Wednesday, September 30, 2015

காதல் தேர்...



தேர் செல்லும்
 வீதியெல்லாம்
திட்டமிட்ட
அளவு...

 திகட்ட திகட்ட
பார்த்தாலும்
திருப்தியாகவில்லை
 தேவதை 
உன்  பேரழகு… 

---------------------------------------------------

அனைத்து கோயில்களிலும்
 ஆண்டுக்கொரு முறை
 தேரோட்டம்… 

 அழகணங்கவள்
 ஆழப்பதிந்திட்ட 
என் மனதில்
 இனியவள்
 எதிர்வரும் 
போதெல்லாம்
எத்தனை 
எத்தனை
 போராட்டம்... 

------------------------------------------------------


கீழே உள்ள  போட்டிகளுக்கு கட்டுரை, கவிதைப் படைப்புகளை அனுப்பி முடித்ததை கொண்டாட உடைத்த பூசணிக்காய் கவிதை தான் இந்த              'காதல் தேர் ' 

------------------------------------------------------------





   போட்டிக்கு நான் அனுப்பிய  கட்டுரைகள்


வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி



போட்டிக்கு நான் அனுப்பிய  கவிதைகள்

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி


அனைத்துப் படைப்புகளையும் படித்து மகிழுங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தொடர்ந்து பகிருங்கள்.


நன்றி. வணக்கம்.


பசுமைப் பண் பாடு….



வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை


பசுமைப் பண் பாடு….

கடவுள் கொடுத்தார்
காடு, மலை, அருவி வளம்..

ஆதிமனிதன் அழித்தமைத்தான்
ஆறு, ஏரி, குளம்...

அடுத்து கண்டான்
உணவுக்காக வேளாண்மை..

வளர்த்துக் கொண்டான்
ஆடு, மாடு மேலாண்மை...

கருவி பல
கண்டுபிடிக்கும் முன்னே..

பூச்சி அழிக்கும் பூச்சி தந்து
காட்சி அறிவு கண்முன் தந்து
தெளிய வைத்தது தாய்மண்ணே...

பூச்சியால் அழியா பூச்சி ஒழிக்க
சிட்டுக் குருவி, பறவை
தவளை, அயிரை
கூட உதவி செய்தது தன்னே...

பார் முழுதும் விவசாயம் போற்றி
புகழ்ந்து பாடியது பண்ணே….

அறிவியல், விஞ்ஞானம்
அதிரடியாய் வளர்ந்திட
எந்திர மயமானது
இயற்கை வேலைகள்…

அடிமாடாகி போனது
அருமையாக வளர்த்த காளைகள்…

பால் கொடுப்பதால்
தப்பின சில பசுக்கள்..

ஆயினும் பிரிக்கப்பட்டன
அருகிலிருந்த சிசுக்கள்...

ஒன்றுக்கும் உதவாமல்
போனது நாட்டு எருமைகள்..

புரியவில்லை ஒருவருக்கும்
அவை தந்த பெருமைகள்...

இயற்கை விவசாயம்
அழிந்து போய்
செழித்தோங்கியது
செயற்கை விவசாயம்….

பயிர் வளர்த்த நிலம்
தன் உயிர் விட்டது..

மரித்துப் போனது
மண்ணில் இருந்த
நுண்ணுயிர் எல்லாம்...

தவளை, மீன்  செத்துப்போனது
செயற்கை மருந்து சாயத்தில்..

குருவி, பறவை
கொத்து கொத்தாய்
அழிந்து போனது
விஷ மருந்து வீரியத்தில்…

ஆற்று மண் அள்ளி, அள்ளி
நிலத்தடி நீர்மட்டம்
கீழே, கீழே போயாச்சு…

ஆயிரம் அடி தள்ளி
போர் போட்டாலும்
தண்ணீர் இல்லை என்றாச்சு…

ஏரி, குளம் மாறி
அடுக்குமாடி வீடு ஆயாச்சு...

காடு,மலை எரிக்கப்பட்டு
காபி.டீ. ஏலக்காய் என 
எஸ்டேட் எத்தனையோ வந்தாச்சு...

கான மழை போய்
இப்போ கடும்புயல்
வந்தால்தான் மண் நனையும்
 மழை,வெள்ளம் என்றாச்சு...

பேராசை பெருநஷ்டம் என்றுணர்ந்து
மனம் மாற வேண்டிய தருணம் இது..

மறுத்தால் இயற்கை தரும்
கொடும்பரிசு மரணம் அது..

மாநிலம் தோறும்
மனித குலம் பூமி மீது
பூச வேண்டிய வர்ணம்
பசுமை பண்பாடு…

மறந்திடாமல் எப்போதும்
நீ இயற்கைப் பண் பாடு…

-------------------------------------------------------------------------------------------------------

 " பசுமைப் பண் பாடு…" என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...



மதுவினை மறந்திடு….



வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை


மதுவினை மறந்திடு….

பள்ளி, கல்லூரி
மாணவர், ஆசிரியர்
அரசு அலுவலர், தனியார்
ஊழியர், அதிகாரி
ஆண்,பெண்
சிறியவர், பெரியவர்
வேறுபாடு இல்லாமல்
சமத்துவ சங்கமம் 
மதுக்கடையிலே...

பதவி வேறுபாடு
பண்பாடு மறந்து
பலரும் விழுந்தனர்
மதி மறைக்கும்
போதை சாக்கடையிலே...

அன்றாட வேலை அனைத்திற்கும்
அரசிடம்  சலுகை எதிர்பார்க்கும் நீ..

சர்க்காருக்கே படி அளக்கிறாய்
சரக்கை வாங்கும் போது மட்டும்….

வீட்டினில் இருந்து
விருட்சம் போல்
வெளியினில் வந்தவன்..

பகல் வெளிச்சம் போனதும்
ரோட்டினில் விழுந்தாய்
விழலில் இறைத்த
விதையாய் மது போதையிலே...

போதை தேடிப் போகும்
உன் பாதை வழி
சரியா சொல்

ஒரு போதும் மறவாதே
உன்னை நம்பி
வீட்டில் உண்டு
பல பேதை, பெதும்பை
உருப்படுமா நில்...

ஆதிகாலத்தில்  அருமை முன்னோர்
மருந்தாக மூலிகைப் பட்டைகள்
இட்டுக் காய்ச்சினர்..

பாதிகாலத்தில்  படுபாவிகள்
பெருத்த லாபம் பார்க்க
இரசாயன் திட்டைகள் விட்டே காய்ச்சினர்...

அப்போது மது காய்ச்சும் இடம்
காட்டோரம் கரும்புக் கொல்லை..

இப்போது மதி மயக்க இட்டிடுவார்
எத்தனை எத்தனையோ மருந்து வில்லை...

உற்பத்தி செய்வோருக்கு
அள்ளிக் கொடுக்கும்
அட்சயப் பாத்திரம்..

உறிஞ்சிக் குடிப்போர்
உள்ளத்தில் எப்போதும்
நின்று எரிந்திடும்
இச்சை மாத்திரம்..

மது அருந்துவோர்
குடும்பம் ஏந்திடும்
கையில் பிச்சை பாத்திரம்... 

ஆண்டுக்காண்டு அரசுக்கு
 ஆயிரமாயிரம் கோடி வருமானம்..

அனாமதேய மக்களின் வாழ்க்கை
 என்ன பெறுமானம்...

மது விற்றுக் கிடைக்கும்
பணம் நாட்டிற்கு..

விரும்பிக் குடித்தோர்
உடல் வீணாகிப் போனது 
நோய் சீர் கேட்டிற்கு... 

மதுவை மருந்தாக
அருந்தினால் விருந்துண்ணலாம்..

அதுவே விருந்தாக
நீ அருந்தினால்
மருந்துண்ண வேண்டி வரும்...

மறந்து விடாதே எப்போதும் மனிதா
மது போதை பழக்கம் விட்டு 
நீயாக நீங்கா விட்டால் 
விதி முடியும் முன்னே
 வீணாய்  மண் உண்ண
 வேண்டி வரும் உன்னை...

-------------------------------------------------------------------------------------------------------

 " மதுவினை மறந்திடு…." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...




வேண்டாம் வெளிநாட்டு மோகம்...



வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை

வேண்டாம் வெளிநாட்டு மோகம்...

திரை கடலோடி திரவியம் தேடு  
பறையடித்துப் பாடிய 
பழந்தமிழர் பண்பாடு..

நரைகிழடாகும் முன் 
நல்செல்வம் சேர்த்திட
நாடு விட்டு நாடு சென்று
நாளும் நலிந்திடும் நம்
இளந்தமிழர் படும்பாடு...

கரித்திடும் கண்ணீர்
காளையர்தம் வாழ்க்கை
கசந்த சுவைபாடு..

எடுத்து கூறி இறக்கி வைக்கிறேன்
என் மனச்சுமைபாடு...

விளைநிலத்தை விலைநிலமாக்கி
வீட்டுப்பத்திரத்தை நோட்டெழுதி
காட்டும் இடத்தில் கையெழுத்திட்டு  
விசா என்னும் வெற்றுத்தாள் வாங்க
கையூட்டு கொடுப்பாய் கடன் வாங்கி..

உற்றார், உறவினர், நண்பரெல்லாம்
 விட்டுச் செல்வாய் மனசு நீங்கி...

விருப்பப்பட்டு வந்தாய் வெளிநாட்டிற்கு
விருந்தா கிடைக்கும் விமானம் இறங்கியதும்..

 அழையாவிருந்தாளி உன்னை
அழைத்துச் செல்வார் ஆளில்லா காட்டிற்கு... 

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் தங்க வைப்பார்
ஒரு வேளை உணவு மட்டுமே திங்க வைப்பார்

ஊருக்குள் நீ நுழைந்தால் ஒதுக்கி வைப்பார்
உன் உழைப்பை மட்டும் ஒரு குறை
 சொல்லாமல் பதுக்கி வைப்பார்...

படித்தவனே படாதபாடு படும்போது
படிக்காத பாமரன் உனக்கு பகட்டு வேலை
கிடைக்கும் என பகல்கனவு எதற்கு... 

விடைகொடுத்த வீட்டார் விழிநீர் மறந்து
வெளிநாட்டார் வரவேற்பு சரியில்லை
என  ஏன் வருத்தம்..

 குழம்பிக் கொள்வதில்
 இல்லை ஒரு அர்த்தம்... 

ஆலையில் வேலை  கிடைத்திட்டால் 
அதிஷ்டம் செய்தவன் நீ..

அல்லங்கில்
அதிகாலையிலே எழுப்பி
 ஆடு மேய்க்க அனுப்பிடுவார்..

ஓய்வில்லை மதியநேரம் 
கொளுத்தும் வயலில்
 ஒட்டகம் மேய்த்திட செய்வார்..

மாலை மங்கி இருட்டிய பின்னும்
 மாட்டுக் கொட்டகை 
சுத்தம் செய்திட சொல்வார்...

ஒருசாண் வயிற்றுக்கு 
நீ உழைப்பாய் பல ஆண்டு..

உயிரோடு ஊர் திரும்ப 
உன் முன்னோர் 
செய்திருக்க வேண்டும் 
பல திருத்தொண்டு...

கொடுத்திட்ட பணம் கூட
கிடைக்காது கூலியாய் உனக்கு..

குனிந்திட்டால்  நிமிரமுடியாது 
கொடுத்திடுவார் உன்னை
 பலியாய் உழைப்பிற்கு...

ஊருக்கு வந்தால்
 உரைப்பாயோ உண்மையை..

உள்ளூரிலே கிடைக்கும்
 பண்பாய் பல நன்மையை..

உணர்வாய் வெளிநாட்டு வேலையில் 
நல்லபலன் இன்மையை...

அடக்கிட வேண்டும்
அயல்நாட்டு மோகம்..

புண் பட்டிட வேண்டாம்
உன் அருமைத் தேகம்..

வாழ்வில்  முடிவெடுக்க வெண்டிய
முக்கியமானதொரு பொறுமை பாகம்..

புயல், மழையாய்  பொழிந்திடுமே
 மொழுது தவறாமல் 
நம் ஊர் மழை மேகம்..

வாழ்க்கை வீழ்ந்திடாமல்
எடுத்திடுவோம் இனி ஒரு வேகம்..

தயங்காது உழைத்திட்டால்
தணிந்திடுமே வறுமைத் தாகம்... 

காடு,கரை,ஏரி, குளம் காத்து
வீரிய விவசாயம் செய்வது
பழந்தமிழர் வழிவந்த பண்பாடு…

மாடு, மறை, குலம் சேர்த்து
இயற்கை விவசாயம் செய்து
 இழந்த செல்வம் மீட்போம்
இளந்தமிழா இதுவே
நம் புதுப்புறப்பாடு...

புத்துணர்ச்சி தந்திடும்
முப்பாட்டன் பறையோடு..

புகழ் கொண்டு வாழ்ந்திடுவோம் 
இனி பெருமனநிறையோடு...

--------------------------------------------------------------------------------------------------------

 " வேண்டாம் வெளிநாட்டு மோகம்... " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...