Sunday, September 27, 2009

அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!


அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரின் முதன்மை நிர்வாகியும், சிவாஜிக்கு நெருங்கிய உறவினருமான வேணுகோபால், சிவாஜி பற்றிய பல சுவாரசியமான விஷ்யங்களை பத்திரிக்கையில் கூறியதை நண்பர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


சிவாஜியின் ஒரே சகோதரியான பத்மாவதியை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே, எனக்கு சிவாஜியை நன்றாக தெரியும். உறவு முறை தான்.என்னை, "மாப்ளே' என்று சிவாஜி அழைப்பதால், அவரது சகோதரர்கள், உறவினர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் என்னை, "மாப்பிளே' என்றே அழைப்பர்.எனக்கு திருமணமாகும் போது, நான், இந்திய ராணுவத்தில், இ.எம்.இ., (எலக்ட்ரிகல் அண்டு மெக்கானிகல் இன்ஜினியரிங்) பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான், ராணுவத்தில் பணிபுரிவது, சிவாஜிக்கு ரொம்ப பெருமையான விஷயம்; நண்பர்கள், உறவினர்களிடம், நான் ராணுவத்தில் பணிபுரிவதைப் பற்றி பெருமையாக சொல்வார்.

சிவாஜிக்கு என் மேல், அளவு கடந்த பாசமும், முழு நம்பிக்கையும் எப்போதும் உண்டு. அவரது இரு மகன்கள், அவரது மூத்த சகோதரர் தங்கவேலுவின் மகன், தம்பி சண்முகத்தின் இரு மகன்கள், என் மகன்கள் இருவர், ஒரே மகள், ஆக, எட்டு குழந்தைகளும் என்னிடமே வளர்ந்தன.நான் மிலிடரிக்காரன் என்பதால், அந்த ஒழுக்கத்தோடு குழந்தைகள் வளர வேண்டும் என்பதற்காக, சகோதரர்கள் மூவரும், தங்கள் குழந்தைகளை என்னிடமே வளர்க்க விட்டனர். பிரபு, ராம்குமார் உட்பட ஐவரும், என்னை அன்போடு, "மாமா' என்று அழைப்பர்; அதே பழக்கத்தில், என் மகன்கள், என்னை, "அப்பா' என்று அழைக்காமல், "மாமா' என்றே அழைப்பர். வீட்டில் உள்ள ஏழு பையன்களும், பெங்களூரில், பிஷப் கார்டன் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், என் மகள், பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியிலும் படித்தனர்.

பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில், பிரேசர் டவுன் என்ற இடத்தில், தனி வீட்டில் நாங்கள் இருந்தோம். ஏதாவது காரணத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தாகி விட்டால், உடனே பிளைட் பிடித்து, சென்னையிலிருந்து, பெங்களூரு வந்து விடுவார் சிவாஜி. பசங்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து, இரவு, கடைசி விமானத்தில் சென்று விடுவார்.

சில சமயம், சிவாஜிக்கு, ஐந்து, ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல, ஊட்டி, கொடைக்கானலில் அவுட்-டோர் ஷ?75;்டிங் இருக்கும். அப்போதெல்லாம், எல்லாரும், காரில் அங்கு செல்வோம். அந்த விடுமுறைகளை, மிகவும் மகிழ்ச்சிகரமாக ஆக்கி விடுவார் சிவாஜி.ஆங்கில வழி பள்ளியில் படித்ததால், பிரபு, ராம்குமார் உட்பட அனைவருக்கும், ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. 1967ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நான் சென்னைக்கு வந்து விட்டேன். பிரபு, லயோலாவிலும், ராம்குமார் விவேகானந்தா கல்லூரியிலும் படித்தனர். தன் விருப்பத்தின் பேரில், என் மகள் கண்ணம்மாவை, ராம்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார் சிவாஜி. அந்த திருமணத்திற்கு, தமிழ்த் திரைப்பட உலகமே திரண்டு வந்து தம்பதிகளை வாழ்த்தியது.

சென்னையில் அப்போதிருந்த ஒரே, "ஏசி' தியேட்டர் என்ற வகையில், ராஜ்கபூர், வைஜெயந்தி மாலா, ராஜேந்திர குமார் நடித்து, இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து, இயக்கிய, "சங்கம்' என்ற சூப்பர்ஹிட் இந்தி படத்தை, சாந்தியில் ரிலீஸ் செய்தார். இரண்டு இடைவேளைகளுடன், நான்கு மணி நேரம் ஓடிய படம். எனவே, அந்த நேரத்தில் வெளியான, சிவாஜியின், "புதிய பறவை' படத்தை, பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்தனர். இதற்காகவே, பாரகன் தியேட்டர், சிவாஜி செலவில் புதுப்பிக்கப்பட்டது.தன் மனைவி கமலா பேரிலும், தன் மகள் சாந்தியின் பேரிலும், தஞ்சாவூரில் இரண்டு தியேட்டர்களை கட்டினார் சிவாஜி. ஒரே கட்டடத்தில் கீழே சாந்தி - அதில் ஆயிரம் இருக்கைகள். முதல் தளத்தில் கமலா தியேட்டர் - ஐநூறு இருக்கைகள்.அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., இரு தியேட்டர்களையும் திறந்து வைத்து, சிவாஜி பற்றி பெருமையாக பேசினார். சாந்தி தியேட்டரில், முதல் படமாக, சிவாஜி - அம்பிகா நடித்த, "வாழ்க்கை' படமும், கமலாவில், பிரபு நடித்த, "சூரக்கோட்டை சிங்கக்குட்டி' படமும் திரையிடப்பட்டன.


சிவாஜியின் 175வது படம், ஏ.வி.எம்., தயாரித்த உயர்ந்த மனிதன். அதன் வெற்றி விழாவில் அண்ணாதுரை பேசும் போது, "மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர் என்று கூறுகின்றனர்... அவரைக் காட்டிலும், சிறப்பாக நடிக்கும் ஆற்றலைப் பெற்ற சிவாஜி மட்டும், இங்கு பிறக்காமல், அமெரிக்காவில் பிறந்திருந்தால், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலகின் சிறந்த நடிகராக இருந்திருப்பார். தமிழகத்தில் அவர் பிறந்ததற்கு, நாம் பெருமைப்பட வேண்டும்!' என்று பேசினார்.சிவாஜியின் 200வது படம் திரிசூலம். இப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சாந்தி தியேட்டரில் 175 நாட்கள் ஓடின. 67 நாட்கள் வரை, அட்வான்ஸ் புக்கிங்கிலேயே டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. மொத்தம் ஒடிய 525 காட்சிகளில், 399 காட்சிகள் ஹவுஸ் புல்லாக ஓடியது, மிகப்பெரிய சாதனை.

ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி பங்கேற்ற காட்சி, "மன்னன்' படத்திற்காக, சாந்தி தியேட்டரில் ஒரு நாள் படமாக்கப்பட்டது. சாந்தி தியேட்டர் நிர்வாகியாக, நானே அந்தக் காட்சியில் நடித்தேன். சிறந்த நகைச்சுவை காட்சி என்பதால், பல, "டிவி' சேனல்களில் இந்த காட்சி, நிறைய தடவை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.சென்னை தி.நகரில், செவாலியே சிவாஜி கணேசன் தெருவில் உள்ள அவரது அன்னை இல்லம் வீட்டில், மாடியில், ஹோம் தியேட்டர் வைத்திருந்தார். 16 எம்.எம்.புரொஜக்டரும் அங்கு உண்டு. 12 இருக்கைகள் கொண்டது அந்த ஹோம் தியேட்டர். அவர் பார்க்க விரும்பும் ஆங்கில படங்களின் 16 எம்.எம்., பிரதிகளை, வாடகைக்கு பெற்று, அவர் பார்க்க ஏற்பாடு செய்வது என் பொறுப்பு; சில சமயம், அவருடன் நானும் படங்கள் பார்ப்பதுண்டு.பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கும், சிவாஜிக்கும் இடையே, நெருங்கிய பாசம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், ரக்ஷா பந்தன் அன்று, சிவாஜிக்கு ராக்கி அனுப்புவார் லதா. ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும், சகோதரனின் சீராக, லதாவுக்கு, அவருக்குப் பிடித்த பட்டுப்புடவையை பரிசாக அனுப்புவார் சிவாஜி.

கூட்டுக் குடும்பம் எங்குமே அரிதாகிவிட்ட காலத்தில், சிவாஜியும், அவரது சகோதரர்களும், கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து காட்டி சரித்திரம் படைத்தனர். இன்றும், சிவாஜி மறைவுக்குப் பின்னரும், அதே முறை தொடர்கிறது.தன்னை பராசக்தியில் அறிமுகப்படுத்தி, திரைப்பட உலகில் தனக்கு முகவரி கொடுத்த, பி.ஏ.பெருமாளை, என்றுமே மறந்ததில்லை சிவாஜி. பொங்கல் அன்று, விடியற்காலை, வேலூரில் வசித்து வந்த பெருமாளை, நேரில் சந்தித்து, பட்டு வேட்டி, புடவை கொடுத்து வணங்கி ஆசி பெறுவார். வேலூருக்குச் சென்று வந்த பிறகு தான், தன் ரசிகர்களை சந்திப்பார். சிவாஜி மறைந்த பிறகும், அதே பாரம்பரியத்தை, பிரபுவும், ராம்குமாரும் கடை பிடிக்கின்றனர். பெருமாள் இப்போது இல்லை; அவரது மனைவியை, பிரபுவும், ராம்குமாரும் பொங்கல் அன்று வேலூர் சென்று சந்தித்து, ஆசி பெறுகின்றனர். தன் நெருங்கிய நண்பர், நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியை மட்டும், உரிமையாக பெயர் சொல்லி அழைப்பார் சிவாஜி. அவரை வைத்து படம் எடுக்கும் மற்ற எல்லா தயாரிப்பாளர்களையும், வயது வித்தியாசமின்றி, "முதலாளி' என்றே அழைப்பார்.

திரைப்படத்துறைக்கு சிறந்த சேவை செய்ததற்காக, இந்திய அரசு அளிக்கும் உச்சகட்ட விருதான, "தாதா பால்கே சாகிப்' விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி தான். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, சிவாஜிக்கு அந்த விருதை அளித்த போது, அரங்கம் முழுவதுமே எழுந்து நின்று கரகோஷம் செய்தது. எனக்கு, ஏராளமான பரிசுகள் கொடுத்திருக்கிறார் சிவாஜி. ஆனால், அவர் கொடுக்காமல் நானே எடுத்துக்கொண்ட ஒரு பொருளை இன்றும் என் வீட்டு கண்ணாடி ஷோகேஷில் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அவர் இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளைநிற செருப்புகள்தான் அவை.

5 comments:

Raju said...

மறக்கமுடியுமா சிவாஜி கணேசனை..!
வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட பல சரித்திர நாயகர்களை நம் கண்முன்னே கொண்டு வந்தவரல்லவா அவர்.

லோகு said...

இமயத்துக்கு மறைவில்லை.. Thanks for Sharing..

தங்க முகுந்தன் said...

எனக்குப் பிடித்த மாபெரும் நடிகர் -மேதை! அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது! ஆனால் ஒரு தடவை சென்னையில் அவர் கட்சிப் பிரச்சாரம் செய்தபோது அருகில் இருந்த பார்த்தேன்! இலங்கைக்கும் வந்திருந்தார் - ஆனால் என்னால் அந்த நிகழ்வுக்குப் போக முடியவில்லை! ஒருபொழுதும் மறக்கப்பட முடியாத நடிகரல்லவா! அருமையான பதிவுக்கு எமது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

Anonymous said...

சிவாஜி சாரை தாத்தா பாத்திரத்தில் தான் முதல் முதல் பார்த்தேன். அதனால் சிவாஜி தாத்தா படம் என்று தார் அவர் படங்களை கூறுவோம். ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும், அவரோட புருவம் உயர்த்தி கேள்வி கேட்டும் அழகே அழகு. பொதுவாகவே எனக்கு படங்களில் / நடிகர்களில் அவ்வளவாக நாட்டமில்லாவிட்டாலும், சிவாஜி தாத்தாவோட உடலை பார்த்த போது கொஞ்சம் அழுதிட்டேன். அவரோடு முதல் மரியாதை பாட்டு ரொம்ப பிடிக்கும்.

Ignore the previous comment please.

Anonymous said...
This comment has been removed by the author.