Saturday, November 21, 2015

கிடா வெட்டு - பாகம் 3பாகம் 3 –  இவன் யாரோ… இவன் யாரோ-செல்வது எதற்காக…

நேரமோ ஏழு மணி. ஏழரை மணிக்கு விமானம் ஏறுவதற்கான போர்டிங் ஹால் செல்ல வேண்டும். அரை மணிக்கும் குறைவான நேரமே இருக்கிறது. நெருக்கடியான கட்டங்களில் பதட்டமடையாமல் இருந்தால்தான் தெளிவு கிடைக்கும் என்பது புலி முத்து அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்தி விட்டு நிதானமாக அமர்ந்து,  எங்கு விழுந்திருக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தான். விமான நிலையத்தில் நுழைந்தவுடன் செக் இன் செய்வதற்காக காத்திருந்த இடம், செக் இன் டெஸ்க், குடியுரிமைச் சோதனைக்குப் பின் ஸ்கேன் செய்த இடம், வெயிட்டிங் ஹாலுக்கு வந்த விமான நிறுவன வாகனம், வெயிட்டிங் ஹால் என்று தேட வேண்டிய இடங்களை வரிசைப்படுத்தியவன் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து, உணவருந்திய இடத்திலிருந்து தேடுதலை ஆரம்பித்தான்.

வெயிட்டிங் ஹால் பொறுப்பு பணிப்பெண் மூலம் தான் வந்த வண்டி ஓட்டுநரை அடையாளம் கண்டு கொண்டவன் அந்த வண்டியில் அமர்ந்து வந்து வந்த இடத்தில் தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. குடியுரிமைச் சோதனைக்குப் பின் ஸ்கேன் செய்த இடத்திற்கு சென்று அங்கிருந்த காவல் அதிகாரியிடம் விவரம் சொல்ல அவர் குடியுரிமை அதிகாரியிடம் அழைத்துச் சென்று அவர் அனுமதியுடன் வெளியே அனுப்பினார். நேராக விமான நிறுவனத்தின் செக் இன் டெஸ்க் சென்று விசாரித்தால் அவர்கள் பதட்டமடைந்து அக்கம்பக்கம் விசாரித்து யாரும், ஏதும் பார்க்கவில்லை என்று உறுதி செய்தார்கள். அடுத்து அவன் செக் இன் செய்வதற்காக காத்திருந்த இடம் சென்று அங்கு குழந்தை குட்டிகளுடன் அமர்ந்திருந்த இரண்டு இந்தோனேஷியப் பெண்களிடம் விபரம் சொல்ல அவர்களும் இருக்கையை விட்டு எழுந்து சுற்று, முற்றும் தேடிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவரிடம் போனை வாங்கி அவன் நம்பரை டயல் செய்தால் ரிங் தொடர்ந்து செல்கிறது. ஆனால் அருகாமையில் சத்தம் ஏதும் கேட்கவில்லை.

நேரம் ஏழரை மணியை நெருங்கி கொண்டு இருந்ததால், சில நிமிடங்கள் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தவன் அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என முடிவு செய்து, மறுபடியும் குடியுரிமை அதிகாரி அனுமதி பெற்று விமானம் ஏறச்செல்ல வேண்டிய உள் அரங்கினை அடைந்து ஸ்கேன் செய்யும் காவல் அதிகாரியை அணுகினான். அவர் அலைபேசியிலிருந்து அவனது எண்ணை அழைத்தாலும் ரிங் சென்று கொண்டே இருந்தது. சரி இதற்கு மேல் தேட இடமுமில்லை. நேரமும் இல்லை என முடிவு செய்தவன் அந்த அதிகாரியின் அலைபேசியிலிருந்தே அட்மின் மேனேஜரை அழைத்து ‘போஸ்ட் பெய்டு’ நம்பர் என்பதால் உடனே நம்பரை பிளாக் செய்யச் சொன்னவன் செல்போன் கிடைத்தால் காவல் அதிகாரி அழைத்து தகவல் கூறுவார் என்றும் தெரிவித்தான். காவல் அதிகாரிக்கு நன்றி கூறி விட்டு வெயிட்டிங் ஹால் செல்லாமல் நேராக போர்டிங் போடும் இடத்தை அடைந்து, போர்டிங் பாஸ் காட்டி போர்டிங் ஹாலினுள் நுழைந்து அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்துவிட ஏறி அவனது இருக்கையில் அமர்ந்தவுடன் விமானப்பணிப் பெண்ணால் வெல்கம் டிரிங்காக ஆரஞ்சு ஜூஸ் வழங்கப்பட்டது. விமானம் கிளம்பியவுடன் பியரும், சினாக்சுகளும் கொடுக்கப்பட, ஓடி, ஓடி அலைபேசியை தேடிய அலுப்பும், தாகமும் தீர ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பியர்கள் குடித்துவிட்டு கொடுக்கப்பட்ட உணவையும் சுவைத்துவிட்டு, படுக்கை போல் மாற்றக்கூடிய பிசினஸ் கிளாஸின் பிரத்தியேக சொகுசு இருக்கையை பணிப்பெண்ணை அழைத்து படுப்பதற்கு வசதியாக அமைத்துக் கொண்டு, குளிராக இருந்ததால் மூடுவதற்காக பிளாங்கெட் ஒன்றையும் வாங்கிக் கொண்டு தூங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினான். ‘முனியாண்டி சுவாமிக்கு இரண்டு பியர்தான் வாங்கி வைத்தோம். இப்படி தொடர்ந்து பியராக கொடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று வியந்தும், அப்படியானால் செல்போன் தொலைந்தது எந்த சாமியின் சாபம் என்று குழம்பியும், ஊருக்குச் சென்று செய்யவேண்டிய காரியங்களை பட்டியலிட்டுக் கொண்டும்’ பலவாறு எண்ணிக்கொண்டு புலிமுத்து ஆழ்ந்து உறங்கும் வேளையில் அவன் யார், எந்த ஊர், எதற்காக ஊருக்குப் போகிறான் என்ற விபரங்களை நாம் பார்த்துவிடுவோம்.

புலிமுத்துவின் சொந்த ஊர் தமிழ்நாடு ,திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள புலிப் பட்டி கிராமம் ஆகும். புலிப்பட்டி கிராம மக்களுக்கு பன்னெடுங்காலமாக விவசாயமும், ஆடு, மாடுகள் வளர்ப்புமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மணிமுத்தாறு அணை கட்டும் முன் தற்போதைய நீர்த்தேக்கப் பகுதி முழுதும் புலிப்பட்டி மக்களுக்கு சொந்தமான விளைநிலங்களாகவே இருந்தது. தொன்னூறுகளில் அமைக்கப்பட்ட களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் முக்கியமான பகுதிகளில் புலிப்பட்டி மலையும் ஒன்றாகும். 

அந்தக் காலத்தில் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் நுழைந்து, ஆடு, மாடுகளை தாக்க வரும் புலிகளை பட்டி போட்டு பிடித்து அழித்ததால் புலிப்பட்டி என்னும் பெயர் வந்தது. புலிக்கறியை உப்புக்கண்டம் போட்டு நாய்க்கடிக்கும், மற்றும் பல தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி அக்கம்பக்கத்தில் இருந்த பல ஊர் மக்களுக்கும் உதவிய வரலாறு கொண்ட ஊர். புலிநகப்பதக்கம் செய்வதற்கு இப்போதும் பலரது வீடுகளில் முன்னோர்கள் நினைவாக புலிநகங்களை பத்திரமாக வைத்து உள்ளனர். வீரத்திலும், வேகத்திலும், விவேகத்திலும் சிறந்த புலிப்பட்டி மக்கள் அனைவரது பெயர் முன்னும் புலிகளை அழித்து அடக்கிய குலப்பெருமை குறிக்கும் விதமாக புலி என்னும் பெயர் இருக்கும்.

புலி முத்து குடும்பத்தில் கூட அவனது தாத்தா பெயர் புலி முத்து. அவருக்கு இரு மகன்கள். மூத்தவர் புலிப்பாணி. இளையவர் புலிமுத்துவின் தந்தையான புலி மணி. புலிப்பாணிக்கு இரு மகன்கள். மூத்தவர் புலியாட்சி.இளையவர் புலியாண்டி. புலியாட்சிக்கு புலிபதி என்னும் மகன். புலியாண்டிக்கு புலியான், புலிங்கர் என இரண்டு மகன்கள்.புலிமுத்துவின் உடன் பிறந்தவர் புலிச்சூரி. அவரும் வெளிநாட்டில்தான் வேலை பார்க்கிறார்.அவருக்கு இரண்டு மகள்கள்.புலி முத்துவிற்கும் மூத்தது பெண்குழந்தைதான். பத்து வயதாகிறது. தனக்கும், அண்ணனுக்கும் பின் புலிமணி குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்த காலத்தில் பத்தாண்டிற்குப் பின் புலி முத்துவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனது தந்தையின் பெயரான புலி மணியையே குழந்தைக்கும் இட்டிருந்தான். பிரசவத்திற்குப் போன அவனது மனைவியும், குழந்தைகளும் ஊரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடனும் அதற்குப் பின் இரண்டு முறையும் சென்று பார்த்து வந்தவன், குலதெய்வத்திற்கு கிடா வெட்டி, குழந்தைக்கு முடி எடுத்து, காது குத்துவதற்காகத் தான் இப்போது ஊருக்கு போய் கொண்டிருக்கிறான்.

( தொடரும் )

பாகம் 4

3 comments:

'பரிவை' சே.குமார் said...

புலி முத்து குடும்பத்தில் பெயர்கள் எல்லாம் புலி..புலி...
கதை அருமையா இருக்கு.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

துபாய் ராஜா said...

தொடர் வரவிற்கும், தோழமை ஊக்கத்திற்கும் நன்றி திரு.பரிவை சே.குமார் & திரு.கரந்தை ஜெயக்குமார்.