Saturday, November 10, 2018

ஊத்துக்குழி - பாகம் 2


நீர் இருக்கும். மோர் இருக்காதுமேலே இருக்கும் கதைகளை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 2 - பலநாள் திருடன்

கண்ணில் படும் காட்சியை எல்லாம் பார்த்து ஏதாவது கணக்குப் போட்டு கொண்டே இருக்கும்.மனித மனம் மிகவும் விசித்திரமானது. விநோதமானது. விபரீதமானது. நம் மனதுக்குள் நொடிக்கு நொடி ஆயிரமாயிரம் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் மனமோ எது நல்லது, எது கெட்டது என்று பிரித்தறியாது அனைத்திலும் பற்று வைக்கும். பின் அதைப் பற்றியே அடிக்கடி நினைக்க வைத்து ஆசை ஏற்றும். ஆசை வெட்கம் அறியாது. நாள்பட, நாள்பட ஆசையான பற்று வெறி ஆக மாறி விடும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று அனுபவித்து அறிந்த பெரியோர் சொல்லி வைத்தார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது. நான் நல்லவன் என்பது நம் மீது கொண்ட நம்பிக்கைப் பற்று. நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். நான் மட்டுமே நல்லவன் என்பது அடுத்தவர் மீது குற்றம் கண்டு விமர்சிக்கும் வெறி. ஜாதி, மத, அரசியல் பற்று பொருள், பதவி அடைய ஆசை கொடுப்பதால் வெறியாக மாறி பல விபரீதங்களுக்கு காரணமாகி, கலகங்களும், கலவரங்களும் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு தனி நபரின் ஆசையால் அமைதியான புலிப்பட்டி ஊரில் ஏற்பட்ட அனர்த்தங்கங்களும், பலரது வாழ்க்கையில் பிரச்சினைப் புயல் அடித்து புரட்டி போட்ட சம்பவங்களின் தொகுப்பே இக்கதையின் சாராம்சமாகும்.


ஆற்றுச் சாலையில் இருந்து ஊத்துக்குழி சிவாலயத்திற்கு ராமசாமிப் போத்திக்கு சொந்தமான வயல்களுக்கு இடையேயான வரப்புகள் வழியேதான் செல்ல வேண்டும். ராமசாமி போத்தி கடும் உழைப்பாளி. காலை முதல் மாலை வரை வயலிலே ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருப்பார். பின் மாலை வெயில் அடங்கும் நேரம், ஆற்றில் சென்று குளித்து விட்டு, அகத்தியர் கோயிலை நோக்கி கை எடுத்து கும்பிட்டு விட்டு, கரையோரம் உள்ள நொச்சி செடியில் சில இலைகளைப் பறித்து காதுகளில் செருகி கொண்டு வீடு நோக்கி வந்து விடுவார்.

ஊரின் நடுவே அமைந்துள்ள லாந்தர் கல்லுக்கு (கல்லால் ஆன விளக்குத்தூண்)  தென்பக்கத்தில், மணிமுத்தாறு செல்லும் பாதையின் மேல்பக்கத்தில் தந்தை வழிப்பங்காளிகள் வீடுகள் சூழ்ந்து இருக்க அவரது பெரிய வீடும், தொழுவமும் பக்கத்திலே உரக்குழியும் இருந்தன. எல்லா வளமும் கொடுத்த இறைவன், ஒன்றுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் ராமசாமிப் போத்திக்கு குழந்தைச் செல்வம் மட்டும் கொடுக்க வில்லை. எனவே தன் வயல், வரப்புகளில் வளரும் பயிர்களையே தன் பிள்ளைகளாக எண்ணி வாழ்ந்து வந்தார். அவரது அந்த சந்தோஷத்திற்கும் சமீப காலமாக சங்கடம் வந்துவிட்டது.


ராமசாமிப் போத்தி ஆசை ஆசையாக வளர்த்து வரும் பயிர்களில் உள்ள காய்கறிகளுக்கு ஆசைப்பட்ட யாரோ அன்றாடம் மாலை அவர் வ்யலை விட்டுப் போனதும் திருட்டுத்தனமாக பறித்து எடுத்து சென்று கொண்டு இருந்தனர். காய்கறிகள் களவு போவது குறித்து கூட போத்தி கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைகள் போல் வளர்த்த செடி, கொடிகளை இழுத்து, ஏறி மிதித்து, ஒடித்துப் போட்டு அழித்து செல்வதைத் தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் மலர்ச்சியோடு நின்ற செடிகள் மறுநாள்  காலை வந்து பார்க்கும்போது ஒடிந்து உயிர் விட்டு இருப்பதைக் கண்டு, மனம் வெதும்பி கவலையில் கண்ணீர் விடுவதைக் காண்போர் கலங்கி விடுவர்.

ஆரம்பத்தில் ஏதோ மிருகங்களின் சேட்டையோ என்றே எண்ணி வந்தார். பின் வரப்பிலும், வயலுக்குள்ளும் காலடித் தடங்களை பார்த்து இது மனிதர்களின் வேட்டையே என்ற முடிவிற்கு வந்தார். எப்படியாவது அந்த திருடனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இரண்டொரு நாள் இரவுக் காவலுக்கு செல்ல முயன்றவரை,. “இந்த வயதான காலத்தில் இரவுக்காவலுக்கு செல்ல வேண்டாம்” என்று இரண்டு மனைவியரும் ஒரே குரலில் கூறியதால் மறுத்துப் பேசாமல் மனதை மாற்றிக் கொண்டார்.


ஒரு சில மாலை நேரங்களில் வயலில் இருந்து திரும்பி ஆற்றுக்கு சென்று குளித்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் மறுபடியும் வயலுக்குப் போய் பார்த்தாலும் யாரும் பிடிபடவில்லை. ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் போத்தி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. உறுதிப்படுத்த தான் முடியவில்லை. அன்று ஏனோ அவர் மனதில் ஏதோ தோண, ஆற்றுக்கு கூட குளிக்கச் செல்லாமல் மேல வயலுக்கும், கீழ வயலுக்கும் இடைப்பட்ட ஓடைப்பள்ளத்தில் ஒளிந்து அமர்ந்து கொண்டார். மேலவயலை விட கீழ வயல் பள்ளத்தில் இருந்ததால் அவர் ஒளிந்து அமர்ந்து இருந்தது வரப்பில் நடந்து செல்பவர்களுக்கு தெரியாது. ஆனால் பள்ளத்தில் இருந்து சுற்றி நடப்பதைப் பார்க்க முடியும்.நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உருவம், வரப்புகள் வழியே சென்றாலும், எதிர்பார்த்தபடி ஏதும் செய்யாமல் அவர் வயலை கடந்து சென்றது. ராமசாமிப் போத்தி சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் இன்று எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து நடப்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளாமல் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று  முடிவு செய்து விட்டார். அவர் காத்திருந்த்து வீண் போகவில்லை. முக்கால் மணி பொழுது ஆனபின் திரும்பி வந்த உருவம், சுற்றும் முற்றும் பார்த்து ஆட்கள் யாரும் இல்லை என்பது உறுதியானவுடன், வரப்பில் இருந்த செடி, கொடிகளில் இருந்து காய்கறிகளை அவசரம், அவசரமாக முறித்து, பறிக்க ஆரம்பித்தது.

ஓடைப்பள்ளத்தில் இருந்து உருவத்தின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருந்த போத்தி சத்தம் எழாமல் பதுங்கி, பதுங்கி திருடனின் பின்புறமாக வந்து மேல்துண்டை வீசி முறுக்கிப் பிடித்தார். திருட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாலும், இருட்டும் நேரம் என்பதாலும் ராமசாமிப் போத்தி பதுங்கி, பதுங்கி வந்ததை பார்க்க முடியாத திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான்.

(தொடரும்)

No comments: