Wednesday, September 02, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 9பாகம் 9விருந்தும் விடுமுறை சுற்றுலாக்களும்….


முதல் எட்டு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….


ஒருவாறாக ஒன்பது நாள் தீபாவளி விடுறை முடிந்து ஆராய்ச்சியகம் திறக்கப்பட்டது. ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள் அனைவரும் ஓரளவு திரும்பி விட்டனர். எங்கள் துறையிலும் ஊருக்குச் சென்றிருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து விட அவர்கள் கொண்டு வந்த பலகாரங்களை சுவைத்து மகிழ்ந்தோம். திங்கள் கிழமை வர வேண்டிய கவாண்டே மட்டும் வரவில்லை. புதன் காலை வருவதாக புனேயில் இருந்து போன் செய்து கூறியவர் வரும்போது அவருடன் இன்னொரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தார். ஊரில் உடல்நிலை மோசமாக இருந்த கவாண்டேயின் தந்தை இவர் ஊருக்குச் சென்று ஒரு வாரம் மருத்துவமனை அழைத்துச் சென்று, சேர்த்து முறையான பரிசோதனைகளும், வைத்தியமும் செய்ய ஓரளவு தேறியிருக்கிறார். கட்டாயம் இதய அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு முன் அறுவைச் சிகிச்சையை தாங்கும் அளவிற்கு அவரது உடல்நிலையை தயார் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாலும் ஒரே மகன் என்பதாலும் ஓரிரு மாதங்கள் உடன் இருந்து பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்து தலைமை அலுவலமான மும்பைக்கு நேரில் சென்று பேசி விடுமுறைக்கு ஒப்புதல் வாங்கி விட்டார். நீண்ட விடுமுறையில் செல்லும் அவரது பணியை கவனிக்க மாற்று அதிகாரியை தலைமையகம் தயார் செய்தவுடன் கையோடு அழைத்து வந்து விட்டார். புதிதாக வந்தவர் பெயர் ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டை சேர்ந்தவர்.  தோற்றத்தை வைத்துப் பார்த்தால் முப்பத்தைந்து வயது போல் தோன்றியது.


கவாண்டே அலுவலகம் வந்தவுடன் வழக்கம் போல் முதலில் ராமகிருஷ்ணனை அழைத்து சென்று மாதவராவ், சீனிவாசராவிடம் அறிமுகப்படுத்தி விட்டு, நுழைவுச் சீட்டு போன்ற நடைமுறைகளை முடித்து விட்டு, அனைத்து துறைகளுக்கும் அழைத்துச் சென்று துறைத்தலைவர்கள், முக்கியமான அலுவலர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் எல்லோரிடமும் அறிமுகப் படுத்த அழைத்து சென்று விட்டார். தீபாவளிக்காக அந்த வெள்ளியன்று எங்கள் நிறுவனத்தின் சார்பாக மதிய உணவு விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். ஆராய்ச்சியக அலுவலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். அந்த விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என முடிவு செய்த கவாண்டே அலுவலர்கள் அனைவரிடமும் இன்னொரு முறை நினைவு படுத்தி வருவதாக கூறிச் சென்றார்.


மறுநாள் முழுதும் கவாண்டே ராமகிருஷ்ணனை ஆராய்ச்சியகத்தில் எங்கள் பணி சம்பந்தமான அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று பரிச்சயப்படுத்தினார். வழக்கமாக வரும் மின்கோளாறுகள் மற்றும் அவற்றிற்கெல்லாம் எடுத்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருந்த ஆதார குறிப்புகளோடு விபரமாக எடுத்து கூறி விளக்கினார். வெள்ளியன்று பெரிய அசைவ விருந்து என்பதால் ஐந்து ஆடுகள், அறுபது கோழிகள், அரிசி, காய்கறி, முட்டைகள், சமையல்காரர்கள் என்று ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்க மணி,ஜான் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிக் குழு வியாழன் மதியம் முதலே வேலையில் இறங்கி விட்டது. வியாழன் இரவு வேலை முடித்து சென்றவர்களும் வெள்ளி காலை மணி, ஜான் குழுவினருடன் சேர்ந்து கொண்டு தங்குமில்ல மாடியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட வசதியாக ஷாமியானா பந்தல், சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள், தண்ணீர் வசதி போன்ற ஏற்பாடுகளை செய்ய விருந்து வேலைகள் தடபுடலாக நடந்தன.


வெள்ளியன்று காலை ஆராய்ச்சியகத்திற்கு வந்து வழக்கமான பணிகளை முடித்து விட்டு கவாண்டேவும், ராமகிருஷ்ணனும் பத்து மணி அளவில் விருந்து ஏற்பாடுகளை கவனிக்க தங்குமில்லம் சென்று விட பணியில் இருந்த நானும், மற்றவர்களும் பதினொரு மணி வாக்கில் அனைத்து துறைகளுக்கும் சென்று விருந்துக்கு தவறாமல் வரவேண்டும் என எல்லோரிடமும் இன்னொரு முறை சொல்லி வந்தோம். ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின் படி மதிய வேலைக்கு வருபவர்கள் முன்னதாகவே விருந்து சாப்பிட்டு விட்டு வந்து விட நாங்களும் கிளம்பிச் சென்றோம். விருந்து நடக்கும் தங்குமில்லம் இருக்கும் தெருக்குள் நுழையும் போதே பிரியாணி மணம் மூக்கை துளைத்து சமையல்காரரின் கைத்திறமைக்கு கட்டியம் கூறியது. மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் சாப்ஸ், கிரேவி, கத்தரிக்காய் கறி, முட்டைப் பொரியல், சம்பல் என அனைத்துமே நல்ல சுவை என சாப்பிட்டு செல்பவர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர். நாங்கள் போனதும் எங்கள் குழுவினர் முதலில் சாப்பிட்டு விட்டு பின் பரிமாறுவது போன்ற பிற வேலைகளில் இறங்குங்கள் என்று கூற விருந்தை வெளுத்து வாங்கினோம்.


ஆராய்ச்சியக மற்றும் எங்கள் ஊழியர்கள், செக்யூரிட்டிகள், அக்கம் பக்க நண்பர்கள் என எல்லோரும் சாப்பிட்டு முடிக்க மூன்று மணி போல் ஆகிவிட்டது.  இரவு உணவிற்கு எங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து வைத்து விட்டு மீதி இருந்தவற்றை விருப்பபட்டவர்கள் எடுத்து செல்லுமாறு கூறி பாத்திரங்களை காலி செய்து கழுவி, வாடகைக்கு வாங்கி இருந்த இடங்களில் கொண்டு சேர்க்க செய்தாகி விட்டது.  பணியில் கவனமாக இருக்குமாறும்,ராமகிருஷ்ணனுக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுக்குமாறும் எல்லோரும் சொல்லி விட்டு ஐந்து மணி அளவில் கவாண்டேவும் கிளம்பி விட்டார். ராமகிருஷ்ணன் தங்க ஏற்பாடு  செய்திருந்த அறையும் நான் தங்கியிருந்த இல்லத்தின் அருகிலே இருந்ததால் இரவு உணவிற்கு வருவதாக சொல்லி விட்டு இருவருமே ஒன்றாக கிளம்பினோம். அவர் வந்தது முதல் கவாண்டேவுடனே இருந்ததால் பணி நிமித்தமாக மட்டுமே எங்கள் பேச்சு இருந்தது.


வரும் வழியில் சிகரெட் பாக்கெட் எடுத்து என்னிடம் நீட்ட பழக்கமில்லை என நான் மறுத்தவுடன் அவர் புகைக்க எடுத்த சிகரெட்டையும் பாக்கெட்டினுள்ளே வைத்தது அவரது பெருந்தன்மையையும், மற்றவரை மதிக்கும் பண்பையும் காட்டியது. என்ன ஊர், குடும்ப விபரம் என சொந்த விஷயங்கள் பேசிக் கொண்டு வரும்போது அவரும் நான் படித்த கல்லூரியிலே படித்தவர் என்பதும், நான்கு வருடங்கள் சீனியர் என்பதும் தெரிய வந்தது. அவர் படிப்பை முடித்து வெளியேறிய வருடம் நான் முதலாண்டில் சேர்ந்திருந்தேன் என்றாலும் அவருடன் படித்த எனது உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை பற்றி கூறியதால் எங்களுக்குள் நெருக்கமான நட்பு உணர்வு தோன்றியது. அதற்குள் அவர் அறையும் வந்து விட இரவு உணவிற்கு எட்டு மணிக்கு வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விடைபெற்று நான் தங்கும் அறைக்கு வந்தேன். சிறிது நேரம் டி.வி பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் குளித்து கிளம்பி ராமகிருஷ்ணனும், நானும் இரவு உணவிற்கு சென்றோம்.


இரவு உணவாக ஏற்பாடு செய்திருந்த பரோட்டாவுடன் மதியம் எடுத்து வைத்திருந்த சிக்கன், மட்டன் மற்றும் பிரியாணியையும் சேர்த்து அனைவரும் உண்டு களித்தோம். மறுநாள் சனிக்கிழமை பணியில் இருந்த அனைவரையும் அழைத்து வேலை விபரங்களை கேட்டறிந்த ராமகிருஷ்ணன் ஒவ்வொரு வாரம் சனியன்றும் இது போன்று கலந்துரையாடல் செய்வோம் என அறிவித்தார். மறுநாள் ஞாயிறன்று மதியம் அனைவரும் கோட்டி நகரம் சென்று மாலை திரைப்படத்திற்கும் சென்று வந்தோம். ஜீப் இருப்பதால் வாரவாரம் விடுமுறை தினங்களில் ஹைதராபாத், செகந்திராபாத் சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்றும், விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் ராமகிருஷ்ணனும், நாங்களும் கலந்து பேசி முடிவு செய்தோம்.


முதல் வாரம் கோல்கொண்டா கோட்டை சென்று வந்தோம். அங்கு போயிருந்தபோது ஆராய்ச்சியகத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்து அங்கு பணி மாற்றம் செய்யப்பட்ட சில நண்பர்களை சந்தித்ததால் எங்களுக்கு ஒளி, ஒலி காட்சிக்கான ஸ்பெஷல் பாசும் கிடைத்தது. அதற்கடுத்த வார விடுமுறைகளில் உலகப்புகழ் பெற்ற சாலர் ஜங் மியூசியம், பிர்லா மந்திர், சில்க்கூர் பாலாஜி கோயில், ராமோஜிராவ் பிலிம் சிட்டி, சார்மினார் என ஹைதராபாத், செகந்திராபாத் சுற்றியுள்ள அனைத்து புகழ்பெற்ற சுற்றுலா தளங்களுக்கும் சென்று வந்தோம்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்...

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே....