Thursday, March 01, 2018

அருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு

🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு  இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடி அலைந்தும் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்தது கேட்டு கோபம் கொண்டிருந்தான். சிவனை தனது காலில் விழ  வைக்க வேண்டும் என்ற செறுக்குடன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தட்சனின் கடும் தவத்தை கண்டு சிவபெருமான், அவன் முன் தோன்றினார்.  அப்போது தட்சன், எனக்கு மகளாக உமாதேவி பிறக்க வேண்டும் என்று கேட்டான். சிவனும் நீ விரும்பிய படியே ஆகட்டும் என்று வரமளித்தார்.


அதன்படி உமையவள் குழந்தை ரூபமாக தாருகா வனத்தில் இருக்க, தட்சனும், அவனது மனைவி தாருகாவல்லியும், தாருகா வனத்திற்கு சென்றபோது அழகான  அந்த பெண் குழந்தையை கண்டெடுத்தனர். அந்த குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும், சிவன்  தாட்சாயினியை மணம் முடித்தார்.

மகளை மணம் முடித்த மருமகனான சிவபெருமான், மாமனார் என்ற உறவில் தன்னை வணங்க வேண்டும் என்று தட்சன்  கர்வம் கொண்டான். அது நடக்கவில்லை என்பதால் சிவன் மேல் தட்சனுக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான் தட்சன். அதற்கு ஈரேழு லோகத்திலுள்ளவர்களுக்கும் அழைப்பை விடுத்தவன், தனது மகளை மணமுடித்த மருமகன் என்ற உறவின் அடிப்படையில் கூட சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதையறிந்த தாட்சாயினி, சிவனிடம் சென்று தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்டு வருவதாக கூறினாள்.


சிவபெருமான் தடுத்தார். செல்ல வேண்டாம், உனக்கு  உரிய மரியாதை கிடைக்காது  என்று கூறினார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தாட்சாயினி தனது தந்தையிடம் சென்று கேட்டாள். அதற்கு தட்சன்,  சிவபெருமானை அவமதித்து பேசியதோடு மகள் என்றும் பாராமல் தாட்சாயினியையும் அவமதித்தார்.

 நடந்தவற்றை அறிந்த சிவபெருமான், தனது மேனியின்  வியர்வை துளிகளை ஒன்றாக்கி ஒரு புத்திரனை பிறக்கச்செய்தார். வியர்வையில் பிறந்த புத்திரன் வியர்வை புத்திரனாகி, வீரபுத்திரர் ஆனார். அது மருவி  வீரபத்திரரென அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் வேகம் கொண்டு வேள்வி சாலைகளை அழித்தார். தட்சனை வாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட தட்சனின் தலை,  வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம்  முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள்.

அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை,  அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று  தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட  வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில்  ஆடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது). மகுட, வில்லிசை கலைஞர்கள் மாடு என்று பாடி வருகின்றனர். அதன் காரணமாக தளவாய் மாடசாமி சிலைகளை  மாட்டுத்தலையுடன் அமைத்துள்ளனர்.(ஆகவே இங்கே மாடு என்றே குறிப்பிடுகிறேன்.)

சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு  கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக  என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.

தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்டவர் பின்னர் அப்பெயர் மருவி தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார். (தளவாய் என்றால் தளபதி, அமைச்சர் என்றும் பொருள் உண்டு.) சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை  வாங்கி தளவாய்மாடன் பூலோகம் வருகிறார். பொதிகை மலை வந்தமர்கிறார். அங்கிருந்து மலையாள நாட்டிற்கு பேச்சியம்மை, பூதத்தார் தலைமையிலான  இருபத்தியோரு பந்தி தெய்வங்களோடு சென்றார். மாயாண்டி சுடலைமாடன், மாடன் தம்புரான் பெயரில் நிலையம் கொண்டிருந்த கொட்டாரக்கரை கடந்து  செல்கையிலே அவரும், இவர்களுக்கு தலைமையேற்று பந்தள நாடு வந்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மரவேலைப்பாடுகள் செய்ய பந்தள நாட்டு எல்லையிலிருந்து மரங்கள் வெட்டி வரப்படுகிறது. அந்த மரங்களில்  சுடலைமாடன், தளவாய்மாடன், பூதத்தார், பேச்சி முதலான தெய்வங்கள் குடியமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த மரத்தோடு பத்மநாபபுரம் வருகின்றனர். கோயிலில்  வேலைப்பாடுகள் முடிந்து தச்சு கழித்தல் எனும் வேள்வி பூஜை நடக்கையில் இருபத்தியோரு தெய்வங்களும் வந்திருந்ததை அறிகின்றனர். அவர்களை  சாந்தப்படுத்தி அவர்களுக்கு அட்டக்குளம் கரையினில் பிலா மூடு, பலா மரம், மாமரமூடு ஆகிய இடங்களில் நிலையம் போட்டுக் கொடுத்தனர்.

 இந்த நாளிலே  திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக யாக குண்டல பூஜைக்கு அழைக்கப்பட்டதன்பேரில் திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது போத்திமார்கள் புறப்படுகின்றனர். அவர்கள் வரும்போது பலா மரத்திலிருந்து வறுக்கை என்ற ஒரு வகை பலாவை (சக்கை) கொண்டு வருகின்றனர். இந்த வறுக்கை சக்கையுடன் தளவாய்மாடசாமி  வருகிறார். அவர்களுடன் இருபத்தியோரு பந்தி தெய்வங்களும் வருகின்றனர்.

மலை நாட்டு எல்லை கரமனை கடந்து நெய்யாற்றங்கரை பாதையாக நாஞ்சில் நாட்டு குழித்துறை வந்தமர்ந்து. அங்கிருந்து அந்தி சந்தை கூடும் சாமியார்மடம்  கடந்து பத்மநாபபுரம் வழியாக வேளிமலை போக்கும் விட்டு தோட்டியோடு பாதையாக களியங்காடு விட்டு, பார்வதியாள்புரமும் விட்டு வெட்டூர்ணி மடம் கடந்து  நாகர்கோவில் தான் கடந்து சுசீந்திரம் பதி வந்து தாணுமாலயனை அடி பணிந்து வழுக்கம்பாறை விட்டு கொட்டாரம் பாதை கூடியல்லோ, கன்னியாகுமரியில்  நீராடி வந்தல்லோ, பகவதியை வணங்கிவிட்டு வாரியூர் தான் கடந்து கருங்குளம் போக்குவிட்டு, வேப்பிலாங்குளம் வழியாக கும்பளம்பாடு எல்லை விட்டு  தம்பட்டிவிட்டு மடமதிலே ஒன்பது போத்திமாரும் ஓய்ந்து இருக்கும் வேளையிலே தலைமை போத்தி தானெழுந்து ஆடலானார். ஆராதனை வந்து பேசலானார்.  தளவாய்மாடன் நான் வந்திருக்கிறேன்.

எனக்கு நம்பியாற்றின் தென்கரையினிலே சித்தூர் பதியினிலே குடியிருக்கும் ராஜாவுக்கு மந்திரியாய் நானிருக்க, அங்குள்ள கன்னி மூலையிலே அஷ்ட
பந்தனம் எனக்கு செய்யவேணும். வறுக்கை நல்ல பழத்தையுமே நைவேத்தியம் வைக்கவேணும் என்றாரே. அதன் படியே ஒன்பது போத்திமாரும் சித்தூர் பதி வந்து  தளவாய்மாடனுக்கு நிலையம் இட்டனர். அவரோடு வந்த இருபத்தியோரு துணை தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்தனர். இங்குள்ள தளவாய்மாடன் சைவமாக  இருக்கிறார். சுடலைக்கு தலைமை இடம் சீவலப்பேரி, பூதத்தாருக்கு தலைமை இடம் திருக்குறுங்குடி,
தளவாய்மாடனுக்கு தலைமை இடம் சித்தூராகும். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, சித்தூர் கிராமத்தில் மகாராஜேஷ்வரர் கோயிலில் நின்றருளும் தளவாய்மாடசாமி, தன்னை மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு தக்க  நேரத்தில் வந்தருள்கிறார். 

3 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே சித்தூர் தென்கரை மஹாராஜா கோவில் வந்து இருக்கிறேன் அதுதான் எங்கள் குலதெய்வம்.

தங்களது பதிவு கண்டு மகிழ்ச்சி அடுத்த முறை உங்களோடு்ம் கோவில் செல்ல வேண்டும் - கில்லர்ஜி

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...
வணக்கம் நண்பரே சித்தூர் தென்கரை மஹாராஜா கோவில் வந்து இருக்கிறேன் அதுதான் எங்கள் குலதெய்வம்.

தங்களது பதிவு கண்டு மகிழ்ச்சி அடுத்த முறை உங்களோடு்ம் கோவில் செல்ல வேண்டும் - கில்லர்ஜி //

மிக்க மகிழ்ச்சி நண்பரே... எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் இணைந்து செல்வோம்.

K.P.SAIKRISHIKAA said...

ராஜா சார் தொடரட்டும் உங்கள் ஆன்மிக பதிவுகள்....
ஸ்ரீ சங்கிலிபூதத்தார், ஸ்ரீ முப்பிடாதி,ஸ்ரீ அங்களபரமேஸ்வரி,ஸ்ரீ தளவாய் மாடசாமி என்று
வணங்குகிறோம் வாழ்க வளமுடன்.
எஸ் பிச்சுமணி
பழையபேட்டை
திருநெல்வேலி