ஓங்கு
சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்தது முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், பக்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என பல
தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக
கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு
அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு
உயர்ந்து விட்டது. அனுதினமும்
ஆட்கள் வர, வர
நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள் கேட்டு
விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.
பூதகணங்கள்
அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர்
உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம்
முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று
உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு
பாஷை எனக்கு தெரியாதே. மேலும்
உமா-மகேஷ்வரர்
ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனே “ என்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த
வேண்டாம் அகத்தியரே, தென்தேச
மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு
நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.
அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில்
நீராடி, புண்ணிய
ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து, எம்பெருமான் ஈசன்
அருளால் வானுயரம் கொண்டு வழி மறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி, வாதாபி போன்ற அசுரர்களை வதம் செய்து, மேலும்
பல திருவிளையாடல்கள்
புரிந்து, மக்களுக்கு
அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்சங்கம் கடந்து, திருச்செந்தூர்
கடலில் நீராடி தமிழ்க்கடவுள் திருமுருகனையும் தரிசித்து நெல்லைச் சீமை வந்து நெல்லையப்பரை தரிசித்தவாறு, நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போன வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர்
அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.
இப்படியாக
அம்பை, கல்லிடை
நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை நோக்கிப் போன அகத்தியருக்கு திடீரென தாகம் எடுக்க, கமண்டல
நீரும் காலியாகி விட்ட படியால் சுற்றும், முற்றும்
பார்த்தார். சிங்கம்பட்டி ஊரெங்கும்
பச்சைப் பசேலென பயிர் பல விளைந்து, வயல்களுக்கு இடையே அங்கங்கே குடில் அமைத்து காவலுக்கு ஆள் அமர்ந்திருந்தனர். இப்போது போல் நெருக்கமாக அல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே அப்போது சிங்கம்பட்டியில் வீடுகள் இருந்தன.
அகத்தியர்
நின்ற இடத்தின் அருகில் இருந்த வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பெருமா கிழவி. வயது
எண்பது தாண்டி விட்டாலும், பிள்ளைகள், பேரன்களுக்கு உதவியாக அதிகாலையிலே எழுந்து, தொழுவம்
சுத்தப்படுத்தி, பசு மாடுகள் அவிழ்த்து கட்டி, கன்றுகளுக்கு
விட்டு பால் கறந்து, பின்
அவற்றிற்கு நீர் காட்டி, தேவையான
தீவனம் வைத்து, முந்தின
நாள் உறை ஊற்றிய தயிரைக் கடைந்து
வெண்ணெய் எடுப்பது என சுறுசுறுப்பாக
இருப்பார். வீட்டில்
உள்ள ஆண், பெண் அனைவரும் காலையில்
கஞ்சி எடுத்து கொண்டு வயல் வேலைகளுக்கு சென்றால் பின் இருட்டும் நேரம்தான் வீடு திரும்புவார். பெருமா கிழவி வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் குழந்தைகளுக்கு காவலாக இருந்து பார்த்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் உச்சி நேரத்தில் வீட்டு வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்து
தயிர் கடைந்து, மோர் தனியாக, வெண்ணை தனியாக பிரித்துக் கொண்டு இருக்கும்போதுதான்
அகத்தியர் வந்து
அருகில் நின்றார்.
சிங்கம்பட்டி
செழிப்பான ஊர் என்பதால் விளைந்த தானியங்களை விற்றது
போக வீடுகள்தோறும் பத்திரப்படுத்தி வைத்து இருப்பர். அவற்றை
திருடுவதற்கும்,
கொள்ளைக் கூட்ட்த்திற்கு உளவு பார்க்கவும் அவ்வப்போது ஊருக்குள் அன்னியர் பலவிதமான
வேடங்கள் அணிந்து வந்து
செல்வர். எனவே பெரும்பாலான சிங்கம்பட்டி மக்கள் அவரவர்
வீடு, வயல்கள் காவலுக்கும், கொள்ளையர்கள் வந்தால் குரைத்து விரட்டவும்
வீடுதோறும் வேட்டை நாய்களும் வளர்ந்து வந்தனர். ஆனால் அகத்தியரின் தபவலிமை
உணர்ந்த பெருமா கிழவி வீட்டு நாய்கள் சீறிக்
குலைக்காமல், வாலைக் குழைத்தவாறு அவரது காலைச் சுற்றி, சுற்றி வந்தன.
“தாயே, தாயே” என்று அழைத்தவாறு
தன் அருகில் வந்து நின்ற அகத்தியரை நிமிர்ந்து பார்த்த கிழவி தன் வீட்டு நாய்களும்
அவர் அருகே மயங்கி நிற்பது கண்டு, கொள்ளைக் கூட்ட உளவாளி தான் சன்னியாசி வேடமணிந்து
ஊருக்குள் வந்து
இருப்பதாக
நினைத்துக் கொண்டு, “என்ன வேண்டும்” என்றார். தயிர் கடைந்து
கொண்டு இருந்த கிழவி அருகில் மோர்க் குடம் நிரம்பி வழிந்து கொண்டு இருப்பதைக் கண்ட
அகத்தியர், “தாகமாக இருக்கிறது. மோர் அருந்த தந்தால் குடித்து தாகம் நீங்குவேன்” என்று
கேட்க வெகுண்ட கிழவி, “ ஊர் முழுக்க ஓடையெல்லாம் தண்ணீர் போகுது. உமக்கு குடிக்க மோர்
வேணுமா… ஆறு நிறைய போற தண்ணீரை ஆசை தீர அள்ளி குடிக்காமல் மோர் வேணும். தயிர் வேணும்ன்னு வீடேறி வந்து விருப்பமாய் கேட்பீரோ.. என்றதோடு நிறுத்தாமல் கிராமத்து கிழவிகளுக்குரிய இன்னும் பல கேலி, கிண்டல் பழமொழிகளை
நீட்டி, முழக்கி பேசலானார்.
“கைலாயமலை இறங்கியது முதல் இப்போது
வரை வந்த வழியெல்லாம் நீர் கேட்டால் மோர் கொடுத்து எல்லா ஊர் மக்களும் உபசரித்தனர். ஆனால் செழிப்பு மிக்க சிங்கம்பட்டி ஊரில் மட்டும் மோர் பானையை பக்கத்தில்
வைத்துக் கொண்டே கிழவி இந்த பேச்சு பேசுகிறாளே… ஐந்தறிவு மிருகங்களே தன்னருகே அமைதியாக
நிற்க, ஆறறிவும், அனுபவமும் கொண்ட சிங்கம்பட்டி கிழவி இப்படி அடக்கமில்லாமல் பேசுகிறாளே… “ என்று
கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ஊரில் இனி நீர்
இருக்கும். மோர்
இருக்காது.முப்போகம்
விளையும். ஆனால்
மோருக்கு வக்கத்துப் போகும்.” என்று சாபம் கொடுத்துச் சென்றார். அன்று
முதல் இன்று வரை சிங்கம்பட்டி ஊரில் வீடுதோறும் பால் மாடுகள் பல இருந்தாலும் மோர் மட்டும்
ருசியாக இருக்காது. இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் அறிவர். சிங்கம்பட்டி ஆற்றில் குளித்து
கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தில்தான் "அகத்தியர் கோவில்" என்னும்
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலும் உள்ளது.
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment