Sunday, September 13, 2015

காலை உடைத்த காஞ்சனா – பாகம் 15


பாகம் 15 – கால் முறிவிற்கு கை வைத்தியம்…

முதல் பதினான்கு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.
பாகம் 15 


காலையில் எழுந்து எட்டு மணி அளவில் கிளம்பி ஜானும், மணியும் உடன் வர கோட்டி நகரை அடைந்து எக்ஸ்ரே எடுத்து எலும்பு முறிவு டாக்டரை பார்க்கும் போது மணி சரியாக பத்து. எக்ஸ்ரேயைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பெருவிரலிலும், பாதத்தின் பக்கவாட்டுப் பகுதியிலும் எலும்புகளில் ‘ஏர் கிராக்’ இருப்பதாக கூறி ‘கண்டிப்பாக மாவுக்கட்டு போட்டு குறைந்தது ஒரு மாதமாவது காலை அசைக்காமல் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும்’ என்று கூறி பயமுறுத்தி விட்டார். அவரிடமும் அன்று மாலை சென்னை கிளம்பும் விபரம் கூறி ஊரில் சென்று மாவுக்கட்டு போட்டுக் கொள்வதாக உறுதியளித்தேன். ‘கிரிப் பேண்டை’ கட்டாமல் நடமாடினால் ‘ஏர் கிராக்’ பெரிதாகி விடும். பின் எலும்பு கூடுவதில் பிரச்சினை ஆகி விடும்’ என்பதை வலியுறுத்தி அடுத்த டாக்டரைப் பார்க்கும் வரை எடுத்துக் கொள்ள கால்சியம் மாத்திரைகளும், வலி நிவாரணி மாத்திரைகளும் தந்து அனுப்பினார்.

அறைக்கு வந்து சேர மதியம் பனிரெண்டு மணி ஆகி விட்டது. மாலை ஆறு மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் ரயிலைப் பிடிக்க வேண்டும். மூன்று மணிக்கெல்லாம் அறையிலிருந்து கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்பதால் வரும் போதே பாலாப்பூர் பஜாரில் சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தோம். அறையில் என்னை பார்க்க வந்து காத்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் பேசுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் நான் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டி இருந்ததால் மணியும், ஜானுமே எனது துணிகள், உடமைகள் அனைவற்றையும் பயணப் பெட்டியிலும், பைகளிலும் எடுத்து வைத்து விட்டனர்.

கவாண்டேவும் வந்து வழி அனுப்ப மூன்று மணி அளவில் நண்பர்கள் புடை சூழ கிளம்பி செகந்திராபாத் ஸ்டேசன் சென்று, அனைவரிடமும் பிரியா விடை பெற்று ரயிலில் ஏறி அமர்ந்தேன். ஆறுமாத அளவிலே பழகியிருந்தாலும் எல்லோரிடமும் நெருங்கிப் பழகியிருந்ததால் திடீரென பிரிவதும், அடுத்து வாழ்க்கையில் சந்திப்போமோ, இல்லையோ என்ற எண்ணமும் எல்லோருக்குமே மிகுந்த வருத்தத்தை தந்தது. ஒரு வழியாக ரயில் கிளம்ப நண்பர்கள் வாங்கித் தந்திருந்த உணவையும், டாக்டர் தந்திருந்த மாத்திரைகளையும் போட்டு விட்டு எனக்குண்டான பெர்த்தில் ஏறிப் படுத்து விட்டேன்.

காலையில் சென்னையை அடைந்து ஏற்கனவே வரச்சொல்லியிருந்த நெருங்கிய நண்பரின் காரில் சாமான்களை ஏற்றி போரூரில் இருக்கும் ஒன்று விட்ட அண்ணனின் வீட்டிற்கு சென்று பயணப்பைகளை வைத்து விட்டு குளித்து,  கிளம்பி, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பாஸ்போர்ட், கல்வி, பணி சம்பந்தமான முக்கியமான சான்றிதழ்கள், எக்ஸ்ரே மற்றும் டாக்டர் சர்டிபிகேட் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நான் செல்ல வேண்டிய அலுவலகம் அடைந்தேன்.

என்னை இண்டர்வியூ செய்த மேலாளரை சந்தித்து வேலை விபரங்களைப் பேசிய போது ‘‘விசிட் விசா’ என்பதனால் ஓரிரு நாட்களில் கிளம்பி விடலாம்’ என்று கூறினார். அவரிடம் ஊருக்குச் சென்று வந்து ஆறேழு மாதங்கள் ஆகி விட்டதாலும், முதல் முதலில் வெளிநாடு செல்வதால் தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின் தான் கிளம்ப முடியும் என்றும் மேலும் காலில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை எக்ஸ்ரே மற்றும் டாக்டர் சர்டிபிகேட் மூலம் விளக்கி கூறி முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதையும் எடுத்து கூறினேன். 

‘சரி. இரண்டு வாரங்கள் ஊரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பணிக்குச் செல்லலாம் என்னும் ஃபிட்னஸ் மெடிக்கல் ரிப்போர்ட்டும் வாங்கிக் கொண்டு வாருங்கள். துபாய் ஆபிஸில் தகவல் தெரிவித்து விட்டு ஏதும் அவசரம் என்றால் அழைக்கிறேன்.’ என்று கூறியவர் சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்து சில நடைமுறையான எழுத்து வேலைகளை முடித்து விட்டு செல்லுமாறு கூறவே அங்கேயே மதியம் கேண்டினில் சாப்பிட்டு விட்டு வேலைகள் முடிந்தபின் கிளம்பி மாலை நான்கு  மணி அளவில் போரூர் அண்ணன் வீட்டிற்கு வந்தேன்

அன்று மாலை அம்பாசமுத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க அண்ணனிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால் வாங்கி வைத்திருந்தார். மாலை ஆறரை மணி அளவில் போரூர் பைபாஸ் சாலையில் இருந்த டோல் கேட்டிற்கு பைக்கில் அழைத்துச் சென்று பஸ் வந்ததும் ஏற்றியும் விட்டு விட்டார். அன்று திங்கள் கிழமை என்பதால் பேருந்தில் நிறைய காலி இடங்கள் இருந்தன.

தாம்பரம் தாண்டியும் யாரும் ஏறாததால் கடைசி சீட்டிற்கு சென்று அண்ணியார் கட்டிக் கொடுத்திருந்த இட்லிகளையும், மாத்திரைகளையும் சாப்பிட்டு விட்டு நன்றாக நீட்டி, நிமிர்ந்து படுத்து விட்டேன். காலை கோவில்பட்டி அருகே வந்ததும் விழிப்பு வந்து விட்டது. சரி. அம்பாசமுத்திரம் வரை சென்று பின் திருநெல்வேலி மருத்துவமனைக்கு வருவதற்கு பதில் திருநெல்வேலியிலே இறங்கி மருத்துவமனையில் காண்பித்து விட்டு பின் வீட்டிற்கு சென்று கொள்ளலாம் என முடிவெடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கி விட்டேன்.

அருகில் இருந்த ஹோட்டலில் பல் தேய்த்து, முகம் கழுவி சாப்பிட்டு விட்டு பார்க்கும் போது காலை மணி ஏழு கூட ஆகவில்லை. மருத்துவரெல்லாம் வருவதற்கு எப்படியும் ஒன்பது, பத்து மணி ஆகும் என்பதால் ‘ நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ், பழைய பாலஸ் தியேட்டரில் காலையிலும், மாலையிலும் பாரம்பர்ய எலும்பு முறிவு சிகிச்சை வைத்தியம் செய்யும் எலும்பு முறிவிற்கு கட்டுவதில் நெல்லை வட்டாரத்திலேயே சிறந்தவரும் பரம்பரை வைத்தியருமான பண்டாரவிளை வைத்தியரைப் போய் பார்த்து காண்பித்தால் என்ன’ என்றொரு எண்ணம் தோன்றியது. 

தாழையூத்து சங்கர்நகர் சிமெண்ட் கம்பெனியில் என் தந்தை வேலை பார்க்கும் போது சிறுவயதிலும், வளர்ந்த பின்னும் விளையாடும் போது பல முறை விழுந்து கை கால் உடைத்து பண்டாரவிளை வைத்தியரிடம் கட்டுப்போட்டு இருக்கிறேன். மிகவும் கை ராசியானவர். உடலின் எந்த ஒரு பாகத்திலும், எவ்வளவு பெரிய முறிவோடு சென்றாலும் சரி செய்து விடுவார் என்பதாலும், மிகவும் குறைவான வைத்தியக் கூலியையே வாங்குவார் என்பதாலும் கைக்குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், வாலிபர்கள், பெண்கள், வயதானவர்கள் என அவரிடம் சுளுக்கு, வர்மம், கை கால் பிசகுதல், சவ்வு விட்டுப் போனவர்கள், வாதச்சேட்டை கொண்டவர்கள் என ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரர் வரை என பலதரப்பட்ட உடல் உபாதை கொண்ட மக்களும் வருவார்கள்.

( தொடரும் )No comments: