Wednesday, January 30, 2019

துள்ளு மறி



மனிதர்களின் ஆயுட்காலமானது வன்முறை, கலகம், போர்கள், விபத்து, நோய்கள் என்று பல விதமான முறைகளில் முடிவு செய்யப் படுவதை உயிர் கணக்கு என்பார்கள். உலக உயிர் நிலை சமன்பாடு முக்கியம் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், உயிர் அழிவைத் தடுப்பதற்காக, தள்ளிப் போடுவதற்காக ஆதிகாலம் முதலே மனித இனம் பலவிதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்களுக்கான மருத்துவம், ஆரோக்கியம் காக்கும் அன்றாட உணவு முறைகள், சுற்றுப்புற சுத்தம் , சுகாதாரம் பாதுகாப்பது போன்றவற்றோடு உயிர்ப்பலி கொடுப்பது என்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் என ஒரு ஊரில் இத்தனை உயிர்களை எடுக்க வேண்டும் என்ற எமனது உயிர் கணக்கை சரி செய்யும் விதத்தில் ஆண்டுக்கொரு முறை அந்தந்த ஊர் காவல் தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பது என்பது நாடு முழுதும் இருக்கும் பழக்கம் என்றாலும், கொடுக்கப்படும் வகைகளில் ஊருக்கு ஊர், தெய்வத்திற்கு தெய்வம் வித்தியாசப்படுகிறது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதிலான ஆண்கள் உடல்நலத்திற்காக நன்கு வளர்ந்த கிடாக்களையும், சேவல்களையும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என குழந்தைகள் முதல் பல தரப்பிலான பெண்களையும் மற்றும் கர்ப்பவதிகளையும், அவர்கள் கர்ப்பத்தில் உள்ள சிசுக்களையும் கொள்ளை நோய்களில் இருந்து காப்பாற்ற சினை ஆடுகளையும், கைப்பிள்ளைகளான தொட்டில் குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க புதிதாகப் பிறந்த குட்டிகளையும் பலியிடுவது சில ஊர்களில் வழக்கம்., உடல் பாகங்களை தாக்கும் நோய்களில் இருந்து மக்களைக் காக்க இளங்கிடாக்களை அறுத்து சாமியாடிகள் இரத்தம் குடிப்பது, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளை எடுத்து சுவாமிகள் முன் படையலாக இலையில் வைப்பது என பலிகள் பல விதம்.  அப்படியான உயிர்பலி இடும் முறையால் நமது கதைக்களமான புலிப்பட்டியில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்ததுள்ளு மறிகதையாகும்.


துள்ளு மறி

வருடா வருடம் பெய்யும் மழைப்பொழிவு அளவையும், மணிமுத்தாறு அணையில் தேக்கப்பட்டுள்ள  நீர் இருப்பின் கொள்ளளவையும் பொறுத்தே புலிப்பட்டி ஊரில் பயிர் செய்யப்படுவதால் பொங்கலுக்கு முன் சரியாக யாரும் நெல் அறுவடை செய்வதில்லை. நடுவை செய்துள்ள நெல் வகையின் பயிர் நாள் கால அளவு மற்றும் தட்ப, வெப்ப நிலையைப் பொறுத்து மார்கழி தொடங்கி, தை, மாசி, பங்குனி வரை தொடர்ந்து அறுவடை நடந்து கொண்டுதான் இருக்கும். அறுவடை நடந்து கொண்டிருக்கும் போதே பெரும்பாலும் வியாபாரிகள் வயலுக்கே வந்து விவசாயிகளிடம் நேராக விலை பேசி வாங்கிச் சென்று விடுவார்கள். அனைவரிடமும் பண நடமாட்டம் இருக்கும் நேரம் என்பதால் சித்திரை மாத அம்மன் கோயில் கொடைக்கு தை மாதம் முதலே புலிப்பட்டி ஊரில் வரி பிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

புலிப்பட்டி ஊரில் அம்மன் கோயில் கொடை என்பது மிகவும் விசேஷமான ஒரு திருவிழாவாகும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஊருக்கு வராதவர்கள் கூட அம்மன் கோவியில் கொடைக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள். நெல்லை மாவட்ட மற்ற ஊர்களைப் போலவே புலிப்பட்டியிலும் முத்தாரம்மன் மற்றும் முப்பிடாதி அம்மன்களே பிரதான அம்மன்கள். முத்தாரம்மன் கோயில் ஊருக்கு நடுவிலும், வடக்கம்மன் கோயில் என்று அழைக்கப்படும் முப்பிடாதி அம்மன் கோயில் ஊருக்கு வடக்கே வயல்களின் நடுவே இருந்தாலும் ஒரே நாளில் தான் இரண்டு கோயில் கொடைகளும் நடக்கும். மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலும் புலிப்பட்டி ஊர் நிர்வாகத்தில் இருந்தாலும் வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாயில் அங்கு தனியாக கொடை விழா நடத்தப்படும்.



பொங்கல் அன்று காலை பத்து மணிக்கு முத்தாரம்மன் கோயிலில் ஊர்ப்பெரியவர்கள் உட்கார்ந்து பேசி விழாக் குழுவை உறுதி செய்வது புலிப்பட்டி ஊரில் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். விழாக் குழு பொறுப்பேற்க போட்டி இருக்கும் பட்சத்தில், துண்டுச் சீட்டில் போட்டி இடுபவர்கள் பெயர் எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் விழாக் குழு தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஊர் அம்மன் கோவில்கள் மற்றும் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைகளுக்கு கீழத் தெரு, மேலத் தெரு, வடக்குத் தெரு, தெற்கு தெரு, நடுத் தெரு என அனைவர் வீட்டிற்கும் சென்று அழைப்பிதழ் கொடுத்து வரி வசூல் செய்வது, வெளியூரில் இருக்கும் வரிதாரர்களுக்கு அழைப்பிதழை தபாலில் அனுப்பி கொடை விழாவிற்கு அழைப்பது, மேளக்காரர்கள், வில்லுப் பாட்டு குழு, கரகாட்டக் குழு, வெடிகாரர், பந்தல்காரர், பூக்காரர், தட்டி அலங்கார காரர், ஒலி, ஒளி அமைப்பாளர் போன்றோரை முடிவு செய்து முன்பணம் கொடுப்பது என மாசி, பங்குனி முதல் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடை முடியும் வைகாசி மாத காலம் வரை விழாக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பரபரப்பாகவே இருப்பர்.

வழக்கமாக புலிப்பட்டி ஊரில் வருடா வருடம் சித்திரை மூன்றாம் செவ்வாயன்று கொடை நடக்கும். கொடை முன் தினமான திங்கள் கிழமை காலையிலே மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாமி கொண்டாடியானவர், கோவில் கசத்தில் குளித்து, பூஜை செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு மாலைக் கருக்கலில் ஊருக்குள் நுழையும் நேரத்தில் மேள தாளத்தோடு உச்சி மேடு சென்று  அழைத்து வருவதில் இருந்து புலிப்பட்டி ஊரில் கொடை ஆரம்பிக்கும். தீர்த்தக் கலசம் கோயில் சென்று அடைந்து, அம்மனுக்கும் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனை முடிந்தவுடன் இருட்டோடு இருட்டாக ஒரு கிடாவை அழைத்துக் கொண்டு போய் ஊர் கால்நடைகள் உயிர் காக்க பெருங்கால் கரை தாண்டி மணிமுத்தாறு பகுதியில் உள்ள மந்தையில் அந்த கிடாவை வெட்டுவார்கள்.

மறுநாள் கொடை தினமான செவ்வாய் காலை பால் குடம் எடுப்பவர்கள் மேள தாளத்தோடு கோயிலில் ஆரம்பித்து ஊர் சுற்றி வருவார்கள். விழாக் குழுவினர் முற்பகல் நேரத்தில் நான்கைந்து அடுப்புகளில் தேக்சாக்கள் எனப்படும் வாயகன்ற பெரிய பாத்திரங்களில் வார்ப்பு பாயாசம் செய்து ஊர் மக்களுக்கு செலவழிப்பார்கள். சுவாமிகளுக்கு உருவ அலங்காரம் செய்பவர்கள் கோயிலில் குடி கொண்டுள்ள பிள்ளையார் தொடங்கி சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, கும்பா முனி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன் ஆகியோருக்கு அலங்காரம் செய்து பின் அம்மனுக்கும் முடித்த பின் உற்சவ அம்மன் ஊர் சுற்றி வரும் சப்பரம் என்னும் தேருக்கு அலங்காரம் செய்து முடிக்க இருட்டி விடும்.  

மதிய நேரம் வல்லரக்கன் கதை சொல்லி வில்லுப்பாட்டு தொடங்கி, கோயிலில் குடி கொண்டுள்ள சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, கும்பா முனி,, பட்டவராயன் என இடைவேளை எடுத்து, எடுத்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடி விடிகாலையில் சரியாக அம்மனுக்கு பாடி முடிப்பார்கள். மாலை நேரத்தில் சாமியாடிகள் கரகம் எடுத்து ஊர் சுற்றி வருவார்கள். பின் இரவு எட்டு மணி வாக்கில் அரண்மனை முன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக நையாண்டி மேளம், கரகாட்டக்காரர்களின் ஆடல், பாடல் என ஊரே கூடி வேடிக்கை பார்க்க ஆட்டம், பாட்டம் அமர்க்களப்படும். அம்மன் கோவிலில் இருந்து இரவு பத்து மணி வாக்கில் உற்சவ அம்மனோடு கிளம்பும் சப்பரமானது மேள தாளத்தோடு நடுத்தெரு வழியாக சென்று அங்கங்கே நின்று, நின்று அனைத்து வீட்டு மக்களும் சமர்ப்பிக்கும் பன்னீர், தேங்காய், பழம், பூமாலை ஆராதனைகளை ஏற்று ராந்தக்கல் வழியாக மேலத்தெரு, வடக்குத் தெரு, கீழத்தெரு கடந்து மறுபடியும் அம்மன் கோயிலை அடையும் போது பொழுது விடிந்து விடும்.



சப்பரம் கோவிலை அடைந்து உற்சவ அம்மனை கீழே இறக்கி கோவிலுக்குள் கொண்டு வைப்பதற்கும், வில்லுப்பாட்டு பாடி முடிப்பதற்கும் சரியாக இருக்கும்.அதன் பின் மேளம் அடித்து, சப்பரத்தோடு ஊர் சுற்றி வந்த சாமி கொண்டாடிகள் சாமி ஆடி முடித்ததும் கோயில் சார்பாகவும், தனிப்பட்ட முறையில் நேர்ந்து கொண்டவர்கள் சார்பாகவும் ஆடுகள், கோழிகள் வெட்டி பலி கொடுப்பார்கள். பின் கடைசியாக கைக்குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க பிறந்து சில நாட்களே ஆன  துள்ளுமறிஎனப்படும் செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிடுவதோடு கொடை முடிவடையும்.

(தொடரும்)

No comments: