இன்றைய நாளிதழில் வந்துள்ள இரண்டு செய்திகள்
1.தமிழகத்திற்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்
2.போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாந்த பல ஆயிரம் தமிழர்கள் மலேசியாவில் தவிப்பு
இரண்டுமே ஒன்றோடு ஒன்று சம்பந்தமுள்ள செய்திகள்.
முதல் செய்தி
தமிழகத்திற்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்
சரவண பவன், சரவணா ஸ்டோர்ஸ், அடையாறு ஆனந்த பவன் என, செல்லும் இடமெல்லாம் சமீப காலமாக ஒரு புது விஷயத்தைக் காணலாம். அது, வெளிறிய நிறம், சிறிய மூக்கு, சின்ன கண், புரியாத பாஷையில் பேசும் வாலிபர்கள்.இவர்கள், அசாம், திரிபுரா, மணிப் பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இவர்கள், பல பணிகளுக்காக சென்னையை முற்றுகையிடுவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், தி.நகரில் உள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், செக்யூரிட்டி நிறுவனங்கள் என்பன போன்றவற்றில் பணிபுரிந்து வருகின் றனர். இவர்கள் 100 பேர் 200 பேர் என ஏஜன்ட்கள் மூலம் அழைத்து வரப் படுகின்றனர். இன்று சென்னையின் முக்கியப் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் "சீனர்'களின் முகமும், அவர்களின் உயரத்துடன் கூடியவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு நமது மொழி தெரியவில்லை என்றாலும் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்யும் பழக்கத் தைக் கொண்டுள்ளனர்.
முன், இம்மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பியூட்டி பார்லர் பணிக்காக அழைத்து வரப்பட்டனர். தற்போது பல்வேறு பணிகளுக்காக ஆண்களும், பெண்களும் அழைத்து வரப்படுகின்றனர். சென்னையில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பது பெரிய அலுவலகங்களில் மட்டுமே. ஓட்டல்கள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். பெரும்பான்மை நிறுவனங்கள் காலை 7 மணிக்குத் திறக்கப் பட்டு, இரவு 11 மணி வரை இயங்குகின்றன. இத்துடன் பணிகள் முடிந்து விடுவதில்லை. சரக்கு இருப்பைக் கணக்கிடுதல், புதிய சரக்குகளை அடுக்குதல் எனப் பணிகள் தொடர்ந்து நடக்கும். இதனால், தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என இரண்டு "ஷிப்ட்'கள் அல்லது எட்டு மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என மூன்று "ஷிப்ட்'கள் வரை பணியில் ஈடுபடுகின்றனர்.
இங்குள்ளவர்கள் 12 மணி நேரம் வேலைக்கு ஒருநாள் கூலியாக 200 ரூபாய்க்குக் குறைந்தால் வேலைக்கு வர மாட்டார்கள். ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், 12 மணிநேரத்திற்கு 125 முதல் 150 ரூபாய் கூலி, மூன்று நேரம் சாப்பாடு, தங்குமிடம் இவற்றைக் கொண்டு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், புதிய நிறுவனங்கள் துவக்குபவர்கள் இவர்களை நம்பி வேலைக்கு அமர்த்துகின்றனர். சென்னையில் தற்போது பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை இது போன்று வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக பணியில் உள்ளனர். இவர்கள், டேபிள் துடைக்கும் பணி, தண்ணீர் நிரப்புதல் மற்றும் சர்வர் பணிக்கும் அமர்த்தப்படுகின்றனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டல்கள் உள்ளன. ஓட்டல்களில் டேபிள் துடைத்தல் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு என குறைந்தபட்சம் 10 பேராவது தேவை.
ஆனால், இங்கு இப்பணிகளுக்கு யாரும் வருவதில்லை. சம்பளம் அதிகம் கொடுத்தாலும் யாரும் நிலைத்து இருப்பதில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் குறைந்த சம்பளம் என்றாலும் பொறுமையாக வேலை பார்க்கின்றனர்' என்றார். ஓட்டல்களில் மட்டுமின்றி பிரபல வர்த்தக நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் பற்றாக்கறை உள்ளது. தமிழகத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரணமாக படித்தவர்கள் கூட ஓட்டல்களில் சர்வர் பணிக்கோ அல்லது கடைகளில் "சேல்ஸ்மேன்' பணிக்கோ செல்வதை விரும்புவதில்லை. "ஒயிட் காலர் ஜாப்'களையே விரும்புகின்றனர். இதனால் தான், வெளி மாநிலத்தவரை இங்கு வரவழைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது என தொழில் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
இதுதவிர, பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கட்டட பணிகள், வெல்டிங் உள்ளிட்ட பணிகளுக்காகவும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்கள் கேபிள் பதிக்கும் பணி, கட்டடங்களுக்கான குழி எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு குடும்பத்துடன் 700 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். இதை வீணாக்காமல் தங்கள் ஊர்களில் சேமிக்கின்றனர். கட்டடப் பணிகளில் கொடுத்த வேலையை உரிய நேரத்தில் முடிக்கும் இவர்களுக்கு தற்போது பில்டர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பணியாட்களை அழைத்து வரும் ஒருவர் கூறியதாவது: நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே, சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டேன். எங்கள் ஊரில் இளைஞர்கள் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும், சம்பளம் மிகக் குறைவு. சென்னையில் உள்ள ஓட்டல் களில் தற்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகம் பேர் பணியில் உள்ளனர். ஒரு நாள் சம்பளம் 150 ரூபாய் வரை அவர்களுக்குக் கிடைக்கிறது. தங்க இடமும், சாப்பாடும் அளிக்கப்படுகிறது. இந்த வருமானம் அங்குக் கிடைப்பதில்லை. ஒருவரை வைத் துப் பலர் இங்கு வருகின்றனர். இவர் கள் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்று திரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் செய்தி
போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாந்த பல ஆயிரம் தமிழர்கள் மலேசியாவில் தவிப்பு
மீட்க வேண்டிய மத்திய அரசு;
தயக்கம் காட்டும் தமிழகம்;
ஏஜன்ட்களால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்;
திசை தெரியாமல் திரியும் தமிழர்கள்
என, வேலைக்காக மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மலேசியாவிற்கு வேலைக்காக ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக் கில் தமிழர்கள் செல்கின்றனர். போலி ஏஜன்ட்கள் மூலம் செல்லும் இவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் அனுப்பப்படுகின்றனர். தாங்கள் எந்த விசா கொண்டு வந்தோம் என்பது கூட தெரியாததால், விசா காலம் முடிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக் கின்றனர். பணிபுரியச் செல்லும் நிறுவன ஒப்பந் தத்தின் விவரத்தையும் யாரும் பார்ப்பதில்லை. மலேசிய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை, முழுமையாக கொடுக்காமல் சில ஏஜன்ட்கள் ஏமாற்றுகின்றனர். இதனால், மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல், சிலர் அங்கிருந்து தப்பிச் செல் கின்றனர்.அவர்களை, அந்நாட்டு போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். இப்படி, மலேசிய சிறைகளில் 3,600 தமிழர்களும், முகாம்களில் 2,400 தமிழர்களும் அடைக்கப்பட் டுள்ளனர்.இது தவிர 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தமிழர் கள், தோட்டம், கடைகள், கோழிப்பண்ணை, ஒயின் ஷாப் என பல இடங்களில் வேலை செய்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கலில் மாட்டிய பெண்கள் பலர், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.கடந்த 2004ம் ஆண்டில், தலைமறைவாக இருந்த வெளிநாட்டினருக்கு மலேசிய அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. பொது மன்னிப்பு வழங்கப்படுபவர்களின் விமானச் செலவு, அவர்கள் மீண்டும் தங்கிவிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் எத்தனை பேர் தலைமறைவாக தங்கியிருக்கின்றனர் என்ற விவரம் என பல சிக்கல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.இந்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால், பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க மலேசிய அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது.
இத்தருணத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லும் என, மலேசிய வீதிகளில் பல தமிழர்கள் சுற்றித் திரிகின்றனர்.அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகும் தமிழர்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகமும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லைமலேசிய தமிழர்களின் நலன்கருதி, காமன்வெல்த் சமரச தீர்ப்பாயம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு அங்கு சென்று சாரனை மேற்கொண்டது. அந்த அமைப்பின் தெற்காசிய தலைவரும், வக்கீலுமான செல்லம் பாரி மன்னன் கூறுகையில், ""மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், உதவிக் காக அளித்துள்ள தொலைபேசி எண்களை ஏழு நாட்களாக தொடர்பு கொண்டும், யாரும் முறையாக பதிலளிக்கவில்லை. ""மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் காந்தாவை நாங்கள் சந்தித்தபோது, "சட்டவிரோதமாக இங்கு வாழும் தமிழர்களுக்கு நாங்கள் உதவ முடியாது' என்றார். இந்த விஷயத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மிரண்டு போனதும் மீண்டு வந்ததும்! சென்னை நந்தனத்தில் இருந்து செயல்பட்ட போலி நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட, நாகப்பட்டினம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: பணிக்கான விசா மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேர் கொண்ட குழுவில், 90 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, நானும் போனேன். எங்களை அனுப்பிவிட்டு ஏஜன்ட் சென்றுவிட்டதால், மலேசியா ஏர்போர்ட்டில் எங்களை அழைத்துச் செல்ல, அங்குள்ள ஏஜன்டுக் காக காத்திருந்தோம். பத்து நாட்கள் வரை அவர் வராததால், மொழி தெரியாத நாட்டில் சாப்பாட் டிற்கு வழி தெரியாமல் தவித்தோம். பிறகு வந்த ஏஜன்ட் மூலம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். சம்பளம், வேலை நேரம் எல்லாமே, ஏஜன்ட் சொன்னதற்கு மாறாக இருந்ததால் மிரண்டு போனேன்.வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவாவது சம்பாதிக்க வேண்டுமே என நினைத்து, பல இடங்களில் வேலை செய்தும் வட்டியை மட்டுமே கொடுக்க முடிந்தது. வேறு வழி இல்லாமல், ஒரு வழியாக நாட்டிற்கு மீண்டும் வந்து விட்டேன்.என்னைப் போன்று பல ஆயிரம் பேர், திரும்பி வரக்கூட பணம் இல்லாமல் அங்கு தவிக்கின்றனர்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
------------------------------------------------------------------------------------------------
இரண்டு செய்திகளுக்கும் எவ்வளவு முரண்பாடு பாருங்கள்.
இங்கேயே இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பொழுது ஏன் நமது மக்கள் பணம் கட்டியாவது வெளிநாடு செல்ல விரும்புவது ஏன் ?
போலி ஏஜெண்ட்களிடம் கொடுக்கும் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்யலாமே.
படித்த மக்களே பலவாறு ஏமாற்றப்படும் பொழுது படிக்காத பாமர மக்களெல்லாம் எம்மாத்திரம்.
வெற்றிக்கொடி கட்டு,புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,பாண்டி போன்ற படங்களை பார்த்தாவது திருந்த வேண்டாமா ?
தொழிலாளர்களின் உழைப்பால் வளம்பெரும் நாடுகள் அவர்களை ஊருக்குள் தங்க அனுமதிக்காமல் பாலைவன முகாம்களிலே தங்க வைக்கின்றன.
எனதினிய தமிழ்மக்களே நல்ல சம்பளம்.விடுமுறை தரும் நிறுவனங்கள் என நண்பர்கள்,உறவினர்கள் உறுதி கூறி அழைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்.இல்லையேல் நமது நாட்டிலேயே தகுதிக்கேற்ப கிடைக்கும் வேலையில் குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.