Wednesday, November 25, 2015

கிடா வெட்டு - பாகம் 6

                                        
பாகம் 6 – பிரச்சினைக்கு என்ன காரணம்…

புலிபதியை பார்த்ததும் புலியாண்டி ஏதும் பேசாமல் வண்டியை விட்டு இறங்கி சிறிது தூரம் தள்ளி முன் சென்று ஒரு மரத்தடியில் நின்று பீடியை பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். ‘என்ன சித்தப்பா… எப்ப வந்தீங்க. தாத்தா, பாட்டி, சித்தி, தம்பி, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க..’ என்று குசலம் விசாரித்த புலிபதியிடம், எல்லாரும் நல்லா இருக்காங்க…நீ எப்படி இருக்கே.. வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா..’ என்று புலிமுத்துவும் விசாரித்தான்.

சிறிது நேரம் விவசாயம், பயிர், நோய், மழை எல்லாம் பேசிய பின், ‘எங்கே மேலே கோயிலுக்குப் போயிட்டு வர்றீங்களா…’ என்று வினவிய புலிபதியிடம், ‘ஆமாப்பா, அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை தம்பிக்கு முடி எடுத்து காது குத்தலாம்ன்னு இருக்கோம். வீட்டுல வந்து சொல்லுவேன். எல்லாரும் கண்டிப்பா வரணும்.’ என்றான் புலிமுத்து.

‘போன வாரம் அம்பை யூனியன் ஆபிஸ் போயிருந்த போது தாத்தாவை போய் பார்த்துட்டு வந்தேன். அப்ப சொன்னாங்க. நீங்க வந்ததும் கோயிலுக்கு செய்யனும்ன்னு… நம்ம வீட்டு விசேஷம். வராம இருப்பேனா… ஏதும் உதவி வேணும்ன்னா எப்போ வேணும்ன்னாலும் கூப்பிடுங்க…’ என்ற புலிபதியிடம் விடைபெற்று வண்டியை ஸ்டார்ட் செய்தவன் புலியாண்டி அருகே நின்று ஏற்றிக்கொண்டு கல்லிடைக்குறிச்சி நோக்கி விரைந்தான்.

ஏற்கனவே மரத்தடியில் ஒதுங்கி நின்ற போது புலியாண்டி சமையல்காரரிடம் போன் செய்து பேசியிருந்ததால் கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் நகராட்சி திருமணமண்டபத்திற்கு வரச்சொல்லி இருந்தார். மரநிழலில் வண்டியை விட்டுவிட்டு ஆக்குப்பறைக்கு (ஆக்கும் அறை - சமையல் செய்யும் இடம் ) சென்று சமையல்காரன் குமாரை சந்தித்த போது, ‘இன்னைக்கு சனிக்கிழமை… யாரு விசேஷம் வைக்கா… ஆள்கள் யாரையும் காணோம்..’ என்று புலியாண்டி வினவ, நம்ம அம்பை ஒன்றியத்துக்கு  மாவட்டத்தலைவர் பதவி கிடைச்ச விருந்து சிக்கன் பிரியாணியும், மட்டன் கிரேவியும்… ஒவ்வொரு ஊரா மீட்டிங் முடிச்சு மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்குத்தான்  மண்டபத்துக்கு வருவாங்களாம். கல்லிடைக்குறிச்சில மீட்டிங் முடிச்சுட்டு வர எப்படியும் ரெண்டு மணி ஆகிடும் போல..’ என்றான் குமார்.

‘ஆளும்கட்சியா..எதிர்கட்சியா…’என்று புலிமுத்து ஆர்வத்தில் கேட்க ,’ரெண்டுமே இல்லை. ஏதோ ஜாதிக்கட்சியாம். வர்ற தேர்தல்ல ஏதாவது ஒரு கட்சி கூட கூட்டணி சேர்றதுக்குத்தான் இவ்வளவு தடபுடலும்…’ என்று பதில் வந்தது.

‘சரிப்பா..நம்ம கதையை பார்ப்போம்..’ என்று கூறி குமாரிடம் விபரம் சொல்லி ஆயிரத்தொரு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து சாமான் லிஸ்ட் எழுதி மறுநாள் கொடுக்கச் சொன்னார் புலியாண்டி.

‘மூணு கிடா… டேஸ்ட் ஏதும் மாறிடாதுல்லா…’ என்று புலிமுத்து கேட்க, ரெண்டு பேரையும் ஆக்குப்பறையிலே டேபிள், சேர் போட்டு சாப்பிட வைத்து, சாப்பிட்டு முடித்த பின் சுவை எப்படி வினவிய குமார், ‘அறுபது ஆடு… டேஸ்ட் ஏதும் வித்தியாசம் தெரிஞ்சுதா… அம்பை தாலுகாவிலே அசைவம் சமைக்குதலே நான்தான் இப்ப டாப்…. தினம் வீட்டுலேயே முன்னூறு பிரியாணி போட்டு கடைகளுக்கு சப்ளை ஆகுது.’ என்று தன் திறமைக்கு சுயசான்றிதழ் கொடுத்தான்.

சாப்பாடும் குறை சொல்ல முடியாதபடி நன்றாகவே இருந்தது.’ கறி எல்லாம் நல்லா பஞ்சு, பஞ்சாக வெந்துருக்கே… வீட்டுல செஞ்சா இந்த டேஸ்ட் வர மாட்டக்கே.. ஏன்…’ என்று கேட்ட புலிமுத்துவிடம், ‘அதெல்லாம் தொழில் ரகசியம்..’ என்று கண்சிமிட்டி சிரித்த குமாரிடம் விடைபெற்றுக் கொண்டு தேரடி வந்து பூக்கடையிலும் அட்வான்ஸ் கொடுத்தனர்.

‘சரி.நான் பஸ்ல ஊருக்குப் போயிடுதேன். நீ நேரா அம்பை போயிடு… நாளைக்கு நான் வந்து சாமான் லிஸ்ட் வாங்கி மளிகைக் கடையிலே கொடுத்துடுறேன். ‘ என்ற புலியாண்டியிடம், ‘சாமிகளுக்கு ஜவுளி அம்பை, கல்லிடையிலே எடுத்திரலாமா.. இல்லை திருனவேலி (திருநெல்வேலி) போகணுமா..’ என்று கேட்டான் புலிமுத்து.

 இங்கே முன்ன மாதிரி கடைவோ இல்லை. உனக்கு திருனவேலி போற சோலி இருந்தா அங்கே போய் எடுத்துருவோம்.’ என்று கூறிய புலியாண்டியிடம், ‘சரி, எப்ப போகலாம்ன்னு நான் வீட்டுக்குப் போய் போன் பண்றேன். வேற யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்கணுமா… பணம் ஏதும் உங்க கையிலே தரவா..’ என்று புலிமுத்து கேட்க ‘ காய்கறி, இலைக்கட்டு, பழமூடுல்லாம் அம்பை சனிக்கிழமை சந்தைலதான் எடுக்கணும். ஏதும் இருந்தா அம்பை, கல்லிடை வந்துட்டு உனக்கு போன் போடுதேன். நீ உடனே வந்துடு..; என்றான் புலியாண்டி.

‘சரி..’ என்று கூறி கிளம்பியவன், ‘எண்ணே, நாவிதருக்கும், தட்டருக்கும் தேதிய உறுதி பண்ணி சொல்லிடுங்க.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம்.’ என்றவாறு வண்டி ஏறி அம்பை வீட்டிற்கு வந்து உண்ட அலுப்பும், பயணக் களைப்பும் போக நன்கு உறங்கினான் புலிமுத்து.

மாலை எழுந்து குழந்தைகளோடு விளையாடியும், தாய், தந்தை, மனைவியோடு அளவளாவியும் பொழுது போக்கியவன்  என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறது, யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது போன்ற விபரங்களையும் கூறினான். ‘திருநவேலில ஏதும் வேலை இருக்கா…’ எனக் கேட்க ‘காதுகுத்துக்கு கம்மலும், ஜவுளியும் எடுக்கப்போகணும்லா...’ என்று கூறிய மனைவியிடம், ‘நாளைக்கு ஞாயித்துக்கிழமை. எல்லாரும் வீட்டுல இருப்பாங்க.. சொல்ல வேண்டியவங்க கிட்டே எல்லாம் முடிஞ்சவரை சொல்லிடுவோம். வசதியைப் பொறுத்து திங்கள், செவ்வாய்ல திருநவேலி போவோம்’ என்று கூறினான் புலிமுத்து.

புலிபதியைப்  பார்த்ததையும், புலியாண்டி ஒதுங்கிப் போனதையும் தந்தையிடம் சொல்லி என்ன பிரச்சினை... ஏது என்று விசாரிக்க, ‘எங்கண்ணனும், மதினியும் இல்லாதனதால, சொத்து பிரிக்கும்போதே புலியாட்சி புலியாண்டியை ஏமாத்தி நிறைய சேர்த்துகிட்டான். வீடும், தொழுவும் அவனுக்குத்தான் பெருசு. வயக்காடும் முதகால் அவனுக்கு. கடைசிக்கால்தான் புலியாண்டிக்கு… '

'இதுபத்தாம புலியாண்டிட்ட இருக்க வயலையும், வீட்டையும் புடுங்கதுக்கு புலியாட்சியும், அவன் பொண்டாட்டியும் அவ்வோ மவன் புலிபதியை தூண்டி விட்டு ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்காங்க… சாமி பாத்துகிடும்ன்னு புலியாண்டி ஒதுங்கிப் போனாலும், அவன் மவனுவோ புலியானும், புலிங்கனும் பொங்கிட்டுத்தான் இருக்காங்க.'

'ஏற்கனவே ரெண்டு,மூணு தடவை புலிபதி புலியாண்டியை அடிக்கப் பாய்ஞ்சிருக்கான். அதான் துஷ்டனைக் கண்டா தூரவிலகுன்னு அவனையும், புலியாட்சியையும் கண்டாலே புலியாண்டி ஒதுங்கிப் போயிடுதான். ஓடுத நாயைக் கண்டா துரத்துற நாய்க்கு கொண்டாட்டம்ன்னு எப்ப பாத்தாலும் இவனுங்க அவன்கிட்டேயே வம்புக்கு நிக்காங்க. இது எங்கே போய் முடியப் போகுதுன்னு தெரியலை.’ என்று விபரம் சொல்லி முடித்தார் புலி மணி.                                                                

( தொடரும் )

No comments: