Saturday, September 05, 2009

ஆயிரம் எம்.ஜி.ஆர். வந்தாலும் திருத்த முடியாது


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ...
புரட்சிதலைவர் பாடிய பாட்டு.

அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தனிமனிதனுக்கும் அறிவுரையாக அந்த பாட்டில் "வயக்காட்டில் பாடுபடு" என்றும் கூறியிருப்பார். வெளிநாட்டில் சென்று கஷ்டப்படுவதற்கு உலகத்தில் உன்னத தொழிலான உழவுத்தொழிலை செய்வது மிக நன்று.


இன்றைய நாளிதழில் வெளிநாட்டு வேலையை நம்பி ஏமாந்தவர்கள் பற்றிய இன்னொரு செய்தி.

-------------------------------------------------

சென்னை : அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியாவிற்கு சென்ற 30 இளைஞர்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு பின், சென்னை திரும்பினர்.போலி ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்களும், அப்பாவிகளும், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல், ஏமாந்து திரும்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களில், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இந்த வகையில், மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழர்கள் இருவர் உட்பட 30 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு: கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.என்.நாயர் எனும் டிராவல்ஸ் ஏஜென்ட், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், "மலேசியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில், பிட்டர், வெல்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும். தங்குமிடம், சாப்பாடு இலவசம். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மும்பையில் நேர்முகத்தேர்வு நடந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜமதன் (26), பிரபு (25) உட்பட ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, ஜோர்பூர் என்ற இடத்தில், சிறிய அறையில் 80 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் கொடுத்து, சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த தானியங்கள், 10 நாட்களில் தீர்ந்துவிட்டன.

ஏஜென்ட் கூறியதுபோல வேலையும் கொடுக்காமல், 10 நாட்களுக்கு மேல் சாப்பாடு எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது, அடித்து துன்புறுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், ஒரு வேளை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் நிலை குறித்தும், நாடு திரும்ப உதவும் படியும் கோரி, மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு இ-மெயில் அனுப்பினர். மத்திய அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட 80 இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவர்களில், கடந்த வாரம் 17 பேர் இந்தியா திரும்பினர். காலை 8.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும், 9.50 மணிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் இரண்டு தமிழர்கள் உட்பட 30 பேர் சென்னை வந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஏஜென்டின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டோம். மலேசியா செல்ல நகைகள், வீடுகளை விற்று, ஒவ்வொருவரும் தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மலேசியா வாழ் தமிழர் கமலநாதன் என்பவர் மூலம், மத்திய அமைச்சர் வயலார் ரவியை தொடர்பு கொண்டு, இந்திய தூதரகத்தின் உதவியால் நாடு திரும்பியுள்ளோம்' என்றனர்.

வித்தியாசமான ஒரு வரவேற்பு! வெளிநாடுகளில் வேலைக்கு சென்று ஏமாந்து, சித்திரவதை அனுபவித்து நாடு திரும்புபவர்களை விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், சென்னை திரும்பிய 30 இளைஞர்களை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் டெய்லர் வேலைக்கு சென்று, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து, ஊர் திரும்பிய நபர் ஒருவர் வரவேற்றார். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அந்நபரின் பெயர் சேரன். அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வரும் இவர், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், ஏமாந்து தான் போக வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கழுத்தில் "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்ற வாசகத்துடன், மொபைல் போன் எண்கள் எழுதிய போர்டை மாட்டிக் கொண்டு விமானம் நிலையம் முழுவதும் வலம் வந்தார்.
----------------------------------------------------

இந்தியாவிலே எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும் பொழுது நமது இளைஞர்கள் மக்கள் பணம் கட்டியாவது வெளிநாடு செல்ல விரும்புவது ஏன் ?.போலி ஏஜெண்ட்களிடம் கொடுக்கும் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்யலாமே.படித்த மக்களே பலவாறு ஏமாற்றப்படும் பொழுது படிக்காத பாமர மக்களெல்லாம் எம்மாத்திரம்.

வெற்றிக்கொடி கட்டு,புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,பாண்டி போன்ற படங்களை பார்த்தாவது திருந்த வேண்டாமா ?

தொழிலாளர்களின் உழைப்பால் வளம்பெரும் நாடுகள் அவர்களை ஊருக்குள் தங்க அனுமதிக்காமல் பாலைவன முகாம்களிலே தங்க வைக்கின்றன.

எனதினிய தமிழ்மக்களே நல்ல சம்பளம்.விடுமுறை தரும் நிறுவனங்கள் என நண்பர்கள்,உறவினர்கள் உறுதி கூறி அழைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்.இல்லையேல் நமது நாட்டிலேயே தகுதிக்கேற்ப கிடைக்கும் வேலையில் குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.


6 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பயனுள்ள பதிவு

Unknown said...

கவர்ச்சி விளம்பரத்தை நம்பி இன்னும் மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்காங்க..//"ஆயிரம் எம்.ஜி.ஆர். வந்தாலும் திருத்த முடியாது"//
உண்மை தானுங்க

Jawahar said...

இளைஞர்களுக்கு சிந்தனையைத் தூண்டுகிற நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

Santhosh said...

தல,
நம்ம நாட்டுல போதிய விழிப்புணர்வு, வேலைவாய்ப்பிண்மை, வறுமை இருக்கும் வரை இதை ஒழிக்க முடியாது..

அதெல்லாம் சரி இதுல எம்.ஜி.ஆரு எங்க வந்தாரு?

லோகு said...

இதை எகிப்து தேசத்தில் இருந்து எழுதிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... :)

தங்கராசு நாகேந்திரன் said...

மிக சரியான பதிவு ராஜா
இங்கும் மாதம்300 ரியால் சம்பளத்துக்கு பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவர்கள் நிறைய உண்டு வாரம் ஒரு முறை மட்டுமே வெளி உலகத்தை பார்க்க முடியும். வெயிலிலும் பனியிலும் சிரமப்படும் இந்த வேலைக்கு 80000 ரூபாய் முதல் 100000ரூபாய் வரை பிடுங்கிய ஏஜண்ட்கள் உண்டு.