Thursday, November 26, 2015

கிடா வெட்டு - பாகம் 7
பாகம் 7 – பரபரப்பான ஏற்பாடுகள்

மறுநாள் ஞாயிறன்று காலையும், மாலையும் அம்பையில் இருந்த உறவினர்கள் வீடுகளில் மனைவியோடு சென்று சொல்லி வந்தான். நெல்லை, தென்காசி போன்ற ஊர்களிலும், மற்ற வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் அலைபேசியில் விபரம் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். திங்களன்றும், விடுபட்டவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் நேரிலும், அலைபேசியிலும் அழைப்பு விடுப்பதிலுமே பொழுது போய் விட்டது. நடுவில் புலியாண்டிக்கு போன் செய்து திருநெல்வேலி போவதற்காக செவ்வாய் காலை ஒன்பது மணிக்கு கல்லிடைக்குறிச்சி வந்துவிடச் சொல்லிவிட்டான்.

செவ்வாயன்று காலை அம்பை வீட்டிலிருந்து மகேஷின் காரில் மனைவியோடு கிளம்பி, கல்லிடைக்குறிச்சியில் புலியாண்டியையும் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியை அடையும்போது மணி காலை மணி பத்தரை. முதலில் புலியாண்டியை வண்ணாரப்பேட்டை ஆரெம்கேவி ஜவுளிக்கடையில் இறக்கி தேவையான ஜவுளி எடுத்து பில் வாங்கி வைக்குமாறும், ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவதாகவும் கூறி விட்டு டவுணுக்கு வழக்கமாக செல்லும் நகைக்கடைக்குச் சென்று காதுகுத்துக்கு தேவையான கம்மலை வாங்கிக் கொண்டு திரும்பினர்.

அதற்குள் ஜவுளிக்கடையில் அனைத்து சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் வேண்டிய வேட்டி, பரிவட்டம், பட்டுச் சேலை மற்றும் படையல் போடும் போது கீழே விரிப்பதற்கும், பந்தம் கொளுத்துவதற்கும் தேவையான காடா வேட்டிகள் வகையறாக்களையும் வாங்கி புலியாண்டி பில் போட்டு வைத்திருக்க, அனைத்து பில்களுக்கும் பணம் செலுத்தி ஜவுளிகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது மதிய உணவு நேரம் ஆகிவிட்டதால், அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நெல்லையிலிருந்து அம்பை நோக்கி கிளம்பினர்.

வண்டியில் பேசிக்கொண்டே வந்த போது, ‘எண்ணே, நம்ம ஊரைத்தவிர எல்லாருக்கும் சொல்லியாச்சு. நம்ம ஊர்ல எப்ப சொல்லலாம். அதே மாதிரி அம்பைக்கு ரெண்டு வேன் சொல்லியிருக்கேன். நம்ம ஊருக்கு எத்தனை வேன் சொல்லணும்ன்னும் சொல்லியிருங்க.’. என்று கேட்ட புலிமுத்துவிடம்,

‘நாளைக்கு மதியத்துக்கு மேல ஊருக்கு வா. எல்லாரும் வயலுக்குப் போயிட்டு வந்து வீட்டுல இருப்பாங்க. சொல்லிருவோம். நம்ம ஊருக்கு ஒரு தெருவுக்கு ஒரு வண்டின்னாலும் நாலு தெருவுக்கும் சேத்து நாலு வண்டி விட்டுற வேண்டியதுதான். ' என்றான் புலியாண்டி.

உடனே ‘சரி மகேஷ். அம்பைக்கு மாதிரியே ஊருக்கும் பெரிய வேன்களா நாலு ஏற்பாடு பண்ணிடுங்க. கூட ரெண்டு வேனும் தயாரா வச்சுக்கங்க. தேவைப்பட்டா கூப்பிட்டுக்கலாம். அப்படியே நல்ல ஸ்டூடியாக்காரனுக்கு சொல்லி போட்டோ, வீடியோ எடுக்கவும் ஏற்பாடு பண்ணிடுங்க’ என்று வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மகேஷிடம் தெரிவித்தான் புலிமுத்து.

தேவையான சில ஜவுளிகளை எடுத்துக்கொண்டு, கல்லிடையில் புலியாண்டி இறங்கிவிட அம்பை வந்து மற்றவற்றை இறக்கி வைக்கும்போது மணி மூன்று ஆகிவிட்டது. மறுநாள் மதியஉணவிற்கு மேல் புலிப்பட்டிக்கு சென்று தெற்குத் தெருவில் ஆரம்பித்து, கிழக்குத்தெரு, மேற்குத்தெரு வழியாக வடக்குத்தெரு வரை சொல்லி முடிக்கும்போது நேரம் இருட்டி ஏழுமணி ஆகிவிட்டது. அனைவரது வீட்டிலும் வேன் ஏற்பாடு செய்திருக்கும் விபரமும் கூறி எல்லோரும் கண்டிப்பாக வந்து குழந்தையை ஆசிர்வதித்து புலியாண்டி சாமியின் அருளையும் பெறவேண்டும் என்று கூறி வந்தார்கள். புலியாட்சியின் வீட்டில் சொல்லப்போகும் போது மட்டும் புலியாண்டி வீட்டிற்குள் வராமல் தெருவில் நின்று கொண்டான்.

மறுநாள் வெள்ளிகிழமை வீட்டிற்கு ஸ்டூடியோவிலிருந்து வந்து குழந்தையையும், குடும்பத்தாரையும் போட்டோ, வீடியோ எடுத்ததில் அன்றைய பொழுது கழிந்தது.

சனிக்கிழமை காலை அம்பை வாரச்சந்தைக்குச் சென்று காய்கறிகள், தேங்காய், பழக்குலைகள்,  வாழை இலை வாங்கி ஒரு வண்டியில் ஏற்றி, அப்படியே கல்லிடை மளிகைக் கடையில் மளிகைசாமான்களையும், வாடகை பாத்திரக்கடையில் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களையும் ஏற்றிக் கொண்டு நேராக புலிப்பட்டி போய் புலியாண்டி வீட்டில் இறக்கிவைத்தனர். ஏற்கனவே மூன்று கிடாய்களையும் வாங்கி அங்கே கட்டி இருந்தார்கள்.

மறுநாள் காலை காதுகுத்தன்று அதிகாலை முதல்பஸ்சில் சமையல் குழுவும், பரிமாறுபவர்களும் வந்தவுடன் அனைத்து சாமான்களோடும், சமையல்கார குழுவோடும், தனி வண்டியில் புலியாண்டி கிளம்பி முதலில் கோயிலுக்கு செல்வதாக ஏற்பாடு. மற்றவர்களுக்கு காலை எட்டரை மணி அளவில் வேன் ஏற்பாடு செய்திருந்தது. கோயிலுக்குச் சென்றதும் சைவசமையல் குழு முதலில் காலை உணவாக பொங்கல், சாம்பார் செய்துவிட்டு பின் சைவப்படையலுக்கு தயார் செய்யும் வேலையில் இறங்கி விடுவதாகவும், அந்த நேரத்தில் கிடாக்களை வெட்டி , கறித்துண்டுகளாக்கி அசைவ சமையல் குழுவும் வேலையில் இறங்கிவிடுவதாகவும் ஏற்பாடு.


மதியம் பனிரெண்டு மணிக்கு சைவப்படையல் முடித்து, ஒரு மணிக்குள் அசைவப்படையல்களும் முடித்து உடனே சாப்பாடு பரிமாறி மூன்று மணிக்குள் பந்திகளை முடித்துவிட்டு அனைவரும் நாலுமணிக்குள் கோயிலில் இருந்து கிளம்பி விடவேண்டும் என்று ஏற்கனவே புலியாண்டியும், புலிமுத்துவும் பேசியிருந்தனர். காலையில் கோயில் சென்றவுடன் தான் உள்பட யார் வருவதற்கும் காத்திராமல் புலியாண்டியையே கிடாக்களை வெட்டிவிடச் சொல்லி விட்டு சாமான்கள் ஏற்றி வந்த வண்டி மீண்டும் அம்பை செல்வதாக கூறியதால் தன்னையும் ஆசிரியர் குடியிருப்பில் விட்டு விடுமாறு கூறி புலியாண்டியிடம் விடைபெற்று வீடு சென்றான் புலிமுத்து.

( தொடரும் )

பாகம் 8

No comments: