Monday, September 28, 2015

ஆறு,குளம்,ஏரி - அழியாமல் காப்போம் வாரீர்…வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி


ஆறு,குளம்,ஏரி - அழியாமல் காப்போம் வாரீர்…

 எல்லோருக்கும் வணக்கம்.

நீரின்றி அமையாது உலகு…

நீரில்லாத உலகத்தை நினைத்துப் பாருங்கள்.  நம் உடலில் தசை, எலும்புகள் போக இரத்தம் உட்பட பாதி எடையே நீர் எடைதான். ஒரு மனிதன்  குடிநீர் மற்றும் உணவுத்தேவைக்கு மட்டும் ஒருநாளைக்கு பத்து லிட்டர் நீர் தேவை. இது போக குளிப்பது, துணி துவைப்பது, பாத்திர, பண்டங்கள், வீடு மற்றும் கழிவறை சுத்தப்படுத்துவது போன்ற தினசரி தேவைகளுக்காக தனிமனிதனின் சராசரி நீர்த் தேவை அறுபது லிட்டருக்கும் மேலாகும். உலகளவில் மழைப்பொழிவு குறைந்து  மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு நீர்பகிர்வுப் பிரச்சினைகளே தீர்க்கப்படாதிருக்கும் போது உலகநாடுகளுக்கிடையே ஏற்பட இருக்கும் மூன்றாம் உலகப்போர் நீர்த் தேவைகளுக்காகவே இருக்கும் என ஆராய்ச்சிகள் அச்சமூட்டுகின்றன.

ஆதி மனிதன் குடிநீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாட வசதியாக ஆற்றங்கரையோர குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்து வந்தான். பின் விவசாயம் செய்ய வசதியாக ஆற்றங்கரையோரமாக குடியிருப்புகளை அமைத்தான். இப்படித்தான் சிந்து நதிக்கரையோர ஹரப்பா ,மொகஞ்சதாரா நாகரீகம் முதல் நைல் நதிக்கரையோர ஆப்பிரிக்க நாகரீகம் உள்ளிட்ட பல நாடுகளின் புகழ்பெற்ற நதிக்கரை நாகரீகங்கள் தோன்றின. இதற்கு இன்றளவும் சாட்சியாக நம் பாரத நாட்டின் தலைநகரமாக யமுனைக் கரையில் அமைந்துள்ள டில்லி, கங்கைக் கரையில் அமைந்துள்ள காசி, காஷ்மீர், மேலும் பல வடமாநில நகரங்கள், தமிழ்நாட்டின் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை ஒட்டி அமைந்து உள்ள சிறுகிராமங்கள், நகரங்கள் மற்றும் அடையாறு, கூவம் கரைகளில் அமைந்துள்ள மாநிலத் தலைநகரான சென்னை மற்றும் வரை கூறலாம்.

ஆறுகள் மட்டுமில்லாமல் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர், விவசாயம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக  ஏரிகள், குளங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள். கோயில் கட்ட மண் எடுத்த இடத்தில் கூட தெப்பக்குளங்களை உருவாக்கி நீரினை சேகரித்து நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாத்து வந்தார்கள். விஞ்ஞானமும், கண்டுபிடிப்புகளும் வளர, வளர கிணறுகள், அடிபம்புகள், ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு விவசாயம் மட்டுமல்லாமல் தொழிற்சாலைத் தேவைகளுக்குமாக நிலத்தடி நீராதாரங்கள் மிக வேகமாக உறிஞ்சப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மனிதனின் பேராசை நடவடிக்கைகளால் பூமிக்கு கீழே வெற்றிடம் ஏற்பட்டு, கண்டத்திட்டுகள் இடப்பெயர்வு அடைந்து நிலநடுக்கம், சுனாமி, எரிமாலை வெடிப்புகள் என இயற்கை சீற்றங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு காரணங்கள் என்ன, மனித சமுதாயம் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

இயற்கை நமக்கு அளித்த தண்ணீர் கொடைகளான ஆறுகள் மலைகளில் உற்பத்தியாகி சமதளப்பரப்பினில் பாய்ந்து கடலிலே கலக்கின்ற வரையில் வளமையான வண்டல் மண்ணையும், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக குறுமணல் படுகைகளையும் வழியெல்லாம் வழங்கிச் செல்கின்றன. இருபது ஆண்டுகள் முன் வரை கோடைகாலத்தில் ஆறுகளில் நீரோட்டம் இல்லாத போது கூட மணல்படுகைகளில் ஊற்று தோண்டி குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்து கொண்டனர். பின் அரசாங்கமும் அதே முறையை பின்படுத்தி இயற்கை சுத்திகரிப்பு படுகைகளாகவும், நிலத்தடி நீர்மட்ட மேம்பாட்டு ஆதாரங்களாகவும் செயல்பட்டு வந்த மணல்படுகைகளில் உறைகிணறுகள் அமைத்து கூட்டுகுடி நீர் திட்டங்கள் மூலம் கிராமங்கள் முதல் நெடுந்தூர நகரங்கள் வரை நீர் வழங்கி வருகிறது.

ஆறுகளின் போக்கினைக் கணித்து நம் முன்னோர்கள் அமைத்து வைத்த நீர்வழிப் பாதைகள் மிகவும் தெளிவானவை. ஆறுகள் இல்லாத ஊர்களில் மழைவெள்ளநீர் வடிகால்களை உருவாக்கி, ஒழுங்கு படுத்தி வாய்க்கால்களை வெட்டி குளங்களோடு இணைத்து ஒரு குளம் நிறைந்த பின் அடுத்த குளம் நிறையும் வகையில் மழைநீர் வீணாகாமல் சேகரித்து பாதுகாத்து வந்தார்கள். நீர்வழிப்பாதைகளில் இருந்த எல்லா குளங்களும் நிறைந்து கடைசியாக கடலில் கலக்கும் இடங்களில் கூட மிகப்பெரிய ஏரிகளும், நீர்த்தேக்கங்களும் அமைத்து நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்கினர்.   ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளின் கரைகளில் நிலத்தடி நீர்வளைத்தைப் பாதுகாக்கும் நம் மண்ணின் மரங்களான மருத மரம், ஆல், அரசு, புன்னை, வேங்கு, கோங்கு, நாவல், வேம்பு போன்ற மருத்துவ குணம் கொண்ட மரங்களை வளர்த்து பாதுகாத்து வந்தனர்.

ஆனால் இப்போது கோடைக்காலம் மட்டுமல்லாமல் மழைக்காலம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் ஆறுகள் காய்ந்து போய் கிடக்கின்றன. குடிநீர், விவசாயம் மற்றும் அன்றாட நீர்த் தேவைகளுக்காக மக்கள் அல்லல் படுகின்றனர்.காரணம் ஆற்றுப்படுகைகளில் இருந்த மணல்படுகைகள் அனைத்தும் அள்ளப்பட்டதுதான். அரசியல்வாதிகளின் பேராசையால் ஆண்டாண்டு காலமாய் ஆறுகளில் படிந்திருந்த நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் இயற்கைக் கொடைகளான் மணல் படுகைகள் அபாயகரமான அளவில் நவீன இயந்திரங்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அபகரித்து செல்லப்படுகின்றன. கனரக வாகனங்கள் வந்து செல்ல வசதியாக கரையோர மரங்கள் அனைத்தும் வெட்டி வீழ்த்தப்பட்டு அவற்றில் வாழ்ந்த பறவைகளும் வசிப்பிடம் இழந்து மோசமான சுற்றுப்புற சூழல்கேடு  ஏற்பட்டுள்ளது. இது போன்ற மணல் கொள்ளை நடவடிக்கைகளால் நாடு முழுதும் நிலத்தடி நீர் மட்டமும் மிகவும் மோசமாக கீழிறங்கி தொழிற்சாலை மற்றும் விவசாயத் தேவைகளுக்காக ஆயிரம் அடிக்கும் கீழ் ஆழ்துழாய் குழாய்கள் அமைத்தும் நீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.


நாடு முழுதும் உள்ள நதிகளான கங்கை, யமுனை முதல் காவிரி வரை மற்றும் தமிழகத்தில் கூவம் முதல் வைகை வரை உற்பத்தியாகும் இடங்களில் சுத்தமாக இருக்கின்ற அனைத்து ஆறுகளும் நகர்ப்புற பகுதிகளை அடையும் போது மோசமான சுகாதார சீர்கேட்டை அடைகின்றன. நாடெங்கும் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள  கழிவுநீர் வாய்க்கால்கள் ஆறு, ஏரி, குளங்கள், பாசனக் கால்வாய்களிலேயே கலக்கின்றன. பாதாள சாக்கடைத் திட்டம் என கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்படும் குழாய்கள் அந்தந்த ஊர் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளோடு இணைக்கப்பட்டு தனிமனிதக்கழிவுகள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், சாயப்பட்டறைக் கழிவுகள் அனைத்தும் ஒன்றாய் கலந்து திடக்கழிவுகளாகி ஓட்டமில்லாமல் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் மற்றும், சுற்றுப்புற வாழ்வியல் சூழலுக்கு மோசமான சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன.

நாடெங்கும் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட நீர்வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்ரமிப்பு அரக்கர்களால்  குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டு வருவதும் நிகழ்காலம் மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. பேராசை கொண்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களாலும் ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால் கரையோரம் முழுதும் ஆக்ரமிக்கப்பட்டு வயல்கள், தோட்டங்கள், தோப்புகள் அமைக்கப்பட்டு நீராதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆக்ரமிப்புகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அரசாங்கமே சென்னை போன்ற பெருநகரங்களிலும், மாவட்ட தலைநகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில்  அமைந்துள்ள ஏரி, குளங்களை அழித்து அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், நகர விரிவாக்க குடியிருப்புத் திட்டங்கள் கொண்டு வருவது மிகவும் வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகளாக உள்ளது. அரசாங்கத்தின் தெளிவற்ற நீர் மேலாண்மை கொள்கைகளினால் நீர்வழிப் பாதைகள் ஆக்ரமிக்கப்பட்டு சிறுமழை பெய்தாலே சாலைகளில் வெள்ளம் பாய்கிறது. பொது மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் முடங்கிப் போகிறது.

ஆறு, ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகள் அழிவதற்கான காரணங்களை இதுவரை பகிர்ந்து கொண்ட நாம் இனி அரசாங்கம் எடுக்க வேண்டிய நிரந்தர நடவடிக்கைகளையும் பார்ப்போம்.
  • நாடு முழுவதும் உள்ள ஆறுகள்,குளங்கள், ஏரிகள் மற்றும் அனைத்து வகை நீர்நிலைகளையும் காக்கும் வகையில் தெளிவான நீர்மேலாண்மை கொள்கையினை வகுத்து உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • நாடு விடுதலை அடைந்த போது இருந்த சான்றுகளை அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொண்டு நீர்நிலை ஆதாரங்களில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்வழிப்பாதைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
  •  மணல் கொள்ளை அடியோடு தடுக்கப்பட கடுமையான சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
  • அரசு, மற்றும் தனியாரது அனைத்து வகை கட்டுமான திட்டங்களுக்கும் மணலுக்கு பதில் மாற்றுப் பொருள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • நீர்நிலைகளில் உள்ள நீரினை வேகமாக உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் கருவேல மரங்களை அடியோடு அழித்து விட்டு ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளின் கரைகளில் நிலத்தடி நீர்வளைத்தைப் பாதுகாக்கும் நம் மண்ணின் மரங்களான மருத மரம், ஆல், அரசு, புன்னை, வேங்கு, கோங்கு, நாவல், வேம்பு போன்ற மருத்துவ குணம் கொண்ட மரங்களை வளர்த்து முறையான வேலியிட்டு பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  •   நீர்நிலைகள் அசுத்தம் அடையாமல் இருக்க மற்ற வளர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்கு நாடெங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீர் குழாய்களையும், வாய்க்கால்களையும் முறையாக இணைத்திட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரினை குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் போனாலும் மற்ற அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமாறு நவீன சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவிட வேண்டும்.
  •   நாட்டுமக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து சுற்றுப்புற சூழலும், காடு,மலை, வனப்பகுதிகளும் எந்த ஒரு பாதிப்பும் அடையாத வகையில் நாடு முழுதும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.  

 பொதுமக்களாகிய நாமும் நம்மால் முடிந்த அளவு நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட சுகாதாரக் கேடுகள் ஏற்படாமல் தடுப்போம். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடு களைந்து ஒன்று கூடி, மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலை ஆதாரங்களை காக்க வலுவான சட்டங்கள் இயற்றச் செய்வோம்.  இயற்கை தந்த எல்லாம் வளமும் கொண்ட இந்த பூமியை நம் முன்னோர்கள் நல்ல முறையில் விட்டுச் சென்றது போல் வருங்காலத் தலைமுறையினரும் வளமுற வாழும் வகையில் வழிமுறைகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவோம். சிந்திப்போம். செயல்படுவோம்.

நன்றி.வணக்கம்.

--------------------------------------------------------------------------------------------------------

 " ஆறு,குளம்,ஏரி - அழியாமல் காப்போம் வாரீர்… " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...8 comments:

துபாய் ராஜா said...


// வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said..

நன்றி...நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன் //

நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்...

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே பிரமாண்டமான அலசல் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

மணிச்சுடர் said...

நீர் ஆதாரத் தளங்கள் சீர்கெட்டுக் கிடப்பதையும் அவை சீராக வேண்டி அரசு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. நமது பங்கையும் குறிப்பிட்டிருக்கலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமை... நல்லாயிருக்கு...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், ஊக்கப் பின்னூட்டக் கருத்துரைகளுக்கும் நன்றி அன்பின் திரு.KILLERGEE Devakottai, திரு.கரந்தை ஜெயக்குமார்,திரு. Pavalar Pon.Karuppiah Ponniah, திரு.பரிவை சே.குமார்.

வணக்கங்களோடு அன்பு வாழ்த்துக்களும்...

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், ஊக்கப் பின்னூட்டக் கருத்துரைகளுக்கும் நன்றி அன்பின் திரு.KILLERGEE Devakottai, திரு.கரந்தை ஜெயக்குமார்,திரு. Pavalar Pon.Karuppiah Ponniah, திரு.பரிவை சே.குமார்.

வணக்கங்களோடு அன்பு வாழ்த்துக்களும்...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே! ஆறு, ஏறி குளம் அழிந்ததையும் நீர் வளங்கள் அழிந்ததையும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்! நன்றி
வாழ்த்துக்கள்!