Thursday, January 31, 2019

துள்ளு மறி - பாகம் 2

துள்ளுமறி - பாகம்  -  சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.

பாகம் 2

தனிநபர்களால் பலி கொடுக்கப்படும் ஆடுகள்சேவல்கள் பெரும்பாலும் அவரவர் வீட்டிலே வளர்க்கப்பட்டாலும்கோவில் சார்பாக பலி கொடுக்கப்படும் கிடாக்களும்துள்ளுமறியும் பொதிகாசலப் போத்தியிடமே வாங்கப்படும்புலிப்பட்டியைச் சேர்ந்தவரான பொதிகாசலப் போத்தியின் குடும்பம் தலைமுறைதலைமுறையாக ஆட்டுக்கிடை வைத்து பராமரித்து வரும் பாரம்பரியமான குடும்பம் ஆகும்ஊரெங்கும் வயல்கள் பயிர் செய்யப்பட்டிருக்கும் காலகட்டங்களில் பகல் நேரங்களில் மணிமுத்தாறு புதிய கால்வாய் கரையோரப் பகுதிகளில் அல்லது ஆறு தாண்டி அக்கரையில் மேய்க்கப்படும் ஆடுகள் இரவில் போத்தி வீட்டருகே இருக்கும் தொழுவத்தில் அடைக்கப்படும்நாற்றங்கால்களுக்கும்வயல்களுக்கும் ஆட்டுச் சாணம் சிறந்த உரம் என்பதால் அறுவடை முடிந்து அடுத்த பயிர் வைக்கப்படும் காலம் வரை ஊர்க்காரர்கள் தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்க முன்பணம் கொடுத்து தேதி உறுதி செய்து கொள்வார்கள்.



அறுவடை முடிந்த  காலங்களில் பகல் முழுதும் வயல்காட்டுப்பகுதிகளில் மேய்க்கப்படும் ஆடுகள்வெயில் மங்கும் மாலை நேரத்தில் அன்றைய முறைக்குண்டான வயலுக்கு அருகே கொண்டு வரப்படும்பின் இரவு நேரங்களில் இரண்டு விரல் கனம் கொண்ட இரும்பாலான ஐந்தடி உயரம் கொண்ட கடப்பாரைக் கம்பிகளை நீளஅகலத்தில் வயலில் ஊன்றி மூங்கில் தட்டிகளை அவற்றில் கட்டி அமைக்கப்பட்டிருக்கும் பட்டிகளில் அடைக்கப்படும்வயல் முழுதும் ஆட்டுச் சாணம் பரவும் வகையில் தினமும் பட்டி போடும் இடங்களை மாற்றிமாற்றி அமைத்துக் கொள்வர் எனபதால் ஒரு வயலில் குறைந்தது ஒரு வாரமாவது ஆடுகள் தங்கும்.

கோழிக்குஞ்சுகளை காகம்பருந்துபூனைநாயிடமிருந்து காக்க பிரம்பினாலான கூடைகளில் அடைத்து மூடி வைத்து காப்பது போல ஆட்டுக்குட்டிகளை பாதுகாக்கவும் பனை  மட்டை மற்றும் ஓலைகளால் பரிசல் போன்ற பெரிய கூண்டுகள் செய்து வைத்து இருப்பர்பிறந்து ஒரு மாதத்திற்குப் பின்னே குட்டிகள் தாயுடன் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் பகல் நேரங்களில் வெயில்மழை தாக்காமலும்நாய்நரி போன்ற மிருகங்கள் தூக்கிச் செல்லாமல் இருப்பதை தடுக்கும் வகையில் பட்டிக்குள் பனை ஓலை கூண்டுகளை வைத்து அதனுள் குட்டிகளை அடைத்து வைத்து இருப்பர்.




மாலை நேரம் வயலுக்கருகே வந்ததுமே தாய் ஆடுகள் குட்டிகளைத் தேடி பட்டிக்கருகே வந்து குரல் கொடுக்க, முரட்டுக் கூடைகளுக்குள் இருட்டில் இருக்கும் குட்டிகளும் பதில் குரல் கொடுக்கும். கீதாரி பட்டியைத் திறந்து கூடையை தூக்கியதும், பகல் முழுதும் பசியுடன் இருக்கும் குட்டிகள் துள்ளிக் குதித்து தாய் ஆடுகளை நோக்கி ஓடி முட்டி, முட்டி பால் குடிக்கும். பின் இரவு முழுதும் தாய் ஆடுகளுடனே பட்டிக்குள் விடப்பட்டு காலையில் எல்லா ஆடுகளும் மேய்ச்சலுக்கு செல்லும் முன் பிடித்து மீண்டும் குட்டிகள் கூண்டுகளுக்குள் அடைக்கப்படும்.

பொதிகாசலப் போத்திக்கு ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்த பின் பேட்டை அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றவன், தங்கி இருந்த வீட்டின் அருகேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு அனுமதி வாங்க வந்தவனை சொந்த்ததிலே ஒரு பெண்ணை கட்டிக் கொண்டு, ஆட்டுக் கிடையை பார்த்துக் கொண்டு ஊரிலே இருந்து விடுமாறு பொதிகாசலப் போத்தி வற்புறுத்தியதால் தாய், தந்தையரிடம் சொல்லாமலே சென்னை திரும்பி, விரும்பிய பெண்ணையே திருமணமும் செய்து கொண்டான். ஊருக்கும், உறவினர்களுக்கும் அஞ்சி ஏழெட்டு வருடங்கள் ஊர்ப்பக்கமே வராதவனுக்கு  மகனும் பிறந்தான். பேரனைப் பார்க்க வேண்டுமென ஆச்சி தொடர்ந்து நச்சரித்ததால் ஊருக்கு வந்து சென்ற உறவினர் ஒருவரோடு ஆச்சியை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தார் போத்தி.

மருமகள் நல்ல குணமாக இருந்ததாலும், மகன் நன்றாக கவனித்துக் கொண்டதாலும், பேரனும் பாசமாக இருந்ததாலும் ஐந்தாறு மாதம் சென்னையில் மகன் வீட்டிலே தங்கி விட்ட ஆச்சி, அம்மன் கோவில் கொடைக்கு ஊருக்கு வரும் போது மகன், மருமகள், பேரனை அழைத்து வந்தார். மகனுக்கு தந்தையின் பெயரையே போத்தி மகன் விட்டு இருந்ததால் ஆச்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்றாலும் கணவர் பேரை சொல்லக் கூடாது என்பதால் தந்தையின் தந்தை என்று பொருள் கொள்ளும் விதத்தில் “ஐயா அப்பா” என்றே அழைப்பார். ஆச்சி வந்த பின் அனைவருமே “ஐயா அப்பா”, “ஐயா அப்பா”    என்று அழைக்கத் தொடங்க நாளடைவில் “ஐயா அப்பா” என்பது ஐயப்பா என்று மருவி விட்டது. 

ஆச்சியோடு ஊருக்கு வந்த பேரன் தாத்தாவோடும் நன்றாக ஒட்டிக் கொண்டான். பகலெல்லாம் கீதாரி ஆடுகளை மேய்த்து வந்தாலும் காலையிலும், மாலையிலும் தொழுவத்தில் இருந்து அல்லது வயல் பட்டிகளில் இருந்து ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் பொதிகாசலப் போத்தி சென்று ஒவ்வொரு ஆடாக தனித்தனியாக பிடித்து உற்றுக் கவனிப்பார். பகல் நேரத்தில் அவ்வப்போது பட்டிக்குச் சென்று ஆட்டுக் குட்டிகளை கவனிப்பது, பட்டிகள் இடம் மாற்றிக் கட்டுவது என ஏதாவது வேலைகள் பார்த்துக் கொண்டே இருப்பார். காலையில் பேரன் தூங்கி எழுவதற்கு முன்பே பட்டிக்கு சென்று வந்தாலும், மாலை நேரம் போகும் போது ஐயப்பா அழுது, அடம் பிடித்து தாத்தாவோடு சென்று விடுவான்.




வீட்டிலிருந்தே பேரனை தூக்கிச் செல்லும் போத்தி, ஆட்டுப் பட்டிக்குப் போகும் போதே டீக்கடையில் மாலைப் பலகாரமாக சூடாக போட்டிருக்கும் முறுக்கு, வடை, பஜ்ஜி, போண்டா என ஐயப்பா ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்து அழைத்துச் செல்வார். பின் பட்டியை அடைந்ததும், ஐயப்பாவை தோளில் இருந்து இறக்கி விட்டு, கூடைகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் குட்டிகளை பேரன் விளையாட திறந்து விடுவார். பட்டிக்குள் குட்டிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடும் ஐயப்பாவை தாய் ஆடுகள் வந்தவுடன் குட்டிகள் பால் குடிக்க தொந்தரவில்லாமல் தூக்கி வைத்துக் கொள்வார்.  பின் அரைமணி நேரம் கழித்து குட்டிகள் பால் குடித்து முடித்து விட்டு, தாய் ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு செல்லும் போது தான் ஐயப்பாவை தோளில் இருந்து இறக்கி விடுவார்.

தாய் ஆடுகளுடன் செல்லும் குட்டிகளை துரத்திக் கொண்டு வயல் வரப்புகளிலும், வயல்கள் முழுதும் ஓடும் ஐயப்பா மேடு, பள்ளங்களில் ஏற முடியாமல் தவிக்கும் குட்டிகளை தூக்கி விட்டும் உதவுவான். எல்லாக் குட்டிகளும் அவனைக் கண்டு பயந்து ஓடினாலும் சில குட்டிகள் மட்டும் அவனுடன் நின்று விளையாடும். அவற்றில் அவனுக்கு மிகவும் பிடித்தது பிறந்து இரண்டு நாட்களே ஆகி இருந்த செவலை (சிவந்த) நிறமுடைய செம்மறிக்குட்டி தான். 




கோவில் கொடை நாள் உறுதி ஆனதுமே இந்தந்த கிடாக்களை கோவிலுக்கு வெட்டலாம் என முடிவு செய்து விடும் போத்தி, "துள்ளு மறி” என்னும் புதிதாகப் பிறந்த குட்டிக்கு மட்டும் கொடை தினத்திற்கு மிக அருகாமை தினத்தில் பிறந்த குட்டியை கொடுப்பது வழக்கம். பொதுவாக அமாவாசை தினத்தை நெருங்கிய தினங்களிலே வளர்ப்பு கால்நடைகள் குட்டி போடுவது வழக்கம் என்றாலும் சிலநேரங்களில் முறை மாறுவதும் உண்டு. புலிப்பட்டி ஊரின்  அம்மன் கோவில் கொடை வளர்பிறை தினத்தில் கொண்டாடப்படும் கொடை என்பதால் அமாவாசைக்கு   இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. கொடைக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் வேறு ஆடுகள் ஏதும் குட்டி போடும் பருவத்தில் இல்லாத்தால் ஐயப்பாவிற்கு பிடித்த செம்மறியையே கோயில் பலிக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

இதையெல்லாம் அறியாத ஐயப்பா எப்போதும் போல தாத்தாவுடன் வயலுக்கு போவதும், குட்டிகளுடன் விளையாடுவதுமாக இருந்தான். கொடைக்கு முதல் நாள் தீர்த்தக் குடம் கோயிலுக்கு வந்து தீபாராதனை ஆகும் நேரத்திலே மந்தைக் கிடாவை கொண்டு வந்து ஒப்படைக்கும் போது மற்ற கிடாக்களையும், துள்ளு மறியையும் மறுநாள் மாலை நேரம் கொண்டு வந்து கோயிலில் கட்டிச் செல்வதாக விழாக் குழுவினரிடம் உறுதி கூறி வந்தார் போத்தி. சப்பரம் ஊர் சுற்றி வந்ததும் அதிகாலை நேரத்திலே கிடா வெட்டு நடந்து விடுவதால் கொடை தினம் மாலையே கோயில் மடப்பள்ளி அருகே கிடாக்களையும், துள்ளுமறியையும் கொண்டு வந்து கட்டி விடுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

(  தொடரும் )

No comments: