Saturday, September 26, 2015

விவசாயம், விளைநிலங்கள், சுற்றுப்புறச் சூழல் காக்க இனியாவது புது விதிகள் செய்வோம் - வலைப்பதிவர் திருவிழா 2015 போட்டிக்கான கட்டுரைவகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

விவசாயம், விளைநிலங்கள், சுற்றுப்புறச் சூழல் காக்க இனியாவது புது விதிகள் செய்வோம்…

எல்லோருக்கும் வணக்கம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்
என்னும் குறளின் குரல் கால மாற்றத்தால் தேய்ந்து கொண்டே வந்தாலும் உலக மக்கள் யாவரும் தினம் மூன்று வேளைப் பசியாற உணவு தேவை என்பதும். அதனை உருவாக்க விவசாயிகளும், விவசாய நிலங்களும் மிகவும் அவசியம் என்பதும் எவராலும், எக்காலத்திலும் மறுக்கப்பட முடியாத உண்மை.. நாமெல்லாம் நன்றாக குளிர்சாதன வசதி உள்பட அனைத்து வசதிகளும் கொண்ட அறையில் கணிணி முன் உட்கார்ந்து கொண்டு படங்கள், பதிவுகள், பேஸ்புக், ட்விட்டர் என்று இணைய வசதிகள் அனைத்தையும் எளிதாக பயன்படுத்திக் கொண்டு மிகவும் சுகமாகவும், வசதியாகவும் வாழ்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் நாம் உண்ணும் மூன்று வேளை உணவிற்காக எங்கோ ஒரு ஏழை விவசாயி இரவு, பகலாக வெயில், மழை பாராமல் உயிரைக் கொடுத்து உழைக்கிறான். எவரிடமிருந்தும், எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல்  நமக்காக உண்மையாக உழைக்கும் விவசாயியையோ அல்லது அவன் குடும்பத்தை யாராவது, என்றாவது எண்ணிப் பார்க்கிறோமா…

விவசாயம்தான் நாட்டின் உயிர்மூச்சு. விவசாயிதான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று ஏட்டளவில் கொண்டாடுகிறோம். முதுகெலும்பு இல்லையென்றால் நாம் என்ன ஆவோம். எப்படி இருப்போம் என்பதை ஒரு நிமிட நேரமாவது நினைத்துப் பாருங்கள். பாம்புகள் போல் நாமும் ஊர்ந்துதான் திரிய வேண்டும். அதுபோல்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, நாகரீக மோகத்தினால் நம் மனித சமுதாயம் இழந்த பழக்க வழக்கங்களை இன்னமும் வழ்ககத்திலும், பழக்கத்திலும் வைத்திருக்கும் கிராமங்களும், விவசாயிகளும், விளைநிலங்களை நம்பியே இருக்கினறனர். கால மாற்றத்தாலும், புதிய புதிய கருவிகளின் கண்டுபிடிப்பினாலும் ஏர் பிடித்து செய்த விவசாயம் இயந்திரமயமாகி விட்டாலும் விளைபொருட்கள் விளைவிக்க விவசாயியும், விளைநிலங்களும் இன்றியமையாதவை.

விவசாயியும், விவசாயமும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விளைநிலங்களின் பெருமையையும் அருந்தமிழ் மூதாட்டி அவ்வைப் பாட்டியார் ஒரு திருமண விழாவின் போது  மணமக்களை ‘வரப்புயர…’ என்று ஒரு வார்த்தையில் வாழ்த்தி உணர்த்தினார். அரசாங்கமும், ஆட்சியாளர்களும் சிறப்புற வேண்டுமானால் விவசாயத்தால் மட்டுமே முடியும் என்பதை ‘வரப்புயர, நீர் உயரும், நீர் உயர பயிர் உயரும், பயிர் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்.’ என்று விளக்கியும் கூறினார். சுற்றுச்சூழலோடு எவ்வாறு விவசாயம் இணைந்திருந்தது இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதையும், சீரழிந்த விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் சீர்படுத்த அரசும், மக்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக நாம் பார்ப்போம்.

சென்னை போன்ற பெருநகரில் பிறந்து, திருநெல்வேலி போன்ற சிறுநகரத்தில்  வளர்ந்து இன்று உலகம் முழுதும் சுற்றித் திரிந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமானதும் பிரியமானதும் சிறுவயதில் விடுமுறையை கழிக்கச் சென்ற கிராமங்களும், அதில் வாழ்ந்த எளிய மனிதர்களும்தான். நவீனக் கல்வி முறையில் நாம் பள்ளி சென்று போட்டி போட்டு போராடிப் படிக்கும் பாடங்களானவை வாழ்வில் பணம் சம்பாதிப்பது தவிர வேறெதற்கும் உதவாது. அவ்வாறு நாம் புரியாமல் படிக்கும் பாடங்களை விட கிராமத்து மக்களும், குழந்தைகளும் இயற்கையாக, எளிமையாக கற்றுக் கொள்ளும் அனுபவப்பாடங்களே சிறந்தவை என்பது என் கருத்தாகும்.

இருபது, முப்பது வருடம் முன்பு வரை கிராமங்களில் ஆண் என்றாலும், பெண் என்றாலும் ஆடு, மாடு மேய்ப்பதே அவர்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய முதல் அரிச்சுவடி. ஆம் ஆடு, மாடுகளை மேய்த்து, அவற்றுடன் நெருங்கிப் பழகி அவற்றின் குணங்களையும், குறைகளையும் அறிந்து கொள்ளும் ஆண் அடுத்தகட்டமாக அவற்றைப் பயன்படுத்தி ஏர் பிடித்து உழுவது, மரம் அடிப்பது, உரம் தயாரிப்பது முதல் அறுவடை செய்து விளை பொருளை வீடு கொண்டு வந்து சேர்ப்பது வரை என்று விவசாயத்தொழிலின் விருத்தங்களை எல்லாம் அறிந்து கொள்கிறான். கால்நடைகளுக்கு தீவனப்புல் அறுப்பது, பால் கறப்பது, தயிர் குத்துவது, வெண்ணைய் எடுப்பது, நெய் உருக்குவது என்பது போன்ற இன்றியமையாத வேலைகளையெல்லாம் பெண் ஏற்றுக் கொள்கிறாள்.

அதிகாலை ஒரு மணி என்பது நமக்கெல்லாம் நள்ளிரவு. ஆனால் நான் பார்த்த என் கிராமத்து மக்களுக்கோ அதுவே பொழுது புலரும் நேரம். நாளின் முதல் மணித்துளி ஆரம்பிக்கும் அந்த அதிகாலையிலே ஒன்றரை மணிக்கெல்லாம் டீக்கடையும் திறந்து, ஒலி பெருக்கியில் திரைப்படங்களில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல்களும் போட ஆரம்பித்து விடுவார்கள். குடும்பத் தலைவரான ஆண் எழுந்து, ஒரு செம்பு நீர்த்தண்ணியை உப்பு போட்டு குடித்துவிட்டு, காளை மாடுகளைப் பற்றிக்கொண்டு, ஏர் மற்றும் பிறவேலைகளுக்குத் தேவையான விவசாயக் கருவிகளையும் தூக்கி கொண்டு வயலுக்கு கிளம்பி விடுவார். வீட்டுத் தலைவியான பெண்ணும் அந்த அதிகாலை நேரத்திலே எழுந்து முதல் வேலையாக தொழுவத்தை திறந்து பால் கறந்துவிட்டு பசு மாடுகளையும், மற்ற ஆடு, மாடுகளையும்  அவிழ்த்து மந்தைக்கு அனுப்பி விட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

ஆடு,மாடுகள் இறைத்துப் போட்டிருக்கும் வைக்கோல்,புல் போன்ற தீவனங்களை ஒழுங்காக எடுத்து வைத்து பின் சாணத்தைக் கூட்டி  ஓரிடத்தில் குவித்து, பின் சுத்தமாக பெருக்கி, தொளித்து, தூர்த்து, கோலம் போட்டு விட்டு வீட்டருகே உள்ள ஓடை அல்லது வாய்க்காலுக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான குடிநீர், வீட்டுச் செலவுகளுக்கான மற்றும் ஆடு,மாடு குடிப்பதற்காக என வீட்டில் உள்ள அனைத்து நீர்த்தொட்டிகளையும் ,நிரப்பிவிட்டு , தொழுவத்தில் குவித்து வைத்த சாணத்தை கூடையில் அள்ளி தலைச்சுமையாய் கொண்டு போய் கொஞ்சம், கொஞ்சமாக பலநடையாக உரக்குழியில் போடுவது என ஏழு மணி வரை வேலை சரியாக இருக்கும். பின் குழந்தைகளை எழுப்பி பள்ளி செல்ல தயார் செய்து அனுப்பி வீட்டு, அவர்கள் உண்டது போக மீதமிருக்கும் கஞ்சியை கரைத்து எடுத்துக்கொண்டு வயலுக்கு போனால் களை எடுப்பது,காய் பறிப்பது என பகல் முழுதும் வேலை சரியாக இருக்கும்.இடைப்பட்ட நேரத்தில் கொண்டு சென்ற கஞ்சியை கணவனுக்கு கொடுத்து மீதியை தானும் குடிக்க உட்காரும் நேரம் தான் ஓய்வு நேரம். 

சூரியன் உச்சிக்கு வந்தபின் வீட்டுக்கு வந்து தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு மீதமிருக்கும் மோரையும், நெய்யையும் எடுத்துக் கொண்டு கணவன் அக்கம்பக்க ஊர்களில் விற்கச்சென்று விடுவார். அதன்பின் பெண் ஆற்றுக்கு சென்று அழுக்குத் துணிகளை துவைத்து முடித்து, வீடு வந்து ,இருட்டும் நேரம் மந்தையிலிருந்து  திரும்பும் ஆடு, மாடுகளை தொழுவத்தில் அடைத்து மீண்டும் பால் கறந்து, காய்ச்சி ஆற வைத்து  பின் சமையல் வேலைகளை முடித்து விட்டு, விளக்கேற்றி, பள்ளி விட்டு வரும் குழந்தைகளோடு சாமி கும்பிட்டு, குடும்பமாக அமர்ந்து அளவளாவியவாறே சாப்பிட்டு முடித்து அதன் பின் அனைத்துப் பாத்திரங்களையும் கழுவி வைத்து காய்ச்சி ஆற வைத்திருந்த பாலையும் தயிர் குத்தி விட்டுப் படுத்தால் ஒருநாள் பொழுது முடிந்தது.

இப்போதுள்ள வீடுகளில் கார் பார்க்கிங் எவ்வளவு முக்கியமோ அதுபோல அந்தக்காலத்தில் தொழுவம் இல்லாத வீடுகளையே பார்க்கமுடியாது. விவசாயியின் வீடு பனை அல்லது தென்னை ஓலை வேய்ந்த குடிசையாக இருந்தாலும் மாட்டுத் தொழுவம் ஓட்டுப்பிறையாக இருக்கும். அந்த அளவிற்கு ஆடு, மாடுகளுக்கு முக்கியத்துவமும், முதன்மையும் கொடுத்து வந்தார்கள். சொத்து பிரிக்கும் பொழுதும் வீடு, வயல்களை விட தொழுவத்திற்குதான் போட்டி பலமாக இருக்கும்.  அதுபோன்ற எத்தனையோ பஞ்சாயத்துகளை சிறுவயதில் பார்த்து இருக்கிறேன். வீடு தோறும் மாடுகள், தொழுவங்கள் இருந்தாலும் அவற்றின் சாணம், கிருமி நாசினியாக செயல்பட்டு, ஈ, கொசு வராமல் பாதுகாத்தது. எனவேதான் நம் பழந்தமிழ் மக்கள் வீட்டின் முன்வாசல் முதல் சமையலறை வரை அனைத்து அறைகளையும் சாணம் கொண்டு மெழுகி, துடைத்து கிருமிகள் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இயற்கை முறையில் தடுத்து நூறாண்டு காலம் வாழ்ந்தனர்.

ஊர் மந்தை என்பது ஊருக்கு வெளியே ஊர் மாடுகளெல்லாம் மொத்தமாக வந்து கூடும் இடம். அதிகாலை ஒருமணியிலிருந்து ஆரம்பித்து ஏழு, எட்டு மணி வரை மாடுகள் வந்து கொண்டே இருக்கும். மேய்ப்பவர்களும் அவர்களது வீட்டு வேலை மற்றும் வயல் வேலைகளை முடித்து விட்டு மந்தைக்கு வருவர். பிறகு எல்லா மாடுகளும் வந்து விட்டனவா… எங்கு மேய்க்கச் செல்லலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்து ஓட்டிக் கொண்டு சென்று தோப்பு ,ஆறு அல்லது குளக்கரையோரமாக கண்பார்வையில் ஆடுமாடுகளை மேயவிட்டு விட்டு சடுகுடு, ஆடுபுலி ஆட்டம், தாயக்கட்டம், மரமேறிக் குரங்கு என்று பகல் முழுதும் பல விளையாட்டுக்கள் நடக்கும் இடையில் சாப்பாடு, தூக்கம் ,குளியல் என மாலை வரை இனிதே பொழுதை கழிப்பார்கள்.

ஆனால் இப்போது இவை எல்லாம் மாறி விட்டன. பெரும்பாலானோர்  கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை  கை விட்டு விட்டு ஆண்களும், பெண்களுமாய் ஆலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம். தொடர் காடு அழிப்பினால் மழைப்பொழிவு குறைந்து விட்டது. முன்பெல்லாம் விளைவிக்கும் பயிர்களில் இருந்து ஒரு பங்கை விவசாயிகளே விதையாக எடுத்து வைப்பர். ஆடு, மாடுகளின் கழிவுகளே இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டது. பசுமைப் புரட்சிக்குப் பின் விதைகளும், பிற இடுபொருட்களும், ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்பட்டும். அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுத்தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டும் விலைக்கு விற்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நல்ல விளைச்சல் கொடுத்தது போல் தெரிந்தாலும் தொடர்ந்து செயற்கை உரங்களைப் பயன்படுத்தியதால் மண் மலடானது.

இயற்கைச் சுழற்சியில் ஒரு பூச்சிக்கு இன்னொரு பூச்சி எதிரியாக இருந்து விவசாயிக்கு உதவி செய்தது. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள்  பயன்படுத்தியதால் வயலுக்குப் பாயும் ஓடை, வாய்க்கால் நீரெல்லாம் நஞ்சாகி இயற்கை பூச்சிக் கொல்லிகளும், விவசாயத் தோழர்களுமான தவளை, அயிரை மீன் போன்றவை விவசாய நிலங்களில் இருந்து அறவே அழிந்தன. அனுபவ அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் ஊடு பயிர் முறையை ஒழுங்காக பயன்படுத்தி இயற்கை முறையில் இனக்கவர்ச்சி பொறிகளை உருவாக்கி பருவகால மாற்றத்தின் போது விளைபயிர்களுக்கு வரும் விதம்விதமான நோய்களையும் களைகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தி வந்தனர்.

பயிர்களிலேயே மிகவும் அதிகமாக நோய்த் தொற்று மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் மிளகாய் வயலைச் சுற்றி வெண்டை, ஆமணக்கு போன்ற உயரமான மற்றும் கசப்பு சுவையுள்ள  பெரிய இலைகள் கொண்ட செடிகளையும், துவரம்பருப்பு, சிறுபருப்பு போன்ற பயிறு வகைகளைப் பயிரிட்டும் வாழைத் தோப்பில் மரங்களுக்கு இடையே தடியங்காய் எனப்படும் திருஷ்டிப் பூசணிக்காய் பயிரிட்டும் இயற்கை முறையில் களைகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தி வந்தனர். நவீன ஒருபயிர் முறையைப் பயன்படுத்தும் வயல்களில் பூச்சி மருந்துகளை கொண்டு பூச்சிகள் அழிக்கப்பட்டாலும் எதிர்விளைவாக புதிய, புதிய பூச்சி இனங்கள் உருவாகி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் மற்றும் சிறு பறவைகளின் அழிவிற்கு செல்போன்களும், டவர்களும் காரணம் என்று அறியாதவர் கூறுவர். ஆனால் வயல்களில் இடப்படும் இராசயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளுமே உண்மையான காரணம். வயலிலே கூடுகட்டி, பயிரைப் பாதிக்கும் பூச்சிகளை உண்டும், வயலுக்குப் பாய்ந்து வயலிலே தேங்கி நிற்கும் நீரை அருந்தியுமே சிட்டுக் குருவிகளும், சிறு பறவை இனங்களும் உயிர் வாழ்ந்து வந்தன. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின் நவீன முறையாக நடைமுறைப் படுத்தப்பட்ட இரசாயன உரங்கள் கலந்து விஷமான நீரை அருந்தியதாலும், பூச்சி மருந்துகளின் வீரியத்தால் மயங்கியும், இறந்தும் கிடக்கும் பூச்சிகளை உண்டதாலுமே சிட்டுக் குருவிகளும், சிறு பறவை இனங்களும் வரலாறு காணாத அழிவைச் சந்தித்தன என்பது  பறவை ஆர்வலர்களது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப் பட்ட உண்மை.

பண்ட மாற்று முறை பழக்கத்தில் இருந்த போதும், விவசாய வேலைகளில் பணம் எதிர்பாராமல் உற்றார், உறவினர், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி வந்த காலம் வரையிலும் விவசாயம் லாபகரமாகவே இருந்து வந்தது. ஆனால் எப்போது இயற்கை வேளாண்மையை விட்டு செயற்கை உரங்களையும், மருந்துகளையும் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அன்று முதலே விவசாயிக்கும், விவசாயத்திற்கும் நஷ்டக் கணக்கு தொடங்கப் பட்டு விட்டது. உழைப்பு மட்டும் மூலதனமாக இருந்த விவசாயத்தை பணம் முழுதும் ஆக்ரமித்தது. விவசாயக் கூலி முறை உருவானது. உழுவது முதல் அறுப்பது வரை இயந்திரமயமானதாலும், விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்ததாலும் விவசாயம் சம்பந்தமான வேலைகளுக்கு முதலீடும், கூலியும் உயர்ந்தது. வங்கிக் கடன் வாங்கியும், வட்டிக்கு கடன் வாங்கியும் கட்ட முடியாமல் வீடு, வயல்களை விற்று விட்டு நகரத்திற்கு குடி போனவர் பலர். பயிருக்கு வாங்கிய பூச்சி மருந்தையே குடித்து தன் உயிர் போக்கி அவர்தம் குடும்பத்தை நரகத்தில் தள்ளிச் சென்றவர் சிலர்.

விவசாயிகளின் கஷ்டநிலையைப் பயன்படுத்தி  ஆசைகாட்டிய நிலபுரோக்கர்களால் விளைநிலங்கள் விலைநிலங்களாக்கப் பட்டன. விவசாய நிலங்கள் வீடு மற்றும் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டன. இதனை தண்டிக்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே பட்டா, நில வரி மற்றும் அடங்கல் முறைகளில் மோசடி செய்து தாய்ப்பத்திரங்களை மாற்றி புதிதாக போலிப் பத்திரங்கள் உருவாக்கி விவசாய நிலங்களை சீரழித்து, தொழிற்சாலைகளும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் வரக் காரணமாயினர். கட்சி பேதமின்றி எல்லா அரசியல்வாதிகளும் பணப்பேராசையால் பண்பிழந்து பழமையான நீர்ப்பாதைகளை அடைத்தும், மறித்தும் விளைநிலங்களை விற்க மறுத்த ஒரு சில விவசாயிகளை மிரட்டியும், மேலும் பல நெருக்கடிகள் கொடுத்தும் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.

எத்தனைதான் போராடி விவசாயம் செய்தாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. நாடு முழுதும் உள்ள இடைநிலை புரோக்கர்களும், மொத்த வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து குறைந்த விலையை நிர்ணயம் செய்து ஏழை விவசாயிகளை ஏமாற்றி வாங்கிய விளைபொருள்களை கள்ளச்சந்தையில் பதுக்கியும், சில்லறை வணிகத்தில் அதிக விலைக்கு விற்றும் அதிக இலாபம் பார்க்கின்றனர். நெல், கம்பு, சோளம்,வாழை, கரும்பு,எள், நிலக்கடலை, பயறு வகைகள், மிளகாய், தக்காளி, வெங்காயம், காய்கறிகள் என்ன பயிரிட்டாலும் இந்த நிலமை தான்.  பயிர் விளைச்சலுக்கும், பாசனத்திற்கும்  செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் குறைந்த விலைக்கு கேட்கும் சமயங்களில் வெறுப்புறும் விவசாயிகள் விளைபொருட்களை சாலைகளில் கொட்டிச் செல்வதும், நல்ல விலை கிடைக்காத காய்கறிகளை செடி, கொடிகளிலே பறிக்காமல் விடுவதும் செய்திகளாக, படங்களாக பத்திரிக்கைகளில் வந்தாலும் தக்க பதில் கூறுவார், தகுந்த நடவடிக்கை எடுப்பார் யாருமில்லை.

இதற்கெல்லாம் எடுக்கப்பட வேண்டிய தீர்வு என்ன, தேர்தல் சமயங்களில் மட்டும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளிடம் என்ன வாக்குறுதிகள் கேட்கப்பட வேண்டும், விவசாயியையும், விவசாயத்தையும், விளைநிலங்களையும் இயற்கைச் சங்கிலியால் இணைக்கப்பட்ட சுற்றுப்புற சூழலையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை இனி பார்ப்போம்.

 • விவசாயத்தை அரசு சார்ந்த நிறுவனமாக்க வேண்டும்.
 • விளைநிலங்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் குடியிருப்புகள் கட்டவோ, தொழிற்சாலை கட்டுமானம் சார்ந்த பயன்பாட்டிற்காகவோ விற்கவோ வாங்கவோ கூடாது.
 • பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் இயங்கும் வகையில் விவசாய வளர்ச்சிக்கு என  தனித்துறை உருவாக்கி நாடு முழுதும் எல்லா மாநிலங்களிலும் தாலுகா வாரியாக தனித் தனியாக மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வம் கொண்ட நேர்மையான இளம் மற்றும் அனுபவமுடைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், திறமையான அலுவலர்களும், பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்
 • விவசாயம் செய்யும் நிலம் விவசாயியின் பெயரில் அசையா சொத்தாக இருக்க வேண்டும்.
 • தனி ஒருவருக்கு ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில்  அவற்றை மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மாற்றி அவர்களை தனியாக விவசாயம் செய்யுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • விவசாயத்தில் ஈடுபடும் ஆண், பெண் இரு பாலரையும் அரசாங்க ஊழியராக்கி மாதச் சம்பளம் வழங்க வேண்டும்.
 • அடிப்படைச்  சம்பளம் எல்லோருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டு மாதா, மாதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
 • உழைப்பு மற்றும் உற்பத்திக்கேற்றவாறு ஊக்கத் தொகை கணக்கிடப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்புத்தொகையாக வழங்கப்பட்டு வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
 • அண்டை மாநிலங்களே இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களையும்,காய்கறிகளையும் வாங்க மாட்டோம். உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறும் போது நாம் ஏன் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை சார் வேளாண்மைக்கு மாற இதுவே தக்க தருணம். ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக தனி நபர் ஈடுபாடுகளினால் பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வரும் இயற்கை வேளாண்மை மற்றும் கூட்டுப்பண்ணை முறையை அரசாங்கமே நாடு முழுதும் பரவலாக்கி, விரிவு படுத்த வேண்டும்.
 • பருவகால மாற்றங்களுக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்ய தேவையான இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் அனைத்தும் அரசாங்கமே விவசாயிக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
 • நாடு முழுதும் ஓடும் நதிகளை தேசியமயமாக்கி மாநிலங்களுக்கு நதிகளின் மேல் உள்ள உரிமையை நீக்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
 • நாடு முழுதும் நதி நீர் இணைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வெள்ளநீர் வீணாகாமல் முழுதும் விவசாயத்திற்கு பயன்படுமாறு ஆவண செய்ய வேண்டும்.
 • தனித்துறை ஒன்றை உருவாக்கி, நாடு முழுதும் உள்ள அணைகள் மற்றும் அனைத்து வகை நீர்நிலைகளிலும் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடக்கும் மணலையும், மாசுக்களையும் மூன்றாண்டுக்கு ஒரு முறை சுத்திகரித்து நீக்க அரசு ஆணை பிறப்பித்து தடையில்லாமல் செயல்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.
 • ஆக்ரமிக்கப்பட்டு அடைக்கப்பட்ட மற்றும் மறிக்கப்பட்ட நீர்வழிப்பாதைகள் மற்றும் அனைத்து ஆறு, ஏரி, குளங்களையும் தூர் வாருதல் போன்ற நீர் மேலாண்மை முறைகளை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஆண்டு முழுதும் நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • அயல்நாட்டு கால்நடை இனங்களை அறவே ஒழித்து விட்டு உள்நாட்டு ஆடு, மாடு, கோழி இனங்களை வளர்க்க உதவித்தொகையும், பண்ணைகளும் அமைத்துக் கொடுத்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
 • விளைபொருட்களை மொத்தமாக அரசாங்கமே நேரிடையாக விவசாயிகளிடம் இருந்து நியாயமான சந்தை விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும்.
 • அனைத்து தாலுகாக்களிலும் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு தேவையான சேமிப்பு கிடங்குகளையும், காய்கறிகள், பழவகைகளை வெகுநாள் வைத்து பாதுகாக்கும் வகையில் குளிர்பதன வசதி கொண்ட கிட்டங்கிகளையும் உலகத்தரத்தில் மிக நவீனமாக உருவாக்க வேண்டும்.
 • எந்த ஒரு இடத்திலும் தனியோரையோ, இடைநிலை புரோக்கர்களையோ, பெருந்தொழிலதிபர்களையோ அனுமதிக்காமல் விதை வழங்குவது முதல் விளைபொருள் கொள்முதல் வரை முழுக்க, முழுக்க அரசு நிறுவனமாகவே நடத்த வேண்டும்.
 • நடைமுறையில் இருக்கும் பயிர்காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்தி எந்த ஒரு விளைபொருளுக்கும் எந்த நிலையிலும், என்ன ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகை முழுதும்  உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்குமாறு சட்டதிட்டங்கள் திருத்தப்படவேண்டும்.
 • நாடு முழுதும் விவசாயிகளுக்கென அனைத்துக் கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளும், மாவட்டத் தலைநகரங்களில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளும், மாநிலத் தலைநகரங்களில் அதிநவீன அனைத்து வகை நோய்களுக்குமான சிறப்பு மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சையும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படவேண்டும்.
 • விவசாயிகளுக்கென சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு நாடு முழுதும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
 • ஐம்பது வயதிற்கு மேல் பெண்களுக்கும், அறுபது வயதிற்கு மேல்  ஆண்களுக்கும் என விவசாயிகளுக்கு பணி ஓய்வு கொடுக்கப்பட்டு மாத ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
 • உடல்நிலை காரணமாகவும், குடும்ப வாரிசுகளுக்கு வழிவிட்டும் விருப்ப ஓய்வு பெற விரும்பும் விவசாயிகளுக்கான ஆதரவுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
 • விவசாயக் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி முதல் அனைத்து வகையிலான உயர்நிலைக் கல்விகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
 • விவசாயம் சம்பந்தமான சிறப்பு படிப்புகளும், பல்கலைக் கழகங்களும் நாடு முழுதும் ஏற்படுத்தப் பட வேண்டும்.
 • இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வத்தோடு ஈடுபட ஊக்கத்தொகையோடு கூடிய முறையான செய்முறைப் பயிற்சி தரும் வகையில் நாடு முழுதும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
 • அரசாங்கம் அனைத்து விதமான வசதிகள் செய்து கொடுத்த பின்னும் அரசு ஊழியராகி விட்டோம், இனி உழைக்கத் தேவையில்லை, உட்கார்ந்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் விவசாய வேலைகளில் ஈடுபடாமல் உற்பத்தி செய்யாமல்  ஒழுங்கின்மை நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க சிறப்பு படையும், நேர்மையான அதிகாரிகளும், காவலர்களும் நியமிக்கப் பட வேண்டும்.
 • அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இயற்கை வேளாண்மை விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகளை முறையாகப் பயன்படுத்தாமல் உற்பத்திக் குறைபாடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு  முதல் இரண்டு முறை எச்சரிக்கைக் கடிதங்களும், மூன்றாம், நான்காம் முறை தற்காலிக பணி நீக்கமும், ஐந்தாவது முறை நிரந்தரப் பணி நீக்கமும் செய்யும் வகையில் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதெல்லாம் நடக்காது என்று யாராவது கூறுவாரேயானால் ஏன் நடக்காது என்று எதிர் கேள்வி கேட்போம். மாநில அரசாங்கமே மதுபான வியாபாரத்தை எடுத்து நடத்தும் வகையில் தனித்துறையாக டாஸ்மாக் என்னும் அரசு நிறுவனத்தை உருவாக்கி மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தக் கொள்முதல் செய்வது முதல் சில்லறை வணிகம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் முறைப்படுத்தி, முறையான மேலதிகாரிகள் முதல் அடிமட்டத்தொழிலாளர்கள் வரை நியமித்து  பல லட்சம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் போது மத்திய அரசு ஏன் விவசாயத்தை எடுத்து நடத்தக் கூடாது. ஏன் லாபகரமாக நடத்த முடியாது. என்று விளக்கம் கேட்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்ட பழந்தொழிலான விவசாயத்தை சீர்படுத்தி, சிறப்புற்றதாய் ஆக்கவும், சமுதாயத்தில் அடிமட்ட வாழ்க்கை வாழும் விவசாயிகள் ஆக்கமும், ஊக்கமும் பெற்று உன்னத நிலையை அடையும்  வகையிலும், சுற்றுப்புற சூழல் மேம்பாடு அடைந்து இளக்கம் கண்ட இயற்கைச் சங்கிலி இறுக்கம் அடையும் வரையிலும் புரையோடிப் புண்பட்டுப்போன மத்திய, மாநில அரசு நிர்வாகங்களையும், அதிகாரிகளையும் தொடர்ந்து வலியுறுத்தி, இனியாவது புது விதிகள் செய்வோம். உழவுசார் தொழிலுக்கு வந்தனை செய்து  சுற்றுப்புறச் சூழலை வளம் பெறச் செய்வோம்.

நன்றி. வணக்கம்.


--------------------------------------------------------------------------------------------------------

 " விவசாயம், விளைநிலங்கள், சுற்றுப்புறச் சூழல் காக்க இனியாவது புது விதிகள் செய்வோம்... " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...


4 comments:

KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே அருமையான விடயம் அழகாக தொடுத்த விதமும் நன்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நானும் விவசாயத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே அருமையான விடயம் அழகாக தொடுத்த விதமும் நன்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நானும் விவசாயத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன். //

ஆக்கம் பல படைக்க ஆர்வம் தரும் ஊக்கப் பின்னூடத்திற்கு நன்றி நண்பரே...

நானும் இன்னும் சில தலைப்புகளில் கட்டுரைகள் எழுத தகவல்கள் தொகுத்து வைத்திருக்கிறேன். ஓய்வு நேரம் ஒழுங்காய் அமைந்தால் ஒருங்கிணைத்து விடலாம். ஆனால் பணிப்பளுவின் காரணமாக பின்இரவு நேரங்களில் மட்டும்தான் எழுத முடிகிறது.

மணிச்சுடர் said...

நல்ல தொலைநோக்குப் பார்வையோடான கட்டுரை. கனவு மெய்ப்பட வேண்டும். வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

// Pavalar Pon.Karuppiah Ponniah said...

நல்ல தொலைநோக்குப் பார்வையோடான கட்டுரை. கனவு மெய்ப்பட வேண்டும். வாழ்த்துகள். //

தொடர் தள வருகைக்கும், உளம் கனிந்த ஊக்கக் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா...

8:10 PM Delete