Wednesday, July 31, 2019

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாஓங்கு சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்த நாள் முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என பல தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து விட்டது. அனுதினமும் ஆட்கள் வர, வர நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள்  கேட்டு விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.

பூதகணங்கள் அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர் உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம் முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு பாஷை எனக்கு தெரியாதே. மேலும் உமா-மகேஷ்வரர் ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனேஎன்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த வேண்டாம் அகத்தியரே, தென்தேச மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.

அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில் நீராடி, புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து எம்பெருமான ஈசன் அருளால் வானுயரம் கொண்டு வழிமறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி, வாதாபி போன்ற கொடிய அசுரர்களை வதம் செய்து, குடகு மலையில் தவம் இருந்த நேரம் காக வடிவில் வந்த கணேசர் கங்கை நதி இருந்த கமண்டலம் கவிழ்க்க காவிரியை உருவாக்கி என மேலும் பல திருவிளையாடல்கள் புரிந்து மக்களுக்கு அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்ச்சங்கம் கடந்து, திருநெல்வேலி அடைந்து நெல்லையப்பரையும், காந்திமதியம்மனையும் தரிசித்து நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போகும் வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர் அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

இப்படியாக அம்பை, கல்லிடை நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை அடைந்த அகத்தியருக்கு சித்திரை விசு தினத்தன்று பாபநாசம் கல்யாண தீர்த்தக் கரையில் மணக்கோல காட்சி தந்தார் மகேஷ்வரர் உலகம்மையோடு. வந்த காரியம் நிறைவேறி விட்டாலும் வல்லோன் ஆணைப்படி வடக்கு திரும்பாமல் பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்திட்டார் அகத்தீஸ்வரர். தண்பொருநையாம் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து உலக நன்மைக்காக தினமும் வேள்வி, யாகம் நடத்தி வந்த போது ஒரு ஆடி அமாவாசை திருநாளன்று காரையாற்றங்கரையில் சுயம்புவாய் உருவெடுத்திருந்த மகாலிங்க சுவாமிக்கும், பூரணகலை புஷ்பகலை சமேத அய்யனார் சாஸ்தாவிற்கும் முப்பது முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிக்களும் பொன் மலர்கள், முத்து மலர்கள் சொரிந்து வழிபடுவதைக் கண்ட அகத்தியர் தானும் அந்த விசேஷ வழிபாட்டில் கலந்து கொண்டு முக்தி பெற்றார்.

காலமாற்றம் அடைந்த கலிகாலத்தில் சேரநாட்டுப்பகுதியாக இருந்த பொதிகை மலை காட்டுப்பகுதி வழியாக பாண்டிய நாட்டு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இறைவனின் திருவிளையாடலால் மாடுகளின் காலடிக் குளம்பு பட்டு சுயம்பு லிங்கத்தில் இரத்தம் பீறிட்டு வருவதைக் கண்டு வணிகர்கள் திகைத்து நின்ற பொழுது அசரிரி ஒலித்து தலவரலாறு சொல்லியது. வணிகர்கள் மூலம் விவரம் அறிந்த சேர மன்னர்கள் அவ்விடத்தில் மகாலிங்க சுவாமி, பொன் சொரிமுத்து அய்யனார் மற்றும் இருபத்தியொரு மாட தேவதைகள், தெய்வங்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டனர். சேர தேசத்தில் மார்த்தாண்ட மன்னர் வாரிசுக்கு எதிராக எட்டு வீட்டுப் பிள்ளைமார் கலகம் செய்த போது இழந்த ஆட்சிப் பொறுப்பை மீட்க உதவியதால் பரிசாக வழங்கப்பட்ட பொதிகை மலைப்பகுதியும், சொரிமுத்தையனார் ஆலயமும்  சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்கு சொந்தமானது.

பன்னெடுங்காலத்திற்கு முன் அந்தண குலத்து பட்டவராயர் பொம்மக்கா, திம்மக்காவை விரும்பி மணந்ததால் குலம் மாறி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சொரிமுத்தையனார் கோயில் அருகே காட்டாற்றங்கரையில் ஆநிரைகளை கவர வந்த திருடர்களுடன் ஏற்பட்ட சண்டையின் போது பட்டவராயர் கொல்லப்பட, அவரது இரு மனைவிகளும் தாங்கள் வாழ்ந்த பொதிகை மலை அரசரான சிங்கம்பட்டி மன்னரிடம் அனுமதி பெற்று உடன்கட்டை ஏறிட ஆலய வளாகத்தில் காவல் நாய்கள் காச்சி, பூச்சியுடன் பொம்மக்கா, திம்மக்கா சமேதமாய் பட்டவராயர் காவல் தெய்வமானார்.
பல நூற்றாண்டுகளாய் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு வந்து தங்கி வணங்கும் பாபநாசம் காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலயத்தில் பட்டவராயர் கோமரத்தாடிகள் ஆடிஅமாவாசை தின இரவு அரச உடையில் காட்சி தரும் சிங்கம்பட்டி மன்னரின் முன் இன்றளவும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். வேடமிட்டு, பாரம்பரிய நகை, உடை அணிந்து,  சிலம்பம் சுற்றி, சண்டை இட்டு, பின் தாயாரே அடித்து ஒப்பாரி வைத்து மன்னரிடம் அனுமதி பெற்று பூக்குழி இறங்குதல் என்னும் தீ பாய்ந்தல் நிகழ்வோடு தென்கைலாயமாம் பொதிகை மலை ஆடி அமாவாசை திருவிழா இனிதே முடிவுறும்.திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலய ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசின் ஆதரவுடன் வருடா வருடம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, வனத்துறை, காவல் துறை, சுகாதார துறை மூலம் சிறப்பு பேருந்துகள், அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து திருக்கோவில் நிர்வாகம் விழாவை சிறப்பாக நடத்த உதவி வருகிறது.

பொன் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா காண அனைவரும் வருக. அய்யன் அருள் பெறுக.

Tuesday, July 30, 2019

தென்கைலாயமாம் பொதிகை மலை ஆடி அமாவாசை திருவிழா


ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அருள்மிகு சொரிமுத்தையனார் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்பு வேண்டுகோள்கள்.

1)   தலைமுறை, தலைமுறையாக நமது முன்னோர்கள் வழிபட்டு வரும் ஆலயத்தின் சிறப்பையும், மாண்பையும், கோயிலில் குடிகொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களின் திருவிளையாடல்களையும் உடன்வரும் அவரவர் குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி வழிவழியாக காத்து வரும் புனிதம் காக்க வலியுறுத்துவோம்.
2)   அரசு நிர்வாகம் போக்குவரத்து துறை மூலம் செய்துள்ள வாகன வசதி ஏற்பாடுகளையும், விதி முறைகளையும் பயன்படுத்தி கூட்ட நெரிசல் தவிர்ப்போம்.
3)   வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வருவதையும், பயன்படுத்துவதையும் தவிர்ப்போம்.
4)   சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இலவசக் கழிப்பிட வசதிகளை முறையாகப் பயன்படுத்தி சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான அன்னை தாமிரபரணி ஆற்று நீரில் மாசு ஏற்படாதாவறு காப்போம்.
5)   வனத்துறையின் அனுமதியுடன் கோவிலைச் சுற்றி திருக்கோவில் நிர்வாகம் அமைத்துள்ள தற்காலிக குடில் வசதிகள் தவிர மற்ற காட்டுப் பகுதிகளில் தங்குவதை தவிர்ப்போம்.
6)   திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் தற்காலிக மின்சார வசதிகளை முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
7)   காட்டுக்குள் வாழும் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு இடையூறான ஒளி,ஒலி மாசு தவிர்ப்போம்.
8)   சந்தேகத்திற்குரிய மனிதர்களின் நடவடிக்கைகளை காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை அரங்குகளில் உடனுக்குடன் தெரியப்படுத்தி அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
9)   சிங்கம்பட்டி ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் மணிமுத்தாறு அணையின் மேற்கு பகுதி கடைசியில் அமைந்துள்ள முதலாம் எண் வாசல் வரை வாகனங்களில் வந்து, பின் அங்கு அமைந்துள்ள  வனத்துறையின் தற்காலிக அரங்கில் ஊர், பெயர், முகவரி, அலைபேசி எண், உடன் வரும் நபர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் தெரிவித்து, தடை செய்யப்பட்ட பொருட்களை முற்றிலும் தவிர்த்து வனத்துறை அலுவலர்களின் முறையான அனுமதியுடன் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
10)  யானை, கரடி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்பட்டால் வந்த வாகனத்திலே திரும்பி அகத்தியர் பட்டி வந்து அரசு வாகனங்கள் மூலம் கோயிலுக்கு செல்லுங்கள். வேறு எந்த காட்டு வழியாகவும் கோயிலுக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்.
11)  சிங்கம்பட்டி ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை செல்ல வனத்துறை அலுவலர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் கூடுமானவரை குறைந்தது பத்து, பதினைந்து பேர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நான்கைந்து பேராக தனியாக செல்வதை தவிருங்கள். உடன் வரும் குழந்தைகளை முன், பின் தனியாக விடாமல் குழுவின் நடுப்பகுதியில் நடத்திச் செல்லுங்கள்.
12)  வறட்சிகாலம் என்பதால் வனவிலங்குகள் ஆற்றுக்கு நீர் குடிக்க வந்தாலோ, உணவு தேடி எதிரில் வந்தாலோ எந்த விதமான தொந்திரவும் செய்யாதீர்கள்.
13)   சமையல் செய்ய தேவையான விறகு, அடுப்பு மற்றும் எரிவாயு உருளைகளை வனத்துறை அனுமதியுடன் எடுத்துச் செல்லுங்கள். கோவிலைச் சுற்றி காட்டுக்குள் விறகு சேகரிப்பது சட்ட விரோதம் என்பதால் திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் தேவையான விறகுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
14)  மொட்டை போடுவது, காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் அமைத்துள்ள அரங்குகளில் உள்ள பணியாளர்கள் மூலம் செய்யுங்கள்.
15)  பலநூறு ஆண்டுகள் பாரம்பரியமான சொரிமுத்தையனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை பரம்பரை அறங்காவலர் சிங்கம்பட்டி ஜமீன்தாரர் மேதகு தீர்த்தபதி மகாராஜாவின் சீரிய முயற்சியால்  ஒவ்வொரு வருடமும் அனைத்து அரசு துறைகளின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துக் கொண்டு சிறப்பான முறையில் நடத்தி வரும் திருக்கோவில் நிர்வாகத்திற்கு அன்பையும், ஆதரவையும் அனைத்து பக்தர்களும் வழங்குவோம் என உறுதி கொள்வோம்.

தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருபத்தியொரு மாட தெய்வங்கள் மற்றும் தேவதைகளுடன் அருள்பாலித்து வரும் பொன் சொரிமுத்தையானார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனைத்து ஊர் பக்தர்களையும் வருக, வருக என வரவேற்கிறோம்.

அனைவரும் வருக, அய்யன் அருள் பெறுக.

Friday, July 26, 2019

மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமம் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்.
ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் விசித்திரமான, வீரியமான பல விதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் சங்கொலி முழங்க கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார்.
அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும், வித்தகருக்கெல்லாம் வித்தகரும், முக்கண் மூத்தவருமான எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார்.
இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார். ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.
கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை.
'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்' (சட்டைநாதன்) என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.
‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார்.
இவ்வாறு அய்யன் சிவபெருமானிடம் ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரம் பெற்றதையே மூன்று முகமாக கொண்டு மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் தன்னை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார்.

Monday, July 22, 2019

மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா

மழை மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா 23.07.19, செவ்வாய் கிழமை.


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை கட்டப்படுவதற்கு முன் தற்போது நீர் தேக்கப் பகுதியாக உள்ள அனைத்து இடங்களுமே சிங்கம்பட்டி மக்களுக்கு சொந்தமான வயலும், தோப்பும், தோட்டங்களுமாக இருந்தன. அங்கு வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள் அடிக்கடி வரும் காட்டாற்று வெள்ளம் மற்றும் மலையிலிருந்து இறங்கி வந்து ஆடு, மாடு போன்ற வளர்ப்பு மிருகங்களையும், சில நேரம் மனிதர்களையும் தாக்கும் வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள தங்கள் குடியிருப்புகளை காலப்போக்கில் சிங்கம்பட்டி கிராமத்திற்கு மாற்றிக் கொண்டனர். ஆனாலும் காட்டாற்று ஓரமாய் பாறைகள் மேல் முன்னோர்கள் கட்டி வழிபட்டு வந்த கோயில்கள் இன்றளவும் அங்கே இருந்து வருகின்றன.

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகைக்கு கீழ் உட்பட்டிருந்த ஜமீன் சொத்துக்களான பொதிகை மலைப்பிரதேசங்கள் சுதந்திரமடைந்த பின் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டாலும், பூர்வபந்த பழக்கமாக மணிமுத்தாறு மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களின் திருவிழாக்கள் வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்றன.

மணிமுத்தாறு அருவிக்கரையில் சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர், கும்பாமுனி போன்ற இருபத்தியொன்று மாட தெய்வங்கள் மற்றும் பல சுவாமிகள் சமேதமாக அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சிங்கம்பட்டியில் இருந்து தவறாமல் சென்று வழிபடுவோர் உண்டு. வருடாந்திர கொடை விழாவின் போது பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவர். சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக ஊர் மக்களிடம் வரி பிரித்து ஆடுகள் வாங்கி பலியிட்டு, அசைவப் படையல் போட்டு சுவாமிகளுக்குப் படைத்த பின்னர் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் அனைத்து பக்தர்களுக்கும் பந்தி போட்டு, அன்னதானம் பரிமாறுவது பல தலைமுறைகளாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.

சிங்கம்பட்டி ஊர் மக்கள் மட்டுமல்லாமல் ஏர்மாள்புரம், பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அக்கம்பக்க கிராம மக்கள் மற்றும் மணிமுத்தாறில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் மற்றும் ஒன்பதாம் அணியினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, கோதையாறு மின்சாரத்துறை மற்றும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் ஊழியர்கள் பலரும் குடும்பங்களோடு கலந்து கொள்வர். மேலும் தங்களால் முடிந்த காணிக்கைகளை வரிப்பணமாகவோ அல்லது அன்னதான சமையலுக்கான பொருட்களாகவோ கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து விடுவர்.


கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் செவ்வாய் மதியம் முதல் தனிப்பந்தலில் பந்தி போட்டு அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும். புதன்கிழமை அதிகாலை பூஜை முடிந்தவுடன் அசைவப்படையலைப் பிரித்து, கொடை காண வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பந்தி போட்டு பரிமாறி விடுவார்கள். படையல் சோறு, கறி மற்றும் அன்னதானப் பிரசாதங்கள் அனைத்தையும் மலையை விட்டு கீழே எடுத்து வரும் பழக்கம் கிடையாது என்பதால் கோவிலிலே விநியோகித்து முடித்து விடுவது வழக்கம்.

பொதுவாக மற்ற நாட்களில் மாலை ஐந்து மணிக்குள் மணிமுத்தாறு அருவி, எஸ்டேட் செல்லும் வண்டிகள் கீழே வந்து விடவேண்டும். யாருக்கும் மலைமேல் தங்கும் அனுமதி கிடையாது. ஆனால் அருவிக்கரை அம்மன் கோவில் கொடையான செவ்வாய் இரவு மட்டும் கோவிலில் பக்தர்கள் தங்க சிறப்பு அனுமதி உண்டு. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துறை பாபநாசம் பணிமனையின் சார்பாக கொடை தினமான செவ்வாய் கிழமை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மணிமுத்தாறு சென்று விட்டால் அங்கிருந்து தனியார் வேன்களிலும் டிக்கெட் போட்டு அழைத்துச் செல்வர். செவ்வாய் இரவு முழுதும் வாகனங்களில் பக்தர்கள் சென்று அம்மனையும், பிறதெய்வங்களையும் வழிபட்டு வருவார்கள்.


மழை மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடை விழா காண அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம்,