Wednesday, October 04, 2017

வண்டித் தடம் - இறுதி பாகம்







இறுதி பாகம்  - ஆடிய ஆட்டம் என்ன… அடங்கிய வாட்டம் என்ன…

கல்லிலிடை கட்சி அலுவலகத்தினுள் சுக்காண்டியும், ராமமந்திரத்தின் மகனும் நிற்பதை வாசலில் இருந்தே பார்த்து விட்டதால் பைக்கை ரோட்டிலே நிறுத்தி என்ன செய்யலாம் என புலியாண்டியுடம் கலந்தாலோசித்து கொண்டு இருக்கும் போதே தான் வந்த காரைப் பக்கத்தில்  நிறுத்திய பஞ்சாயத்து தலைவர் , “ அவசரமா அம்பை சட்ட மன்ற அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ வரச் சொல்லி இருக்கார். சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. பேசி முடிச்சுடுவோம்” என்றவாறே உடன் காரில் இருந்தவரை, “ உள்ளே சுக்காண்டி இருப்பான். அவனையும் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வரச் சொல்லிட்டு சீக்கிரம் வாங்க. போவோம்.” என்று கூறி அனுப்பி விட்டு “ உங்க மாமா சரியில்லை. அதான் இவன் இப்படி ஆடுறான். அவர் ஒழுங்கா இருந்தா இவனை ஒரு வழி பண்ணிடலாம். இப்போ வயலையும் அவனுக்கே கொடுக்கப் போறார்ன்னு இவன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியுதான். குழாய் போட்டது உங்களை விட மேட்டு வயக்காரன் அவனுக்குத் தான் நல்லது. வரப்பு மண்ணு சரியாது. சொன்னாலும் புரிஞ்சுகிடாம நாங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு ரெண்டு பேரும் நெலையா நிக்காங்க. சரி எதுனாலும் சாயந்திரம் பேசி முடிச்சுடுவோம்.” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டார்.

புலியாண்டியிடம் ஐந்து மணிக்கு தலைவர் வீட்டிற்கு வரச்சொல்லி விட்டு வீடு திரும்பி மதிய உணவு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புலிப்பட்டி ஊருக்கு கிளம்பிச் சென்று பஞ்சாயத்து தலைவர் வீட்டை அடைந்தான் புலிமுத்து. தேநீர் அருந்தியவாறே புலியாண்டியிடம் பேசிக்கொண்டிருந்த தலைவர் புலிமுத்துவையும் உபசரித்து விட்டு, “ புலியாண்டி வந்தவுன்னே சுக்காண்டிப் பயலுக்கு போன் போட்டுட்டேன். இப்போ வந்திடுவான் “ என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே சுக்காண்டியும் வந்து விடவே, “ இந்தோ பாரு சுக்காண்டி, நியாய, தர்மமா நடந்துகிட்டா உனக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது. சப் இன்ஸ்பெக்டர் நல்ல மனுசன்னாலே என்னையவே பேசி முடிக்கச் சொல்லிட்டாரு. நீ திண்டுக்கு, முண்டுக்கு பேசினாலோ, மேற்கொண்டு ஏதும் பண்ணினாலோ நான் இனிமே இந்த விஷயத்திலே தலையிட மாட்டேன். கேஸ் ஏதும் எழுதிட்டாங்கன்னா அப்புறம் உன் பாடு. போலிஸ் பாடு. என்கிட்டே எதுக்கும் வரக்கூடாது. பார்த்துக்கோ “ என்று கறாராக கூற, “ சரி. சரி. உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஸ்டேசன்ல கொடுத்த புகாரை முதல்ல வாபஸ் வாங்க சொல்லுங்க. தேடி வர ஆளுக்கு கொடுத்து முடியலை “ என்று வாய்க்குள் முனங்கியவாறே சொன்னான் சுக்காண்டி.

“ சரிப்பா. அவன்தான் வழிக்கு வந்திட்டானே. நீங்க ஸ்டேசன்ல கொடுத்த மனுவை வாபஸ் வாங்கிடுங்க. இனிமே ஏதும் பிரச்சினை ஏதும் பண்ணினா நான் பார்த்துகிடுதேன். இத்தோட இந்த பிரச்சினையை முடிச்சுகிடுவோம். எனக்கும் கீழூர்ல இன்னொரு பாகப்பிரிவினை பஞ்சாயத்துக்கு போக வேண்டியிருக்கு.” என்று பஞ்சாயத்து தலைவர் கூற புலியாண்டியை கையோடு அழைத்துக் கொண்டு கல்லிடை காவல்நிலையம் சென்று சப் இன்ஸ்பெக்டரை சந்தித்து பிரச்சினை முடிந்து விட்டதாக கூறி மனுவிலும் கையொப்பம் இட்டு விட்டு வீடு திரும்பினான் புலிமுத்து.

விடுமுறை முடிந்து மறுபடியும் வரும் ஞாயிறன்று மலேசியா திரும்ப வேண்டும் என்பதால் அது குறித்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடலானான் புலிமுத்து. நான்கைந்து நாட்களுக்குப் பின் மறுபடியும் வீட்டிற்கு வந்த புலியாண்டி நாற்றங்கால் உழச்சென்ற டிராக்டரை சுக்காண்டி மறித்து மீண்டும் தகராறு செய்ததாகவும், வண்டித்தட பாதையில் நிரந்தர பணப்பயிரான காக்கட்டான் எனும் வாசமில்லாத வாடாத பூச்செடிகளை பயிரிட ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான். 

உடனே புலியாண்டியை அழைத்துக் கொண்டு தலைவர் வீட்டுக்குச் சென்றால் அவரோ, “ அவன் வயல்ல நெல் பயிரிடுறதோ, வாழை வைக்கிறதோ, இல்லை பூ போடுறதோ அவன் இஷ்டம்தானே... நம்ம எப்படி நீ இந்த பயிர்தான் வைக்கலாம்… இந்த பயிர் வைக்ககூடாதுன்னு சொல்ல முடியும். நீங்க வேண்ணா உங்க வயலுக்கு வடபக்கம் இருக்கிற என் தம்பி சோமையா வயல் வழியா புழங்கிகிடுங்களேன். “  என்று சால்ஜாப்பு கூற “ நீங்க அன்னைக்கு உறுதி கூறப்போய்தான் ஸ்டேஷன்ல புகார் மனுவை வாபஸ் வாங்கினோம். இல்லைன்னாதான் நானும் போட்டு பார்த்திருப்பேனே. நீங்க சொன்னதும், செய்யறதும் உங்களுக்கே நியாயமாப் பட்டா சரி “ என்று வெடுக்கென கூறி விட்டு வெளியே வந்துவிட்டான் புலிமுத்து.

தொடர்ந்து வந்த புலியாண்டி, “ அன்னைக்கு நாம ரெண்டு பேரும் வெளியே வந்த பிறகு சுக்காண்டி தலைவர்ட்ட முத்துசாமி வயல் பத்திரத்தை அவன் பேருக்கு மாத்திக் கொடுத்தவுடனே அவரை தனியா கவனிக்கிறதாகவும், வர்ற தேர்தல்ல ஆகிற செலவுல பாதி தர்றதாகவும், அவன் அக்கா,மாமன்  சொக்காரன், அங்காளி, பங்காளி குடும்ப ஓட்டை எல்லாம் அவருக்கே போட வைக்கிறதாவும் சொல்லி இருக்கான். அதான் இந்த ஆளு அப்படியே பிளேட்டை மாத்திப் பேசறார் ” என அங்கலாய்த்தான். “ எது எப்படின்னாலும் அந்த ஆண்டவன் இருக்கது உண்மைன்னா நியாயத்தை அவரே கேட்பாரு. அதை நீங்களும், நானும், இந்த ஊரும் பார்க்கத் தான் போகுது “ என்று மனக்கசப்போடு கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்த புலிமுத்து பயணத்திட்டப்படி மறுநாள் கிளம்பி மலேசியாவும் திரும்பி வந்து பணியில் சேர்ந்து விட்டான்.


முத்துசாமியின் ஆலோசனைப்படி வண்டிப்பாதையை மட்டும் மறித்த மாதிரி நீள அகலத்தில் பூச்செடிகளை பயிரிட்ட சுக்காண்டி தினமும் காலையும், மாலையும் வயலுக்குச் சென்று ராமமந்திரத்தின் மகன் உதவியோடு பூப்பதியன் மூடுகள் காயாமல் இருக்க ஓடையிலிருந்து குடங்களில் நீர் கோரி செடிகள் தோறும் இட்டு வந்தான். முத்துசாமியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலைதோறும் தவறாமல் அவனோடு வயலுக்குச் சென்று வந்தார். அன்று மதியம் அம்பை சென்ற ராமமந்திரத்தின் மகன் வெகுநேரமாகியும் திரும்பாததால் அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் இருட்டி விடும். பின் செடிகளுக்கு தண்ணீர்  விட முடியாமல் போகி விடும் என்பதால் முத்துசாமியும், சுக்காண்டியும் மட்டும் வயலுக்கு சென்றனர். நான்கு குடங்களில் இரண்டு, இரண்டாக முத்துசாமி நீர் முகர்ந்து பாதி வழி கொண்டு கொடுக்க மீதி வழி சென்று செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தான் சுக்காண்டி.



இருட்டிக் கொண்டு வந்ததால் சீக்கிரம் வேலை முடிக்க வேண்டும் என்று இருவரும் அக்கம்பக்கம் கவனிக்காமல் அவசரம், அவசரமாக நீர் முகப்பதிலும், கொண்டு சென்று கொடுப்பது மற்றும் செடிகளுக்கு ஊற்றுவதில் கவனமாக இருக்க அவர்கள் காலடி பட்டு கலங்கி வடபக்கமாக சென்ற ஓடை நீரில் மனித வாடை கண்டு, கடும்பசியோடு இருந்த இணைகளான இரண்டு வக்கணைப் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வேக, வேகமாக ஊர்ந்தவாறு இரையைத் தேடி வேட்டையாட வந்தன. தென்வடலாக செல்லும் ஓடை என்பதால் தெற்கு திசை நோக்கி நீர் முகந்து கொண்டிருந்த முத்துசாமியை பின்பக்கமான வடக்கில் இருந்து வந்த வேகத்தில் பாய்ந்து கவ்விக் கொண்டு இழுத்துச் சென்றது ஆண் வக்கணைப் பாம்பு.

வெகுநேரமாகியும் முத்துசாமி நீர்க்குடங்களை கொண்டு வராததால் ஓடைக்கு அருகில் வந்து பார்த்த சுக்காண்டி குடங்கள் மட்டும் குழாய்க்கு முன் தேங்கி இருந்த ஓடை நீரில் குழாய் தட்டி மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் எடுக்கச் செல்ல குழாய்க்குள், இருட்டில் பசியோடு பதுங்கி இருந்த பெண் வக்கணைப் பாம்பு பாய்ந்து அவனை கவ்வி பகளீரம் செய்து விட்டு தன் இணையைத் தேடி எதிர்திசை நோக்கிச் சென்றது.

( முற்றும் )

1 comment:

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பரே...
மிகச் சிறப்பான தொடர்...