Wednesday, December 19, 2018

ஊத்துக்குழி - பாகம் 8





மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 8 – சாது மிரண்டால்…..

சிலம்பம், குஸ்தி, வர்மம் போன்ற தற்காப்பு கலைகளில் சிறந்தவரான ராமசாமி போத்தி இளம்வயதில்  பல ஊர் போட்டிகளில் கலந்து வென்று வரும்போதெல்லாம் அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கி வந்த பெரிய பண்ணையார் தனது பண்ணையில் தலைமை காவல்கார பொறுப்பு ஏற்க பலமுறை அழைத்தும்  பிடிகொடுக்காமல் மறுத்து விட்டார் போத்தி. மேலும் போத்தி மாணாக்கர்களுக்கு தற்காப்பு கலைகள் பயிற்று வந்த காலத்தில் தினம் காலை, மாலை இருவேளையும் தமது பண்ணை வீட்டிற்கு வந்து சின்னப்பண்ணையாருக்கும் கற்றுக் கொடுக்க பெரிய பண்ணையார் அழைத்தபோதும் போத்தி மறுத்து தனது வீட்டருகே இருக்கும் பயிற்சிக் களத்திற்கு தினமும் வந்து மற்ற மாணாக்கர்களோடு சேர்ந்து   கற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஈணா – சோணா விவகாரத்திலும் ங்களுக்கு தெரிவிக்காமல் தம் வீட்டுக் காவலாளிகளை தண்டித்ததால் ராமசாமிப் போத்தியின் மீது பல வருட காலமாக பண்ணையார் குடும்பம் கோபத்தில் இருந்தது.

ஈணா – சோணா திட்டத்தைச் சொன்ன அன்று மாலையே சின்னப் பண்ணையாரை அணுகிய பூசாரி, “நோய்க்கும் பார், பேய்க்கும் பார்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. என்னதான் வைத்தியம் நாம பார்த்தாலும் தெய்வ அனுக்கிரகமும் இருந்தால் சீக்கிரம் நோய் குணமாகும். ஊறல் நோய் சீக்கிரம் சரியாக தினம் பெரிய பண்ணையாரம்மா காலை, மாலை இரண்டு வேளையும் அகத்திய சித்தர் உருவாக்கின ஊத்துக்குழியில் போய் குளித்து விட்டு, அவர் வழிபட்ட கரையில் உள்ள சிவாலயத்திலும் தரிசனம் செய்து விட்டு வந்தா நல்லதுன்னு தோணுது. ஆற்றுச்சாலையில் இருந்து ஊத்துக்குழி போறதுக்கு ராமசாமிப் போத்தி வயல் வழியாகத் தான் போகணும். வேற எதுவும் வழி கிடையாது. வயதான பண்ணையாரம்மா வரப்புல நடந்து போகமுடியாது. மாட்டு வண்டியிலோ அல்லது பல்லக்குல இருக்க வைத்துதான் பத்திரமா கூட்டிட்டு போகணும். மாட்டு வண்டி போகுணும்ன்னாலும் சரி. இல்லை நாலு ஆளு பல்லக்குல வைத்து தூக்கிட்டுப் போனாலும் குறைந்தது பத்துப் பதினைந்தடிப் பாதை வேணும். நீங்க போத்திட்ட பேசி பாதை போட ஏற்பாடு பண்ணிங்கன்னா நமக்கு மட்டும் இல்லாமல் பிற்காலத்தில் பல ஊர் மக்களும் பயன்படுத்த உபகாரமா இருக்கும்” என்று நைச்சியமாக கூறினார்.

சிறிது நேரம் யோசித்த சின்ன பண்ணையார், “ நல்ல விஷயம்தான். ஆனா நமது குடும்பத்திற்கும் போத்திக்கும் பல காலமா உறவு சரியில்லை. தவிரவும் எந்த விஷயமாகவும் இதுவரை போத்திகிட்ட நான் பேசியதும் இல்லை. அதனால என் சார்பா நீங்களே போத்தியிடம் பேசி சம்மதம் வாங்கிடுங்க. பாதை போட அவர் கொடுக்கிற இடத்திற்கு உண்டான பணத்தையும் கொடுத்திடுவோம்ன்னு சொல்லுங்க…” என்று கூற பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது பூசாரிக்கும், ஈணா – சோணாவிற்கும்.

மறுநாள் காலை அகத்தியர் கோவில் மற்றும் ஊத்துக்குழி கோவில் பூஜை முடித்துவிட்டு வந்த பூசாரியோடு சேர்ந்து ஈணா – சோணா இருவரும் கையில் கம்போடு வயலில் இருந்த ராமசாமிப் போத்தியை பார்க்க சென்றனர். தன்னிடம் முறைத்துக் கொண்டு திரிந்த மூவரும் ஒன்றாக சேர்ந்து தன்னை நோக்கி வருவதை ஆச்சரியமாகப் பார்த்த போத்தியிடம் பூசாரி விவரம் கூற, “வயல்ல அறுப்பு முடிஞ்சு, அடுத்த பயிர் வைக்கும் வரை பிறகு போகட்டும். வரட்டும்.  எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை…” என்ற போத்தியை இடைமறித்த ஈணா, “அது எங்களுக்கு தெரியாதா… வர்ற அம்மாவாசையில இருந்து வைத்தியம் ஆரம்பிக்கணும். அதுக்குள்ள வண்டிப்பாதை போட்டாகணும்..“ என்று தடித்த குரலில் கூற, “உங்களுக்கு என்ன பிள்ளையா.. குட்டியா… ஒரு காலத்தில் இந்த வயலெல்லாம் பண்ணையார் குடும்பத்திற்கு சொந்தமானதுதானே… இனாமா கிடைச்ச நிலத்தை திருப்பி கொடுக்க கசக்குதா… ஊரானுக்கு போகப்போற சொத்தை பண்ணையாருக்கே திருப்பி கொடுக்கிற வழியைப் பாருங்க… என்று முடித்தான் சோணா.

எல்லா ஊரையும் போல புலிப்பட்டியிலும் விவசாய காலங்களில் அவரவர் வயலுக்கு அடுத்தவர் வயல் வழியாகதான் ஏர், கலப்பை, விதை, சாணம், உரம், நாற்று போன்ற விவசாயத் தளவாடங்களையும் பின் அறுப்பு முடிந்தவுடன் அறுவடை செய்த நெல், வைக்கோல் போன்றவற்றையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அதற்காக வரப்புகளை வெட்டி சரித்து தற்காலிகமாக உருவாக்கப்படும் வண்டித்தடங்கள் பின் பயிர் வைக்கும் காலங்களில் சரி செய்யப்படுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரப்படும் பழக்கம். அப்படிப் போடப்படும் பாதையை உபயோகிக்கச் சொல்லி போத்தி கூறியதால்தான் ஈணாவும், சோணாவும் எகிறிக் குதித்தனர்.

“பூசாரி, என் முடிவுல எந்த மாத்தமும் இல்லை. வயசானவங்க வந்துட்டுப் போக முடியலைன்னா ஏன் அவங்களை கஷ்டப் படுத்தறிங்க…. வேணும்ன்னா காலைலயும், சாயந்திரமும் வண்டியில அண்டா, தவலையைக் கட்டி ஆத்துச்சாலையில நிறுத்திட்டு இவன் இரண்டு பேரையும் ஊத்துக்குழியில இருந்து ரெண்டு, ரெண்டு குடமா தண்ணி கோரி நடைச்சுமையா கொண்டு போய் ஊத்தி நிறைச்சு பெரியம்மா குளிக்க எடுத்திட்டுப் போகச் சொல்லுங்க. பூஜை செஞ்ச பிரசாதம்தான் தினம் இரண்டு வேளை நீரு கொண்டு போய் கொடுக்கீருல்லா. வீட்டுலயே குளிச்சு பூசிட்டு இருக்கச் சொல்லுங்க…” என்று சூடாக பதில் சொன்ன போத்தி, “ இப்பவே இவன் ரெண்டு பேரையும் கூட்டிட்டு என் வயலை விட்டு இறங்கலைன்னா நடக்கிறதே வேற… “ என்றவாறு வேட்டியை தார் பாய்த்துக் கட்டிக் கொண்டு சிலம்பத் தடியை கையில் எடுக்க ஆரம்பித்தார். இப்படியானதொரு சந்தர்ப்பத்திற்காகவே காலம் காலமாக காத்திருந்த ஈணாவும், சோணாவும் கம்புகளை சுற்றியவாறு சண்டைக்குத் தயாரானார்கள்.

இதற்கு மேலும் விட்டால் பிரச்சினை பெரியதாகி விடும் என்பதை உணர்ந்த பூசாரி ஈணா, சோணாவை அதட்டி அமர்த்தி விட்டு, “ நாங்க சொல்றதை சொல்லிட்டோம். பெரிய இடத்து விவகாரம். இத்தோடு போகாது. பின்னாடி வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.. பார்த்துகிடும் போத்தி…” என்று மட்டும் சொல்லி விட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.


நேரே பண்ணையார் வீட்டிற்கு சென்று மூவரும் ஒன்றுக்குப் பத்தாக சொல்லி உசுப்பேத்தியதால், கோபமான சின்னப் பண்ணையார், “ அப்படி என்ன வெறுப்பு அந்த போத்திக்கு எங்க குடும்பத்து மேல… நாம் இறங்கிப் போனா அவர் ஒரேயடியா ஏறுராரே…. வீட்டுக்கு ஊத்துக்குழி தண்ணிய கொண்டு வரணும்கிறது இந்த அண்ணாவி சொல்லிதான் நமக்கு தெரியணுமா… என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. வழிக்கு வரலன்னா போட்டுப் பார்த்திட வேண்டியதுதான்…. இந்த பிரச்சினையை இப்படியே விட்டா ஊர்ல ஒரு பய நம்மளை மதிக்க மாட்டான். ஏ ஈணா, சோணா, இவ்வளவு நாள் உங்களை கட்டுபடுத்தி வச்சிருந்தேன். இப்போ சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க… என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ … ஊத்துக்குழிக்கு பாதை போட வேண்டியது உங்க பொறுப்பு… என்ன வந்தாலும் நான் பார்த்துகிடுறேன். என்று ஆவேசமாக ஆணை இட்டு விட்டு அறைக்குள் போய் விட்டார். 

( தொடரும்)

பாகம் 9


No comments: