Saturday, August 26, 2017

வண்டித் தடம் - பாகம் 4





பாகம் 4 - முத்துசாமி

புலிமணியின் தாயாருக்கு ஐந்தும் ஆண்மக்கள். ஒவ்வொருவருக்கும் முறையே ஐந்தாறு வயது வித்தியாசம் என்பதால் குடும்பத்தில் மூத்த சகோதரருக்கும்,  கடைக்குட்டியான புலிமணிக்கும் ஏறத்தாழ இருபத்தைந்து வித்தியாசம்.  ஐவரில் புலிமணி மட்டுமே உள்ளூர் பள்ளியில் ஒழுங்காக படித்து கல்லிடைக்குறிச்சி திலகர் வித்தியாலயத்தில் உயர்நிலைக்கல்வியும், பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் அந்த கால பி.யூ.சியும் முடித்தவர். மூத்தவர் நால்வரும் தொடக்கக்கல்வி கூட முடிக்காமல் விவசாயவேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

புலிப்பட்டி மலையடிவார ஊர் என்பதால் பண்டையகாலம் முதலே காட்டுக்குள் வேட்டைக்குச் சென்று மான், மிளா, உடும்பு, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாடி, உணவிற்காக சமைத்தவை போக மீதியாகும் கறியை மழைக்கால உபயோகத்திற்காகவும், வெளியூரில் இருந்து வரும் உறவினர்களுக்கு கொடுப்பதற்காகவும் கொடிக்கறியாக உப்புக்கண்டம்  போட்டு  வைத்திருந்து பயன்படுத்தும் பழக்கம் ஊர் முழுதுமே இருந்ததுஉடன்பிறந்தவர்கள் எல்லாம் ஒரு அண்டா கறி தின்பவர்களாக இருந்தும், புலிமணி மட்டும் ஒரு துண்டு கறி கூட தின்னாமல், வள்ளலார் வழியில் தூய சைவராக வளர்ந்தார்.

புலிமணி பிறந்த மறுவருடமே அவரது மூத்த சகோதரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த சகோதரர்களுக்கும் வரிசையாக திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.  புலிமணியின் தாயாரானவர்  பெண் வாரிசு இல்லாத காரணத்தாலும், பேச்சுத்துணைக்காகவும்  முத்துசாமியின் அக்காவை தன் மகளாகவே வளர்த்து வந்தார். புலிமணியை  விட பனிரெண்டு வயது இளையவரான புலிமணியின் தாய்மாமன் மகனான  முத்துசாமியும், அவருக்கு ஏழெட்டு வயது மூத்த அவரது அக்காவோடு சிறுவயது முதலே புலிமணியின் வீட்டில் வளர்ந்து வந்தார். தொடக்ககல்வியை உள்ளூரிலே முடித்த முத்துசாமி, மேல்நிலைப்பள்ளி சென்று படித்தது எல்லாம் புலிமணியுடன் சைக்கிளில் சென்றே.

புலிமணி சிறுபிராயம் முதற்கொண்டே தனித்துவமான குணம் கொண்டவர். யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டார். வீட்டிலிருந்து பள்ளி, பள்ளி விட்டால் வீட்டிற்கு வந்து பாடம் படிப்பது என்ற வழக்கத்தை கல்லூரி முடிக்கும் வரை கடைப்பிடித்தவர். கல்லூரி முடித்ததும் ஊரில் சும்மா இருக்காமல் சென்னை சென்று தானாகவே வேலை தேடி பணியிலும் சேர்ந்து விட்டார். அவரை ஒப்பிட்டுப் பேசியே புலிப்பட்டி ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளை திட்டி வளர்த்து வந்தார்கள். அதிலும் முத்துசாமி புலிமணியின் வீட்டிலே வளர்ந்தவர் என்பதாலும், அவருடனே சென்று படித்தவர் என்பதாலும் வீட்டார் மட்டுமல்லாமல் உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரும் முத்துசாமி சேட்டைகள், குறும்புகள் என்ன செய்தாலும், “ பூவோடு சேர்ந்து இருந்தாலும் நார் குணம் மாறுமா ” என்றும், “ நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்கித்தானே திங்கும் என்று கூடிக்கூடிப் பேசி குமுறிவிடுவார்கள். இதனால் சின்னவயதில் இருந்தே முத்துசாமி மனதில் புலிமணி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகி விட்டது.

புலிமணி சென்னை சென்றது முதல் முத்துசாமியின் பெற்றோரும், மற்றோரும், “  நீயும் ஒழுங்காகப் படித்தால்தான் சென்னை செல்லமுடியும்என்று கூறிபடி, படிஎன பாடாய் படுத்தியதும் முத்துசாமியின் மனக்கடுப்பிற்கு ஒரு காரணம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பிற்காக முறைப்பெண்ணான முத்துசாமியின் அக்காவை  புலிமணிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பெரியவர்கள் பேசியபோது, “ ஒரே வீட்டில் ஒருதாய் மக்களாக உடன்வளர்ந்த சகோதரிக்கு ஒப்பான பெண்ணை மணந்து கொள்ளமுடியாது என்று புலிமணி மறுத்து விட்ட்தும் முத்துசாமி மனதில் மாறாத கோபமாகி தீராத வடுவானாதால் புலிமணியுடன் பேசுவதையும், அவர் வீட்டிற்கு வருவதையும் அடியோடு நிறுத்திவிட்டார்.

புலிமணி முத்துசாமியை சிறுவயது முதலே அறிந்தவர் என்பதாலும், ஊருக்கும் அடிக்கடி வருபவர் இல்லை என்பதாலும் எதையும் கண்டுகொள்வதில்லை.  முத்துசாமியின் அக்காவை புலிமணியின் சித்திவழி அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.அசலில் திருமணம் முடித்த புலிமணிக்கு இரண்டும் ஆண்மக்கள். முத்துசாமி உயர்நிலைக்கல்வி தேர்வு ஆகாமல் போனதால் அம்பாசமுத்திரம் அரசு சேமிப்புக்கிட்டங்கியில் ஒப்பந்தப்பணிக்குச் சென்று அப்படியே ஆளைப்பிடித்து ஐந்தாண்டுக்குள் நிரந்தரப்பணி நியமனமும் வாங்கிவிட்டார். ஒரே மகன் என்பதால் உள்ளூரிலே சொந்தத்தில் பெண்பார்த்து  இருபத்தி மூன்று வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்ட முத்துசாமிக்கு ஒரே பெண். சரி அந்தப்பெண்ணையாவது புலிமணியின் இரண்டு மகன்களின் ஒருவருக்கு பெண்கேட்பார் என்று கர்வத்தோடு எதிர்பார்த்து கவுரவம் கருதி தன்பக்கம் இருந்து ஏதும் பேசாமல் காத்திருந்த முத்துசாமிக்கு இறுதியில் ஏமாற்றமே. புலிமணி தன்னைப் போலவே இரண்டு மகன்களுக்கும் அசலிலே பெண் எடுத்துவிட்டதால் முத்துசாமியின் வன்மம் வரையறை இல்லாமல், வங்கிக்கடன் போல் கூட்டுவட்டி போட்டு கூடிவிட்டது.

 ( தொடரும் )


பாகம் 5



Tuesday, August 08, 2017

அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு


அங்காளபரமேஸ்வரி
உலகம் பிறக்கும் முன் ஒரு நாழி முன் பிறந்தாள்
கலியுகம் பிறக்கும் முன் கால் நாழி முன் பிறந்தாள்
சூரியன் சந்திரன் இல்லாத நாட்டிலே முந்தி பிறந்தாள்

மூவரை ஈன்று எடுத்தாள்,செத்து பிழைத்தாள்,
சிவனுக்கே பாரியானாள்
மாண்டு பிழைத்து மறு ரூபம் ஆனா
மாய சக்தி எங்கள் ஆதி சக்தி

அங்காளபரமேஸ்வரி



ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி காயத்ரி
ஓம் ஆதி சக்தி ச வித்மஹே
அங்காளபரமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத். "
ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே
சிவ பத்னிச தீமஹி
தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத்
ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வரூபாயை தீமஹி
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
--------------------------------------------------

அங்காளபரமேஸ்வரி வழிபாடு துதி மந்திரம்
ஸ்ரீ அங்காளி, அங்காளம்மன்,
அங்காள பரமேசுவரி பக்தி துதி.
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளம் ச தக்ஷிணே நகர குண்டலாம் |
வாமகர்ணே பத்ரபூஷாம் ஸர்வாபரண பூஷிதாம்
பாசசூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம்
பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காள பரமேஸ்வரீம்
வந்தே சதுர்புஜாம் உக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம் ||

ஒரு முகமும் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையவள்; அக்கினிச் ஜ்வாலை போன்று சிவந்த கூந்தலை மகுடமாகக் கொண்டவள்; பயங்கரி; வலது செவியில் முதலை வடிவில் அமைந்த குண்டலத்தையும், இடது செவியில் தாமரை போன்ற பத்ர குண்டலத்தையும் அணிந்தவள்; எல்லா அணிகலன்களும் பூண்டவள்; பாசக் கயிறு, சூலம், கபாலம், உளி அல்லது கோடாரி, ஹேதி என்ற கூர்மையான ஆயுதம் தாங்கியவள்; வெண்பட்டாடை உடுத்தியவள்; காளை மேல் வீற்றிருப்பவள்; குங்குமப்பூ நிறத்தினள்; நலன்களை வழங்குபவள் - ஆகிய அங்காள பரமேஸ்வரியை வணங்குகிறேன்.



அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்,
ஸ்ரீ அங்காளி, அங்காள ஈசுவரி வழிபாடு சுலோகம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோபகவதி
அங்காளபரமேஸ்வரி ஏஹியேஹி
ஸகல சௌபாக்யம் மே தேஹி தேஹி
சகல கார்ய ஸித்திம்
குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா.

செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு மனதுடன் அங்காளியை மேலே உள்ள சுலோகத்தை 18 முறை கூறி,பானகத்தை நிவேதித்து மனதார வழிபடுங்கள். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்கள். ஜெய் அங்காளி!!!


அங்காளபரமேஸ்வரி ஸ்லோகம்
ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே

இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
------------------------------------------------------------

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துதி.

ஓம் சக்தி! ஸ்ரீ அங்காளம்மா!
அங்காளம்மா! ஓம் சக்தி!
அம்மா தாயே! அருள் புரிவாயே!
ஓம் ஓம் சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
ஓம் ஓம் சக்தியே!
ஜெய ஓம் ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
ஜெயமே ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
தாயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அருள் புரிவாய் அம்மா!!!
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------
அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு

சதுர்யுகத்தில் ஆதி கிரேதாயுகத்திற்கு முன் சரஸ்வதியின் சாபத்தால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டும், உலக மக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை அங்காள பரமேஸ்வரி எழுந்தருளிய தலம் தான் மேல்மலையனூர். இந்த அருள் தரும் அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் வரகடை என்ற ஊரில் உள்ளது. அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?



அருள்தரும்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்னையின் கதை

தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு முறை பிரம்மன் கயிலாயம் சென்ற போது பார்வதி அவரைத் தொலைவில் இருந்து பார்த்தாள். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்றெண்ணினாள் பார்வதி. பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.

இதையறிந்த சரஸ்வதிக்கு கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவிலா சினம் கொண்டாள்.

‘‘நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக’’ என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி ‘‘இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக’’ என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களின் நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களது சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்தாள். மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தனது காலால் மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாள். சிவபெருமானின் தோஷம் நீங்கியது.
-------------------------------------------------------------------------
அங்காள பரமேஸ்வரி பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

மாபெரும் யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினான் தட்சன். அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தட்சன், சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை.

தன் தந்தையான தட்சனின் செயலைக் கண்டு கோபமடைந்த பார்வதி நேரே தட்சனிடம் சென்றாள். தாட்சாயணியான தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தர வேண்டும் என தந்தையிடம் போராடினாள். தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர மறுத்தான் தட்சன். சினம் கொண்ட பார்வதிதேவி, தட்சனை சபித்தாள். அதே வேள்வித் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

நடந்ததை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்ரரும், பார்வதியிடமிருந்து அங்காள பரமேஸ்வரியும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும் தட்சன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை துவம்சம் செய்தார்கள்.

அங்காள பரமேஸ்வரி
எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் அமைந்திருக்கிறது
அங்காளம்மனிடம் எப்படி வேண்டிக்கொள்வது? குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

வெற்றி தரும் அங்காள பரமேஸ்வரி வழிபாடு

சிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. பணமும் பாழாகும். இத்தகைய தோல்விகளால் பலரும் துவண்டு போய் விடுவார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!. எப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் செய்யப்படும் பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்தவள் என்று கருதப்படுகிறாள். குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும்.

இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி `அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும். இதனால் தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்

எங்கள் குலதெய்வமான  அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு  எழுத என்னைத் தூண்டியவரும், அகிலம் காக்கும் அன்னை அருள்தரும்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு கதையையும், தேவையான படங்களையும் தந்து உதவியவருமான பழைய பேட்டையைச் சேர்ந்த அன்பர் திரு. பிச்சுமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் .

நன்றி. வணக்கம்.