Monday, November 30, 2015

கிடா வெட்டு – இறுதி பாகம்

பாகம் 10 - கிடா வெட்டு – இறுதி பாகம்


போலிஸ் ஸ்டேஷனிலிருந்து வெளிவந்து கல்லிடையில் சில ஆட்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்ற புலியாண்டி இரவு வீடு திரும்ப வில்லை. அலைபேசியில் அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை. தெரிந்தவர்களிடம் போன் செய்து விசாரித்தும், இரண்டு நாட்களாக பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் இல்லாததால் மறுநாள் மாலை ஸ்டேஷனில் கம்ளைண்ட் கொடுக்கப்பட்டது. புலியாட்சியும், புலிபதியும் அம்பையில் புலியாட்சியின் மனைவியின் தங்கை வீட்டில் தங்கி இருந்ததை கண்டுபிடித்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, லாக்கப்பில் போட்டு விட்டனர். 

தொடர்ந்து இரண்டு நாள் தேடியும், புலிபதியிடம் தொடர்ந்து விசாரித்தும் ஏதும் தகவல் கிடைக்கவில்லை. புதனன்று மாலை புலியான் போன் செய்து, ‘சித்தப்பா, அப்பா வீட்டுக்கு வந்துட்டு…’ என்று கூற, ’சரிப்பா. நாளைக்காலைல நா வந்து பாக்கேன்னு சொல்லு’ என்றான் புலிமுத்து.

மறுநாள் வியாழன் காலை பதினொரு மணி அளவில் புலிப்பட்டி சென்றபோது மீண்டும் பரபரப்பு. புலியாண்டி வந்து விட்டதால் இரவு ஸ்டேஷனில் இருந்து பிணையத்தில் விடப்பட்டு வெளிவந்த புலிபதி, அதிகாலையில் வயலுக்குச் சென்ற புலியாண்டியை, பின்னால் இருந்து கம்பால் தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டானாம். மறுபடியும் ஸ்டேஷன். கம்ப்ளைண்ட். அதன்பின் புலியாண்டியும் தலைமறைவு. வியாழன்,வெள்ளி இரண்டு நாளும் புலியாண்டியை அலைபேசியில் அழைத்தாலும் எடுத்துப் பேசவில்லை. அவன் குடும்பத்தினருக்கும் எப்போதும் போல் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.

சனி மாலை ஆறு மணி அளவில் புலியாண்டியில் அலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேசிய புலிமுத்து,’ எண்ணே, என்ன ஆச்சு.எங்க இருக்கீங்க..’ என்று விசாரிக்க, ‘தம்பி, படையல் போட்ட ஆளு மறுவாரம் போய் தேங்காய், பழம் உடைக்கணும்… நாளைக்கு காலைல ஏழு மணிக்கு மணிமுத்தாறு செக்போஸ்ட் வந்துரு… நான் அங்க நிக்கேன்… வெயிலுக்கு முன்னே ரெண்டு பேரும் போய் சாமிய கும்பிட்டு வந்துடுவோம். மத்த விவரமெல்லாம் நேர்ல பேசிக்கிடுவோம்’ என்றான் புலியாண்டி.

மறுநாள் காலை ஏழு மணி அளவில் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு சென்ற புலிமுத்துவின் பைக்கில் ஏறிக்கொண்ட புலியாண்டி கோயில் போகும்வரை ஏதும் பேசவில்லை. கோயிலுக்குச் சென்று, ஆற்றில் குளித்து, எல்லா சாமிகளுக்கும் தேங்காய், பழம் உடைத்து தீபாராதனையும் காட்டி, கடைசியாக புலியாண்டி சுவாமி முன் வந்து வணங்கி நின்றபோது, ‘நான் அப்படி என்ன பாபம் செஞ்சேன்… இந்த பயல்வுளால எனக்கு ஏன் இந்த பாடு.., என்னை ஏன் பாடாபடுத்துறானுங்க.. என் குடும்பத்துக்கு நிம்மதியே கிடையாதா..’ என்று அழுது அரற்றிய புலியாண்டியை அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தான் புலிமுத்து.

‘எப்பா..அவனுவோ  சாப்பிட உட்கார்ந்த இடத்துல ஆள் சரியா பரிமாறலன்னா, நானாப்பா காரணம்… சரியா சாப்பிடலை… வீட்டுல கொண்டுபோய் சாப்பிட கறி தான்னு கேக்கானுவளே… கோயில்ல இருந்து கறி கொண்டு போகக் கூடாதுன்னு இவனுவளுக்குத் தெரியாதாப்பா…. கோயில் நடைமுறையை சொன்னது குத்தமாம். அவனுவளை அவமானப் படுத்திட்டேனாம். இதுக்குத் தான்பா அப்பனும், மகனும் என்னை இழுத்துப் போட்டு வெட்டணும்ன்னு சொல்லிட்டு திரியுதானுவோ…. ‘ என்று பிரச்சினைக்கான காரணத்தைப் பொட்டென போட்டு உடைத்தான் புலியாண்டி.

‘வியாழக்கிழமை காலைல தலைல அடிச்சு, கீழே தள்ளிட்டு சொல்லுதான், குடும்பத்துல பெரியவன் எங்கப்பா இருக்கும்போது நீ எப்படி கோயில்ல கிடா வெட்டலான்னு கேக்கான்.. இது என்ன என் வீட்டு விசேஷமாப்பா.. அப்படி அவன் அப்பன்தான் வெட்டணும்ன்னா உன்ட்ட சொல்லியிருக்கலாம்… இல்லை வேற யார்ட்டயும் சொல்லி என்கிட்ட சொல்லியிருந்தா காலைலே அவனையும் என்னோடவே கூப்பிட்டுட்டு போய் கிடா வெட்ட வச்சுருப்பேன். வயக்காட்டுல மருந்தடிச்சுட்டு ரெண்டு மணிக்கு கோயிலுக்கு வந்துகிட்டு இவனுவோ பேசுறது நியாயமா.. என்னைக் கொல்லாம விடமாட்டானாம். என்னைக் குத்தணும்ன்னு எப்பவும் கையிலே கத்தியோடதான் திரியுதானாம். அன்னைக்குக் கூட என் தலைல கல்ல தூக்கி போடப்பாத்தான். எப்படியோ எந்திச்சு ஓடினதாலே பொழைச்சேன்.’

‘சொத்துதான் பிரச்சினைன்னா என் சொத்தை வேணா அவனுவோளே எடுத்துகிட்டும். அவனுவோ  கொடுக்கிறதை நான் வாங்கிக்கிறேன். என் வழிக்கு வராம இருந்தா அதுவே கோடி புண்ணியம். எத்தனை நாளு இவனுவளுக்குப் பயந்து, உயிரைக் காப்பாத்த, நான் கண்டவன் தோட்டத்திலேயும் ஒளிஞ்சு கிடக்கமுடியும்…‘அண்ணன், தம்பிங்க இன்னைக்கு ஆட்டுக்கறிக்கு அடிச்சுக்கிடுவானுங்க… நாளைக்கு கோழிக்கறிக்கு கூடிக்கிடுவானுங்க…’ ன்னு சொல்ற ஊர்க்காரப் பயல்வோ எவனும் பிரச்சினையை பேசி முடிக்க வர மாட்டக்கானுவளே… என மனம் உடைந்து பொறுமியவனை, ‘எண்ணே, நமக்கு சாமிதான் துணை.. இந்த புலியாண்டி சாமியும் எல்லாத்தையும் பாத்துகிட்டுதானே இருக்கார். நல்ல தீர்ப்பு கொடுப்பார். நீங்க கவலைப்படாதீங்க… நான் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஏதும் பேசித் தீர்க்க முடியுமான்னு பாக்குறேன். என்று கூறி அழைத்து வந்து புலிப்பட்டியில் அவன் வீட்டில் விட்டுச் சென்றான் புலிமுத்து.

இதற்குமேல் காலம் தாழ்த்தினால் பிரச்சினை மேலும் பெரிதாகி,வெட்டு,குத்தாகி விடும் என்பதனால் பின் அங்கிருந்து நேராக புலியாட்சியின் வீட்டுக்குச் சென்று புலிபதியிடம் பேசி என்ன பிரச்சினை, ஏது பிரச்சினை என்று விசாரித்து, ‘கோயில்ல நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பேத்து மன்னிப்பு கேட்டுக்கிறேன், இனிமே இது விஷயமா புலியாண்டி அண்ணன்ட்ட ஏதும் பிரச்சினை பண்ணாதீங்க. உங்களுக்கு நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க.. அதையும் செஞ்சிடுறேன்.’

‘ஓடு மாத்தி, உடைஞ்ச சாமானையும் வாங்கி கொடுத்துடுறோம். போலிஸ் ஸ்டேஷன்ல எங்க மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்கச் சொல்லுங்க. அது போதும். தெனம் போலிஸ்காரனுக்கு கொடுத்து முடியல… என்று ஒருவழியாக சமாதானத்திற்கு வந்தார்கள்  புலியாட்சியும், புலிபதியும்.

அடுத்து வந்த நாட்களில் புலிபதியால், புலியாண்டி வீட்டின் சரிந்த கூரையும், ஓடுகளும் மாற்றப்பட்டு, உடைந்த சாமான்களும் வாங்கப்பட்டு போட்டோக்கள் எடுக்கப்பட்டு போலிஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரிடம்  பிரச்சினை சமாதானமாக பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று கூறி கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது.

குடும்பத்தை தற்போது தன்னுடன் அழைத்துச் செல்லலாமா, அல்லது கடந்த ஒரு வருடமாக அம்பையிலே படிக்கும் மூத்த குழந்தையின் இந்த கல்வி ஆண்டு முடிந்து அழைத்து செல்லலாமா என்ற குழப்பத்திலே இருந்த புலிமுத்து  கடைசியில் அவனுக்கு மட்டும் டிக்கெட் போட்டுக் கொண்டு அந்த வார இறுதியில் விடுமுறை முடிந்து தனியாகவே மலேஷியா திரும்பிவிட்டான்.  

தொலைந்த அலைபேசி குறித்து தகவல் ஏது இல்லாததால் மலேஷியா வந்தவுடன் புதிய எண்ணுடன் புது அலைபேசியும் வாங்கி வீட்டுக்கும் புதிய எண்ணை தெரிவித்துவிட்டான். அடுத்த வாரம் வெள்ளியன்று காலை பத்து மணி அளவில் புலிமுத்துவை அலைபேசியில் அழைத்த அவனது மனைவி,’ஏங்க.. உங்க புலியாண்டி அண்ணன் போன் பண்ணாங்க… தம்பி இருக்கானா, ஊருக்குப் போயிட்டானானு கேட்டவங்ககிட்டே நீங்க அவசரமா கிளம்பி போன விபரம் சொன்னேன். சரி நான் பேசிக்கிறேன்னு சொன்னவங்க உங்க பழைய நம்பருக்குப் போட்டிருப்பாங்க போல.. நம்பர் கிடைக்கலைன்னு திருப்பி போன் பண்ணி சொன்னாங்க.’

‘நீங்க அவங்களுக்கு போன் பண்ணி என்ன , ஏதுன்னு கேட்டுக்குங்க’ என்ற போது ‘ஆஹா..இப்போது என்ன பிரச்சினையோ… யார், யாரை அடிச்சானோ..’ தெரியவில்லையே என்று மனம் குழம்பி யோசிக்க ஆரம்பித்தான் புலிமுத்து. 

( முற்றும் )

4 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே கிடாவெட்டு வெற்றிகரமாக நடத்தி மலேசியா திரும்பியமைக்கு வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

பிரச்சினைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துருச்சேன்னு நினைச்சா ஆஹா என்ன பிரச்சினையோன்னு முடிச்சிருக்கீங்க....

அப்ப அடுத்த கிடாவெட்டு இருக்குன்னு நினைக்கிறேன்...
ஆமா அடுத்த கிடாவெட்டு எப்போ?

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே கிடாவெட்டு வெற்றிகரமாக நடத்தி மலேசியா திரும்பியமைக்கு வாழ்த்துகள்... //

ஆம் கில்லர்ஜி... இந்த முறைப் பயண அனுபவம் பத்து பாகத்தொடரை தந்துவிட்டது. தொடர் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. நன்றி.

துபாய் ராஜா said...

// பரிவை சே.குமார் said...

பிரச்சினைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துருச்சேன்னு நினைச்சா ஆஹா என்ன பிரச்சினையோன்னு முடிச்சிருக்கீங்க....

அப்ப அடுத்த கிடாவெட்டு இருக்குன்னு நினைக்கிறேன்...
ஆமா அடுத்த கிடாவெட்டு எப்போ? //

அடுத்த கிடா வெட்டு அடுத்த முறை ஊருக்குப் போகும்போதுதான் நண்பர் குமார். உற்சாகம் தந்த தொடரூக்கப் பின்னூட்டங்களுக்கு நன்றி.நன்றி.