Wednesday, September 27, 2017

வண்டித் தடம் - பாகம் 7



பாகம் 7 - நியாயம் , அநியாயம்

எல்லா விவசாயிகளையும் போலவே பயிர் இட்டிருந்தாலும், இல்லாவிட்டிலும் தினம் காலை எழுந்தவுடன் வயலைச் சென்று பார்வையிடுவது புலியாண்டியின் வழக்கம். அப்படி மறுநாள் காலை வயலுக்கு சென்று பார்த்தவனுக்கு மிக்க அதிர்ச்சி. முந்தைய நாள் அவ்வளவு கஷ்டப்பட்டு, பதிக்கப்படிருந்த குழாய்களும், அவற்றின் மேல் பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சும் உடைக்கப்பட்டு, அவற்றை மூடி இருந்த மண்ணும் தாறுமாறாக  தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் வேதனைப்பட்டு வீடு திரும்பிய புலியாண்டி நேராக சுக்காண்டி வீடு சென்று பார்த்தால் ஆள் நடமாட்டமில்லாமல் வீடு பூட்டித்தான் இருந்தது என்றதும் புலிமுத்துவை அலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தான்.




தந்தை உட்பட வீட்டில் உள்ள யாரிடமும் எந்த விபரமும் கூறாமல், பல் கூட விளக்காமல் உடனடியாக நேரே பைக்கை எடுத்துக்கொண்டு முத்துசாமி வீடு சென்ற புலிமுத்து, வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். கதவைக்கூட திறக்காமல் எட்டிப்பார்த்த முத்துசாமி என்ன என்று கேட்க, “ ஒன்பது மணிக்கு திருப்பி வர்றேன். என்கூட நீங்க ஊருக்கு வரணும். இல்லைன்னா இனிமே நான் வரமாட்டேன். போலிஸ்தான் உங்களைத் தேடி வரும். எப்படி வசதின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க…” என்று கூறிவிட்டு வீடு திரும்பி விட்டான் புலிமுத்து.

வீடு வந்து குளித்து, சாப்பிட்டு, அலைபேசியில் புலியாண்டியிடம் முத்துசாமியை அழைத்து வரும் விபரம் கூறிவிட்டு, ஒன்பது மணிக்கு நேராக முத்துசாமியின் வீடு சென்றால் அவர் அங்கு இல்லை. “ என்ன இந்த ஆளு. இவ்வளவு சொல்லியும் இப்படி பண்றாரே… “ என்று எண்ணியவாறே வரும்போது அம்பை பேருந்து நிலையத்தில் முத்துசாமி நிற்பதைப் பார்த்து அருகே சென்று பைக்கை நிறுத்தினான் புலிமுத்து. “ நீ முன்னாடி பைக்ல போ. நான் பின்னாடி பஸ்ல வர்றேன்.” என்ற முத்துசாமியை, “ பரவாயில்லை. பைக்லே கூட்டிட்டுப் போயி திருப்பி கொண்டு விட்டுடுறேன். “ என்று கட்டாயப்படுத்தி ஏற்றி நேரே புலிப்பட்டி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

ஊருக்குள் வந்தவுடன் வேகத்தை குறைத்து பைக்கை நிறுத்தும்போது முத்துசாமியைப் பார்த்த சிலர் அருகே வந்து, “ சுக்காண்டிதான் அறிவு கெட்டுப் பண்றான்னா… சொக்காரன் நீயும் இப்படிப் பண்ணலாமா…” என ஆதங்கப்பட, “ என்னைப் பார்த்தா என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கா… ஆளாளுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் தகுதி இழக்கலை. நான் விஸ்வரூபம் எடுத்தா யாரும் தாங்க மாட்டிங்க…” என்று கண்ணை மூடிக்கொண்டு காச்மூச்சென்று கத்தியவரை, “ கெடுவான் கேடு நினைப்பான். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..” என்று கூறி காறித் துப்பியவாறு கலைந்து சென்றனர் நல்லது சொல்ல வந்தவர்கள். முத்துசாமியின் தரம்கெட்ட குணத்தால் கோபம் வந்தாலும் நாமும் அவர்போல் தாழ்ந்து போகக்கூடாது என்பதால் அடக்கிக் கொண்ட புலிமுத்து ஆக்சிலேட்டரை முறுக்கி பெருங்கால் வழியாக சென்று அடையாமடை அடைந்து கரை அருகே வண்டியை நிறுத்தி விட்டு வரப்புகள் வழியாக, வயல்கள் பல கடந்து தங்கள் வயலை அடைந்தனர்.

அவர்களைக் கண்ட்தும் அக்கம்பக்க வயல்காரர்களோடு அங்கு நின்று கொண்டிருந்த புலியாண்டி முத்துசாமி அருகில் வந்து, “ மாமா, இந்த சுக்காண்டி பண்றது ஒண்ணும் சரியில்லை. நாளுக்கு நாள் அவன் நடவடிக்கை மோசமாகுது. வயல் உங்களுதா… அவனுதா… என்ன இருந்தாலும் நம்ம சொந்தக்காரங்க.., பிரச்சினை ஏதும் வராதுங்கிற நம்பிக்கையிலதானே எங்க தாத்தா உங்க அப்பாவுக்கு வயல் சும்மா கொடுத்தாங்க… நீங்களே இப்படிப் பண்ணா ஊர்க்காரன் மதிப்பானா… என்று வருத்தப்பட்டுப் பேச, “ நீ தான்டா இவ்வளவுக்கும் காரணம். பண்ற பாவத்தை எல்லாம் நீ பண்ணிட்டு, இல்லாததையும், பொல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்லிட்டுத் திரியுற.. நீ ஒழிஞ்சா தான் எனக்கு நிம்மதி… “ என அவனிடமும் கோபக்கனலை அள்ளி வீசினார் முத்துசாமி.

அருகிலிருந்த புலிமுத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “ மாமா, உங்க வயலுக்கு இன்னொரு வயல் வழியாத்தானே வண்டி வரணும். இப்படி உங்க வயலுக்கு வர, போக முடியாம இன்னொருத்தன் வண்டித்தடம் மறிச்சா நீங்க விவசாயம் பண்ண முடியுமா… என் வயல் முன்னாடியும், உங்க வயல் பின்னாடியும் இருந்து நான் வழித்தடத்தை மறிச்சா, நீங்க பொறுப்பீங்களா…” என அமைதியாக கேட்க, “ ஏ… என்ன மிரட்டுறியா… உங்க தாத்தா, பெரியப்பா, அப்பா மாதிரி ஆளு இருக்கு… பணம் இருக்குன்னு ரொம்ப ஆடாதே… நான் சாபம் கொடுத்தா சங்கடப்பட்டுப் போயிடுவீங்க… உங்க பணபலத்துக்கு பயந்த ஆளு நான் இல்லை. நல்லா கேட்டுக்கோ. இந்த வயலை சுக்காண்டிக்குத் தான் கொடுக்கப் போறேன். அதுவும் பணம், காசுக்கு இல்லை. சும்மாதான் கொடுக்கப் போறேன். ஒருக்காலும் உங்களை நிம்மதியா விவசாயம் பண்ண விடமாட்டேன். பயிர் வைக்க முடியாம, நீங்களா இந்த வயலை வித்துட்டு ஊரை விட்டு போற வரை நான் ஓயவும் மாட்டேன், உறங்கவும் மாட்டேன். “ என சூளுரைத்தார் முத்துசாமி.

அநியாயம் செய்தது மட்டுமல்லாமல், தன்தரப்பு தவறை உணராமல், அவரது துர் எண்ணத்தையும், நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி,  ஊர்க்காரர், உறவினர், தனக்கு, தந்தைக்கு, தாத்தாவிற்கு, தமையன் புலியாண்டி என அனைவருக்கும் சாபம் கொடுத்து சங்கல்பம் செய்த முத்துசாமியை இதற்கு மேல் பேச விட்டால் சரிவராது என முடிவு செய்த புலிமுத்து, “  இப்படி சின்னத்தனமா பேசுறியே… நீ எல்லாம் ஒரு பெரிய  மனுசனா… இவ்வளவு வஞ்சத்தையும் மனசுல வச்சுகிட்டு தானே எல்லாரையும் உறவாடிக் கெடுத்திருக்கே… நீ நியாயமானவனா இருந்தா தானே உன் சாபத்துக்கு, சங்கல்பத்துக்கு நாங்க பயப்படணும்… உரக்கப் பேசுனா நீ சொல்றதெல்லாம் உண்மையாப் போயிடுமா… நீ எப்படிப்பட்ட சதிகாரன்னு எல்லாருக்கும் எப்பவே தெரிஞ்சு இருந்தாலும், எனக்கு இப்பதான் தெரிஞ்சுது. உன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னாடி காமிச்சுட்டே…. இப்ப மட்டுமில்லே… எப்பவுமே எங்களுக்கு உன் சகவாசமும் வேண்டாம். சங்காத்தமும் வேண்டாம்… நீங்க பண்ற அநியாயத்தை எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துகிட்டு தான் இருக்காரு… யாரு சங்கடப் படப்போறாங்க… யாரு சந்தோஷப்படப் போறாங்கன்னு எல்லாரும் பார்க்கத்தான் போறாங்க….. “ என ஆங்காரம் கொண்டு ஓங்காரக் குரல் உயர்த்தி கர்ஜனை செய்தது கண்டு சப்தநாடியும் ஒடுங்கி ஓரமாய் ஒதுங்கி வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார் முத்துசாமி.

முத்துசாமியின் அநியாயப் பேச்சு கண்டு ஆவேசம் அடைந்த தம்பியை தடவிக் கொடுத்து, தண்ணீர் குடிக்க வைத்து புலியாண்டி ஆசுவாசப்படுத்த தன்நிலைக்கு திரும்பிய புலிமுத்து, “ என்னதான் அந்த ஆளு தப்பு பண்ணாலும், தவறாப் பேசுனாலும் நாம தர்மநியாயம் தாண்ட கூடாது. கூட்டிக் கொண்டு வந்தது போல்  கொண்டு போய் விடறேன்னு வாக்கு கொடுத்த மாதிரி நடக்க வேண்டியது நம்ம கடமை.” என்று எல்லோரிடமும் கூறிவிட்டு முத்துசாமியை பின் தொடர்ந்து ஓடினான்.

 ( தொடரும் )


Monday, September 25, 2017

வண்டித் தடம் - பாகம் 6

பாகம் 6 - வண்டித் தடம்

சிறுவயதிலே தாய், தந்தை இழந்த முத்துசாமியின் தந்தை சொந்த அக்கா மாமாவான புலிமணியின் தாய், தந்தை அரவணைப்பிலே வளர்ந்தவர். மைத்துனருக்கு சொந்த தங்கையை கட்டிக் கொடுக்கும்போது தன்பங்கு சீராக அவரது வயலுக்கு கீழ்பக்கம் இருந்த வயலையும் கொடுத்தார் புலிமணியின் தந்தை. எல்லா ஊரையும் போல புலிப்பட்டியிலும் விவசாய காலங்களில் அவரவர் வயலுக்கு அடுத்தவர் வயல் வழியாகதான் ஏர், கலப்பை, விதை, சாணம், உரம், நாற்று போன்ற விவசாயத் தளவாடங்களையும் பின் அறுப்பு காலங்களில் அறுவடை செய்த நெல், வைக்கோல் போன்றவற்றையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அப்படி தங்கள் பூர்வீக வயலுக்கு செல்லும் வழியாக, வண்டித்தடமாக இருந்த வயலைத்தான் தன் தங்கைக்கு சீராக கொடுத்தார் புலிமணியின் தந்தை.


சொத்து பிரிக்கும் போது புலிமணியின் பங்காக வந்த அந்த வயலை அவர் வெளியூரில் இருந்த காரணத்தால் மூத்த அண்ணன் ஆகிய புலியாண்டியின் தந்தையும், அவருக்குப்பின் அவர் மகன் புலியாண்டியுமாக மேற்பார்வை பார்த்து வந்தனர். காலம், காலமாக வழியாக இருந்த வண்டித்தடத்தையே அவர்களும் உபயோகித்து வந்தனர். முத்துசாமியின் தந்தையும், புலியாண்டியின் தந்தையும் இருந்த வரை எந்த பிரச்சினையும் இல்லை. முத்துசாமி ஏதாவது பிரச்சினை செய்ய முயன்ற போதெல்லாம் இருவரும் அதட்டி, அடக்கி வந்தனர். அவர்கள் மறைவிற்குப்பின் முத்துசாமி ஆட்டத்தை தொடங்கி விட்டார். அவர் வயல்வழியாக வண்டிகள் செல்வதை தடுத்தும், ஆட்களும், கால்நடைகளும் கூட செல்லக்கூடாது எனவும் முரண்டு செய்ததால் ஊராரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டார்.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்டவனும், புலிமணியை அறவே பிடிக்காதவனுமாகிய சுக்காண்டியிடம் தன் வயல் மேற்பார்வையை குத்தகை முறையில் ஒப்படைத்தார் முத்துசாமி. சுக்காண்டியும் அவனால் முடிந்த இடைஞ்சல்களை எல்லாம் செய்து வந்தான். அதில் ஒன்றுதான் இந்த ஓடைக்கரை சரிப்பு வேலை. ஓரிரு நாட்கள் புலியாண்டி ஊரில் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் ஊர் திரும்பிய புலியாண்டி வயலுக்கு சென்ற போது கற்கள் நகர்த்தப்பட்டு, பாதி தூரம் ஓடைக்கரை சரித்து அளவு குறைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அம்பை சென்று புலிமணியிடமும், அந்த நேரத்தில் விடுமுறையில் வந்து இருந்த புலிமுத்துவிடமும் முறை இட்டான்.  








இரண்டு வருடங்களுக்கு முன்னொரு முறை இப்படித்தான் புலிமுத்து விடுமுறையில் வந்திருந்த பொழுது, புலிமணியின் வயலுக்கு அறுப்பு இயந்திரம் முத்துசாமியின் வயல்வழியாக செல்லக்கூடாது என தடுத்து புலியாண்டியிடம் தகராறு செய்தான் சுக்காண்டி. தகவல் தெரிந்தவுடன் புலிமுத்து தந்தை புலிமணியையும் அழைத்துக் கொண்டு அம்பை ரயில்நிலையம் அருகே வசித்து வந்த முத்துசாமியின் வீட்டிற்கு புகார் கூறச் சென்றான். வீடு தேடி வந்தவர்களை மரியாதைக்கு கூட வீட்டிற்குள் அழைக்காமல் வாசலிலே நிறுத்திப் பேசிய முத்துசாமி, “ அவன் பாடு… உங்கள் பாடு.. “ என்று அலட்சியமாக கூறிவிட்டு அவசர வேலையாக வெளியே போவதாக சென்றுவிட்டார். கொதிப்பு அடைந்த புலிமுத்துவை புலிமணிதான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். அந்த முறை வேறுவயல் வழியாக அறுப்பு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டு அறுவடை செய்யப்பட்டு, நெல்லும் வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


சுக்காண்டியும், முத்துசாமியும் மேலும் திருட்டுவேலை செய்யமுடியாமல் ஊரார் முன்னிலையில் ஓடையை மறுபடியும் அளந்து, மீதி இருக்கும் ஓடைக்கரை அளவான பழைய அளவிற்கே முழு ஓடைக்கும் குழாய் பதித்து சரிக்க முடியாமல்  செய்து விடலாம் என புலிமணி அறிவுரை கூற புலிமுத்துவும், புலியாண்டியும் ஒத்துக்கொண்டனர். முத்துசாமி ஏற்கனவே உங்கள் பாடு… அவன்பாடு என ஒதுங்கிக் கொண்டதால் புலிமுத்துவே நேராக புலிப்பட்டி சென்று சுக்காண்டியிடம், “ நாளை மறுநாள் ஒடையை அளந்து குழாய் பதிக்கப்போகிறோம். நீயும் வந்து சரிபார்த்துக் கொள் “ என்று கூற பதிலே சொல்லாமல் சென்றுவிட்டான் சதிகாரன் சுக்காண்டி.


மறுநாள் காலையிலே புலிமுத்து புலியாண்டியையும், கொத்தனாரையும் அழைத்துக்கொண்டு அம்பை முழுதும் சுற்றி இரண்டடி விட்டம், ஆறடி நீள அளவில் சிமெண்ட் குழாய்களையும், தேவையான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றை வாங்கி டிராக்டரில் ஏற்றி வயலிற்கு கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.  அதற்கு மறுநாள் காலையிலே வீட்டில் இருந்து கிளம்பிய புலிமுத்து புலியாண்டி, கொத்தனார், கையாள்கள், அக்கம்பக்க வயல் உரிமையாளர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு வயலை அடைந்தான். உடனே கொத்தனாரின் கையாள்கள்  ஜல்லி, மணல், சிமெண்ட் கலந்து கலவை தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.


வெகுநேரமாகியும் சுக்காண்டி வராத காரணத்தால்  கையோடு அழைத்து வரச்சொல்லி அனுப்பப்பட்ட ஆள் அவனும், ரெங்கம்மாவும்  வீட்டைப் பூட்டி விட்டு அதிகாலை முதல் பேருந்திலே எங்கோ கிளம்பி சென்று விட்டதாக கூறவே கடும்கோபம் கொண்ட காத்திருந்த ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்கள் அனைவரும், “ இவ்வளவு பேரு இங்கே காத்துகிட்டு இருக்கோம். வேணும்கிட்டே இவன் இப்படி பண்றான். நம்ம ஓடையை அளந்து, குழாய் பதிக்கிற வேலையை முடிப்போம். அவன் வந்து ஏதும் பிரச்சினை பண்ணா பார்த்துக்கலாம். நீங்க வேலையை ஆரம்பிங்கப்பா… “ என உறுதி கொடுக்க, சரிக்கப்பட்ட ஓடை ஒழுங்காக அளக்கப்பட்டு, கரை வெட்டி திருத்தப்பட்டு, கலந்து வைத்திருந்த ஜல்லிக்கலவை ஓடை முழுதும் தண்ணீர் தேங்காமல் செல்லும்படி வாட்டச்சரிவோடு விரிக்கப்பட்டு, குழாய்களும் வரிசையாக பொருத்தி, பதிக்கப்பட்டு கல் கொண்டு அசையாமல் அடை கொடுக்கப்பட்டு , குழாய்களின் மீதும் செங்கல் அடுக்கி சிமெண்டுக் கலவை கொண்டு பூசப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டன.








ஓடைக்கரை அளந்து அளவுக்கற்கள் நடப்பட்டு, இருபுறமும் ஒழுங்குக்கயிறு கட்டப்பட்டு வேலை ஜரூராக நடந்து கொண்டு இருக்கும் போதே உச்சிப்பொழுது ஆகிவிட்டதால் ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்களும் மதிய உணவிற்கு வீடு சென்று பின் காபி, டீ குடித்து விட்டு வெயில்தாழ சிலர் மட்டுமே திரும்பி வந்து பார்த்து சென்றனர். புலிமுத்துவும், புலியாண்டியும் கொத்தனார், கையாள்களுக்கு ஏற்பாடு செய்திருந்த காபி, டீ உணவையே சாப்பிட்டு விட்டு அங்கேயே இருந்துவிட்டனர். ஒருவழியாக வேலை முடியும் போது மாலை நேரம் முடிந்து இருளும் கவியத் தொடங்கி விட்டது. பின் அங்கிருந்த கொத்தனார் சாமான்கள் மற்றும் வேலை ஆட்களை ஏற்றவந்த டிராக்டரிலே புலிப்பட்டி ஊருக்குள் வந்து தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அம்பாசமுத்திரம் அடைந்து, குளித்து, இரவு உணவு அருந்தி, தந்தையான புலிமணியிடம் விபரங்களை கூறிவிட்டு, அலுப்பில் அயர்ந்து தூங்கிய புலிமுத்துவை மறுநாள் காலை ஏழு மணி அளவில் தலைமாட்டில் வைத்திருந்த அலைபேசிதான் இடைவிடாது அடித்து எழுப்பியது.


 ( தொடரும் )



Sunday, September 10, 2017

வண்டித் தடம் - பாகம் 5










பாகம் 5 - சுக்காண்டியும், முத்துசாமியும்…


சனிக்கிழமைதோறும் காலையில் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு கல்லிடைக்குறிச்சி   வாரச்சந்தைக்கு வண்டி கட்டி, வாடகைக்கு சாமான்கள் ஏற்றி செல்லும் சுக்காண்டி, சந்தை வாசலில் இருக்கும்  அடர்ந்த வாகைமர நிழலில் வண்டியை நிறுத்தி, உரிமையாளர்கள் உதவியோடு சரக்குகளை இறக்கி, சம்பந்தப்பட்ட கடைகளில் சேர்த்துவிட்டு, மாடுகளையும் அவிழ்த்து, தண்ணீர் காட்டி, வைக்கோல் போட்டு இளைப்பாற விட்டு, விட்டு கிடைத்த கூலிக்கு வயிறு புடைக்க பாய்க்டையில் ரொட்டி சால்னா, மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்ஸ், ஆம்லேட், அவிச்சமுட்டை என ஏழெட்டு வகையறாக்களை ஒருங்கே உள்ளே தள்ளிவிட்டு, உண்ட களைப்பு தீர மாட்டுவண்டிக்கு அடியில் துண்டை விரித்து படுத்துவிட்டு, வெயில் தாழத்தான் ஊர் திரும்புவான்.

சுக்காண்டி வண்டிவிட்டு உறங்கும்  வாகை மரத்தடியில் மண்பாண்டங்கள், மரஅகப்பை, தார்க்குச்சி, மூக்கணாங்கயிறு, சரடு போன்ற விற்பனைக் கடை வைத்திருந்தவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி.  உறங்கிய பொழுது போக ஓய்வு நேரங்களில் அவரோடுதான் பேசிக்கொண்டு இருப்பான் சுக்காண்டி. தாயில்லாத சுடலையாண்டி மகள் ரெங்கம்மாவை பேசிய நகை போடாததால், “கறுப்பாக இருக்கிறாள். பல் நீண்டு லட்சணமாக இல்லை” என்று கூறி கட்டிக் கொடுத்தவன், தட்டிக் கழித்துச் சென்று விட்டான். அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அப்படியே கடை வேலைகளில் ஒத்தாசையாக இருந்த ரெங்கம்மாவிற்கும், மனைவியால் புறக்கணிக்கப்பட்ட சுக்காண்டிக்கும் பேசிப் பழகி, ஈர்ப்பாகிவிட்டது.

சுடலையாண்டிக்கும் வேறு ஆதரவு இல்லாததாலும், சுக்காண்டி கதை அறிந்தவர் என்பதாலும், அடுத்தவர் அசிங்கமாக பேச இடம் கொடுக்காமல்,“பிடித்திருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என அனுமதி கொடுத்துவிட்டார். ஒரு சனியன்று சந்தை முடித்து செல்லும்போது ரெங்கம்மாவையும், வண்டியில் ஏற்றிக்கொண்டு இரவோடு, இரவாக அவன் அம்மாவின் மறைவிற்குப் பின் பூட்டியே கிடந்த வீட்டில் கொண்டு வந்து குடிவைத்து விட்டான் சுக்காண்டி.

விடியற்காலையில் விஷயம் அறிந்த மங்கம்மா பஞ்சாயத்து கூட்டி விட சுக்காண்டியும், ரெங்கம்மாவும் வலுக்கட்டாயமாக ஊர்மந்தைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆளாளுக்கு மங்கம்மாவோடு சேர்ந்து, “அடிக்கணும், பிடிக்கணும். ரெண்டு பேரையும் மொட்டை அடிச்சு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல ஏத்தி ஊரைவிட்டே அடிச்சு விரட்டணும் இதை இப்படியே விட்டா ஊர்ல எல்லாவனும் இப்படி எவளையாவது இழுத்துட்டு வந்துருவான்.” என  ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மங்கம்மாவின் அழைப்பின் பேரில் அங்கு வந்த புலிமணி, ரெங்கம்மாவை முழுமையாக விசாரித்து, விபரம் அறிந்து கொண்ட பின், “ இதோ பாரு மங்கம்மா. உன் புருஷன் செஞ்சது தப்புன்னாலும், இந்தப் புள்ளை அவ அப்பன் அனுமதியோடுதான் வந்துருக்கா. நம்பி வந்தவளை அவமானப்படுத்தி அனுப்பறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவ சாபம் உனக்கும் வேண்டாம். நம்ம ஊருக்கும் வேண்டாம். உன் புருஷனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு சொல்லு. பஞ்சாயத்துல பேசி முடிவெடுப்போம்.” என்று கூறினார்.  

புலிமணி பேச்சிற்கு கட்டுப்பட்ட மங்கம்மாவும், “இனிமே அந்த ஆளு என் வீட்டுப் படி ஏறக்கூடாது. எந்த சொத்துலயும் பங்கு கேட்கக்கூடாது. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான வண்டியையும், மாடுவளையும் உடனே வித்து அந்தப்பணத்தையும் என் பிள்ளைவ பேருல பேங்குல போட்டுடணும். இப்பவும் சரி. எப்பவும் சரி.  எனக்கோ, என் பிள்ளைவளுக்கோ  இவராலயும், அவளாலயும் எந்தப்பிரச்சினையும் வரக்கூடாது.“ என்று அடுக்கடுக்காக அவள்தரப்பு வாதங்களை எடுத்து வைத்தாள்.

மங்கம்மா குணம் அறிந்த சுக்காண்டியும், “ ஏதாவது எதிர்த்து பேசினால் மங்கம்மா மேலும் எகிறுவாள். அனைவர் முன்னும் முகத்தில் காறி உமிழ்ந்து, அடித்து, அவமானப்படுத்தி பிறந்து, வளர்ந்த ஊரை விட்டே விரட்டி விடுவாள். இதுமட்டும் விட்டதே பெரும்பாடு. “ என்று அவள் கூறிய அனைத்திற்கும் ஒத்துக்கொண்டு விட்டான். எல்லாமே எழுத்து வடிவில் பத்திரத்தில் எழுதப்பட்டு, சுக்காண்டி, ரெங்கம்மா, மங்கம்மா, அவள் பிள்ளைகள் மற்றும் சாட்சிகளாக பஞ்சாயத்து பெரிய மனிதர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதே பஞ்சாயத்திலே அவனது வண்டியும், மாடுகளும் ஏலம் விடப்பட்டு பணமும், பத்திரமும் மங்கம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே இடத்தில் உடனே அவளும் “பணத்தை பிள்ளைகள் பேரில் உள்ள வங்கிக்கணக்குகளில்  பிரித்துப் போட்டு விடுங்கள். பத்திரத்தையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.” என அவற்றை புலிமணியிடம் கொடுக்க, அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுக்காண்டியின் அனைத்து கோபமும் புலிமணி மீது திரும்பி விட்டது.

அந்தப் பஞ்சாயத்திற்குப் பின் ஊரே சுக்காண்டியையும், ரெங்கம்மாவையும் ஒதுக்கி வைத்து விட அவன் நேராக சென்று நின்றது முத்துசாமியிடம்தான். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முத்துசாமியின் தாயாரானவள் புலிமணியின் தந்தையார் உடன்பிறந்த அத்தையாவாள். புலிமணியின் தாயும், தந்தையும், தமையர்களோடு அதிகாலையில் வயல்வேலைகளுக்குச் சென்றால் பொழுதுசாயத்தான் வீடு திரும்புவார்கள். அப்போது புலிமணியை வளர்த்தது திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த அத்தைதான் என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகப்பாசமாக இருப்பார்கள். பின் அவள் புலிமணியின் தாயின் உடன்பிறந்த தம்பிக்கே மணம் முடித்து வைக்கப்பட அந்தப் பாசம் மேலும் கூடிவிட்டது.


என்னதான் முத்துசாமிக்கு புலிமணியை பிடிக்காது என்றாலும், கிழவி எப்போது புலிமணி ஊருக்கு வந்தாலும் ஓடோடிச் சென்று பார்த்து வந்து விடுவாள். முத்துசாமி போக்க்கூடாது என எத்தனை முறை கண்டித்தாலும் காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள். அப்படித்தான் ஒருமுறை புலிமணியை பார்த்துவிட்டு புழக்கடை தொழுவாசல் வழியாக வந்தவளை மறித்து வாதம் செய்த முத்துசாமியை மீறி கிழவி வீட்டிற்குள் நுழைய முயன்றதால் ஆத்திரத்தில் பிடித்து முத்துசாமி வேகமாக தள்ளிவிட கீழே குப்புற விழுந்த கிழவி பொருத்தில் அடிபட்டு உடனே உயிரை விட்டுவிட்டாள். தொழுவத்தில் வைக்கோல் அடைந்து கொண்டிருந்த சுக்காண்டிதான் அந்த சம்பவத்திற்கு சாட்சி என்றாலும் யாரிடமும் அதைப்பற்றி கூறாததால் முத்துசாமிக்கு அவன்மீது தனிப்பிரியம். அவனுக்கு அவ்வப்போது பணமும் மற்றும் வேண்டிய பல உதவிகளும் செய்துவந்தார். சுக்காண்டியிடம் புலிமணியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி வெறுப்பு வளர்த்த்தில் முத்துசாமியின் பங்கு மிகமிக அதிகம்.

 ( தொடரும் )