உருண்டோடும் இந்த
பூமிப்பந்தில் ஆச்சரியங்களும், அதிசயங்களும் மட்டுமல்ல அமானுஷ்யங்களும் நிறைந்ததுதான்
பாச,பந்தங்களால் பிணைக்கப்பட்ட மானிட வாழ்க்கை. ஏற்றம், இறக்கம் எத்தனையோ கொண்ட
வாழ்வின் பல கட்டங்களில் நான் சந்தித்த பல அசந்தர்ப்பமான சம்பவங்களை ஏற்கனவே
போன்ற பதிவுகளில்
பகிர்ந்துள்ளேன். கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய்
என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியும் மேலே குறிப்பிட்டவை போன்ற ஒரு அனுபவப் பகிர்வே ஆகும்.
காலை உடைத்த காஞ்சனா….
பாகம் 1 – பாலாப்பூர் சாரஸ்தா
மின்னியலில் தொழில்நுட்ப
படிப்பு முடித்து சென்னை சென்று வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தில் பணி நிமித்தமாக அவ்வப்போது
இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் பத்தாண்டுகளாக பெரும்பாலும் தாய்த்தமிழ்நாட்டில்தான்
பணி. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் ஆந்திர மாநில கிளைத்திட்டத்தில்
நல்லதொரு வாய்ப்பு கிடைக்க 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று சென்னையில் இருந்து கிளம்பி
தெலுங்கு தேசம் சென்றேன். ஹைதராபாத் இரயில் நிலையத்தில் இறங்கி கிளை மேலாளரை அலைபேசியில்
தொடர்பு கொண்டு செல்ல வேண்டிய இடத்தின் முகவரி வாங்கினேன். சென்னையின் தியாகராயநகர்
போன்ற வணிக அங்காடிகள் நிறைந்த கோட்டி எனும் இடம் தாண்டி DRDO வழியாக பாலாப்பூர் எனும் ஊரை ஆட்டோ மூலம் அடைந்தேன்.
பாலாப்பூர் இயற்கை
வளம்மிக்க பசுமையான பல அழகான கிராமங்கள் சூழ்ந்த குடியிருப்புகள் நிறைந்த ஊர். பல சிறிய
கிராமங்களும் கிளைச்சாலைகள், இணைப்புச்சாலைகளால் இணைக்கப்பட்ட நான்கு முக்கிய சாலைகளின்
சந்திப்பாக (கூட்டு ரோடு) பாலாப்பூர் சாரஸ்தா (சார்+ரஸ்தா) இருந்தது. கிராமங்களில்
இருந்து வரும் பால், அரிசி, கீரை, காய்கறிகள் சுத்தமாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால்
ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் வேலை செய்யும் பலரும் பாலாப்பூரில் குடும்பத்தோடு
தங்கி இருந்தனர். எங்கள் திட்ட அலுவலகம் இருந்த இடம் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர்
தூரத்தில் RCI செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் இருந்தது.
எனவே எங்கள் நிறுவனமும் பாலாப்பூரிலே தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தனர்.
நான் தங்கும் இல்லத்தை அடைந்த போது மணி காலை ஒன்பது ஆகிவிட்ட படியால் அங்கு தங்கியிருந்த அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். அங்கு காத்திருந்த கிளை மேலாளரான கவாண்டே எனும் மராட்டியர் என்னைப் பார்த்தவுடன் “ஹிந்தி தெரியுமா” என்று கேட்கவும் “தோடா தோடா” என்றேன். இரவுப்பணிக்கு சென்ற இரண்டு பேர் வரும் வரை என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவர் அதில் வடமாநிலத்தை சேர்ந்தவன் போலிருந்தவனிடம் நான் குளித்து கிளம்பியவுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் போன்றவற்றோடு அலுவலகம் அழைத்துக்கொண்டு வருமாறு கூறிச்சென்றார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அவனது பெயர் நரேந்திர குமார் பாண்டே என்றும் தமிழ்நாட்டின் செஞ்சியைச் சேர்ந்த இன்னொருவனது பெயர் தேசிங்கு எனவும் அவர்களுடனான அறிமுகத்தின்போது அறிந்தேன்.
நீண்ட இரயில் பயணக் களைப்பிற்கு இதமான வெந்நீரில் குளித்து, கிளம்பிய நேரத்தில் தேசிங்கு காலை உணவாக உப்புமா செய்துவிட சாப்பிட்டுவிட்டு தேவையான சான்றிதழ்களோடு கிளம்பி சென்றோம்.கையில் புகைப்படம் இல்லாத காரணத்தினால் சாரஸ்தா அருகில் இருந்த ஸ்டூடியோவிற்கு பாண்டே அழைத்துச் சென்றான். “தங்கும் இடத்திலிருந்து சாரஸ்தா வரும் வழியில் பல புகைப்பட நிலையங்கள் இருக்க ஏன் இங்கு அழைத்து வந்தான்…” என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அழகிய இளம்பெண்ணே பதிலாய் இருந்தாள்.
கடைக்கு உள்ளே நுழைந்தவுடன் அந்த பெண்ணிடம் “க்யாஹை….கைஸாஹை….”என்று பேச ஆரம்பித்த பாண்டே என்னை புகைப்படம் எடுக்கும் அறைக்குள் சென்று தயாராகச் சொன்னான். அந்த அறையில் இருந்த பெரிய கண்ணாடி முன் நின்று தலைக்கேசம் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துக் கொண்டிருந்த போது வெளியில் பாண்டே அந்தப் பெண்ணுடன் சத்தமாக உரையாடுவதும் அவள் கலகலவென்று சிரிப்பதும் காதில் விழுந்தது. கைக்குட்டையால் முகத்தை லேசாக துடைத்து விட்டு கேமரா முன் இருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன் “போட்டோ எடுக்கலாமா…” என்ற குரல் கேட்டு நிமிர்ந்ததும் அதிர்ந்தேன்.