Friday, September 25, 2015

காடு, மலை காப்போம் - வலைப்பதிவர் திருவிழா 2015 போட்டிக்கான கட்டுரைவகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

காடு, மலை காப்போம்...

எல்லோருக்கும் வணக்கம்.

நாம் வாழும் இந்த பூமி பல கோடி ஆண்டுகள் பல மாற்றங்களை கண்டுதான் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை உருவானது. மூன்று பங்கு கடல் நீராகவும், ஒரு பங்கு நிலப்பரப்பாகவும் கொன்ட இந்த உலகத்தில் முதலில் நீர்வாழ்வனவும், பின் நீர் நில வாழ்வனவும், அதன்பின் நில வாழ்வனவும் பின் ஊர்வன, பறப்பன என ஒன்றன் பின் ஒன்றாய் தோன்றி பரிணாம வளர்ச்சி கண்டு கடைசியில்தான் மனிதன் தோன்றினான். மற்ற மிருகங்களைப் போலவே கூட்டமாய் குகையில் வாழ்ந்த மனிதன்  வேட்டையாட கல், கம்பு  பயன்படுத்தினான். தற்செயலாக நெருப்பையும் கண்டுபிடித்தான்.

 கூர்மையான  ஆயுதங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி வேட்டை, விவசாயம் என அறிவு சார் வாழ்க்கைக்கு வந்தபோது மானம் மறைக்க இலை, தழைகளையும், விலங்குகளின் தோல்களையும் பயன்படுத்தி வந்தவன் பருத்தி, நூல், துணி என தொழில் துறையில் படிப்படியாக பயங்கர வளர்ச்சி கண்டு தற்போது அணு ஆயுதப் போட்டியில் வந்து நிற்கிறான். மனித இனம் அவதரிக்கும் முன் தோன்றிய பல விதமான தாவரங்களும், விலங்குகளும், பறவை இனங்களும் போட்டியும், பொறாமையும், பேராசையும் கொண்ட மனிதனோடு மல்லுக்கட்ட முடியாமல் பூமியை விட்டு அழிந்து, ஒழிந்து போய் விட்டன. எஞ்சி, மிஞ்சி இருக்கும் இயற்கையையும், இருப்பவற்றையும் காக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் சாராம்சமாகும்.

இயற்கை சங்கிலியில் இன்றியமையாதவையாக விளங்கும் காடுகள் மற்றும் மலைகளே ஆறுகள், விலங்குகள், விவசாயம், உலக வெப்பநிலைச் சமன் பாடு, மழைப்பொழிவு போன்றவற்றிற்கு ஆதாரமும், அடிப்படையுமாகும். மனிதனின் பேராசையின் பலனாக காடுகளும், மலைகளும்  அடைந்த பாதிப்புகள்  மற்றும் அவற்றைக் காக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக இனி நாம் பார்ப்போம்.

ஆதிகாலத்தில் பூமியெங்கும் நிறைந்திருந்த காடுகள் முதலில் சமதளப்பகுதிகளில் மனிதனால் விவசாய நிலங்களாக திருத்தப்பட்டு , வாழ்வாதாரங்கள் உருவாக்கப் பட்டு வசம் கொள்ளப்பட்டன. காடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டு புதிய, புதிய நகரங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை நமது இதிகாசங்களும், புராணங்களும் எள்ளுற எடுத்து இயம்புகின்றன. காட்டு வளங்களாக கடவுளால் படைக்கப்பட்ட ஆடுகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள், யானைகள், நாய்கள் மற்றும் பல மிருகங்களும், பறவை இனங்களும் மனிதனால் வளைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அவனது அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்ப அடிமைகளாக்கப் பட்டன. மற்ற காட்டுவாழ் உயிரினங்களும் உணவிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் வேட்டையாடப்படும் அவலம் இன்று வரை தொடர்கிறது.

மலையோரக் கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு சூழ்நிலை காரணமாக சென்ற நம்மில் சிலர் மட்டுமே கோடைக்காலங்களில் மலைகளில் இரவு நேரத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதை பார்த்திருப்போம்.  மலைக்காடுகளில் உள்ள மூங்கில்கள் உராய்வதனால் உண்டாகும் காட்டுத்தீ காய்ந்த சருகுகள், செடி, கொடிகள், மரங்கள் மூலமாக பரவி பற்றி எரிகிறது என்றும் பெரியவர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம். பெரும்பரப்பிலான காடுகள் தீயிட்டு அழிக்கப்படும் போது ஏற்படும்  Haze என்னும் புகைமூட்டப் பிரச்சினை நம்மைப் போன்ற இந்திய மக்களுக்கு ஒரு செய்தி மட்டும் தான். ஆனால் அதனால் வருடாவருடம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏற்படும் தீர்க்கமுடியாத பிரச்சினையாகும்.உலகின் பெரும்பகுதி பசுமை மாறாக்காடுகளை கொண்ட இந்தோனேஷியாவின் சுமத்ரா மாகாண காட்டுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ  தொடர்ந்து எரிந்து வருகிறது. அதனால் உண்டான கருஞ்சாம்பல் புகையானது (Haze) அண்டை நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளை சூழ்ந்து சுற்றுப்புறசூழல் கேட்டை உருவாக்கியுள்ளது. இவற்றில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்  மலேஷியாவும், சிங்கப்பூரும் தான் . 

காற்றில் கலந்துள்ள மாசின் அளவுக் குறியீடு (P.S.I) நூறுக்குள் மேல் போனாலே ஆரோக்கியக்கேடு ஆகும்.  இருநூறை எட்டிவிட்டால் முகமூடி  அணிந்துதான் நடமாட வேண்டும். ஆனால் இந்தோனேசியாவில் தற்போது இந்த குறியீட்டின் அளவு ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இந்த புகை மூட்டப் பிரச்சினையினால் நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு நோய்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த முப்பதாண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முக்கியக் காரணம் காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதுதான். விஷமிகள் தீ வைக்கின்றனர். விவசாயிகள் தீ வைக்கின்றனர். மரக்கடத்தல் மாஃபியாக்கள் தீ வைக்கின்றனர் என்று பலவிதமான காரணங்கள் கூறப்பட்டு வந்த இந்த பிரச்சினைக்கு அனைத்து நாடுகளும் இந்தோனேசியாவையே குற்றம் சாட்டி வந்தன. கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வந்த பின்னும் கட்டுக்குள் வராத இந்த காட்டுத் தீ பிரச்சினைக்கு கடந்த மூன்றாண்டுகளாக இந்தோனேஷியா தகுந்த ஆதாரங்களோடு சிங்கப்பூர், மலேஷியாவை குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளது.


உலகெங்கும் பாமாயில் எனப்படும் பனை எண்ணெயின் தேவை அதிகரித்த போது சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்கள் மலேஷியாவில் இருந்த ரப்பர் தோட்டங்களையும், காடுகளையும் அழித்து எண்ணெய்ப் பனையை பயிரிட்டு லாபம் சம்பாதித்தனர். இடப்பிரச்சினை, உலகளாவிய எண்ணெய் தேவையின் காரணமாக நாடு விட்டு நாடு இந்தோனேஷியாவிற்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்திய இந்த முதலாளிகள் காட்டிய பண ஆசையினால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இந்தோனேஷியாவின் ஏழை விவசாயிகளும், பண்ணை முதலாளிகளும் தங்கள் தோட்டங்களை அழித்தும், காடுகளை ஆக்ரமிப்பு செய்தும் எண்ணெய்ப்பனையை பயிரிட ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே வருடா வருடம் கோடை காலத்தில் இந்தோனேஷியக் காடுகள் சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்களது ஊக்கத்தோடும், ஒத்துழைப்போடும் கொளுத்தப்பட்டு காட்டுத் தீயானது பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது. அதன் காரணமாக எழும் கருஞ்சாம்பல் புகை மூட்டமும் இந்தோனேஷியாவிலும், அண்டை, அயல் நாடுகளிலும் மிகவும் மோசமான காற்றுத் தூய்மை கேட்டை ஏற்படுத்தி மக்களின் உடல்நிலையையும் சீர்குலைக்கிறது என்பது இந்தோனேஷியாவின் குற்றச்சாட்டு.

இந்தோனேசியாவில் எரியும் காட்டுத் தீயை 30 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்நாட்டுத் தேசிய பேரிடர் நிறுவனம், புகைமூட்டம் நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்கும் என்றும் தீப்பிடித்து எரியும் பெரும்பாலான இடங்கள் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளது. எப்படியும் இந்த ஆண்டு இறுதி வரை புகைமூட்டப் பிரச்சினை இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால்  ஏற்பட இருக்கும் தொழில் முடக்கம், உற்பத்தி குறைபாடு, பொருளாதார விளைவுகள் , சுற்றுப்புற சூழல் கேடு, மற்றும் காற்று மாசு படுதலின் காரணமாக மக்களின் உடல் சார்ந்த சுகாதரச் சீர்கேடுகள், நோய்கள் , மருத்துவம் சம்பந்தமாக பல நாடுகளும் தீவிரப்பாதிப்பை அடைய உள்ளன.

காடுகள் இவ்வாறு அழிக்கப்படும் என்று அறிந்தோ என்னவோ இயற்கையானது மலைகளை அரணாகப் படைத்திருந்தது. சமவெளிக்காடுகள் அழிக்கப்பட்டதும் மலை மேல் உள்ள காடுகளுக்கு இடம் பெயர்ந்த விலங்குகளை துரத்தி வந்த மனிதன்  மலைக்காடுகளின் குளுமையையும், இனிமையையும் அனுபவிக்க கோடைக்கால குடியிருப்புகளை உருவாக்கினான். காபி. டீ, ஏலக்காய், ரப்பர் எஸ்டேட்டுகளை உருவாக்கி உற்பத்தி தொழிற்சாலைகளாக ஆக்கி விட்டான். அடர்ந்த காடுகளில் அணைகளைக் கட்டி ஆற்றின் போக்கையும் மாற்றி விட்டான்.

மலை வளமான அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டதால் மழை வளமும் குறைந்தது. ஆற்று நீரோட்டம் கெட்டுப் போய் அவற்றை நம்பி இருக்கும் விலங்குகளும் மனிதர்களும் குடிநீருக்கு திண்டாடும் நிலையும் உருவானது. மேலும் அடிக்கடி மலைப்பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கும் மனிதர்களாகிய நாமும், நமது நடவடிக்கைகளுமே காரணம். சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். ஆனால் கையூட்டு மற்றும் லஞ்சப்பணத்திற்கு ஆசைப்படும் ஒரு சில அரசாங்க அதிகாரிகளாலும், அடிமட்ட ஊழியர்களாலும் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் மிகவும் வருத்தம் தரக்கூடியவை மரக்கடத்தல்களும், வனவிலங்கு வேட்டைகளும் ஆகும்.

ஒழுக்கக்கேடான இப்படிப்பட்ட அரசாங்க ஊழியர்களின் துணை கொண்டு மலைகளும், காடுகளும் ஆக்ரமிக்கப்பட்டு , கட்டப்படும் ரிசார்ட்டுகளால் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான்கள், குரங்குகள் போன்ற மிருகங்களின் வாழ்வாதாரங்களும், வழக்கமான  போக்குவரத்துப் பாதைகளும் சிதைக்கப்பட்டு அவை வழிமாறி உணவிற்காக ஊர்களுக்குள் நுழையும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் இது போன்ற மலைகளில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கச் செல்வோர் காடுகளுக்குள் சட்ட விரோதமாக சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதும், அடர்ந்த காடுகளில் அவர்கள் வீசியெறியும் பிளாஸ்டிக் குப்பைகளை அறியாமல் உண்ணும் வனவிலங்குகள் வயிறு கெட்டு நோய்வாய்ப்பட்டு சாவதும் தொடர்கதையாகவே நடந்து வருகின்றன.

இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பல உலக நாடுகளிலும் கனிம வளங்களுக்காக பல மலைகளில் சுரங்கங்கள் தோண்டப்படுவதும், காடுகள் சூறையாடப் பட்டு வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. காடுகளும், மலைகளும் தொடர்ந்து சிதைக்கபடுவதால் மழைப்பொழிவு குறைந்து உலக வெப்பநிலை உயர்ந்து ஆர்டிக், அண்டார்டிகா, இமயமலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பனிமலைகள் உருகி கடல் நீர் மட்டமும் ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படியே காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்தால் உலக வெப்பநிலை உயர்வின் விளைவாக கடலை ஒட்டியுள்ள பல நகரங்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் நீருக்குள் மூழ்கி காணாமல் போகப்போவது உறுதி என  ஏற்கனவே  அனைத்துலக விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பகிரங்க எச்சரிக்கை விடுத்து விட்டனர்.

 ஒரு சில பணவெறி பிடித்த தொழிலதிபர்களின் பேராசையால் இந்த பூமி தோன்றிய நாள் முதல் உள்ள பசுமைக் காடுகள், அரிய வகை தாவரங்கள், மரங்கள், வன விலங்குகள், பறவைகள் அழிவதையும், சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை கெடுக்கப்பட்டு உலகச் சுகாதாரம் சீர்கேடு அடைவதையும்,  தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றி கடைப்பிடிக்க வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும்  கொண்ட பொது மக்களாகிய நாமும் அரசாங்க முயற்சிகளுக்கு நம்மாலான ஒத்துழைப்பையும், உறுதுணையையும் வழங்குவோம். வருங்கால தலைமுறையும் வசந்தமாக வாழ 'காடு, மலை வளம் காப்போம்' என்ற உறுதிமொழியை உளமாற ஏற்போம்.


நன்றி. வணக்கம்.

--------------------------------------------------------------------------------------------------------

 " காடு, மலை காப்போம்..." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...7 comments:

KILLERGEE Devakottai said...


சமூக நலன் வேண்டி தாங்கள் குறிப்பிட்ட விடயங்கள் அருமை நண்பா போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா...

துபாய் ராஜா said...

// வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி...நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன் //

நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்...

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

சமூக நலன் வேண்டி தாங்கள் குறிப்பிட்ட விடயங்கள் அருமை நண்பா போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா... //

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே....

கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! அழியும் காடுகளைபற்றிய கருத்துக்கள் அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்

காடுகளில்.நல்ல மரங்களை மட்டுமே அழித்துவிடுகிறார்கள்! சுகாதர தீங்கு அதிகம் விளைவிக்கும் "கருவேல "மரங்களை யாரும் கண்டு கொள்வதில்லை! நன்றி

துபாய் ராஜா said...

// கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! அழியும் காடுகளை பற்றிய கருத்துக்கள் அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்

காடுகளில்.நல்ல மரங்களை மட்டுமே அழித்துவிடுகிறார்கள்! சுகாதர தீங்கு அதிகம் விளைவிக்கும் "கருவேல "மரங்களை யாரும் கண்டு கொள்வதில்லை! நன்றி //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி திரு.கரூர் பூபகீதன்.

போட்டி தலைப்புகளுக்காக இன்னும் சில படைப்புகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் கருவேல மரங்களைப் பற்றியும் எழுதுகிறேன். தொடர்ந்து எனது தளத்திற்கு வாருங்கள். பதிவுகளைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. வணக்கம்.

மணிச்சுடர் said...

வனவளமும் மலைவளமும் மனிதவளத்தின் அடிநாதம். அவை காக்கப்பட வலியுறுத்தும் கருத்துகள் கொண்ட கட்டுரை அருமை. வெற்றிபெற வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

// Pavalar Pon.Karuppiah Ponniah said...

வனவளமும் மலைவளமும் மனிதவளத்தின் அடிநாதம். அவை காக்கப்பட வலியுறுத்தும் கருத்துகள் கொண்ட கட்டுரை அருமை. வெற்றிபெற வாழ்த்துகள்.//

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

தொடர்ந்து வாருங்கள். தோழமையோடு ஆதரவு தாருங்கள்.