Monday, November 23, 2015

கிடா வெட்டு - பாகம் 4
பாகம் 4 –  புலியாண்டி சுவாமி கதை

புலிப்பட்டி கிராம மக்கள் அனைவருமே ஒன்றுக்குள் ஒன்றான உறவினர்கள் என்பதால் அவர்களது குலதெய்வமும் ஒன்றாகவே இருந்தது. புலியாண்டி என்ற அவர்களது குலதெய்வமானவர் மணிமுத்தாறு அருவி செல்லும் வழியில் அடர்ந்த காட்டினுள் கோயில் கொண்டுள்ளார். எப்படியும் செவ்வாய்,வெள்ளி தினங்களில் ஊரில் இருந்து யாராவது சென்று புலியாண்டி சுவாமிக்கு பூஜை செய்து வணங்கி வருவர். பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலய காட்டுப் பகுதி என்பதால் வனத்துறையினர் அனுமதி பெற்றே கோயிலுக்கு செல்ல முடியும். இரவு தங்காமல் இருட்டும் முன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் இறங்கிவிடவேண்டும் என்பது போன்ற கெடுபிடிகளும் உண்டு.

புலிமுத்துவின் தந்தை புலி மணி பேட்டை இந்து கல்லூரியில் பி.யு.சி படித்து, அந்த காலத்திலே சென்னைக்கு வேலைக்குச் சென்றவர் ரிட்டையர்டுக்குப் பின்னும் சொந்த ஊருக்கு வந்து குடியேறாமல் பக்கத்து சிறுநகரமான அம்பாசமுத்திரத்தின் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வீடுகட்டி தங்கி விட்டார். சென்னையில் படித்து, வளர்ந்த புலி முத்து பள்ளி விடுமுறைகளிலும், முக்கிய உறவினர் வீட்டு விழாக்கள், மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் ஊருக்கு வந்து செல்வதால் ஊரில் பலபேரை அவனுக்குத் தெரியாது. ஆனால் ஊரில் எல்லாருக்கும் புலி முத்துவை இன்னார் என்று தெரியும். 

பையனுக்கு காது குத்தி, கிடா வெட்ட வேண்டும் என்று உறுதி செய்தவுடன் ஊரில் யாரை வைத்து செய்யலாம் என அவனது அப்பாவிடம் ஆலோசனை கேட்க, அவர் ‘நமது குடும்பத்தில் வெள்ளி, செவ்வாய் தவறாமல் கோயிலுக்கு செல்லும் நமது குலசாமியின் பெயர் கொண்ட புலியாண்டிதான் சரியான ஆள். சாமிக்கு செய்ய வேண்டிய படையல்களையும் முறை தவறாமல் செய்யக்கூடியவன் அவனே.. எனவே அவனிடம் சொன்னால் காது குத்து விழா மற்றும் கிடா வெட்டு ஏற்பாடுகளை பொறுப்பாக கவனித்துக் கொள்வான்’ என்று கூற பயணம் உறுதிப்பட்டவுடனே மலேஷியாவில் இருந்து புலியாண்டியை அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கூறி ஏற்பாடுகளை செய்யச் சொல்லிவிட்டான். விழாநாள் மற்றும் தேதி மட்டும் ஊருக்கு வந்து உறுதி செய்து கொள்ளலாம். இரண்டு கிடாக்களுக்கும், நல்ல சமையல்காரருக்கும் மட்டும் முதலில் ஏற்பாடு செய்து வைக்குமாறு சொல்லிவிட்டான்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கப் போவதற்கான அறிவிப்பு கேட்டு கண்விழித்த புலி முத்துவை இனி நாம் தொடர்வோம். விமானம் நின்றதும் வெளியேறி, குடியுரிமைச் சோதனைகளை முடித்து விட்டு, லக்கேஜ்களையும் எடுத்துக் கொண்டு இந்திய நேரம் இரவு பத்தரை மணிக்கு வெளியே வந்தவனை அவன் குடும்ப நண்பனும், டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தும் மகேஷ் வரவேற்க இருவருமாய் மகேஷின் காரில் லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.

'என்ன மகேஷ், வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க. ஊர்ல மழையெல்லாம் எப்படி’ போன்ற சம்பிராதாய விசாரிப்புகளோடும், மற்ற நாட்டு நடப்புகளையும் பேசிக்கொண்டும், தொடர்பயணத்தின் இடையே வழியில் இரண்டு முறை டீ குடிக்க நிறுத்தியும் என  இருவரும் அம்பாசமுத்திரத்தை அடையும் போது மணி பின்னிரவு இரண்டு தாண்டி விட்டது.

மறுநாள் காலை ஏற்கனவே திட்டமிட்டபடி பைக்கில் புலிப்பட்டி ஊருக்குச் சென்று புலியாண்டியையும் அழைத்துக்கொண்டு, மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று,  கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டுவிட்டு கோயில் பிரகாரத்திலே அமைதியாக அமர்ந்த புலிமுத்து, ‘ஏண்ணே, நம்ம ஊருக்கு ஏன் புலிப்பட்டின்னு பேரு வந்துச்சு. இந்த புலியாண்டி சாமி யாரு’ என்று புலி முத்து வினவ பிடித்துக் கொண்டிருந்த பீடியை எறிந்து விட்டு தொண்டையை செறுமிய புலியாண்டி, ‘புலியாண்டி சாமி யாருன்னு தெரிஞ்சுக்கிதுக்கு முன்னாடி புலிகளைப் பத்தி முதல்ல சொல்லுதன். கேட்டுக்கோ. பொதுவா புலி ஒரு மிருகத்தை அடிச்சுதுன்னா அன்னைக்கு சாப்பிட்டது போக தினம் பசிக்கும்போது அந்த இடத்திற்கு வந்து மீதிக்கறியை சாப்பிடும். இடையிலே மத்த மிருகங்கள் சாப்பிட்டோ, அல்லது அதுவே சாப்பிட்டு கறி காலியானாதான் அடுத்த வேட்டைக்குப் போகும்.


அந்த காலத்திலே நம்ம தாத்தாமாரு என்ன செஞ்சுருக்காங்க காட்டுல மேயப்போன மாடுவளை புலி அடிச்சு சாப்பிட்டு மீதியைப் போட்டுப்போன இடத்தைச் சுத்தி  புலி உள்ளே போறதுக்கு ஒரு தொண்டு (வழி) மட்டும் விட்டுட்டு கம்பு,கழி,பனை,தென்னை ஓலையை வச்சு பட்டி  அடிச்சுருவாங்களாம். அந்த தொண்டை அடைக்கவும் ஒரு முரட்டுப்பட்டி செஞ்சு வச்சுருப்பாங்களாம். யானைவோ, புலிவளை மாதிரி உஷாரான மிருகங்க உலகத்திலே கிடையாது. ரெண்டுமே மனுச வாடை எத்தனை கிலோமிட்டர் தள்ளி இருந்தாலும் கண்டுபிடிச்சுடும். அதனாலே நம்ம ஆள்கள் பத்து, பதினைந்து பேர் புலி அடிச்ச மாட்டோட இரத்தம், கறியை மனுஷ வாடை தெரியாம மேலுக்கு பூசிட்டு மரத்து மேல வேல்கம்பு (ஈட்டி), கத்தி, கல்லு வச்சுகிட்டு பகல், ராத்திரி பாராம ஒளிஞ்சு உட்காந்து இருப்பாங்களாம். புலி பட்டிக்குள்ள நுழைஞ்சு கறியை கடிக்க ஆரம்பிச்சதும் முரட்டுப்பட்டியை வச்சு நைஸா புலி வந்த தொண்டை அடைச்சுச்சுட்டு, சுத்தி நின்னு வேல்கம்பு, கத்தி, கல்லுவளை புலி மேல எறிஞ்சு கொன்னுடுவாங்களாம். இப்படி பட்டி போட்டு புலிவளை அழிச்சதாலதான் நம்மூருக்கு புலிப் பட்டின்னே பேரு வந்துச்சாம்’.

அதன்பின் கொஞ்ச நேரம் அமைதியாக அருகில் ஓடிய ஆற்றையும், அதன் கரையில் மரங்களில் விளையாடிக் கொண்டிருந்த மந்திகளையும் பார்த்தவாறு ஒரு பீடியை இழுத்து முடித்தவன், ‘ புலியாண்டி சாமி யாருன்னா நம்ம தாத்தாவுக்கு பதினைஞ்சு தலைமுறைக்கு முன்னாடி நம்ம ஊர்ல வாழ்ந்தவர்தான். நம்ம பரம்பரையிலே வந்தவர்தான். அவருக்கு வயக்காடுவோ இப்போ மணிமுத்தாறு டேமோட தண்ணிக்கட்டு இருக்குல்லா அங்கதான் இருந்திருக்கு. சொந்த அத்தை மகளைத்தான் விரும்பி கல்யாணம் பண்ணியிருந்தாராம். சோடிப்பொருத்தம் அப்படி இருந்துச்சாம். ஒரு ஆம்பளப் பையன் கையிலயாம். இன்னொரு பிள்ளை வயித்துலயாம்.

அந்த நேரத்துல ஒரு பெரிய ஆண்புலி ஊருக்குள்ளே புகுந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்ததாம். புலின்னா புலி அப்படி ஒரு புலியாம். அதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி அத மாதிரி ஒரு புலி நம்ம காட்டிலே இருந்தது கிடையாதாம். மத்த புலில்லாம் பசிக்கு வேட்டையாடுச்சுன்னா இது ருசிக்கு வேட்டையாடுச்சாம். இந்த நேரம், இந்த இடம்ன்னு இல்லாம கீழத்தெரு, மேலத்தெரு, தெற்குத்தெரு, வடக்குத்தெரு, வயக்காடுன்னு தினம் ஒரு இடத்துல வேட்டையாடுமாம். அதனாலே அதைப் பட்டி போட்டு பிடிக்க முடியாம ஊர்க்காரங்க திணறிக்கிட்டு இருந்தாங்களாம். பசி நேரத்துல ஆடுவோ, மாடுவோ, மனுஷங்கன்னு கண்ணுல எது பட்டாலும் அடிச்சுத் தின்னுடுமாம்.

அப்பல்லாம் ஆம்பிளைவோ விடியுமுன்னே வயலுக்குப் போனா வெயில் தாழத்தான் வீட்டுக்கு திரும்புவாங்களாம். பொம்பிளைவோ தொழுவ தூத்து, சாணி அள்ளி உரக்குழில போட்டுட்டு காலைல வெறும் நீத்தண்ணிய மட்டும் குடிச்சுட்டுப் போன புருஷனுக்கு கஞ்சி எடுத்துட்டுப் போவாங்களாம். அப்படித்தான் அன்னைக்கு இடுப்புல புள்ளையை வச்சுகிட்டு புருஷனுக்கு கஞ்சி எடுத்துகிட்டுப் போன வயித்துப்புள்ளைக்காரியான புலியாண்டி பொண்டாட்டியையும், புள்ளையையும் அந்த பொல்லாத புலி அடிச்சி தின்னுடுச்சாம்.

விபரம் தெரிஞ்சு ஓடி வந்த புலியாண்டிக்கு நார்நாராக கிழிஞ்சு கிடந்த அவன் பொண்டாட்டி சேலையும், புள்ளையோட அருணாக்கயிறும்தான் (அரைஞாண் கயிறு) மட்டும்தான் சாட்சியா இருந்துச்சாம். தன் குலத்தையே அழிச்ச புலியால இனி நம்ம ஊர்ல எந்த ஒரு உயிரும் போகாதுன்னு சொல்லிட்டு அந்த கொலைகாரப்புலியைக் கொல்லணும்ங்கிற வெறியோட கத்தி, கம்போட ஒத்தை ஆளா காட்டுக்குள்ள போனவர் இந்த இடத்திலேதான் அந்த ஆள் கொல்லி புலியைப் பார்த்திருக்காரு. புலி இவரைப் பார்க்குமுன்னே அது மேல பாஞ்சவர் கத்தியால குத்த, அது இவரைக் கடிக்கன்னு பெரும் சண்டையாம். இரண்டு பேரும் கட்டிப்பிச்சு உருண்டு போராடினதுல புலியைக் கொன்னுட்டாலும், புலி கடிச்சதுல ஏற்பட்ட  பெருங்காயத்தாலும், இரத்த சேதாரத்தாலும் இவரும் செத்துட்டாரு. உயிரைக் கொடுத்து ஊரைக் காப்பாத்துனதாலே நம்ம ஊருக்கே குலசாமியாவும் ஆயிட்டாரு.’ என்று புலியாண்டி சுவாமியின் கதையை சொல்லி முடித்தார்.

( தொடரும் )

பாகம் 5


2 comments:

KILLERGEE Devakottai said...

புலிப்பட்டியின் கதை அறிந்தேன் மேலும் தொடர்கிறேன்..
நண்பரே முந்தை பதிவின் எனது கருத்துரையை காணோம் புலி அடித்து விடவில்லையே....

துபாய் ராஜா said...

தொடர் வரவிற்கும், தோழமை ஊக்கத்திற்கும் நன்றி திரு.கில்லர்ஜி.