Sunday, August 30, 2009

கவலையோ கவலை.......

பிறந்தவுடன்
பால் கவலை.
வளர வளர
படிப்பு கவலை.
படித்து முடிந்தால்
வேலை கவலை.
வேலை கிடைத்தால்
நல்ல சம்பளம் கவலை.
சம்பளம் கூடினால்
கல்யாணம் கவலை.
கல்யாணம் முடிந்தால்
பிள்ளை கவலை.
பிள்ளை பிறந்தால்
பேர் வைக்க கவலை.
உடன் வரும்
வீடு கட்ட கவலை.
வீடு கட்டினால்
கடன் அடைக்க கவலை.
கடன் அடைத்தபின்
ஓய்வு கவலை.
ஓய்வுக்கு பின்னும்
ஓயாத கவலை.
மரணம் எப்போது
மனதின் கவலை.
எப்போதுமுண்டு
எல்லோர் மனதிலும்
இறந்தால் மீண்டும்
பிறப்போமா
என்றொரு கவலை.
பிறந்தவுடன்
பால் கவலை.

பதிவிட்டு பழித்திடுவோம்....

தமிழர்தமை
இழிவு செய்து
அழித்திடும்
கயமைதனை
பதிவிட்டு
பழித்திடுவோம்.

உலகின் முக்கிய செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN இல் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவை தொடர்புகொண்டு CNN கேட்ட கேள்விகளால், இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர், இலங்கை அரசாங்கம் பொய்கூறிவருவதாக நேரடியாகவே தாக்கியுள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=29996 என்ற சுட்டிக்கு சென்று CNNன் செய்தி அறிக்கையை பாருங்கள்.

பதிவிட்டு இச்செய்தியை உண்மையின் செவிக்கு உரைத்திடுங்கள்.

Saturday, August 29, 2009

புருவம் திருத்திய பெண்கள்.....பள்ளி, கல்லூரி
புகைவண்டி, பேருந்து
நடைபாதை, கடைவீதி
கோயில், குளம் எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

செய்திதாள், சின்னத்திரை
திரைப்படம், நாட்டியம்
நாடகம் எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

பாவாடை, தாவணி
சேலை, சுரிதார்,
மடிசார், மிடி
மற்றும்
பல ஒய்யார
உடைகள், ஒப்பனை எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

சினிமாவில் கதாநாயகி
தோழிகள், கூட
நடனமாடும் பெண்கள்
கண்ணீர் விட்டழும் அம்மா
தொலைக்காட்சி நாடகத்தில்
வரும் அத்தைகள், சித்திகள்
அனைவரும்
புருவம் திருத்திய பெண்கள்.

வீடுகள், தெருக்கள்
கிராமம், திருவிழாக்கள்
சிறுநகரம், பெருநகரம்
ஆகாயம், பூமி
அனைத்திலும்
புருவம் திருத்திய பெண்கள்.

திருத்தாத நெற்றியுடன்
தென்படுவாரா எவரேனும்
திரும்பிய திசையெல்லாம்
புருவம் திருத்திய பெண்கள்.

இயல்பான நெற்றியுடன்
இருப்பாரா எவரேனும்
எங்கெங்கு காணிணும்
புருவம் திருத்திய பெண்கள்.

உனக்கு ஏனிந்த அக்கறை
யாருக்குமில்லாத அக்கறை
என்று நீங்கள் கேட்கலாம்.

சிறிதே செவிசாய்ப்பீர்
என் சிந்தனைக்கு.

புருவம் திருத்துவதால்
உங்கள் பருவம்
குறைவதாக நீங்கள்
நினைக்கலாம்.

இயற்கையான
அழகு உருவம்
மறைகிறதே என
வருத்தப்படுகிறேன் நான்.

இதற்கு மேலும்
நீங்கள்
ஒத்துக்கொள்ளாமல்
என்னை ஆணியல்வாதி
என்று கூறலாம்.

ஆம் நான்
ஆணியல்வாதிதான்.

ஆணியல்வாதி = ஆண் + இயல் + வாதி = இயல்பான அழகை ரசிக்கும் ஆண்.


Friday, August 28, 2009

நட்பிற்கு நன்றிகளும்,முதல் விருதும்.......

நல்லதொரு தகவல். நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த நண்பர் திரு.செந்தில் நாதன் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார். உலகம் முழுதும் இருந்து தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக நடந்து திரு.செந்தில் நாதன் முழுமையாக குணமடைந்திட உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் தொடர்ந்திடுங்கள்.

இதுவரை எல்லாம் இனிதாக நடந்தது.இனி நடப்பவையும் எளிதாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

இன்னுமொரு இனிய செய்தி: நண்பர் திரு.கடையம் ஆனந்த் அன்புடன் சுவையான பதிவர் விருது (Scrumptious Blog Award) கொடுத்துள்ளார்.

வலையுலகம் வந்து வாங்கிய முதல் விருது என்பதால் மகிழ்ச்சியையும், இன்னும் சுவையாக பலபதிவுகள் இடவேண்டும் என்ற ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. நன்றி திரு.ஆனந்த்.

விருது விதிகளின்படி எனக்கு கிடைத்துள்ள இந்த விருதினை இன்னும் பத்து பேருக்கு கொடுத்து சிறப்பிக்கவேண்டுமாம். நான் விருது கொடுக்க விரும்பும் நண்பர்கள்.

1. 'காதல் மழை' லோகு
2. டக்ளஸ்
3. ஜாக்கி சேகர்
4. ரசிகை
5. விக்னேஷ்வரி
6. சந்தோஷ்
7. இரும்புத்திரை அரவிந்த்
8. கானா பிரபா
9. சி.கருணாகரசு
10. திரு.கலாப்ரியா

மற்றும் பல நண்பர்களுக்கும் கொடுக்க ஆசைதான். அடுத்து வரும் விருதுகளை விடுபட்டவருக்கு வழங்கி சிறப்பிப்பேன்.

நன்றி. வணக்கம்.Thursday, August 27, 2009

செந்தில்,செந்தில்........

நண்பர் பதிவர் செந்தில்நாதனுக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் VAD Fixing அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இணையப்பதிவர் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்.
நட்பின்
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.

--------------------------------

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.

----------------------------------

எல்லோர் இதயமும்
‘லப் டப்’ ‘லப் டப்’
என்றே துடிக்கும்.
இணையத்தமிழ்பதிவர்
இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’
என்றே துடிக்கும்.

Tuesday, August 25, 2009

வெளிப்பா(ட்)டுஇயலாமையின்
முதல்கட்ட
வெளிப்பாடு
எரிச்சல்.

இரண்டாம் கட்டம்
கோபம்.

மூன்றாம் கட்டம்
அழுகை.

இறுதிக்கட்டம்
(தற்)கொலை.

முடிவை மாற்றி
முன்னேற்றம்
தரும்
முக்கிய கட்டம்
முயற்சி.

Monday, August 24, 2009

இருக்கும் இடத்திலிருந்து ஒரு கூட்டுப்பிரார்த்தனை....அன்பு நண்பர்களே, நண்பர் திரு.செந்தில்நாதனின் இதய அறுவை சிகிச்சைக்காக பதிவர் உலகமே ஒன்றுகூடினோம்.


வருகிற வியாழக்கிழமை அன்று (27 Aug 2009) திரு.செந்தில்நாதனுக்கு VAD (Ventricular Assist Device) அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறி நமது செந்தில்நாதன் மீண்டும் முழு தெம்புடன் நலமுடன் வாழவும் நாம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். இனம், மதம் கடந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றுமே பலன் உண்டு. அந்த நம்பிக்கையில் நாமும் பிரார்த்திப்போம். உதவிக்காக ஒன்றிணைந்தது போலவே பிரார்த்திக்கவும் ஒன்றிணைவோம். .


அறுவை சிகிச்சை விபரம்:

நாள்: 27 ஆகஸ்ட் 2009


நேரம்: காலை எட்டு மணி சிங்கப்பூர் நேரம்(இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணி)


சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம்: ஏழு மணி நேரங்கள்.


நண்பர்கள் அனைவரையும் சிகிச்சை நடக்கும் நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் இணையும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Sunday, August 23, 2009

பிள்ளையார்,பிள்ளையார்,பெருமை வாய்ந்த பிள்ளையார்..

ஐந்து கரத்தனை

யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை

ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. ..எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையாரை வணங்கிட்டு தொடங்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அப்படிப்பட்ட பிள்ளையாரின் பிறந்தநாள் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் பற்றிதான் இந்த பதிவு.

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம் பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

*உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். *கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். * தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.*திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். *உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.*வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.*நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.'*பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

காட்டிக் கொடுத்த விநாயகர் : காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும்.

தொப்பையப்பனுக்கு தோப்புக்கரணம் : ""அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே'' என்று இவர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடுவது என்பது நம் மரபு. ஏன் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும் என்பதற்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஓடியது என்பதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழு கொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.

கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். மற்றொரு கதையும் இதற்கு காரணமாக உள்ளது.கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி? சதுர்த்தியன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக் கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியைப் பரப்பி, அதில் விநாயகப்பெருமானின் சிலையை வைக்க வேண்டும். விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல்,பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான "சீதக்களப' எனத் தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனைப் பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.

உருவகத்தின் உன்னதம் விநாயகர் : உருவத்திற்கு உட்படுத்த முடியாத கடவுளான விநாயகர் பக்தர்களின் நலனுக்காக அற்புத வடிவம் தாங்கி நிற்கிறார். கணம் என்பது ஒரு குழுவைக் குறிக்கும். இந்த பிரபஞ்சமே அணுக்கள் மற்றும் வெவ்வேறு ஆற்றலின் கூட்டம்தான். வெவ்வேறு விதமான இந்த கூட்டங்களை நெறிப்படுத்த மேலான ஒரு விதிமுறை இல்லாவிட்டால் பிரபஞ்சமே குழப்பத்தில் ஆழ்ந்து விடும் . இந்த அணுக்கள் மற்றும் ஆற்றல் கூட்டத்தின் தலைவர் தான் கணேசர். அந்த மேலான சக்திதான் அனைத்திலும் வியாபித்திருந்து உலகத்தை ஒழுங்குபடுத்துகிறது. கணேசர் குறித்த தத்துவத்தை ஆதி சங்கரர் மிக அழகாக எடுத்துரைக்கிறார்.

யானைமுகம் கொண்ட கடவுளாக கணேசர் குறிக்கப்பட்டாலும் கூட அவர் உருவங்களை கடந்த பரம்பொருள் அவர் ""அஜம் நிர்விகல்பம் நிராகாரமேகம்''. அதாவது கணேசர் பிறப்பில்லாதவர் (அஜம்), குணபேதமற்றவர் (நிர்விகல்பம்) மற்றும் உருவமற்றவர் (நிராகாரம்) அவர் எங்கும் வியாபித்திருக்கும் பிரக்ஞையின் உருவகம். இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியதோ, எங்கே ஒடுங்குகிறதோ அந்த ஆதார சக்திதான் விநாயகர்.யானையின் பெருந்தலை அதன் ஞானத்தையும் அறிவையும் குறிக்கும். யானை தடைகளை கண்டு விலகிச் செல்லாது. அவற்றை உடைத் தெறிந்து சர்வ சாதாரணமாய் முன்னேறக் கூடியது. ஆகவே நாம் விநாயகரை துதிக்கும்போது யானையின் நற்குணங்கள் நம்மிலும் தூண்டப்படுகின்றன. விநாயகரின் பெரு வயிறு பெருந்தன்மையையும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது.

விநாயகரின் தூக்கிய திருக்கரம் ""அஞ்சாதே - நான் உனக்கு அபயம் அளிக்கிறேன்'' என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. வெளிப்புறமாக கீழ் நோக்கி இருக்கும் திருக்கரங்கள், முடிவற்ற வரங்கள் தருவதையும், பணிந்து நட என்பதையும் உண்ர்த்துகின்றன. விநாயகரின் ஒற்றைத் தந்தம் வாழ்வில் ஒரே குறிக்கோள் தேவை என்பதை தெளிவாக்குகிறது. அவர் கையில் இருக்கும் ஆயுதங்களான அங்குசம் மற்றும் பாசம் ஆகியவை முறையே விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டின் அவசியத்தை தெரிவிக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத விழிப்புணர்வால் எந்தவித பயனும் இல்லை. யானைத் தலையை உடைய விநாயகர் பயணம் செய்ய ஏன் இத்தனை சிறிய சுண்டெலி? இது ஒரு முரண்பாடு அல்லவா? இதிலும் ஒரு பெரிய தத்துவம் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. எப்படி சுண்டெலி வலைகளை அறுத்து விடுகிறதோ. அதேபோல் அடுக்கடுக்கான அறியாமைகளினால் பின்னப்பட்ட வலையை மந்திர சக்தி மூலம் நாம் அறுத்து விட்டால் விநாயகரால் வெளிப்படுத்தப்படும் ஞானத்தை உணருவோம். இந்த ஞானத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நாம் கொண்டாடுவோம்.

கணபதி பஞ்சாயதனம் : பிள்ளையார்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப் பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

உத்திராடத்திற்கு உகந்தவர் : தைத்திரீய ஆரண்யகத்தில் இறைவனைக் குறிக்குமிடத்தில் "தந்தின்' என்று வருகின்றது. இது தந்தத்தை உடைய விநாயகரைக் குறிக்கும். இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதில் உத்திராட நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை விநாயகப் பெருமான் ஆவார்.

அருள் தரும் ஆவணிமாதம் : ஆவணி மாதம் மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் முதல் மாதமாகும். ஏனென்றால் இம்மாதத்தில் தான் முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் நவக்கிரக நாயகரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுவது குறிப்பிடத்தக்கது.

விநாயகருக்கான விரதங்கள்:

விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் பதினொன்று.

1. வெள்ளிக்கிழமை விரதம்

2. செவ்வாய்க்கிழமை விரதம்

3. சதுர்த்தி விரதம்

4. குமார சஷ்டி விரதம்

5. துருவ கணபதி விரதம்

6. சித்தி விநாயகர் விரதம்

7. துர்வாஷ்டமி விரதம்

8. நவராத்திரி விரதம்

9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்

10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்

11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதமே மிகவும் முக்கியமானதாகும்.

மூல முதற்பொருள் : நம் வழிபாட்டில் எத்தனையோ கடவுள்கள் இருப்பினும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை,அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இப்பெருமானுக்கு வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவரும் இந்த ஐங்கரத்து ஆனைமுகப் பெருமான் தான்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் : பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர்.

நலம் தரும் நவக்கிரக விநாயகர் : ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக,பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.


விநாயகர் கற்ற பாடம் : பால கணபதியின் முன் பூனையொன்று வந்தது. அதைத் துரத்திப் பிடித்து விளையாடினார். அப்போது பூனையின் முகத்தில் காயம் ஒன்று உண்டானது. விளையாட்டுக் கவனத்தில் விநாயகர் அதனைக் கவனிக்கவில்லை. பின்னர், தன் தாய் உமையவளிடம் சென்று அமர்ந்தார். தாயின் முகத்தில் சிறுகீறல் இருப்பதைக் கண்ட விநாயகர், ""அம்மா! கன்னத்தில் என்ன காயம்!'' என்று வாஞ்சையோடு கேட்டார். ""அதுவா! நீ தானப்பா காரணம்!'' என்று தன் பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டாள் அம்பிகை. விநாயகர், ""நான் ஒன்றும் செய்யவில்லையே,'' என்றார். தேவி தன் பிள்ளையிடம், ""நீ பூனையிடம் விளையாடும் போது நகக்கீறல் பட்டு காயம் உண்டானது,'' என்றாள்.

விநாயகப்பெருமானுக்குத் தேவி சொல்லிய இந்த அறிவுரை உலகவுயிர்கள் அனைத்தும் கடவுளின் வடிவமே என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Friday, August 21, 2009

50-வது பதிவு - பாசம் நிறைந்த பதிவுலகம்
எனது இந்த 50-வது பதிவை நட்பை பெருக்கும் பதிவுலகிற்கும்,பதிவுலக நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

அலுவலக காரியங்களுக்காகவும், நண்பர்கள் தொடர்பிற்காகவும் பல ஆண்டுகளாக இணையத்தை பயன்படுத்தி வந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் 2005ல் தான் தமிழ்மணம் அறிமுகமாயிற்று. அயல்நாட்டில் இருப்பதால் நாளிதழ்களில் செய்திகள் படிப்பது, சாட்டிங், மெயில் ஃபார்வர்டு செய்வது என்று அலுத்துப்போய் இருந்த நேரத்தில் பலவிதமான பகிர்வுகள் நிறைந்த பதிவுலகம் இனிதே ஈர்த்தது.

முதலில் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் பின் அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தேன். அனானி ஆப்சனிலும் கீழே எனது பெயர் குறிப்பிட்டே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். பல நண்பர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் மூலம் ஈ கலப்பை பற்றி அறிந்து தரவிறக்கம் செய்து தமிழிலே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன்.

நட்பு வளையம் பெருகியது. பின் தனியே இந்த வலைப்பூவையும் 2006ல் பதிவுலக நண்பர்கள் மூலம் உருவாக்கி பதிவுகள் இட ஆரம்பித்தேன்.

தமிழ்மணத்திற்கு வந்த நேரம் எனது திருமணமும் இனிதே முடிந்தது. வாழ்த்துக்களும் குவிந்தன. பல நாடுகளிலிருந்தும் முன்பின் சந்தித்திராத பதிவுலக நண்பர்கள் அலைபேசியில் அழைத்து நெகிழ வைத்துவிட்டனர்.

கால சுழற்சியால் பணியிடம் மாறி நாடுகள் பல சென்று பதிவுகள் இடமுடியாமல் போனாலும் பதிவுலக நண்பர்கள் தொடர்பு விட்டுப் போகவில்லை. அன்பு நண்பர்கள் மூலமே மறுபடியும் பதிவிட வந்தேன்.

சில நூறுகளில் இருந்த பதிவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருப்பது, எழுத்தார்வத்தை ஊக்குவிக்க பல பயிற்சி பட்டறைகள், சிறுகதைப் போட்டிகள், பல நாடுகளிலும் நடக்கும் பதிவர் சந்திப்புகள் போன்றவை மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள்.

பதிவுலக உறவுகள் சந்தோசத்திலும், துக்கத்திலும் சரிசமமாக பங்குகொண்டு வருவதற்கு எத்தனையோ சான்றுகள். சமீபத்திய சிறந்த உதாரணம் நண்பர் செந்தில்நாதனின் இருதய அறுவை சிகிச்சைக்காக, உயிர் காப்பான் தோழன் என பதிவுலகமே ஓரணியில் திரண்டது. எனது பங்களிப்பையும் சேர்த்து விட்டேன். நண்பர்களும் தொடர்ந்து உதவி வருகிறார்கள். உங்களாலும், நண்பர்களாலும் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள்.

எனதிந்த வலைப்பூ உருவாக உதவிய நண்பர்கள், தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமும், ஆக்கமும் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.

இணையதளத்தில் இனிய உலகம் உருவாக்குவோம்.

பதிவுலகை பாசம் நிறைந்தது ஆக்குவோம்.


Thursday, August 20, 2009

தூரமே காதலைப் பெருக்கும் !தூரமே
காதலைப்
பெருக்கும் !

என் அன்பே !!

இந்த
உண்மையை
இன்னும்
எத்தனை
நாள்தான்
என் மனம்
பொறுக்கும் !!!
காலையிலும்
மாலையிலும்
மற்றும்
மதியத்திலும்
ஏதாவது
எழுதிக்கொண்டே
இருக்கிறேன்.

இரவில்
என் கனவில்
நீ
வரும்பொழுது
எப்படியெல்லாம்
பேசவேண்டும்
என்பதற்காக.பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்.


Wednesday, August 19, 2009

நோக்கியா


அண்ணலும்
நோக்கினான் !.

அவளும்
நோக்கினாள் !!.

அடித்து
நொறுக்க
அப்பனும்
நோக்கினான் !!!.

Tuesday, August 18, 2009

காதல் அகராதி...
காதல் அகராதியில்

“டா”
என்றால்
டார்லிங்.


டி”
என்றால்
டியர்.


என்றேன்
ஒருநாள்
உன்னிடம்...


சரி”டா”
என்றாய்.

சட்டென
நீ
என்னிடம்...


Sunday, August 16, 2009

அதிசய 'மனித' மீன்

இன்றைய நாளிதழில் படித்த செய்தி.


தூத்துக்குடி : தூத்துக்குடி மீனவர் வலையில், மனிதர்களின் கை, கால்களைப் போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது. தூத்துக்குடி, மாதவ நாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அவர், நேற்று முன்தினம் மாலை திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் கண்,வாய்,மூக்கு,நெற்றி, தலை அமைப்புடன் இரு முன் துடுப்புகள் கைகளைப் போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப் போலவும் இருந்தன. இரண்டு கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன், ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்த மீன் எனக் கண்டறிய, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 14, 2009

சுதந்திரதின வாழ்த்துக்கள்

எல்லோருக்கும்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்.


பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்.

ஜெய்ஹிந்த்.

Wednesday, August 12, 2009

நயன்தாரா கவிதைகள்

நயன்தாரா = நயனம் + தாரா = அழகான கண்கள் கொண்ட பெண்.

போன வாரம் நம்மளோட நமீதா கவிதைகள் படித்த நண்பர் டக்ளஸ் நயன்தாரா கவிதைகள் வேணும்னு அன்பாக கேட்டிருந்தார். இதோ
அழகான கண்கள் பற்றி சில கவிதைகள்.
காதலுக்கு
கண்ணில்லையாம்....

வா அன்பே...

கைப்பிடித்து
அழைத்து
செல்வோம்
நாமிருவரும்....

நீ
'காந்தக்கன்னி'யா
இல்லை
'காந்தக்கண்ணி'யா
என
உன்னைக்
காணும்போதெல்லாம்
என் மனம்
கருத்து விவாதம்
நடத்துகிறது.

கண்ணால்
தொடுத்தாய்
கணையே.

அத்தோடு
முடிந்தது
என்
கதையே.
இருகண்ணால்
எய்தாய்
அஸ்திரம்.

புதிதாய்
தொடங்கியது
என்
சரித்திரம்.

Tuesday, August 11, 2009

எங்க ஊரு பாட்டுக்காரிகள்.....


ரெண்டு வருஷம் முன்னாடி கோபாலசமுத்திரம் அம்மன் கோயில் கொடைக்கு போயிருந்தேன். எங்க அம்மா ஊர்.

அகன்ற ஆறும், குளமும், வயல்களுமாய் அழகாக இருந்த ஊர். இப்போது ஆற்று மண் முழுதும் அள்ளப்பட்டு, கரையெல்லாம் வயல்களாய் திருத்தப்பட்டு, அகோரமாய் ஆக்ரமிக்கப்பட்டு, அடையாளம் இழந்து ஆற்றின் ஓட்டமே மாறிப் போய் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. 

சிறுவயதில் கோடை விடுமுறைக்கும், கோயில் கொடைகளுக்கும் தவறாமல் சென்று விடுவோம். பின் படிப்பு, வேலை என வாழ்க்கையில் மாற்றங்கள் வர வர செல்லமுடியாத சூழ்நிலை. தாத்தா கொடைக்கு அனைவரும் வரும்படி வருடாவருடம் கடிதம் அனுப்பிவிடுவார். பல வருடங்களுக்கு பின் திடீரென கிளம்பி சென்றேன்.

நான் சென்ற நேரம் இருட்டிவிட்டது. என்னைப் பார்த்ததில் அனைவருக்கும் சந்தோசம். கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்து சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரவு பாட்டுக்கச்சேரி என்றார்கள். வருடாவருடம் ஏதாவது நல்ல இசைக்குழுவை அழைத்து வந்து பாட்டுக்கச்சேரி வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். அக்கம்பக்க ஊர்களில் இருந்தெல்லாம் கச்சேரி பார்க்க வருவார்கள். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.

கச்சேரி ஆரம்பிக்க எப்படியும் இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் என்பதால் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சின்னத்தாத்தா மகன் கோபாலு மாமா இரண்டு இளம்பெண்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

எங்கள் பாட்டி, “எய்யா கோபாலு, யாருய்யா இவ்வொ ரெண்டு பேரும்” என்று கேட்க, “கச்சேரிக்கு பாடவந்தவங்க. சுத்தமல்லி விலக்குல வீடு. நான் அங்க வாடகைக்கு இருக்கும் போது பக்கத்து வீடு. நல்ல பழக்கம். கச்சேரி ஆரம்பிக்க நேரம் ஆகும். சீக்கிரம் வந்துட்டாங்க. அதான் இங்க கூட்டியாந்தேன் பெரியம்மா” என குழறி, குழறி சொன்னார்.

அவர் ஏற்கனவே ‘கச்சேரி’ முடித்துவிட்டு வந்திருந்தார். ”இவங்க இங்க இருக்கட்டும். நா இப்போ வாரேன்”.என்று கூறிவிட்டு விட்ட கச்சேரியை தொடரச் சென்று விட்டார்.

பாட்டி இருவரையும் அவர்கள் அருகே கட்டிலில் உட்கார வைத்து ‘பழக்கம்’ பேச ஆரம்பித்துவிட்டார். இருவருக்கும் 23 முதல் 25 வயதுக்குள் தான் இருக்கும். கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை. ஒருவர் நல்ல நிறமாக கொஞ்சம் குண்டாக இருந்தார். இன்னொருவர் கொஞ்சம் உயரம், கலர் கம்மி. இருவருமே கண்கூசும் நிறங்களில் சுரிதார் அணிந்து பயங்கர மேக்கப்போடு இருந்தார்கள். அப்போதுதான் மேடையில் இருக்கும்போது தூரத்தில் இருந்து பார்த்தால்கூட தெரியும் என பாட்டியிடம் காரணம் கூறினார்கள்.

பாட்டி அவர்களிடம் பழக்கம் விடுவதை கவனித்தபடி நாங்கள் அனைவரும் அடுத்த அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தோம். சினிமாவில் கண்பிப்பது போல கால்மணி, அரைமணி என நேரம் கடந்தவாறே இருந்தது. அவர்களூம் அவ்வப்போது கைப்பையில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து, எடுத்து பார்த்து மேக்கப்பை சரி செய்துகொண்டிருந்தார்கள். ”ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகன்னு” அவ்வப்போது ‘பந்தா’ வேறு. இப்படியாக ஒன்றரை மணிநேரம் கடந்துவிட்டது. கச்சேரிக்கும் நேரம் ஆகிவிட்டது. கோபாலு மாமா வரவேயில்லை.

அவர்களிடம் பேசிப் பேசி பாட்டியே களைத்துவிட்டார். ”வீட்ல என்ன சாப்பிட்டு வந்திய ரெண்டு பேரும்” என்று கேட்டார். மாலையே வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாகவும், வீட்டிற்கு சாப்பிட வாருங்கள் என்று கூறித்தான் கோபால் அழைத்து வந்ததாகவும் அவர்கள் சொன்னதைக் கேட்டு பாட்டிக்கு மிகவும் பரிதாபமாகி விட்டது. ”அடடா அவன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா நான் கடைக்கு யாரையாவது அனுப்பிச்சு உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பேனே” என அங்கலாய்த்தார். அந்த பெண்களும் “பரவால்லை பாட்டி நேரம் ஆயிட்டுது. நாங்க கிளம்பறோம்” என்று மறுத்தவாறு இருந்தார்கள். பாட்டிக்கோ மனதே கேட்கவில்லை. ”நாங்க சந்தோசமா இருக்க பாட வந்துட்டு நீங்க சாப்பிடாம இருக்கிறதா” என வருத்தப்பட்டார்.

மறுகால் பஜாருக்கு ஆளனுப்பி ஏதாவது வாங்கி வருவதற்குள் கச்சேரி தொடங்கிவிடும். என்ற சூழ்நிலை. ”கடாச்சோறு” காலியாயிட்டு. வீட்டுல பழையதுதான் இருக்கு. சாப்பிடுதியளா” என பாட்டி கேட்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி “சரி,கொஞ்சமா கொடுங்க” என்றனர். பழைய கறியும், சோறும் இலையில் வைத்து பரிமாறினார் பாட்டி. நல்ல பசி போல. இருவரும் பரபரவென்று சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து வீட்டில் இருந்த பழையது, சுண்டக்கறி எல்லாவற்றையுமே பாட்டி அவர்களுக்கு பரிமாறிவிட்டார்.

நல்ல திருப்தியாக சாப்பிட்டு முடித்து நன்றி கூறி கச்சேரிக்கு பாடச்சென்றனர்.

மாமா பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு.”எப்படி பந்தா விட்டுட்டு இருந்தாளுங்க. இப்ப பழையதை வெளுத்துக் கட்டுதாள்வுளேன்னு” அவர்களுக்குள் கிண்டல் பண்ணி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

கச்சேரியும் நன்றாகத்தான் இருந்தது. அந்தப்பெண்களும் மோசம் என்ற சொல்லமுடியாத அளவிற்கு ஓரளவு நன்றாகவே பாடினார்கள்.

மறுநாள் வீட்டுக்கு வந்த உறவினர்களெல்லாம் “கச்சேரி நல்லாயிருந்தது” என்று பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது “அதுக்கு பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் தான் காரணம்” என்று கூறி குறும்பாகச் சிரித்தனர் மாமா பிள்ளைகள்.


Monday, August 10, 2009

கடிகாரங்களில் 10:10 அமைப்புமுறை ஏன் ??!!.....

நாம் புதிதாக கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் வாங்க எந்த கடைக்கு சென்றாலும் எல்லாக்கடிகாரங்களூம் 10:10 என்ற நிலையிலே பார்வைக்கு வைத்திருப்பர் மற்றும் விளம்பரங்களிலும் அவ்வாறே இருப்பது ஏன் என்று பலமுறை யோசித்திருக்கிறோம்.

இதற்கு சொல்லப்படும் சில காரணங்கள்.
  • திரு.ஆபிரகாம்லிங்கன்,திரு.கென்னடி மற்றும் திரு.மார்ட்டின் கிங் லூதர் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம் என்பர்.ஆனால் உண்மையாக திரு.லிங்கன் சுடப்பட்டது இரவு 10 மணி 15 நிமிடத்திற்கு இறந்ததோ மறுநாள் காலை 7 மணி 22 நிமிடத்திற்கு. திரு.கென்னடி சுடப்பட்டது மதியம் 12 மணி 30 நிமிடத்திற்கு. திரு.லூதர் மாலை 6 மணி 1 நிமிடத்திற்கு சுடப்பட்டு இரவு 7 மணி 5 நிமிடத்திற்கு இறந்தார்.

    . நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நேரம் என்பதால் அந்த நாசகார நேரத்தின் நினைவாக என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் சின்னப்பையன் வீசப்பட்டது காலை 8 மணி 15 நிமிடத்திற்கு.‘குண்டுப்பையன்’ வீசப்பட்டது காலை 11 மணீ 2 நிமிடத்திற்கு.எனவே இதுவும் உண்மையில்லை.
உண்மையான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. 10:10 அமைப்பு முறை எளிவான,தெளிவான விதத்தில் வாடிக்கையாளர் கவனத்தை கவர்கிறது.

2. இருமுட்களும் ஒரே நேர்கோட்டு பார்வையில் தெரிகிறது.

3. கடிகாரத்தின் மத்தியில் இருக்கும் உற்பத்தி நிறுவனத்தின் முத்திரை தெளிவாக தெரிகிறது.

4. வழக்கமாக தேதி மற்றும் கிழமை தெரியும் அமைப்பு முறையே 3,6 அல்லது 9 ன் அருகில் இருக்கும்.அவையும் 10:10 அமைப்பில் மறைக்கப்படாது தெளிவாக தெரியும்.

செய்தியாக நான் படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தமிழ்படுத்தி பதிவாக இட்டுள்ளேன்.

நான் படித்த செய்தியின் சுட்டி
http://blogs.static.mentalfloss.com/blogs/archives/30391.html.

இதுகுறித்து வேறு ஏதும் தகவல்கள் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்.

Saturday, August 08, 2009

வீக் எண்ட் ஸ்பெசல் - 'நமீதா' கவிதைகள்

தொடர்ந்து காதல் கவிதைகளாக எழுதியாச்சு. வார இறுதியில் பிரமாண்டமா ஏதாவது எழுதலாம்னு நினைத்தேன். 'பிரமாண்டம்'னாலே 'நமீதா'தான் தான்னு எல்லோருக்கும் தெரியும். எழுதிட்டேன்.படித்து கருத்து சொல்லுங்கள். வரவேற்பை பொறுத்து வாராவாரம் தொடரும்.


அறிவியல்
மாற்றங்கள்
ஏற்பட
ஆயிரம்
காரணம்.

ஆண்கள்
மனது

அதிரடியாய்
மாறிட
ஏற்பட
அழகி
நீயே
காரணம்.
------------------------------------------


அமாவாசை
இரவன்று
அழகி
நீ
வெளிவந்தால்
பவுர்ணமி
என்றே
பலரும்
குழம்பி
போகிறார்

-----------------------------------------------

Thursday, August 06, 2009

தொடக்கப்பள்ளி


திரு,ராஜாராம் அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு பள்ளியின் புகைப்படம் கொடுத்து கவிதை போட்டிக்கு அழைத்திருந்தார்.

எண்ணத்தில் தோன்றியவற்றை உடனே எழுதி பதிவிட்டேன்.

நல்லதொரு சிந்தனையை தூண்டிய நண்பருக்கு நன்றி.


-----------------------------------


உயிரினம்
மெய்யினம்
என்னுயிர்
படித்தது
இங்கினம்.


------------------------------------------


ஓரொண்ணு ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
உன் நினைவு
எப்போதும்
எனக்குண்டு.


---------------------------------------------

நான்
படித்த
பள்ளி
விட்டு
சென்றேன்
ரொம்ப
தள்ளி.


---------------------------------------------

ஏற்றி
விட்ட
ஏணி.

ஊர்
கடக்க
உதவிய
தோணி.

இடிக்கும்
முன்
பார்க்க
வா நீ.


---------------------------------------------------

Wednesday, August 05, 2009

க(ன்)னி ருசிஒவ்வொரு
கனிக்கும்
தனி
ருசி.

கன்னி
உன்னிடத்தில்
கண்டேன்
நான்
பலகனி
ருசி.


---------------------------------

மா
பலா
வாழை

மணமெல்லாம்
வீசுது
உன் சேலை.

-------------------------------------

முக்கனிச்சுவையும்
முந்தமுடியாது
நீ தந்த
முத்தச்சுவை
முன்னே.


Tuesday, August 04, 2009

அழகு பூதம்
பஞ்சமாபூதங்கள்
இந்த உலகில்
உண்டாக்கிய
பாதிப்புகளை
விட
அழகுபூதம்
நீ
என்னுள்
ஏற்படுத்திய
அதிர்வுகள்
ஏராளம்
.

-------------------

பிசாசுச்சேட்டைகள்
தெரியாதவனாய்
இருந்தேன்.

காதல்பேய்
நீ
கண்ணில்
படும்வரை.

-----------------------

மோகினிகள்
இரவில்
மட்டுமே
தெரியுமாம்.

படுபாவி நீ
பகலிலும்
வருகிறாயே ??!!.


Monday, August 03, 2009

படைப்பாளிகள்

சென்ற
நூற்றாண்டின்
சிறந்த
படைப்பாளிகள்
யாரென்று
கேட்டால்
உன்
பெற்றோர்
பெயர்களைத்தான்
கூறுவேன்
நான்.

Saturday, August 01, 2009

நாளை நண்பர்கள் தினம்.

உலகெங்கும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய மனம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Give thousand chances to your enemy to become your friend, But don't give a single chance to your friend to become your enemy.
' F - Few
R - Relations
I - In
E - Earth
N - Never
D - Die'


பெற்ற நட்பை பேணிக்காப்போம்.
வாழ்த்துக்கள்.