முதல் ஆறு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.
பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….
பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….
சாகரின் குழப்பத்திற்கான காரணம்
ஐ.டி.ஐ படிப்பு முடித்தபின் ஏழெட்டு ஆண்டுகளாக மின்துறையில் வேலை பார்த்து வந்தாலும்
இதுவே அவன் சந்தித்த முதல் விபத்து ஆகும். அதுவும் கை, கால்கள் கருகி மோசமாக பாதிக்கப்பட்டதால்
மிக்க அதிர்ச்சி அடைந்திருந்தான். மருத்துவமனையில் இருந்து அனுப்பினால் வேலைக்கு வரப்போவதில்லையென்றும்,
தங்குமில்லம் வந்து அவன் உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட
முடிவு செய்திருப்பதாக கவாண்டேவிடமும், நெருக்கமான நண்பர்களிடமும் கூறிவிட்டான். கவாண்டேவும்
காயங்கள் பூரணமாக ஆறும் வரை கம்பெனி செலவிலே மருத்துவமனையில் இருந்து விட்டு பின் ஓரிரு
நாட்கள் தங்குமில்லத்தில் இருந்து விட்டு செட்டில்மெண்ட் மற்றும் விபத்து இழப்பீட்டுத்
தொகையையும் சேர்த்து வாங்கி கொண்டு பின் ஊருக்கு செல் என ஒப்புதல் அளித்துவிட்டார்.
அடுத்த வாரத்தில் தீபாவளி வேறு வர இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன
சாகர் தங்குமில்லம் வந்து அக்கம்பக்கம் பழகியவர்கள், நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு
ஊருக்கு கிளம்பி விட்டான். வழக்கமாக வேலையை விட்டு செல்பவர்களுக்கு கம்பெனி சார்பாக
விருந்து கொடுப்பது போல் சாகருக்கும் செய்து நாங்கள் அனைவரும் அவனை வழியனுப்ப செகந்திராபாத்
பேருந்து நிலையம் சென்றோம். எல்லோரிடமும் நன்றாக
பழகியவன் என்பதாலும், மீண்டும் காண்போமோ, இல்லையோ என்பதாலும் கண்ணீர் மல்க விடைபெற்று
சென்றான்.
ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் காட்டுப்பகுதி என்பதால் பணியாளர்கள் பாதுகாப்பு வந்து போக போக்குவரத்து போன்றவற்றையும் கருத்தில் கொண்டு வரையப்பட்ட புதிய பணி அட்டவணையின் படி ஒவ்வொரு துறை கட்டுப்பாட்டு அறையிலும் ஒருவர் இருக்குமாறும், எல்லோரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை முதல் ஷிப்ட்டும், இரண்டாவது ஷிப்ட் மதியம் பன்னிரெண்டு மணி முதல் மாலை ஏழு மணி வரையும் மூன்றாவது ஷிப்ட் இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை எனவும் மணியும், கவாண்டேவும் மட்டும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையான ஆராய்ச்சியகத்தின் பொதுப் பணி நேரத்தில் வந்து செல்வர் எனவும் நான் திட்டப்பணிகளைப் பொறுத்து எல்லா ஷிப்டிலும் வந்து செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மற்ற வடமாநிலங்களைப் போலவே ஆந்திராவிலும்
தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவார்கள் என்பதால் அந்த வாரத்தில் சனி, ஞாயிறு ஆரம்பித்து
அதற்கடுத்த வாரம் சனி, ஞாயிறு வரை அரசாங்க விடுமுறைகள் வந்ததால் தொடர்ந்து ஒன்பது நாட்களாக
ஆராய்ச்சி நிறுவனம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடியது. நாங்கள் பராமரிப்பு துறை என்பதால்
சனி, ஞாயிறு உள்பட எல்லா அரசு விடுமுறை தினங்களிலும் பணிக்கு செல்ல வேண்டி இருந்தது.
உள்ளூர்காரர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை கொடுத்து விட்டு தீபாவளிக்காக ஊருக்கு
சென்றவர்களை தவிர்த்து மற்ற வெளியூர்காரர்கள் மட்டும் பணிக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
நாங்களும், நிறுவனத்தின் உள், வெளி காவலுக்கு இருக்கும் இராணுவத்தினர் மட்டுமே பணியில்
இருந்ததாலும் வழக்கமான அன்றாடப் பணிகள் ஏதும் இல்லாததாலும் பொழுது போகாமல் மிக கஷ்டப்பட்டோம்.
கேண்டின் இருந்தாலாவது அவ்வப்போது சென்று டீ,காபி, சிற்றுண்டி ஏதாவது அருந்தி வரலாம்.
எத்தனை நேரம்தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பது, பொழுது
போக ஏதாவது செய்ய வேண்டுமே என்று நான்கு நாட்களாக யோசித்து கொண்டிருக்கும் போதுதான்
பழவேட்டைக்கு போகலாம் என்ற எண்ணம் தோன்றியது.
முறையான நீர் ஆதார வசதிகளோடும்,
உள்கட்ட அமைப்புகளோடும் பசுமையாக பரந்து விரிந்து இருந்த ஆராய்ச்சியகத்தின் எல்லா பகுதிகளிலும்
மத்திய அரசின் தோட்டத்துறையினரால் எல்லா விதமான பூச்செடிகளும், புதர் செடிகளும், புல்
தரைகளும், சிறு, குறு மரங்களும் மற்றும் பல விதமான பழ மரங்களும் வளர்க்கப்பட்டு வந்தன.
வழக்கமாக தோட்ட பராமரிப்பாளர்களும், அந்தந்த துறை ஊழியர்களும் மட்டுமே சொந்தம் கொண்டாடி,
முறை வைத்து பழங்களை பறித்து, அவர்களுக்குள்ளே பிரித்து கொள்வார்கள். பணி நாட்களில்
மரங்களின் அருகே கூட மற்றவர்கள் யாரும் செல்ல முடியாதவாறு கண்காணிப்பு இருக்கும் என்பதால்
விடுமுறை நாட்களில் எங்கள் அணி ஆள்கள் யாராவது
அவசரப்பணிக்காக மரங்கள் இருக்கும் பக்கமாக
சென்றால், பழங்கள் ஏதாவது மரத்தில் மிஞ்சி இருந்தால் பறித்து வருவார்கள். செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள்
தவிர்த்து இயற்கையான முறையில் இலை, தளை, குப்பைகள் இடப்பட்டு தனிக்கவனிப்பில் வளரும்
அவற்றின் சுவையும் அபாரமாக இருக்கும்.
முதலில் கேண்டின் அருகில் கொய்யா
மரங்கள் இருக்கும் பகுதிக்கு செவ்வாய் மதியம் மூன்று மணிக்கு மேல் சென்றோம். நல்ல சீனிக்
கொய்யாக்கள். பெரிய, பெரிய மரங்கள். கரும்பச்சை காய்களை விட்டுவிட்டு, நன்கு வெண்மை
பாய்ந்து விடைத்திருந்த உரைக்காய்களாக பறித்து உப்பு, மிளகாய் பொடி வைத்து உண்டு களித்தோம்.
மறுநாள் நாவல் மரங்கள், அதற்கடுத்தடுத்த நாட்களில் சப்போட்டா, ஆப்பிள், ஆரஞ்சு என தொடர்ந்து
பழவேட்டைதான். சில சமயங்களில் அவ்வப்போது ரவுண்ட்ஸ் வரும் செக்யூரிட்டி கார்டுகளான
ராணுவ வீரர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். சீசன் இல்லாவிட்டாலும் கார்காய்களாக
காய்த்திருந்த பங்கனபள்ளி, கிளிமூக்கு, ஒட்டு, மல்கோவா போன்ற பல வகையான மாங்காய்களைப்
பறித்து வந்து மற்ற அறைகளை விட அறை வெப்பநிலை அதிகமாக இருக்கும் பேட்டரி ரூமில் நல்ல
உரத்த சணல்சாக்குகளை தரையில் விரித்து காய்களை அடுக்கி மேலேயும் காற்றுப் புகாதவாறு
பெரிய சணல் சாக்குகளால் மூடி பழுக்க வைத்து பழுக்க, பழுக்க சுவை பார்த்தோம். இப்படி
ஆய்வகத்தின் உள்ளே இருந்த இருந்த நாவல், கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை,
வால் பேரி மற்றும் பல விதமான பழமரங்களை எல்லாம் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல் வெளிச்சுற்று
சுவர் அருகில் இருந்த காட்டு இலந்தை மரங்களையும் விட்டு வைக்கவில்லை. பாரா செல்லும்
செக்யூரிட்டி ஒருவர் ஆய்வகத்தின் கடைக்கோடியில் காட்டு வாழைகள் தானாக வளர்ந்து காய்த்து
குலை தள்ளிளிருப்பதாக கூற அவற்றையும் வெட்டி வந்து சாக்கினுள் வைத்து கட்டி பேட்டரி
ரூமிற்குள் பழுக்க வைத்து ருசித்தோம்.
தொடர் விடுமுறையின் கடைசி நாளான
ஞாயிறன்று எங்கள் கட்டுபாட்டு அறையின் வெளியில் ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்
போது கடந்த ஒரு வாரமாக எல்லா விதமான கனிகளும் பறித்து, ருசித்து விட்டோம். முக்கனியில்
முதல் கனியான மாம்பழங்களும், கடைசிக் கனியான வாழையும் கூட கைவசம் இருக்கிறது. நடுக்கனியான
பலா மட்டும் கிடைத்து விட்டால் கையில் மீதி இருக்கும் பழங்களையெல்லாம் சேர்த்து அருமையான
பஞ்சாமிர்தம் தயார் செய்து விடலாமே என எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது
அந்தப் பக்கமாக பாரா வந்த செக்யூரிட்டி ஒருவர் ஆராய்ச்சி நிறுவன காட்டுக்குள்ளே இருந்து
கடந்த ஒரு வாரமாக பலா வாசனை வருவதாகவும், சில சமயங்களில் பலாச்சுளையை உண்ண குரங்குகள்,
நரிகள், கரடிகள் கூட கோட்டை மதில் சுவர் தாண்டி வந்து செல்வதாகவும் கூற காட்டில் காத்திருக்கும் விபரீதம் அறியாமல் சரி
அதையும் சென்று பார்த்து விடுவோமே என்று கூட்டமாக கிளம்பினோம்.
2 comments:
பலாவைத் தேடி செல்லும் போது விபரீதமா?
திக்... திக்... நிமிடங்கள் ஆரம்பம்...
அடுத்த பகிர்வுக்காக வெயிட்டிங்....
ஆமாம் நண்பரே... ஆபத்தை நெருங்கி விட்ட்டோம்.
Post a Comment