Tuesday, July 14, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 7


முதல் ஆறு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….


பாகம் - காணாமல் போன காஞ்சனா….








சாகரின் குழப்பத்திற்கான காரணம் ஐ.டி.ஐ படிப்பு முடித்தபின் ஏழெட்டு ஆண்டுகளாக மின்துறையில் வேலை பார்த்து வந்தாலும் இதுவே அவன் சந்தித்த முதல் விபத்து ஆகும். அதுவும் கை, கால்கள் கருகி மோசமாக பாதிக்கப்பட்டதால் மிக்க அதிர்ச்சி அடைந்திருந்தான். மருத்துவமனையில் இருந்து அனுப்பினால் வேலைக்கு வரப்போவதில்லையென்றும், தங்குமில்லம் வந்து அவன் உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட முடிவு செய்திருப்பதாக கவாண்டேவிடமும், நெருக்கமான நண்பர்களிடமும் கூறிவிட்டான். கவாண்டேவும் காயங்கள் பூரணமாக ஆறும் வரை கம்பெனி செலவிலே மருத்துவமனையில் இருந்து விட்டு பின் ஓரிரு நாட்கள் தங்குமில்லத்தில் இருந்து விட்டு செட்டில்மெண்ட் மற்றும் விபத்து இழப்பீட்டுத் தொகையையும் சேர்த்து வாங்கி கொண்டு பின் ஊருக்கு செல் என ஒப்புதல் அளித்துவிட்டார். அடுத்த வாரத்தில் தீபாவளி வேறு வர இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சாகர் தங்குமில்லம் வந்து அக்கம்பக்கம் பழகியவர்கள், நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டான். வழக்கமாக வேலையை விட்டு செல்பவர்களுக்கு கம்பெனி சார்பாக விருந்து கொடுப்பது போல் சாகருக்கும் செய்து நாங்கள் அனைவரும் அவனை வழியனுப்ப செகந்திராபாத் பேருந்து நிலையம்  சென்றோம். எல்லோரிடமும் நன்றாக பழகியவன் என்பதாலும், மீண்டும் காண்போமோ, இல்லையோ என்பதாலும் கண்ணீர் மல்க விடைபெற்று சென்றான்.


ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் காட்டுப்பகுதி என்பதால் பணியாளர்கள் பாதுகாப்பு வந்து போக போக்குவரத்து போன்றவற்றையும் கருத்தில் கொண்டு வரையப்பட்ட புதிய பணி அட்டவணையின் படி ஒவ்வொரு துறை கட்டுப்பாட்டு அறையிலும் ஒருவர் இருக்குமாறும், எல்லோரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை முதல் ஷிப்ட்டும், இரண்டாவது ஷிப்ட் மதியம் பன்னிரெண்டு மணி முதல் மாலை ஏழு மணி வரையும் மூன்றாவது ஷிப்ட் இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை எனவும் மணியும், கவாண்டேவும் மட்டும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையான ஆராய்ச்சியகத்தின் பொதுப் பணி நேரத்தில் வந்து செல்வர் எனவும் நான் திட்டப்பணிகளைப் பொறுத்து எல்லா ஷிப்டிலும் வந்து செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.


மற்ற வடமாநிலங்களைப் போலவே ஆந்திராவிலும் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவார்கள் என்பதால் அந்த வாரத்தில் சனி, ஞாயிறு ஆரம்பித்து அதற்கடுத்த வாரம் சனி, ஞாயிறு வரை அரசாங்க விடுமுறைகள் வந்ததால் தொடர்ந்து ஒன்பது நாட்களாக ஆராய்ச்சி நிறுவனம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடியது. நாங்கள் பராமரிப்பு துறை என்பதால் சனி, ஞாயிறு உள்பட எல்லா அரசு விடுமுறை தினங்களிலும் பணிக்கு செல்ல வேண்டி இருந்தது. உள்ளூர்காரர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை கொடுத்து விட்டு தீபாவளிக்காக ஊருக்கு சென்றவர்களை தவிர்த்து மற்ற வெளியூர்காரர்கள் மட்டும் பணிக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது. நாங்களும், நிறுவனத்தின் உள், வெளி காவலுக்கு இருக்கும் இராணுவத்தினர் மட்டுமே பணியில் இருந்ததாலும் வழக்கமான அன்றாடப் பணிகள் ஏதும் இல்லாததாலும் பொழுது போகாமல் மிக கஷ்டப்பட்டோம். கேண்டின் இருந்தாலாவது அவ்வப்போது சென்று டீ,காபி, சிற்றுண்டி ஏதாவது அருந்தி வரலாம். எத்தனை நேரம்தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பது, பொழுது போக ஏதாவது செய்ய வேண்டுமே என்று நான்கு நாட்களாக யோசித்து கொண்டிருக்கும் போதுதான் பழவேட்டைக்கு போகலாம் என்ற எண்ணம் தோன்றியது.


முறையான நீர் ஆதார வசதிகளோடும், உள்கட்ட அமைப்புகளோடும் பசுமையாக பரந்து விரிந்து இருந்த ஆராய்ச்சியகத்தின் எல்லா பகுதிகளிலும் மத்திய அரசின் தோட்டத்துறையினரால் எல்லா விதமான பூச்செடிகளும், புதர் செடிகளும், புல் தரைகளும், சிறு, குறு மரங்களும் மற்றும் பல விதமான பழ மரங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. வழக்கமாக தோட்ட பராமரிப்பாளர்களும், அந்தந்த துறை ஊழியர்களும் மட்டுமே சொந்தம் கொண்டாடி, முறை வைத்து பழங்களை பறித்து, அவர்களுக்குள்ளே பிரித்து கொள்வார்கள். பணி நாட்களில் மரங்களின் அருகே கூட மற்றவர்கள் யாரும் செல்ல முடியாதவாறு கண்காணிப்பு இருக்கும் என்பதால்  விடுமுறை நாட்களில் எங்கள் அணி ஆள்கள் யாராவது அவசரப்பணிக்காக  மரங்கள் இருக்கும் பக்கமாக சென்றால், பழங்கள் ஏதாவது மரத்தில் மிஞ்சி இருந்தால்  பறித்து வருவார்கள். செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் தவிர்த்து இயற்கையான முறையில் இலை, தளை, குப்பைகள் இடப்பட்டு தனிக்கவனிப்பில் வளரும் அவற்றின் சுவையும் அபாரமாக இருக்கும்.


முதலில் கேண்டின் அருகில் கொய்யா மரங்கள் இருக்கும் பகுதிக்கு செவ்வாய் மதியம் மூன்று மணிக்கு மேல் சென்றோம். நல்ல சீனிக் கொய்யாக்கள். பெரிய, பெரிய மரங்கள். கரும்பச்சை காய்களை விட்டுவிட்டு, நன்கு வெண்மை பாய்ந்து விடைத்திருந்த உரைக்காய்களாக பறித்து உப்பு, மிளகாய் பொடி வைத்து உண்டு களித்தோம். மறுநாள் நாவல் மரங்கள், அதற்கடுத்தடுத்த நாட்களில் சப்போட்டா, ஆப்பிள், ஆரஞ்சு என தொடர்ந்து பழவேட்டைதான். சில சமயங்களில் அவ்வப்போது ரவுண்ட்ஸ் வரும் செக்யூரிட்டி கார்டுகளான ராணுவ வீரர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். சீசன் இல்லாவிட்டாலும் கார்காய்களாக காய்த்திருந்த பங்கனபள்ளி, கிளிமூக்கு, ஒட்டு, மல்கோவா போன்ற பல வகையான மாங்காய்களைப் பறித்து வந்து மற்ற அறைகளை விட அறை வெப்பநிலை அதிகமாக இருக்கும் பேட்டரி ரூமில் நல்ல உரத்த சணல்சாக்குகளை தரையில் விரித்து காய்களை அடுக்கி மேலேயும் காற்றுப் புகாதவாறு பெரிய சணல் சாக்குகளால் மூடி பழுக்க வைத்து பழுக்க, பழுக்க சுவை பார்த்தோம். இப்படி ஆய்வகத்தின் உள்ளே இருந்த இருந்த நாவல், கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, வால் பேரி மற்றும் பல விதமான பழமரங்களை எல்லாம் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல் வெளிச்சுற்று சுவர் அருகில் இருந்த காட்டு இலந்தை மரங்களையும் விட்டு வைக்கவில்லை. பாரா செல்லும் செக்யூரிட்டி ஒருவர் ஆய்வகத்தின் கடைக்கோடியில் காட்டு வாழைகள் தானாக வளர்ந்து காய்த்து குலை தள்ளிளிருப்பதாக கூற அவற்றையும் வெட்டி வந்து சாக்கினுள் வைத்து கட்டி பேட்டரி ரூமிற்குள் பழுக்க வைத்து ருசித்தோம்.


தொடர் விடுமுறையின் கடைசி நாளான ஞாயிறன்று எங்கள் கட்டுபாட்டு அறையின் வெளியில் ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கடந்த ஒரு வாரமாக எல்லா விதமான கனிகளும் பறித்து, ருசித்து விட்டோம். முக்கனியில் முதல் கனியான மாம்பழங்களும், கடைசிக் கனியான வாழையும் கூட கைவசம் இருக்கிறது. நடுக்கனியான பலா மட்டும் கிடைத்து விட்டால் கையில் மீதி இருக்கும் பழங்களையெல்லாம் சேர்த்து அருமையான பஞ்சாமிர்தம் தயார் செய்து விடலாமே என எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பக்கமாக பாரா வந்த செக்யூரிட்டி ஒருவர் ஆராய்ச்சி நிறுவன காட்டுக்குள்ளே இருந்து கடந்த ஒரு வாரமாக பலா வாசனை வருவதாகவும், சில சமயங்களில் பலாச்சுளையை உண்ண குரங்குகள், நரிகள், கரடிகள் கூட கோட்டை மதில் சுவர் தாண்டி வந்து செல்வதாகவும்  கூற காட்டில் காத்திருக்கும் விபரீதம் அறியாமல் சரி அதையும் சென்று பார்த்து விடுவோமே என்று கூட்டமாக கிளம்பினோம். 

( தொடரும் ) 


பாகம் 8

Saturday, July 11, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 6


முதல் ஐந்து பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

பாகம் - காணாமல் போன காஞ்சனா….






பாகம் 6 – அடுத்த மூன்று வாரங்கள்



நான் அதிர்ச்சியடைந்ததற்கு காரணம் கவாண்டேவும், மற்ற நண்பர்களும் சாகரைப் பார்க்க அறைக்குள் சென்ற போது உடல் சோர்வு காரணமாக அவன் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தானாம். எனவே எவருமே அவனிடம் ஏதும் பேச வில்லையென்றும் சும்மா பார்த்து விட்டு மட்டும் வந்ததாகவும் கூறினார்கள். அப்படியென்றால் என்னுடன் மட்டுமே அவன் பேசி இருக்கிறான். பேசியது மட்டும் இல்லாமல் மிகுந்த அதிர்ச்சியான செய்தி ஒன்றையும் கூறினான். ஆம். முந்தைய நாள் இரவு சாகர், சங்கர் இருவரும் வாட்ச் டவர் அருகே சென்று பைக்கை நிறுத்தி விட்டு, சில உபகரணங்களை எடுத்துக் கொண்டு பழுது நீக்க சென்ற போது அங்கு மாலையில் மலரும் பலவிதமான காட்டுப்பூக்களின் மனதை மயக்கும் நல்ல  மணம் வந்திருக்கிறது. சில அசாதாரண சப்தங்களும் கேட்டிருக்கின்றன. என்ன, ஏது என்று இருவரும் சுற்றும், முற்றும் பார்த்திருக்கும் கொண்டிருக்கும் போது யாரோ சாகரை பிடித்து வேகமாக தள்ளி விட்டிருக்கிறார்கள். எதிர்பாராத நிகழ்வு என்பதால் சாகர், சங்கரையும் சேர்த்து தள்ளிக் கொண்டு பேனல் மேலே சென்று விழ மின் அதிர்ச்சி ஏற்பட்டு தூக்கி வீசப் பட்டிருக்கிறான். சங்கர் நல்ல வேளையாக பேனல் மீது விழாவிட்டாலும் சாகரை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்ததால் அவனுக்கும் மின் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

வழக்கமாக எங்கு மின்கோளாறு ஏற்பட்டாலும் முதலில் டெஸ்டரை வைத்து மின் கசிவு இருக்கிறதா என்று பார்த்து விட்டு கசிவு இல்லை என்று உறுதியாக தெரிந்த பின் தான் கை வைக்க வேண்டும் என்பது மின்னியலில் முதல் விதி. அவ்வாறு டெஸ்ட் செய்யும் முன்பே இருவருக்கும் மின் தாக்குதல் ஏற்பட்டது என்பது நடக்க முடியாத செயல் என்பதால் சாகர் கூறியதை நம்பத்தான் வேண்டியிருந்தது. எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் அதிர்ச்சி மற்றும் எடுத்துக் கொண்ட மருந்துகளின் வேகத்தில் அவன் மனம் குழம்பியிருக்கலாம் என்பதால் சாகர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சாகர் அறையை விட்டு நான் வெளியே வந்த போது உணவு நேரம் ஆகி விட்டபடியால் எங்கே உணவருந்த செல்லலாம் என அனைவரும் கூடிப் பேசி கொண்டிருந்தனர். சங்கருக்கும், சாகருக்கும் மருத்துவமனையிலே உணவு கொடுத்து விடுவார்கள் என்பதால் மற்றவர்கள் அனைவரும் மருத்துவமனை அருகில் இருந்த ‘ஷோஹைல் பிரியாணி’ என்ற பிரபலமான ஹைதராபாத் பிரியாணி கடைக்கு செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டது.மணிக்கும் மொபைல் போன் மூலம் நேராக கடைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லி விட்டோம்.

‘ஷோஹைல் பிரியாணி’ கடையில் அருமையான ஹைதராபாத் பிரியாணி மற்றும் அக்கடையின் ஸ்பெசல் அயிட்டங்களான சிக்கன், மட்டன் வகையறாக்களை ஒரு வெட்டு வெட்டி விட்டு பின் கோட்டி நகருக்கு சென்றோம்.சென்னையின் தி.நகர் போல இல்லையென்றாலும் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற அளவிலே கோட்டியின் கடைகள் இருந்தன.சில மால்களில் சுற்றிவிட்டு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு கிளம்பும் நேரம் ”கோகுல் சாட்ஸ்” போய்ட்டு போகலாம்” என அவர்கள் நால்வரும் ஒருமித்த குரலில் கூற “ போன வாரம் தானே அந்தக் கடைக்கு போய்ட்டு வந்தோம். கோட்டி வரும்போதெல்லாம் செல்லும் அளவிற்கு அந்தக் கடையில் அப்படி என்ன விசேஷம்” என நான் கேட்டதற்கு “அது பலவிதமான வடஇந்திய சாட்வகை உணவுகள் தயார்செய்து விற்பனை செய்யும்   கடை. அங்கே எல்லா சிற்றுண்டி வகைகளுமே விசேஷம்தான். அங்குள்ள பலதரப்பட்ட உணவுகளின் சுவைக்காகவும், தரத்திற்காகவும் ஹைதராபாத், செகந்திராபாத்தில் உள்ள வி.ஐ.பி.க்கள், பொதுமக்கள் அனைவரும் அடிக்கடி வந்து செல்வர்” என பதில் கூறினர். அவர்கள் கூறியது போல் அந்த கடை இருந்த சாலை பலதரப்பட்ட வாகனங்களாலும், பொதுமக்களாலும் நிறைந்து, நெருக்கடியாக காணப்பட்டது. மணி எப்படியோ அடித்து, பிடித்து உள்ளே செல்ல, நாங்களும் அவனைப் பின்தொடர்ந்து பலவகை உணவுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்து உண்டு களித்தோம்.பின் ஏழு மணி அளவில் அங்கிருந்து கிளம்பி மறுபடியும் மருத்துவமனை வந்து சங்கர்,சாகரைப் பார்த்து விட்டு பேருந்து மூலம் பாலாப்பூர் சாரஸ்தா அடைந்து தங்குமில்லம் வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மணியும் கிளம்ப நாங்களும் உறங்கச்சென்றோம்.

மறுநாளான திங்கள் முதல் பாண்டே,தேசிங்கு இருவருக்கும் பகல்நேர வேலை என்பதால் அனைவரும் ஒன்றாக கிளம்பி பணிக்குச் சென்றோம். அன்று காலை அலுவலகம் வந்த கவாண்டே மதியம் மூன்று மணிக்கு ஆராய்ச்சியக அரங்கில் புதிய திட்டம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் இருப்பதாகவும் அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள்ளுமாறும் கூறியதால் தேவையான எல்லாவற்றையும் தயார்செய்து வைத்தேன். ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக நிறுவ இருந்த பெரிய அளவிலான கொதிகலன் பற்றிய ஆலோசனைக்கூட்டத்திற்கு கவாண்டே என்னையும் அழைத்துச் சென்றார்.அந்த கொதிகலனுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து ஒருங்கிணைத்து ஏற்ற இறக்க வேறுபாடு இல்லாமல் தரமாக தடையில்லா ஒரே அளவான மின்சாரம் வழங்கவேண்டியதே எங்கள் நிறுவனத்தின் பணி. அது தொடர்பான புதிய கட்டிடம் கட்டுதல், ஜெனரேட்டர்கள், கண்ட்ரோல் பேனல்கள் வாங்கி கட்டுப்பாட்டு அறையில் நிறுவி பராமரிப்பு பணி ஏற்றுக்கொள்வது வரை எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு.

அந்த வார இறுதிக்குள் புதிய கொதிகலன் கட்டுபாட்டறை திட்டத்திற்காக  புதிதாக ஜான்,செந்தில்,காந்தியின் தம்பி சின்ன காந்தி மற்றும் ஆறு உள்ளூர்க்காரர்கள் என மேலும் ஆள்கள் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பராமரிப்பு பணியில் இருந்த பணியாளர்கள் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பின்  இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை என பன்னிரெண்டு மணி நேர வேலை செய்து வந்ததால் புதிதாக வந்தவர்கள் மற்றும் ஏற்கனவே இருப்பவர்கள் எல்லோரையும் சேர்த்து பிரித்து என அனைவரும் எட்டு மணி நேரம் பணி பார்க்குமாறு புதிய அட்டவணை தயார் செய்து கவாண்டே மற்றும் சம்பந்தப்பட்ட எங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவரிடமும் கலந்து பேசி தேவையான மாறுதல்கள் செய்து ஆராய்ச்சியக அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெற்று என அடுத்து வந்த மூன்று வாரங்களும் முழுக்க பரபரப்பாக பணி சென்றது.

சங்கருக்கு உடல்நிலையில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை என்பதால் அவனை அட்மிட் செய்த இரண்டு நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள் என்றாலும் அவனுக்கு விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டார் கவாண்டே. அடுத்து வந்த வாரத்திலேயே சாகரையும் ICUல் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றி விட்டார்கள். காயங்கள் ஆறுவதைப் பொறுத்து மருத்துவமனையில் இருந்து ஓரிரு வாரங்களில் சாகரை டிஸ்சார்ஜ் செய்து விடுவதாகவும் தெரிவித்து விட்டனர். வேலையைப் பொறுத்து நாங்களும், மற்றும் பழக்கமான ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், உள்ளூர் நண்பர்கள் என அவ்வப்போது ஆட்கள் மாறி ஆட்களாக மருத்துவமனை சென்று சாகரைப் பார்த்து வந்தோம். சாகரின் உடல்நிலை தேறியது போல் தெரிந்தாலும் அவன் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பது போல் என்னைப் போலவே பார்த்து வந்த மற்றவர்களும் கூறினர்.


( தொடரும் )


பாகம் 7

Thursday, July 09, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 5


கடந்த பத்தாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த ஒரு அசாதாரண  நிகழ்ச்சியின் அனுபவப் பகிர்வே காலை உடைத்த காஞ்சனா….ஆகும்.


முதல் நான்கு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….


பாகம் - காணாமல் போன காஞ்சனா….



பாகம் 5 -  நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...




சங்கரும், சாகரும் மயங்கிக் கிடப்பதாக கூறப்பட்ட காட்டுப்பகுதிக்கு நாங்கள் செல்வதற்குள் காவல் பணியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மெயின் கேட் அருகில் உள்ள செக்யூரிட்டி அலுவலகத்திற்கு தூக்கி கொண்டு வந்து விட்டனர். எங்கள் டிபார்ட்மெண்டின் இரவு பணிக்குழுவைச் சேர்ந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர். நாங்கள் சென்று பார்க்கும் போது சாகர் முழு மயக்கத்தில் இருந்தான். அரை,குறை மயக்கத்தில் இருந்த சங்கரை விசாரித்த போது கோளாறை சரி செய்வதற்காக வாட்ச் டவர் லைட்டின் கீழ் இருந்த பேனல் போர்டை திறக்க முயன்ற போது இருவரும் தூக்கி வீசப்பட்டதாக கூறினான்.


கவாண்டேவும் சிறிது நேரத்தில் வந்து விட அவர்கள் இருவரையும் எங்கள் ஜீப்பில் ஏற்றி பக்கத்தில் உள்ள கோட்டியில் உள்ள மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டு சென்று அட்மிட் செய்தோம். அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் மின் அதிர்ச்சி போன்று இருப்பதாகவும், முழுமையாக பரிசோதித்து பார்த்தால்தான் என்ன அளவு பாதிப்பு என்பதை தெளிவாக அறிய முடியும் என்று கூறி தனி அறைக்குள் இருவரையும் கொண்டு சென்றனர். அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக விபரம் அறிந்து ஆராய்ச்சி நிறுவன மின்னியல் துறைத்தலைவரான திரு.மாதவராவ், அவர் உதவியாளர் சீனிவாசராவ், பாதுகாப்பு துறை அதிகாரி, மனிதவளத்துறை அதிகாரி போன்ற ஆராய்ச்சி நிறுவன உயரதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.


சம்பவம் எப்படி நடந்தது என்று அவர்கள் கவாண்டேவை விசாரிக்க “”அணில், எலி ஏதாவது கடித்து பேனல் பாக்ஸின் உள்ளே உள்ள ஒயர்கள் துண்டிக்கப்பட்டதனால் லைட் எரியாமல் இருந்திருக்கலாம். கோளாறு சரி செய்யச் சென்ற சங்கரும், சாகரும் பேனலை திறக்க முயற்சித்த பொழுது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம்”   என்று அவர்களிடம் என்ன நடந்திருக்கலாம் என்ற அவரது ஊகத்தை சொன்னார். அதன்பின் தலைமை மருத்துவரை பார்க்க திரு.மாதவராவும், கவாண்டேவும் சென்று அரைமணி நேரம் கழித்து வந்தனர். சங்கருக்கு லேசான காயங்கள்தான் என்றும், சாகர்தான் மின் அதிர்ச்சியால் அதிகம் தாக்கப்பட்டு கை, கால்கள் கருகி விட்டதாக தகவல் கூறினார்கள். மேலும் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையென்றும், குறைந்தது இரண்டு வாரங்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியதாக சொன்னார்கள்.


சிறிது நேரத்தில் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அனைவரும் சென்று விட மருத்துவமனையில் இரவு யாராவது ஒருவர்தான் நோயளிகளுக்கு உதவியாக தங்க முடியும் என்பதால் ஒருவரை மட்டும் வைத்துவிட்டு மற்றவர்கள் அனைவரும் கிளம்பலாம் என முடிவு செய்தோம். மணி அவனே இருப்பதாக கூற மற்றவர் அனைவரும் சென்று விட்டு மறுநாள் வருவதாக சொல்லி கிளம்பினோம்.


மணிக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு நாங்களும் அங்கேயே ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு அனைவரும் பாலாப்பூர் கெஸ்ட் அவுஸ் திரும்ப இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் ஞாயிறு என்பதால் மெதுவாக எழுந்து குளித்து கிளம்பி காலை பத்து மணி போல் சாகர், சங்கர் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றோம். எங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மணி அறைக்குச் சென்று குளித்து, சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றான். சங்கருக்கு லேசான காயங்கள் மட்டும் என்பதால் நார்மல் வார்டில் தான் இருந்தான். இரவில் டாக்டர்கள் கொடுத்த மருந்துகளின் பலனாக நன்றாக தூங்கி விட்டதாகவும், மணியும், அவன் படுக்கையிலே உறங்கியதாகவும் கூறினான்.


சாகர் ஸ்பெசல் வார்டில் இருப்பதனால் காலை 11 மணி மற்றும் மாலை 7 மணி என்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்று ரிஷப்சனில் கூறியதால் அவனை பார்த்து விட்டுச் செல்லலாம் என்ற முடிவோடு சங்கரோடு நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். கவாண்டேவும் சிறிது நேரத்தில் வந்து விட 11 மணி ஆனவுடன் முதலில் கவாண்டே, பின் சங்கர், மற்ற நண்பர்கள் என ஒவ்வொருவராக சென்று சாகரைப் பார்த்து வந்தார்கள். கடைசியாக நான் சென்ற போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த சாகரிடம் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என நான் விசாரிக்கும் போது அவன் கூறிய தகவல்கள் அதிர்ச்சி தருபவனாக இருந்தன. அதற்குள் பார்வை நேரம் முடிந்து விட்டதாக நர்ஸ் வந்து தெரிவிக்க சாகரிடம் சொல்லி விட்டு வெளியே வந்த எனக்கு கவாண்டேவும், மற்ற நண்பர்களும் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை தந்தது.

 ( தொடரும் )

Monday, July 06, 2015

சுவாமி சங்கிலி பூதத்தார் சைவமா… அசைவமா….




சுவாமி சங்கிலி பூதத்தார் சைவமா… அசைவமா…. என்ற சந்தேகம்  பல பக்தர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் அவரை வணங்கும் பல பக்தர்களும் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது  இந்த சந்தேகத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. என்னிடம் கூட பல நண்பர்கள் திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலில் சங்கிலி பூதத்தாருக்கு ஆடு வெட்டுவதாக கூறி இருக்கிறார்கள். நம்பி கோயில் உள்பட பூதத்தார் இருக்கும் பெரும்பாலான தலங்களுக்கு சென்று, உரியவர்களிடம் விசாரித்து தகவல்கள் அறிந்ததால் அறுதியிட்டு கூறுகிறேன்.  பூதத்தாருக்கு நம்பி கோயிலிலும் சரி. மற்ற எங்கேயுமே ஆடு,கோழி பலி கிடையாது. சில குறிப்பிட்ட கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கோயில்களிலுமே பூதத்தாரனவர் பேச்சி அம்மன், சுடலை மாடசுவாமி, பட்டவராயன் போன்ற 21 வகையான பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு தான்  இருப்பார்.  அவருடன் இருக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கு இடப்படும் உயிர்ப்பலியை சங்கிலி பூதத்தாருக்கு இடுவதாக பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அடுத்தமுறை நம்பி கோயில் சென்றால் கவனித்து பாருங்கள். பலிகள் இடப்படுவதும், படையல் இடப்படுவதும் அவர் பீடத்தின் முன் கிடையாது. வெகு தூரம் தள்ளித்தான்.


எங்கள் ஜமீன் சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயிலில் சங்கிலி பூதத்தார் மற்ற பரிவார தெய்வங்கள், தேவதைகளோடு அருள் பாலித்து வருகிறார்.வருடா வருடம் சித்திரை மாதம் கொடை விழா நடை பெறும் போது அம்மன் மற்றும் மற்ற தெய்வங்களுக்கு ஆடுகள், கோழிகள், துள்ளு மறி என்னும் பிறந்த குட்டிகளை பலியாக இடும்போது வெட்டப்படும் ஆடுகளும், கோழிகளும் துடித்து, துள்ளி சங்கிலி பூதத்தார் பீடம் அருகில் கூட சில நேரம் வந்து விடும். புதிதாக கொடை  பார்க்க வந்த மற்ற ஊர்க்காரர்கள் ஜமீன்சிங்கம்பட்டி அம்மன் கோயிலில் பூதத்தாருக்கு ஆடு வெட்டுகிறார்கள் என்று கூற  வாய்ப்பிருக்கிறது என்றாலும் உள்ளூர்காரர்களுக்கு தான் உண்மை நிலை தெரியும்.


 சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை பல விதமான பூக்களால்  செய்யப்படும் புஷ்பாஞ்சலி அர்ச்சனைபல வண்ண மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைகள், வடை மாலை,  எலுமிச்சை மாலை, பானகரம், வார்ப்புப் பாயாசம்,  பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில்  குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் மாவிளக்கு, வாழைப்பழக்குலை மற்றும் முற்றிலும் சைவப்படையலான பச்சரிசிச்சோறு மற்றும்  காய்கறிகளால் செய்யப்பட்ட குழம்பு, கறிகளோடு படைக்கப்படும் ஆசாரப்படைப்பு. 


பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு  கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.
 

சொரிமுத்தையனார் கோயிலுக்கு கிடா செய்யப் போகிறோம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். ஆனால் அசைவப்படையல் இடுவது சொரிமுத்து ஐயனாருக்கோ, மகாலிங்கத்திற்கோ, சங்கிலி பூதத்தாருக்கோ, சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்களுக்கு கிடையாது. தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறாக்களுக்கே அசைவப்படைப்பு. கோயில் சென்றால் பாருங்கள். 
சொரிமுத்து ஐயனார்,மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்கள் இருக்கும் பகுதிக்கும், தளவாய் மாடசுவாமி, பட்டவராயன் கோயில்கள் இருக்கும் பகுதிக்கும் நடுவில் ஓடும் காட்டாறு மணிமுழுங்கி மரம் பக்கமாக ஓடும் காரையாற்றில் வந்து சேரும். தளவாய் மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவப் படைப்பு இட்டு சாப்பிட்டு வருபவர்கள் குளித்த பின்னே சொரிமுத்து ஐய்யனார் வகையறாக்கள் இருக்கும் இந்தப்பக்கம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தக்காட்டாறு ஓடுவதாக தலவரலாறு கூறுகிறது. முப்பது ஆண்டுகள் முன் வரை தளவாய் மாடசுவாமி மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவம் சாப்பிட்டு வந்தவர்கள் காட்டாற்றில் அல்லது காரையாற்றில் குளித்த பின்தான் சொரிமுத்தையனார் வகையறாக்கள் இருக்கும் பகுதிக்கு  வந்தனர். தற்போது தளவாய் மாடசுவாமி, பட்டவராயன் கோயில்கள் செல்வதற்கும், அம்மன் கோயில் முன்பும் காட்டாற்றின் மேல் பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.  பாலங்கள் கட்டப்பட்டு, பாதைகள் சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கிற்காக செல்வது போல் கோவில்கள் எல்லாம் சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்ட இந்தக் காலத்தில் கோயில் நியதிகள், ஆலய   விதிமுறைகள் கடைபிடிப்போர், பின்பற்றுவார் யாருமில்லை.

Friday, July 03, 2015

சுவாமி சங்கிலி பூதத்தார் திருநெல்வேலி மாநகரம் வந்த கதை.


அருள்மிகு சுவாமி சங்கிலிபூதத்தார் திருப்பாற்கடலில் அமுதத்துடன் அவதரித்தது முதல் சிவபெருமான் ஆசியுடன் திருக்கைலாய காவல் நிர்வாகப் பொறுப்பேற்றது மற்றும் திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி பல புண்ணிய ஷேத்திரங்கள் பயணம் செய்து, திருவிளையாடல்கள் பல புரிந்து திருச்செந்தூர், திருக்குறுங்குடி வழியாக தென்கைலாயமாம் பொதிகை மலை அடைந்து எம்பெருமான் அருள்மிகு மகாலிங்கம் சுவாமியின் அருளாசியோடு சொரிமுத்தையனார் கோயிலில் ஐந்து நிலையம் அமைத்து அருள்பாலித்து வருவதை அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு மூலம் அறிந்தோம்.

சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதையை இப்போது பார்ப்போம்.





சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதையை அய்யன் ஆணைப்படி படிப்போர் ஆனந்தம் பெறுமாறு நெல்லை வட்டார பேச்சுத் தமிழிலே  எழுதியுள்ளேன்.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி பூதத்தாருக்கு தனித்தனியா 21 நிலையம் இருக்கு… தெரியுமா… அந்த கதையையும் இப்போ சொல்லிடுதேன்…. நெல்லையப்பர் கோயில் கொடிமரத்திற்காக மரம் வெட்ட பொதிகை மலைக்கு போனவங்க விபரம் தெரியாம, சங்கிலி பூதத்தார் இருந்த பிரம்மாண்ட மரத்தை வெட்டி சாய்ச்சுட்டாங்க…. அந்த காலத்துல என்ன இப்போ மாதிரி லாரி,டிரெயிலரா உண்டு….. வெட்டின மரத்துல 'நெல்லையப்பர் கோயில் கொடிமரம்'ன்னு குறிப்பு எழுதி தாமிரபரணி ஆத்துல தள்ளிவிட்டுட்டு  எல்லோரும் திரும்பி வந்துட்டாங்க… மழை பெஞ்சு தாமிரபரணி ஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த மரம் திருநெல்வேலி சேந்திமங்கலம் (மணிமூர்த்திஸ்வரம் ) பக்கத்துல கரை ஒதுங்கிட்டு. குறிப்பு பார்த்த ஊர்மக்கள் கோயிலுக்கு தகவல் சொல்லி விட கோயில்ல இருந்து 50.60 மாடு கட்டுன பெரிய வண்டியோட வந்து மரத்தை ஏத்தி கொண்டு போனாங்க….


டவுண்  நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளம் வரை போன வண்டி அதுக்கு மேல நவுர மாட்டேன்கிது… 100 குதிரையை கட்டி இழுங்காங்க… 50 யானையை கொண்டு இழுக்காங்க… வண்டி அசையக்கூட இல்லை…. இது என்னடா சோதனைன்னு எல்லாரும் முழிச்சுகிட்டு இருக்கும் போது ஒரு வயசான ஆளு மேல சங்கிலி பூதத்தார் சாமி வந்து ‘ நான் இருந்த மரத்தை  வெட்டி கொண்டு வந்துட்டியளேடா’ ன்னு குதிச்சு, குதிச்சு ஆடுதாரு. ‘ சரி.. நடந்தது நடந்து போச்சு..என்ன பரிகாரம் பண்ணனும்’ன்னு கோயில் நிர்வாகத்தார் கேட்க, ‘கோயிலைச் சுத்தி 21 நிலையம் வச்சு வருஷம் தவறாம கொடையும் விட்டு கொடுக்கணும்’ன்னு சத்தியம் வாங்கின பிறகுதான் வண்டி நவுண்டுச்சாம்…கொடி மரமும் கோயில் போய் சேர்ந்துச்சாம்…



திருநெல்வேலி டவுணுக்கு எப்போ போனாலும் பாருங்க… தெப்பக்குளம் கரையில ரோட்டுப்பக்கமா 'முத்து மண்டபம்'ன்னு பூதத்தாருக்கு முதல் நிலையமும், அப்படியே நெல்லையப்பர் கோயில் கோட்டைச்சுவரை சுற்றி எல்லா ரத வீதியிலயும்  மத்த கோயில்களும் இருக்கு… இப்படித்தான்  அந்த இடத்துக்கு ‘பூதத்தான் முக்கு’ன்னும் பேரு வந்துச்சு. வருஷாவருஷம் கொடையும், பூக்குழி இறங்குறதும் ரொம்ப விஷேசமா நடந்துகிட்டு இருக்கு… 


எல்லாம் அய்யன் அருள்.

நன்றி.வணக்கம்.