில் தங்கிவிட்டு மறுநாள் காலை விடிந்தபின்தான் பாபநாசம் வந்து பின் அவரவர் வீடு திரும்புவர்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் அகத்தியர் அருவி மலைப்பகுதியில் கார், வேன், ஆட்டோ போன்ற எந்தவொரு வாகனமும் நிறுத்த வனத்துறை அனுமதி கிடையாது என்பதால் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் இரவு தங்கும் ஏற்பாட்டோடு மாலை 4 மணிக்குள் அகத்தியர் அருவிக்கரை முருகன் கோவிலுக்கு சென்று விடுவது நல்லது.