Sunday, October 01, 2017

வண்டித் தடம் - பாகம் 8






பாகம் 8 - காவல் நிலையமும், கட்சி அலுவலகமும்…

வந்த வழியே திரும்பி போனபோது பாதி வழியில் நின்று அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த முத்துசாமி, புலிமுத்துவை பார்த்த்தும், “ சரி, நான் நேரா அங்கே வந்து பேசுறேன் “ என்றவாறு தொடர்பை துண்டித்துவிட்டு, இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த பெருங்கால் கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவரையும் ஏற்றிக்கொண்டு வண்டியை கிளப்பிய புலிமுத்து மறுபடியும் ஊர் வழியே போனால் யாராவது, ஏதாவது பேசி பிரச்சினை ஆகிவிடும் என்பதால் மணிமுத்தாறு - கல்லிடை புறவழிச்சாலை வழியாக அம்பை நோக்கி விரைந்தான்.

வண்டியில் போய்க்கொண்டு இருக்கும் போது “ நேரா அம்பை அரசு மருத்துவமனை போ. அங்கே ராமமந்திரம் இருக்கான். அவனைப் பார்த்து இந்த விஷயமா பேசிட்டு போவோம்" என முத்துசாமி கூற கல்லிடை இரயில் நிலையம், பேருந்து நிறுத்தங்கள், ஆற்றுப்பாலம், அபிராமி திரையங்கம், ஆர்ச் கடந்து ஆற்றுச்சாலை வழியில் அமைந்துள்ள மருத்துவமனை அடைந்தனர்.  ராமமந்திரம் சுக்காண்டியின் அக்கா கணவர். முத்துசாமியின் பள்ளித்தோழர். காலில் ஏதோ கட்டி என்று அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அறுவைச்சிகிச்சை பொதுப்பிரிவு படுக்கையில் படுத்திருந்தவர் இருவரையும் பார்த்தவுடன் எழுந்து அமர்ந்து சம்பிராதயப் பேச்சுகள் ஏதும் இல்லாமல், “ உங்களுக்கு அந்த வழியா வண்டித் தடமே கிடையாது.” என்று எடுத்த எடுப்பிலே கூற கடுப்படைந்த புலிமுத்து, “ ஆஸ்பத்திரியில் படுத்திருக்க உங்களுக்கு எப்படி அங்கே நடந்த விஷயம் தெரியும். நாங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னே தெரியாம வண்டித் தடம் கிடையாதுன்னு அடிச்சு சொல்றீங்களே. எப்படி… பெரிய மனுஷன் நியாயம் பேசுவீங்கன்னு பார்த்தா உங்க மச்சினனுக்கு ஆதரவா தப்பை மறைச்சு பேசுறீங்களே. அப்போ ஊர்க்காரங்க எல்லாம் பொய் பேசுறாங்களா. ராமமந்திரம்ங்கிற உங்க பேருக்கேத்த மாதிரி உண்மையை சொல்லாம கூனி மந்திரம் பேசுறீங்களே… நீங்களாவது இவருக்கு உண்மையை எடுத்து சொல்வீங்கன்னு நம்பி இங்கே வந்தது என்னோட தப்பு.” என படபடவென பொரிந்துவிட்டு முத்துசாமியைக் கூட ஏறிட்டு பார்க்காமல் அங்கிருந்து வெளியேறி பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்திவிட்டு தந்தை புலிமணியிடம் காலையில் வீட்டில் கிளம்பியதில் இருந்து மருத்துவமனை வரை நடந்த விஷயங்கள் எல்லாம் கூறிக்கொண்டு இருக்கும் போது வெளிவாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்து அருகில் வந்து அமர்ந்து விஷயங்களை கேட்டறிந்த புலியாண்டி, “ அப்போ நான் கேள்விப்பட்டது உண்மைதான். சுக்காண்டியும், ராமமந்திரம் மவனும் சேர்ந்துதான் இந்த வேலை பார்த்திருக்காங்க. ராத்திரி இவன் ரெண்டு பேரும் கடப்பாரை, மம்பட்டியோட போனதை பெருங்கால் கரைல வீடு கட்டியிருக்கிற சங்கரன் பார்த்திருக்கான். அந்த விஷயத்தை சொல்லத்தான் இங்கே வந்தேன். இதை இப்படியே விட்டா சரிவராது. சரின்னா சொல்லுங்க. நம்ம பழைய பிரச்சினைல உதவின இன்ஸ்பெக்டரையும், ஏட்டையும் கலந்துகிட்டு போலிஸ் ஸ்டேசன்ல ஒரு கம்பிளையிண்ட் கொடுத்திருவோம்.” என்று கூற மாலை நேரம் ஆகிவிட்ட்தால் வீட்டிலே தேநீர் அருந்திவிட்டு புலியாண்டியோடு கல்லிடை காவல்நிலையம் சென்றான் புலிமுத்து.

கல்லிடை புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள காவல்நிலையம் சென்று ஏட்டை சந்தித்து பேசும் போது புகார் மனு அளிக்கச் சொன்னவர் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் இருப்பதால், சப் இன்ஸ்பெக்டர் வந்ததும் மனு மீது தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் தகவல் கூறினார். நடந்த விவரங்களை மனுவாக எழுதி அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு கொடுத்துவிட்டு புலியாண்டி புலிப்பட்டி போக புலிமுத்து வீடு வந்து சேரும்போது இருட்டிவிட்டது.

மறுநாள் காலை பத்துமணி அளவில் அலைபேசியில் அழைத்த சப் இன்ஸ்பெக்டர் மாலை ஐந்து மணி அளவில் மணிமுத்தாறு வந்துவிடுவதாகவும், பின் இருவரும் சேர்ந்து வயலுக்குச் சென்று சம்பவ இடத்தை பார்வை இட்டு வரலாம் என்றும் கூறினார். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி மணிமுத்தாறு சென்று காத்திருந்த புலிமுத்துவை சரியாக ஐந்து மணிக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்டர் பெருங்கால் பாலத்திற்கு வரச்சொல்ல அவருடன் சென்று வயலை அடைந்தான் புலிமுத்து. விவரங்கள் கேட்டவாறே வயல் முழுதும் சுற்றிப்பார்த்த பின் சம்பவ இடத்தையும், அக்கம்பக்க வயல்களையும் ஆராய்ந்தவர், அவரே ஊருக்குள் சென்று விசாரிப்பதாகவும், மறுநாள் காலை பத்துமணி அளவில் அக்கம்பக்க வயல்காரர்கள் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு ஸ்டேசன் வருமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மறுநாள் காலை கல்லிடை காவல் நிலையத்திற்கு புலியாண்டி மற்றும் அக்கம்பக்க வயல்காரர் இருவரை அழைத்துக் கொண்டு சென்ற போது அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர், “ இது சிவில் கேஸ்ன்னாலே வழக்கு ஏதும் பதிய முடியாது. ஊர்ல விசாரிச்சதுல சுக்காண்டி எங்க இருக்கான்னும் தெரியலை. உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து சொல்லிட்டு வந்துருக்கேன். அவரை வச்சு பேசி முடிச்சுகிடுங்க. மேல்கொண்டு என்ன உதவி வேணும்ன்னாலும் என்னை வந்து பாருங்க. கரம்பை கிராமத்துல ஏதோ அடி, தடியாம். அவசரமாப் போகணும். “ என்றவாறு கூறிச்சென்றார்.

இந்த பிரச்சினையை மேலும் வளர்க்காமல் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதால் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் புலியாண்டியிடம் பஞ்சாயத்து தலைவர் அலைபேசி எண்ணை வாங்கி அழைத்தான் புலிமுத்து. அவரும் கல்லிடை கட்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அரைமணி நேரத்திற்குள் அங்கு வந்தால் சந்திக்கலாம் என கூற காவல்நிலையத்திற்கு சாட்சி கூறவந்த பக்கத்து வயல்காரர்களுக்கு நன்றி கூறி அனுப்பிவிட்டு பைக்கில் புலியாண்டியை ஏற்றிக்கொண்டு பஜாரில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வந்தால் அதிர்ச்சி. ஆம். அங்கு சுக்காண்டியும், ராமமந்திரத்தின் மகனும் நின்று கொண்டிருந்தனர்.

( தொடரும் )

இறுதி பாகம்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடர்கிறேன் நண்பரே...

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், ஊக்க கருத்துரைக்கும் நன்றி நண்பரே...