Saturday, November 03, 2018

நீர் இருக்கும். மோர் இருக்காது



ஓங்கு சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்தது முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், பக்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள்  என பல தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து விட்டது. அனுதினமும் ஆட்கள் வர, வர நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள்  கேட்டு விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.

பூதகணங்கள் அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர் உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம் முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு பாஷை எனக்கு தெரியாதே. மேலும் உமா-மகேஷ்வரர் ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனேஎன்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த வேண்டாம் அகத்தியரே, தென்தேச மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.

அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில் நீராடி, புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து, எம்பெருமான் ஈசன் அருளால் வானுயரம் கொண்டு வழி மறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி,  வாதாபி போன்ற அசுரர்களை வதம் செய்து, மேலும் பல திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்சங்கம் கடந்து, திருச்செந்தூர் கடலில் நீராடி தமிழ்க்கடவுள் திருமுருகனையும் தரிசித்து நெல்லைச் சீமை வந்து நெல்லையப்பரை தரிசித்தவாறு, நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போன வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர் அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

இப்படியாக அம்பை, கல்லிடை நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை நோக்கிப் போன அகத்தியருக்கு திடீரென தாகம் எடுக்க, கமண்டல நீரும் காலியாகி விட்ட படியால் சுற்றும், முற்றும் பார்த்தார். சிங்கம்பட்டி ஊரெங்கும் பச்சைப் பசேலென பயிர் பல விளைந்து, வயல்களுக்கு இடையே அங்கங்கே குடில் அமைத்து காவலுக்கு ஆள் அமர்ந்திருந்தனர். இப்போது போல் நெருக்கமாக அல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே அப்போது சிங்கம்பட்டியில் வீடுகள் இருந்தன.

அகத்தியர் நின்ற இடத்தின் அருகில் இருந்த வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பெருமா கிழவி. வயது எண்பது தாண்டி விட்டாலும், பிள்ளைகள், பேரன்களுக்கு உதவியாக அதிகாலையிலே எழுந்து, தொழுவம் சுத்தப்படுத்தி, பசு மாடுகள் அவிழ்த்து கட்டி, கன்றுகளுக்கு விட்டு பால் கறந்து, பின் அவற்றிற்கு நீர் காட்டி, தேவையான தீவனம் வைத்து, முந்தின நாள் உறை ஊற்றிய தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது என சுறுசுறுப்பாக இருப்பார். வீட்டில் உள்ள ஆண், பெண் அனைவரும் காலையில் கஞ்சி எடுத்து கொண்டு வயல் வேலைகளுக்கு சென்றால் பின் இருட்டும் நேரம்தான் வீடு திரும்புவார். பெருமா கிழவி வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் குழந்தைகளுக்கு காவலாக இருந்து பார்த்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் உச்சி நேரத்தில் வீட்டு வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்து தயிர் கடைந்து, மோர் தனியாக, வெண்ணை தனியாக பிரித்துக் கொண்டு இருக்கும்போதுதான் அகத்தியர் வந்து அருகில் நின்றார்.

சிங்கம்பட்டி செழிப்பான ஊர் என்பதால் விளைந்த தானியங்களை விற்றது போக வீடுகள்தோறும் பத்திரப்படுத்தி வைத்து இருப்பர். அவற்றை திருடுவதற்கும், கொள்ளைக் கூட்ட்த்திற்கு உளவு பார்க்கவும் அவ்வப்போது ஊருக்குள் அன்னியர் பலவிதமான வேடங்கள் அணிந்து வந்து செல்வர். எனவே பெரும்பாலான சிங்கம்பட்டி மக்கள் அவரவர் வீடு, வயல்கள் காவலுக்கும், கொள்ளையர்கள் ந்தால் குரைத்து விரட்டவும் வீடுதோறும் வேட்டை நாய்களும் வளர்ந்து வந்தனர். ஆனால் அகத்தியரின் தபவலிமை உணர்ந்த பெருமா  கிழவி வீட்டு நாய்கள் சீறிக் குலைக்காமல், வாலைக் குழைத்தவாறு அவரது காலைச் சுற்றி, சுற்றி வந்தன.

“தாயே, தாயே” என்று அழைத்தவாறு தன் அருகில் வந்து நின்ற அகத்தியரை நிமிர்ந்து பார்த்த கிழவி தன் வீட்டு நாய்களும் அவர் அருகே மயங்கி நிற்பது கண்டு, கொள்ளைக் கூட்ட உளவாளி தான் சன்னியாசி வேடமணிந்து ஊருக்குள் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டு, “என்ன வேண்டும்” என்றார். தயிர் கடைந்து கொண்டு இருந்த கிழவி அருகில் மோர்க் குடம் நிரம்பி வழிந்து கொண்டு இருப்பதைக் கண்ட அகத்தியர், “தாகமாக இருக்கிறது. மோர் அருந்த தந்தால் குடித்து தாகம் நீங்குவேன்” என்று கேட்க வெகுண்ட கிழவி, “ ஊர் முழுக்க ஓடையெல்லாம் தண்ணீர் போகுது. உமக்கு குடிக்க மோர் வேணுமா… ஆறு நிறைய போற தண்ணீரை ஆசை தீர அள்ளி குடிக்காமல் மோர் வேணும். தயிர் வேணும்ன்னு வீடேறி வந்து விருப்பமாய் கேட்பீரோ.. என்றதோடு நிறுத்தாமல் கிராமத்து கிழவிகளுக்குரிய இன்னும் பல கேலி, கிண்டல் பழமொழிகளை நீட்டி, முழக்கி பேசலானார்.

“கைலாயமலை இறங்கியது முதல் இப்போது வரை வந்த வழியெல்லாம் நீர் கேட்டால் மோர் கொடுத்து எல்லா ஊர் மக்களும் உபசரித்தனர். ஆனால் செழிப்பு மிக்க சிங்கம்பட்டி ஊரில் மட்டும் மோர் பானையை பக்கத்தில் வைத்துக் கொண்டே  கிழவி இந்த பேச்சு பேசுகிறாளே… ஐந்தறிவு மிருகங்களே தன்னருகே அமைதியாக நிற்க, ஆறறிவும், அனுபவமும் கொண்ட சிங்கம்பட்டி கிழவி இப்படி அடக்கமில்லாமல் பேசுகிறாளே… “ என்று கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ஊரில் இனி நீர் இருக்கும். மோர் இருக்காது.முப்போகம் விளையும். ஆனால் மோருக்கு வக்கத்துப் போகும்.” என்று சாபம் கொடுத்துச் சென்றார். அன்று முதல் இன்று வரை சிங்கம்பட்டி ஊரில் வீடுதோறும் பால் மாடுகள் பல இருந்தாலும் மோர் மட்டும் ருசியாக இருக்காது. இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் அறிவர். சிங்கம்பட்டி ஆற்றில் குளித்து கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தில்தான் "அகத்தியர் கோவில்" என்னும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலும் உள்ளது.

நன்றி. வணக்கம்.

Thursday, March 01, 2018

அருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு

🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪



பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு  இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடி அலைந்தும் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்தது கேட்டு கோபம் கொண்டிருந்தான். சிவனை தனது காலில் விழ  வைக்க வேண்டும் என்ற செறுக்குடன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தட்சனின் கடும் தவத்தை கண்டு சிவபெருமான், அவன் முன் தோன்றினார்.  அப்போது தட்சன், எனக்கு மகளாக உமாதேவி பிறக்க வேண்டும் என்று கேட்டான். சிவனும் நீ விரும்பிய படியே ஆகட்டும் என்று வரமளித்தார்.


அதன்படி உமையவள் குழந்தை ரூபமாக தாருகா வனத்தில் இருக்க, தட்சனும், அவனது மனைவி தாருகாவல்லியும், தாருகா வனத்திற்கு சென்றபோது அழகான  அந்த பெண் குழந்தையை கண்டெடுத்தனர். அந்த குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும், சிவன்  தாட்சாயினியை மணம் முடித்தார்.

மகளை மணம் முடித்த மருமகனான சிவபெருமான், மாமனார் என்ற உறவில் தன்னை வணங்க வேண்டும் என்று தட்சன்  கர்வம் கொண்டான். அது நடக்கவில்லை என்பதால் சிவன் மேல் தட்சனுக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான் தட்சன். அதற்கு ஈரேழு லோகத்திலுள்ளவர்களுக்கும் அழைப்பை விடுத்தவன், தனது மகளை மணமுடித்த மருமகன் என்ற உறவின் அடிப்படையில் கூட சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதையறிந்த தாட்சாயினி, சிவனிடம் சென்று தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்டு வருவதாக கூறினாள்.


சிவபெருமான் தடுத்தார். செல்ல வேண்டாம், உனக்கு  உரிய மரியாதை கிடைக்காது  என்று கூறினார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தாட்சாயினி தனது தந்தையிடம் சென்று கேட்டாள். அதற்கு தட்சன்,  சிவபெருமானை அவமதித்து பேசியதோடு மகள் என்றும் பாராமல் தாட்சாயினியையும் அவமதித்தார்.

 நடந்தவற்றை அறிந்த சிவபெருமான், தனது மேனியின்  வியர்வை துளிகளை ஒன்றாக்கி ஒரு புத்திரனை பிறக்கச்செய்தார். வியர்வையில் பிறந்த புத்திரன் வியர்வை புத்திரனாகி, வீரபுத்திரர் ஆனார். அது மருவி  வீரபத்திரரென அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் வேகம் கொண்டு வேள்வி சாலைகளை அழித்தார். தட்சனை வாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட தட்சனின் தலை,  வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம்  முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள்.

அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை,  அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று  தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட  வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில்  ஆடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது). மகுட, வில்லிசை கலைஞர்கள் மாடு என்று பாடி வருகின்றனர். அதன் காரணமாக தளவாய் மாடசாமி சிலைகளை  மாட்டுத்தலையுடன் அமைத்துள்ளனர்.(ஆகவே இங்கே மாடு என்றே குறிப்பிடுகிறேன்.)

சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு  கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக  என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.

தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்டவர் பின்னர் அப்பெயர் மருவி தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார். (தளவாய் என்றால் தளபதி, அமைச்சர் என்றும் பொருள் உண்டு.) சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை  வாங்கி தளவாய்மாடன் பூலோகம் வருகிறார். பொதிகை மலை வந்தமர்கிறார். அங்கிருந்து மலையாள நாட்டிற்கு பேச்சியம்மை, பூதத்தார் தலைமையிலான  இருபத்தியோரு பந்தி தெய்வங்களோடு சென்றார். மாயாண்டி சுடலைமாடன், மாடன் தம்புரான் பெயரில் நிலையம் கொண்டிருந்த கொட்டாரக்கரை கடந்து  செல்கையிலே அவரும், இவர்களுக்கு தலைமையேற்று பந்தள நாடு வந்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மரவேலைப்பாடுகள் செய்ய பந்தள நாட்டு எல்லையிலிருந்து மரங்கள் வெட்டி வரப்படுகிறது. அந்த மரங்களில்  சுடலைமாடன், தளவாய்மாடன், பூதத்தார், பேச்சி முதலான தெய்வங்கள் குடியமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த மரத்தோடு பத்மநாபபுரம் வருகின்றனர். கோயிலில்  வேலைப்பாடுகள் முடிந்து தச்சு கழித்தல் எனும் வேள்வி பூஜை நடக்கையில் இருபத்தியோரு தெய்வங்களும் வந்திருந்ததை அறிகின்றனர். அவர்களை  சாந்தப்படுத்தி அவர்களுக்கு அட்டக்குளம் கரையினில் பிலா மூடு, பலா மரம், மாமரமூடு ஆகிய இடங்களில் நிலையம் போட்டுக் கொடுத்தனர்.

 இந்த நாளிலே  திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக யாக குண்டல பூஜைக்கு அழைக்கப்பட்டதன்பேரில் திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது போத்திமார்கள் புறப்படுகின்றனர். அவர்கள் வரும்போது பலா மரத்திலிருந்து வறுக்கை என்ற ஒரு வகை பலாவை (சக்கை) கொண்டு வருகின்றனர். இந்த வறுக்கை சக்கையுடன் தளவாய்மாடசாமி  வருகிறார். அவர்களுடன் இருபத்தியோரு பந்தி தெய்வங்களும் வருகின்றனர்.

மலை நாட்டு எல்லை கரமனை கடந்து நெய்யாற்றங்கரை பாதையாக நாஞ்சில் நாட்டு குழித்துறை வந்தமர்ந்து. அங்கிருந்து அந்தி சந்தை கூடும் சாமியார்மடம்  கடந்து பத்மநாபபுரம் வழியாக வேளிமலை போக்கும் விட்டு தோட்டியோடு பாதையாக களியங்காடு விட்டு, பார்வதியாள்புரமும் விட்டு வெட்டூர்ணி மடம் கடந்து  நாகர்கோவில் தான் கடந்து சுசீந்திரம் பதி வந்து தாணுமாலயனை அடி பணிந்து வழுக்கம்பாறை விட்டு கொட்டாரம் பாதை கூடியல்லோ, கன்னியாகுமரியில்  நீராடி வந்தல்லோ, பகவதியை வணங்கிவிட்டு வாரியூர் தான் கடந்து கருங்குளம் போக்குவிட்டு, வேப்பிலாங்குளம் வழியாக கும்பளம்பாடு எல்லை விட்டு  தம்பட்டிவிட்டு மடமதிலே ஒன்பது போத்திமாரும் ஓய்ந்து இருக்கும் வேளையிலே தலைமை போத்தி தானெழுந்து ஆடலானார். ஆராதனை வந்து பேசலானார்.  தளவாய்மாடன் நான் வந்திருக்கிறேன்.

எனக்கு நம்பியாற்றின் தென்கரையினிலே சித்தூர் பதியினிலே குடியிருக்கும் ராஜாவுக்கு மந்திரியாய் நானிருக்க, அங்குள்ள கன்னி மூலையிலே அஷ்ட
பந்தனம் எனக்கு செய்யவேணும். வறுக்கை நல்ல பழத்தையுமே நைவேத்தியம் வைக்கவேணும் என்றாரே. அதன் படியே ஒன்பது போத்திமாரும் சித்தூர் பதி வந்து  தளவாய்மாடனுக்கு நிலையம் இட்டனர். அவரோடு வந்த இருபத்தியோரு துணை தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்தனர். இங்குள்ள தளவாய்மாடன் சைவமாக  இருக்கிறார். சுடலைக்கு தலைமை இடம் சீவலப்பேரி, பூதத்தாருக்கு தலைமை இடம் திருக்குறுங்குடி,
தளவாய்மாடனுக்கு தலைமை இடம் சித்தூராகும். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, சித்தூர் கிராமத்தில் மகாராஜேஷ்வரர் கோயிலில் நின்றருளும் தளவாய்மாடசாமி, தன்னை மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு தக்க  நேரத்தில் வந்தருள்கிறார். 

Wednesday, October 04, 2017

வண்டித் தடம் - இறுதி பாகம்







இறுதி பாகம்  - ஆடிய ஆட்டம் என்ன… அடங்கிய வாட்டம் என்ன…

கல்லிலிடை கட்சி அலுவலகத்தினுள் சுக்காண்டியும், ராமமந்திரத்தின் மகனும் நிற்பதை வாசலில் இருந்தே பார்த்து விட்டதால் பைக்கை ரோட்டிலே நிறுத்தி என்ன செய்யலாம் என புலியாண்டியுடம் கலந்தாலோசித்து கொண்டு இருக்கும் போதே தான் வந்த காரைப் பக்கத்தில்  நிறுத்திய பஞ்சாயத்து தலைவர் , “ அவசரமா அம்பை சட்ட மன்ற அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ வரச் சொல்லி இருக்கார். சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. பேசி முடிச்சுடுவோம்” என்றவாறே உடன் காரில் இருந்தவரை, “ உள்ளே சுக்காண்டி இருப்பான். அவனையும் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வரச் சொல்லிட்டு சீக்கிரம் வாங்க. போவோம்.” என்று கூறி அனுப்பி விட்டு “ உங்க மாமா சரியில்லை. அதான் இவன் இப்படி ஆடுறான். அவர் ஒழுங்கா இருந்தா இவனை ஒரு வழி பண்ணிடலாம். இப்போ வயலையும் அவனுக்கே கொடுக்கப் போறார்ன்னு இவன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியுதான். குழாய் போட்டது உங்களை விட மேட்டு வயக்காரன் அவனுக்குத் தான் நல்லது. வரப்பு மண்ணு சரியாது. சொன்னாலும் புரிஞ்சுகிடாம நாங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு ரெண்டு பேரும் நெலையா நிக்காங்க. சரி எதுனாலும் சாயந்திரம் பேசி முடிச்சுடுவோம்.” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டார்.

புலியாண்டியிடம் ஐந்து மணிக்கு தலைவர் வீட்டிற்கு வரச்சொல்லி விட்டு வீடு திரும்பி மதிய உணவு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புலிப்பட்டி ஊருக்கு கிளம்பிச் சென்று பஞ்சாயத்து தலைவர் வீட்டை அடைந்தான் புலிமுத்து. தேநீர் அருந்தியவாறே புலியாண்டியிடம் பேசிக்கொண்டிருந்த தலைவர் புலிமுத்துவையும் உபசரித்து விட்டு, “ புலியாண்டி வந்தவுன்னே சுக்காண்டிப் பயலுக்கு போன் போட்டுட்டேன். இப்போ வந்திடுவான் “ என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே சுக்காண்டியும் வந்து விடவே, “ இந்தோ பாரு சுக்காண்டி, நியாய, தர்மமா நடந்துகிட்டா உனக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது. சப் இன்ஸ்பெக்டர் நல்ல மனுசன்னாலே என்னையவே பேசி முடிக்கச் சொல்லிட்டாரு. நீ திண்டுக்கு, முண்டுக்கு பேசினாலோ, மேற்கொண்டு ஏதும் பண்ணினாலோ நான் இனிமே இந்த விஷயத்திலே தலையிட மாட்டேன். கேஸ் ஏதும் எழுதிட்டாங்கன்னா அப்புறம் உன் பாடு. போலிஸ் பாடு. என்கிட்டே எதுக்கும் வரக்கூடாது. பார்த்துக்கோ “ என்று கறாராக கூற, “ சரி. சரி. உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஸ்டேசன்ல கொடுத்த புகாரை முதல்ல வாபஸ் வாங்க சொல்லுங்க. தேடி வர ஆளுக்கு கொடுத்து முடியலை “ என்று வாய்க்குள் முனங்கியவாறே சொன்னான் சுக்காண்டி.

“ சரிப்பா. அவன்தான் வழிக்கு வந்திட்டானே. நீங்க ஸ்டேசன்ல கொடுத்த மனுவை வாபஸ் வாங்கிடுங்க. இனிமே ஏதும் பிரச்சினை ஏதும் பண்ணினா நான் பார்த்துகிடுதேன். இத்தோட இந்த பிரச்சினையை முடிச்சுகிடுவோம். எனக்கும் கீழூர்ல இன்னொரு பாகப்பிரிவினை பஞ்சாயத்துக்கு போக வேண்டியிருக்கு.” என்று பஞ்சாயத்து தலைவர் கூற புலியாண்டியை கையோடு அழைத்துக் கொண்டு கல்லிடை காவல்நிலையம் சென்று சப் இன்ஸ்பெக்டரை சந்தித்து பிரச்சினை முடிந்து விட்டதாக கூறி மனுவிலும் கையொப்பம் இட்டு விட்டு வீடு திரும்பினான் புலிமுத்து.

விடுமுறை முடிந்து மறுபடியும் வரும் ஞாயிறன்று மலேசியா திரும்ப வேண்டும் என்பதால் அது குறித்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடலானான் புலிமுத்து. நான்கைந்து நாட்களுக்குப் பின் மறுபடியும் வீட்டிற்கு வந்த புலியாண்டி நாற்றங்கால் உழச்சென்ற டிராக்டரை சுக்காண்டி மறித்து மீண்டும் தகராறு செய்ததாகவும், வண்டித்தட பாதையில் நிரந்தர பணப்பயிரான காக்கட்டான் எனும் வாசமில்லாத வாடாத பூச்செடிகளை பயிரிட ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான். 

உடனே புலியாண்டியை அழைத்துக் கொண்டு தலைவர் வீட்டுக்குச் சென்றால் அவரோ, “ அவன் வயல்ல நெல் பயிரிடுறதோ, வாழை வைக்கிறதோ, இல்லை பூ போடுறதோ அவன் இஷ்டம்தானே... நம்ம எப்படி நீ இந்த பயிர்தான் வைக்கலாம்… இந்த பயிர் வைக்ககூடாதுன்னு சொல்ல முடியும். நீங்க வேண்ணா உங்க வயலுக்கு வடபக்கம் இருக்கிற என் தம்பி சோமையா வயல் வழியா புழங்கிகிடுங்களேன். “  என்று சால்ஜாப்பு கூற “ நீங்க அன்னைக்கு உறுதி கூறப்போய்தான் ஸ்டேஷன்ல புகார் மனுவை வாபஸ் வாங்கினோம். இல்லைன்னாதான் நானும் போட்டு பார்த்திருப்பேனே. நீங்க சொன்னதும், செய்யறதும் உங்களுக்கே நியாயமாப் பட்டா சரி “ என்று வெடுக்கென கூறி விட்டு வெளியே வந்துவிட்டான் புலிமுத்து.

தொடர்ந்து வந்த புலியாண்டி, “ அன்னைக்கு நாம ரெண்டு பேரும் வெளியே வந்த பிறகு சுக்காண்டி தலைவர்ட்ட முத்துசாமி வயல் பத்திரத்தை அவன் பேருக்கு மாத்திக் கொடுத்தவுடனே அவரை தனியா கவனிக்கிறதாகவும், வர்ற தேர்தல்ல ஆகிற செலவுல பாதி தர்றதாகவும், அவன் அக்கா,மாமன்  சொக்காரன், அங்காளி, பங்காளி குடும்ப ஓட்டை எல்லாம் அவருக்கே போட வைக்கிறதாவும் சொல்லி இருக்கான். அதான் இந்த ஆளு அப்படியே பிளேட்டை மாத்திப் பேசறார் ” என அங்கலாய்த்தான். “ எது எப்படின்னாலும் அந்த ஆண்டவன் இருக்கது உண்மைன்னா நியாயத்தை அவரே கேட்பாரு. அதை நீங்களும், நானும், இந்த ஊரும் பார்க்கத் தான் போகுது “ என்று மனக்கசப்போடு கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்த புலிமுத்து பயணத்திட்டப்படி மறுநாள் கிளம்பி மலேசியாவும் திரும்பி வந்து பணியில் சேர்ந்து விட்டான்.


முத்துசாமியின் ஆலோசனைப்படி வண்டிப்பாதையை மட்டும் மறித்த மாதிரி நீள அகலத்தில் பூச்செடிகளை பயிரிட்ட சுக்காண்டி தினமும் காலையும், மாலையும் வயலுக்குச் சென்று ராமமந்திரத்தின் மகன் உதவியோடு பூப்பதியன் மூடுகள் காயாமல் இருக்க ஓடையிலிருந்து குடங்களில் நீர் கோரி செடிகள் தோறும் இட்டு வந்தான். முத்துசாமியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலைதோறும் தவறாமல் அவனோடு வயலுக்குச் சென்று வந்தார். அன்று மதியம் அம்பை சென்ற ராமமந்திரத்தின் மகன் வெகுநேரமாகியும் திரும்பாததால் அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் இருட்டி விடும். பின் செடிகளுக்கு தண்ணீர்  விட முடியாமல் போகி விடும் என்பதால் முத்துசாமியும், சுக்காண்டியும் மட்டும் வயலுக்கு சென்றனர். நான்கு குடங்களில் இரண்டு, இரண்டாக முத்துசாமி நீர் முகர்ந்து பாதி வழி கொண்டு கொடுக்க மீதி வழி சென்று செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தான் சுக்காண்டி.



இருட்டிக் கொண்டு வந்ததால் சீக்கிரம் வேலை முடிக்க வேண்டும் என்று இருவரும் அக்கம்பக்கம் கவனிக்காமல் அவசரம், அவசரமாக நீர் முகப்பதிலும், கொண்டு சென்று கொடுப்பது மற்றும் செடிகளுக்கு ஊற்றுவதில் கவனமாக இருக்க அவர்கள் காலடி பட்டு கலங்கி வடபக்கமாக சென்ற ஓடை நீரில் மனித வாடை கண்டு, கடும்பசியோடு இருந்த இணைகளான இரண்டு வக்கணைப் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வேக, வேகமாக ஊர்ந்தவாறு இரையைத் தேடி வேட்டையாட வந்தன. தென்வடலாக செல்லும் ஓடை என்பதால் தெற்கு திசை நோக்கி நீர் முகந்து கொண்டிருந்த முத்துசாமியை பின்பக்கமான வடக்கில் இருந்து வந்த வேகத்தில் பாய்ந்து கவ்விக் கொண்டு இழுத்துச் சென்றது ஆண் வக்கணைப் பாம்பு.

வெகுநேரமாகியும் முத்துசாமி நீர்க்குடங்களை கொண்டு வராததால் ஓடைக்கு அருகில் வந்து பார்த்த சுக்காண்டி குடங்கள் மட்டும் குழாய்க்கு முன் தேங்கி இருந்த ஓடை நீரில் குழாய் தட்டி மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் எடுக்கச் செல்ல குழாய்க்குள், இருட்டில் பசியோடு பதுங்கி இருந்த பெண் வக்கணைப் பாம்பு பாய்ந்து அவனை கவ்வி பகளீரம் செய்து விட்டு தன் இணையைத் தேடி எதிர்திசை நோக்கிச் சென்றது.

( முற்றும் )

Sunday, October 01, 2017

வண்டித் தடம் - பாகம் 8






பாகம் 8 - காவல் நிலையமும், கட்சி அலுவலகமும்…

வந்த வழியே திரும்பி போனபோது பாதி வழியில் நின்று அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த முத்துசாமி, புலிமுத்துவை பார்த்த்தும், “ சரி, நான் நேரா அங்கே வந்து பேசுறேன் “ என்றவாறு தொடர்பை துண்டித்துவிட்டு, இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த பெருங்கால் கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவரையும் ஏற்றிக்கொண்டு வண்டியை கிளப்பிய புலிமுத்து மறுபடியும் ஊர் வழியே போனால் யாராவது, ஏதாவது பேசி பிரச்சினை ஆகிவிடும் என்பதால் மணிமுத்தாறு - கல்லிடை புறவழிச்சாலை வழியாக அம்பை நோக்கி விரைந்தான்.

வண்டியில் போய்க்கொண்டு இருக்கும் போது “ நேரா அம்பை அரசு மருத்துவமனை போ. அங்கே ராமமந்திரம் இருக்கான். அவனைப் பார்த்து இந்த விஷயமா பேசிட்டு போவோம்" என முத்துசாமி கூற கல்லிடை இரயில் நிலையம், பேருந்து நிறுத்தங்கள், ஆற்றுப்பாலம், அபிராமி திரையங்கம், ஆர்ச் கடந்து ஆற்றுச்சாலை வழியில் அமைந்துள்ள மருத்துவமனை அடைந்தனர்.  ராமமந்திரம் சுக்காண்டியின் அக்கா கணவர். முத்துசாமியின் பள்ளித்தோழர். காலில் ஏதோ கட்டி என்று அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அறுவைச்சிகிச்சை பொதுப்பிரிவு படுக்கையில் படுத்திருந்தவர் இருவரையும் பார்த்தவுடன் எழுந்து அமர்ந்து சம்பிராதயப் பேச்சுகள் ஏதும் இல்லாமல், “ உங்களுக்கு அந்த வழியா வண்டித் தடமே கிடையாது.” என்று எடுத்த எடுப்பிலே கூற கடுப்படைந்த புலிமுத்து, “ ஆஸ்பத்திரியில் படுத்திருக்க உங்களுக்கு எப்படி அங்கே நடந்த விஷயம் தெரியும். நாங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னே தெரியாம வண்டித் தடம் கிடையாதுன்னு அடிச்சு சொல்றீங்களே. எப்படி… பெரிய மனுஷன் நியாயம் பேசுவீங்கன்னு பார்த்தா உங்க மச்சினனுக்கு ஆதரவா தப்பை மறைச்சு பேசுறீங்களே. அப்போ ஊர்க்காரங்க எல்லாம் பொய் பேசுறாங்களா. ராமமந்திரம்ங்கிற உங்க பேருக்கேத்த மாதிரி உண்மையை சொல்லாம கூனி மந்திரம் பேசுறீங்களே… நீங்களாவது இவருக்கு உண்மையை எடுத்து சொல்வீங்கன்னு நம்பி இங்கே வந்தது என்னோட தப்பு.” என படபடவென பொரிந்துவிட்டு முத்துசாமியைக் கூட ஏறிட்டு பார்க்காமல் அங்கிருந்து வெளியேறி பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்திவிட்டு தந்தை புலிமணியிடம் காலையில் வீட்டில் கிளம்பியதில் இருந்து மருத்துவமனை வரை நடந்த விஷயங்கள் எல்லாம் கூறிக்கொண்டு இருக்கும் போது வெளிவாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்து அருகில் வந்து அமர்ந்து விஷயங்களை கேட்டறிந்த புலியாண்டி, “ அப்போ நான் கேள்விப்பட்டது உண்மைதான். சுக்காண்டியும், ராமமந்திரம் மவனும் சேர்ந்துதான் இந்த வேலை பார்த்திருக்காங்க. ராத்திரி இவன் ரெண்டு பேரும் கடப்பாரை, மம்பட்டியோட போனதை பெருங்கால் கரைல வீடு கட்டியிருக்கிற சங்கரன் பார்த்திருக்கான். அந்த விஷயத்தை சொல்லத்தான் இங்கே வந்தேன். இதை இப்படியே விட்டா சரிவராது. சரின்னா சொல்லுங்க. நம்ம பழைய பிரச்சினைல உதவின இன்ஸ்பெக்டரையும், ஏட்டையும் கலந்துகிட்டு போலிஸ் ஸ்டேசன்ல ஒரு கம்பிளையிண்ட் கொடுத்திருவோம்.” என்று கூற மாலை நேரம் ஆகிவிட்ட்தால் வீட்டிலே தேநீர் அருந்திவிட்டு புலியாண்டியோடு கல்லிடை காவல்நிலையம் சென்றான் புலிமுத்து.

கல்லிடை புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள காவல்நிலையம் சென்று ஏட்டை சந்தித்து பேசும் போது புகார் மனு அளிக்கச் சொன்னவர் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் இருப்பதால், சப் இன்ஸ்பெக்டர் வந்ததும் மனு மீது தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் தகவல் கூறினார். நடந்த விவரங்களை மனுவாக எழுதி அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு கொடுத்துவிட்டு புலியாண்டி புலிப்பட்டி போக புலிமுத்து வீடு வந்து சேரும்போது இருட்டிவிட்டது.

மறுநாள் காலை பத்துமணி அளவில் அலைபேசியில் அழைத்த சப் இன்ஸ்பெக்டர் மாலை ஐந்து மணி அளவில் மணிமுத்தாறு வந்துவிடுவதாகவும், பின் இருவரும் சேர்ந்து வயலுக்குச் சென்று சம்பவ இடத்தை பார்வை இட்டு வரலாம் என்றும் கூறினார். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி மணிமுத்தாறு சென்று காத்திருந்த புலிமுத்துவை சரியாக ஐந்து மணிக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்டர் பெருங்கால் பாலத்திற்கு வரச்சொல்ல அவருடன் சென்று வயலை அடைந்தான் புலிமுத்து. விவரங்கள் கேட்டவாறே வயல் முழுதும் சுற்றிப்பார்த்த பின் சம்பவ இடத்தையும், அக்கம்பக்க வயல்களையும் ஆராய்ந்தவர், அவரே ஊருக்குள் சென்று விசாரிப்பதாகவும், மறுநாள் காலை பத்துமணி அளவில் அக்கம்பக்க வயல்காரர்கள் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு ஸ்டேசன் வருமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மறுநாள் காலை கல்லிடை காவல் நிலையத்திற்கு புலியாண்டி மற்றும் அக்கம்பக்க வயல்காரர் இருவரை அழைத்துக் கொண்டு சென்ற போது அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர், “ இது சிவில் கேஸ்ன்னாலே வழக்கு ஏதும் பதிய முடியாது. ஊர்ல விசாரிச்சதுல சுக்காண்டி எங்க இருக்கான்னும் தெரியலை. உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து சொல்லிட்டு வந்துருக்கேன். அவரை வச்சு பேசி முடிச்சுகிடுங்க. மேல்கொண்டு என்ன உதவி வேணும்ன்னாலும் என்னை வந்து பாருங்க. கரம்பை கிராமத்துல ஏதோ அடி, தடியாம். அவசரமாப் போகணும். “ என்றவாறு கூறிச்சென்றார்.

இந்த பிரச்சினையை மேலும் வளர்க்காமல் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதால் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் புலியாண்டியிடம் பஞ்சாயத்து தலைவர் அலைபேசி எண்ணை வாங்கி அழைத்தான் புலிமுத்து. அவரும் கல்லிடை கட்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அரைமணி நேரத்திற்குள் அங்கு வந்தால் சந்திக்கலாம் என கூற காவல்நிலையத்திற்கு சாட்சி கூறவந்த பக்கத்து வயல்காரர்களுக்கு நன்றி கூறி அனுப்பிவிட்டு பைக்கில் புலியாண்டியை ஏற்றிக்கொண்டு பஜாரில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வந்தால் அதிர்ச்சி. ஆம். அங்கு சுக்காண்டியும், ராமமந்திரத்தின் மகனும் நின்று கொண்டிருந்தனர்.

( தொடரும் )

இறுதி பாகம்

Wednesday, September 27, 2017

வண்டித் தடம் - பாகம் 7



பாகம் 7 - நியாயம் , அநியாயம்

எல்லா விவசாயிகளையும் போலவே பயிர் இட்டிருந்தாலும், இல்லாவிட்டிலும் தினம் காலை எழுந்தவுடன் வயலைச் சென்று பார்வையிடுவது புலியாண்டியின் வழக்கம். அப்படி மறுநாள் காலை வயலுக்கு சென்று பார்த்தவனுக்கு மிக்க அதிர்ச்சி. முந்தைய நாள் அவ்வளவு கஷ்டப்பட்டு, பதிக்கப்படிருந்த குழாய்களும், அவற்றின் மேல் பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சும் உடைக்கப்பட்டு, அவற்றை மூடி இருந்த மண்ணும் தாறுமாறாக  தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் வேதனைப்பட்டு வீடு திரும்பிய புலியாண்டி நேராக சுக்காண்டி வீடு சென்று பார்த்தால் ஆள் நடமாட்டமில்லாமல் வீடு பூட்டித்தான் இருந்தது என்றதும் புலிமுத்துவை அலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தான்.




தந்தை உட்பட வீட்டில் உள்ள யாரிடமும் எந்த விபரமும் கூறாமல், பல் கூட விளக்காமல் உடனடியாக நேரே பைக்கை எடுத்துக்கொண்டு முத்துசாமி வீடு சென்ற புலிமுத்து, வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். கதவைக்கூட திறக்காமல் எட்டிப்பார்த்த முத்துசாமி என்ன என்று கேட்க, “ ஒன்பது மணிக்கு திருப்பி வர்றேன். என்கூட நீங்க ஊருக்கு வரணும். இல்லைன்னா இனிமே நான் வரமாட்டேன். போலிஸ்தான் உங்களைத் தேடி வரும். எப்படி வசதின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க…” என்று கூறிவிட்டு வீடு திரும்பி விட்டான் புலிமுத்து.

வீடு வந்து குளித்து, சாப்பிட்டு, அலைபேசியில் புலியாண்டியிடம் முத்துசாமியை அழைத்து வரும் விபரம் கூறிவிட்டு, ஒன்பது மணிக்கு நேராக முத்துசாமியின் வீடு சென்றால் அவர் அங்கு இல்லை. “ என்ன இந்த ஆளு. இவ்வளவு சொல்லியும் இப்படி பண்றாரே… “ என்று எண்ணியவாறே வரும்போது அம்பை பேருந்து நிலையத்தில் முத்துசாமி நிற்பதைப் பார்த்து அருகே சென்று பைக்கை நிறுத்தினான் புலிமுத்து. “ நீ முன்னாடி பைக்ல போ. நான் பின்னாடி பஸ்ல வர்றேன்.” என்ற முத்துசாமியை, “ பரவாயில்லை. பைக்லே கூட்டிட்டுப் போயி திருப்பி கொண்டு விட்டுடுறேன். “ என்று கட்டாயப்படுத்தி ஏற்றி நேரே புலிப்பட்டி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

ஊருக்குள் வந்தவுடன் வேகத்தை குறைத்து பைக்கை நிறுத்தும்போது முத்துசாமியைப் பார்த்த சிலர் அருகே வந்து, “ சுக்காண்டிதான் அறிவு கெட்டுப் பண்றான்னா… சொக்காரன் நீயும் இப்படிப் பண்ணலாமா…” என ஆதங்கப்பட, “ என்னைப் பார்த்தா என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கா… ஆளாளுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் தகுதி இழக்கலை. நான் விஸ்வரூபம் எடுத்தா யாரும் தாங்க மாட்டிங்க…” என்று கண்ணை மூடிக்கொண்டு காச்மூச்சென்று கத்தியவரை, “ கெடுவான் கேடு நினைப்பான். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..” என்று கூறி காறித் துப்பியவாறு கலைந்து சென்றனர் நல்லது சொல்ல வந்தவர்கள். முத்துசாமியின் தரம்கெட்ட குணத்தால் கோபம் வந்தாலும் நாமும் அவர்போல் தாழ்ந்து போகக்கூடாது என்பதால் அடக்கிக் கொண்ட புலிமுத்து ஆக்சிலேட்டரை முறுக்கி பெருங்கால் வழியாக சென்று அடையாமடை அடைந்து கரை அருகே வண்டியை நிறுத்தி விட்டு வரப்புகள் வழியாக, வயல்கள் பல கடந்து தங்கள் வயலை அடைந்தனர்.

அவர்களைக் கண்ட்தும் அக்கம்பக்க வயல்காரர்களோடு அங்கு நின்று கொண்டிருந்த புலியாண்டி முத்துசாமி அருகில் வந்து, “ மாமா, இந்த சுக்காண்டி பண்றது ஒண்ணும் சரியில்லை. நாளுக்கு நாள் அவன் நடவடிக்கை மோசமாகுது. வயல் உங்களுதா… அவனுதா… என்ன இருந்தாலும் நம்ம சொந்தக்காரங்க.., பிரச்சினை ஏதும் வராதுங்கிற நம்பிக்கையிலதானே எங்க தாத்தா உங்க அப்பாவுக்கு வயல் சும்மா கொடுத்தாங்க… நீங்களே இப்படிப் பண்ணா ஊர்க்காரன் மதிப்பானா… என்று வருத்தப்பட்டுப் பேச, “ நீ தான்டா இவ்வளவுக்கும் காரணம். பண்ற பாவத்தை எல்லாம் நீ பண்ணிட்டு, இல்லாததையும், பொல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்லிட்டுத் திரியுற.. நீ ஒழிஞ்சா தான் எனக்கு நிம்மதி… “ என அவனிடமும் கோபக்கனலை அள்ளி வீசினார் முத்துசாமி.

அருகிலிருந்த புலிமுத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “ மாமா, உங்க வயலுக்கு இன்னொரு வயல் வழியாத்தானே வண்டி வரணும். இப்படி உங்க வயலுக்கு வர, போக முடியாம இன்னொருத்தன் வண்டித்தடம் மறிச்சா நீங்க விவசாயம் பண்ண முடியுமா… என் வயல் முன்னாடியும், உங்க வயல் பின்னாடியும் இருந்து நான் வழித்தடத்தை மறிச்சா, நீங்க பொறுப்பீங்களா…” என அமைதியாக கேட்க, “ ஏ… என்ன மிரட்டுறியா… உங்க தாத்தா, பெரியப்பா, அப்பா மாதிரி ஆளு இருக்கு… பணம் இருக்குன்னு ரொம்ப ஆடாதே… நான் சாபம் கொடுத்தா சங்கடப்பட்டுப் போயிடுவீங்க… உங்க பணபலத்துக்கு பயந்த ஆளு நான் இல்லை. நல்லா கேட்டுக்கோ. இந்த வயலை சுக்காண்டிக்குத் தான் கொடுக்கப் போறேன். அதுவும் பணம், காசுக்கு இல்லை. சும்மாதான் கொடுக்கப் போறேன். ஒருக்காலும் உங்களை நிம்மதியா விவசாயம் பண்ண விடமாட்டேன். பயிர் வைக்க முடியாம, நீங்களா இந்த வயலை வித்துட்டு ஊரை விட்டு போற வரை நான் ஓயவும் மாட்டேன், உறங்கவும் மாட்டேன். “ என சூளுரைத்தார் முத்துசாமி.

அநியாயம் செய்தது மட்டுமல்லாமல், தன்தரப்பு தவறை உணராமல், அவரது துர் எண்ணத்தையும், நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி,  ஊர்க்காரர், உறவினர், தனக்கு, தந்தைக்கு, தாத்தாவிற்கு, தமையன் புலியாண்டி என அனைவருக்கும் சாபம் கொடுத்து சங்கல்பம் செய்த முத்துசாமியை இதற்கு மேல் பேச விட்டால் சரிவராது என முடிவு செய்த புலிமுத்து, “  இப்படி சின்னத்தனமா பேசுறியே… நீ எல்லாம் ஒரு பெரிய  மனுசனா… இவ்வளவு வஞ்சத்தையும் மனசுல வச்சுகிட்டு தானே எல்லாரையும் உறவாடிக் கெடுத்திருக்கே… நீ நியாயமானவனா இருந்தா தானே உன் சாபத்துக்கு, சங்கல்பத்துக்கு நாங்க பயப்படணும்… உரக்கப் பேசுனா நீ சொல்றதெல்லாம் உண்மையாப் போயிடுமா… நீ எப்படிப்பட்ட சதிகாரன்னு எல்லாருக்கும் எப்பவே தெரிஞ்சு இருந்தாலும், எனக்கு இப்பதான் தெரிஞ்சுது. உன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னாடி காமிச்சுட்டே…. இப்ப மட்டுமில்லே… எப்பவுமே எங்களுக்கு உன் சகவாசமும் வேண்டாம். சங்காத்தமும் வேண்டாம்… நீங்க பண்ற அநியாயத்தை எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துகிட்டு தான் இருக்காரு… யாரு சங்கடப் படப்போறாங்க… யாரு சந்தோஷப்படப் போறாங்கன்னு எல்லாரும் பார்க்கத்தான் போறாங்க….. “ என ஆங்காரம் கொண்டு ஓங்காரக் குரல் உயர்த்தி கர்ஜனை செய்தது கண்டு சப்தநாடியும் ஒடுங்கி ஓரமாய் ஒதுங்கி வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார் முத்துசாமி.

முத்துசாமியின் அநியாயப் பேச்சு கண்டு ஆவேசம் அடைந்த தம்பியை தடவிக் கொடுத்து, தண்ணீர் குடிக்க வைத்து புலியாண்டி ஆசுவாசப்படுத்த தன்நிலைக்கு திரும்பிய புலிமுத்து, “ என்னதான் அந்த ஆளு தப்பு பண்ணாலும், தவறாப் பேசுனாலும் நாம தர்மநியாயம் தாண்ட கூடாது. கூட்டிக் கொண்டு வந்தது போல்  கொண்டு போய் விடறேன்னு வாக்கு கொடுத்த மாதிரி நடக்க வேண்டியது நம்ம கடமை.” என்று எல்லோரிடமும் கூறிவிட்டு முத்துசாமியை பின் தொடர்ந்து ஓடினான்.

 ( தொடரும் )