Sunday, November 11, 2018

ஊத்துக்குழி - பாகம் 3

மேலே இருக்கும் கதைகளை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 3 - பொன்னுசாமி பூசாரி

தென்பாண்டித் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஊர்களில் பெரிய, பெரிய ஆலயங்கள் இருந்தாலும் சிறுதெய்வ வழிபாடும் சிறப்பாகவே நடந்து வருகிறது. வீதிகள் தோறும் கோவில்களும், வீடுகள் தோறும் விதவிதமான வழிபாடுகளும் அன்றோட வாழ்வோடு ஆங்குற பிணைந்துள்ளன. ஆமக விதிமுறைகளின் படி கல்சிலைகள் இருக்கும் கோவில்களில் சுவாமி சிலைகளின் அளவிற்கு ஏற்ப ஒரு அடிக்கு இவ்வளவு படி என்று நைவேத்ய பிரசாதங்கள் படைத்து காலை, மாலை இருவேளைகளும் நித்ய பூஜை, புனஸ்காரங்கள் செய்து வழிபாடு நடத்த வேண்டும் என்பதால் பெரும்பான்மையான தென்மாவட்ட கிராம தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் கோவில்களில் உருவச்சிலைகள் அமைக்காமல் பூடம் என்னும் பீடங்களே இருக்கும்.

கோயில் கொடைத் திருவிழாக்களின் போது புது மண், செங்கல் கொண்டு செய்து, சுண்ணாம்பு பூச்சு ஏற்றிய பூடங்களின் மேல் தீர்த்தக்குடங்கள் ஏறிய பின்பு உருவ அலங்காரம் பண்ண தோதாக கம்புகள் கட்டி, வாழைத் தண்டு, மட்டைகளை வகைப்படுத்தி அடுக்கி, அதன் மேல் சந்தனம், மாவு மூலம் கனகச்சிதமாக கைகள், கால்கள், கழுத்து, தலை, மார்பு, முகம் உருவேற்றி மின்னும் பல வண்ணத்தாள்கள் மூலம் கண், காது, மூக்கு, வாய், மீசை, அரிவாள், கத்தி, ஆடை, ஆபரணங்கள் ஜோடித்து ஒட்டி, சுற்றிலும் அலங்காரத் தட்டிகள், மின்னும் பல வண்ண விளக்குகள் பாங்கே கட்டி வில்லுப்பாட்டு கதைகளில் கூறப்படும் காட்சிகளைப் போன்று துடியாய் நிற்கும் சுவாமிகளை கண் முன்னே நிறுத்தும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது.

புலிப்பட்டி பண்ணையார் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட அகத்தியர் கோயில், அம்மன் கோயில்கள் மற்றும் ஊத்துக்குழி சிவன் கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக காலை, மாலை இருவேளைகளுமே பூஜைகள் தொடந்து நடந்து வருகின்றன. அதற்கெனவே தனியாக பூசாரிக் குடும்பம் காலம் காலமாக உள்ளது. பொன்னுசாமி பூசாரியே தற்போது பொறுப்பில் இருப்பவர். அவரது அப்பா, தாத்தா என தலைமுறை, தலைமுறையாக பண்ணையார் குடும்பத்தின் ஆன்மீகப் பணிகளுக்கு அடித்தளமாக இருந்து வருகின்றனர். 

கோயில் பூஜைகள் மட்டுமல்லாமல் பண்ணையார் குடும்பத்திற்கு விவசாய வேலைகள் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துக் கொடுப்பது, நாள், நட்சத்திரம் பார்த்து பிரயாணத் தேதிகள் மற்றும் பலன்கள் சொல்வது, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர்கடன்கள்  தவறாமல் செய்வது, பருவகால மாற்ற நோய், நொடிகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுப்பது என பல வழிகளில் உதவி வந்ததால் பூசாரிக் குடும்பத்திற்கு என புலிப்பட்டியில் தனி மரியாதை உண்டு. தவிரவும் சித்து வேலைகளான மந்திர, தந்திரங்களிலும் பரிச்சயமானவர் என்ற பேச்சும் ஊருக்குள் உண்டு.

பொன்னுசாமி பூசாரி வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். அதிகாலையில் எழுந்து ஆற்றில் சென்று குளித்து விட்டு, அகத்தியர் கோவில் நடை திறந்து, ஆற்றில் இருந்து நீர் சேந்தி வைத்து விட்டு, கோயிலைச் சுற்றி அமைத்துள்ள நந்தவனத்தில் இருந்து பூக்கள் பறித்து, மாலைகளாக தொடுத்து அகத்தியர் கோவில் போக ஊத்துக்குழி சிவாலயம் மற்றும் அம்மன் கோவில்களுக்குத் தனித்தனியாக தென்னை ஓலைகளால் முடைந்து பின்னப்பட்ட பூக்குடலைகளில் எடுத்து வைத்து விடுவார். 

அதன்பின் மடப்பள்ளியில் சென்று அன்றைய நைவேத்திய பிரசாதங்கள் தயாரித்து அவற்றையும் தனித்தனி பாத்திரங்களில் எடுத்து மூடி வைத்து விடுவார். அதன்பின்னே கருவறைக்குள் சென்று முந்தைய நாள் அலங்காரங்கள் கலைத்து, சுவாமிகளுக்கு அபிசேகம் முடித்து, அலங்கார, ஆராதனைகள் செய்து, நைவேத்திய பிரசாதங்கள் படைத்து முடித்து, தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு விநியோகித்தது போக மீதியை தானும் உண்டு விட்டு பின் அகத்தியர் கோவில் நடை சாத்தி, பூட்டி சாவி எடுத்துக் கொண்டு ஊருக்குள் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருவதற்கு காலை மணி பத்து, பத்தரை ஆகிவிடும்.

பூசாரியின் இரண்டு மகன்களும், அவருடனே காலையில் வந்து ஆற்றில் குளித்து, நீர் சேந்துவது, பூக்கள் பறித்து கட்டுவது என தந்தைக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு பின் பூக்குடலைகளை எடுத்துக் கொண்டு இளையவர் ஊத்துக்குழி கோவிலுக்கும், பெரியவர் ஊரினுள் இருக்கும் அம்மன் கோவில்களுக்கும் பூஜை செய்ய சென்று விடுவர். பொன்னுசாமி பூசாரி அன்றாடம் அகத்தியர் கோயிலில் இருந்து வரும்போது பண்ணையார் வீட்டில் கொடுப்பதற்காக விபூதி, குங்கும பிரசாதங்கள் எடுத்து வருவார். 

ஊத்துக்குழி கோவிலில் பூஜை செய்து விட்டு வந்து பிரசாதங்களை அம்மன் கோவிலில் வைத்து விட்டு அவர் இளைய மகன் பள்ளி சென்று விடுவான். பெரிய மகனும் அம்மன் கோவில்களில் பூஜை முடித்து பிரசாதங்கள் கொண்டு வந்த பின் அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு பண்ணையார் வீட்டிற்கு செல்வார். சின்ன பண்ணையார் பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். ஆனால் பெரிய பண்ணையாரம்மா அதிகாலையிலே குளித்து தேவாரம், திருவாசகம் படித்து, பூஜைகள் செய்து பூசாரி கொண்டு கொடுக்கும் விபூதி, குங்கும பிரசாதங்களை நெற்றி நிறைய பூசிய பின்பே காலை உணவு எடுப்பார்.

பெரிய பண்ணையார் இருந்த வரை பண்ணையாரம்மா விசேச நாட்களில் அகத்தியர் கோவிலுக்கும், செவ்வாய், வெள்ளி தவறாமல் அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சிறந்த பக்திமானாகிய பெரிய பண்ணையார் மறைவிற்கு பின் பண்ணையாரம்மா வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்றாலும் தினமும் காலையும், மாலையும் கோயில் பிரசாதங்கள் வரும் வரை பூஜையறையை விட்டு வெளியே வருவதில்லை. பொன்னுசாமி பூசாரி கோயில் பிரசாதங்களை கொடுத்து விட்டு கோயில் வரவு, செலவு வகை விவரங்களை கணக்குப் பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டு கொஞ்ச நேரம் பண்ணையாரம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு பின் வந்து விடுவார்.

மாலை நான்கு மணி அளவில் மறுபடியும் அகத்தியர் கோவிலுக்குச் சென்று மீண்டும் பூக்கள் பறித்து கட்டி மாலை ஆக்கி ஊத்துக்குழி சிவாலயம் மற்றும் அம்மன் கோவில்களுக்குத் தனித்தனியாக  பூக்குடலைகளில் எடுத்து வைத்தது போக மற்றவற்றை அகத்தியர் கோவில் சுவாமிகளுக்கு அணிவித்து சந்தி கால பூஜைகளை முடித்து நடை சாத்தி விட்டு பிரசாதம் எடுத்துக் கொண்டு கிளம்புவார். மாலை நேரங்களில் மடப்பள்ளி வேலைகள் இல்லாத காரணத்தாலும், மகன்கள் பள்ளி விட்டு வந்து படிக்க வேண்டி இருப்பதாலும் அவரே ஊத்துக்குழி கோவில் மற்றும் அம்மன் கோவில்களில் பூஜை செய்து விடுவார். அப்படி ஊத்துக்குழி கோவில் போகும்போதுதான் ராமசாமிப் போத்தி வயலில் இருந்த காய்கறிகள் அவர் கண்ணை உறுத்தின.

பொன்னுசாமி பூசாரிக்கு கோயில் வருமானத்தை தவிர வேறு வருமானம் கிடையாது. கோயில் பூஜைகளுக்கான சன்மானம் வருடம் இருமுறை அறுவடையின் போது பண்ணையார் நெல்லாக அளந்து கொடுத்து விடுவார். எனவே சாப்பாட்டு அரிசிக்கு பிரச்சினை இல்லை. அமாவாசை திதிகள், பவுர்ணமி சிறப்பு பூஜைகள், பஞ்சாங்கம் பார்ப்பது, சித்த மருத்துவம் போன்றவற்றிற்கு பண்ணையார் தட்சணையை பணமாக கொடுத்து விடுவதால் இதர குடும்ப செலவுகளுக்கு சரியாக இருக்கும்.ஆறேழு பேர் கொண்ட குடும்பத்திற்கு குழம்பு, கறி வைக்க காய்கறிகள் வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் ராமசாமிப் போத்தி வயலில் இருந்த கீரை, காய்கறிகளை பறித்து செல்ல ஆரம்பித்தார்.

ஊத்துக்குழி கோவிலுக்கு சந்தி பூஜை செய்யப்போகும் நேரம் கண்ணில் படும் காய்கறிகளை கவனித்துக் கொள்வார். பின் திரும்பி வரும்போது காலியாக இருக்கும் பூக்குடலைக்குள் கீரை காய்கறிகளை பறித்துப் போட்டு துண்டால் மூடி எடுத்துச் செல்வதால் உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.  பொன்னுசாமி பூசாரி ஒருவர் மட்டுமே அந்த நேரத்தில் நடமாடுவதால்  ராமசாமிப் போத்திக்கு சந்தேகம் இருந்தும், ஆதாரம் இல்லாததால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால் அன்று பொன்னுசாமி பூசாரி கையும், களவுமாக வசமாக பிடிபட்டு விட்டார்.

(தொடரும்)

பாகம் 4

No comments: